• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
கலையரசன் கூறிய அத்தனையையும் உள் வாங்கிக் கொண்ட முருகேசனுக்கு உள்ளூரச் சந்தோஷமாகவே இருந்தது.

ஊருக்குள்ளே கலையரசன் குடும்பத்தின் மதிப்பு அவருக்குத் தெரிந்து தான் இருந்தது.

தன் மகளுக்கு இதை விடவும் ஒரு நல்ல மாப்பிள்ளை தேடிப் போனாலும் கிடைக்காது. என்பது அவருக்குப் புரிந்து விட்டது.

எப்படி இருந்தாலும் மகளுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்றும், மூத்த மகளது திருமணத்திற்குப் பின்னரே கயலின் திருமணத்தைச் செய்ய வேண்டும் என்பதிலும் ஒரு தந்தையாக அவர் உறுதியாக இருந்தார்.

“ரொம்பவும் சந்தோஷம்… ஆனாலும் என் மகளிடமும் ஒரு வார்த்தை கேட்க வேண்டியது என்னுடைய கடமை தானே” என முருகேசன் இழுக்கவும்.

“அவளிடம் சம்மதம் கேட்பதா… வேறு வினையே வேண்டாம்”
எனப் பதறிய கவியரசன் தந்தையின் கால்களில் லேசாகத் தட்டினான்.

ஒரு நண்பனாகத் தனது மகனை நன்கு புரிந்த கலையரசனோ
“உங்கள் மகளிடம் தான் என் மகன் முதலில் இது பற்றிக் கேட்டான். ஆனால் உங்கள் மகளோ அப்பாவின் சம்மதம் தான் முக்கியம் என்று ஆணித்தரமாகச் சொல்லி விட்டது”
என்றார் மெதுவாக.

அவரது பதிலில் சிறிது யோசித்த முருகேசன் தேநீர்க் கோப்பைகளுடன் வந்த தன் மகளைத் திரும்பிப் பார்த்தார்.

படபடக்கும் அவளது விழிகள் தந்தைக்கு ஏதோ சேதி சொல்லிற்று…“
எனக்கும் இந்தத் திருமணத்தில் பரிபூரண சம்மதம்… என் மூத்த மகள் தேன்மொழியினது திருமணத்திற்குப் பின்னரோ அல்லது அவளது திருமணத்தன்றோ இந்தத் திருமணத்தையும் நடத்தி முடித்து விடலாம்.”
என்று சொன்னவரது பதிலில் மற்றவர்களது நிலை எப்படியோ தெரியவில்லை.
கவியரசன் மட்டும் சிறகில்லாமல் வானத்தில் பறக்கத் தொடங்கி விட்டான்.

அவனைப் பிடித்து இழுத்துக் கீழே இருத்திக் கொண்டார் கலையரசன்.
தேநீர்க் கோப்பைகளை நீட்டியவளைப் பார்த்து லேசாகக் கண்ணடித்தான் கவியரசன்.
அவளோ யாரும் அறியாத வண்ணம் அவனது கால்களை மிதித்துக் கொண்டு அந்தப் பக்கம் சென்று விட்டாள்.
சத்தமாகக் கத்த முடியாமல் “ராட்சசி” என்று முணுமுணுத்தபடி லேசாகக் கால்களைத் தேய்த்துக் கொண்டான் கவியரசன்.

இந்த விடயங்களைக் கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழிக்கு உள்ளூர எரிச்சலாகவே இருந்தது.

அவளுக்குத் தான் கயல்விழியைப் பிடிக்காதே… பின்பு எப்படி அவள் தொடர்பான விஷயங்கள் அவளுக்குப் பிடிக்கும்.

“எனது காதல் பற்றிய விடயத்தை எப்படி அப்பாவிடம் சொல்லுவது என்று நான் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்க இவளோ காதலனையே பெண் கேட்டு வர வைத்து விட்டாளே… பெரிய சாகசக்காரி தான்” எனத் தன் தங்கைக்குப் புதிதாக ஒரு நாமத்தையும் சூட்டிக் கொண்டாள்.

வந்தவர்கள் விடை பெற்றுப் போய் விட்டார்கள்.
தேன்மொழியும் திவாகரனும் கடந்த மூன்று வருடங்களாக நேசித்து வருகிறார்கள்.
திவாகரனின் பக்கம் அவனது குடும்பத்தாருக்கு அவன் ஒரே ஒரு பிள்ளை என்பதால், அவனது விருப்பங்கள் தான் அவர்களுக்கு முக்கியம்…ஆனால் தேன்மொழிக்கோ தந்தையின் அன்பு கலந்த கண்டிப்பில் சற்றே பயமாக இருந்தது.

