• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Nuha Maryam

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
110
சுசித்ரா விஷமச் சிரிப்புடன் சஜீவ்வின் அறைக்குள் நுழைய அவளைக் கண்ட சஜீவ்,


"நீ எதுக்கு என் ரூமுக்கு வந்த... உன்ன தான் இங்க வர வேணான்னு சொல்லி இருக்கேன்ல... உன்ன இந்த வீட்டுல வெச்சி இருக்குறதே பாவம்..." எனக் கோவமாகப் பேச,


சுசித்ரா, "என்ன பேபி... என்னை வெரட்டுறதுலயே குறியா இருக்க... " என்க,


"ஏய்..." என அவளை அறையக் கை ஓங்கிய சஜீவ்,


"பொண்ணாப் போய்ட்ட... இல்ல இங்க நடக்குறதே வேற... என் கோவத்த கிளப்பாம ஒழுங்கா போய்டு..." என்றான்.


தன் மொபைலைக் கையில் சுழற்றியபடி அவனைப் பார்த்த சுசித்ரா,


"போறேன் பேபி... அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயத்த பத்தி உன் கிட்ட சொல்ல வேணுமே.." என இழுக்க,


சஜீவ், "நீ எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல... நீ சொன்னாலும் நான் கேக்க போறது இல்ல... நல்ல மூட்ல இருக்கேன்... வீணா ஏதாவது பேசி அதை கெடுக்காதே... போய்டு..." என்றான் அமைதியாக.


சுசித்ரா, "ஹ்ம்ம்... அப்படி எல்லாம் இருக்கக் கூடாதே பேபி... ஆமா... அந்த நித்யா இன்னுமா உன்ன மன்னிக்கல.." என ஏளனமாகக் கேட்க,


பல்லைக் கடித்த சஜீவ், "எனக்கும் என் பொண்டாட்டிக்கும் இடைல ஆயிரம் இருக்கும்... அதெல்லாம் உனக்கு சொல்லனும்னு இல்ல... ஒரே நேரத்துல பல பேரோட பணத்துக்காக பழகுற உனக்கெல்லாம் புருஷன் பொண்டாட்டி உறவ பத்தி என்ன தெரியும்... நீ என் அம்மா கூட சேர்ந்து என்ன தான் திட்டம் போட்டாலும் உங்க ரெண்டு பேராலையும் என்னையும் யுவியையும் பிரிக்கவே முடியாது... உன் முன்னாடியே நானும் யுவியும் எங்க குழந்தைங்களோட சந்தோஷமா வாழ தான் போறோம்... அதை நீ பார்க்க தான் போற..." என்றான்.


அதைக் கேட்டதும் சஜீவ் ஏதோ நகைச்சுவை கூறியது போல விழுந்து விழுந்து சிரித்த சுசித்ரா, "என்ன பேபி நீ... ஆசை படலாம்... பட் பேராசை படலாமா... நீ... குழந்தை குட்டின்னு வாழ போற.... முதல்ல உனக்கு அந்தத் தகுதி இருக்காடா..." என நக்கலாகக் கேட்க,


அவள் கழுத்தை நெறித்த சஜீவ், "என்ன டி... பொண்ணா போய்ட்டேன்னு அமைதியா போனா என்ன வேணாலும் பேசுவியா நீ.." எனத் தன் கரத்தின் அழுத்தத்தை அதிகரிக்க சுசித்ரா மூச்சு விட சிரமப்படுவதைக் கண்டு அவளை விடுவித்தான் சஜீவ்.


சஜீவ் விட்டதும் கழுத்தைப் பிடித்துக் கொண்டு இருமிய சுசித்ரா, "யுவி யுவின்னு ரொம்பத் தான் வழியுற... அவளுக்கு உன்னால என்ன சந்தோஷத்த குடுக்க முடியும்..." என்க,


"வெளிய போய்டு சுச்சி... இதுக்கு மேல ஒரு வார்த்த பேசினா கொன்னுடுவேன்..." என மிரட்டினான் சஜீவ்.


