• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 20

"திக்ஷி! அவரை நம்ம வீட்டுக்கு ஒரு நாள் கூட்டிட்டு வாயேன்.. கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு நாள் வந்தத்தோட சரி.. வரவே இல்லையே!" உமா திக்ஷிதாவிடம் கேட்க,

"அதுக்கு ஏன் ம்மா இவ்வளவு தயங்குறீங்க? வேணும்னா வர்ல.. எனக்கு காலேஜ் அவங்களுக்கு ஆபீஸ்னு போய்ட்டு இருக்கு.. ஊருக்கே நாங்க வர்ல தானே?" என்றாள் திக்ஷிதாவும்.

"புரியுது டி.. ஆனாலும் என்னவோ வீடே அமைதியா இருக்கு உன் கல்யாணத்துக்கு அப்புறம்.. அதான் ஒரு நாள் வந்துட்டு போனீங்கன்னா நல்லாருக்குமேன்னு பார்த்தேன்.. எப்ப கிளம்புறீங்க?" என்று கேட்க, அவரின் வருத்தம் புரிந்தது மகளுக்கு.

"தெரியலையே ம்மா! அவங்க ஒன்னும் சொல்லல.. எப்படியும் இன்னைக்கு பூஜை முடிச்சிட்டு நாளைக்கு கிளம்பிருவோம்னு தான் சொன்னாங்க.. ஆபீஸ் போணுமே!" என்றவளுக்கு கவலையாய் ஆனது அன்னையின் கவலை.

"உனக்கு எப்ப காலேஜ் அம்மு?"

"இந்த வீக் இனி காலேஜ் இருக்காது ம்மா.. ப்ராஜெக்ட் கிளாஸ் தான் ஒரு நாள் இருக்கும்.. அப்புறம் நெக்ஸ்ட் வீக் தான்" என்றாள்.

"பூவை எடுத்தியா அம்மு?" என்று சிவகாமி வர,

"சாமிக்கு பூவை அங்க போய் தட்டுல வச்சுக்கலாம்னு பைக்குள்ள வச்சிட்டேன் மாமி.. இந்த பூ உங்களுக்கு" என கையில் இருந்ததை கொடுத்தாள் திக்ஷிதா.

"அம்மாக்கு குடுத்தியா திக்ஷி! அண்ணனை எங்க?" என்று திக்ஷிதா தந்தையை சிவகாமி கேட்க,

"நானும் அம்மாவும் வச்சுட்டோம் மாமியாரே! நீங்க வச்சுட்டிங்கன்னா கிளம்பலாம்.. உங்க பையன் அப்பவே போன் பண்ணிட்டார்! அப்பாவும் அவங்களோட கோவிலுக்கு போய்ட்டாங்க" என்றதும் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினர் பெண்கள்.

கோவிலில் பட்டு வேஷ்டி சட்டையில் நின்றவனைப் பார்த்து திக்ஷிதா கண்களால் தன் பாராட்டைத் தெரிவிக்க, அவள் பார்வையில் இன்னுமே கவர்ந்தாள் திக்ஷி!.

திருமணத்தன்று பொறுமையாய் கவனிக்கும் மனநிலையில் இல்லாதவனுக்கு இன்று தான் அந்த நினைவும் வந்தது.

பட்டு சேலையில் மனதை மொத்தமாய் அள்ளி இருந்தாள் திக்ஷி.

"நானே வாயை திறந்து கேட்டு வாங்கிக்கணுமா? இவ்வளவு நேரமும் பார்த்துட்டு தானே இருந்திங்க சொல்றது" என்று திக்ஷிதா அருகில் வந்து கேட்க,

"என்ன சொல்லணும்?" என வம்பு செய்தான் வாசு.

"ம்ம்ம்! கொழுப்பு தான்.. எதுவும் சொல்ல வேண்டாம்.. கேட்டு கூட வாங்க முடியல.. இதுக்கு கேட்காமலே நான் இருந்திருக்கலாம்" திக்ஷிதா புலம்ப ஆரம்பிக்க, பூஜையும் ஆரம்பித்து இருந்தது.