தங்கையின் திருமணம் தான் உறுதி ஆகி விட்டதே… இனிமேல் தனக்கு என்ன தடை என்று தன் காதலைத் தந்தையிடம் சொல்லி விட்டாள்.
பெற்றவர்கள் செய்கின்ற பெரிய தப்பு தங்களது பிள்ளைகளை ஒருவருடன் ஒருவர் ஒப்பிட்டுப் பேசுவது தான்…முருகேசன் ஒன்றும் மகான் இல்லையே அவரும் சாதரண மனிதன் தானே… இதற்கு விதிவிலக்காக இருப்பதற்கு…
“உன்னை விட வயது குறைந்தவள் பெரிய மனுஷி போல அப்பாவிடம் கேளுங்கள் என்று சொல்லி விட்டு வந்திருக்கிறாள்.
உனக்கு எங்கே போயிற்றுப் புத்தி… காதலித்து விட்டு வந்து சம்மதம் கேட்கிறாய்…” என்றார் இயலாமையுடன்.

பின்னர் ஏதோ சிந்தித்தவராக
“சரி அந்தப் பையனை வரச் சொல் பேசிக் கொள்ளலாம்”
என்றார் யோசனையுடன்.

அதற்கு அவளோ
“அவர்கள் ரொம்ப பெரிய இடம் அப்பா… இங்கே எல்லாம் வர மாட்டார்கள்”
என்றாள் பெருமிதமாக.

அவளது விட்டேற்றியான பதிலில் சினம் தலைக்கேறிய முருகேசன்
“எவ்வளவு பெரிய இடம்… நம் கயலைப் பெண் கேட்டு வந்த இடத்தை விடவுமா… அவர்களே மரியாதையாகவும் சம்பிரதாயமாகவும் வந்து பெண் கேட்கும் போது, மற்றவர்களுக்கு என்ன வந்தது” எனத் தேன்மொழியைத் திட்டி விட்டார்.

அவளோ திட்டிய தந்தையைக் கோபித்துக் கொள்ளாமல் கயல்விழியை வெறுப்பாகப் பார்த்து விட்டு உள்ளே போய் விட்டாள்.

சிலபல சிக்கல்கள் மனத்தாங்கல்களைக் கடந்து தேன்மொழிக்கும் திவாகரனுக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது.

அவளது திருமணத்துடனேயே கயலின் திருமணத்தையும் முடித்து வைப்பதற்கு முருகேசன் முயன்றபோது… அதை அடியோடு மறுத்து விட்டாள் தேன்மொழி.

அதனால் அவளது திருமணத்தைப் பின்னர் வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு முருகேசன் வந்திருந்தாலும்… வீண் மனஸ்தாபங்களோடு திருமணம் நடைபெறுவது சரியில்லை என்பதனாலேயே அவர் கயலின் திருமணத்தினை மூன்று மாதங்களுக்குத் தள்ளிப் போட வேண்டியதாயிற்று.

தேன்மொழியின் திருமணத்திற்குக் கவியரசன் குடும்பத்தினரையும், முருகேசன் முறைப்படி அழைப்பிதழ் வைத்து அழைத்திருந்தார்.

திருமணத்தின் போது வேண்டா வெறுப்பாக வந்து விட்டுப் போன அன்பரசியையே சிறிது நேரம் பார்த்த தேன்மொழிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

வேண்டுமென்றே அவர் முன்னிலையில் கயலை அவமானம் செய்வது போலவும் உதாசீனம் செய்வது போலவும் நடந்து கொண்டாள்.

அன்பரசியும் கூடக் கவியரசன் முன்னிலையில் ஒரு முகமும் அவன் இல்லாத தருணங்களில் ஒரு முகமும் என இரண்டு முகங்களைக் கயலுக்குக் காட்டிக் கொண்டேயிருந்தார்.

கலகலப்பான சுபாவம் உடைய கயலை அது எள்ளளவும் பாதிக்கவில்லை.
அவளோ தானுண்டு தன் வேலையுண்டு என இருந்து கொண்டாள். இவளது இந்தச் சுபாவம் தேன்மொழியையும் அன்பரசியையும் மேலும் மேலும் உசுப்பேற்றி விட்டதைப் பாவம் கயல் அறிய வாய்ப்பு இருக்கவில்லை.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து புத்தகமொன்றினைப் படித்துக் கொண்டிருந்த கவியரசனின் அருகில் வந்தமர்ந்தார் அன்பரசி.

தனது மகனையே இமைக்காமல் பார்த்திருந்தார் நெடுநேரமாக…எதேச்சையாகத் திரும்பிப் பார்த்த கவி என்ன என்பது போல ஜாடையால் கேட்டான்.

