• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 20)

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
நாட்கள் நகர்ந்து நகர்ந்து, இதோவென்று அவர்களது "குடிபூரல்" தினமும் வந்துவிட்டது. சொன்னது போன்றே இனியனும், வாணியும் இரு தினங்கள் முன்பே வந்து எல்லா வேலைகளையும் முடித்திருந்தனர். ஆராவும், பூரணி வீட்டிலிருந்தே தன்னாலான உதவிகளைச் செய்தாள். பூரணியும் சந்திரனும் கூட சில நாட்கள் முன்பே வந்து அவர்களுக்கு உதவி செய்ததால் அவர்களது வேலை இன்னும் இலகுவாயிற்று. எது எவ்வாறாயினும் அவர்கள் ஒருவரும் ஆராவை மட்டும் புது வீட்டின் பக்கம் விடவேயில்லை. ஒரு வேளை இதுவும் அந்தக் குட்டிப் பொண்ணோட வேலை தானோ என நினைக்க எல்லோர் மீதும் கோபம் கூட வந்தது அவளுக்கு. 'சரி என்னதான் நடக்குதுனு பாப்பமே' என்று அமைதியாக இருந்தாள்.
அன்று திங்கள் கிழமை. அவர்கள் புதுமனை செல்லும் தினம். மங்களகரமான பச்சை நிறத்தில், கோல்ட் போடர் போட்ட புடவை உடுத்தி, அதற்கு ஏற்றாற் போல பொட்டொன்று வைத்து, நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து, தலைக்குப் பூ மாலை சூடி, "மின்னும் பொற்சிலையோ இவள்" என அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் வந்து நின்ற ஆராவைப் பார்த்துக் கிறங்கித்தான் போனான் மித்ரன். எல்லாப் பெண்களும் புடைவையில் அழகுதான். அதிலும் தன்னவள் பேரழகு என மனதினுள் நினைத்துக் கொண்டான். அவன் அவளை ரசிக்க.... அவனறியாமலே அவனை ரசித்துக் கொண்டிருந்தாள் ஆரா. ஆண்மைக்கே உரித்தான கம்பீரமான தோற்றம், நிமிர்ந்த நடை, நேர்த்தியாக வேட்டி கட்டி, மேலுக்குப் பச்சை நிற ஷேட் போட்டிருந்தான். ஷேட்டின் கைகளிரண்டும் அழகாக முழங்கை வரை மடித்து விட்டிருந்தான். 'ஆணழகன் தான்' என ரசித்துக் கொண்டிருந்தவள் அருகில் குரல் கேட்டுத் திரும்ப கேலிப் புன்னகையுடன் நின்றிருந்தார் பூரணி.

தன்னைப் பார்த்து அசடு வழிந்த ஆராவைப் பார்த்து, 'நாங்கள் இல்லாத நாள்ல இங்க ரொம்பவே நடந்திருக்குப் போல? நாங்க நிக்கிறப்பவே இப்பிடிப் பாத்துக்கிறீங்களே, இல்லனாக் கேக்கவா வேணும்?' இவ்வாறு வெளியில் கேட்டாலும் உள்ளுக்குள் இருவரும் இணைந்து சந்தோசமாக இருக்க வேண்டுமே என்ற கவலை அவருக்கு. ஆயிரம் தானிருந்தாலும் பெண்ணைப் பெற்றவரல்லவா?

'அப்பிடிலாம் ஒண்ணுமில்லப் பூரணிமா. நான் தான் அவரைப் பாத்தேன். அவர் என்னைப் பாக்கல. இன்னைக் கொஞ்சம் பாக்கிறதுக்கு நல்லாருக்கார்ல?'

'என் புள்ளனா அப்பிடித்தான் இருப்பான். அப்புறம் உன் புருஷன் உன்னைப் பாக்கலயா? நல்ல நடிகன்டி அவன். இப்போ கிட்டப்போய்க் கேட்டா உன்னோட மேக்கப் எல்லாமே அத்துப்படியா சொல்லுவான்.'

'சரிம்மா. லேட் ஆகுது. புறப்படுவமா?'

'சமாளிக்காத. புறப்படு.'

