• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
கீழ்த்திசையில் கதிரவன் மெல்லென எட்டிப் பார்க்கத் தொடங்கியது.

பனித்துளிகள் மலர்கள் மீதும் இலைகள் மீதும் ஒட்டிக் கொண்டிருக்க, சூரியக் கதிர்கள் பனித்துளிகளை ஊடுருவி வர்ணஜாலங்களைத் தூவிக் கொண்டிருந்தது.

தலைக்குக் குளித்து, ஈரக் கூந்தலைத் துண்டொன்றால் சுற்றி, அள்ளிக் கொண்டை போட்டு, இடுப்பில் புடவையைத் தூக்கிச் செருகியபடி வாசலுக்கு வந்தாள் கயல்விழி.

ஏதோ யோசித்தவளாகி மீண்டும் உள்ளே சென்றவள், அங்கே அவளுடன் இன்முகமாகப் பேசும் வேலைக்காரம்மா சிவகாமியிடம் கோலப்பொடி டப்பாவை வாங்கிக் கொண்டு வந்தாள்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த கவியரசனும் கலையரசனும், வாசலை நன்றாகப் பெருக்கி, மஞ்சள் நீர் தெளித்துக் கோலப் பொடியுடன் அமர்ந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தவளைப் பார்வையால் பாராட்டினார்கள்.

"ஆஹா இப்போது தான் இந்த வீட்டிற்கே ஒரு அழகு சேர்ந்திருக்கிறது. என்னுடைய மருமகளுக்கு என்னவொரு பொறுப்பு." என்று சிலாகித்தார் கலையரசன்.

"என்னுடைய பொறுப்பை விடவா... அவளுடைய பொறுப்பு பெரிதாகப் போய் விட்டது."
என்றான் கவி வேண்டுமென்றே.

"நீ… இப்படி வாசல் தெளித்துக் கோலம் போடுமளவிற்குப் பொறுப்பானவனா கவி… அப்பாவுக்குத் தெரியாதே."

"என்னப்பா… என்னால் வாசல் தெளித்துக் கோலம் போட முடியாது என்கிறீர்களா?"

"உன்னால் கோலம் போட முடியாது என்று நான் எங்கே சொன்னேன்… நீ கோலம் போட்டதே இல்லை என்கிறேன்"

"நாளையில் இருந்து பாருங்கள்… உங்கள் மருமகளா? இல்லை நானா சீக்கிரமாக எழுந்து கோலம் போடுகிறோம் என்று…"

"நீ கோலம் போடுவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் அப்பனே… முதலில் என் மருமகளை விடவும் ஒரு செக்கன் முன்னதாக எழுந்து காட்டுப் பார்க்கலாம்"

"ஏனப்பா உங்களுக்கு இந்தக் கொலைவெறி… அப்படி எழுந்து கொள்ள வேண்டும் என்றால், நான் சிவராத்திரி தான் இருக்க வேண்டும்"

"ஹா ஹா அப்படிச் சொல்லு இப்போது தெரிகிறது தானே… போய் வேலையைப் பாரடா மகனே"
என்று சிரித்தபடியே எழுந்து சென்று விட்டார் கலையரசன்.

தந்தை சென்றதும் அவளருகில் வந்தவன் தானும் அவளைப் போலவே அமர்ந்தபடி…

"பரவாயில்லை கோலம் சுமாராக இருக்கிறது"
என்றான் வேண்டுமென்றே.

அவனை நிமிர்ந்து பார்த்தவள்
"உங்கள் சுமாரான பாராட்டுக்கு நன்றி"
என்று சொல்லி மெல்ல எழவும் அவளுக்குக் கை கொடுத்து எழுப்பி விட்டான்.

"இந்தச் சுமாரான கோலத்தைச் சூப்பரான கோலமாக மாற்றலாமா"
என்றவன் அவளது கையில் இருந்த கோல டப்பாவை வாங்கியபடி மீண்டும் அமர்ந்தான்.

அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை வேடிக்கை பார்த்தாள் கயல்விழி.

அமர்ந்தவனோ கோலத்திற்குக் கீழாகக் கயல்முழீ என்று எழுதி விட்டு நிமிர்ந்து பார்த்தான்.

அவ்வளவு தான் அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்று தெரியும் தானே???

விடாமல் துரத்தியவளிடம் அவளது உடல் நிலை கருதி வேண்டும் என்றே மாட்டுப் பட்டான் கவியரசன்.

