• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 21)

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
'ஆரா! இங்க என்ன பண்ணிட்டிருக்க? உன்னை அங்க காணம்னு எல்லாரும் தேடிட்டிருக்கோம்.'-மித்ரன்

'நாங்க யாரும் தேடல; எல்லாரும் நிதானமாத்தான் இருக்கோம். உன் புருஷன் தான் ஏதோ உயிரைப் பிடிச்சுக்கிட்டு ஓடிவந்து, எங்க வயித்துல புளியைக் கரைச்சிட்டான்.'-அபி

'ஆமா, நான் ஏன் ஓடி வந்தன்னு தெரிஞ்சிருந்தா நீங்களுமே அப்பிடித்தான் இருந்திருப்பீங்க. நல்ல வேள தெரியல. பரவால்ல; நீங்களாவது சந்தோசமா இருங்க.' மனதினுள் நினைத்துக் கொண்டான் மித்ரன்.

சலனமே காட்டாமல் திரும்பிய ஆரா, 'ஏன் மித்து, நான் என்ன சின்னக் குழந்தையா காணாமப் பாேறதுக்கு? எதுக்கு நீயும் டென்ஷனாகி மற்றவங்களையும் கஷ்டப்படுத்துற?' என்று கேட்கச் சற்றுக் காேபம் வந்தது மித்ரனுக்கு. பின்னே அவன் படும்பாடு அவனுக்குத் தானே தெரியும். ஆனாலும் அவளைக் காயப்படுத்தக் கூடாதென நினைத்தவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.

'இல்ல ஆரா, அவங்களுக்கு வீட்டைக் காட்டும் போது நீயும் கூட இருந்தாத் தானே நல்லாருக்கும்? வா; வந்து மாடி ரூம்ஸ் எல்லாம் நீ தான் காட்டப்போற.'

'அதுக்கென்ன?' என்று புள்ளிமானாய்த் துள்ளி ஓடியவளைப் பார்க்க சந்தோசமாக இருந்தது அவனுக்கு. 'நீ என்னோட மனைவி. எனக்கு மட்டுமே சொந்தமானவள். உன்னோட உடல் உயிர் எல்லாமே எனக்கு மட்டும் தான் சொந்தம். நம்ம அம்மனும், நானும், நம்ம குழந்தையும் உன்கூட இருக்கிறவரை யாராலயும் உன்னை ஒண்ணும் பண்ண முடியாது. அதுக்கு நாங்க விடவும் மாட்டோம்' மனதினுள் உறுதி பூண்டு கொண்டான் மித்ரன்.

ஆரா முன்னே செல்ல மற்றோர் பின் தொடர்ந்தனர். மாடியில் ஏறியவள், அங்கே இருந்த கதவைக் காட்டி.... 'இது நம்ம புத்திசாலி ஐயாவோட பிளான். மாடில ஏறினதுமே ஹோல் வந்தா நல்லா இருக்காதாம். அதனால மாடில ஃபர்ஸ்ட் ஒரு டோர். அந்த டோரைத் திறந்தா ஹோல்.' சொன்னபடியே கதவைத் திறந்தவள் அதிசயித்தாள். ஹோல் முழுதும் பல வண்ணப் பூக்களால் சோடிக்கப்பட்டிருக்க, அலங்கார விளக்குகள் ஹோலை முழுமையாக ஔி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்க, மாடி ஜன்னல்களை அழகான திரைச்சீலைகள் ஆக்கிரமித்திருக்க, வண்ண வண்ண பலூன்கள் அவற்றில் மூன்று மூன்றாக ஒட்டப்பட்டிருந்தன. அவர்கள் நின்றதற்கு எதிர்ப்புற சுவரில்..... ஹாட் ஷேப்பினுள், பச்சையும், வெள்ளையும், கோல்டும் மிக்ஸ் பண்ணி.... " இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆரா" என எழுதப்பட்டிருக்க, அதே நிறக்கலவையுடன் கூடிய அழகான கேக்கும் வைக்கப்பட்டிருந்தது. அவள் கால்கள் தன்னிச்சையாக அவ்விடத்தை நோக்கி நகர்ந்தன. ஆனால் இன்று அவள் பிறந்தநாள் இல்லையே? பின்னர் ஏனிந்த அலங்காரமும் அடுக்கணியமும்? எண்ணியபடியே நின்றவளைக் குலைத்தது; பின்னிருந்து வந்த "ஹாப்பி வேர்த் டே டூ யூ" எனும் கோரசான குரல்கள். அங்கே.... அவளுக்கு மிகவும் பிடித்த டெடி பியர்களைக் கையிலேந்தியபடி, அவளுக்கு வாழ்த்துப்பாடலைப் பாடியபடியே வந்தனர் அனைவரும். அனைவரும் பிங்க் நிற டெடி பியர்களைக் கையிலேந்தி இருக்க, மித்ரன் மட்டும் பச்சை நிறக் கரடி பொம்மையைக் கையிலேந்தி நடுநாயமாக வந்து கொண்டிருந்தான். பார்த்தவுடனே புரிந்துபோயிற்று அவளுக்கு இதெல்லாம் அவன் பிளான் தானென்று. 'ஓ இதையெல்லாம் மறைச்சுக் கொண்டுவந்து சேர்க்கத்தான்... ஐயா அப்பப்பாே கார்ல வந்து போனாரா?' நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டாள் ஆரா.
வாழ்த்துப்பாடல் பாடி முடிந்ததும் அனைவரும் மாடியில் இருந்த மற்ற இரு அறைகளில் புகுந்து கொண்டனர்; மித்ரனைத் தவிர. அவர்களின் செய்கையை விநோதமாக ஆரா பார்த்துக் கொண்டிருக்கும்போதே அனைவரும் ஒன்றாக வெளியில் வந்தனர். முதலில் ஆராவிடம் வந்த அன்னை கலைவாணி, 'என்னடா கண்ணா, இன்னைக்கு என் வேர்த் டே இல்லையே இவங்க என்ன பண்ணிட்டிருக்காங்கனு யோசிக்கிறியா?'