அந்நேரம் பார்த்து வாசலில் கார் வரும் சத்தம் கேட்டு வாசலில் சென்று பார்த்தவளுக்கு மகிழ்ச்சி உச்சத்தைத் தொட்டது. 'அபிம்மாாாா' கூவியபடி சென்று கட்டிக்கொண்டவள் அபியின் முகத்தைக் கைகளில் ஏந்தி இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்த மழை பொழிந்தாள். அவள் 'அபி' என்று கத்திய சத்தத்தைக் கேட்ட மித்ரனும் ஆவலாக தங்கையைக் காண ஓடிவந்தவன், அவர்களது முத்தக் காட்சியைக் கண்டு வயிறெரிந்தான். 'அங்கலாம் நல்லாத்தான் பண்றா. முதல்தான் அவ லவ் பண்ணலனு என்னைத் தள்ளி வச்சா. இப்பதான் ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்கிட்டு லவ் பண்ண ஆரம்பிச்சிட்டம்ல. அகரனுக்காக இப்போதைக்குக் குழந்தை வேணாம்னு விலகி இருக்கத் தோணுற மனசுக்கு.... எதுக்காகவும் உன் அருகாமையை விட்டு விலகி இருக்கத் தோணலடி. உனக்கெல்லாம் என்னை மாதிரிப் புண்ணிய ஆத்மா புருஷனா வந்தது தான் புரொப்லம்டி. அடுத்த பிறப்பில நானே உனக்கு எப்பிடிப்பட்ட ரோச்சர் புருஷனா வாறன்னு மட்டும் பார்;' மனதினுள் கறுவிக் கொண்டான்.

அதையெல்லாம் ஆரா கண்டுகொண்டால் தானே? அபி மேலான அவளது பாசம் இப்போது கோபமாக மாறியிருந்தது. 'எவ்ளோ நாளாச்சுடி நான் இங்க வந்து? இருக்கனா செத்தனானு ஒரு தடவையாவது எட்டிப் பாத்தியா? ஃபோன் மட்டும், அதுவும் நான் எடுத்தாத்தான் பேசுவாங்க பெரிய மகாராணி.' செல்லமாய்க் கோவித்துக் கொண்டவளை வெகு சிரமப்பட்டுத் தேற்றிய அபி, ஆராவின் காதில் மெல்லக் கிசுகிசுத்தாள்;
'ஏன்டி, உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? உனக்காக ஏங்கிட்டிருக்கிற உம் புருஷன விட்டுட்டு என்னை வந்து கொஞ்சிட்டிருக்க? அங்க பாரு அதோட வயிறு கருகி வாடை வருது. உன் ஆளு ரொம்பப் பெரிய மனுஷன்டி; வீட்ட வந்து கண்டிப்பா இந்த சாரி தான் கட்டணும், இந்த வேட்டி சட்டை தான் போடணும்னு எங்க ஒவ்வொருத்தருக்கும் வாங்கிக் குடுக்கிறானே அவ்வளவு பாசக்காரப் பயலானு நினைச்சேன். அவன் காரியமாத்தான் எல்லாம் பண்ணி இருக்கான்.'
ஆரா புரியாமல் விழிக்க, அபியே தொடர்ந்தாள். ' ஒருக்காப் பாரு. என்னோட அம்மா, உன்னோட அம்மா, நான், பூரணிமானு எல்லாரும் பிங்க் கலர் சாறி தான் கட்டியிருக்கோம்; ஆம்பிளைங்க பிங்க் கலர் ஷேட், வைய்ட்ல வேட்டி. உன்னையும் உம் புருஷனையும் பார், கிரீன் கலர்ல. அத்தனை பேர்க்கும் நடுவில நீங்க மட்டும் தனியாத் தெரியணும்னு பிளான் பண்ணிப் பண்ணி இருக்கான். அவனுக்கு இருக்கு இன்னைக்கு' அவள் சொல்லச் சொல்லத்தான் அவளும் அதைக் கவனித்தாள். 'அடப் பாவிப் பயலே, நல்ல தெளிவாத்தான் இருக்க நீ' மனதினுள் நினைத்துக் கொண்டாள் ஆரா.