மூச்சிரைக்க ஓடி வந்தவள் ஒரு கையால் அவனது சட்டையைக் கொத்தாகக் கைப்பற்றினாள்.

மறு கையால் அவனது காதைப் பிடிக்கவும்
"அம்மா தாயே மன்னித்து விட்டு விடு" என்றான் கவி சோகமாக.

"இதை என்பெயரை எழுதுவதற்கு முன்பு யோசித்திருக்க வேண்டும்"

"அப்படியென்றால் உன் பெயர் கயல்முழீ என்று ஒத்துக் கொள்ளுகிறாயா?"

"உதை விழும்"

"சரி சரி பிழை தான்"

"சரியா ? பிழையா?"

"அம்மா தாயே ஆளை விடு"
என்று அவன் புலம்பவும் வாசலில் ஒரு முச்சக்கர வண்டி வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

அதிலிருந்து தேன்மொழி மட்டும் இறங்குவதைப் பார்த்தவள் சட்டென்று அவனை விட்டு விட்டாள்.

அவள் கையை எடுத்ததும் கசங்கி இருந்த சட்டையைத் திருத்தியவன் ஒரே ஓட்டமாக உள்ளே போய்விட்டான்.

அவன் தேன்மொழி வந்ததைப் பார்க்கவேயில்லை.

தமக்கை தன்னை நோக்கி வருவதற்கு முன்னர் வீட்டைக் கண்களால் அளவிட்டதும்… லேசாக முகத்தைச் சுழித்ததும் கயலின் கண்ணில் தப்பாமல் விழுந்து தொலைத்தது.

அதைக் கண்டு கொள்ளாதது போல
"வா அக்கா என்றாள்"
சற்றே உற்சாகத்துடன்.

"அக்கா என்றெல்லாம்"
என்று வெடுக்கென்று சொல்ல எடுத்த தேன்மொழி உடனே சுதாரித்துக் கொண்டு "உன்னுடைய மாமியார் உள்ளே இருக்கிறாரா?"
என்று கேட்டாள்.

"ஆமாம்"
என்று கயல் சொன்னதும் விரைந்து உள்ளே போய் விட்டாள்.

தமக்கையின் செய்கையில் இது வழமை தானே என்ற நினைப்புத் தவிர கயலுக்கு வேறு எண்ணம் வரவில்லை.

உள்ளே சென்ற தேன்மொழி அன்பரசியின் அறை எதுவெனத் தெரியாமல் கலையரசனது அலுவலக அறைப் பக்கமாகப் போய் விட்டாள்.

அவள் வந்ததே அன்பரசியைத் தனது கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் அதற்கு ஏதாவது வழி செய்யலாமே என்பதற்காகத் தான்.

அங்கே மிக மெதுவாகக் கவியும் கலையரசனும் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்தவள் லேசாகச் சாத்தி இருந்த கதவோடு மெல்லச் சாய்ந்து கொண்டு ஒட்டுக் கேட்டாள்.

ஒட்டுக் கேட்பது கீழ்த்தரமான செயல் என்பது அவளுக்குத் தெரியும். இருந்தாலும் அப்படி மெதுவாக என்ன பேசுகிறார்கள் என்பதை அறியும் ஆவல் அவளை அவ்விதம் செய்யத் தூண்டியது.

"அப்பா இதை மெதுவாகக் கயலிடம் சொல்ல வேண்டும். இதை அவளிடம் இருந்து ரொம்ப நாள் மறைக்க முடியாது. அவளது உடலின் மாற்றங்களே அவளுக்கு உண்மையைக் காட்டிக் கொடுத்து விடும்.
மிகவும் பக்குவமாகச் சொல்ல வேண்டும்"
என்று சொல்லிக் கொண்டு இருந்தான் கவி.

"கயலிடம் எதை மறைத்தான் இவன்… ஒரு மண்ணும் புரியவில்லையே... கொஞ்சமாவது புரியும் வண்ணம் சொல்லித் தொலையேன்டா"
என்று தலையைப் பிய்த்துக் கொண்டாள் தேன்மொழி.

அவளது அந்த நிலையை நெடு நேரம் தொடர விடாமல் அந்த விடயத்தைப் போட்டுடைத்தார் கலையரசன்.

"கவிப்பா… என் மருமகள் தனக்குக் கர்ப்பப்பை நீக்கப் பட்டதைக் கேட்டதும் எப்படி நடந்து கொள்ளுவாளோ தெரியவில்லையே"
எனக் கவலை வெளியிட்டார்.

