• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
தென்றல் - 12


கண்ணீர் வழியே வெளியே செல்லும் ருத்ரனை பார்த்துக் கொண்டிருந்த தென்றல், கண்களை வேகமாக துடைத்துக் கொண்டு விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்தாள்.


" அம்மா…" என்று கத்தியவள், கையிலிருந்த பூவையும் பர்ஸையும் தூக்கிப்போட…


எப்போதும் பொறுமையாக இருக்கும் மலர், " தென்றல்…" என்று அதட்டினார். அதிர்ந்து அவள் பார்க்க, " என்ன பண்ணிட்டு இருக்க? பூவை இப்படி தான் கீழே போடுவீயா? ஒழுங்கு மரியாதையா அந்த பூவை எடுக்குறியா? இல்லையா?" என்று கத்த.


வழக்கத்துக்கு மாறாக தனது தாயின் கோபத்தில் பயந்த தென்றல் கீழே வீசிய ரோஸை தயக்கத்துடன் எடுத்தாள்.


'கடவுள் புண்ணியத்தில் மகளது வாழ்க்கையில் மீண்டும் ஒரு நல்லது நடக்க இருக்கையில் அபசகுணமாக இப்படி பூவை தூக்கிப் போட்டுட்டாளே.' என்று எண்ணிய மலர், வெளியே நடந்த நாடகத்தைப் பற்றி அறியாமல் தென்றலிடம் தனது கோபத்தை காட்டிக் கொண்டிருந்தார்.


" ம்… கையில் வைச்சுக் கிட்டு அழகுப் பார்த்துட்டுருக்கே. முதல்ல தலையில் வை." என்று அதட்டினார்.


ரோபோட் போல் அம்மா சொன்னதை செய்த தென்றல் மீண்டும் அவரையே பார்க்க.


" இப்ப சொல்லு… எதுக்கு கத்திக் கிட்டே வந்த? " என்றார் மலர்.


தான் எதற்காக கோபத்தோடு உள்ளே வந்தோம் என்பது தென்றலுக்கு நினைவுக்கு வர.


" மா… என்னமா இங்கே நடக்குது? அந்த ருத்ரன் என்னவோ சொல்லிட்டுப் போறான்." என்று உதடு நடுங்க தன் தாயிடம் வினவ.


" தென்றல்… உனக்கு என்னாச்சு? உன்னை விட எத்தனை வயசு பெரியவர் அந்த தம்பி. இப்படி மரியாதை இல்லாமல் பேசலாமா? நாங்க இப்படித்தான் உன்னை வளர்த்தோமா?" என்று ஆதங்கமாக மலர் வினவ.


" மா… மரியாதையெல்லாம் அவங்க அவங்க நடந்துக்கிறதுல தான் இருக்கு. நீங்க பேச்சை மாத்தாதீங்க." என்ற தென்றலின் பேச்சைக் கேட்ட சங்கீதாவின் முகம் இறுகியது.


பார்வையாலே மருமகளிடம் மன்னிப்பை யாசித்த மலர், மகளிடம் திரும்பினார். " இப்போ உனக்கு என்ன தெரியணும். " என்று மீண்டும் அவர் கோபமாக கத்த.


" மா… " என்றாள் தென்றல்.


" அந்த தம்பி என்ன சொன்னாருன்னு எனக்குத் தெரியாது. ஆனால் உனக்கும் ருத்ரன் தம்பிக்கும் சீக்கிரமே கல்யாணம் செய்து வைக்கப் போறோம்."


" என்னமா விளையாடுறீங்களா? என் வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டா போயிடுச்சா? நான் ஒன்னும் அப்ப உள்ள தென்றல் கிடையாது. நீங்க சொன்னதும் தலையாட்டிட்டு கல்யாணம் பண்ணிக்க‌. எனக்குன்னு ஒரு மனசு இருக்கு. அதை நீங்க புரிஞ்சுக்கவே மாட்டீங்களா?" என்று அழ.


அதுவரை தன் கணவனும்,தம்பியும் கூறியதற்காக இந்த விஷயத்தில் தலையிடாமல் இருந்த சங்கீதா உள்ளே நுழைந்தாள். "தென்றல்…" என்று ஏதோ சொல்ல வர.


