• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
தென்றல் - 18

ருத்ரனுக்கு வழக்கம் போல் அதிகாலையிலே விழிப்பு வந்து விட்டது. கைகளை முறுக்கி மெத்தையில் அசைய, நெஞ்சின் மீது தலை வைத்து இறுக்கமாக கட்டிக் கொண்டு ஓர் பூக்குவியல் இருந்தது.

தென்றல் அமைதிப்புயலாக நெஞ்சில் துயில் கொண்டிருந்தாள். அவளை ஆதுரமாக பார்த்தான். அவள் முகத்தில் எதுவும் வருத்தம் தெரிகிறாதா என்று அவன் ஆராய்ச்சி செய்ய.

அந்த நிர்மலமான முகத்தில் நிம்மதி தெரிந்தது. அசந்து போய் உறங்கிக் கொண்டிருப்பவளை எழுப்ப மனம் வராமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

' கும்பகர்ணி. நைட்டு கூட சீக்கிரம் தூங்கிட்டாளே. என்னமோ பல நாள் தூங்காமல் இருந்து, என்னமோ இன்னைக்கு தான் தூங்க வாய்ப்பு கிடைச்சது போல இப்படித் தூங்கிட்டு இருக்கிறா.' என்று மனதிற்குள் ஆச்சரியமாக எண்ணிக் கொண்டிருந்தான். அவளைப் பார்க்க, பார்க்க அள்ளி கொஞ்ச வேண்டும் என்று தோன்ற, இதுக்கு மேல் சரிவராது என்று அவளை மெல்ல தலையணையில் படுக்க வைத்து விட்டு குளியலறைக்குச் சென்றான்.

குளித்து விட்டு வரும் வரையும் கூட அவள் அசையவில்லை. ' எல்லோரும் நமக்காக காத்திருப்பாங்களே. சரி இவளை எழுப்புவோமா?'என்று யோசித்துக் கொண்டே கண்ணாடி முன்பு நின்று தலையை துவட்டிக் கொண்டிருந்தான் ருத்ரன்.

கண்ணாடி வழியாக, அவளை களவாட. அவளோ மெல்ல கண் விழித்தாள். தன் போக்கில் எழுந்திருக்க பார்த்தவள், பிறகு தான் இருக்கும் நிலை நினைவுக்கு வர, தலையில் லேசாக தட்டிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.

தனக்கு எதிரே கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து திருதிருவென முழிக்க… அவனோ அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்.

முகம் சிவக்க தலை குனிந்தாள் தென்றல்.

" தென்றல்… சீக்கிரம் குளிச்சிட்டு வா. எல்லோரும் நமக்காகத் தான் வெயிட் பண்ணிட்டிருக்காங்க. " என்றவாறே சட்டைப் பட்டனை மாட்டிக் கொண்டு, அவள் அருகே வந்தான்.

" அது வந்து… " என்று இழுத்தாள் தென்றல்.

" ம். சொல்லு."

" நான் குளிக்கணும்."

" ஆமாம். நானும் அதைத் தானே சொல்லிட்டுருக்கேன். ஓ… எதுவும் ஹெல்ப் வேணுமா?" என்று விஷமமாக வினவ.

அவனை முறைத்தாள் தென்றல்.

ருத்ரனோ, ட்ரெஸிங் டேபிளில் இருந்த சேரை நகர்த்தி, அவளைப் பார்த்தவாறு சட்டமாக அமர்ந்தான்.

தென்றலோ, " ப்ளீஸ்." என்று அழாத குறையாக கெஞ்ச.

"என்ன?" என்பது போல் புருவத்தை உயர்த்தினான்.

" கொஞ்ச நேரம் வெளியே வெயிட் பண்றீங்களா?" என்று தடுமாற்றத்துடன் கூற.

"என் பொண்டாட்டிக்கு நான் அவளை தனியா விட்டுட்டு எங்கேயாவது போனா, கோபம் வரும். சோ… நான் போகமாட்டேன்." என்று நைட் நடந்ததை வைத்து ருத்ரன் கேலி செய்ய.

தென்றல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

பதறி எழுந்து அவள் அருகில் வந்தவன்," ஹேய் தென்றல். நான் சும்மா கிண்டல் பண்ணேன். இதுக்கு போய் அழுவாங்களா…" என்று அவளது கண்களைத் துடைத்தவன், அதில் முத்தமிட.

