• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராதோ என் தேடல் - 8

Viba visha

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
90
அத்தியாயம் - 8

சட்டென உடலின் நிதானமிழக்க கீழே அமர்ந்த புகழி, முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த இனியாவும், அம்பரிம் "இவள் இப்போது எதற்காக அழுகிறாள்? அதுதான் அந்த ஷங்கர் இங்கிருந்து ஓடியே விட்டானே?" என்று எண்ணி குழம்ப, அழுது கொண்டிருக்கும் அவள் முகத்தை நிமிர்த்த்தியவர்கள், "ஹேய்.. ஏன் டி மறுபடியும் அழற?" என்று கேட்டார்கள்.

"இல்லப்பா.. இத்தனை நாளா எவ்வளவு பயந்து போய் இருந்தேன்.. அதிலும் அவன் இப்படிக் கடத்திடுவேன், கடத்திடுவேன்னு சொன்னப்போ எல்லாம் எப்படித் திக் திக்குனு இருந்து.. சரியா படிப்புல கவனம் செலுத்த முடியாம, என்னோட உடம்பயும் பார்த்துக்காம.. இதோ அம்பி உனக்கும் அவ்வளவு தொல்லை கொடுத்து.. எந்த அளவுக்கு நானும் கஷ்டப்பட்டு, உங்களையும் கஷ்டப்படுத்தியிருப்பேன்.

ஆனா, இவன் ஒரு போன் நம்பரை வச்சு என்ன எப்படிப் படுத்தி எடுத்துட்டு, இப்பவும் என் முன்னாடி வந்து நின்னு.. உனக்கு என்ன பிடிச்சுருக்கான்னு கேட்பான்?

எப்படியோ அவன் ஓடிட்டானே.. அது வரைக்கும் சந்தோசம். அந்த நிம்மத்தியில தான் ஒரு மாதிரி உடம்பும், மனசும் தளர்ந்து போய்டுச்சு" என்று நிம்மதி பெருமூச்சுடன் கூறினாள் புகழி.

அவளுக்குச் சமாதானம் கூறிய இனியாவிற்கு அந்த ஷங்கர் பற்றிய விவரம் முழுமையாகத் தெரியாவிட்டாலும், இப்பொழுது நடந்த சம்பவத்தைப் பார்க்கவும், இவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்கவும் ஓரளவிற்கு விவரம் புரிந்தது.

அவள் அந்த யோசனையில் இருக்க, அம்பரியோ.. "ஆனாலும் இந்த ஷங்கர் பிரச்னை இதோட முடியற மாதிரி தெரிலையே.." என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.

ஏனென்றால் சில மரை கழன்ற கேஸ்கள் இருக்கின்றன.. பெண்களுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தும்.. பின்னாலேயே சுற்றுவதும், அவர்கள் முகத்தை அடிக்கடி காண்பித்தால்.. வெளியே அந்தப் பெண் இவர்கள் ஆள் என்று கூறிக்கொண்டால்.. அதை அந்தப் பெண் ரசிப்பாள் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

அந்த மரை கழன்றவர்களில் இந்த ஷங்கரும் ஒருவனாக இருப்பானோ என்று அம்பரியின் மனதிற்கு வெகுவாகப் பட்டாலும்.. அதை வெளிப்டையாகக் காட்டிக் கொள்ளவில்லை அவள்.

ஏனென்றால் இப்பொழுது தான் புகழி, அவளைப் பீடித்திருந்த பய உணர்விலிருந்து வெளியே வந்திருக்கிறாள் போலத் தெரிகிறது. இந்த நிலையில் அம்பரி தனது சந்தேகத்தை வெளியே கூறினாள் என்றால்.. எங்கே மீண்டும் அவள் அந்த ஷங்கர் இன்னும் என்ன செய்வானோ என்று பயம் கொள்ளுவாளோ என்று எண்ணினாள்.

எனவே இனி புகழிக்குத் தெரியாமலேயே அவளைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று மனதில் உறுதியேற்றாள்.

