• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 26)

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
ஆரவ்விற்கு நிச்சயம் செய்த பெண் காவ்யாவென அறிந்ததும், அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றாள் ஆரபி. குரல் தந்தியடிக்க.... 'இஇல்ல... காவ்யா அவங்க அத்தைப் பையனைத்தான் விரும்புறா. அவர்கூடத்தான் அவளுக்கு நிச்சயமாகி இருக்கு. அவரோட பேர் ஆரணன்.'

'அப்போ நான் யாரு?' விரக்தியாகக் கேட்டான் ஆரவ்.

'ஆரவ்'

' ஆரணன் ரவிகுமார், என்னோட பேரு. ஃபிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து அப்பாவோட நேமையும் என்னாட நேமையும் இணைச்சு உருவாக்கின பேர் தான் ஆரவ். (Ahranan Ravikumar- AhRav) நீ என் ஃபிரண்ட் கூப்பிட்டதப் பாத்தே ஆரவ் தான் என் பேர்னு நினைச்சிட்ட போல.'

அழுகையே பதிலாக வந்தது ஆராவிடம். 'சாரி ஆரவ். சத்தியமாவே எனக்கு இப்பிடிலாம் ஆகும்னு தெரியாது. காவ்யாக்கு உங்களை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனா ஒருநாள்கூட என்கிட்ட உங்களைக் காட்டினதில்ல. சஸ்பென்ஸ்னு சொல்லிட்டிருந்தா. அதனாலதான் இவ்வளவுைபெரிய குழப்பமாகிப் போச்சு. நாங்க ஒரு தடவ காவ்யாவைப் பாத்திட்டு வருவமா? தன்னோட காதலும் கிடைக்காம, வெஸ்ட் ஃபிரண்ட்டும் கூட இல்லாம ரொம்பக் கஷ்டப்பட்டிட்டிருப்பா.'

'கண்டிப்பாப் போலாம் ஆரா. கொஞ்சக்காலம் கழிச்சுப் போவம். இப்போ உடனே போனா அவ புரிஞ்சுக்கிற மனநிலைல இருக்க மாட்டா. பாவம். ஏற்கனவே அவளை நிறையக் கஷ்டப்படுத்தியிருக்கன். அவ கூட சரியாப் பேசுறதில்லை; அவகிட்ட ஒண்ணும் ஷெயா பண்றதில்லை; வேலை வேலைனு அதிலயே இருந்திட்டன். நீ அவளோட வெஸ்ட் ஃபிரண்ட்னு எனக்குத் தெரியும், நாங்க மியூசிக் கொம்பெற்றிசன்ல மீற் பண்றதுககு முன்னமே. ஆனா உன்னை அங்க மீற் பண்ணதை இண்டைக்கு வரை அவகிட்ட சொல்லல. அவளைப் பொறுத்தவரை, எனக்கு உன்னையும், உனக்கு என்னையும் முன்ன பின்னத் தெரியாது. இப்போ அவ நம்ம ரெண்டு பேருக்காகவுமே கவலைப்பட்டிட்டு இருப்பா. கொஞ்சக்காலம் போனதும் அவளுக்கு ஓரளவு தெளிவு வந்திருக்கும். அப்போ அவகிட்டப்போய் தாராளமாப் பேசிட்டு வருவம்.'

'சரிங்க'

ஆராவுக்கு மனது உறத்தலாகவே இருந்தது. 'காவ்யா புரிஞ்சுப்பாளா? இல்லனா, நான் வேணும்னே செய்தன்னு கோபப்படுவாளா?' என்றெல்லாம் யோசித்துக் குழம்பியவள், 'இது இப்பிடித்தான் நடக்கணும்னு இருந்திருக்குப் போல. அன்னைக்கு நான் ஃபோன் பண்ணப்போ ரேஷ்மா எடுத்திருக்கலாம் இல்லனா ரேஷ்மா கூட ப்ரியா சேராம இருந்திருக்கலாம். அப்பிடிலாம் நடக்காம இந்தக் கல்யாணம்தான் நடந்திருக்குனா அதோட அர்த்தம் என்ன? இதுதான் விதி போலும்!' என்றெண்ணித் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கெண்டாள். இன்னும் அவளுக்குத் தெரியாது, அவளின் திட்டப்படி ரேஷ்மா அந்தக் கதவைப் பூட்டவில்லை என்று. 'காவ்யா எப்படி இருக்கிறாளோ? அழுதிருப்பாளா? பின்னே, உயிருக்குயிராய்க் காதலித்த ஒருத்தன் விட்டுப்போனால் சிரித்துக் கொண்டா இருப்பார்கள்?' அவள் மனம் காவ்யாவைக் காண ஏங்கியது.

