• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நவராத்திரி - கொலுவின் தாத்பரியம்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
2021 நவராத்திரி ஆரம்பம்! 9 படிகளிலும் அலங்கரிக்க வேண்டியவைகள் என்ன? அதன் தாத்பரியம் தான் என்ன? நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?





சிவபெருமானுக்கு சிவராத்திரி ஒன்று தான். ஆனால் அன்னை ஆதிபராசக்திக்கோ நவராத்திரிகள் உண்டு. பெண்களைப் போற்றும் இந்த நவராத்திரி விழாவில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் படிகளை அமைத்து பொம்மைகள் வைத்து அலங்கரித்து வழிபடுவது உண்டு. காலம் காலமாக கடைப்பிடித்து வரும் இந்த நவராத்திரி விழா அனுஷ்டிக்கப்படுவதன் தாத்பரியம் என்ன? எந்தெந்த படிகளில் என்னென்ன பொம்மைகள் அமைக்கப்பட வேண்டும்? என்கிற சுவாரசிய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.



நவராத்திரிக்கு எப்பொழுதும் கொலுவில் பொம்மை வைக்க மண் பொம்மையை தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது. பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் இந்த மண் பொம்மைகள் இயற்கையை குறிப்பிட்டு கூறுகிறது. பஞ்சபூத சக்தியைத் தவிர பூலோகத்தில் பெரும் சக்தி ஏதும் இல்லை. பஞ்சபூதங்கள் ஒன்றினையும் இடத்தில் இறைவன் ஆகர்ஷனம் ஆகிறார். ஒரு குயவன் பொம்மை செய்ய மண்ணை போட்டு நிலத்தில் மிதிக்கிறான். அது பொம்மையாக வடிக்க தண்ணீர் சேர்கிறான். பின்னர் சிலை கம்பீரமாக நிற்பதற்கு நெருப்பில் சுடுகிறான். பின்னர் அதற்கு வண்ணம் தீட்டி காற்றில் அதனை உலர வைக்கிறான். பின்பு அவனே அந்த பொம்மையை தெய்வமாக நினைத்து போற்றி வழிபடவும் செய்கிறான். இப்படி பஞ்ச பூதங்களின் தன்மை கொண்ட மண் பொம்மைகளை வாங்கி கொலுவில் அடுக்கி வைப்பதன் மூலம் இறைவனை நாம் கொலுவில் நேரடியாக இடம் பெற வைக்க முடியும். அல்லது மரப்பாச்சி பொம்மைகளை அடுக்கி வைக்கலாம். இவற்றைப் விடுத்து பிளாஸ்டிக்கால் ஆன பொம்மைகளை வைப்பது தேவையற்றது என்று தான் கூற முடியும்.



ஒன்பது படிகளில் ஒன்பது விதமான பொம்மைகளை அடுக்கி வைப்பார்கள். 9 படிகளை மூட வெள்ளை துணியை விரிப்பது தான் நல்லது. அதில் மேலிருந்து முதல் படியில் கோவில்களில் வீற்றிருக்கும் மகா சக்தி பொருந்திய தெய்வங்களை அடுக்கி வைக்க வேண்டும். மும்மூர்த்திகளாக விளங்கும் மகா விஷ்ணு, சிவன், பிரம்மன் ஆகியோரை கட்டாயம் வைக்க வேண்டும். பின்னர் அவர்களுடன் கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் கொடுக்கும் முப்பெரும் தேவியர்களாக விளங்கும் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் சிலைகளை வைக்க வேண்டும். பின்னர் ஆதிபராசக்தி ஆகிய உமையவளை நடுவில் வைத்து அவளின் அருளாசியை பெற்றுக் கொள்ளலாம். எட்டாவது படியில் தசாவதாரங்களை உணர்த்தும் விதமாக தசாவதார சிலைகளை அடுக்கி வைக்கலாம் அல்லது நவ கிரகங்களில் வீற்றிருக்கும் நவகிரக நாயகர்களை அடுக்கி வைக்கலாம். தேவர்கள், தேவதைகள், அட்டதிக்கு பாலகர்கள் போன்றவர்களையும் அடுக்கி வைக்கலாம்.



ஏழாவது படியில் அரசாண்ட மன்னாதி மன்னர்கள், குருமார்கள் போன்றவர்களை இடம் பெற செய்யலாம் அல்லது முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், மனித உருவில் வாழ்ந்து மறைந்த தெய்வங்கள் ஆகியோரின் திரு உருவ சிலைகளை அடுக்கி வைத்து அழகு பார்க்கலாம். ஆறாவது படி மட்டும் எப்பொழுது நமக்கு உரியது. ஆறறிவு கொண்ட மனிதனுக்கு உரியது. அதாவது மனிதர்களை சித்தரிக்கும் விதமாக குழந்தைகளின் கற்பனை வளத்தை அதிகரிக்க செய்யக்கூடிய வகையில் செட்டியார் பொம்மை, தலையாட்டி பொம்மை, அரிசி பருப்பு விற்கும் வியாபாரி, நெசவாளி, விவசாயி போன்ற மனித பொம்மைகளை வைக்கலாம்.



ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட பறவைகள், மிருகங்கள் போன்ற உயிரினங்களின் பொம்மைகளை அடுக்கி வைக்க வேண்டும். நான்காவது படியில் நான்கறிவு ஜீவன் கொண்ட நீர்வாழ் உயிரினங்களின் பொம்மைகளை அடுக்கி வைக்கலாம். மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட ஊர்வன உயிரினங்களாக இருக்கும் எறும்பு, கரையான் போன்ற பொம்மைகளை அடுக்கி வைக்கலாம்.



இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட உயிரினங்கள் ஆகிய நத்தை, சங்கு போன்ற பொம்மைகளை அடுக்கி வைக்கலாம். முதல் படியில் இறுதியாக ஓரறிவு கொண்டுள்ள மரம், செடி, கொடிகள புல் வகைகள் போன்ற விஷயங்களை அலங்காரங்களாக செய்து வைக்கலாம்



முதல் படியிலிருந்து ஒன்பதாவது படி வரை இம்முறையில் அடக்கி வைப்பதற்கு தத்துவ காரணம் ஒன்று தான். மனிதன் புல், பூண்டு முதலான ஓரறிவுள்ள விஷயங்கள் முதல் தன் அறிவால் கற்றுக் கொண்டு படிப்படியாக ஒன்பதாம் படியில் இறைவனை அடைகிறான் என்பது தான். ஒன்பது நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாவில் குழந்தைகளும் பங்கு கொள்ளும்படி செய்தால் அவர்களுடைய அறிவு வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் எனவே குழந்தைகளின் கற்பனை வளர்ச்சியை தூண்டக்கூடிய வகையில் அவர்களையும் இவற்றை அலகரிப்பதில் ஊக்குவிப்பது நல்லது.
 

Attachments

  • 1633585410961.png
    1633585410961.png
    156.9 KB · Views: 26
Top