• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நாட்டிய பாவை

Sowndarya Umayaal

உமையாள்
Staff member
Joined
Jul 30, 2021
Messages
205
வீட்டுத் திண்ணையில் கைகள் இரண்டையும் கன்னத்திற்கு ஆதரவாய் கொடுத்து வீதியில் ஒரு கண்ணும், வீட்டிற்குள் ஒரு கண்ணுமாய் அமர்ந்திருந்தது அந்த பொம்மை.

"இத்துண்டு இருந்துட்டு இந்த சின்ன குட்டிக்கு என்ன கோபம் வருது பாரு" என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் அந்த பொம்மையின் அம்மா, கேத்தரின்.

வீதியின் முனையில் ஆட்டோவின் சப்தம் கேட்டவுடனே
வில்லில் இருந்து புறப்படும் அம்பாய் விரைந்தது அந்த பொம்மை ஆட்டோவை நோக்கி.

"ப்பா... என்கு ததை அடனும்.." என்றாது அதன் தந்தை ஆட்டோவில் இருந்து இறங்கும் முன்.

அந்த பொம்மையானதின் பெயர் கடலரசி. நான்கு வயது கூட முடியாத அக்குட்டிக்கு பரதம் மேல் கொள்ளைப் பிரியம்.

சந்திரன், "என் அரசிக்கு ஆடனும்மா.. வீட்டுக்குள்ள போய் சாப்பிடு ஆடலாம் டா.. வாங்க போலாம்" என்றவர் அரசியைத் தூக்கிக் கொண்டு வீட்டினுள் சென்றார்.

"இந்தாருங்க.. இந்த சின்ன குட்டிக்கு என்ன கொழுப்பு ஆடனுமாமே இவளுக்கு. என்னனு கேளுங்க இவகிட்ட"

"பிள்ளையை ஏசலனா உமக்குத் தூக்கம் வராதே.. டீ.வீ'ல பாட்டப் போட்டா பிள்ளை ஆடபோகுது.. இதுக்கு எதுக்குவ கத்தற" என்றவர் தன்னை சுத்தம் செய்யும் பொருட்டு குளியலறைக்குள் சென்றார்.

"நான் என்ன சொல்லுறேன்.. இந்த மனுசன் என்ன சொல்லிட்டு போறாவா" என்று கன்னத்தில் கை வைத்து நின்றுவிட்டார் கேத்தரின்.

கடலரசியோ, அவர்கள் வீட்டில் மாத நாள்காட்டியின் அட்டை படத்தில் இருந்த புகழ்பெற்ற நாட்டிய கலைஞரான 'பத்மா சாரதி'யின் ஒரு அடவைப் பார்த்து அப்படியே இவளும் நின்றிருந்தாள்.

குளியலறை இருந்து வெளியே வந்த சந்திரன் அதைப் பார்த்து அசந்து நின்றுவிட்டார்.

நான்கைத் தொட இன்னும் நாட்கள் அவளுக்கு இருக்க, அவள் நின்றிருந்த பாவம் அவரை மிகவும் ஈர்த்தது.

அவரின் பார்வை மகளிடம் இருப்பதை உணர்ந்த கேத்தரின்,

"இவளுக்கு பூர்ணிமா கிட்ட ஆட கத்துக்கணுமாம்.." என்றார் பொதுவாக.

சந்திரனின் முகத்தில் ஒரு மின்னல் கீற்று. இச்சிறு குழந்தை 'தானே நடனம் பயில வேண்டும் என்று கேட்டிருக்கிறா' என்றே தோன்றியது அவருக்கு.

கடலரசிக்கு என்னும் மழலை மொழி கூட மறையவில்லை. அவள் எப்படி நடனம் கற்பால் என்று சந்திரனின் எண்ணம் வட்டமடிக்க,

கேத்தரினோ, "முதல்ல இவள ஸ்கூல்ல சேர்க்கனும். வீட்டிலே இருந்தா அங்க இங்க போயிட்டு அத கத்துக்கிறேன் இத கத்துகிறேன்'னு தான் சொல்லுவா.." புகார் வாசித்தவாறே சமையல் அறைக்குச் சென்றுவிட்டார் அவர்.