ஒரு மாதிரி அந்தப் புதன்கிழமையும் வந்து சேர்ந்தது. ஆராவும் ஆரவும் சேர்ந்து காவ்யா வீட்டை நோக்கிப் பயணமாகினர். ஆராவுக்கு ஒரு வித பயம், பதற்றம், ஏக்கம் என எல்லா உணர்வும் சேர்ந்து வயிற்றில் புதிதாக ஒரு உணர்வைத் தோற்றுவித்தது. ஆரவ்விடம், ம்கூம் மருந்துக்குக் கூட ஒரு மாற்றுதலையும் காணவில்லை. ஆனால் அவன் மனதில், அவனது காதலியைப் பிரிந்த சோகம் எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்ததை அவன் மட்டுமே அறிவான்.

காவ்யா வீடு.
முற்றிலும் நிசப்தமாக இருந்தது. வழமையாக இருப்பது இருவரெனினும், காவ்யாவினதும் தாயினதும் குரல் கேட்ட வண்ணமே இருக்கும். ஆனால் இன்று காக்கா குருவியின் சத்தத்தைக் கூடக் காணோம். கேற்றில் பெரிய பூட்டுத் தொங்கியது.

'என்ன ஆரவ். காவ்யா வீட்ட இப்பிடிலாம் பூட்டிட்டுப் போக மாட்டாங்களே. அம்மாகிட்ட நானே அடிக்கடி சொல்லுவன், ஏம்மா பொம்பிளைப் பிள்ளையை வச்சிருக்கீங்க, வீட்ட இப்பிடியா திறந்துபோட்டு வைப்பீங்கனு? அவங்க அதையெல்லாம் ஒரு விசயமாவே எடுத்துக்க மாட்டாங்க. இப்போ இப்பிடி இருக்கிறதப் பாத்தா.... ஒரு வேள...ஒரு வேள இடத்தைக் காலி பண்ணீட்டுப் போயிருப்பாங்களோ?'

இவர்கள் இருவரும் ஏதோ யோசித்துக்கொண்டிருப்பதை எதேச்சையாகக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர் இவர்களிடம் வந்து, 'நீங்க ஆரபி தானே?'

அவரைக் கண்டு முகமலர்ந்த ஆரபி, 'ஆமாண்ணா. என்ன ரெண்டு மாசத்துக்குள்ள மறந்திட்டீங்களா?'

'ச்ச ச்ச அப்பிடியில்லம்மா. கழுத்தில தாலி, நெத்தில குங்குமப் பொட்டு. ஆளே வித்தியாசமா இருக்க. அதான். ஏன்மா எங்களையெல்லாம் கல்யாணத்துக்குக் கூப்பிடவேயில்லை?'

'இல்ல அங்கிள், எங்களுக்கே இது திடீர் முடிவுதான். சாரி. உங்களைக் கூப்பிட முடியல.'

'பரவால்லம்மா. நீங்க சந்தோசமா இருந்தாலே சரி. இந்தாம்மா வீட்டு சாவி. காவ்யாவோட அம்மா இப்போ வாற நேரம்தான். நீங்க உள்ளபோய் இருங்க, அவங்க இப்ப வந்திடுவாங்க.' என்று கூறிச் சாவியையும் அவள் கையில் திணித்தார்.