ஒன்றுமில்லை என்று ஜாடையாகப் பதில் சொன்ன அன்பரசி
“கண்ணப்பா… அந்தப் பொண்ணை உனக்கு ரொம்ப பிடிக்குமா? நான் உனக்கு ரொம்பப் பெரிய இடத்தில் ஒரு நல்ல பொண்ணாகப் பார்த்து வைத்திருந்தேன் தெரியுமா”
என்றார் தன் மனக் குறையைக் கொட்டும் வேகத்துடன்.

தாயின் வார்த்தைகளைக் கேட்டவன்… படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி ஓரமாக வைத்து விட்டு, தாயின் காலுக்கடியில் மண்டியிட்டு அமர்ந்தபடி அவரது விழிகளைப் பார்த்தான்.

“அரசிம்மா… நமக்கு எதுக்கு ரொம்பப் பெரிய இடம்… நமக்கு வேண்டியதெல்லாம் பாசமான ஆட்கள் மட்டும் தான்… அந்தப் பாசம் எனக்கு உங்கள் மருமகளிடம் இருந்து பூரணமாகக் கிடைக்கும்… இது போதும் எனக்கு…” என்றான் தெளிவாக.

அவனது தெளிவான பதிலில் என்ன சொல்லுவதென்று தெரியாமல் அதற்கான கோபத்தையும் கயல்மேலேயே போட்டுக் கொண்டார் அன்பரசி.

கவியரசனோ வேறு சிந்தனையில் இருந்தான். தேன்மொழியின் திருமணத்தின் போது கயலைப் பார்த்தவன் தான் அதற்குப் பிறகு அவளைப் பார்க்க முடியவில்லை.

அதற்குக் காரணம் அவனுக்குப் புரியவில்லை
“ஒருவேளை அவளுக்கு நிஜமாகவே என்னைப் பிடிக்கவில்லையா? நான் பெண் கேட்டுப் போய் அவள் தந்தை சம்மதம் தெரிவித்ததால் தான் போனால் போகட்டும் என்று இந்தத் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்திருப்பாளோ…”
என்றெல்லாம் குழம்பித் தவித்தான்.

தன் குழப்பத்தைத் தந்தையிடம் கூறிய போது அவரோ
“பெண்கள் அப்படித் தான் இருப்பார்கள் கவிப்பா… அவர்களுக்கும் கூச்ச சுபாவம் இருக்கும் தானே… அதனால் தான் அப்படி நடந்து கொள்கிறாள் என் மருமகள்…” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டவனோ “பெண்களுக்குக் கூச்ச சுபாவம் இருக்கும் தான் நான் அதை ஒத்துக் கொள்ளுகிறேன். ஆனால் உங்கள் மருமகளுக்குக் கூச்ச சுபாவம் இருக்கும் என்று சொல்லாதீர்களப்பா… அவள் பக்கா கேடி…” என்றான் தன் தலையில் கையை வைத்துக் கொண்டு.

“அப்படியென்றால் உனக்கேற்ற ஜோடி என்று சொல்லு கவிப்பா…” எனச் சிரித்தபடியே எழுந்து சென்று விட்டார் கலையரசன்.

கயல்விழியும் கவியரசனும் சந்தித்துக் கொள்ளாதவாறு அவளுக்கு நிறைய வேலைகளை வேண்டும் என்றே உருவாக்கினாள் தேன்மொழி.

அவள் செய்கின்ற அனைத்தையும் முருகேசனுக்காகக் கண்டு கொள்ளாமல் இருந்தாள் கயல்விழி.

அவளாலும் அடிக்கடி வெளியில் செல்ல முடியவில்லை மாப்பிள்ளை வீட்டார் வரவேற்பு, உபசரிப்பு என அவளது தலைக்கு மேலாக வேலைகள் இருந்தன.

நடுநடுவே சில தடவைகள் கவியரசனைப் பார்க்க நேர்ந்தாலும் அவளால் அவனுடன் ரொம்ப நேரம் பேசிக் கொள்ள முடிவதில்லை.

ஒரு சிரிப்பு, நலம் விசாரிப்பு என்று நகர்ந்து விடுவாள்.
அதில் அவளுக்கு ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை.
ஆனால் கவியரசனுக்குத் தான் மனத் தாங்கலாக இருந்தது.

அவனும்
“திருமணத்திற்குப் பின்னர் இவளுக்கு இருக்கிறது மண்டகப்படி…”
என மனதில் நினைத்துக் கொண்டு பொறுமையாக இருந்தான்.

திருமணத்திற்குச் சரியாக ஒரு மாதம் இருந்த நிலையில் கவியரசன், கயல்விழியைச் சந்திப்பதற்காக அம்மன் கோவிலடியில் காத்திருந்தான்.

