• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
தென்றல் - 16

மகளது, "உங்க இஷ்டம்." என்ற வார்த்தை மலருக்கு கடந்த கால கசப்புகளை கிளறி விட்டிருந்தது.

அதிலிருந்து மீட்பது போல் அமுதனும், கதிரவனும் அவரருகே அமர்ந்து, "அம்மா." என வாடிய முகத்துடன் அழைக்க.

" ஏன் பா? என்ன சொன்னாங்க? நான் சொன்னதை தான சொன்னாங்க. விடுப்பா‌. ஏற்கனவே பலமுறை விசாரிச்சாச்சு. எல்லோரும் ஒரே பதிலை தான் சொன்னாங்க. ஒரு சின்ன வாய்ப்பு இருந்தா கூட உங்க அப்பா விடுவாரா?" என்று கேட்க.

அப்போது தான் அவர்களுக்கும் அந்த உண்மை உறைத்தது. இருந்தாலும் அவர்களது மன திருப்திக்காக அலைந்து, திரிந்து விசாரித்து விட்டு வந்திருந்தனர்.

" சரி பா‌. சாப்பிட வாங்க. எங்க சங்கீதா?" என்று கேட்க.

அபர்ணாவோ, " அக்கா அவங்க ரூம்ல இருக்காங்க. இதோ கூப்பிடுறேன்." என்றாள்.

"சரி மா. அப்படியே தென்றலையும் வர சொல்லு. எல்லோரும் சாப்பிடலாம்." என்ற மலர், மனதிற்குள் ஒரு முடிவுடன் இருந்தார். 'தென்றலின் சம்மதம் கிடைத்தற்கு பிறகு தாமதம் செய்யக் கூடாது. அவள் மறுபடியும் யோசித்து ஏதும் மறுப்பு தெரிவிப்பதற்குள் அவளது திருமணத்தை முடித்துவிட வேண்டும்.' என்று எண்ணினார்.

எல்லோரும் உணவருந்தும் வரை அமைதியாக இருந்த மலர், " அமுதா, கதிரவா… தென்றல் தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாள்ல, அடுத்து ஆக வேண்டிய வேலையை பாருங்க. மாப்பிள்ளை வந்து தென்றலை பிடிச்சிருக்குன்னு சொன்னாலும், நாம முறைப்படி அவங்க வீட்ல பேசணும். நாளைக்கு நீங்க எல்லோரும் லீவு போட்ருங்க. நாம சம்பந்தி வீட்டிற்கு போய் பேசிட்டு வருவோம்." என்றவர், சங்கீதாவிடம் " உங்க அம்மா, அப்பாவுக்கு மாப்பிள்ளை சொன்னது தெரியுமானு தெரியல. எதுக்கும் ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லிடலாமா?" என்று கலவரத்துடன் வினவ.

" அதெல்லாம் என் தம்பி சொல்லியிருப்பான். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தென்றல்னா ரொம்ப பிரியம் தான். நாளைக்கு காலைல நாம எல்லாரும் அங்க வர போறோம் என்பதை வேணும்னா சொல்லிடுறேன்." என்றாள்.

" ம் சரி மா. அப்புறம் தென்றலும், அபர்ணாவும் இங்க இருக்கட்டும். மாசமா இருக்குறா, அவளை அலைய வைக்க வேண்டாம்." என்று மலர் கூற.

அபர்ணாவோ, "சரி." என தலையாட்டினாள்.

"சரி. போய் எல்லோரும் சத்த நேரம் படுத்து எந்திருங்க. காலையில நேரத்தோடு போவோம்." என்று முடித்தவர் உறங்கச் சென்று விட்டார்.

********************

" வாங்க…. வாங்க சம்மந்தி… வாங்க மாப்பிள்ளை." என்று சாரதா உற்சாகமாக அழைக்க. சதாசிவமும், "வாங்க எல்லோரும்…" என்று அழைத்தார்.

அனைவரும் உள்ளே நுழைய," எங்கே தென்றல் வரலையா?" என்று ஆர்வத்தோடு சாரதா வினவ.

" அது வந்து…" என்று தயங்கித் தயங்கி மலர் ஏதோ கூற வர.

அதற்குள் சங்கீதாவோ," மா… அபர்ணாவை சும்மா, சும்மா அலைய விட வேண்டாம்னு வீட்ல விட்டுட்டு வந்திருக்கோம். தென்றல் துணைக்கு இருக்கா." என்றாள்.

