• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராதோ என் தேடல் - 7

Viba visha

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
90
அத்தியாயம் - 7

விடியற்காலை நேரத்தில் அந்த ஹோட்டல் அறைக்குள் சென்ற மாணவிகள்.. சூரியன் உதித்து மேலெழும்பி வரவும் தான் புறப்பட்டுத் தயாராகி வெளியே வந்தனர்.

வந்தவர்கள் முதலில் தாங்கள் அனுமதி வாங்கியிருந்த நிறுவனத்திற்குச் சென்று, அவர்கள் படிப்பு சம்மந்தமான சில செய்முறை விளக்கங்களைப் பார்த்தவர்கள்.. அங்கிருந்து நேராகத் திரிச்சூரின் மியூசியத்திற்குச் சென்று சுற்றி பார்த்தனர். அங்குச் சென்று வருவதற்கே மதியத்திற்கு மேலாகிவிட, மதிய உணவை முடித்துக் கொண்ட அவர்கள்.. அடுத்ததாக அவர்கள் அருகில் இருந்த பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்றனர்.

அனைத்து மாணவிகளும் அந்தக் கல்லூரிப் பருவத்திற்கே உரியதான கேலி கிண்டல்களுடன் வானில் இலக்கின்றிப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளாய் சிறகின்றிப் பறந்து கொண்டிருந்தனர்.

ஆங்காங்கே நின்று புகைப்படம் எடுப்பதும், கேரளத்தின் இயற்கை அழகினை ரசித்து மகிழ்வதுமாக, பகவதி அம்மனின் தரிசனத்தையும் முடித்துவிட்டு வெளியே வந்தார்கள் அவர்கள்.

அன்றைய நாளின் பொழுது.. இன்னும் அருகில் இருக்கும் சில சுற்றுலாத் தளங்களைப் பார்வையிடுவதில் கழிந்துவிட, அந்த இரவு அனைவரும் மீண்டுமாகத் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.

அன்றிரவே திருச்சூரில் இருந்து கிளம்பியவர்கள் மறுநாள் அதனைச் சுற்றியிருந்த இடங்களை எல்லாம் ஒவ்வொன்றாய் பார்வையிட்டு வர, அன்றைய நாளின் மதியத்திற்கு மேலே அவர்கள் சென்றது ஒரு அழகிய நீர்வீழ்ச்சிக்கு.

ஆகாயக் கங்கை போல, வானிலிருந்து கொட்டிய நீரில் சிதறிய துளிகள், தூரத்தில் இருந்த இவர்களது மேனி தொட, அப்படியே அத்தனை பேரும் சிலிர்த்துப் போய்விட்டனர்.

ஒரு ஆனந்தக் கூவலுடன் அனைவரும் அந்த அருவியை நோக்கி ஓட, அம்பரியும், உடன் புகழியும் கூட அந்த அருவியை நோக்கி ஆர்பரித்தபடி சென்றனர்.

ஆனால் இனியாவோ.. சற்று சுற்றும் முற்றும் பார்த்தபடி நின்றிருக்க.. அவளருகே வந்த சம்பத்.. "ஏன் இனியா.. நீ போய்க் குளிக்கலையா?" என்று அவளிடம் வந்து கேட்டார்.

அவர் அருகே வந்ததும், இனியாவிற்கு மீண்டுமாய்ப் பதட்டம் தொற்றிக் கொள்ள.. இவளோ, "இல்ல சார்.. நான் போகல" என்று விட்டு, அமைதியாக ஒரு ஓரமாய்ப் போய் அமர்ந்து கொண்டாள்.

அவளைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்த சம்பத்தோ.. அவர் மட்டும் தனியாகப் பேருந்தினை நோக்கி செல்ல, அங்கு ஏற்கனவே டிரைவருடன் பேசிக் கொண்டிருந்த சத்ய விக்ரம், "என்ன சார்.. நீங்களும் வந்துட்டீங்களா?" என்று கேட்டான். அவனுக்கு, சம்பத் பதில் கூற, இருவரும் பேசியபடியே பேருந்திலேயே அமர்ந்துவிட்டனர்.