தென்றல் அதிர்ந்து விழித்தாள்.

அவளது கன்னத்தில் லேசாக கட்டியவன், "நான் பால்கனியில் வெயிட் பண்றேன். சீக்கிரமா குளிச்சுட்டு வா. கொஞ்சம் பேசணும்." என்றான்.

பால்கனியில் அமர்ந்து அங்கிருந்து, தோட்டத்தை பார்த்தவனது மனதிலோ உற்சாகம் பொங்கியது. ' தென்றல் தன் வாழ்வில் இனி இல்லை என்று மறுகிக் கொண்டிருக்கும் போது, அவள் தன் வாழ்க்கையில் வந்து வசந்தம் வீசியதை நம்பமுடியாமல் திகைத்து போய் தான் இருக்கின்றான். இதோ உரிமையாய் தனதறையில் நடமாடிக் கொண்டிருக்கிறாள். இருந்தாலும் அவள் மனதில் உள்ள காயத்தை அவளாகவே எப்போது சொல்கிறாளோ, அப்போதுதான் கேட்க வேண்டும்.' என்று எண்ணிக் கொண்டிருக்க.

எண்ணத்தின் நாயகியோ, அங்கே வந்து விட்டாள். அவளது மெல்லிய கொலுசொலியிலே அவள் அங்கு வருவதை கவனித்து விட்டான். ஆனால் திரும்பாமல் தோட்டத்திலேயே பார்வையை பதித்திருந்தான்.
" ம்ஹூம்." என்று தொண்டையை கணைத்தாள். அப்பொழுதும் அவன் திரும்பவில்லை.

கையைப் பிசைந்து கொண்டு நின்றவளோ, அவன் திரும்ப போவதில்லை என்று புரிந்துக் கொண்டவள், நாவால் மெல்ல உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு, "ருத்ரா." என்று அழைத்தாள்.

முகமெல்லாம் விகசிக்க திரும்பியவன், புருவத்தை உயர்த்தி, " என்ன?" என்று கேட்க.

"பேசணும் சொன்னீங்களே. இப்பவே பேசணுமா? டைமாயிடுச்சு." தயங்கிக் கொண்டே கூற.

மெல்ல அவள் தோள் மேல் கையைப் போட்டு உள்ளே அழைத்து வந்தவன், எங்கே உட்காரலாம் என்று பார்க்க.

மெத்தை விரிப்பை மாற்றியிருந்தாள் தென்றல். அவளை பார்வையாலே மெச்சியவன், அதில் அவளை அமர வைத்து, தானும் அவளருகே அமர்ந்தான்.

" உனக்கு காஃபி வேண்டுமா?" என்று வினவ.
" வேண்டாம்." என்று தலையசைத்தாள்.

" ஓகே. இப்போ மணி எட்டு தான் ஆகுது. நாம பேசி முடிச்சிட்டே போகலாம். அப்புறம எதுக்கு அழுத? சும்மா கேலி பேசுறதுக்கெல்லாமா அழுவாங்க?" என்று அவளைப் பார்த்துக் கொண்டே வினவ.

" அது வந்து நான்… நேத்து… என்னை தப்பா நினைக்கலையே‌." என்று கோர்வையாக பேசாமல் தடுமாற்றத்துடன் கூறியவள், அவனை கலக்கத்துடன் பார்க்க.

" தென்றல்… இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு. நான் உன் கணவன். உனக்கு இந்த வீட்ல எல்லா ரைட்ஸும் இருக்கு‌. என்னை இங்க இருனு சொன்னது ஒண்ணும் குற்றம் கிடையாது. " என்று அவள் மனதில் அழுத்தமாக பதியுமாறு கூறினான்.

அவன் பேச்சு கொடுத்த தைரியத்தில்," நேத்து நடந்த… " என்று தடுமாறியவள், அவனைப் பார்க்க.

" ம்… சொல்லு‌… ஆனால் தப்புன்னு மட்டும் சொல்லிடாத தென்றல். என் நெஞ்சு வெடிச்சிடும்." என்று கேலி செய்ய.

அவனை முறைத்தவள், " நான் தான் ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வெச்சேன். அதை தப்பா சொல்லி காண்ப்பீங்களா?" என்று கடந்த கால வலியுடன் கூற.