" ஓ அதுவும் சரி தான்." என்றார் சாரதா.

மலர் பார்வையாலே சங்கீதாவிற்கு நன்றி தெரிவித்தார். ' எங்கே தன் மகளை அழைத்து வந்தால் எதுவும் பிரச்சினை ஆகிவிடுமோ!' என்று பயந்தே அழைத்து வராமலிருந்தார்.

" வாங்க முதல்ல சாப்பிடலாம்." என்று சாரதா அழைக்க.

" அது... சம்மந்தி… முதல்ல வந்த விஷயத்தை பேசிடலாம்." என்று மலர் தயக்கமாக கூற.

" நல்ல விஷயம் பேசும் போது, நிறைஞ்ச வயிறோட பேசலாம். முதல்ல சாப்பிடுங்க." என்று வற்புறுத்தி சாப்பிட அழைத்து வந்தார் சாரதா.

மாடியிலிருந்து விசில் அடித்துக் கொண்டு உற்சாகமாக இறங்கி வந்த ருத்ரன், அப்போது தான் அங்கு எல்லோரும் இருப்பதையே கவனித்தான்.

லேசாக தலையை கோதியவன், லேசாக புன்னகைத்து எல்லோரையும் வரவேற்றான்.

" நீயும் வந்து உட்காருப்பா." என்று அவனையும் அமர வைத்து பரிமாறினார் சாரதா.

அமுதனுக்கு நேர் எதிராக ருத்ரன் அமர்ந்திருந்தான். எல்லோருக்கும் முதலில் இனிப்பை பரிமாறிய சாரதா அவனுக்குப் பிடிக்காது என்று அவனுக்கு மட்டும் வைக்காமல், அடுத்து அமர்ந்திருந்தவர்களுக்கு வைக்க.

" மா… கேசரியை எனக்கும் வைங்க." என்று கேட்டு வாங்கி, அந்த நெய் சொட்ட, சொட்ட இருந்த கேசரியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான் ருத்ரன்.

சங்கீதா நமுட்டு சிரிப்பு சிரிக்க… சாரதாவோ அவன் தோளில் லேசாக தட்டி விட்டு சென்றார். ஹெல்த் கான்ஷியஸோட இருக்கும் அவன், இனிப்பு பக்கமே போகமாட்டான். இன்று திருமணம் பேசுவதற்காக வந்திருக்க.அதற்காக செய்த இனிப்பு என்பதாலோ, என்னவோ அவன் கேட்டு சாப்பிட்டவன், கிண்டலாகப் பார்த்த தாயையும், தமக்கையையும் முறைத்தான்.

அவர்கள் இருவர் மட்டும் அல்ல, இன்னொருத்தரும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார். அதுவும் அதிர்ச்சியாக… ருத்ரனுக்கு இனிப்பு ஆகவே ஆகாது. ஆம் இது அமுதனுக்கும் நன்கு தெரியும்.

ருத்ரனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க. அவனது பார்வை உணர்வு தெரிந்தாலோ, என்னவோ அவனது புறம் பார்வையை திருப்பிய ருத்ரன், " என்ன?" என்பது போல புருவத்தை உயர்த்தினான்.

ஒன்றும் இல்லை என்று தலையை அசைத்த அமுதன், உணவை உண்ணாமல் அளைந்துக் கொண்டிருந்தான். மனமோ, ' ருத்ரன் பழைய படி என்னுடன் பேச மாட்டானா? இன்னும் என் மேல் உள்ள கோபம் போகவில்லை போல. ஆனால் அவன் மேல் தவறில்லை. என் தங்கையை திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றவுடன், நான் தான் அவனை விட்டுக் கொடுத்து விட்டேன். இனி எப்படி அவனை சமாதானம் செய்வது.' என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அமுதன் உணவை உண்ணாமல், யோசனையிலிருப்பதை கண்டுக் கொண்ட ருத்ரன், "மா…" என்று அழைத்தான்.

" என்னப்பா வேணும்? இன்னும் கேசரி வைக்கவா?" என்று கேலியாக வினவியபடி கரண்டியை நீட்ட.

" போதும் மா. இன்னிக்கு யார் சமையல்?" என்று வினவியவாறே, ராகி கிச்சடியை எடுத்து சட்னியில் தோய்த்து வாயில் வைத்தான்.

