• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 10)

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
தங்களால் முடிந்தவரை கலைவாணியை சமாதானப்படுத்தினர் எல்லோரும். கலைவாணிக்கு ஏதோ அன்றே அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று தோன்றியது போலும்.... அவரே தொடர்ந்தார்.
'அடுத்த நாளே எங்களக் கூப்பிட்டுப் போக ஆக்கள் வந்திட்டாங்க. எனக்கும் பூர்வியைப் பிரியப் போறமேன்னு கவலையா இருந்திச்சு. அவளுக்கும் தான். இனி எப்ப பாப்பமோ என்ட கவலையோடவே ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டம்.
அதுக்கப்புறம் ரெண்டு பேருமே எங்க ஊரை அடைஞ்சிட்டம். இனிமேப் பாக்கவே முடியாதுனு கலங்கிப் போன எங்களுக்கு சந்திக்கிறதுக்கு நல்ல வாய்ப்பொன்னு கிடைச்சுது. அதுவும் ஏழெட்டு மாசம் கழிச்சுத் தான்.எனக்கு காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு போகும் போது பூர்வியும் அந்தப் பக்கமா வந்திட்டிருந்தா... அப்பிடி அவங்களை சந்திக்கிறது ரொம்ப ரொம்பக் குறைவு.... அன்னைக்கு பாக்கனும்னு இருந்திருக்கு....
என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு விடவேயில்ல.. ரொம்ப நேரம் ரெண்டு பேரும் கதைச்சிட்டே இருந்தம். தன்னோட காதலுக்கு வீட்ல ஓகே சொல்லிட்டாங்க என்டும் தனக்கு கூடிய சீக்கிரமே கல்யாணமாகப் போகுதுனும் சொல்லி ரொம்ப சந்தோசப்பட்டா. எனக்குமே ரொம்ப சந்தோசமா இருந்திச்சு. காதலிச்சவனையே கைப்பிடிக்கிற வரம் எல்லாருக்கும் அமைஞ்சிடாதில்ல.
நிறைய நேரம் கதைச்சாப் பிறகு அவ அவளோட வெடிங் காட் (wedding card) எடுத்து நீட்டினா. நான் அதிர்ந்தே போய்ட்டன். என்னடி? கூடிய சீக்கிரம் கல்யாணம்னு தானே சொன்ன; அதுக்குள்ள வாற கிழமையா? அவர் இங்க வந்திட்டாரா? ஏதோ அங்க வேலை செய்றதா சொன்ன? என்டு கேக்க 'ஆமாடி.. அவரோட வேலையை சீக்கிரம் முடிச்சிட்டு இங்க வந்திட்டார். வீட்லயும் அவரோட ஆளுங்களோட நல்ல பழக்கம். அவரையும் ரொம்பப் பிடிச்சிருக்கு எல்லாருக்கும். நாங்க ரெண்டு பேரும் விரும்பி இருக்கிறதால ஜாதகம் ஒண்ணும் பார்க்க விரும்பல அவங்க. நல்ல நாள் மட்டும் பாத்து கல்யாணத்தை வச்சுக்கிட்டோம். உன்னைத் தான் பாக்கவே முடியல. என்னதான் ரெண்டு சைட்லயும் பிரச்சினைனு ஒண்ணுமில்லனாலும் நாங்க அவ்ளோ வந்து போறதில்லைல. கல்யாணத்துக்கு நீ வந்தா ரொம்ப சந்தோசப்படுவன். உங்க வீட்ல என்ன சொல்றாங்களோ அதைக் கேட்டு செய். அப்புறம் இதை வச்சுக்கோ'னு என் கைல எதையோ ஒண்ணை வச்சா.
என்னடி இதுனு கேட்டதுக்கு, 'பாத்தா தெரில? செய்ன்' னு வழமையான அதே அழகான சிரிப்பு.
