• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
தென்றல் - 20

அஸ்வின் வெற்றி சிரிப்புடன் கீழே இறங்கி வர…

அதுவரைக்கும் மரம் போல் நின்றிருந்த தென்றலுக்கு சுய உணர்வு வந்தது. வேகமாக கிச்சனுக்குள் நுழைந்தாள். கைக்கு கத்தி எதுவும் கிடைக்குமா என தேட. பதட்டத்தில் எதுவும் கைக்கு அகப்படவில்லை.

" அப்புறம் தென்றல்? உன் மாமியார் கூட உன் பக்கம் இல்லை போலயே. நான் என்ன பண்ணாலும் கேட்க ஆள் இல்லை. அப்படித்தானே?" என்று கிண்டலாக கேட்டுக் கொண்டே கிச்சனுக்குள் நுழைந்தான்.

திடீரென்று கேஸை திறந்து விட்டவள், லைட்டரை கையில் எடுத்தாள்.

" ஹேய்… என்ன பண்ற?" என்று அவன் பதறினான்.

" என் கிட்ட வந்த, ரெண்டு பேரும் அக்கினி பகவானுக்கு இரையாக வேண்டியது தான்." என்று கண்களில் தணல் வீச நின்றுக் கொண்டிருந்தாள் தென்றல்.

' கண்ணகி மாதிரி நிக்கிறாளே. சொன்னதை செஞ்சுடுவாளோ…' என்று எண்ணியவன் அங்கிருந்து ஓடி விட்டான்.

இரவு முழுவதும் அங்கேயே உட்கார்ந்து இருந்தாள். ' என்னைப் போய் சந்தேகம் பட்டுட்டாங்களே. நான் அப்படிப்பட்டவளா? அந்த பொறுக்கி வேணும்னே என்னை தப்பா நினைக்கற மாதிரி பண்ணி வச்சிருக்கான். கடவுளே!' என்று அதிர்ந்து போய் இருந்தாள்.

பொழுது விடிந்ததும் மாமியார் வெளியே வர… அவர் முகத்தை பார்க்க கூட விருப்பம் இல்லாமல், தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டாள் தென்றல்.

'நல்ல குடும்பம். மாமனார், மாமியார் ரொம்ப நல்லவங்க. பிக்கல், பிடுங்கல் இல்லாத குடும்பம்னு சொல்லி கல்யாணம் பண்ணி வச்சவங்கக் கிட்ட போய், நீங்க நினைக்கிறதெல்லாம் தப்புனு அவங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. ராம்சரண் கிட்ட முதல்ல பேசணும். முதல்ல அந்த பொறுக்கியை கண்டிச்சு வைக்கணும்‌. எதுவாக இருந்தாலும் இங்கே இருந்து சால்வ் பண்ணணும்.' என்று எண்ணிக் கொண்டு ராம்சரணுக்காக காத்திருந்தாள்.

சற்று பொறுத்து அங்கே வந்தவனோ, அவளை ஒரு பொருட்டாக நினையாமல், ஆபிஸுக்கு கிளம்ப.

" உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்." என்றாள் தென்றல்.

" ஓ… சாயந்திரம் பேசுவோமா. இப்ப டைம் ஆயிடுச்சு." என்று கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தை பார்த்துக் கொண்டே அறையிலிருந்து வெளியேற முயன்றான்.

"இல்லை. இப்ப பேசி ஆகணும்." என்று அவனுக்கு முன்பு சென்று நின்றாள் தென்றல்.

" சரி சீக்கிரம் சொல்லு." என்று விட்டு கடிகாரத்தை பார்த்தான்.

இரவு நடந்ததை சொன்னவள், கண்ணீர் விட.

" நான் அஸ்வின் கிட்ட என்னன்னு விசாரிக்கிறேன். கொஞ்சம் பொறுமையா இரு. எனக்கென்னவோ நீ தப்பா புரிஞ்சுகிட்டனு தோணுது." என்றான்.

" லூசா நீ‌. கட்டுன பொண்டாட்டி நான் சொல்றேன். அவனை விசாரிக்கிறேன்னு சொல்ற. இதுல உங்க அம்மா வேற என்ன சந்தேகப்படுறாங்க. நான் என்ன அவ்வளவு கேவலப்பட்டவளா?" என்று அவனது சட்டையை பிடித்து கேட்டாள் தென்றல்.