"இரு இரு! கடவுள்கிட்ட ஒன்னாவே வேண்டிக்கலாம்.. என்ன வேண்டிக்கணும் நீயே சொல்லு!" வாசு கேட்க,

"நான் வந்து கடவுளே என் புருஷனை கொஞ்சம் புரிஞ்சிக்குற மாதிரி எனக்கு அறிவு குடுன்னு வேண்டிக்க போறேன்.. நீங்க?" என்றாள் கிண்டலாய்.

"இது வேண்டுதலா?" என தலையில் கொட்ட சென்றவன், சுற்றிலும் பார்த்துவிட்டு,

"எப்பவும் சந்தோசமா இருக்கனும்.. என்னோட இந்த வாழ்க்கை திக்ஷி கூட இப்ப மாதிரியே லைஃப் லாங் இருக்கனும்.. எனக்கு எத்தனை பசங்க பொறந்தாலும் என் பொண்டாட்டி இப்ப மாதிரியே என் மேல பாசமா இருக்கனும்.." என வாசு சொல்லிக் கொண்டே இருக்க,

"எத்தன இருக்கனும்.. பாவம் அவரே கண்பியூஸ் ஆகிடுவாரு!" என கிண்டல் செய்தவள்,

"அப்படியே காப்பி பேஸ்ட்!" என்று கூறி வணங்க,

"இப்பவும் என்ன பேச்சு? சாமியை வேண்டிக்கோங்க!" என்றார் உமா மகளிடம்.

"அதை தான் மா செய்றோம்!" என்றவள் கண்களை மூடி வேண்டுதலை வைக்க, வாசுவும் புன்னகையுடன் கைகூப்பி நின்றான்.

மனதிற்கு நிறைவான வாழ்க்கை என்ற தோன்றலில் வேறெதுவும் பெரிதாய் கேட்டிட தோன்றவில்லை. இந்த மகிழ்ச்சி காலம் முழுதும் தொடர்ந்திட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருவருக்கும்.

சர்க்கரைப் பொங்கலை சிவகாமி தர, அதை வாங்கிக் கொண்டு இருவருமாய் படியினில் வந்து அமர்ந்தனர்.

"கல்யாணத்தப்பவும் இதே கோவிலுக்கு தான் வந்தோம் இல்ல?" திக்ஷிதா கேட்கவும்,

"ம்ம் ஆமா! ஆனா அப்ப நான் என்ன மாதிரி மைண்ட் செட்ல இருந்தேன்னு இப்ப வரை எனக்கே தெரியல" என்றான் வாசு.

"என்ன மாதிரி இருந்திருப்பிங்க? பொண்ணையே பார்க்காமல் கல்யாணத்துக்கு சம்மதிச்சவருக்கு பொண்ணு மாறினாதால மூட்அவுட்டாமா?" என்றாள் சீண்டலாய்.

"ப்ச்! எனக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்ல திக்ஷி!" என்றவன்,

"பொண்ணு இல்லைனதும் மண்டபத்துல எல்லாரும் பார்த்த பார்வை.. இங்க உன்னோட நான் வந்தப்ப சுத்தி நின்னவங்க பார்த்த பார்வைன்னு என்னவோ நான் தப்பு பண்ணின மாதிரி.. இப்பவும் கூட இங்க இருக்குற சிலரோட பார்வை அப்படி தானே இருக்கு?" என்றான்.

"ஓஹ்! ஏதோ சொல்லுவாங்களே! ஊருக்குள்ள நாலு பேர் நாலு விதமா பேசுவாங்களேனு.. அந்த நாலு பேருக்காகவா பீல் பண்றீங்க?" என்றாள்.

"பீல்னு இல்ல திக்ஷி! அது ஒரு.. எப்படி சொல்ல? பிரெஸ்டிஜ்னும் சொல்ல முடியாது.. என்னவோ போ.. ஆனா அதை எல்லாம் கிராஸ் பண்ணினதும் நல்லது தான்.. அதனால தான் திக்ஷிதாவோட கணவன்ற பேர் வந்துச்சு" வாசு கூற,

"ஹையையோ! குடுத்தாங்க டாக்டர் பட்டத்தை தூக்கி இவர் கையில!" என்றவள் பேச்சில் வாசு சிரிக்க,

"சத்தமா சொல்லிடாதீங்க.. நீங்க சிரிக்குறதுக்கே என் மாமியார் நேத்து நெஞ்சை புடிக்காத குறையா கண்ணீர் வடிச்சாங்க.. நீங்க இப்ப பேசுறதை கேட்டா அவ்வளவு தான்.. ரத்தக் கண்ணீரே வந்துடும் அவங்களுக்கு" என்று கூற,

"என் அம்மாவையே கிண்டல் பன்றியா நீ! வீட்டுக்கு வா பஞ்சாயத்து வைக்குறேன்!" என்றவனை,

"வச்சுக்கலாமே!" என்றுவிட்டு எழுந்து திக்ஷிதா எழுந்து செல்ல, வாசு சுற்றிலும் பார்த்தபடி புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.