'ஆமாம்மா. ஆனாக் காரணமில்லாம நீங்க எதுவும் பண்ண மாட்டீங்கனு தெரியும். இதுக்கு என்ன றீசன்னு புரியல.'

'ஆமாடா. இன்னைக்கு உன்னோட பிறந்தநாள் தான், நம்ம தமிழ்முறைப்படி. நம்மளோட உண்மையான பிறந்ததினம், நாங்க எந்த நட்சத்திரத்தில பிறக்கிறமோ அந்த நட்சத்திரத்திலதான் வரும். ஆங்கிலேயரோட ஆட்சிக்குப் பிறகு நம்மளோட பழக்கவழக்கங்கள்ல நிறைய மாற்றம் வந்திடிச்சு. அதில ஒண்ணுதான் பிறந்த திகதில நம்ம பிறந்தநாளைக் கொண்டாடுறது. இன்னைக்கு உன்னோட நட்சத்திரத்துக்கான நாள். அதாவது தமிழ் முறைப்படி உன்னோட பிறந்தநாள். இப்பிடில்லாம் நட்சத்திரம் பார்த்து உன்னோட பிறந்தநாள், இதெல்லாம் நான் கண்டுபிடிக்கலம்மா, உன்னோட புருஷன் உனக்காகக் கண்டுபிடிச்சது. இங்க எல்லாப் பிளானுமே தம்பியோடதுதான். பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டிம்மா', கூறியபடியே நெற்றியில் முத்தமிட்டவர், தான் கையில் வைத்திருந்த கரடி பொம்மையையும், அதற்கேற்றாற் போல பிங்க் நிற சேலையொன்றையும் பரிசாக வழங்கினார்.

'ரொம்ப நன்றிம்மா. ஆரா இன்னைக்கு உண்மையிலேயே அவ்ளோ சந்தோசமா இருக்கேன். உங்க எல்லார்கூடவும் இருக்கும்போது.... என்னை மாதிரிச் சந்தோசமான வாழ்க்கை எல்லாருக்குமே கிடைச்சா ரொம்ப நல்லா இருக்கும்னு தோணுது.' கூறும்போது கண்கலங்கியவளைக் கட்டியணைத்த கலைவாணி, என்னோட ஆராக்குட்டி இனி அழவே கூடாது. எப்பவும் சந்தோசமா இருக்கணும்.

'இல்லம்மா, இந்த அழுகைகூட சந்தோசத்தில வாறதுதான். நீங்கலாம் கூட இருக்கும் போது எனக்கென்ன கவலை?' இம்முறை அழகாகச் சிரித்தாள்.

