• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
பொழுது மாலையை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்…

பசுக்கள் எல்லாம் மேய்ப்பவர் இல்லாமலேயே தங்களது வீடுகள் நோக்கி நடை போட, பசுக்கன்றுகள் துள்ளிக் குதித்தபடி தங்களது தாய்மாரைப் பின்தொடர்ந்து ஓடின…

அந்த நேரம் அந்தப் பசுக் கூட்டத்தைக் கடந்து சென்ற சிறுவன் ஒருவன்
“ தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு
உடன் துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி…”
என்று தலையசைத்துப் பாடிய படி சென்றான்…

அம்மன் கோவில் கோபுரத்தின் உச்சிக்கு மேற்கு மூலையாக அதுவரை தரிசனம் தந்த சூரியன் மெதுவாகக் கீழே இறங்கிக் கொண்டிருந்தான்…

அவனது மஞ்சள் ஒளி மரங்களை ஊடுருவிக் குளத்து நீரில் பட்டுத் தெறித்தது மட்டுமன்றி
இந்தக் காட்சிகளையெல்லாம் இரசித்துக் கொண்டு குளத்தின் அருகே மரக்குற்றியில் அமர்ந்திருந்த கயல்விழியின் முகத்திலும் பட்டுத் தெறித்தது...

குளத்தங்கரையில் சடைத்து வளர்ந்து, தன் இலைகளை அசைத்து அசைத்து இதமான தென்றல் காற்றை அந்த இடமெங்கும் உணரச் செய்து கொண்டிருந்த அரச மரத்தின் கீழ் கருங்கல்லால் வடிக்கப் பட்ட சிலையின் உருவில் காட்சி தந்து கொண்டிருந்தார் மோதகப் பிரியரான பிள்ளையார்…

சிறிது நேரத்திற்குக் குளத்தங்கரைப் பிள்ளையாரையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கயல்விழி…

அவளுக்குப் பின்புறமாக இருந்த இன்னொரு மரக்குற்றியில் அமர்ந்தபடி அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடி இருந்தான் கவியரசன்...

இருவரும் ஒரு ஏகாந்தமான சூழ்நிலையில் அசையாமல் நெடுநேரமாக இருக்க, அரசமரத்து இலைகள் மட்டும் 'எங்களால் உங்களைப் போல அசையாமல் எல்லாம் இருக்க முடியாதுப்பா' என்று வேகமாக அசையத் தொடங்கின…

அந்த நேரத்தில் உருவான இளந்தென்றல் கயல்விழியின் முகத்தை வருடிச் சென்றதைப் பார்த்த கவியரசன் பொறாமை கொண்டபடி முகத்தைத் திருப்பிக் கொண்டான்…

அத்தானும் அக்காவும் சமாதானமாகப் பேசிக் கொள்கிறார்களா இல்லாவிட்டால் சண்டை போட்டுக் கொள்கிறார்களா என்று பார்க்க வந்த எழிலரசி தன் தலை மீது கை வைத்துக் கொண்டாள்…

ஏதோ அசைவில் எழிலின் பக்கமாகத் திரும்பிப் பார்த்த கவியரசன் என்ன என்பது போலச் சைகையில் கேட்டான்…

அவனது சைகைக்குப் பதிலாக அவனுக்கு மட்டுமே கேட்கும் படியாக 'அது தான் நானும் கேட்கிறேன் என்ன அத்தான் செய்கிறீர்கள்' என்று கேட்டாள்...

‘என் தேவதையை இரசித்துக் கொண்டிருக்கிறேன்'
என்று இரகசியக் குரலில் கூறியவனின் அருகில் மெதுவாகப் போய் அமர்ந்து கொண்ட எழில்…

‘பார்த்து இரசியுங்கள் அத்தான் நீங்கள் பார்ப்பது தெரிந்தால் உங்கள் தேவதை பறந்து போய்விடும்'
என்று வாய் பொத்திச் சிரித்த தன் மச்சினிச்சியின் தலையில் வலிக்காமல் செல்லமாகக் குட்டினான் கவி…

தலையைத் தேய்த்து விட்டபடி அருகில் கிடந்த சிறு கல்லை எடுத்துக் கயல்விழிக்கு அருகாகக் குளத்தில் எறிந்தாள் எழில்…

குளத்து நீர் தெறிக்கத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தவள் திகைத்துப் போய் எழுந்து நின்றாள்…

அவளின் முக மாறுதலைப் பார்த்த கவியரசனுக்கு அவளிடம் பேச வந்தது எல்லாம் மறந்து விட, அப்படியே தானும் எழுந்து நின்று விட்டான்…

இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்த எழில் எப்படியும் இவர்கள் என்னைப் பார்க்கக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும் என மறுபடியும் தலையில் கை வைத்தபடி மரக்குற்றியில் அமர்ந்து விட்டாள்…

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
தனது அறை ஜன்னலின் வழியே தோட்டத்தில் மலர்ந்திருந்த சிவப்பு நிறச் செம்பருத்திப் பூக்களை இமைக்க மறந்து இரசித்துக் கொண்டிருந்தாள் கவிதா…

செம்பருத்திப் பூவென்றால் விமலரூபனுக்குக் கொள்ளைப் பிரியம்
அவனை நினைத்து வாங்கி நட்டு வைத்த செம்பருத்திச் செடியில் இன்று மட்டும் என்னவோ அபூர்வமாக அதிகமான மலர்கள் மலர்ந்து கவிதாவைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன…

அவளுக்கு அந்த நொடியே ரூபனுடன் பேச வேண்டும் என்று ஏக்கமாக இருந்தது…

இதுவரையில் தான் பாராமுகமாகப் பாடுபடுத்தியதில் தன்னை வெறுத்து இருந்தால் என்ன செய்வது என்ற கேள்வி அவளது ஆழ் மனதில் இருந்தாலும்…
அவள் தனது தொலைபேசியை எடுத்து அவனுக்கு அழைத்து விட்டாள்…

அவன் எடுக்கும் போதெல்லாம் தொலைபேசியை அணைத்துத் தூரத் தூக்கிப் போட்டதெல்லாம் அநியாயத்துக்கு நினைவு வந்து அவளைப் பாடாய்ப் படுத்தியது…

தொலைபேசி வாயிலாக ரூபனின் குரல் கேட்கும் வரையில் எடுத்துப் பேசுவானா மாட்டானா என்ற எண்ணமே அவளது தவிப்பை மேலும் அதிகரித்தது…

அவளை சில நொடிகள் தன்னை அறியாமலேயே தவிக்க வைத்து விட்டு அதன் பிறகே விமலரூபன் பேசினான்…

அலைபேசியினூடாக வந்த ரூபனின் குரல் கவிதாவின் செவிக்குள் நுழைந்து உயிர் வரை தீண்டிச் சென்றது…

அந்த நொடியில் அவள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தாங்கள் இருவரும் பிரிந்திருக்கிறோம் என்பதை மறந்தே போய்விட்டாள்…

அவளுக்கு ரூபனுடனான நேசமும் அவனது காதலும் மட்டுமே நினைவில் இருந்தது…

......................................................
கவியரசன் தனது கடந்த காலத்துக் காதல் நினைவுகளைச் சொல்வதனைச் சுவாரஷ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்த விமலரூபனுக்கு அவன் பாதியில் எழுந்து சென்றது வருத்தமாக இருந்தது…

எதுவானாலும் மச்சான் திரும்பி வந்ததும் என்ன பிரச்சினை என்று தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தடன் தோட்டப் பக்கமாகப் போடப் பட்டிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான்…

அவனது எண்ணம் முழுவதும் இப்பொழுது கவிதாவையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது…

அவள் எவ்வளவு பிடிவாதக்காரியோ அதை விட அவன் மீதான அவளது அன்பும் அக்கறையும் கூட அதீதமானது என்பது அவளது அன்புக் கணவனான ரூபனுக்குத் தெரிந்து தானிருந்தது…

இருந்தாலும் அதனை அவனது மனது ஏற்க மறுத்தது…

ஒரு வேளை நிஜமாகவே தன்னை வெறுத்து ஒதுக்கி விட்டாளோ என்று அவனது உள்ளம் உடைந்து தூள் தூளாகி இருந்தது…

அந்த நினைவிலேயே சுழன்று சுழன்று
மூழ்கிக் கொண்டிருந்தவனின் அலைபேசி அவனை அழைத்து அந்தச் சுழற்சிக்குள் இருந்து மீட்டெடுத்தது…

அலைபேசியை எடுத்துப் பார்த்தவன் திரையில் மின்னிய புது எண்ணைக் கண்டதும் யோசனையுடன் அதை அழுத்தி இடது பக்கக் காதுக்குக் கொடுத்தான்…

‘ரூபன் அலைபேசியில் பேசும் போது இடது காதில் வைத்துப் பேசு அது தான் நல்லது உடம்புக்கு'
என்று அடிக்கடி கண்டிக்கும் கவிதாவின் விம்பம் அவனது மனத் திரையில் மின்னியது…

