• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராதோ என் தேடல் - 3 A

Viba visha

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
90
அத்தியாயம் - 3(a)

மறுநாள் காலையில் கல்லூரிக்கு அம்பரியும், புகழியும் கிளம்பிக் கொண்டிருந்த தருணத்தில் புகழிக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.

யார்.. என்னவென்று எதுவும் குறிப்பிடாமல், வெறும் "ஹாய்.." என்று மட்டும் வந்திருந்தது அந்தக் குறுஞ்செய்தி.

பொதுவாக இப்படிப் புது எண்ணிலிருந்து எந்தவொரு குறுஞ்செய்தியோ அல்லது வாட்சாப் தகவலோ, அன்றி நேரடி அழைப்புமோ.. எது வந்தாலும் அதற்குத் தோழிகள் இருவருமே பதிலளிக்க மாட்டார்கள். அதுபோலவே இந்தக் குறுஞ்செய்தியையும் புறக்கணித்துவிட்டு காலை உணவை உண்டு கொண்டிருந்த வேளையில் மீண்டும் அதே போல ஒரு குறுஞ்செய்தி வந்தது. இம்முறை புகழிக்கும் கூடவே அம்பரிக்கும் சற்று எரிச்சல் பிறந்தது.

இன்னமும் இப்படித்தான் இருக்கிறார்கள். ஏதேனும் அறியாத எண்ணிற்கு அழைப்பது, பதில் கொடுப்பது பெண்ணென்று அறிந்தால் அது இதென்று கண்டபடி பேசுவது, அந்தப் பெண்ணிற்கு அவ்வளவு தொந்திரவு கொடுப்பது, அதில் இன்பம் காணுவது.. என்ன தான் ஜென்மங்களோ.. இதுகளெல்லாம் எந்த யுகத்திதில் தான் திருந்தும்களோ.. என்று நொந்தபடி இருவரும் அந்த நபரை திட்டிக் கொண்டே, அந்த எண்ணையும் பிளாக் செய்தார்கள்.

அடுத்தக் கணமே, மற்றுமொரு எண்ணிலிருந்து "ஹாய் புகழ்" என்றொரு குறுஞ்செய்தி வரவும் இம்முறை பெண்களுக்குச் சற்றுத் திகில் பரவியது. கூடவே இது போன்ற வேலைகளை எல்லாம் அவர்கள் உடன் படிக்கும் தோழிகளே விளையாட்டுக்களைச் செய்வதுண்டு.. எனவே அது போலவும் இருக்கலாமென்று எண்ணியவர்கள் அதை அப்படியே விட்டுவிட்டு கல்லூரிக்கு கிளம்பினர்.

ஆனால், கல்லூரி வந்த பிறகும் புகழிக்கு மனதிற்குள் சிறு குறுகுறுப்பு.. ஏதோ சரியில்லையே என்னும் நினைவு. கூடவே தன்னை யாரோ அடிக்கடி பார்ப்பது போலவும் பின் தொடருவது போலவும் ஒரு மாயை. உடனிருக்கும் அம்பரியிடம் கூறினால், அவள் அதற்கும் ஏதாவது கிண்டலடிப்பாள் என்றெண்ணி அமைதியாக விட்டுவிட்டாள் அவள்.

பிறகு தங்கள் வகுப்பு வந்தவர்கள் அன்றைய பாடவேளையில் மூழ்கியிருந்த சமயம், எதேச்சையாகப் புகழியின் முகத்தைப் பார்த்த அம்பரிக்கு, புகழியிடம் ஏதோ சரியில்லை என்று தோன்றியது. ஒருவேளை காலையில் வந்த குறுஞ்செய்தி தான் அவளது மனதினை அரிக்கிறதோ என்று எண்ணியவள், இது தங்களது தோழிகளின் வேலை தானா என்பதனை அறிய நினைத்தாள்.

