• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நவநிதிகள் அருளும் திருக்கோளூர் பிரான்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
*நவநிதிகள் அருளும் திருக்கோளூர் பிரான்.*
IMG_20220317_234918_568.jpg


பரமேஸ்வரனைத் தரிசிக்க கைலாயம் சென்ற குபேரன், அன்னை பார்வதி தேவியின் சாபத்துக்கு ஆளாகி நவ நிதிகளையும் இழந்தார்.


குபேரனை விட்டு நீங்கிய நவ நிதிகளும் திருக்கோளூரில் பொருநை நதிக்கரையில் சயனக்கோலத்தில் துயில்கொள்ளும் திருமாலைச் சரணடைந்தன. இந்த ஆலயம் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ளது.

அந்நிதியங்களுக்குப் புகலிடம் தந்து, அவற்றை அரவணைத்து வைத்துக்கொண்டதால், இங்குள்ள மூலவரின் திருநாமம் 'வைத்த மாநிதிப் பெருமாள்' என்பதாகும். நவநிதியங்கள் மற்றும் குபேரன் இங்குள்ள தாமிரபரணியில் நீராடித் தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டதால், இங்குள்ள தீர்த்தத்துக்கு 'நிதி தீர்த்தம் அல்லது குபேர தீர்த்தம்' என்று பெயர்.

ஈஸ்வரன் அருளிய உபாயப்படி திருக்கோளூர் வந்த குபேரன், வைத்தமாநிதிப் பெருமாள் குறித்துக் கடும் தவம் இயற்றினார். அவரது தவத்தை மெச்சிய பெருமாள் மாசி மாதம் சுக்லபட்ச துவாதசி திதியில் குபேரனுக்குக் காட்சி அருளினார்.

குபேரனுக்கு, `வைத்தமாநிதிப் பெருமாள்' படியளந்த வைபவத்தையொட்டி திருக்கோளூரில் சிறப்பு அலங்காரத்தில் கோளூர்வல்லி நாயகி, குமுதவல்லி நாயகியுடன் அருள்பாலித்த உற்சவர் சுவாமி நிக்சோப வித்தன்.
நவநிதிகளைத் தனக்குத் தர வேண்டி நின்ற குபேரனிடம், 'முழு செல்வத்தையும் தர இயலாது. யாம் தரும் செல்வத்தைக் கொண்டு உனது பணிகளைத் தொடர்ந்து வந்தால் யாருக்கெல்லாம் இந்தச் செல்வங்கள் சென்று சேர வேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அவர்களிடம் நானே சேர்ப்பேன்' என்று உரைத்த திருமால், குபேரனுக்கு மரக்காலால் அளந்து பகுதி செல்வத்தை வழங்கி அருளினார்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், நவ திருப்பதி கோயில்களில் 3-வது கோயிலாகவும், நவ கிரகங்களில் செவ்வாய்க்குரிய ஸ்தலமாகவும் திகழும் இக்கோயிலுக்கு மாசி மாதம் சுக்லபட்ச துவாதசி திதியன்று வந்து, இங்குள்ள குபேர தீர்த்தத்தில் நீராடி வைத்தமாநிதிப் பெருமாளை வழிபடுகிறவர்களுக்கு குபேரனுக்கு அருளியதைப் போல் நவ நிதிகளையும் பெருமாள் படியளப்பார் என்பது ஐதிகம்.

ஆதிசேஷன் மீது சயனித்தவாறு (புஜங்க சயனம்) மரக்காலைத் தலைக்கு வைத்து, கையில் அஞ்சனம் மை தடவி, கிழக்குப் பார்த்த திருமுகத்துடன் நிதி எவ்வளவு உள்ளது, யாரிடம் சேர வேண்டும் என்பதைக் கணிக்கும் கோலத்தில் தனது தேவியர்கள் கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியாருடன் வைத்தமாநிதிப் பெருமாள் இங்கே அருள்பாலிக்கிறார். பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம் திருக்கோளூர். குபேரன், மதுரகவி ஆழ்வாருக்குப் பிரத்யட்சமாக வைத்தமாநிதிப் பெருமாள் இத்தலத்தில் காட்சி அருளியுள்ளார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை

ஒருமுறை திருக்கோளூருக்கு பகவத் ராமானுஜர் வந்தார். அப்போது மோர் விற்கும் பெண் ஒருவர், ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் இருந்து 81 விஷயங்களைக் கூற, அவரது ஞானத்தைக் கண்டு ராமானுஜர் வியந்தார். அந்தப் பெண் கூறியவை 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' எனப் புகழ்பெற்ற நூலாகும்.

தேடிப்புக வேண்டிய ஊர்



ராமானுஜர் யாத்திரை சென்றபோது, வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரைக் கண்டார். அவரிடம் விசாரித்தபோது, பிழைக்க வழியில்லாததால், திருக்கோளூரை விட்டு இங்கு வந்தேன் என்று அந்த நபர் கூறினார். உடனே, ராமானுஜர் 'தேடிப்புக வேண்டிய ஊர் திருக்கோளூர். கழுதை மேய்த்தாலும் திருக் கோளூரிலேயே இருக்கலாமே' என்று கூறினாராம். அந்த அளவுக்கு நம்மை மேன்மை யடையச் செய்யும் திருத்தலம் இது.

தினந்தோறும் ஐந்து கால பூஜை நடைபெறும் இக்கோயிலில் மங்கள வாரம் எனப்படும் செவ்வாயன்று வழிபடுவது சிறப்பு. நடப்பாண்டு மாசி மாத சுக்லபட்ச வளர்பிறை துவாதசி தினமான பிப்.13-ம்தேதி குபேரனுக்கு பெருமாள் படியளந்த வைபவம் இக்கோயிலில் விமரிசையாக நடைபெற்றது.

அமைவிடம்: திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆழ்வார் திருநகரியிலிருந்து மூன்று கிலோமீட்டார் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து அரசுப் பேருந்து வசதி உள்ளது.
நடை திறப்பு நேரம்: காலை 7-30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.



*பகிர்வு*
 
Top