ஆனால், மகளின் ஆசையைய் தட்டிக் கழிக்க முடியவில்லை சந்திரனால். அதற்கும் ஒரு காரணம் இருந்தது.

அவள் நின்றிருந்த பாவனையும் கூட அவரை வெகுவாகவே ஈர்த்தது.

இரு நாட்கள் சென்றிருந்த நிலையில் அன்று சந்திரனின் வீட்டில் பெரும் சண்டை கணவன் மனைவிக்கு இடையே.

"நமக்கு இந்த நாட்டியம் எல்லாம் சரியா வராதுங்க. அவ சின்ன புள்ள, அத பேச்சைக் கேட்டுப் போய் நாட்டிய வகுப்பில சேர்த்துவிட்டிருக்கிங்க. இதெல்லாம் நல்லாவா இருக்கு"

"எதுக்கு இப்போ இந்த குதி குதிக்கிறவ? அரசி ஆசைபட்டா சேர்த்து விட்டுட்டேன். ஏன் உன்கிட்ட கூடத்தானே சொல்லிட்டு போனே?"

"ஆமா.. போற போக்குல ஏதோ சொன்னீரு.. அது சரியா கூட கேட்கல எனக்கு"

"சரி இப்போ என்ன தான் சொல்ல வர நீ?"

"எதுக்கு இப்போ இந்த நாட்டியம் எல்லாம் அரசிக்கு? நமக்கு ஒத்துவருமா முதல்ல? நாளபின்ன யாராவது கேட்டா நான் என்ன சொல்ல?" என்ற கேத்தரினின் பேச்சு சந்திரனுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், மகளின் விருப்பம் அவருக்குப் பெரிதாகவே இருந்தது.

"அடியேய்.. நீ சொல்லுறது எனக்கு புரியாம இல்ல, நாட்டியம்‌ ஒரு கலை! அத யாருவேணாலும் கத்துக்கலாம். இதுல அவங்கதான் கத்துக்கணும் இவங்கதான் கத்துக்கணும்'னு வரைமுறை எல்லாம் எதுவும் இல்லை.

தவிர நீ பயப்படுற மாதிரி யாராவது இப்போ கேட்டா தைரியமா சொல்லு.. 'என் பொண்ணு ஆசை, அவ ஆசைய நிறைவேத்தறது தான் எங்க ஆசை'னு!' மீறி யார் பேசினாலும் சரிதான் போடானு விட்டுரு.

"அதுக்கு மட்டும் இல்லைங்க..
சாமி எல்லா கும்பிட்டனும், ரொம்ப சுத்தமா இருக்கனும்..
பொட்டு, அலங்காரம் அது இது'னு.." என்று கேத்தரின் இழுக்க,

"ஏன் நீ கூடத்தான் இப்போ பொட்டு வச்சிருக்க. நீ வைக்கலாம் என் மக வைக்கக் கூடாதா? பொண்ணுனா அலங்காரம் பண்ணித் தானே ஆகனும்? ஏன் ஒரு கிருத்துவ பொண்ணு, நடராஜருக்குப் பூஜை தான் பண்ணக்கூடாதா?

மொதல்ல உன் எண்ணத்தைத் தூக்கிப் போடு. இங்க எந்த மதக் கடவுளும் அந்த மதத்தவங்க மட்டும் தான் கோவில் உள்ள வரும்னு சொல்லுறதும் இல்லை, என்னை மட்டும் தான் நீ வணங்கனும்னு யாருக்கும் போதிக்கறதும் இல்லை. கையெடுத்து கும்பிட்டா எல்லா கடவுள் ஒன்னு தான்.

உன் மனசில வேற எந்த எண்ணம் இருந்தாலும் முதல்ல அத அழி. என் மக பரதம் கத்துக்க தான் போறா, அவ கூட நான் துணையா எப்பவும் இருப்பேன். இத மட்டும் மறந்திடாத" என்றவருக்குக் கோபம் மட்டுமே வியாபித்திருந்தது அப்போது.

சாதி, மதம், இனம், மொழி, நிறத்தைக் கடந்தது தானே கலை. இன்னாருக்குத் தான் அது இருக்க வேண்டும் என்ற வரைமுறை எதுவும் உள்ளதா என்ன?