புதுவித மனநிலை அவனுடையது. இப்படி நின்று நிதானமாய் கடவுளை வேண்டி, மனதினை ஒருவளிடம் பகிர்ந்து, வெளிப்படையாய் புன்னகைத்து என அனைத்தும் புதுவகையான உணர்வாய் இருக்க, அதற்குள் விரும்பியே தொலைய தோன்றியது வாசுவிற்கு.

எல்லாவற்றிற்கும் மேலாய் திக்ஷிதா. திரும்பி அவளைப் பார்க்க, கதிரோடு பேசிக் கொண்டிருந்தவள் முகத்தினில் அவ்வளவு புன்னகை.

அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் தெரியும் என்பது எத்தனை உண்மை என்பதை நினைத்துக் கொண்டான் வாசு.

அவளின் அந்த நேர்மறை குணங்கள் அவனுள்ளும் கொண்டு வந்திருந்த மாற்றங்களை நினைத்துக் கொண்டிருக்க, திக்ஷியை இப்படியே காலம் முழுக்க மகிழ்ச்சியாய் பார்த்துக் கொள்ளும் எண்ணம் அவனுக்குள் எழுந்தது.

அது சுயநலமாய் அவனுக்கும் சேர்த்து வந்த எண்ணம் தானே?.

"என்ன ண்ணா! பூஜை முடிஞ்சதா?" என்று வந்திருந்தான் விஷ்வா.

"எங்க போன நீ பூஜை நேரத்துல கூட இல்லாமல்?" வாசு கேட்க,

"நேத்து ஒரு எமெர்ஜென்சி ண்ணா! பிளாட் டொனேட்னு பிரண்ட்ஸ் கால் பண்ணினாங்க.. அங்க இருக்க வேண்டியதா போச்சு.. குட்டி பாப்பா வேற கிளம்பவே தோணலை!" என்றவன் பேச்சில்,

"ஓஹ்!" என்றவன்,

"சரி போய் சாமி கும்பிட்டுக்கோ!" என்று கூற,

திக்ஷிதா "அதெப்படி கரெக்ட்டா பொங்கல் தீரவும் வரீங்க கொழு?" என்றதில்,

"வாட்?" என்று வாசு திக்ஷி புறம் திரும்ப திக்ஷி விழித்தாள்,

"நீ போ!" என தம்பியை விரட்டியவன்,

"என்னவோ சொன்னியே! என்ன சொன்ன?" என்று அவள் கைகளைப் பிடிக்க போக,

"அம்மா உங்களுக்கு பொங்கல் வேணுமான்னு கேட்க சொன்னாங்க அதான் வந்தேன்" என்றவள், வேணுமா என்று பார்க்க,

"நான் கேட்டதுக்கு பதில்!" என்றான் விடாமல்.

"ப்ச்! இவங்க வேற ஒன்னும் இல்லாததுக்கெல்லாம் ஒத்த காலுல நிப்பாங்க!" சத்தமாய் கூறவும் வாசு முறைக்க,

"ஹி ஹி! கேட்கட்டும்னு தான் சொன்னேன்!" என்றவள்,

"கொழுந்தனார்.. கொழுந்தன்.. கொழுந்து.. கொழு.. இப்ப புரியுதா?" என்று கேட்க, சிரிக்கவும் இல்லாமல் முறைக்கவும் இல்லாமல் பார்த்தான் வாசு.