சுசித்ரா அதைக் கண்டு கொள்ளாது, "நித்யா கூட குழந்தை குட்டின்னு சந்தோஷமா வாழ போறேன்னு சொல்ற... முதல்ல உன்னால ஒரு குழந்தைக்கு அப்பா ஆக முடியுமாடா..." என்கவும் அதிர்ந்தான் சஜீவ்.


தன் மொபைலில் அன்று நித்ய யுவனி மறைத்து வைத்த ஃபைலை எடுத்த புகைப்படத்தைக் காட்டிய சுசித்ரா,


"பாரு... நல்லா பாரு என்ன போட்டு இருக்காங்கன்னு... இப்போ என்ன சொல்ற... நித்யாவ ரொம்ப காதலிக்கிறதா சொல்லுவ... கடைசி வர அவள் மலடின்னு பேரெடுத்து கஷ்டப்படுறத பார்க்கவா அவள கல்யாணம் பண்ணிக்கிட்ட..." என்றாள் கேலியாக.


என்ன கூறினால் சஜீவ் குழம்புவான் எனத் தெரிந்தே சுசித்ரா அவ்வாறு கூறினாள்.


அவளுக்கு தெரியும் சஜீவ் நித்யா மீது வைத்துள்ள காதலால் நிச்சயம் அவள் கஷ்டப்பட விரும்ப மாட்டான் என்று.


சுசித்ரா காட்டிய ரிப்போர்ட்டைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த சஜீவ், "இ...இல்ல... நீ... பொய் சொல்ற... நான் நம்ப மாட்டேன் இதை.." எனத் திக்கித் திணறிக் கூற,


"எனக்குத் தெரியும் நீ இதை நம்ப மாட்டாய்னு... நம்பிக்கை இல்லன்னா நீயே டாக்டர்ட போய் செக் பண்ணு..." என்றாள் சுசித்ரா.


சஜீவ் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருப்பதைக் கண்டு மகிழ்ந்த சுசித்ரா மனதில், "உன்னையும் சர்வாவையும் என்ன பண்ணினாலும் இனி பிரிக்க முடியாதுன்னு சொன்னியே நித்யா... பாரு... இப்போ சர்வாவே உன்ன அவன் லைஃப்ல இருந்து போக சொல்லுவான்.." எனக் குரூரமாக எண்ணினாள்.


சுசித்ரா, "இன்னுமா நித்யாவ உன் கூட வெச்சி கஷ்டப்படுத்த போற... உன்னால அவளுக்கு எந்த சந்தோஷத்தையும் குடுக்க முடியாது... இந்த விஷயம் உன்‌ பொண்டாட்டிக்கு ஆல்ரெடி தெரியும்... ஆனா பாரு... கட்டின பாவத்துக்கு கழுத்துல தொங்குற தாலிய மதிச்சு உன் கூட இருக்கா... இல்லன்னா அவளுக்கு என்ன தலைவிதியா உன்ன மாதிரி ஒருத்தன் கூட வாழ... பேசாம ஒன்னு பண்ணு சர்வா... நித்யா உன்ன வெறுக்க முன்னாடி நீயே அவள விட்டு விலகி போய்டு... அவளாவது சந்தோஷமா இருப்பா..." என்றாள் மனதில் வன்மத்துடன்.


சஜீவ் சுசித்ரா தந்த அதிர்ச்சியில் தரையில் மண்டியிட அதைத் திருப்தியாக பார்த்து விட்டு அங்கிருந்து சென்றாள் சுசித்ரா.


சுசித்ரா அங்கிருந்து சென்றது கூட சஜீவ் அறியவில்லை.


சஜீவ், "என்.. என் யுவி என்ன விட்டு போய்டுவாளா... என்னால.. அவளுக்கு எந்த சந்..சந்தோஷத்தையும் குடுக்க முடியாதா... என்னால ஒரு குழந்தைக்கு அப்பா ஆக முடியாதா... அதனால தான் நான் உண்மைய சொல்லியும் நீ இன்னும் என்னை மன்னிக்காம இருக்கியா... யுவி... யுவி... ஆஹ்........." எனக் கதறினான்.