" நான் தான் சமைச்சேன் டா. நல்லாருக்கா எல்லாம்…" என்று ஆர்வமாக சாரதா வினவ.

" ம்… நான் எப்படியா இருந்தாலும் சாப்பிடுவேன். அங்கே பாருங்க. உங்க சின்ன மாப்பிள்ளை. சாப்பிட முடியாமல் கஷ்டப்படுறதை. எதுக்கு இந்த தேவையில்லாத ரிஸ்க் எடுக்குறீங்க." என்று அமுதனை கண்ணால் காட்டியவாறே தாயையும் வம்பிழுத்தான்.

எல்லோருடைய பார்வையும் அமுதன் மேல் விழ. அவனோ ருத்ரனைப் பார்த்து முறைத்தான்.

லேசாக கண் சிமிட்டிய ருத்ரன் உணவில் கவனத்தை செலுத்த…

' இப்போ இவன் என்ன பண்ணுனான்? என்னைப் பார்த்து கண்ணடிச்சானா? அப்போ கோபம் போயிடுச்சா?' என்று யோசனையிலிருக்க.

" ஷ் தம்பி. என்னப்பா இது? சாப்பிடு. சம்மந்தி வருத்தமா பார்க்குறாங்க." என்று மலர் அவனது காதில் கூற.

அப்போது தான் கவலையுடன் தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் சாரதாவைப் பார்த்து, " சாரி அத்தை. ஏதோ யோசனையில் இருந்துட்டேன். உங்க சமையல் எப்பவும் போல ரொம்ப சூப்பரா இருக்கு." என்று பாராட்டி விட்டு உணவில் கவனத்தை செலுத்தினான்.

இப்படி கலாட்டாவாக உணவு பொழுது சென்றது. இலகுவான மனநிலையில் திருமணத்தைப் பற்றிய பேச்சை மலர் ஆரம்பித்தார். திருமண பேச்சு சுமுகமாக செல்லும் என்று அவர் நினைத்திருக்க. சண்டை, சச்சரவு வந்தது.

எல்லாம் பையனுக்கும், அம்மாவுக்கும் மட்டுமே‌. திருமணத்தை மூன்று மாதம் கழித்து வைத்துக் கொள்ளலாம் என்று சாராதா கூற.

" அதெல்லாம் வேண்டாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வைங்க." என்றான் ருத்ரன்.

" டேய் ருத்ரா. அம்மா சொன்ன கேளு. நான் சொன்னா காரணம் ஏதாவது இருக்கும்." என்று சாரதா ஏதோ கூற.

" நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு எனக்குத் தெரியும்.மண்டபம் கிடைக்காதுன்னு ஏதாவது சில்லியா காரணம் சொல்லுவீங்க. அதெல்லாம் வேண்டாம். அடுத்த முகூர்த்தத்தில பாருங்க. கோவில்ல சிம்பிளா முடிச்சிடலாம். அதனால் உடனே பாருங்க." என்று ருத்ரன் முடித்து விட.

" டேய் பெரியவங்க என்ன சொல்ல வர்றாங்கனு கொஞ்சம் காது கொடுத்துக் கேளேன் டா." ஆற்றாமையாக சாரதா கூற.

" மா… நீங்க சோசியல் சர்வீஸ்லாம் பண்றீங்க. அப்படி இருந்தும் ஏன் மா ப்ராட் மைண்டா யோசிக்க மாட்டேங்குறீங்க. என் கல்யாணத்தில ஆடம்பரம் தேவையில்லை. காச கரியாக்கி பண்றதை விட்டுட்டு, கல்யாணத்தை கோயில்ல சிம்பிளா பண்ணுங்க. நம்ம வழக்கமா செய்யுற மாதிரி அனாதை ஆசிரமத்திற்கு சாப்பாடுக்கு டொனேஷன் கொடுத்துருவோம். அவங்க வயிறார உண்டு, நம்மை வாழ்த்துவாங்க. அதுவே போதும். என்னப்பா சொல்றீங்க? நான் சொல்றது சரி தானே?" என்று சாரதாவிடம் ஆரம்பித்து, சதாசிவத்திடம் முடித்தான்.

" நீ சொன்னா சரி தான் பா." என்று முடித்து விட்டார் சதாசிவம்.