சம்பத்தின் தலை அந்தப் பக்கம் போகவும் தான், ஒரு நிம்மதி பெருமூச்சுடன் இனியா தனது தோழிகளுடன் சென்று இணைந்தாள்.

அவள் வந்ததும் இன்னமும் கும்மாளமாய்த் தோழிகள் மூவரும் கொட்டமடிக்க, அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் பெண்களை அணுக ஒருவன் சரியான நேரம் பார்த்துக் காத்திருந்தான்.

அனைவரும் கிட்டத்தட்ட அந்த நாளின் பெரும்பகுதியை அந்த அருவியிலேயே கழிக்க, ஒருவழியாய், குளித்து முடித்துவிட்டு, உடைமாற்றிக் கொண்டு திரும்பியவர்கள்.. அங்கேயே கும்பல் கும்பலாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களுள் சிலர், அந்தச் சிறு காட்டுப் பாதையில் இயற்கை அழகை ரசித்தபடி நடைபயின்றும் கொண்டிருந்தனர். அப்படி நடை பயின்றவர்களுள் அம்பரி, புகழி, மற்றும் இனியாவும் அடங்குவர்.

இப்படியே இவர்கள் பேசிக்கொண்டே தங்களது கூட்டத்தை விட்டு சற்று விலகியும் வந்துவிட்டனர். தங்களது இந்தச் சுற்றுலாவைப் பற்றி மிகவும் ஆனந்தமாகவும், குதூகலத்தோடும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த கேமரா மூலமாக அங்கேயே விதவிதமாகப் போட்டோவும் எடுத்துக் கொண்டு இருந்தனர்.

அப்படிப் புகழியை ஒரு போஸில் மரத்திற்கு முன்பு தனியாய் நிற்க வைத்து இனியாவும், அம்பரியும் போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, திடீரென்று மரத்தின் பின்னாலிருந்து ஒருவன் வந்தான்.

அவன் அப்படித் திடீரென்று வந்த சத்தத்தில், வந்தது ஏதோ காட்டு விலங்கென அதிர்ந்து போய்ப் புகழி அலறியபடியே தடுமாறிக் கீழே விழ, சட்டென ஓடிவந்து அவளைத் தாங்கிய அம்பரியும், இனியாவும், திடீரென்று மரத்தின் பின்னால் இருந்து வந்து அவர்களைப் பயமுறுத்திய அந்தப் புதியவனை நோக்கி எரிச்சலாய் முறைத்தனர்.

ஆனால் அவனோ இவர்கள் இருவரையும் சட்டையே செய்யாது.. தடுமாறி விழப் போன புகழியைப் பார்த்து தான் பதறியவனாக.. "புகழ்.. என்னாச்சு டா? பயந்துட்டியா? அடி கிடி எதுவும் படலையே?"என்று வெகு கரிசனத்துடன் கேட்டான்.

அவனது இந்தக் கரிசனக் குரலும், கூடவே புகழ் என்ற விளிப்பும் சேர்ந்து, அம்பரியையும், புகழியையும் திகைத்தபடி சந்தேகத்துடன் ஒருவரை ஒருவர் பார்க்க வைத்தது.

அம்பரிக்கும், இனியாவிற்கும் நடுவில் நின்றிருந்த புகழி, சட்டென இருவரின் முதுகுப்புறமாய்ச் சென்று மறைந்து நின்றபடி.. "ஹேய் வாங்க டி.. நாம பஸ்ஸுக்கு போய்டலாம்.." என்று தனது தோழிகளின் காதில் கிசுகிசுக்க, இவர்களும்அவனை நோக்கிய ஒரு கோபப் பார்வையுடன் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தனர்.

ஆனால் கிளம்பும் அவர்களின் வழியை மறைத்தபடி முன்னே வந்து நின்ற அவனோ.. "என்னமா அதுக்குள்ள கிளம்பறீங்க? எனக்கு ஒரு பதிலை சொல்லிட்டு கிளம்புங்க.." என்று இரு புறமும் கைகளை நீட்டியபடி, அவர்களை மேலும் முன்னேற விடாமல் தடுத்தான்.

