• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
தலையைக் குனிந்து வெகு நேரமாக இருந்தவள்… சற்றே விழியுயர்த்திப் பார்த்தாள்.
அவனைக் காணவில்லை…சுற்றும் முற்றும் விழிகளை அலைய விட்டாள்… எங்குமே அவனைக் காணவில்லை.

எங்கே போயிருப்பான் என்ற யோசனையுடன் அர்ச்சனைத் தட்டை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப் பட்டாள்.

சற்றுத் தூரம் போயிருப்பாள்
'ஏய் குண்டுமல்லி' என்ற குரல் கேட்கவும் சற்றே தயங்கி நின்றாள்.
அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் அவன் தானென்று அவளுக்குத் தெரியும்… அவன் அழைத்தது தன்னைத் தானென்றும் தெரியும்.
இருந்த போதிலும் 'அதென்ன குண்டுமல்லி என்ற பெயர்' என்ற கோபத்துடன் நடக்கத் தொடங்கினாள்.

தன் குரல் கேட்டு நின்றவள் மீண்டும் நடப்பதைப் பார்த்ததும் அவளருகில் விரைந்து வந்து வழியை மறித்துக் கொண்டு நின்றான் கவியரசன்.

அவளோ அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் சற்றே விலகி நடந்தாள்.
அவள் செல்வதைத் திரும்பிப் பார்த்தவன் 'கயல்விழி' என்றான் சற்றே குறும்பாக… அவன் குரலை மீண்டும் கேட்டவள்… அப்போது சற்று நின்று திரும்பிப் பார்த்து என்னவென்று கேட்டாள்.

சிறு சிரிப்புடன் அருகில் வந்தவன்
'நான் ஒரு விடயம் உன்னிடம் முதலில் கேட்டிருந்தேன் அதற்கு நீ சரியாகப் பதில் சொல்லவில்லையே…' என்றான் நிதானமாக.

அவன் கேட்பது புரியாமல்
'என்ன கேட்டீர்கள் நான் என்ன சொல்லவில்லை'
என்றாள் அவளும் நிதானமாக.

பொறுமை இழந்தவனாக 'ராட்சசி' என்று முணுமுணுத்தவனை முறைத்துப் பார்த்து 'என்னது' என்றாள் கயல்விழி.

‘ஆமாம் இதை மட்டும் நன்றாகக் கவனி… மற்றதெல்லாவற்றையும் கோட்டை விடு' என்று சிறு எரிச்சலுடன் சொன்னவனை ஏறிட்டவள்.
'இப்பொழுது உங்கள் பிரச்சினை தான் என்ன… வம்பு செய்வதற்கென்றே வந்து இருக்கிறீர்களா' என்றால் பதிலுக்கு.

அவளுக்குக் கோபம் ஏறுவதைப் புரிந்து கொண்டவன் உடனே சுதாரித்துக் கொண்டு 'அடடே நான் ஏன் உன்னுடன் வம்புக்கு வருகிறேன். உன்னைப் பார்த்ததும் பேசலாம் என்று தான் வந்தேன்.' என்றான் வினயமாக.

அவனை மேலும் கீழுமாக ஒரு மார்க்கமாகப் பார்த்தவள்
'அதுசரி… அப்படியானால் பேச வேண்டியது தானே' என்றாள் தனக்கே உரிய பாணியில்.

'இப்படி நின்று கொண்டே எப்படிப் பேசுவது' என்றவனை இடை மறித்தவள்
'வாயால் தானே பேசப் போகிறீர்கள் அதற்கு ஏன் இவ்வளவு அலப்பறை' என்றவளை 'அடக் கடவுளே' என்பது போலப் பார்த்தான்.

பிறகு சற்றே தள்ளி இருந்த ஒரு மேடையைக் காட்டி அங்கே உட்கார்ந்து பேசலாமே என்றான்.

அவளும் என்ன நினைத்தாளோ சரியெனத் தலையாட்டி விட்டு அவனுடன் இணைந்து நடந்தாள்.