ஒரு வழியாக மூவரும் அங்கிருந்து கிளம்ப எத்தனித்த தருணத்தில் அங்குச் சத்யா மூச்சிரைக்க ஓடி வந்தான். அவர்கள் மூவரும் இப்படி மணற்தரையில் கீழே அமர்ந்திருக்கக் கண்டவன் கண்கள் சட்டெனக் கூர்மையாயின.

சுற்றிலும் வேகமாய்ப் பார்வையாலேயே ஒரு அலசல் செய்துவிட்டு.. "என்ன பிரச்சனை?" என்றான் கூர்மையான கண்களோடு.

அவனுக்கு அங்கு ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பது புரிந்துவிட்டது என்பதை அம்பரி கண்டுகொண்டாலும், தனது தோழிக்காக.. "பிரச்சனையா? என்ன பிரச்சனை சார்?

அதிலும் எங்களுக்கு என்ன பிரச்னை சார்?" என்றாள் முயன்று வருவித்துக் கொண்ட சாதாரணக் குரலில்.

இப்படி அவள் மழுப்பவும், கோபம் கொண்ட சத்யா.. "என்கிட்டே உங்க நடிப்பை எல்லாம் காட்டாதீங்க.. உண்மையா சொல்லுங்க இங்க என்ன பிரச்சனை?" என்று மீண்டும் கேட்க.. அனைவரும் ஒரு கணம் அமைதியானார்கள்.

அவர்கள் அமைதியில் பொறுமையிழந்த சத்யா.. "ஹேய்.. சொல்லுங்கன்னு சொல்றேன்ல?" என்று ஒரு கத்து கத்த.. மூன்று பெண்களின் உடலும் விதிர் விதிர்த்துப் போனது.

பிறகு ஒருவாறாகச் சற்று மிடறு விழுங்கிய புகழி தானாகவே நடந்ததைக் கூறி முடித்தாள். அவள் கூறுவதை எல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்ட சத்யாவோ.. புகழியிடம் எதுவும் கூறாது, அம்பரியைப் பார்த்து.. "அப்போ இதுக்காகத் தான் மேடம் அன்னைக்கு என்ன கேட்டுக்கு வெளில காவல் இருக்கச் சொன்னீங்க?" என்று கேட்க, மௌனமாய்த் தலை குனிந்தாள் அம்பரி.

"சொல்லு.. நான் அன்னைக்கே புகழுக்கு என்ன பிரச்சனைன்னு கேட்டேன்ல அபி? அப்போவே ஏன் சொல்லல?" என்று கோபமாய்க் கேட்க, தலை குனிந்தபடியே.. "அவளோட ரகசியத்தை நான் எப்படி வெளில சொல்றது?" என்று முணுமுணுத்தாள்.

அவளது முணுமுணுப்பைக் கேட்டவனோ.. "ஆமா, இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல.." என்று மீண்டும் கோபம் காட்டிவிட்டு, "ஆமா, அந்த ஷங்கரோட கார் நம்பர் ஏதாவது தெரியுமா? அவன் எங்க இருக்கான் என்ன.. ஏதுன்னு, அவனைப் பற்றிய விவரம் ஏதாவது சொன்னானா?" என்று வினவினான்.

அதற்குச் சட்டெனப் புகழி.. "ஹையையோ.." என்று பதற, அவளைப் பார்த்து முறைத்தவன்.. "இப்போ நீ எதுக்கு இப்படிப் பதட்டப்படற?" என்று கேட்டான்.

அவனது கேள்விக்குச் சற்று தயங்கியபடியே.. "சார்.. நீங்க போலீஸ் அது இதுன்னு போய்ட்டா.. அவ்ளோ தான் சார்.

இந்த விஷயம் வீட்டுல இருக்கப் பெரியவங்களுக்குத் தெரிஞ்சுடும். அப்பறம் என்ன உடனே ஊருக்கு கூட்டிட்டு போய்டுவாங்க.

இது எனக்குக் கடைசிச் செமெஸ்டர் சார்.. ஊருக்குப் போனதும், ப்ராஜெக்ட் அப்பறம் ரெண்டே ரெண்டு எக்ஸாம் தான் இருக்கு. அப்பறம் நாங்க எங்க இருக்கோம்னு கூட அவனுக்குத் தெரியாது.