அவளை புரிந்தவன் போல் கையை ஆதரவாகப் பற்றியவன், "இங்கே பாரு தென்றல். மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது. வைஃப் சம்மதம் இல்லாமல் ரிலேஷன்ஷிப் வச்சுக்க கூடாதுனு சட்டமே இருக்கு. அதே போல் வைஃப்க்கு நோ சொல்லவும் உரிமை இருக்கு. அதே என்னைப் பொறுத்த வரைக்கும் யெஸ் சொல்லவும் உரிமை உண்டு. இதுல எந்த தப்பும் கிடையாது. போத் ஹேவ் ஈகுவல் ரைட்ஸ்.நான் சொல்றது புரியுதா? " என்று அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே கூற‌.

அவளோ அவன் மேல் சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.

" தென்றல் எதுக்கு அழற? உன் கண்ணுல இருந்து கண்ணீர் என்னைக்குமே வரக்கூடாது." என்றவனின் மேல் இன்னும் சாய்ந்து, மௌனமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.

" ப்ளீஸ் தென்றல்." என்று ருத்ரன் கெஞ்ச.

" நான் ஒண்ணும் அழலை. இது சந்தோஷத்துல வந்த கண்ணீர்." என்றவள், அவனது நெஞ்சில் முத்தமிட்டாள்.

ஷாக்காகி நின்றான் ருத்ரன்.

" ருத்ரா… நான் என்னோட கடந்த கால வாழ்க்கையில் என்ன நடந்ததுனு சொல்றேன்." என்று அவள் ஆரம்பிக்க.

"தென்றல்… அதை சொல்லணும்னு அவசியம் இல்லை. உனக்கு கஷ்டமா இருந்தா விட்டுடுடா." என்று அவன் தடுக்கப் பார்த்தான்.

" இல்லை ருத்ரா. எல்லாத்தையும் இன்னைக்கே சொல்லிடுறேன். என்னோட கடந்த காலத்துக்கு இன்னையோட முற்றுப்புள்ளி வச்சுடுறேன்." என்று உறுதியாக கூறினாள் தென்றல்.

" என்னடோ கல்யாண பேச்சு ஆரம்பிக்கும் போது, எனக்கு உங்க ஞாபகம் தான் வந்துச்சு. ஆனா அது அந்த வயசுல வர்ற இன்ஃபாச்சுவேஷனு நினைச்சேன். அண்ணியும் அப்படித் தான்னு சொன்னாங்க." என்று யோசனையாக கூறியவள், திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தது போல்," ஆமாம். அண்ணிக்கு ஏன் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதுல இஷ்டமில்லை."

" ஏன் அப்படி கேட்கிற? இப்போ கூட நம்ம கல்யாணம் நடக்கிறதுக்கு அக்கா தானே முழு முயற்சி செய்தா?"

" அது வந்து… என் கல்யாண பேச்சு எடுக்கும் போது, உங்களைத் தான் முதல்ல கேட்டாங்க. உங்களுக்கு இஷ்டமில்லைனு அண்ணி சொன்னாங்க."

" எனக்கு இஷ்டமில்லைனு அக்கா சொன்னாங்க. உனக்கு அப்படித் தோணுதா. நீயே சொல்லு தென்றல்?" அவளை காதலாக பார்த்துக் கொண்டே வினவ.

" இல்லை." என்று முகம் சிவக்க தலையசைத்தாள் தென்றல்.

"அப்புறமென்ன பழசை விடு."

"இல்லைங்க அண்ணி…" என்று தென்றல் ஆரம்பிக்க.

" அது நமக்கு தேவையில்லாத விஷயம். விடு மா." என்று அவன் காரணத்தை சொல்லாமல் தவிர்த்தான்.

"சரி…" என்றவளோ,
மனதிற்குள்,'அப்போ உங்களுக்கும் தெரியும். சீக்கிரம் நான் கண்டுப்பிடிக்கிறேன்.' என்று எண்ணிக் கொண்டாள்.

" என்ன அமைதியா இருக்க? சரி கீழே போகலாமா?" என்று ருத்ரன் வினவ.