அந்த நினைவுடன் அலைபேசியின் மறு முனை நிசப்தத்தில் மூழ்கி இருந்ததை ஒரு நொடி கவனிக்க மறந்து விட்டான்…

மறு முனையில் அதே நிசப்தம் தொடரவும் பொறுமையின்றி 'யாருங்க நீங்கள்' என்று வினவினான்…

மறுமுனையில் ஒரு கணம் திகைத்து நின்ற கவிக்கு சரசரவென மரம் ஏறும் அணில் போல கோபம் உச்சிக்கு ஏறியது…

‘ஆக மொத்தம் இவனிடம் என் அலைபேசி எண் இல்லை'
என நினைத்தாள்…

தனது பழைய எண்ணை விட்டு புது எண்ணுக்கு மாறியது அவளுக்கு மறந்து விட்டது…

'எதற்கு என் எண் இருக்க வேண்டும் நானாக விலகியதும் விட்டது தொல்லை என்று இருந்திருப்பான் போலத் தடியன்…' என மனதில் தன் கணவனுக்கு சொல்லபிஷேகம் செய்தாள் கவி…

அதற்குள்ளாக 'அழைப்பில் இருந்து கொண்டே தூங்கி விட்டீர்களா யாரு நீங்கள்' எனப் படபடத்தான் விமலரூபன்…

‘இதோ பாருங்கள் நின்று கொண்டே தூங்குவது நடந்து கொண்டே தூங்குவதெல்லாம் உங்களுக்குத் தான் கைவந்த கலை' என்றவளின் குரலில்

‘ஏய் குண்டுமணி நீயா'

‘இதைப் பாருங்கள் இந்தக் குண்டுமணி வண்டுமணி என்றால் எனக்குக் கெட்ட கோபம் வரும் சொல்லி விட்டேன்'

‘சரி சரி இனி அப்படிச் சொல்ல மாட்டேன்'

‘ஏன் ஏன் சொல்ல மாட்டீர்கள் விட்டது தொல்லை என்று ஓடப் பார்க்கிறீர்களா'

‘அதில்லை கவிம்மா'

‘எதில்லை… என்னுடைய அலைபேசி எண் கூட நினைவு இல்லை அப்புறம் என்ன'

‘ஏய் என்ன இது அநியாயம்… நீ தானே உன் எண்ணை மாற்றி விட்டாய்'

விமல்ரூபனின் பதிலில் நாக்கைக் கடித்தபடி தன் தலையில் நங்கென்று கொட்டியவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள்…

இருந்தாலும் அவனுடன் மல்லுக் கட்டும் ஆர்வத்துடன்…

‘அதுக்கென்ன இப்போது… என் புது எண்ணை நீங்களாகவே தேடிக் கண்டு பிடித்திருக்க வேண்டாமோ '
எனக் குரலில் ஒருவித ஏக்கத்துடன் கேட்டாள் கவி…

அவர்கள் இருவரும் சரியாகப் பேசிக் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகி விட்டது…

இருவரும் ஒருவாறு சண்டை போட்டு அதன் பிறகு சமாதானப் புறாவை அலைபேசி வாயிலாக மாற்றி மாற்றிப் பறக்க விட்டு, அதன் பிறகு ஒருவரை ஒருவர் நலன் விசாரிக்க ஆரம்பித்தனர்…

‘கவிம்மா இப்போது தான் என் கூடப் பேச வேண்டும் என்று தோன்றியதா'

‘எனக்குப் பயமாக இருந்தது ரூபன்… எங்கே அம்மா உங்களை அவமானப் படுத்தி விடுவார்களோ என்று'

‘உனக்காக அதை நான் சகித்துக் கொள்ள மாட்டேனா'

‘யாருக்காகவும் நீங்கள் அவமானப் படுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது ரூபன்'

‘கவிம்மா…'

‘கவி வந்து திட்டிய பிறகு தான் ரூபன் எனக்கே புத்தி வந்தது… அம்மாவின் குணம் தெரிந்த பிறகும் கூட அவர்களாக எங்களைச் சேர்த்து வைப்பார்கள் என்று நான் நம்பிக் கொண்டிருந்தது என்னுடைய முட்டாள் தனம் தானே ரூபன்…'

‘எப்போது கவிம்மா நம் வீட்டிற்கு வருவாய்… கிருஷ்ணன் எங்கே உன்னை வெறுத்து விடுவானோ என்று பயமாக இருக்கிறது…'

‘அந்த அளவிற்கு என் கணவன் விட்டு விட மாட்டார் என்று எனக்குத் தெரியாதா'

‘நன்றாகப் பேசுகிறாய் கவி'

