• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராதோ என் தேடல் - 3 B

Viba visha

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
90
அத்தியாயம் - 3(b)

அவள் எண்ணியது போல, சத்யா இந்தச் சுற்றறிக்கைக்காக மட்டுமே இங்கு வரவில்லை. மாணவிகளின் கூச்சலெல்லாம் சற்று மட்டுப் பட்ட பிறகு.. “அம்பரி” என்று விளித்தவன், அவள் சட்டென நிமிர்ந்து பார்க்கவும்.. “கம் டு மை கேபின்” என்று விட்டு வெளியேறினான்.

அந்த மொத்த வகுப்பறையும் இப்பொழுது அம்பரியைப் பார்த்து கிண்டலாக “ஊஊஊ..” என்று சத்தமிட, அம்பரிக்கு உள்ளமொல்லாம் எரிந்தது.

இப்படி இத்தனை பேருக்கு மத்தியில் தன்னை அவனது அறைக்கு வரும்படி இவ்வளவு அதிகாரமாக அழைத்தால், சுற்றியிருப்பவர்கள் அவளைத் தானே தவறாக நினைப்பார்கள்?

ஒரு ஆசிரியர் அவரது மாணவியை அழைத்துப் பேசுவதில் தவறில்லை. ஆனால் சம்மந்தமே இல்லாத இவன் எதற்காக அம்பரியைத் தனியே அழைக்க வேண்டுமாம்? என்று கடுப்பாக எண்ணிணாள் அவள்.

அவன் கூப்டா.. உடனே நான் போகணுமா? என்னால எல்லாம் போக முடியாது.. என்று மிதப்புடன் அவள் எண்ணிக்கொண்டு அமர்ந்திருந்த வேளையில் அவர்கள் வகுப்பிற்குள் வந்த அந்தப் பாடவேளைக்கான ஆசிரியர் சம்பத்தோ.. “ அம்பரி உன்ன சத்யா சார் கூப்பிட்டாராமே? அங்க போகாம இன்னும் என்ன செய்துட்டு இருக்க?” என்று வினவ.. வெளிப்படையாக எதுவும் பேச முடியாத அம்பரியோ, மனதார சத்யாவை சபித்தபடி அவனது இடம் நோக்கிச் சென்றாள்.

உள்ளே சென்றதும் அமராமல் நின்றிருந்தவளை.. "உட்காரு.." என்று கூறி தனக்கு முன்னிருந்த இருக்கையைக் காண்பித்தான் சத்யா.

அதற்கு அவளோ, ஏற்கனவே கொளுத்தும் வெயிலில் நடந்து கொண்டிருப்பவள் மீது சுடுதண்ணீர் ஊற்றியது போல இன்னமும் கடுப்பாகி.. "இங்க பாருங்க விக்ரம் சார்.. எதுக்காக இப்போ என்ன மட்டும் தனியா உங்க ரூமுக்கு வர வச்சீங்க?

நீங்க கரஸ்பாண்டண்ட்டோட ரிலேட்டிவ்ன்னா என்ன வேணாலும் செய்யலாம்னு நினைப்போ? என் பிரண்ட்ஸ் எல்லாரும் என்ன என்னனு நினைப்பாங்க? ஏதோ தெரியாம ஒரு முறை நான் உங்க வழில வந்துட்டேன். அதுக்காக நீங்க நடந்துக்கற முறை.. அதிலும் காலேஜுக்குள்ள இருந்துட்டு நடந்துக்கற முறை சுத்தமா சரியில்ல.

இப்போ உங்கள நான் சாருன்னு கூப்பிடறது கூட, நீங்க இங்க இருக்கற பதவிக்கு மரியாதை கொடுத்து தான். மத்தபடி உங்கள பார்த்து எனக்கொண்ணும் பயமெல்லாம் கிடையாது.. இனிமேல் இப்படி என்ன தனியா கூப்பிடறது.. பேசறதுனு எந்த வேலையும் வச்சுக்காதீங்க.." என்று மூச்சடைக்கத் திட்டிவிட்டு, சற்று மூச்சு வாங்க அவள் பேச்சை நிறுத்தவும்.. "போதுமா? திட்டியாச்சா? இல்ல இன்னும் மிச்சம் மீதி ஏதாவது இருக்கா? அப்படி இல்லைனா நான் சொல்ல வந்ததைக் கொஞ்சம் பேசிக்கட்டுமா?" என்று அவன் கேட்கவும், மௌனமாயும்.. கூடவே சந்தேகமாகவும் அவனை ப்பார்த்தாள் அம்பரி.