அதனால பரிட்சை முடியற வரைக்கும் எந்தப் பிரச்னையும் வேணாம் சார்.." என அவள் கெஞ்சுதலாய் தன் தரப்பு விளக்கத்தை அளிக்க.. அவள் கூறுவதன் கருத்தை உணர்ந்த சத்யாவும்.. "ஹ்ம்ம்.. இப்போதைக்கு இந்த விஷயத்தை நான் விட்டுடறேன். ஆனா என் கவனம் எப்பவும் உங்க மேலையே இருக்கும்.

இனி ஒரு முறை இது போல ஏதாவது நடந்துச்சுன்னா.. எனக்குப் போலீசை அணுகறதை தவிர வேற வழி இல்ல.." என்று கூறவும், புகழி பரிதாபமாக "சார்.." என்று இழுத்தாள்.

அதைச் சட்டை செய்யாதவனாக.. "இப்போ நேரமாச்சு.. சீக்கிரம் பஸ்ஸுக்கு வாங்க. அப்பறம் யாராவது ஏன் இவ்வளவு லேட்டுன்னு கேட்டா, போட்டோ எடுத்துட்டு இருந்ததால டைம் பார்க்கலைன்னு சொல்லி சமாளிங்க. மற்றத நான் பார்த்துக்கறேன்." என்று கூறிவிட்டு வேக எட்டுக்கள் எடுத்து வைத்து அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

பெண்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக அங்கிருந்து கிளம்பினர்.

அவர்கள் மூவரும் பேருந்தில் ஏறியதும், அனைவரும் அவர்களைப் பிலலு பிலுவெனப் பிடித்துக் கொண்டார்கள்.. "ஏய்.. மூணு பேரும் எங்க டி போனீங்க? எங்கயாவது மயங்கி கியங்கி விழுந்துடீங்களோன்னு நாங்கல்லாம் பயந்தே போய்ட்டோம்..

அருவியில குளிச்சதுக்கு ஆனந்தமா தூங்கி எழுந்து வாரீங்களாடி?" எனப் படபடக்க, அம்பரியோ ஒரு அசட்டு சிரிப்புடன்.. "ஹீ.. ஹீ.. இல்லப்பா.. நாங்க மூணு பேரும் மாத்தி மாத்தி போட்டோ எடுத்துட்டு இருந்தோமா.. அதான் நேரம் போனதே தெரில" என்று சமாளித்தாள்.

ஆனால், அந்தச் சமாளிப்பில் தான் அனைவருக்கும் இவர்கள் மூவர் மீதும் கொலை வெறியானது.

பேருந்துக்குள் ஏறி, தங்களது இருக்கைக்கு நடந்து போய்க் கொண்டிருந்த இவர்களை வழியில் அமர்ந்திருந்த அனைவரும் திட்டுவதும், செல்லமாக அடிப்பதுமாய் இருக்க, வழமையான கேலி கிண்டலுடன் அன்றைய நாள் கழிந்தது.

ஆனாலும் யாருக்கும் இன்னமும் புகழி சோர்வுடன் இருப்பதோ, அம்பரி சந்தேகத்துடன் இருப்பதோ.. தெரியவே இல்லை.

மறுநாளும் முழுக்க முழுக்கச் சுற்றி பார்த்துவிட்டு, ஷாப்பிங் எல்லாமும் செய்துவிட்டு மூன்றாம் நாள் இரவில் அவர்களது பேருந்து மீண்டும் திருச்சியை நோக்கி சென்றது.

இதெல்லாம் நடந்து கொண்டிருந்த தருணத்திலும் கூட, சத்யாவின் கவனம் அவர்களைச் சுற்றி இருந்தது, பிறரது கவனத்தைக் கவரவில்லை.

திருச்சிக்குத் திரும்பியவன், உடனடியாக நித்யகல்யாணிக்குப் போனில் அழைத்து விவரத்தை பகிர, அவருக்கு நடந்ததை நினைத்து சற்றுப் பதட்டம் இருந்தாலும், பயம் ஏற்படவில்லை.

ஆனாலும் அவரை அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என்று கூறிய சத்யவிக்ரம் இன்னமும் அதிகக் கவனத்தோடு தனது கண்காணிப்பை இறுக்கினான்.

