• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராதோ என் தேடல் - 9

Viba visha

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
90
அத்தியாயம் - 9

புகழிக்கு நேர்ந்த சம்பவத்திற்குப் பிறகு, சத்யவிக்ரம் ஓரளவிற்கு நிம்மதியுடன் தான் சுற்றி வந்தான் என்றே கூறலாம்.

ஏனென்றால், அந்தப் பிரச்சனைக்குப் பிறகு நித்யகல்யாணி கூறிய விஷயம் அப்படியானது. தனது கல்லூரி சம்மந்தமான ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காகவே பெங்களூரு சென்ற நித்யகல்யாணி, அங்குச் சென்ற பிறகு கூறிய விஷயத்தினால், சத்யவிக்ரம் கொஞ்சம் நிம்மதியும், கூடவே கொஞ்சம் சந்தேகமும் கொண்டான்.

இதைப் பற்றிய யோசனையில் அவன் ஆழ்ந்திருந்த நேரம் தான், நித்யகல்யாணியின் செகரட்டரியிடம் இருந்து ஒரு போன் வந்தது. எப்பொழுதும் போல அந்த அழைப்பில், நித்யகல்யாணி தான் பேசுவார் என்று சத்யா எண்ணியிருக்க, மறுமுனையில் பேசிய அந்தச் செகரட்டரியின் குரலைக் கேட்டதுமே, மனதிற்குத் தவறாகப்பட்டது அவனுக்கு.

பொதுவாக நித்யகல்யாணி இப்பொழுதெல்லாம் யாருக்காக இருந்தாலும் அவரது செகரட்டரியின் மொபைல் எண்ணில் இருந்து தான் அழைப்பார். ஆனால் அப்படி அழைத்தாலுமே சத்யா போன்ற நெருங்கியவர்களிடம் தானே நேரடியாகப் பேசுவது தான் வழமை.

ஆனால் இன்றோ அவர் பேசாது அந்தச் செகரட்டரி ஏன் பேசுகிறார்.. என்று சந்தேகித்தவனுக்கு அப்பொழுது தான் அந்தப் பேரிடி விழுந்தது.

அது, நித்யகல்யாணி சென்ற கார், பயங்கர விபத்துக்குள்ளாகி, அந்த விபத்தினால், அவருக்குப் பலத்த அடி பட, இப்பொழுது அவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றது தான்.

இங்கோ அவனுக்கு ஒரு கணம் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இப்போதைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று நினைத்தோமே.. ஆனால், இப்படி ஒரு பிரச்னை வந்துவிட்டதே.. அவருக்கு எதுவும் ஆகக்கூடாது கடவுளே.." என்று வேண்டியபடி வேறு எதைப்பற்றியும் யோசியாது பெங்களூருக்குச் சென்றான் அவன்.

விரைவாகப் பெங்களூரு சென்று, மருத்துவமனைக்குப் போய்ப் பார்க்கையில்.. அப்பொழுது தான் அறுவைசிகிச்சைக்காக நித்யகல்யாணியை அழைத்துச் சென்றிருப்பதாகக் கூற, மனமெல்லாம் சூழ் கொண்ட பயத்துடன், நிச்சலமான முகம் கொண்டு அமர்ந்தான் அவன்.

ஒருவழியாக அறுவைசிகிச்சை எல்லாம் முடிந்து, இன்னமும் ஐ.சி.யு வார்டில் இருந்தவரை டாக்டரின் அனுமதி பெற்றுச் சந்தித்தான் சத்யா.

உள்ளே சென்ற அவன், சில மணித்துளிகள் நித்யகல்யாணியையே பார்த்துக் கொண்டிருக்க, மெல்ல அசைந்தன அவரது கருவிழிகள். அந்தக் கருவிழிகள் இமைகளின் பின்னே அசைவதைக் கண்டு சற்று திகைத்து, பின் மகிழ்ந்த சத்யா, மருத்துவர்களை அவசரமாக அழைக்க.. அவர்களும் வேகவேகமாய் நித்யகல்யாணியைப் பரிசோதிக்க வந்தனர்.

அவர்கள் வருவதற்குள்.. நித்யகல்யாணி விழிகளைத் திறக்க.. சத்யாவோ ஆவலுடன்.. "ஆண்ட்டி.." என்று விளிக்க.. அதற்கு நித்யகல்யாணியோ.. "அவரை இங்க பார்த்தேன் சத்யா" எனச் சோர்வுடன் கூறியபடியே மீண்டும் மயக்கமடைந்தார்.