" இருங்க ‌… முழுசா சொல்லி முடிச்சிடுறேன். ஃபர்ஸ்ட் அலையன்ஸே என்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்களா… அதே மாதிரி மாப்பிள்ளை வேணும்னு எங்க வீட்ல சல்லடை போட்டுத் தேடினாங்க. கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம். எங்க அம்மா, அப்பாவுக்கு ஒரு சின்ன ஈகோ. நம்ம பொண்ணை ஒருத்தங்க வேணாம்னு சொல்றதானு… ஆனா கஷ்டப்பட்டது நான்.

ராம்சரணை பார்த்தாங்க. எங்க தகுதிக்கேத்த மாதிரி நல்ல குடும்பமாக இருந்தது. ரெண்டு அண்ணன்களும் மாப்பிள்ளையைப் பத்தி நல்லா விசாரிச்சு தான் பொண்ணு பார்க்கவே வர சொன்னாங்க.

மாப்பிள்ளை தனியா பேச வந்தப்போ, பேசிய முதல் வார்த்தையே எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கானு தான்.

நம்மளை ஒருத்தருக்கு பிடிச்சிருக்கு சொல்லும் போது நமக்கு எப்படி இருக்கும். அதே ஃபீலிங் தான் எனக்கும். வெட்கப்பட்டுக்கிட்டே என் சம்மதத்தை சொன்னேன்.

அதுக்கப்புறம் கல்யாண ஏற்பாடுகள் வேகமாக நடந்தது. எல்லாரையும் போல எனக்கும் கனவுகள்… கதைகள்ல வர்றதையும், ஃப்ரெண்ட்ஸுங்க சொல்றதையும் கேட்டு ஏகப்பட்ட கனவுகளை வளர்த்துக்கிட்டேன்.

பட்டுப்புடவை எடுக்கணும் சொன்னாங்க. ஏகப்பட்ட கற்பனைகளை வளர்த்துக்கிட்டு அங்கே போனா முதல் ஏமாற்றம். அதுக்கப்புறம் நிறைய ஏமாற்றங்களை சந்திச்சுட்டேன். ஆனால் முதல்முறையல்லவா ரொம்ப வலிச்சது.

ராம்சரணும் வந்திருந்தார். ஆனால் எனக்கு புடவையை பத்தி எதுவும் தெரியாது. நீங்களே பாருங்க என்று சொல்லி விட்டு ஒதுங்கி போய் உட்கார்ந்துட்டாங்க.

அப்புறம் அவங்க அம்மாவும், தங்கச்சி சுபாவும் என்னைக் கேட்டு, கேட்டு என் விருப்பப் படி எடுத்தாங்க. சுபா புதுசா கல்யாணம் ஆனா பொண்ணு. சோ… என்னை கேலி பண்ணிட்டே இருந்து, எதையும் யோசிக்க விடாமல், அந்த நேரத்தை அழகாக்கினாள். அப்புறம் கிளம்பும் போது, ஃபோன் நம்பர் வாங்கி அவங்க அண்ணன்கிட்ட கொடுத்துட்டு, எனக்கும் அவங்க அண்ணன் நம்பரை மெசேஜ் பண்ணா.

ஆனால் ஃபோன் தான் வரவே இல்லை. சரி நம்மளே பேசலாம் என்று போன் பண்ணாலும், ஓரிரு வார்த்தை பேசிவிட்டு ஃபிரண்ட்ஸ் கால் பண்றாங்க. அப்புறம் பேசலாம் என்று வச்சுடுவார். நானும் அதை பெருசா எடுத்துக்கலை‌. ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் தான் நான் எவ்ளோ பெரிய முட்டாளா இருந்திருக்கிறேனு தெரிய வந்தது." என்றவளோ, திருமணத்திற்கு பிறகு நடந்ததை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள்.

' கல்யாணம் நல்லபடியாக முடிந்து, நல்ல நேரத்தில் மாப்பிள்ளை வீட்டிற்கு பொண்ணு, மாப்பிள்ளையை அழைத்துச் சென்றனர்.

சுற்றியுள்ளவர்களை பார்த்து மிரண்டு நின்றாள் தென்றல். சுபா தான் அவளை தன் அருகிலே வைத்துக் கொண்டாள். அவளது மாமியார் அனுசரணையாக இருக்க. பயம் கொஞ்சம் குறைந்தது. ஆனால் யாருடைய துணை, அவளுக்கு தைரியத்தைக் கொடுக்குமோ அவனைக் காணவில்லை.