என்ன நடக்கப் போகிறது.. யாரால் நடக்கப் போகிறது என்ற எந்த அனுமானமும் இன்றி, ஒரு பெரும் ஆபத்துக்குக் காத்திருப்பது என்பது மிகவும் கொடுமையான விஷயம்.

அந்தப் பிரச்சனையையோ.. அல்லது, ஆபத்தையோ நேரடியாகச் சந்திப்பதைக் காட்டிலும், இப்படியான காத்திருப்பு தான் மனிதனை நிலை தடுமாற வைக்கும்.

சத்யாவும் கிட்டத்தட்ட இதே மனநிலையில் தான் இருந்தான். அவனாலும் அந்த ஷங்கரை பாம்பா.. அன்றிப் பழுதையா என்று கணிக்க இயலவில்லை.

இப்படியான ஒரு நாளில் தான் அம்பரியும், புகழியும் கல்லூரி முடித்துவிட்டு வெளியே வந்து பேருந்து நிறுத்தத்திற்குப் போய்க்கொண்டிருந்த வேளையில், மிகவும் வேகமாய் வந்த உயர் ரகக் கார் ஒன்று புகழியின் அருகே பெருத்த சத்தத்துடன் பிரேக் போட்டு நின்றது.

அந்தச் சத்தத்தைக் கேட்டு அதிர்ந்த புகழியோ.. பயத்துடன் நகர முற்பட, சட்டென அவளது கையைப் பற்றிக் காருக்குள் இழுக்க முயன்றான் அவன்.. அந்த ஷங்கர்.

அதைப் பார்த்த அம்பரி.. சட்டெனப் புகழியின் கையைப் பற்றிக்கொள்ள, ஷங்கரால் புகழியைக் காருக்குள் இழுப்பது பெரும் சிரமமாகியது.

ஆனாலும் வெறிபிடித்தவனாய் முரட்டுத் தனமாகப் புகழியை ஷங்கர் இழுக்க, அம்பரியும், புகழியும் சத்தம்போட்டு கத்த ஆரம்பித்திருந்தனர்.

அப்பொழுது தான் சரியாகக் கல்லூரியை விட்டு வெளிய வந்த சத்யாவிற்கு நடந்த விபரீதம் கண்களில் தென்பட, அவனது பைக்கில் விரைந்து அவர்களிடம் சென்றான். அதே சமயம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த இன்னும் சிலரும் அங்குக் கூடிவிட, அவர்களால் ஷங்கரின் அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

காரில் இருந்தவனை அங்கிருந்தவர்கள் அனைவரும் பிடித்து வெளியே இழுத்து அடி துவைத்துக் கொண்டிருக்க.. உடலெல்லாம் நடுநடுங்கி வெலவெலத்துப் போய்விட்டிருந்தாள் புகழி.

அவளுக்குத் தன்னிடமிருந்த தண்ணீரை எடுத்து கொடுத்தபடி அம்பரி சமாதானப்படுத்தியிருக்க, ஷங்கரை அடித்து, அவனது முகத்தை எல்லாம் கிழித்து விட்டிருந்தான் சத்யா.

"என்னடா.. அவ்வளவு ஈஸியா வந்து பொண்ண தூக்கிட்டு போய்டலாம்னு நினைச்சியா? இவ என்ன கடையில விக்கற பொம்மையா? நீ ஆசைப்பட்டதும் தூக்கிட்டு போறதுக்கு?

அவ தான் உன்ன பிடிக்கலைனு சொல்லிட்டா இல்ல? அப்பறமும் எதுக்கு டா இந்த வெறி உனக்கு?" என்று மேலும் சரமாரியாகப் பல அடிகளை வழங்கியவன்.. அம்பரியிடமும், புகழியிடமும் வந்து.. "ஐயம் சாரி.. இவன் மேல, இதுக்கு அப்பறமும் போலீஸ் ஆக்ஷன் எடுக்காம இருக்க முடியாது." என்று கூறிவிட்டு செல்ல, நிலைமை கைமீறி போய்விட்டதை உணர்ந்த பெண்கள் மௌனமாயினர்.