அந்த ஒற்றை வாக்கியத்திலேயே உறைச்சிற்பமாய்ச் சமைந்தான் சத்யவிக்ரம். ஆனால் அவனை அப்படியே நின்றிருக்க விடாது, மருத்துவமனை சிப்பந்திகள் நித்யகல்யாணிக்குச் சிகிச்சை அளிக்கும் பொழுது சத்யாவும் அதே அறையில் இருக்கக் கூடாது என்று கூறி அவனை வெளியே அழைத்து வந்து விட்டனர்.

ஆனால் இதில் எதுவுமே சத்யாவின் கருத்தில் பதியவே இல்லை. அவனது கவனம் முழுவதுமே நித்யகல்யாணி கூறிய "அவரை இங்க பார்த்தேன்.." என்ற வாக்கியமே நிறைத்துக் கொண்டிருக்க.. அதையே தன் மனதிற்குள் யோசித்தபடி அங்கே நடைபயின்று கொண்டிருந்தான் சத்யா.

"யாரைப் பார்த்திருப்பார்? கண் விழித்ததும் அது அத்தனை துல்லியமாக நினைவுக்கு வருகிறது என்றால், இந்த விபத்து நடப்பதற்குச் சற்று முன்னர்த் தான் அந்த நபரை, இவர் சந்தித்திருக்க வேண்டுமாய் இருக்க வேண்டும்.

ஆனால் அந்த 'அவர்' தான் யார்? ஓ.. ஓ.. ஒருவேளை அந்த அவர்.. "அவராய்" இருந்தால்.. என்று யோசித்தவனது கண்கள் விரிந்தன.

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்பு.. அன்று ஆரம்பித்தது தான் இப்பொழுது நடக்கும் அதனைப் பிரச்சனைகளுக்கும் முகாந்திரம் என்று யாரவது நம்புவார்களா? ஆனால் அது தான் நிஜம்.

ஆம்.. அந்தப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு தான்.. நித்யகல்யாணிக்கும்.. அவர் காதலித்த.. வசதி குறைந்த, ஆனால் வெகுவாகப் படித்திருந்த அந்த அசோக்கை திருமணம் செய்துகொண்டார்.

அந்த அசோக்கிற்கு அவ்வளவாக வசதியோ, பெற்றோரோ எவரும் இல்லாததாலும், அவரது வேலையும் திருச்சியிலேயே இருந்ததாலும் இயல்பாகவே மாமனார் வீட்டில் வந்து மனைவியுடன் தங்கினார் அவர்.

இதைப் பற்றி ஆரம்பக் காலகட்டத்தில் யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நாளாக, நாளாகக் கணவன் மனைவிக்குள் காரணமே இல்லாத சண்டைகளும், சச்சரவுகளும் வரத் துவங்கின.

அதிலும் நித்யகல்யாணியின் தாய் முன்பே மடிந்துவிட, அவரின் தந்தை இரட்னு வருடங்களுக்கு முன்பாக இயற்கை எய்தியதில் இருந்து, அதன் பிறகான அசோக்கின் செயல்பாடுகளில் பெருத்த மாற்றத்தினை உணர்ந்தார் நித்யகல்யாணி.

எந்த நேரம் பார்த்தாலும் மனைவியிடம் சண்டை போடுவது, தரக்குறைவாக நடந்து கொள்வது என இருந்தவருடன், மிகுந்த சகிப்புத் தன்மையுடன் வாழ்ந்து வந்தார் நித்யகல்யாணி.

அதற்கு முக்கியக் காரணம், நித்யகல்யாணிக்கும், அசோக்குக்கும் இன்னமும் குழந்தை இல்லாதது தான். இத்தனை வருடங்களில் நித்யகல்யாணி தான் ஒவ்வொரு கோவிலாக, அப்படிக் கோவிலில் இருக்கும் கடவுளுக்கு அடுத்தபடியாய் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் ஏறி, இறங்கி.. பல்வேறு சிகிச்சைகள் செய்து கொண்டு பல்வேறு மருந்து மாத்திரைகள் எல்லாம் சாப்பிட்டுப் பார்த்தார்.