நடந்தது எதுவும் தெரியாமல் பாவைப் பிள்ளை போல் முகத்தை வைத்தபடியே சென்று அபியையும் தாய்தந்தையரையும் வரவேற்றான் மித்ரன். எல்லோரும் சிரித்தபடி உள்ளேவர, அபி மட்டும் முறைத்தபடியே சொன்னாள்; 'நாங்க வந்து அரைமணி நேரமாச்சு சகோ'

'அது நீங்க ஃபிரண்ட்ஸ். உங்களுக்குள்ள ஆயிரம் விஷயம் இருக்கும். அதான் டிஸ்டர்ப் பண்ண வேணாமேனு கொஞ்சம் லேட்டா வெல்கம் பண்ண வந்தேன். '

'காணும் நடிக்காத, வழிய விடு' என்று அவனைத்தாண்டி.உள்ளே சென்றாள் அபி.
பின்னர் எல்லோரும் சேர்ந்து புது வீட்டுக்கு நடையைக் கட்ட, மித்ரன் அருகே வந்து தொண்டையைச் செருமிய ஆரா, 'எங்க சாரோட ஃபிளைட், கார் ஒண்ணையும் காணோம்' என்று நக்கலடிக்க, பதிலுக்கு 'நடக்கிறது உடம்புக்கு நல்லம்' என்று சடைந்து விட்டு நழுவிக் கொண்டான் மித்ரன்.

புது வீடு.
எத்தனை அமானுஷ்யம் நிறைந்திருந்தாலும், அது எதையும் வெளிக்காட்டாது சாந்தமாக நின்றிருந்தது. மேல்மாடி ஜன்னல்கள் அழகான திரைச்சீலை போட்டு மூடப்பட்டிருந்தது; அலங்காரப் பூஞ்செடிகள் அழகாகவும், நேர்த்தியாகவும் வெட்டப்பட்டிருந்தன; சாடிகளில் உயர்தர ஜப்பான் ரோஸ் தாவரங்கள் வைக்கப்பட்டு அழகாகத் தொங்க விடப்பட்டிருந்தன. தான் வராத இந்தச் சொற்ப நாட்களில் இவ்வளவு மாற்றமா என மனதினுள் வியந்து கொண்டாள் ஆரா. ஆனாலும் முற்றத்து மாமரம் மட்டும் மாறாமலிருந்தது. அம்மரத்தை விட்டுப் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

