• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
என்ன மாயம் நிகழ்ந்ததோ தெரியவில்லை.
அதிகாலையில் முருகேசன் வீட்டிற்கு வந்தார் கலையரசன்.

அவரைக் கண்டதும் முருகேசன் பரபரப்பாகவே, அவரை அழைத்துத் தன்னருகில் அமர்த்திக் கொண்டவரை ஏறிட்டுப் பார்த்தார் கயலின் தந்தை.

‘இப்பொழுது ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறீர்கள் சம்பந்தி'

'இல்லை சம்பந்தி இவ்வளவு சீக்கிரமாக வந்து இருக்கிறீர்களே... அது தான்…'

'உங்களிடம் ஒரு சம்மதம் கேட்டுப் போகலாமே என்று தான் வந்தேன்'

'என்னிடம் ஒரு சம்மதமா? என்ன விடயம் சம்பந்தி'

'என் மருமகளுக்கு உடல் நிலை இன்னமும் தேறவில்லை… அப்படி இருக்கும் போது அவளால் இந்தத் திருமணத்தில் சுறுசுறுப்பாக இருக்க முடியாது தானே…'
கலையரசனின் இந்த வார்த்தைகளில் உள்ளுக்குள் சிறு கலக்கம் பிறப்பதனை முருகேசன் உணர்ந்தார்.

அந்தக் கலக்கத்திற்கான காரணம் ஒருவேளை திருமணத்தைத் தள்ளிப் போடப் போகிறார்களோ? என்ற எண்ணம் தான்.

அவரது கலக்கத்திற்கு அவசியமே இல்லை என்பது போல அடுத்து ஒரு கோரிக்கையை முன் வைத்தார் கலையரசன்.

‘சம்பந்தி இந்தத் திருமணத்தை ஆடம்பரமாகச் செய்யாமல்… கோவிலில் சாதாரணமாகச் செய்யலாம் என்று கவி விருப்பப் படுகிறான்... நானும் அவன் சொன்னதைக் கேட்டதும்… உன் விருப்பம் மட்டும் இங்கே முக்கியம் கிடையாது… என் மருமகளும் ஏதாவது விருப்பம் வைத்திருப்பாளே கவிப்பா என்று கேட்டேன் சம்பந்தி...
அதற்கு அவன் என் விருப்பம் தான் கயலின் விருப்பம் கயலின் விருப்பம் தான் என் விருப்பம் என்று சொல்லி விட்டான்...
அந்தத் தைரியத்தில் தான் உங்களிடம் பேச வந்தேன் சம்பந்தி’
கலையரசன் கூறிய விடயங்கள் அத்தனையையும் கேட்ட முருகேசனுக்குச் சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை.

தன் மகளது ஆசைப் படியே அவளது திருமணம் நடைபெறப் போகிறது என்றால் அதை விட வேறு என்ன சந்தோசம் இருக்கப் போகிறது

'அடடா சம்பந்தி… நேற்றிரவு இதையே தான் என் மகளும் சொன்னாள். நான் தான் இதை எப்படி உங்களிடம் சொல்லுவது என்று அமைதியாக இருந்து விட்டேன்'
என்றார் முருகேசன் சிறு தயக்கத்துடன்.

முருகேசனின் பதிலைக் கேட்ட கலையரசன்
'இதற்கு எதற்குத் தயக்கம் சம்பந்தி… என்னைப் பொறுத்தவரை பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் சமமான உரிமை உடையவர்கள் தான்...
இன்னும் சொல்லப் போனால் பெண் வீட்டாருக்குத் தான் அதிக உரிமை எடுத்துக் கொள்ளுகின்ற உரிமையும் இருக்கிறது...
இருபது வருடங்களுக்கு மேலாக வளர்த்த பெண் பிள்ளையை வேறு இடத்தில் வாழ அனுப்பும் போது தாய் தந்தையின் பிரிவுத்துயர் எப்படி இருக்கும் என்பதனை அறியாதவன் அல்ல நான்...
எங்கள் குடும்பத்தைக் கட்டிக் காக்கவென்று ஒரு தேவதையை இன்னொரு மகளை எங்களுக்குக் கொடுக்கப் போகிறீர்கள்...
அத்தகைய பெண் வீட்டாருக்கு நாங்கள் மதிப்புக் கொடுத்துத் தானே ஆக வேண்டும்'
என்ற கலையரசனின் கபடமற்ற உண்மையான பேச்சில் முருகேசன் உருகித் தான் போனார்.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

அம்மன் கோவிலில் போடப் பட்டிருந்த சிறிய மணமேடையில் அமர்ந்திருந்தான் கவியரசன்.