ஆனால் பயன் தான் சுழியமாகிப் போனது. இருப்பினும் முதலில் வெளிப்படையாக இதில் எதையுமே கண்டுகொள்ளாத அசோக்கோ.. இப்படித் தாங்கள் குழந்தை இல்லாமல் இருப்பதற்குக் காரணம் நிச்சயம் தான் இல்லை என்று வெகுவாக நம்பினார்.

தன்னிடம் எந்தக் குறையும் இருக்காது. நித்யகல்யாணியிடம் தான் குறை என்று எண்ண ஆரம்பித்திருந்தார். அந்தச் சமயத்தில் சரியாக நித்யகல்யாணியின் தந்தையும் இறந்துவிட, ஏற்கனவே கடும் பாதாளச் சிறையாய் இருந்த அவர்களது வீடு, இப்பொழுது இன்னமும் எரிதழல் பிரவகிக்கும் கொடும் நரகமென ஆனது.

இதனால் தினம் தினம் நித்யகல்யாணிக்கு நடைபெறும் கொடுமைகள் ஏராளமாகின. சொந்த வீட்டிலேயே வேலையாளை போல நடத்தப்பட்டார் அவர். இந்த நிலையில் தான் நித்யகல்யாணியின் தூரத்துச் சொந்தத்தில் அவரது அண்ணனும், அண்ணன் மனைவியும் நித்யகல்யாணியைச் சந்திக்கத் திருச்சிக்கு வந்தனர்.

அங்கு வந்து நித்யகல்யாணியைப் பார்க்கவும் இருவருக்கும் உள்ளம் பதைபதைத்துப் போனது.. எப்படி இருந்த பெண், இன்று இப்படியாகிவிட்டாளே.. என்று வருந்தியவர்களிடம், தினந்தோறும் நித்யகல்யாணி படும் துன்பத்தை வீட்டு வேலையாட்கள் எடுத்துரைக்க, வந்திருந்தவர்களுக்கு எப்படியாவது நித்யகல்யாணியை இந்த அவல நிலையில் இருந்து மீட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

அதன்படி, அசோக் வீடு திரும்பும் நள்ளிரவு வரைக்கும் அங்கேயே காத்திருந்தவர்கள், அவர் வீடு திரும்பியதும், தங்கள் வீட்டுப் பெண்ணுக்காக நியாயம் கேட்கப் போக, அது அசோக்குக்கும், நித்யகல்யாணியின் அண்ணனுக்கும் இடையே மிகப்பெரும் சண்டையாகி.. அந்தச் சண்டை கைகலப்பில் வந்து முடிய, ஒரு கட்டத்தில் அசோக், நித்யகல்யாணியின் அண்ணனை கொலை செய்யும் அளவுக்குப் போனார்.

இதில் பக்கத்து வீட்டுக்காரர்களும் அங்குக் கூடிவிட, நிலைமை கை மீறிப் போகவும், அவர்கள் போலிஸுக்கு தகவல் சொல்லி அவர்களை வரவழைக்க வேண்டியதாய்ப் போய்விட்டது.

போலீசார் வந்து நித்யகல்யாணியின் அண்ணனை, அசோக்கிடம் இருந்து மீட்க மிகவும் போராடினர். இறுதியாக, நடந்த மொத்தத்தையும் அங்கிருந்த அனைவரிடமும் விசாரித்து அறிந்தவர்கள்.. அசோக்கை கைதும் செய்தனர்.

அப்படி அசோக்கை கைது செய்வதற்கு நித்யகல்யாணியும் மறுப்பாய் எதுவும் கூறவில்லை. அவர் ஏற்கனவே கிட்டத்தட்ட தன் வாழ்க்கையையே வெறுத்து தான் போயிருந்தார்.

அசோக்கை விட்டுப் பிரிவதற்கும் அசோக் விடவில்லை. நித்யகல்யாணியைத் துன்புறுத்தி, துன்புறுத்தி அதில் சுகம் காணும் சைக்கோ மனநிலைக்குச் சென்றிருந்தார் அசோக். எனவே தனது வாழ்க்கையையே முடித்துக் கொள்ளும் எண்ணத்தில் இருந்தவரை, சரியாய் வந்து காப்பாற்றியது அவரது அண்ணன் தான்.

இப்படி அசோ கைது செய்து அழைத்துச் செல்லும் பொது, நித்யகல்யாணியின் அருகாக வந்து.. "தொட்டு தாலி கட்டிய என்னையே ஜெயிலுக்கு அனுப்பிச்சுட்ட இல்ல? உன்ன.. எப்பவும் நிம்மதியா இருக்க விடவே மாட்டேன் டி.." என்று கொடூரமான குரலில் கூற, உடலெல்லாம் நடுங்கிப் போய்த் தன் அண்ணியின் பின்னே வந்து நின்றார் நித்யகல்யாணி.