"ப்ச். அம்மா வயசானவங்க. அவங்க சொல்றதெல்லாம் பெருசா எடுத்துக்காதே." என்று கூறியபடி சட்டையிலிருந்து அவளது கையை எடுத்து விட்டான்.

"அவங்க என்னோட கேரக்டர் பத்தி தப்பா பேசுறாங்க. நீ என்னன்னா என்னை பொறுமையா இருக்க சொல்ற? முதல்ல சக மனுஷி கிட்ட நம்பிக்கை வேணும்." என்று அவனை மரியாதை இல்லாமல் ஏக வசனத்தில் பேசினாள்.

" உங்க வீட்ல முதல்ல நம்புனாங்களா? உன் அண்ணன்காரனுங்க எத்தனை தடவை வந்து என்னை பத்தி விசாரிச்சாங்க. அது பத்தாதுன்னு ஏஜன்ஸியிலையும் ஆள வச்சி விசாரிக்கலை. அது மட்டும் என்ன, நம்பிக்கை இல்லாமல் செய்யுற காரியம் தானே." என்றான்.

" பொய் சொல்லாதீங்க. என் அண்ணனுங்க மட்டும்தான் விசாரிச்சாங்க. நாங்க ஏஜென்சியில ஒண்ணும் சொல்லலை.அப்புறம் ஒரு கல்யாணம் பண்ணனும்னா விசாரிக்க தான் செய்வாங்க. "

"அதை மாதிரி தான், குடும்பத்துலையும் ஏதாவதுனா எங்க அம்மா விசாரிக்க தான் செய்வாங்க. நீ தான் அவங்களுக்கு உன்னைய புரிய வச்சிருக்கணும்." என்றவன் வெளியே சென்று விட.

' இந்த முட்டாளுக்கே புரிய வைக்க முடியலை. இதுல அவங்க அம்மாவுக்கு எப்படி புரிய வைப்பது தெரியவில்லையே.' என்று தவித்தாள் தென்றல்.

இரவு வந்தவனிடம் மீண்டும் அஸ்வின் பேச்சை ஆரம்பிக்க.

" அவன் தான் ஊருக்கு போய்ட்டானே. மறுபடியும் வந்தால் பார்த்துக் கொள்ளலாம்." என்ற ராம்சரணை, சொல்ல முடியாத வேதனையுடன் பார்த்தாள்.

ஆனால் அடுத்த நாளே மீண்டும் வந்து நின்றான் அஸ்வின். வந்தவன் சும்மா இல்லாமல் இரவு முழுவதும் கதவை தட்டி தொந்தரவு செய்தான். அந்த ஒரு நாளிலே தென்றலுக்கு நரக வேதனைன்னா என்னனு புரிய வைத்தான்.

அன்னைக்கு நைட்டும் தூங்காமல் முழிச்சிட்டே உட்கார்ந்து இருந்த தென்றல், ராம்சரணுக்காக டென்ஷனோடு காத்திருந்தாள்.

ராம்சரண் கீழே வரவும்," அந்த அஸ்வின் வந்துட்டான். அவனை
இந்த வீட்டுக்கு வர வேண்டாம்னு சொல்லுங்க. இந்த பிரச்சனைக்கு முதல்ல ஒரு முற்றுப்புள்ளி வைங்க." என்று எரிச்சலான குரலில் கூறினாள்.

" அப்படி உடனே சொல்லிட முடியாது. அவன் சுபாவோட சொந்தக்காரன். கொஞ்சம் பொறுமையா தான் சொல்லணும்." என்று மறுபடியும் அதே பதிலை அவன் கூற.

"இப்படியே போனா எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு." என்று இயல்புக்கு மாறாக தென்றல் கத்தினாள்.

" நீ வேணும்னா கொஞ்சம் நாள் உங்க வீட்ல போய் இரேன்." என்று மெதுவாக கூறினான்.

ஒரு நிமிடம் அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.' ச்சே. என்ன மனுஷன் இவன்? இவனோட இருக்கிறதுக்கு பேசாமல், அம்மா வீட்டுக்கு போயிடலாம்.' என்று மனதில் தோன்றியது. முதலில் லேசாக மனதில் தோன்றிய விஷயம், கொஞ்ச நேரத்திலே திடமான முடிவாக மாறி, அங்கிருந்து அவளை கிளப்பியது.