முகம் மலர்ந்த ருத்ரன் மலரை பார்த்தான். அவருக்கு சம்மதமா என்று…

அவரோ, திருமணம் சீக்கிரம் முடிந்தால் போதும் என்பது போல் முகபாவனை வைத்திருந்தார். ' தான் எடுத்த முடிவு சரிதான்.' என்று எண்ணியே ருத்ரன் தனது தாயை அழுத்தமாக பார்த்தான்.

சாரதாவோ, " டேய் என் பேச்சைக் கேட்காமல் போனதுக்கு அப்புறம் வருத்தப்படுவ." என்று கூற.

" மா… உங்க புள்ள மா. இப்படி சாபம் கொடுக்குறீங்களே." என்று முறைக்க.

" ம்… எனக்கு ஆசை. அதான் உனக்கு சாபம் கொடுக்குறேன். போடா." என்றவர் காலண்டரை எடுத்து சுப முகூர்த்தம் எப்போது என்று பார்க்க ஆரம்பித்து விட்டார்.

பத்து நாட்களிலே ஒரு முகூர்த்தம் அமைந்துவிட… அந்த நாளே எல்லாருக்கும் ஏற்புடையதாக இருந்தது.

" என்ன சொல்றீங்க சம்மந்தி. இன்னைக்கே கோவிலுக்கு போய் அட்வான்ஸ் கொடுத்துடலாமா? " என்று மலரிடம் சாரதா வினவ.

மலரோ தன் மக்கள் இருவரையும் பார்த்தார்.

அவர்கள் சம்மதம் தர… அன்றே போய் கோவிலுக்கு அட்வான்ஸ் கொடுப்பதாக முடிவாயிற்று. நாட்கள் குறைவாக இருப்பதால், ரிஜிஸ்டர் இன்னொரு நாள் செய்துக் கொள்ளலாம் என்று முடிவாயிற்று.

" அப்படியே முகூர்த்த புடவை என்னைக்கு எடுக்குறதுன்னு அதையும் முடிவு பண்ணிடுங்க மா." என்றாள் சங்கீதா.

" நாளைக்கே போகலாம். அப்போ தான் ப்ளவுஸ் தைக்க சரியா இருக்கும். ருத்ரா நாளைக்கு எந்த வேலையும் வச்சுக்காதே." என்றார் சாரதா.

" மா… நீங்க மட்டும் போயிட்டு வாங்க. நான் வரலை. எனக்கு நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு." என்ற ருத்ரனது முகம் ஒரு நொடி இறுகி பின் இயல்பானது‌.

" டேய் நான் சொல்ற எதையும் கேட்கிறதா இல்லையா? சம்மந்தி என்ன நினைப்பாங்க?" என்று முணுமுணுக்க.

" மா‌‌… கல்யாணத்துக்கு முன்னாடி முடிக்க வேண்டிய வேலைகள் எனக்கு நிறைய இருக்கு. அதுக்காகத் தான் சொல்றேன். அத்தை என்ன தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க தென்றலை அழைச்சிட்டு போய் அவளுக்கு பிடிச்ச மாதிரி வாங்குங்க." என்றவன், அருகிலிருந்த சங்கீதாவிடம், "அக்கா... புடவை, நகை நீ பார்த்து வாங்கு." என்று சங்கீதாவிற்கும் ஒரு பொறுப்பை கொடுக்க.

அவளோ, " நான் பார்த்துகொள்கிறேன்." என்றாள்.

இப்படி அம்மாவிற்கும், மகனிற்கும் வாக்குவாதம் வந்துக் கொண்டிருந்தது. அமுதனோ, ' அப்படி என்ன முக்கிய வேலை?' என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவனும் ருத்ரனின் முகத்தில் வந்து போன இறுக்கத்தை கவனித்திருந்தான் அல்லவா.

****************************

இரவு முழுவதும் ருத்ரன் உறங்காமல் தவித்திருந்தான். கல்யாண கனவுகள் என்று நினைத்தால் அது தவறு…

நாளை முடிக்க வேண்டிய, முக்கியமான வேலையைப் பற்றிய யோசனையில் இருந்ததால் அவனுக்கு உறக்கம் பறிபோனது.