மித்ரனின் எண்ணம் முழுவதும் அவளது வார்த்தைகளிலேயே லயித்திருந்தது. ' 'என்னை மாதிரிச் சந்தோசமான வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்கணும்' என்று சொன்னாளே... அந்தச் "சந்தோசமான வாழ்க்கை" என்பதற்கு என்ன அர்த்தம்? அவள் என்னை ஏற்றுக் கொண்டாளா? என்கூட இருக்கும் போது சந்தோசமாக இருக்கிறாளா?
இல்லை மித்ரா, கனவு காணாதே. இப்போ கொஞ்ச நாளாவே அவ உன்னை லவ் பண்றானு நினைச்சிட்டிருக்க நீ. ஆனா உண்மை என்னனு தெரியுமா? அவ உன்னை ஒரு ஃபிரண்ட்டா மட்டும் தான் பாக்குறா. அப்புறம் லவ் கிவ்னு போய் நின்னா செருப்படிதான் வாங்குவ. ஏதோ இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சிரிச்சுப்பழகவே ஆரம்பிச்சிருக்கா. அதுக்குள்ள எல்லாத்தையும் ஊத்தி மூடிடாத. அவளே ஏதோ பெரிய மனசு பண்ணி லவ்லாம் வரும்போது பாத்துக்கலாம்னு சொல்லி இருக்கா. அவளுக்கு டைம் கொடு; தன்னால எல்லாம் ஓகே ஆகும். வீணாக் கனவு கண்டு, அப்புறம் கஷ்டப்படாத.' இவ்வாறு அவனின் மனம் இரண்டு பக்கமாகப் போராடிக் கொண்டிருந்தது. சிரமப்பட்டு மனதை அடக்கிக் கொண்டவன் நிஜவுலகுக்கு வந்தான்.

இப்போது பூரணிமா ஆராவினிடத்தில் நின்றிருந்தார். மித்ரன் கனவிலிருக்கும்போதே அவர்தன் வாழ்த்தைத் தெரிவித்திருக்க வேண்டும். அவர் தன்னுடைய பரிசாக அந்தப் பிங்க் நிற டெடி பியரையும் பிங்க் நிற மெல்லிய செய்னையும் கொடுத்தார். இதெல்லாம் மித்ரனின் பிளான்தான். அவர்கள் எல்லாம் ஒரே மாதிரி ஒன்றாகச் செய்ய வேண்டும். அதில் அவர்களது ஒற்றுமை வெளிப்பட வேண்டும். அவன் வேறுவிதமாகச் செய்யும் விதத்தில் அவனது தனித்துவம், அவள் தனக்கேயானவள் என வெளிப்பட வேண்டும். அதற்காக நீ மற்றவர்களுடன் ஒற்றுமையாக இல்லாததாக ஆகிவிடாதா? என்று அவனிடம் கேணைத்தனமாகக் கேட்கக் கூடாது. அவர்கள் ஒன்றாகச் செய்தால் அது ஒற்றுமை, இவன் தனியாகச் செய்தால் அது தனித்துவம். இது அவன் நியாயம். சரி அதை அவனிடமே விட்டுவிடுவோம்.

அடுத்த கனவிலிருந்து மீளும்போது ஆராவிடம் நின்றிருந்தவள் அபி. அவள் கொடுத்தது தன்னிடமிருந்த டெடி பியரும், பிங்க் நிற வளையல்களும். அதன் பின் அபியின் அம்மாவும் அப்பாவும்; தமது வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்கி... தங்களிடமிருந்த டெடி பியர்களையும், கோல்ட்டில் பிங்க் கலந்த நிறத்தில் ஒரு நெற்றிச்சுட்டியும், அழகான பிங்க் நிறக் கம்மல்களும் பரிசளித்தனர்.

அடுத்தது சந்திரன். "ஹாப்பி வேர்த் டே ஸ்வீட்டி."

'தாங்க்ஸ் பா'

'வாங்கிக்கோம்மா. என்னோட சின்ன கிப்ட்'- அவரது பரிசுப் பொருள் தன்னிடமிருந்த டெடி பியரும் பிங்க் நிற சல்வாரும்'. நன்றி கூறிப் பெற்றுக் கொண்டாள் ஆரா.

அடுத்து இனியன். 'ஹாப்பி வேர்த்டே தங்கம்' அண்ணனோட சின்னக் கொம்பிளிமெண்ட் (compliment).' அவனது பரிசாகக் கிடைத்த டெடி பியரையும் பிங்க்கும் வைய்ட்டும் கலந்ததான ஒரு அழகான வாழ்த்து மடலையும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள் ஆரா.