அவன் ஒவ்வொரு நொடியும் திரும்பித் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்த கபிலனுக்குச் சிரிப்பு வந்தது.

நண்பன் அருகில் லேசாகக் குனிந்து
'டேய் மச்சி கயலைக் கண்டிப்பாக அழைத்து வருவார்களடா… நீ ஒன்றும் திரும்பித் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.'
என்றான்.

நண்பன் கூறியதைக் கேட்டவன்
'அவளை அழைத்து வருவார்கள் என்று எனக்கும் தெரியும். ஆனால் அவளை நம்ப முடியாது. இங்கே என்னைப் பார்த்ததும் அப்படியே ஓடியும் விடுவாள்.'
எனச் சிரியாமல் சொன்னான்.

இருவரது சம்பாஷணைக்கு இடையில் குருக்கள் பெண்ணை அழைத்து வாருங்கள் என்று சொன்னது தான் தாமதம் சட்டென்று திரும்பினான் கவியரசன்.

செம்மஞ்சள் வண்ணத்தில் சிவப்புக் கரையிட்ட புடவை அணிந்து குனிந்த தலை நிமிராமல் மெல்ல நடந்து வந்தவளை ஏதோ ஒன்பதாவது அதிசயத்தைப் பார்ப்பது போலப் பார்த்து வைத்தான் கவியரசன்.

பின்னே கயல்விழியாவது வெட்கப் பட்டுத் தலை குனிந்து வருவதாவது… அப்படி வந்தால் அது அவனுக்கு உலக அதிசயம் தானே.

அருகே வந்தமர்ந்த பின்னரும் கூட அவள் தலை நிமிர்ந்தபாடில்லை என்பதைப் பார்த்தவன்… மெதுவாக அவள் பக்கத்தில் குனிந்து
'இது நியமாகவே நீ தானா? என்னால் நம்பவே முடியவில்லையே… கயல்விழிக்கு வெட்கப் படக் கூடத் தெரியுமா?’
என்றான் மெதுவாக.

அவனது பதிலைக் கேட்டவள் தானும் அவனது பக்கமாகச் சாய்ந்து
'ரொம்ப எல்லாம் அதிசயப் பட வேண்டாம்… தலை அலங்காரம் கனமாக இருக்கிறது… நானாக நிமிர நினைத்தால் கூட நிமிர முடியாது'
என்றாள் கடுப்புடன்.

அவளது பதிலைக் கேட்டவன்
'ஆஹா அது தானா விடயம்… நான் தான் கொஞ்சம் அதிகமாகவே கற்பனை செய்து விட்டேனா?'
என்றான் மெதுவாக.

'எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்ததாக நினைப்புத் தான் உங்களுக்கு… இந்த அதிகமான அலங்காரங்களை எல்லாம் நிறுத்தச் சொல்லி இருக்கலாம் தானே'

‘இது பெண்கள் விஷயம் தாயே… நான் என்ன சொல்ல முடியும்'

'என்னது பெண்கள் விஷயமா அது சரி… அங்கே அந்தப் பொண்ணு கவியண்ணா அப்படி அலங்காரம் செய்ய சொன்னார் இப்படி அலங்காரம் செய்ய சொன்னார்… என்று என்னைப் படுத்தி எடுத்து விட்டாள்'

'அது… நான் சும்மா சாதாரணமாக ஒரு சம்பிரதாயமாகச் சொல்லி வைத்தேன்'

‘எது… கண்ணுக்கு இப்படிக் கரியைப் பூச வேண்டும். முகத்துக்கு இப்படிக் கோதுமை மாவை அப்பி விட வேண்டும். என்று சொன்னீர்களே அதுவா'

‘இல்லையே… உன் முகத்திற்குக் கொண்டை போட்டு நிறைப் பூச் சுற்ற வேண்டும் என்று மட்டும் தான் சொன்னேன்'
என்றான் அப்பாவியாக.

‘நீங்கள் என்ன சொன்னீர்களோ அவள் என்ன கேட்டாளோ எனக்குத் தெரியாது. கண்ணாடியில் என்னையே எனக்குத் தெரியவில்லை. மீனு சொல்லுகிறாள் என்னைப் பார்த்துப் பயந்து நீங்கள் ஓடப் போகிறீர்களாம்'
என்றாள் மீண்டும் கடுப்புடன்.