இருவரும் அவருக்கு "நன்றி" கூறிவிட்டு வீட்டினுள் சென்று அமர்ந்தனர். சிறிது நேரத்தில் வெளியே பேச்சுக்குரல்கள் கேட்டன. கொஞ்சம் கோபமாகப் பேசுவது போன்ற ஒரு குரலும், அதற்கு மன்னிப்பு வேண்டும் தோரணையில் மற்றைய குரலும். ஆனால் என்ன பேசிக் கொள்கிறார்களெனப் புரியவில்லை. இருவரும் காவ்யாவை எப்போது பார்ப்போமென்ற ஆவலில் இருந்தனர். சற்று நேரத்திலேயே உள்ளே வந்தார் காவ்யாவின் அம்மா. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

'நீங்க ரெண்டு பேரும் எப்பிடி உள்ள வந்தீங்க? திறந்துவிட்ட தோட்டத்தில அவிட்டுவிட்ட ஆடு மாடு மாதிரி.' அவரது இந்தக்கோபம் இருவருமே எதிர்பார்க்கவில்லை என்பது இருவர் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது.

'அத்தை! நீங்களா இப்பிடிப் பேசுறீங்க? ச்ச. எங்க ரெண்டுபேருக்குமே இது எதிர்பாக்காத கல்யாணம். உங்ககிட்டப் பேசிப் புரியவைக்கலாம்னு வந்தோம். நீங்களே புரிஞ்சுக்காட்டிக் காவ்யா எப்பிடிப் புரிஞ்சுப்பா? அவ எங்க போய்ருக்கானு சொல்லுங்க? நாங்க அவள்டப் போய்ப் பேசிக்கிறோம். உங்ககிட்டப் பேச வேண்டிய அவசியம் இல்லாமப் பண்ணிட்டீங்க.'

'ஓஓஓ இது உங்க ரெண்டு பேருக்கும் எதிர்பாக்காத கல்யாணமா? எதிர்பாராம நடந்திச்சா? இல்லனா பிளான் பண்ணி நடந்திச்சானு உன் பொண்டாட்டிகிட்டக் கேளு.'
ஆரவ் பரியாமல் ஆரபியைப் பார்க்க, அவள் கூனிக்குறுகிப்போய் நின்றாள். குரலிலும் அழுகை வருவது தெரிய நடுக்கத்தினூடே, 'அம்மா' என்றாள்.

'ச்சீ ச்சீ... அம்மாவா? நானாஉன்னைப் பெத்தன்? உன்னையும் என் பொண்ணு மாதிரித்தானடி பாத்தன். ஏண்டி இப்பிடிப்பண்ண? அப்பவும் சொன்னாளே, இப்பிடிலாம் யோசிக்காதடி, நேர்ல போய்த் தைரியமா சொல்லுனு. நீ கேட்டியா? உனக்கு அம்மா அப்பா யாருமில்ல எண்ட கவலை வரக்கூடாதுனு உன்னைத்தன்னோட பொண்ணு மாதிரிப் பாத்துப்பாடி என் பொண்ணு. அவளுக்குப் போய்த் துரோகம் பண்ண எப்பிடிடி உனக்கு மனசு வந்திச்சு?' குரல் கம்மி... அழ ஆரம்பித்தார். 'அம்மா சத்தியமா காவ்யா, ஆரவ்வத் தான் லவ் பண்றானு எனக்குத் தெரியாதுமா. அவளை விட முக்கியமா எனக்கு இந்த உலகத்தில யாருமே இல்ல. ஏன் ஆரவ் கூட எனக்கு அவளுக்கப்புறம்தான். நான் காவ்யாகூடப் பேசணும்மா. யார் புரிஞ்சுக்கலனா என்ன, என்னை அவ புரிஞ்சுப்பா.'

'நீ சொல்லுவடி. எம்பொண்ணு எவ்ளோ கஷ்டப்பட்டானு எனக்குத்தானே தெரியும். காதலிக்கிற ஒருத்தன் கிடைக்காமப் போற வேதனை என்னனு தெரியுமா உனக்கு? எம்பொண்ணப் பாத்திருந்தாத் தெரிஞ்சிருக்கும்; உயிரை விட முக்கியமா நேசிக்கிற ஒரு நட்பு பிரிஞ்சுபோனா எவ்வளவு வலிக்கும்னு தெரியுமா உனக்கு? எம்பொண்ணு கூட அவளோட அம்மாவா இருந்திருந்தாத் தெரிஞ்சிருக்கும்.'