_______________________________________________


இரவு பணி முடிந்து நித்ய யுவனி வீட்டுக்கு வரும் போது ஜீவிகாவும் வீரும் வந்திருந்தனர்.


ஹாலில் அனைவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க நித்ய யுவனி உள்ளே நுழையும் போதே வேகமாக வந்து அவளை அணைத்துக் கொண்டாள் ஜீவிகா.


ஜீவிகா, "ரொம்ப தேங்க்ஸ் அண்ணி..." என்க நித்ய யுவனி புரியாது, "எதுக்கு தேங்க்ஸ்..." எனக் கேட்டாள்.


ஜீவிகா, "அது.... அண்ணி... நீங்க அத்தையாக போறீங்க.." என வெட்கப்பட்டுக் கொண்டு கூற மகிழ்ந்த நித்ய யுவனி, "வாவ் கங்கிராட்ஸ் ஜீவி... இதுல நான் எதுவும் பண்ணல.. ஒனு டாக்டரா உங்களுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணேன்.. அவ்வளவு தான்.." என்றவள் வீரிடம் சென்று, "கங்கிரேட்ஸ் ராஜு.." என்கவும் அவன் கண்கள் கலங்கின.


அப்போது தான் சஜீவ் அங்கு இல்லாததைக் கவனித்தாள் நித்ய யுவனி.


சஜீவ்வைக் கண்களால் தேடியபடி பிரபுவிடம், "சர்வேஷ் எங்க மாமா..." என்க அவரிடமிருந்து பதில் வரவில்லை.


அவர் தான் நித்ய யுவனியின் மாமா என்ற அழைப்பில் அதிர்ச்சியில் இருந்தாரே.


இந்த வீட்டுக்கு வந்த பின் நித்ய யுவனி பிரபுவிடம் பேசினாலும் யாரோ போல் தான் பேசுவாள்.


எந்த உறவும் வைத்து அழைக்க மாட்டாள்.


இன்று அவளே மாமா என அழைத்ததும் பிரபு அதிர்ச்சியில் இருக்க நித்ய யுவனி, "என்னாச்சு மாமா.. உங்க கிட்ட தான் கேக்குறேன்... இன்னுமா சர்வேஷ் வரல... ரொம்ப லேட் ஆகிடுச்சே..." என்க தன்னிலை வந்தவர்,


"ஆமாமா... இன்னும் சர்வா வரல... கால் பண்ணினாலும் எடுக்கல... ஏதாவது வேலையா இருப்பான்..." என்க,


"சர்வேஷுக்கு தான் இன்னும் ஃபீவர்ல..‌. எதுக்கு இன்னெக்கி வர்க் போகனும்... நீங்க தடுத்து இருக்கலாம்ல.." என்றாள் நித்ய யுவனி.


பிரபு, "நான் என்னம்மா பண்ண முடியும்... அவன் எப்போ போனான்னே எனக்கு தெரியாதுமா.." என்றார்.


வீர் தன்னருகில் நின்ற மனைவியின் காதில் மெதுவாக, "ஜீவி... எனக்கு என்னவோ தங்கச்சி நம்ம எல்லாரையும் மன்னிச்சிட்டான்னு தோணுது.." என்க,


"ஆமாங்க.. நானும் அதே தான் நெனச்சேன்... என்னை பழையபடி ஜீவின்னு கூப்பிட்டாங்க... உங்கள ராஜுன்னு கூப்பிட்டாங்க... அப்பாவ வேற மாமான்னு கூப்பிட்டாங்க... வந்த நேரத்துல இருந்து அண்ணனையே தேடிட்டு இருக்காங்க... ரெண்டு பேருக்கும் இடைல இருந்த எல்லாப் பிரச்சினையும் சரி ஆகிடுச்சுன்னு நெனக்கிறேன்க.." என ஜீவிதா கூறவும்,


"இனிமேலாவது ரெண்டு பேரும் எந்த பிரச்சினையும் இல்லாம சந்தோஷமா வாழ்ந்தா போதும்..." என்றான் வீர்.