அப்படி அவரைக் காப்பாற்றியவர்கள் வேறு யாருமில்லை, சத்யவிக்ரமின் தாய் தந்தையர் தான்.

இந்த நிலையில் அசோக் இவ்வாறு நித்யகல்யாணியை மிரட்டிவிட்டு போனதை பார்த்த சத்யவிக்ரமின் தந்தை தான் அவனைச் சிறிது காலம் நித்யகல்யாணிக்குத் துணையாக இங்கே வந்து இருக்கும்படி பணித்தார். ஆனால், அதற்கு முன்பாக, சத்யா முடிக்கவேண்டிய வேலைகள் சில இருந்ததால்.. அவை எல்லாவற்றையும் முடித்துவிட்டுச் சத்யா திருச்சிக்கு திரும்பும் முன்பு, அசோக் தனது ஆள் பலம் மூலமாகச் சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார்.

ஆனால் அப்படி விடுதலையான மனிதர் எங்கே போனார்.. என்னவானார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இருந்தாலும், அவர் கடைசியாக நித்யகல்யாணியிடம் ஆத்திர சினத்துடன் சூளுரைத்ததை அவர்கள் யாராலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலவில்லை.

எனவே நித்யகல்யாணி, அசோக் எங்கே இருக்கிறார் என்று அறிவதற்காகப் போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசாரும் தீவிரமாக அவரைத் தேடிக் கொண்டிருந்தார்கள் தான்.

அதே சமயம், சத்யவிக்ரமும் இன்னொரு புறம் தனது பெரும் முயற்சியால் அசோக்கை வெளியூர்களில் தேடிக் கொண்டிருந்தான்.

ஆனால் அப்பொழுது தான் நித்யகல்யாணிக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில், "நித்யகல்யாணி இந்த ஊரை விட்டும், அவரது தொழிலை விட்டும் முழுவதுமாக விலகி, வெளியூர், அல்லது வெளிநாட்டிற்குச் சென்றுவிட வேண்டும். அப்படிப் போவது தான் நித்யகல்யாணிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் நல்லது". என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்திலும் அனைவருக்கும் மிகுந்த குழப்பமே.. அதாவது இந்தக் கடிதத்தை எழுதியது ஒருவேளை அசோக் தானோ என்று முதலில் குழம்பியவர்கள்.. அப்படி அசோக் மிரட்டல் கடிதம் எழுதுவதற்கு அவசியமே இல்லை என்றும் எண்ணினர்.

ஏனெனில், அவர் பேரில் உள்ள சொத்துக்கள் இன்னமும் அப்படியே இருக்கத் தான் செய்கின்றன. அதையெல்லாம் நித்யகல்யாணியின் அனுமதி பெற்று தான் அவர் அனுபவிக்க வேண்டும் என்பது இல்லை.

அதனால் அவர் எதற்காக நித்யகல்யாணியை இப்படி இங்கிருக்கும் அனைத்தையும் விட்டுவிட்டு கண்காணாத இடத்திற்குச் செல்லவேண்டும் என்று பணிக்கிறார்? என்று எண்ணியவர்கள்.. இதை மற்றுமொரு கோணத்தில் யோசித்தார்கள்.

அதாவது, அசோக் இப்படித் திடீரென்று காணாமல் போனதற்கும், இப்படி ஒரு மிரட்டல் கடிதம் வந்ததற்கும் காரணமாய், ஏன் நித்யகல்யாணியின் தொழில் போட்டியாளர் ஒருவர் இருக்கக் கூடாது?

இப்படி யோசித்தவர்களுக்கு நிஜமாகவே உள்ளுக்குள் திகில் பரவியது. எனவே இப்படி ஒரு கடிதம் வரவும் தான், வெளியூர்களில் அசோக்கை தேடி சுற்றிக் கொண்டிருந்த சத்யவிக்ரம், திருச்சிக்கே வந்தது. ஏனென்றால், அந்த "நித்யகல்யாணிக்கும், அவரைச் சேர்ந்தவர்களுக்கும் நல்லது" என்ற வாசகம், ஒரு வேலை அசோக்கின் நலத்தைத் தான் குறிப்பிடுகிறதோ? காணாமல் போன அசோக் ஒருவேளை இந்த எதிரிகளிடம் சிக்கியிருப்பாரோ? என்ற சந்தேகம் வலுவாகத் தாக்கியது.