வீட்டிற்கு, முதலில் அருகிலுள்ள ஆலயக் குருக்கள் ஒருவரை அழைத்து சடங்குகள் செய்வித்தனர். ஏகப்பட்ட துயரங்களையும், அமானுஷ்யங்களையும் தாங்கி நின்ற வீடல்லவா?... பூஜை முடித்த குருக்கள் சொன்னார். 'இப்போ என்னால முடிஞ்ச எல்லாம் ஓரளவுக்குச் செய்திருக்கேன். இன்னும் நீங்க செய்ய வேண்டிய விஷயங்கள் கொஞ்சம் இருக்கு. அது மற்றவங்க சொல்லுற விஷயம்ல. நேரம் வரும் போது தன்னால புரியும் அல்லது புரிய வைக்கப்படும். கடவுள் ஆசி எப்பவும் உங்களுக்கு இருக்கும்' என்று வாழ்த்தி விடை பெற்றுச் சென்றார். அவர் கூறியதன் அர்த்தம் அவர்களுக்கு விளங்காவிடினும் பிரச்சினை ஏதுமில்லை என்பதே திருப்தியாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட சாமிப் படங்கள் சாமியறையில் நேர்த்தியாக வைக்கப்பட்டு பூக்களால் ஆராதிக்கப்பட்டன. சாமியறையில் ஏற்றப்பட்ட தீபத்தின் ஔி சுடர் விட்டதில் அங்கிருந்த அனைத்து உள்ளங்களிலும் சாந்தி பரவியது. பின்னர் அங்கிருந்த அனைவருக்கும் வீட்டைச் சற்றிக் காட்டினான் மித்ரன். அவனும் ஆதிராவும் முன்னே நடக்க மற்றோர் தொடர்ந்தனர்.
பின் ஒவ்வொரு அறையாகக் காட்டி இது சமையலறை, விசிட்டர்ஸ் ஹாேல் என அவன் விளக்கம் சொல்லியபடி வர, அபி தொண்டையைச் செருமினாள். அவளைப் பார்த்த மித்ரன் கண்ணாலேயே என்னவென வினவ, 'இல்லடாண்ணா. உன்னைப் பாத்தாத் தற்காலிகமாத் தங்குற பிளானாத் தெரியல, சரி அது தான் ஓகே. ஆனா உன்னோட வீடு இருக்கிற பிளானப் பாத்தா, எனக்கென்னமோ அவசரமா வந்து ஒரு கட்டாயத்துக் கட்டின வீடு மாதிரி இல்ல. நல்லா சொகுசா வாழப் பிளான் பண்ணி பாத்துப் பாத்துக் கட்டின வீடு மாதிரி இருக்கு. என்னோட அல்ட்ரா பர்சனாலிட்டி மைண்ட் (Ultra personality mind) என்ன சொல்லுதுனா..... இந்தக் கல்யாணம் ஒரு வேள உன்னோட பிளானோனு சொல்லுது.'
அவள் சாதாரணமாக விளையாட்டாத்தான் சொன்னாள். ஆனால் மித்ரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இதை ஆரா எப்படி எடுத்துக் கொள்வாளோ என பதற்றத்துடன் திரும்பிப் பார்க்க, நல்லவேளை அவள் அங்கு இல்லை. அப்போதுதான் அவனுக்கு உறைத்தது, ஆம் ஆரா அங்கு இல்லை. அவனுக்கும் சர்வமும் ஒடுங்கியதைப் போல் இருந்தது. குழந்தை அன்று சொன்னது மீண்டும் காதில் ஒலித்தது. 'அப்பா! அம்மாவைக் கவனமாப் பாத்துக்கோங்க. அம்மா தெரியாமப் பண்ண தப்பு ஒண்ணால பாதிக்கப்பட்ட ஆத்மா ஒண்ணு அவங்களத் தொடர்ந்துக்கிட்டே இருக்கு. நீங்களும் அம்மாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டதால அதால இப்போ ஒண்ணும் பண்ண முடியல. ஆனாலும் அது தன்னோட சக்தியைப் பெருப்பிக்க முயற்சி பண்ணிட்டிருக்கு. ஆனா அதுக்குக் கொஞ்சக் காலம் ஆகும். அதுக்குள்ள நாம ஒருத்தரைப் பாத்தாகணும். அவரைப் பற்றி நான் அப்புறமா சொல்றன். அது வரைக்கும் அம்மா பத்திரமா இருக்கணும். அம்மா கூட நானிருக்கிற வரை அல்லது நீங்க இருக்கிறவரை ஒண்ணுமாகாது. அப்பிடி ஒருவேளை நாம ரெண்டு பேருமில்லனா, அவங்க இருக்கிற இடம் கண்டிப்பா கடவுளோட நாமம் ஒலிக்கிற இடமா இருக்கணும்.'
எகிறிக் குதிக்கும் இதயம் நெஞ்சைக் கிழித்து வெளியே வந்து விடுவதைப் போலிருக்க, கத்தக் கூடத் தென்பின்றி ஒரு பைத்தியம் போல் வெளியே ஓடியவனைக் கண்டு செய்வதறியாது நின்றனர் ஏனையோர். அவனுக்கு நிச்சயமாகத் தெரியும், குழந்தை ஆராவுடன் இல்லை. ஏனெனில் அதற்கு தேடியறிய வேண்டிய முக்கிய விடயமொன்றிருந்தது. 'அப்பா! நாளைக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நீங்கதான் அம்மாவைப் பாத்துக்கணும்.' முந்தைய தினம் அது சொல்லும்போது சிரிப்பாக இருந்தது. எள்ளுருண்டை சைஸ்ல இருந்திட்டு அவ பாத்துக்கிறாவாம், என நினைத்த போதே அவனுக்கு குழந்தையின் பாசமும், அவளுக்காகச் செய்த அனைத்தும் நினைவு வர, 'சரிடா கண்ணா, அம்மா என் பொறுப்பு' என்று கூறிக் கட்டைவிரலை உயர்த்திக் காட்டி குழந்தையைத் தூக்கி அன்பாக முத்தமிட்டான். ஆனால் இன்று??

மித்ரன் பதறியபடி ஓடிச்செல்ல அங்கே ஆராவோ நடப்பது எதுவும் அறியாது, அன்று காலை பூத்திருந்த ரோஜாப் பூக்களை அழகு பார்த்தபடி நின்றிருந்தாள். அவளைக் கண்ட பிறகே, அவளுக்கு ஏதும் ஆகவில்லை என உயிராக மூச்சு விட்ட மித்ரன்.... ஏதோ உணர்வு வந்து திரும்பிப் பார்க்க,
மாமரத்திலிருந்தபடி அவனை முறைத்தது சின்ன வாண்டு. அதன் முறைப்பில் 'உங்களால ஒரு வேலையைக் கூட ஒழுங்காச் செய்ய முடியாதா?' என்ற கேள்வி எத்தொனிக்கக் கண்ணாலயே மகளிடம் மன்னிப்பு வேண்டிக் கொண்டான் மித்ரன்.
 
Top