"என்ன உங்களுக்கும் பேர் வைக்கணுமா? உர்உர் மூஞ்சிக்கு வேற நல்ல பேர் எல்லாம் கிடைக்காது.. இப்ப தான் சிரிக்கும் போது கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்கீங்கனு நினச்சேன்.. அதுக்குள்ள முகத்தை ஒளிச்சு வச்சாச்சு.." என்றவள், இப்போது அவனை புருவம் உயர்த்தி பார்க்க,

"போகும் போது நம்மோட யாரும் வர மாட்டாங்க.. நானும் நீயும் தான்" என்றவன் பேச்சில் கப்சிப் ஆகிவிட்டவள் பின்னாலேயே நகர்ந்து சென்று விட, மெதுவாய் புன்னகைத்தவன் தானும் எழுந்து கொண்டான்.

அனைவரும் வீட்டிற்கு வந்து சேர மதியம் கடந்து நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

விளையாடி, மகிழ்ந்து, பேசி, சிரித்து என இருந்த திக்ஷிதா அன்னை தந்தை கிளம்பும் நேரம் வரவும் அமைதியாகி விட்டாள்.

தானும் அவர்களுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஆசையாய் மாறிவிட, சென்றால் அவர்கள் முகத்தில் வரும் சந்தோசத்தை பார்க்கவும் மனம் தேடியது.

வாசுவை கேள் என்று ஒரு மனமும் கேட்காதே என ஒரு மனமும் அவளை பந்தாட, பேச்சும் குறைந்துவிட்டது திக்ஷிதாவிற்கு.

"கிளம்புறோம் தம்பி!" என்று கதிர் வந்து வாசுவிடம் கூற,

"இப்பவேவா?" என மணியைப் பார்த்தவன்,

"ஈவினிங்கா போலாமா?" என்று கேட்க, கதிர் திரும்பி மனைவியைப் பார்த்தார்.

"என்ன ஈவினிங்கு? இருந்துட்டு நாளைக்கு போக சொல்லு டா!" என்று சிவகாமி கூற,

"இல்லம்மா! அன்னைக்கு விருந்து முடிஞ்சி ஊருக்கு போய்ட்டோம்.. அங்க தங்கவே இல்லையே! அதான் இன்னைக்கு போய் தங்கலாம்னு ஒரு பிளான்!" என வாசு முடிக்க கூட இல்லை,

"தாராளமா போய்ட்டு வாங்க.. அவங்களுக்கும் சந்தோசமா இருக்கும்ல.. பொம்பள புள்ளைங்க ஓடி ஆடி விளையாடுன வீடு ஆள் அரவம் இல்லாம இவ்வளவு நாளும் தவிச்சு போயிருப்பாங்க.. முடிஞ்சா கூட ஒரு நாள் கூட தங்கிட்டு வா" என்றார் சிவகாமி.

"இல்லம்மா! ஆஃபீஸ் போனுமே! நாளைக்கு கிளம்பனும்.. திக்ஷிக்கு லீவ் தான்.. அவ அங்க இருக்கட்டும்.. நான் அப்புறமா வந்து கூப்பிட்டுக்குறேன்" என்றதில் சிரிப்போடே சிவகாமி திக்ஷிதா பக்கம் திரும்ப,

"அண்ணி! கண்ணை மூடணுமா இல்லை காதை மூடணுமா?" என்று கிண்டலாய் கேட்டான் விஷ்வா.

"முதல்ல வாயை மூடு டா.. பேச்சைப் பாரு!" என சிவகாமி தோளில் இடிக்க, ரத்தினமும் பார்த்தபடி இருந்தார்.

விரிந்த கண்களும் அசைய மறந்த நிழலுமாய் திக்ஷிதா நின்றிருந்தாள் வாசுவின் பேச்சைக் கேட்டு.

"திக்ஷி!" என்று சத்தமாய் அன்னை மகிழ்ச்சியுடன் அழைக்க,

"ம்மா!" என்றவள் பார்வையில் கணவன் மட்டுமே!

"என்ன?" என்று அவன் புருவம் உயர்த்த, அவனருகே வந்தவள்,

"சீரியஸ்லி ஐம் ஸ்பீச்லெஸ்!" என்றாள்.

"பார்டா! ஸ்பீச் லெஸ்.. அதுவும் நீ?" என சிரித்தவன்,

"ஈவ்னிங் எல்லாருமா கிளம்பலாம் மாமா!" என்று விட,

"சரிங்க தம்பி!" என்ற கதிருக்குமே அவ்வளவு மகிழ்ச்சி.

தொடரும்..
 
Top