கேத்தரினின் பேச்சு சந்திரனுக்கு ஆரம்பம் தொட்டோ பிடிக்கவில்லை. 'ஏன் தன் மகள் பரதம் கற்கக் கூடாதா என்ன?'
என்ற கேள்வி அவரின் மனதில்
எழுந்துகொண்டே இருக்க, கேத்தரின் 'வேண்டாம்' என்ற சொல்லு அவரை 'மகள் பரதம் கற்றே தீர வேண்டும்' என்ற எண்ணணைத் கொண்டு வந்தது.

அது மட்டுமா காரணம்?
நிச்சயம் இல்லை!

"அரசி, பின்னாடி சாயாத. நேர நின்னு, இடுப்பில கை வெச்சு காலைத் தட்டு.." என்ற பூர்ணிமாவின் குரல் வெளியே வரை கேட்க, மகளைப் பார்க்க வந்த சந்திரனின் காதிற்கும் அது தப்பவில்லை.

அரசியின் நடனத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற மெல்ல எட்டிப் பார்த்தார் சந்திரன் உள்ளே.

அன்று தானே அவள் அங்குச் சேர்ந்திருந்தாள். சிறு சிறு கை, கால் அசைவுகள் மட்டுமே பூர்ணி அரசிக்கு கற்றுத் தர,
அதை அவளும் ஆர்வமாகவே செய்தாள்.

வெளியே நின்று பார்த்த சந்திரனுக்கோ, மகள் பரதம் கற்றுக் கொள்கிறாள் என்ற ஆனந்த தாங்கவில்லை.

பின் மகளை அழைத்துக் கொண்டு வீடு வந்தவர், மனைவியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

குழந்தை சற்று பொறுத்துத் தூங்கிவிட, இரவு உணவு முடித்த கையுடன் சந்திரனும் படுத்துவிட்டார்.

கேத்தரினிக்கு அவரின் ஒதுக்கம் உள்ளுக்குள் குத்த,
மெல்ல மகளைத் தள்ளிப் படுக்க வைத்தவர் சந்திரனின் அருகே சென்று படுத்துக் கொண்டார்.

அவரும் மனைவியின் நிலை உணர்ந்தாளும் கேத்தரினின் எண்ணம் மாற வேண்டும் என்ற நினைப்பில் அமைதியாகவே இருந்தார்.

"மச்சா.. நீங்க தூங்களேனு தெரியுது. திரும்புங்களேன்"

"..."

"திரும்பு மச்சா.." என்றவர் சந்திரனைத் திருப்ப,

"என்னடி.." என்றார் சற்று கடினக் குரலில் கோபம் போல் காட்ட.

"நடிக்காதயா. என்ன நினைப்பு ஓடுது மனசுல அத சொல்லு"
என்றார் அவர் கண்களை பார்த்தவாறே.

"உன் நினைப்பு தப்பு'னு உனக்குப் புரிய வைக்கப் பார்க்கிறேன். அதான் ஓடுது. போதுமா" என்ற சந்திரனைக் கூர்ந்து பார்த்த கேத்தரின்,

"இல்லையே வேற ஒரு சங்கதியும் சொல்லுதே உன் கண்ணு" என்றவர் சந்திரனின் கண்களின் முத்தமிட, முத்தமிட்டவரை அணைத்துக் கொண்டார் சந்திரன் என்ற ஆல்பர்ட் சந்திரன்.

நொடிகள் நகர, மனைவியை விலக்கியவர் அவரின் நுதலில் இதழ் ஒற்றி,

"இன்னிக்கு அரசி ஆடுனத பார்த்தப்போ மனசு நிறஞ்சு போச்சு மேரிமா"

"என்ன பூர்ணி இன்னிக்கே ஆடச் சொல்லிக் கொடுத்தாலா? நான் கேட்டப்ப பத்து நாள் போனாதான் சொல்லுவேன்னா?" என்றவரின் பேச்சைக் கேட்ட சந்திரன்,

"நீ போய் என்னத்த கேட்ட?" என்றவரின் பேச்சில் கோபம் நிறைந்திருந்தது.