அது யோசனையில் உழன்றுக் கொண்டிருந்த தென்றலுக்கு, ராம்சரண் கீழே சென்றது கருத்தில் படவில்லை. அவன் வெளியே சென்ற அடுத்த நொடியே, அந்த அஸ்வின் உள்ளே வந்ததையும் கவனிக்கவில்லை.

திடீரென்று தன்னை யாரோ அணைப்பது கண்டு பதறியவள், துள்ளித் குதித்து விலக.

" இப்போ எதுக்கு தென்றல் பதறுற? உன் புருஷனே கண்டுக்காம போய்ட்டான். அவனுக்கு ஏதோ குறை இருக்கு. அதான் கண்டும் காணாமல் இருக்கான். நீ பயப்படாத." என்றவன் மீண்டும் அவளை அணைக்க முயற்சி செய்தான்.

எங்கிருந்துதான் தென்றலுக்கு அவ்வளவு பலம் வந்ததோ தெரியவில்லை. வேகமாக அவனை தள்ளி விட்டவள், அங்கிருந்து அவளது வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.

தலையெல்லாம் கலைந்து, களைத்துப் போய் வந்த தென்றலை முதலில் மலர் தான் பார்த்தார்.

" என்னடா தென்றல்? என்னாச்சு?" என்று பரிதவிப்புடன் வினவ.

"அம்மா… " என்றவள், அடுத்த வார்த்தை எதுவும் கூறாமல் அழுது கரைய…

அப்போது தான் உள்ளே வந்த சுகுமாரனும் மகளது அழுகையில் பதறிப் போனார்.

வீட்டில் வேறு யாரும் இல்லை. எல்லோரும் ஆஃபிஸுக்கு சென்றிருக்க. அபர்ணா பட்டுவை கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தாள்.

" மலர் தண்ணி கொண்டு வா." என்றவர், தென்றலை சோஃபாவில் அமர வைத்து, தலையை வருடிக் கொண்டிருந்தார்.

மலர் தண்ணீர் கொண்டு வரவும், " குடி மா." என்றவர், கொஞ்சம் சமாதானம் ஆகவும் மீண்டும் விசாரித்தார்.

" அப்பா… இனி நான் அங்கே போக மாட்டேன். " என்று தென்றல் கூற.

" என்னடி நினைச்சுட்டு இருக்க. கல்யாணம்னா விளையாட்டா? எவ்வளவு கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணி வச்சா, இப்படி ஆறே மாசத்தில வந்து நிக்கிற" என்று மலர் திட்ட.

" நீங்க கஷ்டப்பட்டு செலவு பண்ணதற்காக எல்லாம் நான் அங்கே இருந்து உயிர விடணும்னு நினைக்கிறீங்களா மா? எனக்கு இந்த வீட்ல உரிமை கிடையாதா? பொண்ணா பொறந்துட்டா இங்கே இருக்கிற வரைக்கும் தான் எல்லாமா? கல்யாணமாகி போயிட்டா, நான் உங்க பொண்ணு இல்லைன்னு ஆகிடுமா?" என்று ஆக்ரோஷமாக வினவ.

" எதுக்கு டா. இவ்வளவு பேசுற. நாங்க அப்படி நினைப்போமா? என்ன காரணம்னு எதுவும் சொல்லாமல் இப்படி பேசுனா, நாங்க என்ன பண்றது." என்று மகளை அணைத்து கண்ணீர் விட்டார் மலர்.

நடந்த அனைத்தையும் ஆதி முதல் அந்தம் வரை கூறிய தென்றல், " என்னை சமாதானம் படுத்தி அங்க அனுப்பணும்னு நினைச்சீங்கனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்." என்று உறுதியாக கூறினாள்.

சுகுமாரனோ," உனக்கு சப்போர்ட்டா அப்பா இருக்கேன் டா. நீ எதுக்கும் கவலைப்படாதே. அந்த ராஸ்கல் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கித் தரேன்." என்று உறுதியளித்தவர், அவரது வாக்கை நிறைவேற்றி விட்டு, இந்த உலகத்தை விட்டே சென்று விட்டார்.

வீட்டில் தென்றல் விவாகரத்து வாங்கப் போவது மட்டும் தான் தெரியும். ஆனால் காரணம் வேறு யாருக்கும் தெரியாது. விட்டது தொல்லையென ராம்சரணின் வீட்டிலும் விவாகரத்துக்கு சம்மதம் தந்து விட்டனர்.

சங்கீதா மட்டும் அவ்வப்போது வார்த்தைகளால் குத்துவாள்.'