"அது தானப்பா எனக்கும் பயமாக இருக்கிறது"
என்றான் கவியும் கலக்கத்துடன்.

வீட்டில் யாரும் தாங்கள் பேசுவதைக் கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார் கலையரசன்.

எதற்கும் சற்றே மெதுவாகப் பேசலாம் என்றதால் மெதுவாகவும் பேசினார்.

ஆனால் விதி வலியது போலும்… யாருடைய காதில் விழக்கூடாதோ அவள் காதில் இந்த விஷயம் விழுந்து தொலைத்தது தான் கொடுமையிலும் கொடுமை.

சட்டென்று தான் நின்றிருந்த இடத்தில் இருந்து விலகி நடந்த தேன்மொழியின் மனதில் அந்த நேரம் சாத்தான் குடியேறியதை என்னவென்று சொல்லுவது.

அந்த நேரம் பார்த்து அன்பரசி மாடியில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்த தேன்மொழியின் புத்தி வஞ்சகமாகத் திட்டம் தீட்டத் தொடங்கி விட்டது.

கீழே வந்தவர் அப்போது தான் அவளைப் பார்த்தவர் பட்டும் படாமலும் லேசாகச் சிரித்தார்.

அதைத் தேன்மொழி கண்டு கொள்ளவில்லை.

"உங்களிடம் ஒரு இரகசியம் சொல்ல வேண்டும்"
என்றவள் அவரது அனுமதியையும் எதிர்பார்க்காமல், தனக்குப் பின்னால் வந்த கவியரசனையும் பார்க்காமல் தான் கேட்டது அத்தனையையும் பட்டென்று போட்டு உடைத்து விட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்ட கவியரசனுக்கு சிறிது நேரம் என்ன செய்வது என்றே பிடிபடவில்லை.

சாதாரணமாகவே கயலை மகனிடம் இருந்து எப்படிப் பிரிக்கலாம் என்று யோசனை செய்து கொண்டிருந்த அன்பரசிக்கு இப்போது கிடைத்த தகவல் பெரிதும் கை கொடுத்தது.

ஆனாலும் அந்த நேரம் உள்ளே வந்த கயல்விழியைப் பார்த்தவருக்கு அவளது சோர்ந்து தோற்றம் சிறிது கருணையைச் சுரக்கத் தான் செய்தது.

கயலைப் பார்த்ததும் அவரது பார்வை கனிந்ததைப் பார்த்த தேன்மொழி.
இதை இப்படியே தொடர விடக் கூடாதே என்ற எண்ணத்தில்
"எப்படி ஏமாற்றி இருக்கிறாள். அவளின் தமக்கை எனக்கே இது தெரியாதே"
என அவருக்கு மட்டுமே கேட்கும் வகையில் முணுமுணுத்தாள்.

அவளது முணுமுணுப்பைக் கேட்டவருக்கும் உடனே கோபம் வந்து விட்டது. மற்றதெல்லாம் மறந்து போய் விடக் கயலைக் கடுமையான வார்த்தைகளால் திட்டத் தோடங்கி விட்டார்.

"வாடியம்மா… ஏதோ போனால் போகிறது என உன்னை ஏற்றுக் கொள்ளலாம் என்று ரொம்பக் கஷ்டப் பட்டு ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். அதில் ஒரு நொடியில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டாயே.
உன்னால் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியாதெனத் தெரிந்தும் அதை மறைத்து என் மகனைத் திருமணம் செய்து கொண்டு இருக்கிறாயே."
என்றார் தன் கோபத்தை அடக்கும் வழி தெரியாமல்.

அவர் சொல்லுவதைப் புரிந்து கொள்ளவே கயல்விழிக்கு ஒரு நிமிடம் முழுமையாகத் தேவைப் பட்டது.

அதற்குள் தன்னைச் சுதாரித்துக் கொண்ட கவியரசனோ
"அரசிம்மா அவள் மீது வீணாகப் பழி போடாதீர்கள்.
என்றான் ஆற்றாமையுடன்.

"கண்ணப்பா உனக்கு ஒன்றும் தெரியாது. இவள் உன்னை ஏமாற்றி இருக்கிறாள்.