'அம்மா எனக்குப் புரியுது அவளோட வலி. ஆனா சத்தியமா அன்னைக்கு நான் சொன்ன ஐடியாப்படி எதுவும் நடந்திடக் கூடாதுனுதான் அவகிட்டப் பொய் சொல்லிட்டு, அதைத் தடுத்து நிறுத்தப் போனன். ஆனா அதுக்குள்ள எல்லாம் நடந்து முடிஞ்சிடிச்சு.'

'இந்தக் கதையை என் பொண்ணுகிட்ட சொல்லு. அவ ஒருவேளை நம்பலாம். பைத்தியக்காரி தானே.'

'அம்மா அவளைப் பெத்தது நீங்களா இருக்கலாம். ஆனா எல்லாரையும் விட... முக்கியமா என் உயிரளவுக்கு நேசிக்கிறவ நான். அவளைப் பைத்தியம்னு சொல்லாதீங்க. நீங்க அவ எங்கனு சொல்லுங்க. நான் அவகிட்டப் போய்ப் பேசிக்கிறன்.'
அவள் எதிர்பாரா நொடியில் அவளின் கையைப் பிடித்து அவளை இழுத்துச் சென்றவர், காவ்யாவின் அறையில் தள்ளினார். ' போ செத்துப் போ. செத்துப் போய் அவகிட்டப்பேசு.' ஆரபி அதிர்ந்துபோய் நிமிர அறையில் மாலையிடப்பட்ட ஃபிரேமினிடையே அழகாய்ச்சிரித்தாள் காவ்யா'

'காவ்யாஆஆஆஆஆஆ' ஆரபி அலறிய அலறல் எட்டுத்திக்கும் ஒலித்தது.
'அம்மா என்னாச்சும்மா என்னோட காவ்யாவுக்கு? அச்சோ கடவுளே என்னை இப்பிடி ஒரு பாவியா எதுக்குப் படைச்ச? காவ்யா; உன்னோட இடத்தில நான் இருக்கேன் கண்ணம்மா. நீ வந்து என்னோட வாழ்க்கையை வாழு பிளீஸ். இல்லையில்லை. நீ இந்த வலி அனுபவிக்கக் கூடாது. உன்னால தாங்கவே ஏலாது. அம்மு எனக்கு நீ வேணும்டி. என்ன வேணாலும் செய்றன். காவ்யா பிளீஸ் என்கிட்ட வந்திடேன். அடிக்கடி சொல்லுவியே "எனக்கு நீ; உனக்கு நான்"னு. அந்த வாழ்க்கையே நமக்குப் போதும் கண்ணம்மா. என்கிட்ட வந்திடுடி பிளீஸ்.'
அவள் கதறியழ, அவளைச் சமாதானப்படுத்தும் நிலையில் யாருமே இல்லை அங்கு. காவ்யாவின் தாய்க்கு காவ்யா இறந்ததற்கு ஆரபி தான் காரணமென்ற கோபம். ஆரவ்விற்கு, தங்களுடைய கல்யாணம் நாடகம் என அவனது அத்தை கூறியதிலிருந்து ஒரே குழப்பம். அத்துடன் காவ்யா இனி இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத நிலைமை.'

'வெளிய வாடி. என் பொண்ணோட அறையைக் களங்கப்படுத்தாத. அவளைக் கொன்னதே நீ தானே. ஆனாலும் அவள் எனக்குக் குடுத்த பெரிய சாபம் என்ன தெரியுமா? அவ இறந்தாலும் நான் வாழணும்னு சத்தியம் வாங்கிட்டுச் செத்துப்போனது. இல்லனா இந்த நரகத்தை விட்டு எம்பொண்ணுகூடவே நானும் போய்டுவன். ஆனாலும் அவ பைத்தியம்தான்டி. உங்களுக்கெல்லாம் இன்னொருத்தங்களக் காதலிக்கத் தெரிஞ்ச அளவுக்கு உங்க குடும்பத்தைக் காதலிக்கத் தெரியலையே. எம்பொண்ணு சுயநலவாதியா இல்லாம இருந்திருந்தா..... 'என்னோட அம்மாக்கு நான் மடடும்தானே இருக்கன். நான் இல்லனா வருத்தப்படுறதுக்கு ஒரு உயிர் இருக்கே. அதைக் கலங்கடிக்கக் கூடாதேனு தோணியிருக்கும். தோணலையே. இங்க செத்துப் போறவங்க யாரும் பாவமுமில்லை; எதுக்கும் முடிவு சாவும் இல்லை. ஒருத்தங்க இழப்பைத் தாங்கிட்டு வாழுறமே நாங்கதான் பாவம். வாழ்க்கையைத் தைரியமா எதிர்கொள்ளத் துணிச்சலிருக்கணும். எம் பொண்ணை நான் சரியா வளர்க்கலனு இப்போதான் புரியுது. அவ இவ்வளவு பெரிய சுயநலவாதினு நினைக்கல. இப்போ சொல்றன்டி. நான் அனுபவிக்கிற இந்த வேதனை நீயும் அனுபவிப்ப. நீ காதலிக்கிறவனைக் கை சேர முடியாமத் தவிப்ப. அதையும் மீறிக் கல்யாணம் பண்ணினா உங்க குடும்பத்தில யாரும் நல்லாருக்க மாட்டாங்க. உயிரோட மதிப்பு என்ன? உயிரிழப்போட வலி என்ன? எல்லாமே நீ அனுபவிப்ப.'