கோவிலுக்கு வலது புறமாக இருந்த மேடையின் இரண்டு பக்கத்துத் தூண்களிலும் மல்லிகைக் கொடி படர்ந்து மேலே சென்று, அங்கிருந்த இடம் போதாமல் மெல்லக் கீழே இறங்கிப் படரத் தொடங்கி மேடைக்குப் போடப் பட்ட பந்தல் போல அத்தனை அழகாக இருந்தது.

இந்த அழகு போதாதென்று மேடைக்கு அருகில் நின்றிருந்த அரசமரமும் தனது கிளைகளாலும் இலைகளாலும் பந்தலுக்கு வெயில் படாமல் குடை பிடித்துக் கொண்டு நின்றது.

தொலைவில் இருந்து பார்க்கின்ற போது அந்த மேடைப் பூப்பந்தல் அத்தனை ரம்மியமாக இருக்கும்.

அதன் முதற் படியில் கவியரசன் அமர்ந்து கொள்ள, சற்றே தள்ளி ஒரு படி விட்டு மேலே அமர்ந்து கொண்டாள் கயல்விழி.

அமர்ந்ததும் அர்ச்சனைத் தட்டை அருகில் வைத்து விட்டு அவனுக்குக் கோவிற் பிரசாதத்தை எடுத்து நீட்டினாள்.

மலர்ந்த முகத்துடன் அதை எடுத்து நெற்றியில் கோடிட்டுக் கொண்டான் அவளைத் தனது நெஞ்சத்தில் பொத்தி வைத்த அந்தக் காதலன்.

மற்றைய நாளிலேயே அந்த இடத்தின் அழகை இரசிக்கின்ற கவிக்கு அன்று என்னவோ அதன் அழகு பன்மடங்கு அதிகரித்தது போன்றதோர் உணர்வு தோன்றத் தொடங்கியது.

அதற்குக் காரணம் தன்னவள் தனக்கருகில் அங்கே தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்தது தான்.
அவளது புடவை லேசாக உயர்ந்ததில் காட்சி கொடுத்த அவளது கொலுசு அணிந்த கால்கள் அவனது பார்வையைக் கட்டிப் போட்டிருந்தது.
தன் நாடியில் கைகளை வைத்தபடி அவளது பாதங்களை இரசித்திருந்தான் கவியரசன்.

அவனது இரசனையைக் கவனித்தவள் அவனது முகத்தின் முன்னே சொடக்கிட்டாள்.

அந்தச் சத்தத்திலும் அசையாமல் இருந்தவன்
'உன்னுடைய கொலுசு எவ்வளவு அழகாக இருக்கிறது'
என்றான் இரசனையுடன்.

'போன தடவை அம்மன் கோவில் திருவிழாவில் அப்பா வாங்கிக் கொடுத்தது. அந்தக் கடைக்காரர் இது போல் அழகாகக் கொலுசு செய்வார்களாம்… அவரது கை வண்ணம் தான் இது நீங்கள் வாங்கப் போகிறீர்களா?'
என்று சொன்னவளை முதலில் புரியாமல் பார்த்தவன்…
பின்னர் கொலைவெறியுடன் பார்த்தபடி… அவளது காதுகளைத் திருகியபடி
'சரியான போக்கிரிடி'
என்றான் அவன் சிரித்தபடியே.

காதுகளை விடுவித்துக் கொண்டு
'நீங்கள் தானே கொலுசு அழகாக இருக்கிறது என்றீர்கள் அது தான் விளக்கம் கொடுத்தேன்'
என்றபடி தானும் சிரித்தாள்.

அவளது பாதங்களை மீண்டும் ஒரு முறை பார்த்தவன்
'கொலுசு அழகாக இருப்பதால் உன் பாதம் அழகாக இருக்கிறதா? இல்லை உன் பாதம் அழகாக இருப்பதால் கொலுசு அழகாக இருக்கிறதா?’ என்றான் ஆராய்ச்சிப் பார்வையுடன்.

‘நல்ல ஆராய்ச்சி தான்… எது அழகு என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் இரசனை தான் ரொம்ப அழகு. பார்க்கிற விதத்தில் தான் ஒவ்வொரு அழகும் தங்கி இருக்கிறது' என்றவளை ஏறெடுத்துப் பார்த்தவனின் விழிகளில் மெச்சுதல் இருந்தது.