அதன்படி அன்றைய உணவு இடைவேளையின் பொழுது.. அனைவரும் உணவு உண்டு முடிக்கும் தருவாயில், வகுப்பறைக்கு முன்பிருந்த மேடையில் ஏறி நின்றாள் அம்பரி.

"ஹலோ.. ஹலோ.. மகா ஜனங்களே.. மகா மகா மக்கு ஜனங்களே.." என்று அவள் மைக்கை பிடித்துக் கொண்டு பேசுபவள் போலப் பாவனைச் செய்யவும், அனைவரின் கவனமும் அவள் புறம் சென்றது. கூடவே அந்த 'மக்கு ஜனங்களே' என்ற அடை மொழிக்காகச் சிலரிடமிருந்து கோபப் பார்வையும் வீசியது.

அதற்கு மேல் அவளிடம் இதற்காகச் சண்டை பிடித்தால், நான் மக்கை தானே கூப்பிட்டேன். நீ ஏன் கோபிக்கிறாய்? என்று இடக்காகக் கேட்பாள் அந்தத் துடுக்குக்காரி. எனவே அனைவரும் சிறு முறைப்புடன் அவளைத் திரும்பிப் பார்க்க.. அதுவே போதுமானதாய் இருந்தது அம்பரிக்கு.

பிறகு மீண்டும் தனது தொண்டையைச் செருமிக் கொண்டே.. "இப்போ நான் உங்க கிட்ட ஒரு சீரியஸான விஷயம் கேட்கப் போறேன்.." என்று பீடிகையுடன் துவங்கவும், அதைக் கேட்டுக்கொண்டிருந்த இனியா.. "அம்பி.. நீயா சீரியஸான விஷயம் சொல்லப் போற?" என்று நக்கலாய் கேட்டாள்.

அம்பரியை கோபப்படுத்தும் விஷயம் ஒன்று இருக்கிறது என்றால், அது அவளை இப்படி அம்பி என்று அழைப்பது தான். எனவே கடுங்கோபத்துடன், தன்னருகில் இருக்கும் ஒரு கனமான பாடபுத்தகத்துடன் இனியாவை நோக்கி பாய முனைந்தாள் அவள்.

அதற்குள் அங்கிருந்த மற்றவர்கள் அவளைப் பிடித்து நிறுத்தி.. "அடியேய் உன் சண்டையெல்லாம் நீ சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லிட்டு வச்சுக்கோ.. இப்படிப் பாதியில சஸ்பென்ஸோட நிறுத்தாத" என்று கூறவும், அவர்களிடம்.. "கிடக்கறதெல்லாம் கிடையில கிடக்கட்டும்.. நீ கிழவிய தூக்கி மனையில வைன்னு சொல்ற?" என்று கடுப்புடன் முறைத்தாள் அம்பரி.

அதற்கு மற்றவர்களும், "ஆமாம்.. அப்படித்தாண்டி.." என்று கோரஸ் பாடவும்..

கோபத்துடன் ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, மீண்டும் தொடர்ந்தாள். "நான் இப்போ சொல்றத குறுக்காலக் குறுக்கால எதுவும் பேசாம நல்லா கேளுங்க.. கேட்டுட்டுப் பதில் சொல்லுங்க.." என்றவள்.. "இன்னைக்கு நம்ம புகழுக்கு ஒரு நம்பர்ல இருந்து மெசேஜ் வந்துச்சு. ஆள் யாருன்னு தெரில. ஆனா, அவங்களுக்கு நம்ம புகழோட பேர் தெரிஞ்சுருக்கு. ஒரு நம்பரை பிளாக் பண்ணினதும், மறுபடியும் இன்னொரு நம்பர்ல இருந்து மெசேஜ் வந்துச்சு. ட்ரு காலர்ல போட்டுப் பார்த்தாலும் பேர் வரல. அதான் நாங்க இப்போ இது சம்மந்தமா சைபர் கிரைமுக்குக் கம்பிளைன்ட் கொடுக்கலாம்னு இருக்கோம். உங்களுக்கும் இந்த மாதரியே எதற்காவது பிரச்சனை இருந்துச்சுன்னா சொல்லுங்க. எனக்குத் தெரிஞ்சவங்க சைபர் கிரைம் டிபார்ட்மெண்ட்ல இருக்காங்க.." என்று கூறவும் மற்றவர்கள் அனைவரும் மறுப்பாய் தலையசைத்தனர். கூடவே.. "போயும் போயும் உங்க கிட்ட வந்து சிக்கினான் பாரு ஒரு கிறுக்கன்.." என்று அவர்களையே கிண்டலடித்துச் சிரித்துக்கொண்டே கைகளையும் அடித்துக் கொண்டனர்.