வீட்டிற்கு வந்து பால் பழம் சாப்பிடும் வரை இருந்தான். அவ்வளவு தான். அதற்கு பிறகு ஆளைக் காணவில்லை. பெண் வீட்டு சார்பாக சங்கீதா மட்டுமே துணையாக வந்திருந்தாள். அவளும் பட்டுவை உறங்க வைக்க முயன்றவள், அவளும் உறங்கி விட்டாள்.

இப்படி பகல் பொழுது விமுழுழதையும் நெட்டித் தள்ளினாள். ஒரு வழியாக மாலைப்பொழுது மலர, இவளுக்கு அலங்காரம் நடந்தது. கூடவே கேலி, கிண்டல் என கொஞ்சம் எல்லை மீற. ஒப்பனை மீறி தென்றலின் முகம் சிவந்தது.

சுபாவும், சங்கீதாவும் கேலி செய்துகொண்டே அவளை அழைத்துச் சென்று ராம்சரணின் அறையில் விட்டனர்.

படபடப்புடன் உள்ளே நுழைந்த தென்றலோ, அறை முழுவதும் பார்வையை படர விட்டாள்.

மல்லிகையும், முல்லையும் சரம்சரமாக தொங்க. சுவர் முழுவதும் அழகிய ரோஜாக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. தேவலோகமாக காட்சியளித்த அறையை, " வாவ்." என வாய் பிளக்க பார்த்துக் கொண்டிருந்தாள் தென்றல்.

"ப்ச்… நான்சென்ஸ்." என்ற ராம்சரணின் குரல் அபஸ்வரமாக ஒலித்தது.

" ஹான்." என்று அதிர்ந்து அவள் திரும்ப. வெளியே இருந்து அப்போது தான் உள்ளே நுழைந்திருந்தான் அவன்.

'தன் காதில் தான் ஏதோ தவறாக விழுந்தது போல.' என்று எண்ணியவள் பாலை நீட்ட.

" நைட் எதுவும் குடிக்க மாட்டேன்." என்று சொல்ல. அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தாள் தென்றல்.

ராம்சரணோ, சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு," தென்றல்... எனக்கு இந்த பூவோட ஸ்மெல் எல்லாம் அலர்ஜி. எனக்கு பிடிக்காது. மொட்டை மாடியில் என்னோட பர்ஸனல் ரூம் ஒன்னு இருக்கு. நான் அங்க போறேன். நீயும் டயர்டா இருப்ப. தூங்கு." என்று அவளை முதல் நாளே தனியாக விட்டுவிட்டு சென்று விட்டான்.

அறையில் தனித்து விடப்பட்ட தென்றலோ திகைத்து நின்றாள். ' பர்ஸனல் ரூமா? கணவன் மனைவிக்கு இடையே தனி பர்ஸனல் உண்டா? இந்த ஸ்மெல் பிடிக்கலைன்னா என்னையும் அழைச்சிட்டு போகலாமே. வாழ்க்கையில் முதலில் ஒருவரை ஒருவர் தெரிந்துக் கொள்ள வேண்டாமா? கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தால் என்ன?' என்று அவளுக்குள் ஏகப்பட்ட கேள்விகள். ஆனால் அதற்கு பதில் சொல்ல வேண்டியவனோ அங்கில்லை. இரவு முழுவதும் பயத்தில் தூங்காமல் தவித்திருக்க. காலையில் இவள் வெளியே வரும் போது சுபா தான் இருந்தாள்.

" என்ன அண்ணி? குளிச்சிட்டிங்களா? அண்ணன் எங்கே?" என்று வினவ.

பதில் சொல்ல முடியாமல், திகைக்க.

அவளோ, " ஏன் அண்ணி? என்னாச்சு?" என்று அவளது திகைத்த முகத்தைப் பார்த்து, குழப்பத்துடன் வினவ.

" அது வந்து…" என்று இழுத்தாள் தென்றல்.

" சரி நகருங்க அண்ணி." என்றவள், அவர்களது அறைக்குள் நுழைய.

அங்கோ ராம்சரணை காணவில்லை. உடனே தனது தாயை அழைத்து வந்தாள்.

" தென்றல்… ராம் எங்கே மா?" என்று அவர் வினவ.

" அது அத்தை…" என்றவள் தயங்கித் தயங்கி இரவு நடந்ததைக் கூறினாள்.