நீண்ட நேரத்திற்குப் பின்னர் வந்தவளைக் கோபமாக முறைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்குச் சிரிப்பு வந்தது.

“ஏன் முறைத்துக் கொண்டு விறைப்பாக நிற்கிறீர்கள். நீங்கள் என்னைப் பார்க்க இன்று இங்கு வருவீர்கள் என்று நான் என்ன கனவா கண்டேன்.”
என்றாள்.

“தெரிந்திருந்தால் மட்டும் என்ன செய்திருப்பாய். இங்கே வராமல் இருந்திருப்பாய். அவ்வளவு தானே… பிறகு என்ன உனக்குப் பேச்சு”
என்றான் மேலும் கோபமாக.

“நல்ல கதை இது… தெரிந்திருந்தால் இந்தப் பக்கம் வராமல் அப்படியே ஓடியிருக்க மாட்டேன்…” என்று சிரியாமல் சொன்னவளின்…பேச்சிலும் செய்கையிலும் அவனுக்குச் சிரிப்பே வந்து விட்டது.

“உன்னை…”
என்றவாறு அவளது காதுகளை வலிக்காமல் முறுக்கினான் கவி சிரித்துக் கொண்டே…அவனது பிடியைத் தள்ளி விட்டுத் தானும் சிரிக்கத் தொடங்கினாள் கயல்விழி.

அவளது சிரிப்பையே பார்த்துக் கொண்டு இருந்தவன்
“உன்னைச் சந்திக்க நான் எவ்வளவு முறை முயன்றேன் தெரியுமா… ஏன் வரவில்லை”
என்றான் கை விட்ட கோபத்தை மீண்டும் கைப்பற்றியவாறு…

“எத்தனை முறை முயன்றீர்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்… அது போக அங்கே வீட்டில் எத்தனை வேலைகள் இருக்கின்றன தெரியுமா”
என்றாள் மீண்டும் குறும்பாக.

அதற்கு அவனோ
“அங்கே வீட்டில் எத்தனை வேலைகள் இருக்கின்றன என்று எனக்கு எப்படித் தெரியும்”
என்றான் முறைப்புடன்.

“சரி சரி சண்டை வேண்டாம். மன்னித்துக் கொள்ளுங்கள் வீட்டில் நிறைய வேலைகள் இருந்தது. அதனால் என்னால் எங்கும் வரமுடியவில்லை”
எனச் சமாதானம் சொன்னவளை அவனாலும் நீண்ட நேரம் கோபித்துக் கொள்ள முடியவில்லை.

“சரி தான் பிழைத்துப் போ…”
என்றான் சிறு சிரிப்புடன்.

பிறகு சிறு யோசனையுடன்
"உனக்கு என்னை நிஜமாகவே பிடிக்குமா" என்றான் சற்று தணிந்த குரலில்
"ஆமாம் பிடிக்காமல் தான் உங்களைக் கட்டிக் கொள்ளச் சம்மதம் சொன்னேனா" என்றவளை ஒரு பார்வை பார்த்தவன்.

"கோவிலில் வைத்து என்னமாகப் பொய் சொல்லுகிறாய்... நீ எங்கே சம்மதம் சொன்னாய் நான் தான் உன் தந்தையிடம் சம்மதம் வாங்கினேன்"என்றான்.

அவனது பதிலில் விழித்தவளை மீண்டும் பார்த்தவன்
"எது கேட்டாலும் என்ன சொன்னாலும் நன்றாக முழிக்க மட்டும் தெரிகிறது"
எனத் தனக்குள் முணுமுணுத்தான்.

பதில் சொல்ல முடியாமல் வெகு நேரமாக இருந்தவளை வழமைக்குக் கொண்டு வரவென்றே அவன் பேச்சை மாற்றினான்..

பின்னர் இருவரும் சிறிது நேரம் சிரித்துப் பேசி விட்டு கயல்விழி வழமை போலவும் கவியரசர் வேண்டா வெறுப்பாகவும் விடை பெற்றனர்…


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“உனக்காக ஏதும் செய்வேன் நீ எனக்கென்ன செய்வாயோ?
இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது.
அந்தத் தெய்வம் உன்னைக் காக்கத் தினம் தொழுவேன் தவறாது.
என்ன நான் கேட்பேன் தெரியாதா? இன்னமும் என் மனம் புரியாதா?
அட ராமா இவன் பாடு
இந்தப் பெண்மை அறியாதா?.”
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Attachments

  • FB_IMG_1624531911445.jpg
    FB_IMG_1624531911445.jpg
    26.8 KB · Views: 20
  • FB_IMG_1624532024880.jpg
    FB_IMG_1624532024880.jpg
    23.7 KB · Views: 32
Top