‘சரி சரி இந்த ஆராய்ச்சியைப் பற்றிப் பேசத்தான் அழைத்தீர்களா'
என்றாள் மீண்டும் கயல் விழி.

அவளது கேள்விக்குப் பதில் போல நேராக அமர்ந்தவன் உடனேயே
'கயல் எனக்கு உன்னைப் பிடித்து இருக்கிறது. உன்னுடனான என்னுடைய வாழ்க்கையை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நீ தான் பதில் சொல்ல வேண்டும்'
என்றான் சற்றே தெளிவாக.

அவனது பதிலில் மெளனமாக இருந்தவள் முன் சொடக்கிட்டு
'பிடித்திருக்கிறதா இல்லையா'
என்று மட்டும் சொல்லி விடு. பிடிக்கவில்லை என்றாலும் சொல்லி விடு, அதன் பிறகு உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்'
என்றவனது குரலில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் மெல்லிய குரலில் ஆனால் தெளிவாக
'அப்பாவிடம் வந்து பேசுங்கள்'
என்றாள்.

அவளது பதிலில் திருப்தி அடையாமல் 'அவரிடம் பேசாமல் அப்படியே உன்னைத் தூக்கிப் போய் விட மாட்டேன் மண்டு. எனக்கு உன்னுடைய சம்மதம் தேவை' என்றான் சிறு அழுத்தமாக.

அவனது அழுத்தமான குரலில் சற்றே மருண்டவள் உடனே சமாளித்துக் கொண்டு 'அப்பாவுக்கு உங்களைப் பிடித்துக் கொண்டால் எனக்கும் பிடிக்கும்.
அவருக்குப் பிடிக்காவிட்டால் எனக்கும் பிடிக்காது'
என்றாள் தெளிவான குரலில்.

அந்தப் பதிலில் எரிச்சல் அடைந்தவன்
'நான் என்ன உன் அப்பாவுடனா குடும்பம் நடத்தப் போகிறேன்'
என்றான் சுள்ளென்று.
அவனது பதிலில் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு
'குடும்பம் என்பது வெறும் நான் மட்டும் அல்ல. என் அப்பாவுடைய மரியாதை காக்க வேண்டிய மகள் நான். அந்த அப்பாவின் மகளுடன் குடும்பம் நடத்துவதற்கு அவரது அனுமதி கட்டாயம் வேண்டும். வீணாக வார்த்தைகளை விடாதீர்கள்'என்றாள்.
அழுத்தம் திருத்தமாக.

அவளது பதிலில் சற்றே நிதானித்தவன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டு
'உன் சம்மதம் இல்லாமல் எப்படி நான் உன் அப்பாவிடம் பேசட்டும்' என்றான் கேள்வியாக.

‘நீங்கள் பேசுங்கள் முதலில்… மீதியைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்'
என்றவாறு அர்ச்சனைத் தட்டுடன் எழுந்து கொண்டவள்… சற்றே திரும்பி
'நான் இப்படி அருகருகே அமர்ந்து எந்தவொரு அந்நிய ஆண்மகனுடனும் பேசியதில்லை. முதலில் பேசியது உங்களுடன் தான்… நீங்கள் தைரியமாக அப்பாவிடம் பேச வாருங்கள்… அவரது சம்மதம் தான் மிகவும் முக்கியம்'
என்றபடி வீடு நோக்கிச் செல்லத் தொடங்கினாள்.

‘இப்படித் தான் சொல்வார்… அம்மா அப்பாவை அழைத்துக் கொண்டு நன்றாகத் தான் வருவார் என்னைப் பெண் பார்க்க… எல்லாமே வெறும் வார்த்தை ஜாலம் தான் ' என்று அவள் முணுமுணுத்துக் கொண்டே சென்றது அவனது காதுகளில் லேசாக விழுந்தது.

அவளது பிடி கொடுக்காத பதிலில் சற்றே கவலையாக இருந்தவன்… அவளது இறுதிப் பதிலில் இனம் புரியாத சிறு சந்தோஷத்தை உணர்ந்தான்.