‘சரி சரி முகத்தை அப்படி மிளகாய் சாப்பிட்டது போல வைத்துக் கொள்ளாதே'
என்று சொன்னவன் அதன் பின்னர் சிறிது நேரம் அவளது பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை.

பின்னே திரும்பிப் பார்த்து ஏதாவது பேசி வைத்து வாங்கிக் கட்டிக் கொள்ள அவனுக்கு என்ன வேண்டுதலா??

ஆமாம் வேண்டுதல் தான் அதுவும் சாதாரண வேண்டுதல் இல்லை… வாழ்க்கை முழுவதும் அவளிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற மகா மகா வேண்டுதல்… அதையும் விரும்பியே ஏற்றுக் கொண்டவன்.

கெட்டிமேளம் கொட்டிட, இருவரையும் பிடித்தவர்கள் மனதுள் வாழ்த்த, பிடிக்காதவர்கள் மனதுள் வசை பாட, ஊரறிய சம்பிரதாயமாகக் கயல்விழியின் கழுத்தில் தாலி எனும் புது உறவுக்கான அடையாளத்தை அணிவித்தான் கவியரசன்…


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“கல்யாண மேளம் கேட்டிடும் நேரம் ரோஜாப்பூ முகமோ நிலவாக மாறிடும்”
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


அனைத்துச் சடங்குகள் சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டு அனைவரும் கவியரசனது பெரிய வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.

விமலரூபனால் திருமணத்திற்கு வர முடியவில்லை.

அன்பரசிக்கு அது பிடிக்காது என்பது காரணமாக இருந்தாலும் கூட… ஒரு வழக்கு விஷயமாக அவன் வெளிநாட்டுக்குச் சென்றதால் அவனால் வர முடியவில்லை.

கவிதா மட்டும் வந்திருந்தாள்… முடிந்தவரை தாயின் கண்களில் படாமல் அவனை வாழ்த்தி விட்டும் போய் விட்டாள்.

அன்பரசி தான் அவளைக் கவனிக்கும் நிலையில் இல்லையே… அவளை மட்டும் இல்லை அவர் யாரையும் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை.

அவரது எண்ணங்கள் முழுவதும் கயல்விழி மட்டும் தான்… அவள் தன்னையும் தன் மகனையும் பிரிக்க வந்த எதிரி என்றே எண்ணி விட்டார்.

அவளை எப்படித் தனது மகனது வாழ்வில் இருந்து தூக்கிப் போடுவது என்பதை மட்டுமே அவரது புத்தி அசை போட்டுக் கொண்டிருந்தது.

திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் ஒரு வேளை மகன் தன்னை எதிர்த்துக் கொண்டு போய் விடுவானோ என்ற பயத்தில் தான் அவர் திருமணத்திற்குச் சம்மதித்தார்.

இனிமேல் மெதுவாகக் காய் நகர்த்த வேண்டியது தான் என அவரது எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

அதனால் அவர் கவிதாவைக் கவனிக்கவே இல்லை.
அவ்வளவு ஏன் விமலரூபன் வந்திருந்தால் கூட அவர் சரியாகப் பார்த்திருக்க மாட்டார் என்பது தான் உண்மை.

வீட்டுக்கு வந்தவர்களுடன் கவியரசனே நெடு நேரமாக நின்று பேசிக் கொண்டு இருந்தான்.
கயல்விழியை ஓய்வாக அமர்த்தி வைத்து விட்டான்.

அவளை எழுந்து கொள்ளவே விடவில்லை…ஏனெனில் அவளது உடல்நிலை பற்றி அவனுக்குத் தானே முழுவதும் தெரியும். அவளும் அப்படியே சாய்ந்து அமர்ந்து விட்டாள்.

'பரவாயில்லையே என்னுடைய பேச்சுக்கும் மதிப்பு இருக்கிறது. ஒருவேளை கணவன் என்பதால் வந்த மரியாதையாக இருக்குமோ?’
எனக் கயலைப் பார்த்துச் சிரிப்புடன் கேட்டான் கவியரசன்.

அவனுக்கு அருகில் ஆனந்தனும் கபிலனும் கூட நின்று சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.

அவர்கள் மூவரையும் இமை உயர்த்திப் பார்த்தவள் அப்போதும் அமைதியாகவே இருந்தாள்.

'என்னம்மா படபடப் பட்டாசு உன் பேச்சு எல்லாம் இந்த அண்ணனிடம் தானா… இவன் கணவனாக வந்து விட்டதும் இவனுக்கு இத்தனை மரியாதையா' என்றான் ஆனந்தனும்.