இப்போது மித்ரனின் முறையாயிற்று. தன்னருகே ஆணழகனாக வந்து நின்றவனை இமைக்க மறந்து பார்த்தாள் ஆரா. அவளுள்ளே ஏராளமான எண்ண அலைகள் வந்துபோயின. 'உண்மையாவே என்னோட மொத்த சந்தோசத்துக்கும் நீ தான் காரணம் மித்து. எனக்காக இவ்ளோ மெனக்கட்டியா? இவ்வளவு பேரையும் எனக்காக ஒண்ணா சேர்த்தியா? அப்பிடியே உன்னைக் கட்டிப் பிடிச்சு நீ விரும்புற மாதிரி என்னோட லவ்வ சொல்லணும்னு தோணுது. ஆனாக் கூச்சம் விட மாட்டேங்குது. சாரிடா' மனதினுள் வெதும்பிக் கொண்டிருந்தவளை நிஜவுலகுக்கு வரவழைத்தது அபியின் செருமல். இவ ஒருத்தி ரெண்ணையும் ஒழுங்கா லவ் பண்ண விட மாட்டா.

'ஹாப்பி வேர்த்டே கண்ணம்மா' மென்மையாகக் கூறியவன், தன் வசமிருந்த கிறீன் கலர் டெடியைக் கொடுக்க.... 'எங்கடா? நீ கிறீன் கலர்ல ஏதும் கிப்ட் தருவனு நினைச்சன்' என்றாள் ஆரா, அவன் மேல் எடுத்துக் கொண்ட அதீத உரிமையோடு. 'இருக்கே' என்ற மித்ரன், 'என்னோட கிப்டைக் கொண்டுவந்து குடுக்க முடியாது. நீயா வந்து தான் பாத்துக்க முடியும்.'
'அப்படியா?' என்று விழிவிரித்த ஆராவை, அங்கிருந்த அறை ஒன்றினுள் அழைத்துச் சென்றான். அறைக்குள் நுழைந்த ஆராவின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. சுற்றிலும் பச்சைப் பசேலென மரங்கள் சூழ்ந்திருக்க நடுவில் நீர்வீழ்ச்சியொன்று அழகாக விழுந்து கொண்டிருந்தது. சுவரில் 3D இல் வரையப்பட்டிருந்த அவ் வரைபடத்தைப் பார்த்த யாருமே பிரமித்துப் போவர். அவ்வளவு இயற்கையாக இருந்தது. 'வாவ் மித்து; செம்மயா இருக்குடா. நீயே வரைஞ்சியா? சூப்பேவ்டா (superb). அமேஸிங் (amazing).