"உங்கபாட்டுக்கு போய் நீங்க பிள்ளைய சேர்த்துவிட்டா மட்டும் போதும்? இடம் எப்படி, மனுச மக்கா எப்படி? அங்க யாரு என்ன பண்ணுறாவன்னு பார்க்க வேண்டாமா? நாட்டியம்'னா வெரும் அது மட்டும் இருக்காது..
என்ன, என்ன நாம பண்ணனும் எல்லாம் கேட்கோனுமில்ல."

"இவ்வளவு இருக்கா.. நா யோசிக்கவே இல்லையே இதையெல்லாம்" என்ற சந்திரனின் பேச்சால் அவர் விலாவில் ஒரு அடி போட்ட கேத்தரின்,

" ஊருக்கு முன்ன கால்ல சுடு தண்ணீ ஊதின மாதிரி போய் பிள்ளைய சேர்த்தா மட்டும் போதாது. என்ன ஏதுன்னு விசாரிக்கனும். என்ன தான் பூரணி நமக்கு தெரிஞ்சாலும் அவளும் அங்க வேலைக்கு தானே போறா! அப்போ நாமும் பார்க்கனும்'ல" என்றவரின் பேச்சு பெண் குழந்தையிருக்கும் பெற்றவர்கள் நினைக்கும் ஒன்று தானே.

ஆண் என்ன, பெண் என்ன..
இருக்கும் கவனம் இருந்து தானே ஆகவேண்டும்!

"சரி, எனக்குப் பதிலாக நீ கேட்டையே அது போதும்." என்றவருக்கு மனது நிறைவாக இருந்தது.

"நா ஒன்னும் தப்பா சொல்லலை மச்சா. நாளபின்ன யாரும் கேட்டா என்ன சொல்ல'ன்ற கேள்வி தான் கரையான் மாதிரி மனச அரிச்சுது. கூட, எனக்கும் இதுவெல்லாம் புதுசு தான. ஒரு தயக்கம்.." என்ற கேத்தரின் சந்திரனைச் பார்க்க,

"புரியுது ம்மா. எத்தன பேர் நம்மல மாதிரி இருப்பா சொல்லு? சரி, யாரோ என்னவோ நினைக்கட்டும், எனக்கு நீ அப்படிப் பேசினது தான் தாங்கல"

"அதான் சொல்லுறேன்'ல மச்சா.
பிள்ள நாட்டியம் கத்துக்கட்டும் எனக்கு ஒன்னும் பிரச்சனையில்ல. ஆனா மத்தவங்க பேச்ச கேட்கனுமே?"
என்றவரின் பதில் சந்திரனுக்குக் கோபமே வந்தது.

"என்ன மத்தவங்க பேசுவாங்க?
அந்த மத்தவனா நமக்குச் சோறு போடுறான்? இல்லை நாளபின்ன நமக்கு ஏதாவதுனா பணங்காசா தருவான்?

அடுத்தவன் முன்னேற்றத்தப் பார்த்தா அதை எப்படி தடுக்கனும்னு ஒரு இரண்டு பேர் இருப்பாங்க.. நீ சொல்லுற மத்தவங்க அவங்கதான்.
இனி,அவங்களுக்குப் பதில் சொல்ல பழகிக்க.

நாம் யார் வழியிலும் குறுக்க போகலேனாலும் மத்தவன் வராமையா இருப்பான்? வந்தா எப்படி அவனை அகற்றனும்னு தெரிஞ்சு வைச்சுக்கோ மேரி"
என்றவரின் நினைவுகள் அவரின் அன்னையிடம் சென்றது.

சந்தான மேரி, சந்திரனின் தாயார். பருவ வயதில் 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தைப் பார்த்தவரின் எண்ணத்தில் முழுவதும் இருந்தது என்னவோ நாட்டியம் தான்.

நடிகையும் நாட்டிய கலைஞரான பத்மினி அம்மாவின் ரசிகையான சந்தான மேரி, பரதம் கற்க வேண்டும் என்ற அவா அவர் மனதில் ஆழ வேரூன்றியது.