இது எதுக்குடி எனக்கு? உன் ஆளுக்குத் தான் குடுக்கணும்னு சொன்னதுக்கு... 'நீ என்னோட செல்ல ஃபிரண்ட்டி; உனக்கு இல்லாததா? அன்னைக்கு ஊர்ல ஓடர் பண்ணன்ல ரெண்டு செய்ன்ஸ்? அதில ஒண்ணு உனக்கு.... இன்னொன்னு என் ஆளுக்கு; அவருக்கு என்னோட சின்ன வயசு ஃபோட்டோ போட்டு டிசைன் பண்ணி இருக்கு.'
இந்தத் தடவை அழகான ஒரு வெட்கச் சிரிப்பு. மித மிஞ்சிப் போனா ஒரு மாசம் தான் பழகி இருப்பம்... எனக்காக அவ்ளோ பெரிய கிப்ட் (gift).... அவளே எனக்கு அதைப் போட்டு விட்டா. இன்னைக்கு வர அது என் கழுத்தை விட்டு நீங்கினதில்லை. இத்தனைக்கும் நான் அவளுக்காக ஒண்ணுமே பண்ணினதில்லை. உண்மையாவே அவள் கிடைக்க அவர் ரொம்பக் குடுத்து வைச்சிருக்கணும்னு தோணிச்சு. அவ அவ்ளோ பாசமா, பொறுப்பா அவரைப் பாத்துப்பானு எனக்குத் தெரியும். அப்பிடிப்பட்ட மனைவி கிடைக்கிறது பெரிய வரம் தானே...அது தான் அவளை நான் கடைசியாப் பாத்தது. அதுக்கப்புறம் பாக்கவே இல்லை.
அவளோட கல்யாணம் நடக்கிற அதே நாள் தான் என்னோட காலேஜ் பரிசளிப்பு விழா. என்னைத்தான் ஒழுங்குபடுத்தலுக்கு விட்டிருந்தாங்க. அதனால என்னால அவ கல்யாணத்துக்குப் போக முடியல. அப்போ எங்க கிட்ட ஃபோன் னு ஒண்ணுமில்லை. எங்களுக்கு யாரையும் பாக்கணும்னா நேர்ல போய்ப் பாத்துத் தான் பழக்கம். ஆனா அவளோட நம்பர் என்கிட்ட இருந்திச்சு. கல்யாணத்துக்குப் போகாம வெறும் ஃபோன் பண்ணி மட்டும் கதைக்க இஷ்டம் இல்ல; அப்பிடியே விரும்பினாலும் எங்க யார்டயும் தான் ஃபோன் இல்லையே.... பிறகு பிறகு தான் எங்காளுங்க ஃபோன் யூஸ் பண்ணிப் பழகினாங்க.. முதல் இருக்கல. அவங்கட சைட்ல யார் கூடவும் பழக்கமில்லாததால அவளைப் பற்றி யார்கிட்டவும் கேக்க முடியல. அதுக்கப்புறம் நான் அவளை எங்கையுமே பாக்கல. அப்புறம் எனக்குக் கல்யாணமாகி இங்க வந்திட்டன். அப்போ தான் ஃபோன் யூஸ் பண்ணப் பழகின. ஃபோன் கைல வந்ததும் நான் பண்ணின முதல் அழைப்பு அவளுக்குத் தான். ஆனா நம்பர் உபயோகத்தில் இல்லைனு வந்திச்சே தவிர அவள் கதைக்கல. முதல்ல இனியன் பிறந்து அப்புறம் ஆதிராவும் பிறந்திட்டதால எனக்கு அவங்களைக் கவனிக்கிறதுக்கே நேரம்
சரியா இருந்திச்சு. ஆதிரா பிறந்தப்போ ஏதும் தோணல.. ஆனா வளர வளர.... அப்பிடியே என் பூர்வியை உரிச்சு வச்சிருக்காளேனு தோணிச்சு. முதலே இதை சொல்லாம ஒரு நாள் என் பூர்வி கிட்டவே கூட்டிப் போய் எல்லாரையும் சேப்பிரைஸ் (surprise) பண்ண நினைச்சன். இனி எங்க? எனக்கு என் பூர்வி வேணும். இப்பவே வேணும்' என்று குழந்தை மாதிரி அழ ஆரம்பித்தார் கலைவாணி.