'இல்ல ஆரா, இத நான் வரையல. இப்பிடி அழகா வரையக் கூடிய என் ஃபிரண்ட் ஒருத்தன் இருக்கான். எங்க ஃஆபீஸ்ல. அவனைக்கூட்டி வந்துதான் வரைவிச்சேன். உனக்கு ட்ரோயிங்ஸ் (drawings) ரொம்பப் பிடிக்கும்னு தெரியும். அதனால தான் பண்ணேன். இது நம்மளோட ரூம். உனக்கு இன்னொரு கிப்ட்டும் இருக்கு' என்றுரைத்தவன், அதைக் கொடுக்க ஆரா சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனாள். அவள் வரைந்து பழகுவதற்கெனவும் தனது திறமையை வளர்த்துக் கொள்ளவுமென வகைதொகையான ட்ரோயிங் ஷீட்ஸும் (drawing sheets), வோட்டர் கலர்ஸும் ( water colours) வாங்கித் தந்திருந்தான் மித்ரன். அவளுக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. இவ்வளவு காதலா தன்மேல் என்றெண்ணிக் கண்கலங்கியவள்.... அவனிடம் தனக்கு கூற வேண்டி இருக்கும் அனைத்தையும் கூறும்போது மட்டுமே தன் கண்கள் கலங்க வேண்டுமென சங்கல்பம் கொண்டு, அவனறியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அந்நேரம் அறையின் வெளிப்புறமிருந்து பூரணியின் குரல் கேட்க இருவரும் வெளியில் சென்றனர். வெளியே ஆதிரா நிற்க வேண்டிய இடத்தைச் சுற்றி, இவர்கள் அனைவரும் பரிசளித்த பொம்மைகள் அரைவட்ட வடிவில் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. அப்போதுதான் அதைக் கவனித்தாள் ஆரா. ஒவ்வொரு பொம்மையும் ஒவ்வொரு ஆங்கில எழுத்தைத் தமது இதயப் பகுதியில் தாங்கி நிற்க, அங்கு அடுக்கியிருந்த விதத்தில்.... "I L❤️VE YOU" எனும் வார்த்தை உருவாகி இருக்க... மித்ரன் கொடுத்த டெடி ❤️ ஐத் தாங்கி நின்றிருந்தது. அதுவரை கொண்டிருந்த உறுதி கண்கள் வழியே கண்ணீராய்க் கரைய செய்வதறியாது நின்றிருந்தாள் ஆரா. நல்லவேளை அவள் முன்னால் நின்றிருந்ததால் அவள் கண்ணீரை யாரும் கவனிக்கவில்லை. அவளிடம் காதலை சொல்லிவிட்ட திருப்தியில் அவள் பதிலை எதிர்பார்த்து நின்றிருந்த மித்ரனுக்கு ஏதோ அன்று பெரும் ஏமாற்றமாகவே போயிற்று.
'ஆராமா உன்னோட பிளேஸ்ல போய் நில்லு. தமிழ் முறைப்படி கொண்டாடுறதால பர்ஸ்ட் பொங்கல் தான் சாப்பாடாம். உன் புருஷன் ஸ்ரிக்ட்டா சொல்லியிருக்கார். பர்ஸ்ட் அவருக்கே ஊட்டிவிடு' வாணி சொல்ல, ஆராவும் சிரித்தபடியே சென்று தயாராக நின்று கொண்டாள். அவளருகே சென்ற மித்ரன் அவள் ஊட்டிவிட்ட பொங்கலைத் தேவாமிர்தம் போல் வாங்கிக் கொண்டான். அத்தோடு நில்லாமல் அவளுக்கு வைர மூக்குத்தியொன்றும் பரிசளித்தான். 'உனக்கு மூக்குத்தி குத்த ரொம்பப் பிடிக்குமாமே. அபி சொன்னா. இன்னைக்கு ஈவ்னிங் நகைக்கடைக்குப் போய்க் குத்திட்டு வருவம்.'

'ரொம்பத் தாங்க்ஸ் மித்து. ரொம்ப நல்லாருக்கு உன்னோட செலக்ஷன்'

'பிடிச்சிருக்கா?'

'ரொம்ம்ம்ம்ம்மம்ப'