இந்த காலத்திலாவது அனைவரும் பரதம் கற்றுக் கொள்கின்றனர். ஆனால் அப்போது சந்தான மேரியின் முடிவுக்குப் பலத்த எதிர்ப்பு.

ஒவ்வொருவரும் எதிர்க்க எதிர்க்கச் சந்தான மேரியின் மனதில் பரதத்தின் மீதான அவரின் ஆசை மேலும் மேலும் பெருகியது.

இது இனி சரி வராது என்று நினைத்த சந்தான மேரியின் தந்தை, அவருக்குத் திருமணத்தையும் செய்து முடித்துவிட்டார்.

காலப்போக்கில் அவர் மறந்துவிடுவார் என்று அனைவரும் நினைத்திருக்க,
பரதம் கற்க வேண்டும் என்பது நாள் போக்கில் ஒரு வெறியாகவே மாறியது அவருக்கு.

சந்தான மேரியின் ஆசையை அறிந்த அவரின் கணவர் அந்தோணி, யாருக்கும் தெரியாமல் அவரின் தோழி ஒருவரிடம் நாட்டிய வகுப்பிற்குச் சந்தான மேரியை சேர்த்துவிட்டார்.

உலகை வென்ற மகிழ்ச்சி அப்போது சந்தான மேரிக்கு. ஆனால் அதற்கும் ஆயுள் சொற்பம் என்றே கடவுள் விதித்திருந்தார் போலும்.

அவர் நடனம் கற்க ஆரம்பித்த இரண்டாம் மாதமே கருவுற்றிருந்தார். அவரின் நடனத்திற்கு அந்தோணி தடை விதித்தார்.

அதனால் ஏற்பட்ட வெறுப்பு, நடனம் கற்க முடியவில்லை என்ற கோபம் முழுவதும் அவர் வயிற்றில் இருந்த பிள்ளையான சந்திரனிடம் திரும்பியது.

மாதங்கள் கடந்தன.. சந்திரனும் பிறந்துவிட்டார். எல்லா தாயைப் போலவே தான் இருந்தார் சந்தான மேரியும் அப்போது வரை நடனத்தை மறந்திருந்தார் தற்காலிகமாக.

வருடங்கள் கடந்தது. சந்தான மேரியின் உள்ளக் குமுறல் மெல்ல தலைகாட்டத் துடங்கியது. பரதம், பரதம், பரதம்‌ என எந்நேரமும் பரதத்தைப் பற்றிய பேச்சுக்களும் நடனமும் அவ்வீட்டில் நிறைந்திருந்தன.

நாள் போக்கில் அவரின் இயலாமை, அதாவது பரதம் கற்க முடியா அவரின் நிலையை நினைத்து மனம் வெதும்ப அந்த நினைப்பே மன நோயாக மாறியது அவருக்கு.

சந்திரனின் பருவ வயது அது. அதனால் தாயின் நிலை ஒரு அளவிற்குப் புரிந்தும் இருந்தது அவருக்கு. ஏன் தன் தாய்க்கு இந்த நிலை? என்ற கேள்வி எழ, கேட்டார் அனைவரிடத்திலும்.

சொன்னார்கள், அவரின் பரதத்தின் மீதான பித்தினை!

மேலும் அது அவர்களுக்கு எதிரானது என்று கூற அந்த வயதிலும் கோபமே வந்தது சந்திரனுக்கு.

பின் ஒரு மாதத்திலேயே சந்தான மேரியும் இறைவனடி சேர்ந்தார் மனதில் அவரின் நிறைவேறாத ஆசையைச் சுமந்தபடி.

இவையனைத்தையும் நினைத்துப் பார்த்த சந்திரன் உறுதியாக இப்போது நினைத்தார் என்ன ஆனாலும் அவர் மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று.

நாட்கள் அதன் போக்கில் சென்றன. அரசியும் நாட்டியம் பயின்றால் உயிர்ப்பாக, விருப்பமாக.

உறவினர்கள், ஊராரும் பேசினர் 'நமக்கு இது தேவையா?' என்று. ஆனால் சந்திரன், கேத்தரினின் பதில் அவர்களின் வாயை மூட வைத்தது.