‘இருக்காதா பின்னே வக்கீல் விமலரூபனின் மனைவி ஆச்சே… பேசாமல் இருந்தால் தான் ஆச்சரியம்…'

இருவரும் மாற்றி மாற்றி ஐந்து மாதத்துக் கதையையும் பேசித் தீர்த்துக் கொண்டிருந்தார்கள்…

தோட்டத்தில் அமர்ந்திருந்த தந்தையை நோக்கி 'அப்பா' என்றபடி ஓடி வந்தான் கிருஷ்ணன்…

அருகில் வந்ததும் தந்தையின் அலைபேசிக்கு அருகாகத் தனது குட்டிச் செவிகளை வைத்து கொண்டு
'யாதுப்பா' என்று தந்தையின் கன்னத்தைப் பற்றிக் கேட்டான்…

அவனது காதருகில் அலைபேசியை வைத்தான் ரூபன்…

மறுமுனையில் அப்பா என்று கத்தியபடி ஓடி வந்த மகனின் குரலைக் கேட்டு அசையாது நின்றாள் கவி…

மறுபடியும் 'யாதுப்பா' எனக் கண்களால் ஜாடை பேசினான் கிருஷ்ணன்…

‘கண்ணா'

‘ஐஐஐ அம்மாவா'

‘ஆமான்டா தங்கம்'

‘அம்மா வீத்துக்கு வாதியா'

‘வருகிறேன்டா செல்லம்'

‘எப்போ வதுவே'

‘நாளைக்கே வருகிறேன்டா குட்டி'

என்றபடி அலைபேசியைத் துண்டித்தவளின் கண்கள் கலங்கியது…

தன் குரலைக் கேட்ட உடனேயே அம்மாவென்று கண்டுபிடித்து விட்டானே அவளது குட்டித் தங்கம்…

அவள் நொடியில் முடிவெடுத்து விட்டாள்…
இது நாள் வரையில் தனது அம்மாவுக்காக ஒரு மகளாக அவள் செய்தது எல்லாம் போதும்…

என்ன செய்தாலும் அந்தஸ்தையும் பணத்தையும் கட்டிக் கொண்டு தொங்கும் அன்பரசியை மாற்ற முடியாது…

நல்ல மகளாக இருந்தால் மட்டும் போதாது நல்ல தாயாகவும் நல்ல மனைவியாகவும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தவள் தாயைத் தேடிச் சென்றாள்…


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
கயலையும் கவியையும் பார்த்தபடி தலையில் கை வைத்து அமர்ந்து விட்ட எழில்…

‘அத்தான் ஏதாவது பேசுங்களேன் இப்படி பேசாமடந்தை போலவே தான் அக்கா நிற்கப் போகிறாள் …
நீங்களாவது வாயைத் திறந்து பேசுங்களேன்…'

‘என்ன எழில் என்ன பேசுவது'

‘ஆமாம் என்னைக் கேளுங்கள்'

‘அது தானே உன்னைக் கேட்கிறேன்'

‘அத்தாஆஆஆன்'

இருவரும் வழக்கடித்துக் கொண்டு இருக்கும் போதே கயல் சுயநினைவுக்கு வந்து விட்டாள்…

மெல்லத் திரும்பியவள்
'வீட்டுக்கு வாருங்கள்' என்று வார்த்தைக்கு நோகாமல் மெதுவாகச் சொன்னாள்…

அவள் சொன்னதைக் கேட்டதும் மற்ற இருவருக்கும் அளவில்லாத சந்தோஷம்…

‘சரி வாருங்கள் போகலாம்' என்ற படி எழில் முன்னே செல்ல கவியும் கயலும் பின் தொடர்ந்தனர்…

கயல் ஓரவிழிப் பார்வையில் தன்னவனைப் பார்ப்பதும் தலைகுனிவதுமாக இருந்தாள்…

அவளது செயலில் ஈர்க்கப் பட்டவன் புன்னகையுடன் மற்றப் பக்கமாகத் திரும்பித் தலையைக் கோதிக் கொண்டான்… 💚💚💚💚💚

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“ என்ன இந்த மாற்றமோ
என் மனசு வழுக்குதே
கண்ணு இரண்டும் காந்தமோ
என்னைக் கட்டி இழுக்குதே “
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Attachments

  • 6262c3dddb55a63fe85df80ee215ef9d.jpg
    6262c3dddb55a63fe85df80ee215ef9d.jpg
    100.4 KB · Views: 25
  • FB_IMG_1624532211215.jpg
    FB_IMG_1624532211215.jpg
    16.9 KB · Views: 23
Top