'அம்மா பிளீஸ். வார்த்தையை விட்டுடாதீங்கம்மா. உங்களவுக்கு ஏன் உங்கள விட நான் காவ்யாவை நேசிக்கிறன். அவ இல்லைங்கிறதையே தாங்க முடியல. இன்னும் ஏன் என்னை வார்த்தையாலயே வதைக்கிறீங்க?' அழுதவளை வேறு ஏதும் கூறாது ஆரவ் இழுத்துச் சென்று காரிலேற்றினான். விர்ரெனப் பறந்த கார் ஊரின் ஒதுக்குப் புறமாக நின்றது.

'சொல்லு ஆரபி. என்ன நடக்குது இங்க. என்னாேட காவ்யா இப்போ இல்லை. இதுக்குக் காரணம் நீனு அத்தை சொல்றாங்க. எனக்கு இப்பவே உண்மை தெரியணும்.' குரல் கம்மியது.

மனது நிறைந்த வலியுடன், ஆரவ்வுடன் திருமணம் நடந்த அன்று நிகழ்ந்தவற்றையும், ஆரவ்வைத் தான் விரும்பியதையும் கூறினாள் ஆரபி. ஆரவ் எதுவுமே சொல்லவில்லை. அடுத்த அரைமணித்தியாலத்தில் கார் அவர்கள் வீட்டில் நின்றிருந்தது. ஆரபியை இறககியவன் திரும்பி எங்கோ சென்றான். இரவு பதினொருமணி இருக்கும். வீட்டு வாசலில் ஹோர்ன் சத்தம் கேட்டு அரக்கப் பரக்க எழுந்தவள், ஆரவ் தானென ஓடிச் சென்று வாசலைப்பார்த்தாள். வாசலில் நின்றிருந்த அந்தக் காக்கிச் சட்டைக்காரர் சலனமின்றிச் சொன்னார், 'அம்மா! உங்க ஹஸ்பண்டோட கார் அக்சிடெணட் ஆகிட்டு. ஆள் உயிரோட இல்லை. உங்க ஹஸ்பண்ட்னு எல்லா ஆதாரமும் இருக்கு. அக்சிடெண்ட் கேஸ் எண்டதால போலீஸ் ஸ்டேஷன் வரை வரணும். அப்பிடியே ஃபோர்மாலிட்டிக்கு உங்க ஹஸ்பண்ட் தான்கிறதை உறுதிப்படுத்தணும். புறப்படுங்க. ஆராவின் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. காவ்யாவிற்காக அழுதழுதே தீர்ந்திருந்தது போலும். எங்கோ வெறித்தபடி நிலையில்லாமல் வந்தவளைப் பார்த்தக் காக்கிச்சட்டைக்காரருக்கும் சற்று வலிக்கத்தான் செய்தது. அவருக்கு இவை புதிதில்லை எனினும் அவரும் மனிதர்தானே? இயற்கைக்குப் புறம்பானவர் இல்லையே.