பழைய நினைவுகள் முழுவதையும் ருத்ரனிடம் கொட்டி முடித்து விட்ட தென்றலின் மனதிலுள்ள பாரம் இறங்கியது.

அவளது கண்ணீரை துடைத்து விட்டவன், " தென்றல் உன்னை முதல்முதலா பார்த்தப்ப இருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உன்னை ரொம்ப லவ் பண்ணேன். ஆனால் நம்ம வாழ்க்கையில என்னென்னமோ நடந்திடுச்சு. இனி உனக்கு எல்லாமுமா நான் இருப்பேன்‌. அப்புறம் என்னைக்கும் உன் கண்ணுல இருந்து தண்ணியே வரக் கூடாது " என்றவன் அவளது நெத்தியில் அழுத்தமாக முத்திரையை பதித்தான்.

" அப்புறம் ஏன் அண்ணி, உங்களுக்கு விருப்பமில்லைனு சொன்னாங்க." என்று வினவ.

" அதெல்லாம் அப்புறம் பேசலாம். முதல்ல நீ கீழே போ தென்றல்."

'அண்ணியைப் பத்தி பேச்செடுத்தாலே, பேச்சை மாத்துறாங்களே. அப்போ அவங்க தான் ஏதோ பண்ணியிருக்காங்க.' என்று எண்ணியவளோ, சங்கீதா மேல் வந்த கோபத்தை முகத்தில் காட்டாமல்," நீங்க வரலையா? " என்று வினவினாள்.

" நீ போ. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு." என்று இறுகிய குரலில் கூறினான்.

" நான் தனியா போகலை. லேட்டாயிடுச்சு‌. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு." என்றாள் தென்றல்.

" இல்லடா நீ கீழே போ. அந்த அஸ்வினை அன்னைக்கே போட்டு தள்ளியிருக்கணும். உனக்கு என்ன பிரச்சனை பண்ணானு எனக்குத் தெரியாது. அதான் உயிரை மட்டும் எடுக்காமல் விட்டேன். ஆனால் இனி அவனை விட்டு வைப்பேனா?" என்று கர்ஜிக்க.

" அப்ப நீங்க தான் அவனை அடிச்சதா?." என்று வினவியவளது முகம் மலர்ந்தது.

" ம்… ஆமாம். அவன் அடிவாங்கினது உனக்கு எப்படித் தெரியும்?"

" சுபாவை கோவில்ல பார்த்தேன். அவ தான் சொன்னா. அரை உயிரா ஹாஸ்பிடல்ல இருக்கானு‌. வேற எதுவும் செய்ய வேண்டாம். அப்புறம் அந்த பொறுக்கிக்காக உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தா, நம்ம வாழ்க்கையை தான் பாதிக்கும்." கலக்கமாக தென்றல் கூற.

" அவனை வெளியே வர முடியாதபடி ஜெயில்ல தள்ளினால் தான் என்னால நிம்மதியா இருக்க முடியும். ஒரு பொண்ணை, அவங்க வீட்டுல கூட நிம்மதியா வாழ விடமாட்டேன்னா என்ன அர்த்தம்? நீ கீழே போடா. பத்து நிமிஷத்துல வந்துடுறேன். அப்புறம் நீயாக தள்ளிப் போனு சொல்ற வரைக்கும் உன்னை விட்டு நகர மாட்டேன்." என்றவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க.

" ப்ச் போங்க." என்றவள் முகம் சிவக்க வெளியே சென்றாள்.

" ஹேய் ஒரு வார்த்தைக்கு சொன்னேன். நீயே போக சொன்னாலும் நான் போக மாட்டேன்." என்று அவன் பின்னாலே கூவினான்.

அதைக் கேட்ட தென்றல் தலையில் லேசாக தட்டிக் கொண்டவள், அமைதியாக கீழே இறங்கினாள்.

தென்றலை பார்த்த அனைவரும் அதிர்ந்தனர்.

அவளது முகமோ அழுதழுது வீங்கி போய் இருந்தது.

ஒருவரை, ஒருவர் பார்த்துக் கொண்டு சங்கடமாக இருக்க. சங்கீதாவோ,'தன்னுடைய தம்பியும், தென்றலும் வாழ்க்கையை ஆரம்பிக்கவில்லையோ,' என்று கவலையாக எண்ணினாள்.

கதிரவன், 'உன்னால் தான் எல்லாம்.'என்பது போல் சங்கீதாவை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான்.