மீண்டும் மித்துவுக்கு பொங்கல் ஊட்ட, அதனை அபி தனது ஃபோனில் அழகாகப் படம் பிடித்துக் கொண்டாள். அப்படியே மாறிமாறி எல்லோருக்கும் ஊட்டிவிட்டாள். " பொங்கல் பிறந்த நாள் " என்று அபி கேலி செய்ய.... அவர்களுடன் செல்லச் சண்டை போட்டபடியே நேரம் இனிமையாகக் கழிந்து கொண்டிருந்தது. அடுத்து ஆராவைக் கேக் வெட்டச் சொல்லி "ஹாப்பி வேர்த் டே" சோங் பாடினார்கள். அந்த நாள் ஆரா-மித்ரனுக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே மறக்க முடியாத பொன்னாளாகிப் போனது. பலவிதப்பட்ட விருந்துணவுகளுடனும், வேடிக்கைகளுடனும் அனைவரது பொழுதும் சந்தோசமாகக் கழிந்தது. இதற்கிடையில் நகைக்கடைக்குச் சென்று மறவாமல் தான் கொடுத்த மூக்குத்தியையும் குத்தி விடத் தவறவில்லை மித்ரன். ஏற்கனவே பேரழகி. மூக்குத்தி வேறு குத்தியிருக்கத் தேவதைகளும் தோற்றுவிடுவர் தன்னவளிடத்தில் எனக் கர்வப்பட்டுக் கொண்டான் மித்ரன். கிட்டத்தட்ட மாலையாகிக் கொண்டிருந்தது. அன்று மாலை, அனைவரும் பூரணி-சந்திரனின் ஃபேவரிட் ஃபொரெஸ்ட் ( favourite forest) சென்றனர். எல்லாேருக்கும் அந்த இடம் மிகவும் பிடித்துப்போக அங்கேயும், அம்மன் சந்நிதியிலும் சில மணி நேரங்கள் சந்தோசமாகக் கழிந்தன. எல்லோரையும் விட அதிக சந்தோசத்திலிருந்தவள் ஆரா தான். அவளது பிறந்தநாள் விழா எப்போதுமே தடல்புடலாகத்தான் நடக்கும். இனியன், வாணி, அபி.... இவர்கள் அதி முக்கியமானவர்கள். அத்துடன் அவளுக்கு மிகவும் பிடித்த நண்பர்கள் சிலரும் இணைந்திருப்பர். போன வருடம் மட்டும் அந்த அதிமுக்கியமானவர்களில் அகரனும் இணைந்திருந்தான். இம்முறை அவளுடைய வழமையான பிறந்ததினம் என்றால் அதற்கு இன்னும் நாட்கள் இருந்தன. இன்று எதிர்பாராமல் ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ( surprise). மித்ரன் எவ்வளவு தூரம் யோசித்திருக்கிறான் அவளை சந்தோசமாக வைத்திருக்க! ஆராவுக்கு நினைக்க நினைக்கவே அவனை அள்ளி அரவணைத்துக் கொள்ள வேண்டும் பாேலிருந்தது. அம்மன் சந்நிதியிலிருந்து.... தங்களுக்காகவும், அகரனுக்காகவும், ஊர் உலகத்திலுள்ள அத்தனை ஜீவராசிகளுக்காகவும் மனமுருகி வேண்டிக் கொண்டாள். அகரன் விஷயத்தில் அவளுக்கு தெளிவைக் கொண்டுவர அன்னை முடிவெடுத்திருந்தது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. சில மணி நேரங்கள் கழிந்ததும் எல்லோரும் வீடு திரும்பினர். எல்லோர் மனமும் அன்றலர்ந்த தாமரையாய் மலர்ந்திருந்தது. குடும்பமாக, நண்பர்களாக, உறவினர்களாகக் கூடி இருக்கும்போது வரும் சந்தோசமே தனிதான். எல்லாேரும் சேர்ந்திருக்கும் இந்நாளை மனதார சந்தோசமாக அனுபவித்தனர். அன்றிரவு அனைவரும் புது வீட்டில் தங்கி, அடுத்தநாள் காலை கிளம்புவதாக ஏற்பாடு. அம்மன் சந்நிதியிலிருந்து வரும்போதே சற்று இருளத் தொடங்கியிருந்தது. எனவே இரவு உணவை வேகவேகமாகத் தயார் செய்தனர். எல்லோரும் இணைந்து செய்ததால் அதற்கும் அவ்வளவு நேரம் எடுக்கவில்லை. அனைவரும் சேர்ந்து இரவுணவு அருந்திவிட்டு, சிறிதுநேரம் வழக்கமான உரையாடல்களைத் தொடர்ந்துவிட்டு உறங்கச் கென்றுவிட்டனர். புதுவீட்டு அலுவல்களில் இரவுபகலாக ஈடுபட்டிருந்தமையால் அவர்களுக்கு உடல் சோர்வாக இருந்தது. அனைவரும் களைப்பு மிகுதியால் அவரவர் அறையில் உறங்கிப் போயிருக்க.... இரு ஜோடிக் கண்கள் மட்டும் தூங்காமல் விழித்திருந்தன.