ஏனெனில், மகளிர் கல்லூரி என்று ஒன்று ஆரம்பித்தே, அந்தப் பகுதியில் மிகுந்த செல்வாக்கு அடைந்திருந்தார் நித்யகல்யாணி. இதன் காரணமாகத் திருச்சியிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் பெண்களை எல்லாம் நித்யகல்யாணியின் கல்லூரியிலேயே சேர்க்கவும், மற்றவர்களுக்கு மிகவும் பொறாமையாகிவிட்டது.

அதனால் ஏற்கனவே பெண்கள் கல்லூரியில் அவ்வளவு ஒழுக்கமில்லை அது இதென்று புரளியைக் கிளப்பிக் கொண்டு தான் இருந்தார்கள் அவர்கள். ஆனால் அதையெல்லாம் மிகவும் சாதாரணமாகச் சமாளித்து வந்தார் நித்யகல்யாணியும். ஏன் அசோக்கும் கூடத் தான்.

இப்பொழுது அசோக் இங்கிருந்தது சென்றுவிட்ட இந்தத் தருணத்தில் அந்தப் போட்டிக்காரர்களின் பொறாமை அதிகரிக்க அதன் காரணமாகக் கல்லூரிக்கோ.. அல்லது நித்யகல்யாணிக்கோ ஏதாவது சேதாரத்தை ஏற்படுத்துவார்கள் என்று அஞ்சினார்கள். எனவே அசோக்கின் திடீர் தலைமறைவுக்கும் ஏதேனும் காரணம் இருக்கிறதோ என்று ஐயமுற்றார்கள்.

ஏனென்றால், என்னதான் இருந்தாலும் ஒரு பெண்ணின் மென்மையான மனமாய் அஷோக்குக்காக உள்ளம் தவித்தது நித்யகல்யாணிக்கு. என்ன தான் தன்னைக் கொடுமைப்படுத்தியவர் அசோக் என்றாலும், தன் காரணமாக அவரது உயிருக்கு ஆபத்து வருவதை நித்யகல்யாணி விரும்பவில்லை.

எனவே சத்யவிக்ரம் இதனை எல்லாம் உள்ளிருந்து கண்காணிக்க, அமைதியாக இங்கு வந்து சேர்ந்தான்.

இப்படியான நிலைமையில் தான் ஒன்று மாற்றி ஒன்று என்று சிறு சிறு பிரச்சனைகளாக வந்து கொண்டிருக்க, அதை எல்லாம் அனைவரும் சேர்ந்து சமாளித்து வந்த சூழ்நிலையில், புகழியின் பிரச்சனை மிகவும் பூதாகரமானதாக வந்து சேர்ந்தது.

இந்தப் பிரச்னையும் அந்தப் போட்டியாளர்களினால் வந்தது தானோ என்று சத்யவிக்ரம் சந்தேகிக்க, அதை நித்யகல்யாணி தான் மறுத்தார்.

ஏனென்றால், ஷங்கரின் தந்தை அந்தப் பகுதியில் செல்வாக்கானவர். தன் மகன் இப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டான் என்று தெரியவும், நித்யகல்யாணிக்கு அழைத்து மன்னிப்பை யாசித்து, இனி இது போன்றதொரு தவறு நேரவே நேராது என்று வாக்களித்திருந்தார்.

இதைப் பெங்களூருவில் இருந்த நித்யகல்யாணி கூறவும் தான் சதயாவிற்குக் கொஞ்சம் நிம்மதியும் கூடவே சிறு சந்தேகமும் உதித்தது.

ஆனாலும் இப்போதைக்கு அது அவ்வளவு தீவிரமானதாகவும் தோன்றாததால், மற்றதை விடுத்து சிறிது அப்பாடா என்று மூச்சு விடும் நேரத்தில் இப்படி நித்யகல்யாணிக்கு விபத்து நடந்து விட்டது என்று கேள்வியுற்றவன் விரைந்து அங்குச் சென்றால், அரை மயக்க நிலையில் நித்யகல்யாணி இப்படி, "நான் அவரைப் பார்த்தேன்.." என்று கூறவும் என்னவென்று நினைப்பதாம் அவன்?
 
Top