அவர்களை மீண்டும் கல்லூரிக்கே வரவழைத்து, அவர்களிடம் இருந்து புகார் வாங்குவதற்காகப் பெண் போலிஸாரையும் அவ்விடமே வரவைத்து எனப் பெரும்பாலும் புகழியின் மனதை பாதிக்காத வண்ணம் தான் அனைத்தையும் செய்து கொண்டிருந்தான் அவன்.

இந்த அளவிற்கு அவன் பார்த்து பார்த்து செய்வதைக் கண்ட அம்பரிக்கு மனமெல்லாம் பூரித்தது. முதன் முதலில் அவனைப் பார்த்த போது இருந்த உணர்ச்சிக்கும், இப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுது அவளுக்குள் ஏற்படும் உணர்ச்சிக்கும் இருக்கும் வித்தியாசத்தை எண்ணி அம்பரி தனக்குளாகவே நகைத்துக்கொண்டாள்.

விழி எடுக்காது சத்யாவையே பார்த்துக் கொண்டிருக்கும் அம்பரியை சட்டெனத் திரும்பிப் பார்த்த சத்யா.. என்னவென்று பார்வையாலே கேட்க, ஆறுதலாகச் சிரித்தபடியே அம்பரியும் ஒன்றுமில்லை என்று மறுப்பாகத் தலையாட்டினாள்.

இப்படியாய் அம்பரிக்கும், சத்யாவிற்கும் இடையே பார்வை பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தாலும், அந்த இடைப்பட்ட நேரத்தில் அங்கே புகழியின் பெற்றோருக்கும் நடந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது.

அவர்களும் தங்கள் பெண்ணுக்கு என்ன ஆனதோ என்று அஞ்சியபடி பதட்டத்துடன் புகழியைப் பார்க்க வந்தனர்.

ஷங்கரை அப்பொழுதே போலீசார் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள்.

மேலும் போலீசாரின் மற்ற ப்ரொசீஜர் எல்லாம் முடிவடைந்து அவர்கள் கிளம்பிவிட்டிருந்தாலும், புகழியும், அம்பரியும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே தான் இருந்தார்கள்.

இதில் இன்னொரு பிரச்சனையாக, கல்லூரியின் கரஸ்பாண்டண்ட் நித்யகல்யாணி இன்னமும் வெளியூரில் இருந்து வந்திருக்கவில்லை. எனவே அத்தனை வேலைகளையும் சத்யவிக்ரம் தான் கவனிக்க வேண்டியதாய் ஆகிற்று.

கூடவே இன்னும் சில பேராசியர்களையும் வைத்துக் கொண்டு, அம்பரிக்கும், புகழிக்கும் துணையாக இரண்டு பெண் ஆசிரியைகளையும் வைத்துக் கொண்டு சத்யா, மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் புகழியின் பெற்றோர்கள் வர, மிகுந்த அதிர்ச்சியிலும், பயத்திலும் இருந்த அவர்களைச் சமாதானப் படுத்துவதும் சத்யாவின் பொறுப்பானது.

ஆனால் எவ்வளவு தான் சத்யா அவர்களைச் சமாதப்படுத்தினாலும், இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு தங்களது பெண்ணைக் கல்லூரிக்கு அனுப்புவதில் புகழியின் பெற்றோருக்கு துளியும் விருப்பம் இல்லை.

என்ன தான் ஷங்கரை சிறையில் அடைத்தாலும், அவனைச் சார்ந்த யார் மூலமாகவாவது தங்களது பெண்ணுக்கு ஆபத்து வரும் என்று எண்ணி அஞ்சினார்கள் அவர்கள்.

அவர்களின் பயம் நியாயமாகவே இருந்தாலும்.. இது புகழிக்கு கடைசி வருட படிப்பு.. அதிலும் அவள் கல்லூரியில் டாப் ராங்க் ஹோல்டர் என்பதால் மிகவும் சிரமப்பட்டுப் புகழியின் பெற்றோரை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தான் சத்யா.

அவனது எப்பேற்பட்ட பேச்சுக்கும் அவர்கள் மசியவில்லை எனவும், புகழியின் அழுகை அதிகமானது. அதைப் பார்த்து மனம் வருந்திய அம்பரியோ, புகழியின் பெற்றோரைப் பார்த்து.. "அப்பா, அம்மா.. நீங்களே நம்ம புகழை புரிஞ்சுக்கலைனா எப்படி?