வந்த நேரத்திலிருந்து நித்ய யுவனியின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியைக் கண்ட சுசித்ராவோ வெறுப்புடன்,


"நல்லா சிரிடி... இனிமே ஒரு நிமிஷம் கூட உன் முகத்துல இந்த சிரிப்பு இருக்காது... சர்வாவே உன்ன இந்த வீட்ட விட்டு அனுப்பிருவான்... அதுக்கப்புறம் காலம் பூரா நீ அவன நெனச்சி கண்ணீர் வடிக்க மட்டும் தான் முடியும்..." என நினைத்தாள்.


இரவுணவை முடித்துக் கொண்டு ஜீவிகாவும் வீரும் தங்கள் வீட்டுக்கு கிளம்ப மற்ற அனைவரும் வேலைகளை முடித்துக் கொண்டு உறங்கச் சென்றனர்.


நள்ளிரவாகியும் சஜீவ் வீட்டுக்கு வராமல் போக அன்று போல குடித்து விட்டு வருவானோ எனப் பயந்தாள் நித்யா.


சஜீவ்வின் எண்ணுக்கு அழைத்துப் பார்க்க ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.


அவனுக்காக காத்திருந்தவாறே உறங்கி விட்டாள் நித்ய யுவனி.


_______________________________________________


மறுநாள் குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்டு கண் விழித்த நித்ய யுவனிக்கு சஜீவ் தான் வந்து இருக்கான் எனப் புரிய அவன் வெளியே வரும் வரை காத்திருந்தாள்.


குளியலறையில் இருந்து வெளியே வந்த சஜீவ்வோ அங்கு ஒரு ஜீவன் இருப்பதையே கண்டு கொள்ளாமல் அவன் பாட்டுக்கு ஆஃபீஸ் கிளம்பத் தயாராக நித்ய யுவனி, "எத்தனை மணிக்கு வந்த சர்வேஷ்... ஏன் லேட்... திரும்ப எங்க கிளம்ப போற..." என்க,


சஜீவ்வோ அதனைக் காதிலே வாங்காது வெளியே சென்றான்.


சஜீவ்வின் செயலில் குழம்பிய நித்ய யுவனி, "என்னாச்சு இவனுக்கு... எதுக்கு இப்போ பதில் சொல்லாமப் போறான்.. இவன புரிஞ்சிக்கவே முடியாது..." எனத் தலையில் அடித்துக் கொண்டவள் காலைக் கடன்களை முடிக்க சென்றாள்.


நித்ய யுவனி கீழே செல்லும் போது சஜீவ் இருக்கவில்லை.


டைனிங் டேபிளில் அமர்ந்து உண்டு கொண்டிருந்த பிரபுவுக்கு நித்ய யுவனி சஜீவ்வைத் தேடுவது புரிய,


"அவன் போய்ட்டான்மா... காலைல தான் வந்தான்... எங்க போனான்னு கேட்டதுக்கு எதுவுமே சொல்லல... திரும்ப போய்ட்டான்..." என்க,


"என் கிட்ட கூட சொல்லவே இல்லயே..." என நித்ய யுவனி கூறவும் பக்கென சிரித்தாள் சுசித்ரா.


நித்ய யுவனி அவளை முறைக்க சுசித்ரா ஈஷ்வரியிடம், "அத்த... இனிமே கண்ட கண்ட தெரு நாயெல்லாம் இந்த வீட்டுல இருக்க அவசியம் இல்லன்னு நெனக்கிறேன்... அதைக் கூட்டிட்டு வந்தவங்களே எப்படியும் திரும்ப வெரட்டி விட்டுருவாங்க..." என்று சிரித்தாள்.