அதிலும் ஒருத்தி, "ஹேய் இப்படியெல்லாம் ராங் நம்பர்ல இருந்து மெசேஜ் வந்துச்சுன்னா, ஆள் யாருன்னு பார்த்து பேசி கரெக்ட் பண்றத விட்டுட்டு.. ஏண்டி தேவை இல்லாத வேலையெல்லாம் பார்க்கறீங்க?" என்று கூறவும் அவர்கள் வகுப்பே சேர்ந்து அவளை முறைத்தனர்.

கல்லூரியின் ஹாஸ்டலுக்குள்ளும் மொபைல் எடுத்துவர அனுமதி இல்லை. வீட்டிற்குச் சென்று வரும் தோழிகள் யாராவது விளையாடினாலும், இதோ இவள் இப்படிச் சைபர் கிரைமில் புகார் அளிப்பதாகக் கூறியதுமே அம்பரியைக் கலாய்ப்பதற்காகவேனும்.. "அடியே இப்படி ஒரு மெசேஜ் அனுப்பினதுக்கு எல்லாம் நீ போலீஸ்ல கம்பிளைன்ட் கொடுப்பியா? நீயே கொடுத்தாலும், அவங்க உன் கம்பளைண்ட்டை எடுத்துப்பாங்களா?" என்று கூறியாவது சிரித்திருப்பார்கள்.

அப்படியும் இல்லாது யார் விளையாடுவது? அதிலும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் புகழியிடம்.

ஒருவேளை அவனாய் இருக்குமோ? அது தான் அந்தச் சத்ய விக்ரம்.. நேற்றே அவளிடம் பேசும்போதே அவனைப் பற்றி அம்பரிக்கு சற்று உறுத்தல் தான். ஆனால் அவன் இப்படியெல்லாம் செய்வானா என்று எண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லையே.. என்று அம்பரி யோசித்துக் கொண்டே இனியாவின் அருகில் போய் அமர, அவளது உடல் சற்று நடுங்குவது போலத் தெரிந்தது.

அந்த உணர்வில் சட்டென இனியாவைப் பார்க்க, வாயில் புறம் பதித்த பார்வையுடன், கரங்கள் நடுங்க, நெற்றியில் சிறிது வியர்வைத் துளிகள் பூத்தபடி இருந்தாள் அவள். அவள் பார்வை சென்ற திசையை அம்பரியும் பார்க்க, அவர்கள் வகுப்பிற்கு வெளியே நின்று வேறு ஒரு மாணவியிடம் பேசிக்கொண்டிருந்தார் அவர்களது வகுப்பாசிரியர் சம்பத்.

அவரைப் பார்த்து இவள் ஏன் இப்படிப் படபடக்கிறாள் என்று அம்பரி எண்ணிக்கொண்டிருக்கும் பொழுதே சம்பத் சாரின் பார்வை முன்புறம் அமர்ந்திருந்த அம்பரியைத் தாண்டி இனியாவிடம் சென்றது.

சட்டென அவரது பார்வையிலும் மாற்றம். கூடவே எப்பொழுதும் ஒரு வகை நிமிர்வுடன் இருக்கும் அவரது உடல் மொழியிலும் தடுமாற்றம். "என்னதிது? மாணவிகளின் மத்தியில் சம்பதுக்குப் பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. அது மகளிர் கல்லூரி என்றாலும், அங்கிருக்கும் மிகக் கண்ணியமான ஆசிரியர் இவர் தான் என்ற பெயரும் இருந்தது.