'அட ஆனந்தா உனக்குத் தெரியாதா? கணவன் தான் கண்கண்ட தெய்வம் என்பது உனக்குத் தெரியாதா?’
என்றபடி மேலும் நகைத்தான் கவியரசன்.

அவனுக்குத் தனது காதல் நிறைவேறித் திருமணத்தில் முடிந்ததை இன்னமும் கூட நம்ப முடியாத அளவுக்கு மிக மிக சந்தோஷமாக இருந்தது.

அடிக்கடி கபிலனையும் ஆனந்தனையும் வலிக்கும் படி கிள்ளிக் கிள்ளிப் பார்த்து அது நிஜம் தான் என்பதனை உறுதிப் படுத்திக் கொண்டிருந்தான்.

அதையும் லேசாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள் கயல்விழி.
மீண்டும் ஏதோ சொல்ல வந்த கவியரசனைப் பார்த்ததும் அவளது பொறுமை பறந்தது.

அவனை நோக்கிக் கையை உயர்த்தி காட்டிப் பின்னர் வாயை மூடிக் காட்டி விட்டு, அருகே வருமாறு சைகை செய்தாள்.

என்னவெனக் குனிந்தவனின் கையில் நறுக்கென்று கிள்ளினாள்.
'அடியே' என்றவாறு துள்ளிக் குதித்தவனைப் பார்த்தவள்
'இதெல்லாம் நிஜம் தான்… எதற்கு அவர்களைக் கிள்ளிக் கிள்ளி உங்கள் சக்தியை வீணடிக்கிறீர்கள்… என்னைக் கேட்டால் நானே நன்றாக நறுக்கென்று இப்படிக் கிள்ளி விட்டிருப்பேனே' என்றவாறு மீண்டும் கிள்ளினாள்.

அவனோ 'போடி இவளே' என்றான் கையை அழுத்தித் தேய்த்தபடி…
‘போவதற்காகவா உங்கள் கைகளால் என் கழுத்தில் தாலி வாங்கிக் கொண்டேன்' என்றாள் சிறு சிரிப்புடன்.

அவளது பதிலில் கவியின் முகம் பிரகாசமானது.

'அப்புறம் இன்னொரு விஷயம்… எனக்குக் கொஞ்சம் அசதியாக இருக்கிறது.
அதனால் தான் இப்படி அமைதியாக இருக்கிறேன். மற்றபடி மரியாதை அது இதென்று கற்பனை எல்லாம் செய்ய வேண்டாம்'
என்றாள் அதே சிரிப்புடன்.

அவளது பதிலில்
'அது தானே பார்த்தேன்…'
என்றபடி முகத்தைச் சோகமாகத் தூக்கி வைத்துக் கொண்டான்.

அவர்களது சம்பாஷணைக்குள் இடை புகுந்த ஆனந்தன்…
'சரிம்மா இந்த அப்பாவி ஏதோ தெரியாமல் வாயைக் கொடுத்து விட்டான். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்… இவனைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளம்மா'
என்றான் கைகளைத் தலைக்கு மேல் கூப்பியவாறு.

'டேய் டேய்… என்னடா'
என்றபடி தானும் சிரித்தான் கவியரசன்.

அப்போது முருகேசன் அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும் கயல்விழி எழப் போனாள்.

அவளைப் பிடித்து அமர்த்தியவர்…
'அப்பா வீட்டுக்குப் போகிறேன் கண்ணம்மா… உனக்கு நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை… ஏனென்றால் என் மகள் கெட்டிக்காரி' என்றவர் அவளது முகத்தை வருடி நெட்டி முறித்தார்.

எழிலும் கணேசனும் இருபக்கமும் நின்று அவளை அணைத்து முத்தம் கொடுத்தார்கள்.

கயலின் பாட்டி அவளருகில் வந்து
'அம்மாடி பார்த்து இருந்து கொள்… உன் மாமியாரின் பார்வையில் ஏதோ வித்தியாசம் தெரிகிறது… இந்தத் தேனுப் பொண்ணுவின் முழியும் சரியில்லை' என்றவர் அவளது நெற்றியில் முத்தமிட்டார்.

‘மாப்பிள்ளை நாங்கள் கிளம்புகிறோம்' என்றவாறு நால்வரும் வீட்டுக்குப் புறப்பட்டுப் போய் விட்டார்கள்.