ஆரா படுத்திருந்தபடியே தங்களது அறையைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டிருந்தாள். அறையினுள் அந்த அழகான நீர்வீழ்ச்சி ஓடிக்கொண்டிருக்க, சுற்றிலும் மரங்கள் அடர்த்தியாகப் பச்சைப் பசேலென்றிருந்தது. எவ்வளவு அருமையான படைப்பு! தனக்காகவே நேரம் செலவழித்து, ஒருவரைக் கூட்டிவந்து பார்த்துப் பார்த்துப் படைப்பித்திருக்கிறான். எவ்வளவு யோசித்திருக்கிறான்? டெடீஸ், பிங்க் கலர், கிரீன் கலர், அறைக்குள் இப்படி ஒரு ட்ரோயிங்.... அவனது கிப்ட், மற்றவர்களது கிப்ட், கேக், பொங்கல்... நினைக்கக் கொஞ்சம் சிரிப்பு வந்தாலும் தனக்காக எனும்போது அவன் அன்பில் கண்கள் கலங்கியது. சுற்றிச் சுற்றி நோட்டம் விட்டுக் கொண்டிருந்த கண்கள் இறுதியாக மித்ரனைச் சரணடைந்தன.
'தூங்கிட்டியா கண்ணா? சாரிடா. என்னோட காதலை சொல்லாம உன்னை ரொம்பவே ஏங்க விட்றன். எனக்கு உன்னை ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு மித்து. நான் எவ்ளோ சந்தோசமா இருக்கன் தெரியுமா? உன்னால தான். நீ எனக்காக இவ்வளவு டைம் ஸ்பென்ட் ( time spend) பண்ணுவியா? உனக்கு என்னை அவ்ளோ பிடிக்குமாடா? இதுவரைக்கும் உனக்கு நான் எதுவுமே செய்ததில்லையே. ஒருவேள உன்னோட வாழ்க்கைல நான் வராம இருந்திருந்தா நீ சந்தோசமா இருந்திருப்பியா? என்னால அப்பிடி நினைச்சுக் கூடப் பாக்க முடில மித்து. என்னால முடிஞ்ச அளவுக்கு நான் உன்னை சந்தோசமாப் பாத்துப்பன் கண்ணா. அகரன் சொல்லியிருக்கார். உனக்குக் கிரியேடிவிட்டி (creativity) ரொம்ப அதிகமாம். உண்மை தான்டா. நான் இன்னைக்குக் கண்கூடாப் பாத்துட்டேன். எனக்கு உன்னளவுக்கு கிரியேட்டிவ் மைண்ட் இல்லடா; உன்னை விதம் விதமா இம்ரெஸ் பண்ணி சந்தோசப்படுத்துறதுக்கு. ஆனாலும் என்னோட பாசத்த முழுமையா உனக்குக் குடுத்து சந்தோசப்படுத்துவன். ஆனா ஒரே ஒரு ப்ரொப்ளம்டா. அந்தக் குழந்தை நம்ம பொண்ணுனு சொன்னல. அத ஏத்துக்க கொஞ்சக் காலமாகும். ஏன்னா நீ கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்ற நினைப்பு எனக்குள்ள வந்திட்டாலும், அகரனுக்கு நல்ல வாழ்க்கை அமையலையே எண்ட வேதனையும் இருக்கு. அவனுக்கு ஒரு சந்தோசமான வாழ்க்கை கிடைச்சா நிச்சயமா அந்தக் குட்டிப்பொண்ண நம்ம பொண்ணுனு ஏத்துப்பன். இப்போ அவள் மேல எனக்குக் கோபம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. அவளைப் பிசாசுனு சொல்லிட்டமேனு மனசு லேசா வலிக்குது. ஆனா எல்லாம் மாறும். ஐ லவ் யூடா. லவ் யூ சோாா மச். அவனது நித்திரை குலையாமல்... அவனின் நெற்றிமீது மென்மையாகத் தன் இதழ்களை ஒற்றி எடுத்தவள், தூங்கும்போதுதான் உனக்கு இதெல்லாம் தர முடியும். இப்போலாம் எனக்கு உன்னைப் பாத்தாலே வெக்க வெக்கமா வருது. அப்புறம் எங்க இதெல்லாம் சொல்லுறது? செய்றது?' பெருமூச்செறிந்தவள், அவனருகே தூங்க ஆரம்பித்தாள்.


எல்லோரும் நன்கு உறக்கத்தில் ஆழ்ந்திருக்க ஏதோ உணர்வில் திடுக்கிட்டு எழுந்தான் மித்ரன். அவனருகே நின்று தன் மெல்லிய பட்டு விரல்களால் அவன் கைகளைச் சுரண்டிக் கொண்டிருந்தது குழந்தை.
' பாப்பா! நீயா? இந்நேரம் என்ன பண்ணிட்டிருக்க? தூங்கல. சொன்னன்ல.. மாடில அடுத்த ரூம் உனக்குத்தான். மாமரத்திலலாம் கஷ்டப்பட்டுத் தூங்க வேணாம். பூரணிமா வீட்டுக்குக் கூப்பிடவும் நீ வரல. இங்க உனக்கு ரூம் தந்திருக்கு. படுத்துத்தூங்கு போ. பயம்னா அப்பாவக் கூப்பிடு. அப்பா வர்றேன், என் செல்லத்தத் தூங்க வைக்க'
சொன்ன தகப்பனைக் காரசாரமாக முறைத்த ரிஷ்வி.... 'நான் என்னை எல்லாம் நல்லாப் பாத்துக்கிறேன். நீங்க உங்க பொண்டாட்டியக் கொஞ்சம் பத்திரமாப் பாத்துக்கோங்க. எவ்வளவு சொல்லியும் கேக்காம... அம்மா வெளில போறது கூடத் தெரியாம நின்னீங்க. நினைக்க நினைக்க கோபமா வருது எனக்கு. இப்போ நல்ல குறட்டை விட்டு நித்திரை வேற; அம்மா தலைகோதிக் கிஸ் பண்ணது கூடத் தெரியாம.'
குழந்தை சொன்னது சிறிது நேரம் கழித்தே உறைக்க... அரக்கப்பரக்கக் கேட்டான்... ' என்ன என்ன சொன்ன இப்போ? என்னோட ஆரா என்னைக் கிஸ் பண்ணாளா? எப்போ எங்க எப்பிடி?'