" அவனுக்கு தான் அறிவில்லைன்னா… உனக்கு எங்கேமா போச்சு? அவனை ஏன் வெளில விட்ட… சரி விடு. நான் அவனை கண்டிச்சு வைக்கிறேன். இப்போ நீ போய் கிளம்பு. மறு வீட்டுக்கு போகணும்." என்று அவரே படபடவென ஏதோ கூற.

அவள் அயர்ந்து நின்றாள்.

இதெல்லாம் சங்கீதாவுக்கு தெரியாமலே நடந்தது. ஒரு வழியாக ராம்சரண் கீழே இறங்கி வர… காலை உணவு முடிந்ததும் தென்றலின் வீட்டிற்கு கிளம்பினர்.

அங்கே வந்த ராம்சரண் எல்லோரிடமும் சகஜமாக பேசினான்.

" சரிங்க மாப்பிள்ளை. நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. தென்றல் உன்னோட அறைக்கு கூட்டிட்டு போ மா." என்றான் கதிரவன்.

தென்றலும் அவனுக்கு வேண்டிய வசதிகளை செய்து விட்டு, கீழே வந்து விட்டாள்.

கிச்சனில் தடபுடலாக விருந்து ரெடி ஆகிக் கொண்டிருந்தது. அங்கு ஒரு குட்டி மாநாடு ஓடிக் கொண்டிருக்க. அதில் ஐக்கியமானாள்.

" என்ன டிஸ்கஸ் ஓடிக் கொண்டிருக்கு." என்றாள் தென்றல்.

" ஈவினிங் எங்க வெளியே போகலாம்னு தான். அம்மா கோவிலுக்கு போகலாம்னாங்க. உங்க ரெண்டு அண்ணிகளும் பீச்சுக்கு போகலாம்னாங்க. உனக்கும், மாப்பிள்ளைக்கும் எதுவும் ஐடியா இருக்கா?" என்றான் கதிரவன்.

" அது… எங்கே இருந்தாலும் ஓகேண்ணா." என்று அவள் முடிப்பதற்குள் தடதடவென்று மாடியில் இருந்து இறங்கி வந்தான் ராம்சரண்.

கீழே வந்தவனோ பொதுவாக எல்லோரையும் பார்த்து, " முக்கியமான ஒரு வொர்க். போயிட்டு வந்துடுறேன்." என்றான்.

" சாப்பாடு ரெடி ஆயிடுச்சு மாப்பிள்ளை. சாப்பிட்டு போங்க." என்று மலரும், சுகுமாரனும் கூற.

" இல்லை… ஒரு இம்பார்ட்டெண்ட் வொர்க். சீக்கிரம் வந்துடுறேன்." என்று விட்டு வெளியே சென்றான்.

மலரோ, தென்றலை கடிந்துக் கொண்டார். " போய் மாப்பிள்ளைக் கிட்ட என்னன்னு கேளு." என்று சொல்ல.

" சரண்… சாப்பிட்டு போகலாமே. அம்மாவும், அப்பாவும் வருத்தப்படுறாங்க." என.

அவனோ, " நீ சாப்பிடு. என் ஃப்ரெண்ட் ஃபோன் பண்ணான். ஏதோ எமர்ஜென்ஸி. நான் போயிட்டு வர்றேன." என்று சொல்லி விட்டு சென்று விட.

அவளுக்கு எரிச்சலாக வந்தது.
உள்ளே வந்தவளோ, அவன் சொன்ன காரணத்தை அப்படியே சொல்லாமல்," ஆபீஸ்ல ஏதோ அர்ஜெண்ட் வொர்க் வந்துடுச்சாம். அதான் போயிருக்காங்க. நம்மளை சாப்பிட சொன்னாங்க." என்று சிரித்த முகமாக சொன்னாள்‌.

" தென்றல்… உங்களுக்குள்ள பிரச்சனை எதுவும் இல்லையே." என்று மலர் கேட்க .

எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது தென்றலுக்கு.

' ஏன்? எதுக்கு வெளியே போனான்?' என்று ஒன்றுமே புரியாமல் தவித்தாள். இதே போல் இனி நிறைய அனுபவிக்க போகிறாள் என்று அப்போது அவள் அறியவில்லை.

தொடரும்.....
 
Top