அவளது அந்த மௌனத்தையே தனக்கான சம்மதமாய் எடுத்துக் கொண்ட விக்ரம்.. "நான் என் ஆண்ட்டிக்கு இந்தக் காலேஜோட மேம்பாட்டு விஷயங்கள்ல உதவி செய்யறதுக்காகத் தான் வேலைக்குச் சேர்ந்தது. கூடவே இங்க இருக்கற பாதுகாப்பையும் கவனிச்சுக்கறேன்..

அப்படி நான் ஏதோ என் போக்குல காலேஜுக்கு வெளில உட்கார்ந்துட்டு எங்கெல்லாம் செக்யூரிட்டி கேமரா வைக்கலாம்னு யோசிச்சுட்டு இருந்தப்போ தான் நீ வந்து என்ன வார்ன் பண்ணினது. தைரியமா நீ என்கிட்டே வந்து பேசவும், சரி இந்தப் பொண்ணு ரொம்பப் போல்டா இருக்காளே.. தைரியமா பேசற இந்தப் பொண்ணு, உண்மையா மறைக்காம, காலேஜ்ல இருக்க மத்த ஏதாவது அசெளகரியங்களைப் பற்றியும் சொல்லுவாளேன்னு தான் இங்க உன்ன நான் கூப்பிட்டது.

உன்னிலிருந்து ஆரம்பிச்சு, என் கண்ணுல படர எல்லாரையும் நான் கூப்பிட்டு தனித்தனியா எல்லாத் தகவல்களையும் சேகரிக்கணும். அது தான் இங்க என்னோட வேலை. மத்தபடி உன்ன நேத்து நீலாம்பரின்னு கூப்பிட்டதெல்லாம்.. என்னமோ மனசுக்கு அப்டி கூப்பிட தோணுச்சு.. 'அம்பரி.. நீலாம்பரி'ன்னு சொல்ற மாதிரி ரைமிங்கா இருந்துச்சு. அதான் அப்டி கூப்பிட்டேன். சரியா?" என்று விக்ரம் கூறவும் அவனது இந்தச் சமாளிப்பில் ஒரு கணம் அவனை நம்பியும் விட்டாள் தான் அம்பரி.

ஆனால் இறுதியாக அந்த நீலாம்பரி என்று அழைத்த விஷயம் தான் இன்னமும் மனத்தை நெருடியது. அவன் அப்படி நீலாம்பரி என்று அழைத்தது.. சாதாரணமாகவோ.. அன்றிச் சரளமாகவோ அவளுக்குத் தோன்றவில்லையே. மிகவும் சரசமாக அழைப்பதாகத் தானே பட்டது பெண்ணுக்கு?
"இதோ.. இதோ.. இப்போ அவன் கண்ணைப் பார்த்தா அதுக்குள்ளே ஒளிருதே.. இது எனக்கே எனக்கான ஒளி. இவன் நேத்து என்ன நீலாம்பரின்னு கூப்பிடும்போதும் இதே மாதிரி தான் அவன் கண்ணு ஒளிர்ந்துச்சு.." என்று இனம் புரியா உணர்வினால் படபடக்க.. சட்டென அந்த உணர்ச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்த்துவிட வேண்டும் என்ற நோக்கினில்..

"இங்க பாருங்க விக்ரம் சார்.. இப்படி நீங்க என்ன நீலாம்பரின்னு என்ன கூப்பிடறது எல்லாம் எனக்குப் பிடிக்கல. ஏதோ வில்லியை கூப்பிட்ற மாதிரி இருக்கு." என்று முகததைக் கடுகடுவென வைத்துக் கொண்டு அவள் சொல்லவும், விக்ரம் சிரித்தான்.