" எதுவும் நீங்க சொல்ல வேணாம் அண்ணி. நீங்க பேச ஆரம்பிச்சா, அப்புறம் அவ்வளவு தான். அப்புறம் நான் என்னையே சந்தேகப்பட்டுக்க வேண்டியது தான். நீங்க சொல்ற எல்லாத்துக்கும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு, அப்புறமா சுயமா எந்த முடிவும் எடுக்க தெரியாத முட்டாளா இருக்கேன்னு நொந்துக்க வேண்டி வரும். ப்ளீஸ் அண்ணி. எதுவும் சொல்லாதீங்க." என்றாள் தென்றல்.


தென்றலின் வார்த்தை செவியில் விழ, அடிபட்ட பார்வை பார்த்தாள் சங்கீதா.


ஒரு நிமிடம் அண்ணியின் மனதை வருத்தியதை எண்ணி முகம் கலங்கிய தென்றல், பிறகு தலையை ஆட்டி தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.


இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த மலர், மருமகளுக்கு ஆதரவாக வந்தார். "என்ன தென்றல் நினைச்சுட்டு இருக்க? சங்கீதா உன் அண்ணி. அவ பேசக்கூடாதா? சரி நானாவது பேசலாமா? இல்லை அதுவும் கூடாதா?"


" மா…" என்று கலங்கிய குரலில் தென்றல் கூற.


" உன் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு தான் நான் பார்க்குறேன். ஆனால் நீ விடமாட்டேங்குறீயே. உன்னை வற்புறுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் சில விஷயங்கள் சொல்லாமல் இருந்தேன், ஆனால் இனியும் மறைப்பதில் அர்த்தமில்லை." என்று பூடகமாக கூறியவர், அவரது அறைக்குச் சென்று ஒரு பைலை எடுத்து வந்து எல்லோர் முன்பும் போட்டார்.


" எனக்கு ஆஞ்சியோப்ளாஸ்ட் பண்ணது உங்க எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதுக்கு பிறகும் எனக்கு அடிக்கடி ஹார்ட் அட்டாக் வர ஆரம்பிச்சது. டாக்டர் கிட்ட காண்பிச்சதுக்கு ஓபன் சர்ஜரி தான் பண்ணனும். ஆனால் எனக்கு அறுபது வயசுக்கு மேலே ஆனதாலையும், உடம்பு வீக்கா இருக்கிறதாலையும் ஆபரேஷன் பண்றது ரிஸ்க். அப்படியே கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்தா இன்னும் கொஞ்சநாள் உயிரோடு இருக்கலாம்னு சொல்லிட்டாங்க.இது உங்க அப்பாவுக்கும் தெரியும். நாங்க ரெண்டு பேரும் ஹாஸ்பிடல், ஹாஸ்பிடலா அலைஞ்சோம். எல்லோரும் இதே தான் சொன்னாங்க. இருக்கிற வரைக்கும் ஜாக்கிரதையாக இருக்கணும். டயட் ஃபாலோ பண்ணணும்னாங்க. அவ்வளவு தானானு நாங்களே குழப்பத்துல இருக்கும் போது தான், அவனோட வாழ முடியாதுன்னு நீ வந்து நின்ன. அன்னைக்கே நான் சொல்லி இருக்கலாம். ஆனால் உன்னோட மனக்குமுறலை சொல்லவும், எங்களால ஒன்னும் சொல்ல முடியலை.


முதல்ல நான் தான் போய் சேருவேன்னு நினைச்சிருக்க … அவரு போய் சேர்ந்துட்டாரு.உனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்காமல் போய்டடோமேனு எண்ணி போய் சேர்ந்துட்டார். உனக்காகத்தான் நான் என் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கேன். உனக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தால் தான் நான் நிம்மதியா போய் சேருவேன். அதுக்காக பிடிக்காத பையனுக்கு கட்டி வைக்கமாட்டேன் டா. உனக்கு இந்த தம்பியை பிடிக்கலைனா சொல்லு. மேட்ரிமோனியல்ல வேற வரன் பார்க்கலாம். " என்று சொல்லி முடிக்க.


அவர் பேசுவதை கேட்டவள், அதற்கு எந்த மறுமொழியும் கூறாமல், அவர் எடுத்து வந்த பைலை பார்க்க. அவளது கண்களோ கண்ணீரை பொழிந்தது.