அவனை அருவருப்பாய் நோக்கிய அம்பரியோ.. "சீ.. நகரு.. யார் நீ? எதுக்கு இப்படி எங்க வழில வந்து தகராறு பண்ற?" என்று கோபமாய்க் கேட்க, அவனோ..

"ஓஓஓஓ.. நான் யாருன்னு உங்ககிட்ட இன்னமும் என்னை அறிமுகப்படுத்திக்கல இல்ல?" என்று கூறிவிட்டு, தனது பேண்ட் பாக்கட்டில் இருந்து கூலரை எடுத்து, அதனை ஊதி அணிந்து கொண்டவன்.. "நான் தான் ஷங்கர்.." என்றான் இடுப்பில் கை வைத்தபடி பெருமையாக.

"ஆமாம்.. நீ பெரிய சி.ஐ.டி ஷங்கர்.. பேரை சொன்னதும் தெரிஞ்சுக்க. என்னமோ ஐநூறு கோடியில இந்தியன் 2.O படம் எடுத்த மாதிரி பெருமை பீத்திக்கறதை பாரேன்.." என்று தனது தோழிகளிடம் கிண்டலாகக் கூறிய அம்பரி.. " நீ என்னவா வேணாலும் இருந்துட்டு போ.. ஆனா, எதுக்காக இப்படி எங்க வழியை மறச்சு நிக்கவச்சு எங்ககிட்ட வம்பு வளர்த்துட்டு இருக்க?" என்று கேட்க.. படு ஸ்டைலாக முடியைக் கோதியவனோ..

"இன்னமுமா என்ன தெரியல.. நான் தான் புகழியோட லவ்வர்.." என்கவும் புகழி அதிர்ந்தாளோ என்னவோ, ஆனால் இனியாவுக்குத் தான் தலை கிறுகிறுத்துப் போனது.

"ஹேய் புகழ் என்னடி சொல்றான் இவன்?" என்று அவள் அதிர்ந்து போய்க் கேட்க, அப்பொழுது தான் அம்பரிக்கும், புகழிக்கும் அவன் யாரென்று சந்தேகத்திற்கு இடமின்றிப் புரிந்தது.

அவன் தான் இத்தனை நாட்களாய் மொபைலில் புகழியைத் தொந்திரவு செய்து கொண்டிருந்தவன் என்று புரிந்ததும், அம்பரிக்கும் சரி.. புகழிக்கும் சரி.. கட்டுக்கடங்காத கோபம் பொங்கியது.

அந்தப் பொங்கிய கோபத்தில், இயல்பாகவே மிகவும் அமைதியான பெண்ணான புகழியே சட்டென அவன் முன்பாக வந்து.. "ஏய் ஆதி கால அரை லூசு.. எதுக்கு டா என்ன இத்தனை டார்ச்சர் பண்ற? கண்ட கண்ட சினிமாவையும் பார்த்த்துட்டு எதுக்குடா என் உயிரை இப்படி வாங்கற?" என்று கேட்க, அவள் கத்திய கத்தலில் அம்பரியும், இனியாவும் இவளா இப்படிப் பேசுவது என்று திகைத்துப் போய் உறைந்திருக்க, எதிரில் நின்ற அந்த ஷங்கரோ.. "புகழு மா.. நான் பைத்தியம் தான். ஆனா உன்மேல தான் என் பைத்தியம்.." என்று சினிமா வசனமாக எடுத்து விட, புகழிக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லாது போய்விட்டது.

"அடேய் இன்னொரு டைம் இப்படிச் சினிமா டயலாக் பேசின.. உன்ன அவ்வளோ தான்.. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.." என்று சீற, அவன், "சரி புகழுமா.. நீ இப்போ கோபமா இருக்க, அது எனக்குப் புரியுது.