ஜி.ஹெச் அந்த இரவிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ஆராவைக் கூட்டிக் கொண்டு மார்ச்சுவரிக்குள் நுழைந்தார் போலீஸ்காரர். மார்ச்சுவரிக்குப் பொறுப்பானவரிடம், 'வாங்க முத்து. அந்த அக்சிடெண்ட் கேஸைக் காட்டுங்க.' போலீஸ்காரர் தொடர, அவரைப் பின் தொடர்ந்தாள் ஆரா. 'பாருங்கம்மா இவர் உங்க ஹஸ்பெண்ட்டா?' திரைச்சீலையை விலக்கியபடியே முத்துக் கேட்க, 'அது ஆரவ் தானென அவளது ஆழ்மனதிட்ட ஓலத்தில் அப்படியே மயங்கிச் சரிந்தவள் அதன்பின் எழும்பவேயில்லை.' இவ்வாறு ஒவ்வொருத்தராக அந்த ஜென்மம் முடிந்து அடுத்தடுத்த பிறப்புகள் எடுத்த போதும், காவ்யாவின் தாய் அம்பிகாவின் ஆத்மா மட்டும் சாந்தியடையவில்லை. ஏனெனில் அவரது கடைசி நொடிவரை ஆரா மீதான கோபம் தொடர்ந்து கொண்டுதானிருந்தது. ஆனாலும் அதனை அடுத்துவந்த ஆராவின் ஜென்மத்தில், அவள்பட்ட துயரங்களைக் கண்டதும் வேதனை தாங்க முடியவில்லை அவரால். பூர்வீகாவாக இருந்த போது, அவள் காதலித்தவனைக் கைபிடித்ததால்தான் அவர்கள் இருவரது குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் இறந்தனர்; இவர்களும் ஊரைவிட்டுத் தள்ளி வைக்கப்பட்டனர். பூர்வீகாவின் கற்பும் களவாடப்பட்டது. இந்தப் பிறப்பில் காதல் கைகூடவில்லை. அவளது குழந்தை இறந்து, அவள் கண் முன்னாலேயே ஆத்மாவாக அலைகிறது. அம்பிகா கோபத்தில் சாபம் போட்டது உண்மைதான். ஆனாலும் ஆரா, அவர் பெறாத பெண்ணல்லவா? அவளது வேதனை அவரைத்தாக்கத் தொடங்கியது. உடனேயே அவர் தான் இட்ட சாபம் பலிக்கக்கூடாதென நினைத்து இறைவனை வழிபட ஆரம்பித்தார். அதுதான் இப்போது பெரும் தவமாக உருவெடுத்துள்ளது. ஆக இப்போது தனது சக்தியைக் கூட்டும் முயற்சியிலிருப்பது அம்பிகாதான், அது ஆராவைக் காயப்படுத்த அல்ல; அவளைத் தனது சாபத்திலிருந்து விடுவிக்க.' இதைக் கூறியதும் மித்ரன், குழந்தையைப் பார்க்க.... அது அசடு வழிந்துகொண்டே..... 'சாரிப்பா, அம்மாவோட கஷ்டத்துக்கு அவங்கதானே காரணம்னு நினைச்சன். அதனாலதான் அவங்க அம்மாவைக் கொல்ல நினைககிறாங்க அப்பிடினு சொல்லிட்டன் உங்ககிட்ட.' ரிஷ்வியை ஆதரவாகத் தடவியவன் கேட்டான்; 'நீங்க சொல்றது சரியா இருந்தாலும் இதில அகரன் எங்க வந்தான்? நம்ம பிரச்சினை அவங்களையும் நோக்கித் தாக்கியிருக்குல. அதான் கேக்கிறன்.'