" ஏன் மா? என் கிட்ட எதுவுமே சொல்லலை." என்று தென்றல் வாய்விட்டு கேட்க.


அந்த ஃபைலை பார்த்த அமுதன், கதிரவன் இருவரின் மனதிலும் இதே கேள்வி தான் எழுந்தது. ஆனால் வாய் விட்டு கேட்க இயலாமல் குற்றவுணர்ச்சி தடுத்தது. ' அம்மாவையும், அப்பாவையும் ஒழுங்காக கவனிக்கவில்லையோ.' என்று எண்ணி தடுமாறி நின்றனர்.


மலரோ, மகன்களை கண்டுக்கொண்டாளில்லை. மகளின் பரிதவிப்பான கேள்விக்கு தனது இயல்புக்கு மாறாக திடமாக பதிலளித்தாள். " அதான் இப்போ சொல்லிட்டேனே. சரி அதை விடு. நான் கேட்டதற்கு என்ன பதில்?மேட்ரிமோனியில் பதிவு செய்யவா?" என்று கேட்க.


" மா… ஏன் மா அவசரப்படுறீங்க? இப்போ தான் டைவர்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். அதுக்குள்ள இன்னொரு கல்யாணம்னா எல்லாரும் என்னை கேலி செய்வாங்க."


" தென்றல்… ஊருல உள்ளவங்க என்ன சொல்லுவாங்களோனு நினைச்சு கவலைப்படுற ஆள் நீ இல்லைனு எனக்கு நல்லா தெரியும். அதை ஒரு காரணமா சொல்லாத. நாம நமக்காக வாழனும்னு நீ தான சொல்லுவ. அப்புறம் என்ன?"


" மா… அப்போ தான் படிச்சு முடிக்கிறதுக்குள்ள அவசரம் அவசரமாக கல்யாணம் பண்ணி வச்சீங்க. இப்பயாவது கொஞ்சம் பொறுமையா இருங்க. எனக்குன்னு சில கனவுகள் இருக்கு. நான் யாரையும் நம்பி இல்லாமல் என் கால்ல சுயமா நிக்கணும்."


" நாங்க அவசரப்பட்டு உன் வாழ்க்கையை பாழாக்கிட்டோம். அதை நினைச்சு இப்பவும் பயப்படுறீயா. இந்த முறை எந்த தப்பும் வராது. நான் பொறுமையா இருக்கணும் நினைச்சாலும் கடவுள் எனக்கான நேரத்தை கொடுக்கலை." என்று மலர் கண்கள் கலங்க கூற.


தென்றலோ, "சரி மா. உங்கள் இஷ்டம்…" என்று சம்மதம் கூறியவள் அழுதுக் கொண்டே அவள் அறைக்குச் செல்ல… அபர்ணா அவள் பின்னே சென்றாள்.


கதிரவனும், அமுதனும் மலரின் இரு பக்கம் சென்று, " ஏன் மா எங்க கிட்ட மறைச்சிங்க. " என்று தழுதழுத்த குரலில் வினவ.


"உங்க எல்லாரையும் பயமுறுத்த வேண்டாம்னு தான் சொல்லல. உங்க அப்பா நல்லா விசாரிச்சுட்டார்." என்று சமாதானமாக கூறினார் மலர்.


" மா… எந்த வியாதியா இருந்தாலும் குணப்படுத்திடலாம். நீங்க கவலைப் படாதீங்க. நாங்க இப்பவே போய் நல்ல ஸ்பெஷலிஸ்ட்ட பார்க்கிறோம்." என்ற கதிரவன், அமுதனையும் அழைத்துக் கொண்டு செல்ல.


" டேய் கதிர், அமுதா… இப்போ எங்க போறீங்க. இது தேவையில்லாத வேலை. ஏற்கனவே பலமுறை ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலா அலைஞ்சாச்சு விடுங்க டா." என்ற மலரின் மறுப்புகள் காற்றோடு போனது.


அவர்கள் இருவரும் வெளியே கிளம்பவும், ஓய்ந்து அமர்ந்த மலரின் அருகே வந்தாள் சங்கீதா.


"அத்தை…" என்று மலரின் பாதமருகே அமர்ந்த சங்கீதா, அவரின் கைகளைப் பற்ற…


" ஐயோ! இப்போ எதுக்கு கீழே உட்கார்ற. எழுந்துருமா." என்று மலர் பதற.