ஆனா எனக்கு உன்னோட முடிவு என்ன?" என்றான் தனது பாண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டுக் கொண்டு, வானத்தை நோக்கி தலையை நிமிர்த்தி வைத்து, தான் மிகவும் ஸ்டைலாக நிற்கிறோம் என்று எண்ணியபடி.

அவனது கேள்வியின் அர்த்தம் புரியாத பெண்கள் மூவரும்.. "நிஜமாவே இவன் லூசு தானா?" என்று எண்ணியவர்களாய் ஒருவரை ஒருவர் சந்தேகமாய்ப் பார்த்துக் கொள்ள, இனியா தான்.. "ஏய் லூசே.. நீ என்ன கேட்கற லூசே.." என்றாள்.

இனியா இப்படி அவனைப் பைத்தியம் என்றே விளிக்கவும் அந்த ஷங்கருக்கும் மிகுந்த கோபம் வந்துவிட்டது.

ஆனால் நேரடியாக இனியாவிடம் பேசாது.. புகழியிடமே, "புகழு.. உன்னோட பிரண்டை வாய் அடக்கி பேச சொல்லு புகழு.." என்று கோபமாய் அவன் கூற, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற புகழியோ, "அடேய்.. இன்னொரு வார்த்தை நீ பேசின.. அவ்வளோ தான்.. சாவடிச்சுடுவேன் உன்ன" என்று எகிறினாள்.

அவளது இந்தக் கோபத்தைப் பார்த்த ஷங்கரோ.. கண்ணாடியைக் கழற்றியபடி ஒரு பெருமூச்சை வெளியிட்டவாறே.. தனது இதயத்தை மிகவும் சோகமாகத் தடவி விட்டுக்கொண்டான்.

அவனது இந்தச் செய்கையெல்லாம் புரியாத பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்த தோழிகள் மூவரும் .. "இவன் என்னடி இதுக்கு இவ்வளவு நேரம் பீல் பண்ணறான்? என்று தங்களுக்குளாகக் கிசுகிசுக்க.. தனது பீலிங்கை முடித்து விட்டு நிமிர்ந்த அவனோ.. "கடைசியா கேட்கறேன் புகழி.. உனக்கு என்ன பிடிச்சிருக்கா? இல்லையா?

பிடிச்சுருக்குன்னு சொன்னா என் கார்லயே நம்ம கல்யாணத்துக்கு உண்டான எல்லாப் பொருட்களும் ரெடியா இருக்கு. நாம நம்ம கார்லயே நம்மளோட கல்யாணத்த வச்சுக்கலாம். இதோ, மணப்பெண் தோழிகள் கூட நமக்கு ஒண்ணுக்கு ரெண்டு பேர் இருக்காங்க.." என்று அவன் கூறிக் கொண்டிருக்க, அம்பரியும், இனியாவும் ஒரு சேர, "அடிங்.." என்று அவனைத் திட்ட, அதைக் கண்டு கொள்ளாது மேலே தொடர்ந்தவனோ..

கல்யாணம் முடிஞ்ச கையோட, நம்ம காருலயே உங்க ஊருக்கு போய் அத்தை, மாமாவை.. அதன் உன் அம்மா, அப்பாவை பார்த்துட்டு, அப்படியே அவங்ககிட்ட ஆசிர்வாதத்தை வாங்கிட்டு.. நேரா நம்ம வீட்டுக்கு போய்டலாம்.." என்று அவன் கூற, ஆத்திரத்துடன் அனல் மூச்செறிந்து கொண்டிருந்த புகழியோ.. "டேய்.. வேணாம்.. இதோட நிறுத்திக்கோ.." என்று தன்னைக் கட்டுப்படுத்தியபடியே கூறிக் கொண்டிருந்தாள்.