பிரபு, "சுச்சி..." என சத்தம் போடவும் சுசித்ராவுக்கு ஏதோ கூற வந்த நித்ய யுவனி அமைதியாகி கோவத்தில் சுசித்ராவை முறைத்து விட்டு செல்லப் பார்க்க,


"எங்க போறமா... சாப்பிட்டு போ... நைட்டும் ஒழுங்கா சாப்பிடல நீ..." எனப் பிரபு கூற,


"இல்ல மாமா... எனக்கு பசிக்கல... நான் ஹாஸ்பிடல் கேன்டீன்ல சாப்பிட்டுக்குறேன்..." என்று விட்டு சென்றாள் நித்ய யுவனி.


அடுத்து வந்த நாட்களும் சஜீவ் நித்ய யுவனியின் கண்களில் சிக்காமல் கண்ணாமூச்சி விளையாடினான்.


இரவு வெகுநேரம் கழித்து அனைவரும் உறங்கிய பின் வீட்டுக்கு வரும் சஜீவ் ஏற்கனவே உறங்கி விட்டிருக்கும் நித்ய யுவனியின் அருகில் அமர்ந்து விடிய விடிய அவள் முகத்தையே பார்த்துக் கண்ணீர் வடிப்பான்.


விடிந்ததும் நித்ய யுவனி எழும் முன் கிளம்பி விடுவான்.


சஜீவ் இருக்கும் சமயம் நித்ய யுவனி பேசச் சென்றாலும் அவள் முகத்தைக் கூடப் பார்க்காது சென்று விடுவான்.


சஜீவ்வின் செயலால் நித்ய யுவனியின் மனம் வாடினாலும் ஆஃபீஸில் ஏதாவது ப்ராஜெக்டில் பிஸியாக இருப்பான் என எண்ணி நித்ய யுவனியும் அவனை எதுவும் கூறவில்லை.


அன்று சுசித்ரா தன் ரிப்போர்ட்டைக் காட்டி விட்டு சென்ற பின் சற்று நேரம் கவலையில் புலம்பிக் கொண்டிருந்த சஜீவ் பின் சுசித்ரா தங்களைப் பிரிக்கும் நோக்கில் ஏதாவது கதை கட்டுகிறாள் என நினைத்தவன் தங்கள் குடும்ப வைத்தியரிடம் பரிசோதனைக்கு சென்றான்.


சுசித்ரா கூறியது பொய்யாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டவனின் தலையில் மருத்துவர் கூறிய செய்தி இடியாக இறங்கியது.


தன்னால் சிறு சதவீதம் சரி குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லை என அவனின் குடும்ப மருத்துவர் கூறவும் அதிர்ந்தான் சஜீவ்.


சஜீவ், "இதுக்கு ஏதாவது ட்ரீட்மெண்ட் பண்ண முடியும் தானே டாக்டர்.." என்க,


"சாரி சர்வா... எனக்கும் அப்படி சொல்ல ஆசை தான்... பட் அதுக்கு வாய்ப்பே இல்ல... உன்னோட ஸ்பெர்ம்ஸ் க்ரோவ்னிங் சிஸ்டம் ரொம்ப டேமேஜ் ஆகி இருக்கு..." என மருத்துவர் கூறவும் சஜீவ்விற்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் சுத்தமாக வடிந்து போனது.


ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வந்தவனுக்கு அன்று ஒருநாள் ஜீவிகா மற்றும் வீருடன் நித்ய யுவனியிடம் பரிசோதனைக்கு சென்ற போது அவள் வீரிடம் கூறியவை அனைத்தும் நினைவுக்கு வந்தன.


ஒரு பெண் தாயாகாமல் இருக்க கணவனிடம் குறை இருந்தும் மனைவியையே உலகம் தூற்றி மலடி எனும் பட்டம் வழங்கும் என நித்ய யுவனி கூறியது தனக்கே கூறுவது போல் இருந்தது.