'அதன் பிறகு தேன்மொழியும் அவளது கணவனும் வந்தார்கள். கணவன் அருகில் இருந்ததால் தேன்மொழியால் எதுவும் பேச முடியவில்லை. அதனால் சாதாரணமாக விடை பெற்றுப் போய் விட்டாள்.

அதன்பிறகு கபிலனையும் மீனலோஜனியையும் பார்த்த கயல்விழி 'அண்ணா எப்போது மீனு வீட்டில் சென்று பேசப் போகிறீர்கள்'
என்றாள்.

‘அடுத்தது அது தானே வேலை… அது தான் உங்கள் திருமணம் முடிந்து விட்டதே… இனிமேல் நாங்களும், ஆனந்தனும் சுவேதாவும் தானே'
என்றான் கபிலன் சந்தோஷமாக.

சிறிது நேரம் பேசியபடியே இருந்தவர்கள் பின்னர் விடைபெற்றுப் போய் விட்டார்கள்.

…….............................................................

மாலை வந்து மெல்லென இருள் சூழ்ந்தது.
எங்கும் ஏதோ ஓர் அமைதி நிலவியது.

காதலாகித் திருமணம் செய்த உள்ளங்கள் ஆவலாகவும், பேச்சாகித் திருமணம் செய்த உள்ளங்கள் பதட்டத்துடனும் எதிர்பார்க்கும் அந்த முதலிரவும் வந்து விட்டது.

பச்சைப் புடவை அணிந்து, கொலுசு சப்திக்க நடந்து வந்தவளைப் பார்த்தவனின் பார்வையில் நிச்சயமாகக் காமம் இருக்கவில்லை.

மாறாக நேசம் மட்டுமே நிறைந்து இருந்தது.
அவளது சோர்ந்து போன முகம் அவளது உடலின் இயலாமையை அவனுக்குக் காட்டிக் கொடுத்தது.

அருகில் வந்தவள் மெதுவாகக் குனியவே அவளது உடல் நிலையை நினைத்தவன் பதறியபடி
'ஏய் ஏய் காலிலே எல்லாம் விழ வேண்டாம்' என்றவாறு விலகினான்.

அவன் பதறியதைப் புரியாமல் பார்த்தவளுக்கு அவன் சொன்னதைக் கேட்டதும் தான் ஏன் பதறினான் என்பது விளங்கியது.

'ஓஹோ ஐயாவுக்கு அப்படி வேறு ஒரு நினைப்பு இருக்கிறதோ'
என்றவளைப் புரியாமல் நோக்குவது இப்போது அவனது முறையாயிற்று.

அப்படியே நின்றவனின் முன்னால் சொடக்குப் போட்டவள்
'நான் எப்போது உங்கள் காலில் விழுந்தேன்'
என்றாள் வேண்டுமென்றே சிரிப்பை அடக்கிய படி.

‘அப்பொழுது எதற்காகக் கீழே குனிந்தாய்' என்றான் சந்தேகமாக.

நிஜமாகவே அவள் அவனது கால்களைத் தொட்டு வணங்கத் தான் குனிந்தாள்.

அவளுக்குத் தெரியும் அவளது விருப்பம் போலத் திருமணத்தைக் கோவிலில் நடத்த அவன்தான் எல்லோரையும் உடன் பட வைத்தான் என்பது.

நடக்கக் கூடிய நியாயமான விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய கணவன் ஒரு பெண்ணுக்குக் கிடைப்பது சந்தோசம் தானே.

இத்தனைக்கும் அவனது அந்தஸ்துக்கு இந்தத் திருமணம் திருவிழாப் போல நடந்து இருக்க வேண்டியது.
ஆனால் சாதாரணமாக அமைதியாக சந்தோஷமாக அவளது விருப்பப்படி கோவிலில் நடந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அவன் தானே.

அதனால் தான் காலில் விழ வந்ததை வேண்டுமென்றே மறைத்து அவனோடு மல்லுக்கு நின்றாள்.

அவனும் இன்னமும் சந்தேகமாகவே பார்த்தான்.
அந்தப் பார்வையில் வந்த சிரிப்பை மறைத்தபடி
‘புடவையைச் சரி செய்யக் குனிந்தேன்' என்றாள்.

'புடவையைச் சரி செய்யக் குனிந்தாயா? அதற்கு அப்படி அல்லவா குனிய வேண்டும். எதற்காக என் பக்கமாகக் குனிந்தாய்' என்றான் கேள்வியாக.