'ஸ்ஸப்பா. கண்ட படம்லாம் பாக்காதீங்கனா கேக்குறீங்களா? சீரியஸாக் கதைக்கிற கூடக் காமெடியா வருது. அவ்வளவு ஆசாபாசம் இருக்கிறவர் கட்டின பொண்டாட்டியப் பத்திரமாப் பாத்துக்கணும். மற்ற நாளெல்லாம் நீங்க இருந்தாலும் இல்லனாலும், என்னோட அம்மாவால என்னை உணர முடியலனாலும் கூட அவங்ககூட நான் தானே இருக்கன். அன்னைக்குக் கூட நீங்க அம்மாவக் கோயில்ல போய்ப் பாத்தீங்களே. அவ்ளோ நேரம் அவங்ககூட இருந்திட்டு.... அவங்க கோயில்ல தூங்கினதுக்கப்புறம்தான் முக்கியமான வேலை ஒண்ணுக்காகப் போனேன். அப்பவும் முடிஞ்சளவு வேளைக்கு வேலையை முடிச்சிட்டு உங்ககிட்ட வந்து சொன்னன், அம்மா கோயில்ல இருக்காங்க கூட்டிட்டு வாங்கனு. அப்புறம் இன்னைக்கு, நீங்க இருக்கிற தைரியத்தில விட்டுட்டுப் போனேன். சரி நடந்தது முடிஞ்சு போச்சு. இன்னொருதடவ இப்பிடியாகாமப் பாத்துக்கோங்க. எதிரி எவ்வளவு பலசாலியோ தெரியாது. அம்மனோட கருணை இருக்கிறதால சமாளிச்சிட்டு வர்றேன். அப்புறம் முக்கியமான விஷயம்னு சொன்னன்ல. நம்மளோட கஷ்டம்லாம் தீரப் போகுது. நான் ஒரு முக்கியமான ஆளப் பாக்கணும்னு சொன்னன்ல? அவர் இன்னும் பத்து நாள்ல நம்ம ஊர்ல இருப்பார். அம்மாவக் கூட்டிட்டு ரெடியா இருங்க. அவர் என்ன சொன்னாலும், எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அம்மாவுக்கு நீங்க இருக்கீங்க எண்ட தைரியத்தைத் தரவேண்டியது உங்க பொறுப்பு. என்ற குழந்தை இன்னும் சில விடயங்கள் அது தொடர்பாகக் கூறியது.
அப்புறம் அம்மா உங்களைக் கிஸ் பண்ணாங்க தூங்குறதுக்கு முதல். உங்களை ஏதோ அளவுக்கு மிஞ்சின காதலோட பாத்துக்கிட்டே இருந்தாங்க. நான் பாத்தன். ஏதோ ஒரு ஏக்கம், சந்தோசம், வலி எல்லாமே வந்துபோச்சு அவங்க முகத்தில. அவங்க உங்கள நிறைய லவ் பண்றாங்கனு நினைக்கிறன். நானும் தான்பா. அழகாகச் சிரித்த குழந்தை, ஆசையாக அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு தன்னறையை நோக்கிச் செல்ல... மித்ரனுக்கோ இருப்புக் கொள்ளவில்லை. அவனோட ஆரா அவனை முத்தமிட்டாளா? ச்சை, அதைக்கூட உணராம மரக்கட்டை மாதிரித் தூங்கிருக்கியேடா மித்ரா.
தான் செய்தது எதுவும் அவனுக்குத் தெரியாது என்று நினைத்து சலனமில்லாமல் ஆதிரா தூங்க... தூங்க மறுத்த விழிகளைக் கொண்டு அவனது சொத்தை அளவில்லாக் காதலோடு பார்த்திருந்தான் மித்ரன்.
 
Top