"உங்களுக்குத் தான் ஒன்றும் தெரியவில்லை அரசிம்மா. இந்த விடயம் அவளுக்கே தெரியாது"

"இது என்ன புதுக் கதையாக இருக்கிறது"

"கதையில்லை அது தானம்மா நிஜமாகவே நடந்தது"

வரவேற்பரையில் அன்பரசி தன்னைப் பார்த்துத் திட்டிப் பேசுவதைப் புரியாமல் பார்த்திருந்த கயல்விழிக்கு அப்போது தான் ஏதோ புரிவது போல இருந்தது.

இவர்களது பேச்சில் இடையிட்ட கலையரசன்
"அன்பு… நம்முடைய மருமகளுக்குக் கர்ப்பப்பைப் புற்றுநோய். அதனால் தான் அதை அகற்ற வேண்டியதாகப் போயிற்று."
என்றார் தெளிவாக.

"அவளது பிரச்சினை அவளோடு… அதற்காக உண்மையை மறைத்துத் திருமணம் செய்வாளா?"

"என்ன அன்பு திரும்பத் திரும்ப அதையே சொல்லுகிறாய். அவளுக்கே அது தெரியாது"
என்று இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே கயல்விழி மெதுவாகக் கவியரசன் அருகில் வந்தாள்.

என்ன சொல்லித் தாய்க்குப் புரிய வைப்பது என்பதிலேயே இருந்தவன் மனைவி உள்ளே வந்ததையோ திகைத்துப் போய் நின்றதையோ தன்னருகே வந்ததையோ கவனிக்கவில்லை.

அருகில் வந்து அவனின் தோளில் மெல்லக் கை வைத்தாள் கயல்.
அவளது தொடுகையில் திரும்பியவன் முதலில் பார்த்தது அவளது கலங்கிய விழிகளைத் தான்.

பட்டென்று அவளது முகத்தைக் கைகளில் ஏந்தியவன்
"நான் வேண்டுமென்று உன்னிடம் மறைக்கவில்லை விழிம்மா.
உண்மை தெரிந்தால் எங்கே நீ திருமணத்தை நிறுத்தி விடுவாயோ அல்லது வேறு யாராவது நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எனக்கு இருந்தது. உன்னிடம் பக்குவமாக இன்று உண்மையைச் சொல்லி விடலாம் என்று தான் இருந்தேன். அதற்குள் சகுனி வேலை பார்த்தாயிற்று."
என்றவாறே தேன்மொழியை முறைத்தான் கவி.

அவனது பார்வையின் உஷ்ணம் தாங்காத தேன்மொழி யாரிடமும் சொல்லாமலேயே விரைந்து வெளியேறி விட்டாள்.

அவளது விடைபெறுதலையும் யாரும் எதிர் பார்க்கவுமில்லை.

கணவனின் கைகளை விலக்கியவள் மெல்ல விலகி நடந்தாள்.

அவளது செயலில் நிஜமாகவே கவி உடைந்து போனான்.

பட்டென்று தாயின் பக்கம் திரும்பியவன்
"நீங்கள் கூட இப்படி மற்றவர் மனதை நோகடிக்கப் பேசுவீர்கள் என்று எனக்குத் தெரியாதும்மா"
என்றவன் கயலின் பின்னால் விரைந்து சென்றான்.

இப்பொழுது அவளது மனது என்ன ரணப் பட்டிருக்குமென்று ஒரு தோழனாக அவன் வேதனைப் பட்டான்.

அன்பரசிக்கு மகன் சொன்னது மனதைத் தொட்டதே தவிர, புத்தியைத் தொடவில்லை.

ஒரு பெண்ணாக இன்னொரு பெண்ணைத் தான் இப்படிப் பேசக் கூடாது என்று மனது சொன்னாலும், புத்தியோ இவளை என் மகனிடம் இருந்து பிரித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நின்றது.

கலையரசனோ தன் பங்கிற்கு அன்பரசியை முறைத்து விட்டுப் போய் விட்டார்.

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“உந்தன் நெற்றி மீதிலே துளி வியர்வை வரலாகுமா...
சின்னதாக நீயும் தான் முகம் சுழித்தால் மனம் தாங்குமா...
உன் கண்ணிலே துளி நீரையும் நீ சிந்தும் விட மாட்டேன்…”
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Attachments

  • 32cafed6bd2e6f980057bbbd98106237.jpg
    32cafed6bd2e6f980057bbbd98106237.jpg
    100.7 KB · Views: 31
  • FB_IMG_1624532223649.jpg
    FB_IMG_1624532223649.jpg
    38 KB · Views: 20
Top