எல்லோர் மனதிலும் வேதனை தாண்டவமாட முடிந்தளவு ஒருவரை ஒருவர் சமாதானம் செய்தனர்.
எல்லாவற்றையும் கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்த குழந்தை தான் மௌனத்தைக் கலைத்தது. 'அம்மா, அப்பாக்குக் குடுத்த செய்ன் தான் இது. அவர் இறந்ததும் எனக்குப் போட்டு விட்டாங்க. அப்பா ஞாபகமா எப்பவுமே என் கழுத்தில இருக்கணும் எண்டாங்க' என்று தன் கழுத்திலிருந்த செய்னைத் தூக்கிக் காட்டியது. மற்றவர்கள் அப்போதுதான் அதைக் கவனிக்க, இனியனுக்கும் அப்போதுதான் எல்லாம் தெளிவாக விளங்கியது.

அந்த உருவப்படம் ஆதிராவுடையதல்ல; அது பூர்வீகாவுடையது. ஆதிராவின் முன் ஜென்மம் தான் பூர்வீகா. அதனால் தான் ஆதிரா, பூர்வீகா போன்றிருப்பதும், குழந்தை அவளை வார்த்தைக்கு வார்த்தை அம்மா என்பதும். எல்லோரும் அதை விளங்கிக் கொள்ள நிறைய நேரம் எடுக்கவில்லை.

வந்திருந்த புதிய சாமியார் தான் குழந்தையைப் பாத்து, 'சரி பாப்பா. எல்லாருக்குமே நீ தெரியணும்னு நினைச்சதெல்லாம் தெளிவாப் புரிஞ்சிடிச்சு. உன்னோட அம்மா அவங்ககிட்ட ரொம்ப சந்தோசமா இருப்பாங்க. இனி உன்னோட ஆத்மா சாந்தியடையணும். அதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் நாங்க பண்றோம்.

குழந்தை அர்த்தமாகச் சிரித்தது. 'நான் போய்ட்டா அம்மாவோட கல்யாணத்தை யார் நடத்துவா? கல்யாணம் நடக்கணும். இப்பவே இங்கயே. அம்மனோட சந்நிதிலயே.'

'பாப்பா! நீ நினைக்கிற மாதிரிக் கல்யாணம்லாம் சாதாரண விஷயமில்லை. நீ நினைச்சதும் நடக்கிறதுக்கு. அதுக்கு நாள் நட்சத்திரம் பாக்கணும். தாலி கோர்க்கணும். எவ்வளவோ சடங்கு சம்பிரதாயம்லாம் இருக்கு. நினைச்சதும் நடத்த முடியாது' என்றான் அகரன்.

'தாலிலாம் இருக்கு. எங்கம்மாவோடது. அதோ' என்று சொல்லிக் குழந்தை கை நீட்டிய திசையில் பார்த்த எல்லோரும் அதிர்ந்தனர். அம்மனின் காலில், அவர்கள் போட்ட அர்ச்சனைப் பூக்கள் சோடித்திருக்க சன்னமாக மின்னியது தாலி!

'ஆனா இப்போ என்ன அவசரம் பாப்பா? ஆதிரா அகரனுக்குத் தான் சொந்தம்னு எப்பவோ முடிவு பண்ணியாச்சு; அப்புறம் எது... ' என்று சாமியார் ஏதோ சொல்ல வர குரலை உயர்த்தி அவரை இடைறித்த குழந்தை....
'எங்கம்மா எங்கப்பாவுக்கு மட்டும் தான் சொந்தம். நீங்க யாரு அவங்க இன்னொருத்தருக்கு சொந்தம்னு சொல்ல?' குரலில் கடுமை எதிரொலித்தது.

'உங்கப்பா உங்கப்பா என்டுறியே யாரு தான் உங்கப்பா? எங்களை நிம்மதியாவே இருக்க விட மாட்டியா?' இம்முறை கோபப்படுவது ஆதிராவின் முறையாயிற்று. எங்கே அகரனைக் கைப்பிடிக்க முடியாது போய்விடுமோ என்ற கவலை அவளுக்கு.

'எங்கப்பாவும் இங்க தான் இருக்கார். அவருக்கும் உங்களுக்கும் தான் இப்போ கல்யாணம் நடக்கப்போகுது.' என்ற குழந்தை தன் கையைத் தூக்கி வெண்டைப்பிஞ்சு விரலால் அவனைச்சுட்டியது.
அதன் விரல் வழியே நோக்கிய அனைவரும் அதிசயிக்க அதுவரை சுவாரஸ்யமாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த அவனும் அதிர்ந்தான். அவ்விரலின் முனையில் இருந்தவன் மித்ரன்!
 
Top