அன்று நித்ய யுவனி தன்னைப் பார்த்த பார்வையும் அவனைக் குற்றம் சுமத்தியது.


தன்னால் தன்னவளுக்கு அவப்பெயர் வேண்டாம் என்று அவளை விலக முடிவு செய்தான் சஜீவ்.


அதனால் தான் நித்ய யுவனி பேச வரும் போதெல்லாம் தவிர்த்தான்.


எங்கே அவள் பேசவும் தன் மனம் சுயநலமாக மாறி நித்ய யுவனியைத் தன்னுடனே வைத்துக் கொள்ள விரும்பும் என்று தான் அவளின் பார்வையிலேயே படாமல் இருந்தான்.


ஆனால் நித்ய யுவனிக்கே தெரியாமல் ஒவ்வொரு இரவும் அவளருகில் அமர்ந்து கண்ணீர் வடிப்பான்.


_______________________________________________


சுசித்ரா தன் அறையில் யாருடனோ அழைப்பில் இருக்க அவ் வழியாக வந்த ஈஷ்வரி சுசித்ராவின் பேச்சில் அவளின் அறை வாசலிலே நின்றார்.


சுசித்ரா, "நான் சொல்லித் தந்தது போல தானே சொன்னீங்க... அவனுக்கு ஒரு குழந்தைக்கு அப்பாவாக வாய்ப்பில்லன்னு தெளிவா சொன்னீங்களா..." என்க மறுபக்கம் ஏதோ கூறப்பட்டதும்,


"ஓக்கே... இந்த விஷயம் வெளிய தெரியக் கூடாது... முக்கியமா சர்வா காதுக்கு போக கூடாது... அப்படி தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியும் தானே..." என மறுபக்கம் இருந்தவரை மிரட்டி விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.


பேசி விட்டு திரும்பிய சுசித்ரா தன் பின்னே நின்றிருந்த ஈஷ்வரியைக் கண்டு அதிர்ந்தார்.


சுசித்ரா, "அ..அத்த.. நீங்க எப்போ வந்தீங்க.." எனத் தடுமாற,


"யாரு கிட்ட பேசிட்டிருந்த சுச்சி... ஏன் சர்வாவால ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியாதுன்னு சொன்ன... நீ சொல்றது உண்மையா..." எனக் கேள்விகளை அடுக்கினார் ஈஷ்வரி.


சுசித்ரா, "ஐயோ... அப்படி எதுவும் இல்ல அத்த... அது... நான்... ஹா.. அது அந்த நித்யாவ சர்வா கிட்ட இருந்து பிரிக்கத் தான் நம்ம ஃபேமிலி டாக்டர் கிட்ட அப்படி சொல்ல சொன்னேன்... நான் தான் சர்வா கிட்ட அப்படி சொன்னேன்... நிச்சயம் அவன் நம்ம ஃபேமிலி டாக்டர்ட தான் போவான்னு தெரியும்.. அதான் முன்னாடியே அவர் கிட்ட சொல்லி வெச்சேன்... இனி சர்வாவே நித்யாவ இந்த வீட்ட விட்டு அனுப்பிடுவான்..." எனக் கூறிப் புன்னகைக்க,


ஈஷ்வரி, "நீ நிஜமா தான் சொல்றியா சுச்சி... என் பையனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லல்ல.." என்க,


"சர்வாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல அத்த... நீங்க கவலைப்படாதீங்க... நித்யா நிச்சயம் சர்வாவ மன்னிக்க மாட்டா... சர்வாவே அவள வீட்ட விட்டு அனுப்பினா அவ போய்டுவா.. கூடிய சீக்கிரம் நீங்க ஆசப்பட்டது போல நானே உங்க வீட்டு மருமகளா வருவேன்..." என்ற சுசித்ரா,


"அதுக்கப்புறம் இந்த மொத்த சொத்தும் எனக்குத் தான்..." என மனதில் நினைத்தாள்.