" வா மா. இங்கே வந்து உட்கார்." என்று சாரதா, தனக்கு அருகே அவளை அமர வைத்தாள்.

"ருத்ரன் எங்க தென்றல்?" என்று சங்கீதா வினவ.

அவளோ ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.

" சரி. நான் போய் பார்க்கிறேன்." என்று சங்கீதா மாடிக்கு செல்ல முயல.

" அவர் ஃபோன் பேசிட்டு இருக்கார். பத்து நிமிஷத்துல வரேன்ன்னு சொன்னாரு அத்தை." என்று சாரதாவிடம் பதில் கூறினாள்.

அதிர்ச்சியாக திரும்பினாள் சங்கீதா. 'தன்னிடம் பேசாமல், அம்மாவிடம் பதில் சொல்கிறாளே‌.' என்று அதிர்ந்தவள் தென்றலை பார்க்க.

அவளோ பட்டுவை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

அங்கோ ருத்ரனோ ஷ்யாமுக்கு அழைத்திருந்தான்.

" ஹலோ ஷ்யாம்."

" என்ன சார் விஷயம்?"

" அந்த அஸ்வினை…" என்று ஏதோ ஆரம்பிப்பதற்குள்,

" போட்டு தள்ளிடவா." என்றான் ஷ்யாம்.

" ஷ்யாம்… நானே இப்ப தான் என் லைஃபை ஸ்டார்ட் பண்ணிருக்கேன்
என்னால் கோர்ட், கேஸுனு அலைய முடியாது. ஆனால் அந்த அஸ்வினை அலைய விடணும். அவனை வெளியில் வர முடியாத மாதிரி ஒரு ஸ்ட்ராங்கா கேஸ் போட்டு உள்ள தள்ளணும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை."

" நீங்க கவலையே பட வேண்டாம். ஈவினிங்குள்ள நல்ல சேதி வரும்."

" ஓகே. பை." என்றவன் உற்சாகமாகவே கீழே இறங்கி வந்தோன்.

அங்கிருந்த ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்தவன், சோபாவில் அமர்ந்திருந்த தென்றலுக்கு அருகே சென்று அமர்ந்தான்.

மெல்ல அவள் புறம் சாய்ந்தவன்," லூசு… என்ன பண்ண? எதுக்கு இப்படி எல்லாரும் உன்னை பாத்துட்டு இருக்காங்க?" என்று வினவ.

" நான் ஒண்ணும் பண்ணலை."

" நீ ஒண்ணும் பண்ணலைனாலும் உன் மூஞ்ச பாரு. அழுது அழுது வீங்கி இருக்கு. அதான் எல்லோரும் சந்தேகமாக பார்க்குறாங்க. நாம சந்தோசமா இருக்குறோம்றதை தெரிகிற மாதிரி இறுக்கி அணைச்சு எனக்கு ஒரு உம்மா கொடு." என்று அவளைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே கூறினான்.

அவளோ அவனைப் பார்த்து முறைக்க முயன்று முடியாமல் சிரித்தாள். அவனும் சேர்ந்து சிரிக்க.

அவர்கள் இருவரையும் பார்த்த எல்லோருக்கும் முகம் மலர்ந்தது.

சாரதாவிற்கு இப்போது தான் மனம் நிம்மதியடைந்தது.

" சரி வாங்க. எல்லோரும் சாப்பிடலாம். சாயந்திரம் தான் நல்ல நேரமாம். அப்போ மறுவீட்டுக்கு போகலாம். இப்போ சாப்டுட்டு கோவிலுக்கு போகலாமா?" என்று கேட்க.

"கோயிலுக்கு தானே போகலாம்." என்ற ருத்ரன், " அஷ்டலட்சுமி கோவிலுக்கு போகலாமா? உனக்கு அந்த கோவில் தானே ரொம்ப பிடிக்கும்." என்று தென்றலிடம் வினவ.

" ஆமாம்." என்று தலையாட்டியவளோ ருத்ரனுடன் சாப்பிட சென்றாள்.

" தென்றல் இங்கே வந்து உட்காரு." என்று சங்கீதா கூறியது காதில் விழாதது போல் கதிரவனுக்கு அருகில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

கலங்கிய கண்களை சமாளித்துக் கொண்டு சங்கீதா இருக்க. எல்லோரும் இவர்கள் இருவரையுமே பார்த்தும், பார்க்காதது போல் இருந்தனர்.

தொடரும்...
 
Top