சட்டென்று யோசித்தவளைப் பார்த்தவன் 'ஒரு வேளை என் வேஷ்டியைச் சரி செய்யக் குனிந்தேன் என்று மட்டும் சொல்லிப் பார்… இருக்கிறது உனக்கு…'
என்றவனைப் பார்த்து விழித்தாள் கயல்.

அவளது பார்வையில்
'அடிப்பாவி அப்படிச் சொல்லலாம் என்று தான் நினைத்தாயா'
என்றான் மீண்டும் சந்தேகமாக.

‘ஆமாம்’ என்பது போல ஜிமிக்கிகள் ஆடத் தலையசைத்தாள்.

பட்டென்று எட்டி அவளது காதுகளைப் பிடித்து முறுக்கியவனின் கைகளைப் பற்றிக் கொண்டு
‘சரி சரி காலில் விழத் தான் குனிந்தேன்' எனச் சரணாகதி அடைந்தாள் கயல்விழி.

'அப்படி வா வழிக்கு'
என்றபடி சிரித்தவனிடம்
‘காலம் காலமாக மனைவிமார் தான் கணவன் காலில் விழ வேண்டுமா'
என்று கேட்டாள்.

'இல்லையே கணவனும் விழலாமே'
என்றான் சட்டென்று.

‘அப்போது விழ வேண்டியது தானே'
என்றாள் அவளும் பதிலுக்கு.

‘விழுந்து விட்டால் போயிற்று'
என்றவன் அவள் எதிர் பாராத வகையில் சட்டென்று அவளது கால்களில் விழுந்து விட்டான்.

அவனது செய்கையை எதிர்பாராதவளோ 'ஐயோ என்னதிது…'
என்றபடி பதறி விலகினாள்

அவள் விலகிப் போகாதபடி அவளது பாதங்களை இறுகப் பற்றிய படி அவளை அண்ணாந்து பார்த்தான்.

'உன் கால்களைப் பிடிப்பது அப்படி ஒன்றும் கஷ்டமாக இல்லையே…'
என்று கண்ணடித்துச் சிரித்தான்.

அவனது பேச்சில் மீண்டவள் அவனது செய்கையில் எப்படி உணர்ந்தாள் என்று கணிக்க முடியாமல் இருந்தது.

அவளது கண்கள் லேசாகக் கலங்கியது. அதைப் பார்த்தவன்
'அந்த வாயாடி எங்கே போனாளோ'
என்று இராகம் இழுத்தான்.

அவனது கேலியில் அவளுக்குச் சிரிப்பு வந்து விடவே
'சரி என்னை எப்படிப் பார்த்துக் கொள்ளுவீர்கள்'
என்றாள் தலை சாய்த்து.

‘இதென்ன கேள்வி உள்ளங்கையில் வைத்துப் பார்த்துக் கொள்ளுவேன்' என்றான் கவியரசன்.

'அப்படியா சங்கதி… சரி உங்கள் கைகளை நீட்டி உள்ளங்கையை விரியுங்கள்'

‘ஏன்… என்ன சங்கதி'

‘உள்ளங்கையில் என்னை முதலில் வையுங்கள்… பிறகு பார்ப்பதைப் பற்றிப் பேசலாம்'
என்றபடி அவனது உள்ளங்கையில் ஏறினாள்.

கைகளைப் பட்டென்று இழுத்து உதறியவனோ
'அடிப்பாவி கிராதகி இராட்சசி… நல்லவேளை கண்ணுக்குள் வைத்துப் பார்ப்பேன் என்று சொல்லாமல் விட்டாயேடா கவியரசா அதற்கு என்ன செய்திருப்பாளோ…'
என்று புலம்பினான்.

அவனது பேச்சில் கலகலவென்று சிரித்தவளது மாசற்ற சிரிப்பை ஒரு கணவனாக இல்லாமல் ஒரு காதலனாக இல்லாமல் ஒரு தோழனாக இரசித்தான் கவியரசன்…❤

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“வெள்ளி நிலா ஒளி திருடி உள்ளங்கையில் ஊற்றி வைப்பேன் காற்றலையில் இசை பிரித்துக் காதுகளில் தவழ வைப்பேன்”
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Attachments

  • 4adb1ce5d2e652e61ae152aec904f002.jpg
    4adb1ce5d2e652e61ae152aec904f002.jpg
    79.8 KB · Views: 20
  • FB_IMG_1624532265049.jpg
    FB_IMG_1624532265049.jpg
    15.1 KB · Views: 19
Top