_______________________________________________


நாட்கள் வேகமாக உருண்டோடி சஜீவ் மற்றும் நித்ய யுவனி ஒழுங்காக முகம் பார்த்தே ஒரு மாதம் ஆகிய நிலையில் அன்று சஜீவ்வுடன் பேசியே ஆக வேண்டிய கட்டாயத்தில் நித்ய யுவனி அவன் வரும் வரை தூங்காமல் காத்திருந்தாள்.


ஆனால் மறுநாள் விடிய சற்று முன்னர் தான் வீட்டுக்கு வந்தான் சஜீவ்.


களைப்பாக வீடு வந்த சஜீவ் நித்ய யுவனி இன்னும் உறங்கிக் கொண்டிருப்பாள் என நினைத்து அறை விளக்கை ஒளிர விட அவளோ கட்டிலில் சாய்ந்து கால்களில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள்.


"யுவி.." எனத் தொண்டை வரை வந்த வார்த்தையை விழுங்கிய சஜீவ் அமைதியாகக் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.


சஜீவ் குளித்து விட்டு வெளியே வர அவன் முன் வந்து நின்றாள் நித்ய யுவனி.


சஜீவ் அவளைக் கடந்து அறையை விட்டு வெளியே செல்லப் பார்க்க அறைக் கதவு பூட்டி இருந்தது.


நித்ய யுவனி அவனுக்குப் பின்னிருந்து, "கீ என் கிட்ட... நான் தான் டோர லாக் பண்ணேன்... இல்லன்னா நீ ஓடிருவியே..." என நக்கலாகக் கூற,


சஜீவ் நித்ய யுவனியின் பக்கம் திரும்பாது, "கீய கொடு நித்யா.." என்றான்.


"ஹ்ம்ம்... நித்யா... சரி தான்... ஏன் குடுக்கனும்..." என நித்ய யுவனி அமைதியாகக் கேட்க,


சஜீவ், "நான் வெளிய போகனும்... டோர ஓப்பன் பண்ணு.." என்றான் அழுத்தமாக.


நித்ய யுவனி, "முடியாது சர்வேஷ்... நான் இன்னைக்கு உன் கூட பேசியே ஆகனும்... எதுக்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்..." என்க,


தன் கையை இறுக்க மூடி தன்னைக் கட்டுப்படுத்திய சஜீவ், "ஏன்னா நான் உன்ன வெறுக்குறேன்... எனக்கு உன்ன பிடிக்கல... இந்த வீட்ட விட்டுப் போ நீ.." எனக் கத்த நித்ய யுவனியின் முகத்தில் ஒரு கசந்த புன்னகை.


நித்ய யுவனி, "நீ உன் இஷ்டத்துக்கு தாலி கட்டி கூட்டிட்டு வருவ... நீ போன்னு சொன்னதும் நான் இந்த வீட்ட விட்டு போகணுமா... நீ என்ன என்னை உன் வீட்டு நாய்னு நெனச்சிட்டு இருக்கியா..." என சற்று கோவமாகக் கேட்கவும் அதுவரை பொறுமை காத்த சஜீவ் நித்ய யுவனியின் பக்கம் திரும்பி,


"நீ என்ன வேணாலும் நெனச்சிக்கோ... தயவு செஞ்சு என் வீட்டை விட்டும் என் வாழ்க்கைய விட்டும் நிரந்தரமா போய்டு... எனக்கு உன் முகத்த பார்க்கவே பிடிக்கல... வேணும்னா கை எடுத்துக் கும்பிடுறேன்... ப்ளீஸ்... போய்டு.." என்றான்.


சஜீவ் அவ்வாறு கூறவும் நித்ய யுவனியின் மனதில் வேதனை குடி கொள்ள, "ஏன்னு மட்டும் தெரிஞ்சிக்கலாமா.." என்றாள் அமைதியாக.