மகளின் இறைவணக்கம், அடவுகள் அவள் ஆடும் பாங்கு என ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்ப்பார் சந்திரன்.

முதல் முதலில் அரசி நாட்டிய உடையும் அலங்காரமும் அணிந்து அவர் முன் நின்று வணக்கம் வைத்ததை அவர் பிறவிப் பயனாகவே பார்த்தார். அவ்வளவு பூரிப்பும் ஆனந்தமும் அவர் முகத்தில்.

கடலரசியின் சலங்கை பூஜை அவளின் பதினொரு வயதில் நடந்தது. கண்களின் நீருடன் மகள் நடனத்தைப் பார்த்திருந்தனர் பெற்றவர்கள் இருவரும்.

அவள் ஏறாத மேடையில், அ
வள் ஆடாத ஜதியில்லை,
அவள் வணங்காத குருவில்லை..

அவளின் உயிர்ப்பான பாவனை பார்ப்பவரைக் கூட அசைத்துத் தான் பார்க்கும். ஊன் உருக இருக்கும் அரசியின் நடனம்.

பாட்டின் தன்மைக்கு ஏற்ப அவளின் முக பாவங்கள் மகிழ்ச்சி, துக்கம், அழுகை, சிரிப்பு, கோபம் என் மாறி மாறி வந்து நம்மை அவளின் நவரச ஆட்டத்தில் ஒன்ற வைத்துவிடுவாள் அப்பருவக் குமாரி.

பதினேழு வயதில் அவளின் அரங்கேற்றம். ஆனால் அதற்கு ஒரு வாரம் முன்பு காலில் ஒரு விபத்தினால் காயம் ஏற்பட கலங்கித் தான் போனர் அனைவரும்.

என்ன செய்ய என்று தெரியாத நிலை. சந்திரனும் இந்த நிலையில் அவளின் அரங்கேற்றம் நடைபெற வேண்டாம் என்றே எண்ணியிருந்தார்.

ஆனால், கேத்தரினால் அவ்வாறு இருக்க முடியாமல் அரசிக்கு நடைப் பயிற்சி அளித்து அவளை ஆடவும் வைத்தார் அப்பேரும் மேடையில்.

யார் அரசியின் நடனத்தை வேண்டாம் என்று நினைத்தாரோ அவரே அவளின் விருப்பம் அறிந்து இப்போது அவளின் வெற்றிக்கும் துணையாக மாறியிருக்கிறார்.

கடலரசி அவளின் அரங்கேற்றம் நடனம் முடிந்து கண்ணீர் வழிய இரு கரம் கூப்பி நின்றிருந்த பாவனை.. அப்பப்பா சந்திரனுக்கு அவர் தாயே வென்ற உணர்வைக் கொடுத்தது அப்போது.

மேலை நாட்டவர் பலர் நம் கலாச்சாரத்தையும் கலையின் மீதான ஆர்வமும் கொண்டு இன்று பரதம், குச்சிப்புடி, கதகளி என்ற பல நடனக் கலைகளைக் கற்றுக்கொள்கின்றனர்.

கலையைக் கலையாகப் பார்த்தால் அது நம்மை முன்னேற்றும்.

மதத்தின் பெயரால் பார்த்தால் அது கலையே அல்ல.

உங்கள் குழந்தைகளின் ஆசை நியாயமானதாக இருப்பின் அதை நிறைவேற்றுங்கள்.
காரணம் பல கூறி அவர்களின் ஆசையை இயல்பைத் தவிர்த்துவிடாதீர்.

இங்கு, தன் தாயிக்குக் கிடைக்காத ஒரு வரத்தை தன் மகளுக்காக என்ன வந்தாலும் நேர்ந்தாலும் சரியே என்ற எண்ணத்தில் அவர் மகள் ஆசைப்பட்ட நடனத்தை அவளுக்கு அளித்த தந்தையானவர், கடலரசிக்கு ஒரு பொக்கிஷம்.

அதேபோல, மகளின் மகிழ்ச்சியும் ஆசையும் முக்கியமான பொக்கிஷமாகவே கருதினார், ஆல்பர்ட் சந்திரன்.


முற்றும்..
 
Top