இது அவ படிப்போடு கடைசி வருஷம்.. அதிலும் இன்னமும் பத்து நாள்ல எங்களுக்கு எங்க பிராக்டிகல் இருக்கு.. அதுக்கு அப்பறம் நேரா பரீட்சை தான்.

அது தான் அவளுக்கு வர இருந்த ஆபத்தைத் தடுத்தாச்சு இல்ல? அப்பறம் ஏன் நீங்களே நம்ம புகழியோட வாழ்க்கையை வீணாக்க நினைக்கறீங்க? யாரோ ஒருத்தன் செஞ்ச தப்புக்கு, தண்டனை அனுபவிக்கறது மட்டும் நம்ம புகழியா?" என்று கேட்க, அவர்களோ.. "இது தண்டனை இல்லமா.. பொண்ண பெத்தவங்களா எங்களுக்கு இருக்கற பயம்.. எங்க பொண்ணோட படிப்பு போனாலும் பரவாயில்ல மா.. எங்களுக்குப் புகழி நல்லபடியா இருந்தா போதும்." என்று கூறினார்கள்.

அவர்களின் பயம் அங்கிருந்த அனைவருக்குமே நன்றாகப் புரிந்தது. ஆனாலும்.. "இல்லப்பா.. நீங்க தைரியமா என்ன நம்பி அனுப்புங்க ப்பா.. நான் கூடவே இருந்து பார்த்துக்கறேன் ப்பா.. ப்ளீஸ்" என்று அம்பரி இன்னமுமாக அவர்களிடம் கெஞ்சியதும் சற்று யோசித்தார் புகழியின் தந்தை.

அந்தச் சமயத்தில் தனது இருக்கையில் இருந்து எழுந்த புகழியோ.. தனது தந்தையின் காலடியில் சென்று அமர்ந்து.. "அப்பா.. ப்ளீஸ் ப்பா.. நான் இந்தப் படிப்பை மட்டும் முடிச்சுடறேன் ப்பா.. உங்கள கெஞ்சி கேட்கறேன் ப்பா.." என்று அழுது கொண்டே அவரது காலில் விழ போக.. சட்டென அவளைத் தடுத்தவர்.. "எனக்கு ஒரு அப்பனா.. எவ்வளவு பயமா இருக்கும்னு யோசிடா மா..

ஆனாலும் நீ இந்த அளவுக்கு அழுது நான் பார்த்ததே இல்ல. அவ்வளவு ஏன்.. உனக்கு அழுக தெரியும்ன்றதே எனக்கு இப்போ தான் தெரியுது. அப்படிப்பட்ட என் பொண்ணு அவ ஆசைப்பட்டத்துக்காக என் கால்ல விழணுமா? வேணாம்டா.. நீ நல்லபடியா இந்தப் படிப்பை முடிடா.." எனக் கூறி கண்ணீர் விட, அதன் பிறகு தான் அங்கிருந்த அனைவருக்கும் மூச்சே வந்தது.

அன்றும், அடுத்த நாளும் புகழியின் பெற்றோர் அவளுடனே இருந்து, அவளைக் கல்லூரிக்குப் பேருந்தில் கூட்டிவந்து விட்டு விட்டு, மாலை கல்லூரி முடிந்ததும் தாங்களே பேருந்தில் அழைத்துச் சென்று என, அந்தச் சம்பவத்திற்குப் பிறகான சூழல் இப்பொழுது பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதை அறிந்து கொண்டு.. அந்த ஷங்கரும் இப்போதைக்குச் சிறையில் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பே இல்லை என்பதும் உறுதியான பிறகே தங்களது ஊருக்கு திரும்பி சென்றனர்.

இப்பொழுது சத்யவிக்ரமின் கவனம் முழுதும் மீண்டும் கல்லூரியை சுற்றி வந்துகொண்டிருக்க, அடுத்த இரண்டு நாட்களில் சத்யாவிற்கு ஒரு பேரிடி தலையில் இறங்கியது.
 
Top