நிச்சயமாக அவளுக்குத் தனது காதலை உணர்த்தியே தீர வேண்டும் எனத் தனக்குள் சபதம் எடுத்துக் கொண்டான் கவியரசன்.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

அன்பரசி, கலையரசன் அருகருகே அமர்ந்திருக்க ஆனந்தன் வாகனம் ஓட்டி வரக் கவியரசன், கயல்விழியைப் பெண் கேட்பதற்குச் சென்று கொண்டிருந்தான்.

கவிதாவை அழைத்து வந்தால் அன்பரசி பத்ரகாளி ஆகி விடுவார் எதற்கு நல்ல விஷயத்திற்குப் போகும் போது வீணாக அவரை கோபப் படுத்த வேண்டும். எனச் சொல்லி அவளை அழைக்கவில்லை கலையரசன்.

வீட்டு வாசலில் பெரிய வாகனத்தைப் பார்த்ததும் திகைத்த தேன்மொழி தந்தையைச் சத்தமாக அழைத்தாள்.
என்னவோ ஏதோ என்று பதறிய படி விரைந்து வந்தார் முருகேசன்.

விரைந்து வந்த தந்தைக்கு வாசலில் வந்து நின்ற வாகனத்தைக் காட்டினாள் தேன்மொழி.
அவள் காட்டிய திசையைப் பார்த்தவர்… 'வந்தவர்கள் உள்ளே வருவார்கள் தானே தேனும்மா… நீ எதற்காக இப்படிச் சத்தம் போடுகிறாய்… உள்ளே போய் வேறு வேலை இருந்தால் பாரு…'
என்றார் நிதானமாக.

வந்த எரிச்சலை வெளியே காட்டிக் கொள்ளாமல் விரைந்து உள்ளே போனவள்… எதிரே வந்த கயல் மீது நன்றாக மோதிக் கொண்டு அவளை நன்றாகத் திட்டிய படி போய் விட்டாள்.

அவள் திட்டுவதை எல்லாம் தந்தைக்காக வெளியே பொறுத்துக் கொள்பவள் வழமை போல மனதுக்குள்ளே 'சரி தான் போடி' என்று பழிப்புக் காட்டியபடி சென்று விட்டாள்.

பின்னே மற்றவர்கள் போல தொட்டதற்கெல்லாம் அழுது வடிய அவளொன்றும் அழுகுனி கிடையாதே…

வெளி அறைக்கு வந்தவள் கவியரசன் வாசல் தாண்டி உள்ளே வருவதைப் பார்த்ததும் அதிர்ந்து போய் அசைவற்ற சிலை போல அப்படியே நின்றாள்.

கதவில் லேசாகத் தட்டி விட்டு உள்ளே வரலாமா என்று கேட்டபடி கவியரசனும் அவனது பெற்றோரும் உள்ளே வருவதற்கு முன்னர், ஆனந்தன் உள்ளே வந்து முருகேசனுக்கு வணக்கம் சொன்னான்.

ஆனந்தனை ஓரளவுக்கு முருகேசனுக்குத் தெரியும் என்பதால் புன்னகையுடன் வணக்கம் வைத்தார் முருகேசன்…வீட்டிற்கு உள்ளே வரும் போதே வீட்டின் அமைப்பைப் பார்த்த அன்பரசிக்கு மனதுக்குள் ஒரு மூலையில் முணுக்கென்று வலிக்கத் தான் செய்தது.

இருந்த போதும் தனது கண்ணப்பாவுக்காகப் பொறுமை காத்தார்.

ஆனந்தனைத் தொடர்ந்து வந்தவர்களை அன்பாக வரவேற்று அமர வைத்தார் முருகேசன்…பதிலுக்கு வணக்கம் வைத்தபடி அமர்ந்து கொண்டார்கள் அவர்கள்.

'வந்தவர்களுக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா'
என்று முருகேசன் சொன்னபோது தான் சிலையாக நின்ற கயல்விழிக்கு உணர்வு வந்தது.