அந்த முக்கியமான வேலை, தென்றலுக்கு சம்பந்தமானது. அன்று மாலில் தென்றலின் கையால் அடி வாங்கியவனை பற்றி, டிடெக்டிவ் ஏஜென்ஸியிலிருந்து வந்திருந்த ஷ்யாமிடம் விசாரிக்க சொல்லியிருந்தான்.

அவர்களும் அந்த அஸ்வினைப் பற்றிய விபரங்களை எல்லாம் நேற்று தான் சொல்லியிருந்தனர்.

ருத்ரனுக்கு அவனை கொல்லணும் போல வெறி ஏறியது. ஆனால் அவனது கையால் செய்ய வேண்டும் என்றே காத்திருக்கிறான். அவனது ரத்தம் கொதித்தது. நேற்று ஷ்யாம் கூறியதை நினைத்துப் பார்த்தான்.

' ராம்சரணின் தங்கையின் புகுந்த வீட்டு உறவு தான் அஸ்வின். அவனது தங்கை கணவருக்கு ஒன்றுவிட்ட அண்ணன். எல்லோரும் கூட்டு குடும்பமாக மதுரையில் வசித்து வந்தனர். ராம்சரணின் தங்கையும், அவள் கணவரும் வேலை விஷயமாக வெளிநாட்டில் தங்கியிருக்க… மதுரையில் இருந்து வேலை விஷயமாக சென்னை வரும் போது, அஸ்வின் இவர்கள் வீட்டில் தங்க ஆரம்பித்தான்.
இன்னும் இவன் தென்றலுக்கு என்ன பிரச்சினை செய்தான் என்பது தெரியவில்லை. ஆனால் அவன் பெண்கள் விஷயத்தில் வீக் என்று மட்டுமே ருத்ரனுக்கு தெரிய வந்தது.'
அதற்கே அவனை அடி வெளுக்க முடிவு செய்து விட்டான்.

காலையில் நேராக அவர்கள் துணிகள் வைக்கும் குடோனிற்குச் சென்றவன், அங்கு இருந்த அஸ்வினை ஓங்கி ஒரு எட்டு விட்டான். அந்த இருட்டு அறையில் இருந்ததிலே பயந்து அரை உயிராக இருந்த அஸ்வின், திடீரென்று தன்னை எட்டி உதைத்தவனை மருண்டு பார்த்தான்.

அழுத்தமாக எட்டு வைத்த ருத்ரன், கைப் பட்டனை அவிழ்த்து, கை முட்டி வரை ஏற்றி விட்டவன், நன்கு அடித்து துவைத்து துவம்சம் செய்தான்.

" ஏன் டா நாயே. பொண்ணுங்கண்ணா கிள்ளுக்கீரையா… அவங்க கிட்ட இப்படி வாலாட்டிருக்க. இன்னும் என் தென்றலுக்கு நீ என்ன செய்தேனு தெரியலை. அது தெரியர அன்னைக்கு உனக்கு சங்கு தான் டி. இனி மேல் எந்த பொண்ணுங்க கிட்டயாவது வம்பு பண்ணுவீயா? இது தான் ஃப்ர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிஷ். இனி என் கண்ணு முன்னாடி வரக்கூடாது. ரைட்." என்று அரட்டியவன், சைகையால் வெளியே செல்லுமாறு கை காட்ட.

"இல்லை… இல்லை…" என்று அலறியவன், அங்கிருந்து விட்டால் போதும் என்று ஓடிப் போய் விட்டான்.

" ஊஃப்." என்று ருத்ரன் பெருமூச்சு விட.

" இவன நானே ரெண்டு தட்டு தட்டிருப்பேன். நீங்க எதுக்கு சார் இதுல இன்வால்வ் ஆகுறீங்க." என்றான் ஷ்யாம்.

" நான் தான் செய்தேன்னு இவனுக்கு நல்லா தெரியணும். அப்போ தான் தென்றல் கிட்ட வாலாட்ட மாட்டான்."

" இதனால உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தா…" என்று ஷ்யாம் இழுக்க.

" நான் ஃபேஸ் பண்ணிப்பேன்." என்று புன்னகைத்த ருத்ரன், ஷ்யாமிற்கான தொகையை கொடுத்து நன்றி தெரிவித்தான்.

அப்பாடா இனி நிம்மதியாக கல்யாண வேலையில் கவனம் செலுத்தலாம் என்று நினைத்தான் ருத்ரன்.

தொடரும்.....
 
Top