" பரவாயில்லை அத்தை." என்றவள் அவரது மடி சாய.


" அத்தைக்கு முடியலைன்னு நினைச்சுட்டிருக்கீயா. வயசான எல்லோரும் ஒரு நாள் போய் தானே ஆகனும். அதை நினைச்சு வருத்தப்படாதே." என்று மருமகளுக்கு ஆறுதலாக கூற.


" என் கிட்ட எதுவுமே சொல்லவே இல்லையே. நான் உங்களுக்கு ஒரு நல்ல மருமகளாக இல்லையா? நானும் இந்த வீட்டுக்கு வந்த நாளில் இருந்து நல்ல மருமகளாக இருக்கணும்னு தான் நினைச்சு நிறைய என்னைய மாத்தியிருக்கிறேன் அத்தை. அது உங்களுக்கு புரியலையா? இல்லை முதல்ல இந்த வீட்டுக்கு வந்த போது, வீட்டை விக்கணும் சொன்னது உங்க மனசுல பதிஞ்சு போச்சா. அப்போ அந்த வயசுக்கு பக்குவம் இல்லாமல், பிரைவசி வேணும்னு நினைச்சு சொன்னேனே தவிர வேற ஒன்னும் இல்லை. இன்னமும் இந்த வீட்டை இப்போ உள்ள ட்ரெண்டுக்கு கட்டலாம் என்று தான் எனக்குத் தோணும். அது என்னோட தாட். அது உங்களுக்கு தப்பா தெரியுதுனு நினைக்கிறேன். ஆனால் தென்றல் விஷயத்துல அவ மேல உள்ள அக்கறையில் தான் நான் எல்லாம் செய்றேன்‌. அவ எனக்கு கூட பிறக்காத தங்கச்சி. ஆனால் அவ மேல காட்டுற பாசத்தையும், அக்கறையும் நீங்க சந்தேகமா தான் பாக்குறீங்க. எனக்கு நல்லா புரியுது. உங்களுக்கு என்ன தெரியும், தெரியாதுன்னு தெரியலை. ஆனா ஒன்னு மட்டும் உறுதி. நான் தென்றலுக்கு நல்லது தான் செய்யணும்னு நினைச்சேன். என் தம்பியைக் கூட நான் இரண்டாம் பட்சமாக தான் நெனச்சேன்." என்று அழ.


" மன்னிச்சிடு மா… நான் வேணும்னு மறைக்கலை. நீங்க எல்லாரும் வருத்தப்படுவீங்கனு மறைச்சேன். அப்புறம், தென்றல் இங்கே வரவும் எனக்கு ஒன்னும் புரியல." என்ற மலர், சங்கீதாவின் தலையை வருடினார்.


" பரவாயில்லை அத்தை. இப்பாவது என்னை நம்புறீங்களா?" என்று ஏக்கமாக வினவ.


" பெரிய வார்த்தை எல்லாம் பேசாதே சங்கீதா. நீ இந்த வீட்டு மூத்த மருமகள் மட்டும் அல்ல. என்னோட மூத்த மக நீ தான். இனி தென்றலைப் பத்தி எந்த கவலையும் கிடையாது. நீயும், அபர்ணாவும் பார்த்துப்பீங்க." என்று சொல்லிக் கூட முடிக்கவில்லை.


" அத்தை… ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க. முதல்ல ரிப்போர்ட் எடுத்துட்டு போனவங்க வரட்டும்… இங்கே முடியாதுன்னா பாரினுக்கு போகலாம். இப்போ நீங்க போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க." என்றவள், கோபமாக முறைக்க.


மருமகளது கோபத்தில் மலருக்கு புன்னகை மலர்ந்தது. " சரி மா. நீயும் போய் ஒய்வெடு‌" என்று விட்டு அவரது அறைக்குச் சென்று விட்டார்.


மலரோ பழைய நினைவுகளில் ஆழ்ந்தார். அவர் மட்டுமல்ல வருத்தமாக சென்ற தென்றலும், எப்படியாவது மாமியாரை குணப்படுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டு சென்ற சங்கீதாவும் கூட பழைய நினைவுகளில் ஆழ்ந்தார்.

தொடரும்...
 
Top