கவியரசனையே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சமையலறைக்குள் சென்றாள்.
அறைக்குள் இருந்த தேன்மொழிக்கு வரவேற்பறையில் கேட்ட சத்தங்கள் அவளை அறை வாசல் வரை இழுத்துக் கொண்டு வந்தது.

அங்கிருந்து எட்டிப் பார்த்தவளுக்கு முதலில் தெரிந்தவன் ஆனந்தன். அவள் கல்லூரியில் படிக்கும் போது ஒரே வகுப்பில் தான் இவர்கள் படித்தார்கள். அதனால் அவனை அவளுக்குச் சிறிது பழக்கம்…அதிலும் கயல்விழியின் தமக்கை தான் தேன்மொழி என்று தெரிந்ததும் கவியரசனும் ஆனந்தனும் அவளுடன் சிறிது சிநேகமான முறையிலேயே நடந்து கொண்டார்கள் என்று சொல்லலாம்.

தேன்மொழி ஒன்றும் அத்தனை கெட்டவள் இல்லை… அவளுக்குத் தனது தந்தை கயல்விழியைத் தத்து எடுத்து வளர்த்தது பிடிக்கவே இல்லை என்று சொல்லி விட முடியாது…ஆனால் அவர் கயல் மீது கொண்ட அதீத பாசமும், தன் உடன் பிறப்புகள் அவள் மீது கொண்ட அதீத பாசமும் தான் அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

இதனால் கயல் மீதான அவளது வெறுப்பு நாளடைவில் விருட்சமாக வளர்ந்து விட்டது…

ஆனந்தனைத் தொடர்ந்து கவியரசனைப் பார்த்த தேன்மொழியைக் கவியரசனும் பார்த்து விட்டான்.
அவளைப் பார்த்தவன் லேசாகப் புன்னகைத்தான். பதிலுக்கு அவளும் அளவாக உதடுகளைப் பிரித்துப் புன்னகை செய்தாள்.

அது வரை அமைதியாக இருந்த கலையரசன், முருகேசனைப் பார்த்து
'நான் கலையரசன் இது எனது மனைவி அன்பரசி, இவன் எங்களது மகன் கவியரசன்'
என்று அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த அறிமுகத்தைச் சிறு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார் முருகேசன்…தொடர்ந்து 'எங்களது மகன் கவியரசனுக்கு உங்களது மகள் கயல்விழியைப் பெண் கேட்டுத் தான் நாங்கள் வந்திருக்கிறோம்… உங்களுக்கு இவனைப் பிடித்திருந்தால் உங்கள் பங்கிற்கு நன்றாக விசாரித்து விட்டு ஒரு நல்ல முடிவாகச் சொல்ல வேண்டும்'
என்று பட்டென்று விஷயத்தைச் சொல்லி விட்டு முருகேசனின் முகம் பார்த்தார்.

உள்ளே தேநீரை ஊற்றிக் கொண்டு இருந்த கயல்விழி பாத்திரத்தை நழுவ விட்டுப் பின்னர் இறுகப் பற்றிக் கொண்டு தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.

நடப்பது கனவா நனவா என்ற படி கதவு வழியே தெரிந்த கவியரசனின் முகத்தை ஒரு கணம் பார்த்தவள்…அவன் இந்தப் பக்கமாகப் பார்ப்பது போலத் திரும்பவும் பட்டென்று திரும்பிக் கொண்டாள்.

அவள் தன்னைப் பார்த்ததைத் தெரிந்து கொண்ட கவியரசன் லேசான மந்தகாசப் புன்னகையுடன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டான்...


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“நீ பார்க்கின்றாய் என்னுள்ளே மின்னல் தொடும் உணர்வுநீ பேசினாய் என்னுள்ளே தென்றல் தொடும் உணர்வுஒரே முறை நீ கண் பாரடி அதில் கண்டேன் என் தாயின் மடி”
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Attachments

  • FB_IMG_1624532331800.jpg
    FB_IMG_1624532331800.jpg
    8 KB · Views: 20
  • FB_IMG_1624532336665.jpg
    FB_IMG_1624532336665.jpg
    4.5 KB · Views: 21
Top