'ஒவ்வொருவர் செய்ற பாவ புண்ணியத்துக்கும் ஏற்ற மாதிரி அவங்க பிறப்பு இருக்கும். அதுக்காக முன் ஜென்மத்தில கட்டாயம் இப்போ இருக்கிற எல்லாரும் உங்ககூடத் தொடர்பில இருந்திருப்பாங்கனு இல்ல. ஆனா அகரன் இருந்திருக்கான். ஆரபியை ஆரவ் கூட ரூம்ல வச்சுப் பூட்டினது அவன்தான். அப்போ அகரனுக்கு ஆரபியை விட வயசு குறைவு. ரெண்டுபேரும் கீரியும் பாம்பும் மாதிரி சண்டை போட்டுட்டே இருப்பாங்க. ஆனா ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல பாசம் இருந்திச்சு. அன்று ஆரபியுடன் விளையாட்டுச் சண்டை போடுவதற்காக மட்டுமே அகரன் அவளைத் தள்ளிக் கதவைப் பூட்டினான். அந்த அறையுள் ஆரவ் இருந்தது அவனுக்குத் தெரியாது. அவன் வந்து கதவைத் திறப்பதற்குள் அவனது நண்பர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு தம் சேட்டைகளை ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே அவர்கள் இவனை ஆராவுடன் சேர்த்து நக்கலடிப்பர், 'ஏண்டா உன்னைவிட ரெண்டு வயசு பெரிய பொண்ணையா கட்டிக்கப் போறாய்?' என்று. இது வேறு தெரிந்தால் கஷ்டமென்றுதான் அவன் மெதுவாக அவர்களை விலத்திவர யோசித்தது. ஆனால் அவன் வருவதற்குள் எல்லாம் முடிந்திருந்தது.'

'இப்போ அகரன், ஆரா, அம்பிகாம்மா, ரிஷ்வி இவங்க வாழ்க்கையெல்லாம் நல்லாயிருக்கணும்னா நாங்கஎன்ன பண்ணணும்?'

அழகாகச் சிரித்த சாமியார் சொன்னார். 'என்னப்பா என் கதையிலேயே வாழ்ந்துவிடப் போகிறாயா? அடுத்து என்ன நடக்கப் போகிறதென அறிந்தால் சுவாரஸ்யம் இல்லையே. உங்கள் வாழ்க்கை உங்கள் இஷ்டம். நான் கூறிய ஒன்றை மட்டும் மறவாதீர்கள். ஒருவருக்கொருவர் பேச்சுச் சுதந்திரத்தைத் தாருங்கள். மற்றவர் கருத்தை செவிமடுத்துக் கேளுங்கள். இப்போது சென்று வாருங்கள்.' அழகாக விரட்டினார் சாமியார்.

மூவரும் வீடு திரும்பியிருந்தனர். ஆராவிடம் எதுவும் கேட்க வேண்டாமெனவும், நேரம் கூடும்போது தானே எல்லாவற்றையும் விளக்குவதுமாகச் சொல்லியிருந்தான் மித்ரன். அதனால் பூரணியோ சந்திரனோ வேறு யாருமே கூட ஆராவிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை.

ஒரு மாதம் கழிந்திருந்தது.
மறுபடியும் காட்டு அம்மன் கோயிலுக்குச் செல்லத் தயாராகி இருந்தனர் மித்ரனும் ஆதிராவும். குழந்தையும் வரவில்லையென வீட்டிலேயே இருந்து விட்டது. இது மூத்த தம்பதியினரின் ஏற்பாடு. அம்மன்தான் இவர்கள் வாழ்க்கைக்குச் சிறந்த வழிகாட்டி என்பது அவர்கள் முடிவு. எனவேதான் இவர்கள் இருவரையும் தனியாக அம்மன் கோயிலுக்கு அனுப்பினர்.
கோயிலுக்குக் கிளம்பினர் இருவரும். சாமியைத் தரிசிக்கும் வரையில் இருவருக்குமிடையே எந்தப் பேச்சு வார்த்தையுமில்லை. இந்த ஒருமாத காலம் அவர்கள் இந்தப் பககம் வரவுமில்லை. அன்று எத்தனை எத்தனை வேண்டுதலோ, மூடிய கண்களை அரை மணித்தியாலம் கழித்தே திறந்த மித்ரன்... தன்னெதிரே நின்று சாமியைத் தரிசித்த ஆராவைக் காணாது திகைத்தவன், பின்னே திரும்ப....
தன் கைகளில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த ஹோலியாஸ் பூக்களாலான அழகான பூங்கொத்தை இரு கைகளாலும் மித்ரன் முன் நீட்டி, தன் செம்பவள வாயைத்திறந்து முதன்முதலில் தன்னவனிடத்தில் மொழிந்தாள் அவ்வார்த்தைகளை.... "ஐ லவ் யூ மித்து"
 
Top