ஆனால் அப்பொழுதும் அவளைத் தவறாகப் புரிந்து கொண்டவனோ.. "சே.. சே.. நீ ஒன்னும் பயப்படாத புகழு. எங்க அப்பா எப்பவுமே என் ஆசைக்கு நடுவுல நிற்க மாட்டாரு. அதனால அவர் நம்ம கல்யாணத்துக்கு எதிர்ப்பு சொல்லுவாரோன்னு நீ பயப்படவே பயப்படாத பேபி.." என்று கூறியது தான் தாமதம்.. புகழி, காளியவதாரம் எடுத்துவிட்டாள்.

"டேய்.. யாருக்கு யாருடா பேபி.. மெண்டல் மண்டையா.. சும்மா ஒரு பொண்ணோட போன் நம்பர் கிடைச்சதுமே அவகிட்ட தத்து பித்துன்னு காதல் வசனம் பேசறது.. பின்னாடியே சுத்தறது.. என்ன பார்த்தா பிடிக்காது.. பார்க்க பார்க்கத் தான் பிடிக்கும்னு சினிமா படமெல்லாம் பார்த்துட்டு அரை வேக்காட்டுத் தனமா திரியறது.

பொண்ணுங்கன்னா என்னடா நினைச்சுட்டு இருக்க? அதுலயும், கல்யாணத்துக்கான அனைத்து பொருட்களும் வாங்க.. எங்களை அணுகவும்னு சொல்ற மாதிரி.. காருக்குள்ளையே கல்யாண செட்டப் செஞ்சு வச்சிருக்க..

நீயெல்லாம் மனுஷனா இல்ல மலைமாடா? உன்னால அத்தனை நாளா அழுது, பயந்து.. என்ன நானே டிப்ரெஸ் ஆக்கி.."என்று கூறிக் கொண்டிருந்தவளை இடைமறித்த ஷங்கரோ..
"ச்சே.. இன்னமும் கூட உனக்கு என் காதல் புரியலை இல்ல?" என மீண்டுமாய்க் கேட்க, காலில் இருந்த செருப்பைக் கழற்றி அவனை அடிக்கவே பாய்ந்து விட்டாள் புகழி.

அதைக் கண்டு பதறிப் போன இனியாவும், அம்பரியும் தான் அவளது கையைப் பிடித்துத் தடுக்க வேண்டியதாயிற்று.

அந்த ஷங்கரும், புகழி இப்படித் தன்னைச் செருப்பாலேயே அடிக்க வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை. எனவே அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போய் அப்படியே அவன் நின்றிட, அம்பரி தான்.. "அடேய்.. இன்னமுமா டா இங்கேயே நின்னுட்டு இருக்க? இவ கொலைகாரி ஆகறதுக்குள்ள இங்கிருந்து கிளம்புடா.." என்று கத்த, அந்தச் சத்தத்தில் தான் தன்னுணர்வு மீண்டவன்..

"சரி புகழு.. இப்போ நீ ரொம்பக் கோபமா இருக்க.. நான் இன்னொரு நாள் வந்து உன்ன பார்க்கறேன். ஆனா, இப்பவும் சொல்றேன் பேபி.. நீ சம்மதிக்கலேனாலும் உன்ன தூக்கிட்டு போயாவது கல்யாணம் செய்துப்பேன்.." என்று சூளுரைத்தபடியே ஓடவும், தன்னைப் பற்றியிருந்த இனியாவையும், அம்பரியையும் ஒரே தள்ளு தள்ளிவிட்ட புகழியோ.. கீழே கிடந்த கல்லை எடுத்து, ஓடும் அந்த ஷங்கரைப் பார்த்து குறிவைத்து அடிக்க, அந்தக் கல் நச்சென்று அவனது முதுகைத் தாக்க.. "ஹையோ.. அம்மா.." என்று அவன் முதுகைத் தடவியபடி ஓடியே விட்டான்.

அவன் ஓடியதும் அதுவரை இருந்த ஆவேசமெல்லாம் அடங்க, உடல் சோர்ந்து அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள் புகழி.
 

Krithika ravi

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
88
ஹாஹா ஆதி கால அரை லூசு செம செம சூப்பர் மா... நல்லா கதையை கொண்டு போறீங்க வாழ்த்துகள்
 
Top