"நீலாம்பரின்னா என்னனு நினச்சுட்ட? வெறும் சினிமால வந்த வில்லியோட பேருன்னா? நீலாம்பரி எவ்வளவு அருமையான ராகம் தெரியுமா?

எவ்வளவு இதமான, மென்மையான ராகம் தெரியுமா? விடியலுக்காக இசைக்கப்படறது பூபாளம்ன்னா.. இரவுக்காக.. இரவின் உறக்கத்துக்காக இசைக்கப்படறது நீலாம்பரி ராகம்.

அவ்வளவு மென்மையான, மேன்மையான ஒரு ராகம் இது." என்று கூறியவன், "உன்ன பார்த்தாலே.. அந்த ராகத்தைக் கேட்கறப்போ மனசெல்லாம் இதமாகுமே.. அப்படி ஒரு உணர்வு வருது.. அதனால தான் உன்ன நான் நீலாம்பரின்னு கூப்பிடுறேன்" என்று எண்ணியதை மட்டும் வெளிப்படையாகக் கூறாது விடுத்தான்.

ஆனால் அவனது இப்படியான முன் விளக்கத்திலேயே அவள் ஒருவாறு குழம்பியே போனாள் எனலாம். அப்படி அவள் ஒருவேளை தெளிவாக இருந்திருந்தால் தான், "என் பேர் சொல்லி மட்டும் என்ன கூப்பிட்டா போதும்" என்று கறாராகச் சொல்லியிருப்பாளே? அவளுக்கு அன்றைய நிகழ்வுகளான இனியாவின் தடுமாற்றம், புகழிக்கு வந்த குறுஞ்செய்தி.. இவனது பேச்சு எல்லாமுமாகச் சேர்ந்து அவளைக் குழப்பிவிட்டிருந்தன.

எனவே அவனது கேள்விகளுக்கு மட்டும் உரிய பதிலை அளித்துவிட்டு மீண்டும் தனது வகுப்பறைக்கு வந்துவிட்டாள்.

அங்கு அம்பரியின் தோழிகள் அனைவரும் அவளை வைத்து கலாய்த்துத் தள்ளிவிட்டார்கள். அதிலும் ஒருத்தி, நடிகர் விக்ரமின் அந்நியன் படத்தில் அவர் பெயர் அம்பி என்பதையும், இங்கு சத்ய விக்ரமையும், அவர்களால் அம்பி என்று செல்லமாக அழைக்கப்படும் அம்பரியையும் தொடர்புபடுத்திக் கேலி செய்து தீர்த்துவிட்டனர்.


இதெல்லாம் ஒரு புறம் அம்பரிக்கு மிகவும் எரிச்சலை கொடுத்தாலும், அப்படிக் கேலி செய்பவர்கள் மனதில் எந்த வஞ்சமும், சூதும் இன்றித் தோழிகளுக்குள் கிண்டலித்தபடி பேசும் மனப்பான்மையின் பேசுவதால், அவளும் மற்றவர்களுக்கு ஈடுகொடுத்தபடியே இருந்திட, அடுத்து அவர்களது பேச்சு அவர்களின் ஐ.வியைப் பற்றித் தொடர்ந்தது.

மாணவிகள் மட்டுமின்றி அவர்களின் ஆசிரியைகளும் அந்த ஐ.வியை எண்ணி மிகவும் உற்சாகத்தில் இருக்க, அன்றைய நாள் அதைப் பற்றிய பேச்சுக்களோடே கழிந்தது.

ஆனால், அந்தச் சுற்றுலாவில் ஏற்படப்போகும் விபரீதத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவர்களுக்குக் குத்தகைய சந்தோசம் இருந்திருக்குமா என்பது சந்தேகமே.. அதிலும் குறிப்பாக அம்பரிக்கும் புகழிக்கும், இனியாவிற்கும் பிற்காலத்தை அறியும் சக்தியில்லாததால், தங்களது வாழ்க்கையில் அந்த ஐ.விக்குப் பிறகு நடக்கப்போகும் விபரீதத்தை உணராது ஆனந்தமாகவே இருந்தனர்.
 
Top