சற்று நேரம் பதில் கூறாமல் அமைதி காத்த சஜீவ் ஒரு முடிவெடுத்தவனாய் கண்ணை அழுத்த மூடித் திறந்தவன், "என்னால ஒரு குழந்தைக்கு அப்பா ஆக முடியாதுன்னு உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு... அப்படி இருந்தும் நீ என்னை விட்டு போகாம இருந்ததுக்கு காரணம் இந்த சொத்து தானே... சுச்சி போல நீயும் சொத்துக்காகத் தான் என் கூட இருந்திருக்க... ஒரு வேளை உனக்கு என் மேல உண்மையான காதல் இருந்திருந்தா அன்னைக்கு நான் பீச்ல வெச்சி உன் கிட்ட உண்மைய சொன்ன போதே நீ என்னை மன்னிச்சிருப்ப... ஆனா அப்போ கூட உன் மனசு மாறல... அதுலயே புரிஞ்சிடுச்சு நீ சொத்துக்காகத் தான் என் கூட இருக்கேன்னு..." எனத் தெரிந்தே நித்ய யுவனியை வார்த்தையால் வதைத்தான் சஜீவ்.


கண்களை மூடி நெற்றியை அழுத்தத் தேய்த்த நித்ய யுவனி பெருமூச்சு விட்டபடி சஜீவ்வின் முகம் பார்த்தான்.


அவனோ அவ்வளவு நேரம் பேசியும் ஒரு தடவை கூட அவள் கண்களைப் பார்க்கவில்லை.


தற்போது கூட வேறெங்கோ பார்த்தபடி இருக்க தன்னவனின் மனம் புரிந்தவள் அமைதியாக கப்போர்ட்டை திறந்து தன் உடைமைகளை பேக் செய்தாள்.


சஜீவ் அப்போது தான் உதித்த வெய்யோனை வெறித்தபடி இருக்க நித்ய யுவனியின் பார்வையில் பட்டது அன்று அவள் மறைத்து வைத்த சஜீவ்வின் ரிப்போர்ட்.


அதனைக் கையில் எடுத்தவள் தன் ஹேன்ட் பேக்கிலிருந்த இன்னொரு ஃபைலையும் எடுத்து கட்டிலில் இருந்த தலையணையின் கீழ் வைத்தாள்.


சஜீவ் அவளுக்காகத் தந்த பரிசை எடுத்து ஒரு நொடி நெஞ்சோடு அணைத்தவளின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் வடிந்தது.


அதனையும் தன் பேக்கில் பத்திரமாக வைத்து விட்டு சஜீவ்வைத் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறினாள் நித்ய யுவனி.


அறைக் கதவு மூடப்படும் சத்தம் கேட்டதும் சஜீவ் திரும்பிப் பார்க்க அறையில் இருந்த வெறுமை நித்ய யுவனி சென்று விட்டதை உறுதிப்படுத்த மடிந்து கீழே அமர்ந்தான்.


சஜீவ், "ஐம் சாரி யுவி... ஐ லவ் யூ அ லாட்... நீ ஹேப்பியா இருக்கனும்... அதுக்கு நீ என்னை விட்டு தள்ளி இருக்கனும்.." என அழுதான்.


நித்ய யுவனி தன் பைகளுடன் கீழே இறங்கி வருவதைக் கண்டு பிரபு அதிர சுசித்ராவும் ஈஷ்வரியும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.


பிரபு, "நித்யாம்மா... பெட்டிய தூக்கிட்டு எங்கடா போற.. என்னாச்சு... திரும்ப உனக்கும் சர்வாவுக்கும் ஏதாவது பிரச்சினையா.." என்க,


அவரைப் பார்த்து புன்னகைத்த நித்ய யுவனி, "இல்ல மாமா... நீங்க கவலைப்பட வேணாம்... மைன்ட் டிஸ்டர்பா இருக்கு... கொஞ்ச நாளைக்கு எங்க வீட்டுல போய் இருந்துட்டு வரேன்..." என்று விட்டு வெளியேறினாள்.


❤️❤️❤️❤️❤️


- Nuha Maryam -
 
Top