ஆனால் அப்படிப்பட்ட அவரைப் பார்த்து இனியா இப்படி நடுங்குகிறாள் என்றால்.. அதிலும் அவர், இனியாவைப் பார்க்கும் பார்வையிலே, வேறு ஏதோ மாறுபாட்டினை உணர்ந்தாள் அம்பரி.

சட்டென மெல்லிய குரலில்.. "ஏய் இனியா.. இனியா.." என்று அம்பரி கிசுகிசுக்க, அது அவள் காதில் விழுந்தத போலவே தெரியவில்லை. அவளது பார்வையெல்லாம் படபடத்து சம்பத்தின் மேலே இருந்தது.

அதைக் கண்டு கொஞ்சம் கடுப்பாகிப் போன அம்பரியோ.. நறுக்கென்று இனியாவின் தொடையில் கிள்ளிவிட, "ஸ்ஸ்ஸ்.. ஆஆ.." என்று கத்தினாள் அவள்.

அவளது இந்தக் கத்தலில் சம்பத்தும் அடக்கப்பட்ட புன்னகையுடன் அகன்றுவிட, இனியாவோ.. "என்னடி?" என்று இவளிடம் சீறினாள்.

ஆனால், அவளது சீரலைப் பொருட்படுத்தாதவளோ.. "ஹேய்.. இனி.. ஆர் யூ ஓகே?" என்று கேட்டாள், குரலில் தீவிரத்துடன். அதற்குக் கொஞ்சம் குழம்பிய பாவனையுடன்.. "எஸ் ஐயம் ஓகே.. ஏண்டி கேட்கற?" என்றதும் அம்பரிக்கு மனம் குழம்பியது.

"இல்லடி இப்ப நீ ஏதோ பயந்த மாதிரி.. கொஞ்சம் படபடன்னு.. இதோ கழுத்து முகமெல்லாம் வேர்த்துப் போய் இருக்கியே.. அதான் கேட்டேன்." என்றாள்.

அதற்குள் சற்றுத் தன்னை நிலைப்படுத்திக் கொண்ட இனியாவோ.. “ இல்லையே.. அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே” என்று அவள் கூறினாலும் அவளது பயமும் படபடப்பும் அம்பரிக்கு நிச்சயம் ஏதோ பிரச்சனை இருப்பதை உறுதிப் படுத்தியது.

இப்படியாய் அம்பரி குழம்பிக் கொண்டிருந்த வேளையில் தான் சட்டென அவர்களது வகுப்பறைக்குள் வந்தான் சத்ய விக்ரம். அவனைக் கண்டதும் அனைவரும் எழுந்து நிற்க, காதில் புகை வர தானும் இறுதியாக எழுந்து நின்றாள் அம்பரி . சத்யாவின் கூடவே அந்தக் கல்லூரியின் க்ளர்க்கும் வந்தார்.

சத்யா அவர்களுக்கு முன்பு கைகளைக் கட்டியபடி நின்றிருக்க, அவனுடன் வந்த அட்டன்டர் ஒரு சுற்றறிக்கையை வாசிக்க ஆரம்பித்தார்.

அடுத்த மாதத்தில் கல்லூரியில் இருந்து ஐ.வி எனப்படும் இன்டஸ்ட்ரியல் விசிட்டுக்கு கேரளா அழைத்துச் செல்லவிருப்பதாக அதில் இருந்தது. அதைக் கேட்ட மாணவிகள் அனைவரும் ஆனந்தக் கூச்சலிட, “ இந்தச் சர்குலர் சொல்ல இவன் எதுக்கு இங்க வந்தான்?” என்று கேள்வியாய் நினைத்தாள் அம்பரி.
 
Top