• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
கவிதாவின் வீட்டில் இருந்து புறப்பட்ட கவிக்கு மனதெல்லாம் பாரமாக இருப்பது போல ஒரு உணர்வு தோன்றியது.

வீட்டிற்குப் போனவன் உள்ளே போகாமல் மாமரத்தில் கட்டப் பட்டு இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான்.

அந்த ஊஞ்சலில் அன்றொரு நாள் கயல் ஒரு முறை தன் தோளில் சாய்ந்திருந்தது அவனது நினைவில் வந்து போனது.

இளந்தென்றல் பூக்களது வாசத்தைச் சுமந்து வந்து அவனது நாசி தொட்டுச் சென்றது.

அந்தச் சுகந்த வாசனையில் மல்லிகைப் பூவின் வாசனை மட்டும் அவனுக்குப் பிடித்திருந்தது.
கயல் எந்த நேரமும் சூடிக் கொள்ளும் அழகு மலர் அது தான் என்பதால்…

அவளும் தானும் திருமணம் ஆகி மூன்றாவது நாள் இராமர் கோவிலுக்குப் போனது, அங்கே இருள் சூழும் நேரத்தில் அவள் படிகளில் அமர்ந்து மலர்களின் வாசத்தை நுகர்ந்தது.

எல்லாம் படிப்படியாக நினைவலையில் வந்து போனது.

அந்த நேரம் யாரோ வருவது போலக் காலடியோசை கேட்டது. ஆனால் அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவனுக்கு நிமிர்ந்து பார்க்கவும் தோன்றவில்லை.

சிறிது நேரத்தில் அவனது முடியை ஒரு கை கோதவே திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

அங்கே அன்பரசி நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் அவனுக்கு ஏற்பட்ட உணர்வை வார்த்தையில் விபரிக்க முடியவில்லை.

அவரது பாசம் வேண்டும் என்ற ஏக்கம், அவர் முன்பு நடந்து கொண்டதால் வந்த கோபம் என அவன் அவரைப் பேச்சற்றுப் பார்த்திருந்தான்.

‘கண்ணப்பா அம்மா உனக்கு ஒரு பெண் பார்த்திருக்கிறேன்'
என்றார்.

அவன் இருந்த நிலையில் தன்னிடம் இருந்து வார்த்தைகள் ஏதாவது தவறாக வந்து விழுந்து விடுமோ என்று வாயை அழுந்த மூடிக் கொண்டான்.

அந்த நிலையிலும் தன் மகன் தனக்காக அமைதியாகப் பேசாமல் இருப்பதை ஆதூரத்துடன் பார்த்திருந்தார்.

சட்டென்று தன் பின்னாள் நின்றவளை முன்னுக்குக் கொண்டு வந்து
'நீ கண்டெடுத்த பொக்கிஷத்தை நான் புத்தியில்லாமல் தூரமாக எறிந்து விட்டேன். இந்த உன் பொக்கிஷத்தை நீயே வைத்துக் கொள்'
என்றவாறு அவன் மீது தள்ளி விட்டார்.

அவர் தள்ளிய வேகத்தில் கவியோடு லேசாக மோதி நின்றவளை அப்போது தான் பார்த்தவன் சந்தோஷம் தாங்க முடியாமல் தாயை இறுக அணைத்துக் கொண்டான்.

சிறிது நேரம் அப்படியே நின்ற அன்பரசி 'கண்ணப்பா உன்னுடைய அரசிம்மா செய்த பிழைக்கு பிராயச்சித்தம் ஏதும் உண்டென்றால் அது நான் உங்கள் இருவர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்பது தான்'
என்றவர் சட்டென இருவரது காலிலும் விழுந்து விட்டார்.

சடுதியில் நிறைவேறிய அந்தச் செயலைப் பொறுக்காதவன் தாயைத் தூக்கி விட்டுக் கண் கலங்கினான்.

'என்ன பைத்தியக்காரத்தனம் அரசிம்மா இது. நீங்கள் போய் எங்கள் கால்களில் விழலாமா?'

'நீ அரசிம்மா என்று அழைத்து எத்தனை வருடங்கள் ஆயிற்றுத் தெரியுமா? இந்த அழைப்புக்காக எதுவென்றாலும் செய்யலாம் தெரியுமா?'

'அதற்காக எங்கள் காலில் எல்லாம் விழலாமா?'

‘நான் வேறு யாரோவின் காலிலா விழுந்தேன்.என் மகன் மருமகளின் காலில் தானே விழுந்தேன்'
என்றவர் தொடர்ந்து…
‘நான் எப்படிப் பட்டதொரு காரியம் செய்து இருக்கிறேன்… இப்போது அதை நினைக்கும் போது என்மீது எனக்கே வெறுப்பாக இருக்கிறது'
என்று கண் கலங்கினார்.

‘கவிதா பிறந்த பின்பு எனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினையில் என்னால் வேறு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதென்று விட்டார்கள் வைத்தியர்கள்.
எனக்குப் பையன் என்றால் கொள்ளைப் பிரியம்.
என்னாலே தான் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதே அதனால் இவனைத் தத்து எடுத்து வளர்த்தேன்.
நான் பெற்ற மகள் கவிதாவை விட எனக்கு என் கண்ணப்பா தான் உயிர்
அவனை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க விரும்பியதில்லை.
அவன் காதலிக்கிறேன் என்று வந்து நின்றதும் நான் பயந்து விட்டேன்.
எங்கே எனக்கு மருமகளென வருபவள் என் மகனை என்னிடம் இருந்து பிரித்து விடுவாளோ என்ற எண்ணமும்,
என் மகனின் பாசம் என்னிடம் குறைந்து விடுமோ என்ற எண்ணமும் என்னைத் தவறாக வழி நடத்தி விட்டது.
கௌரவம் அந்தஸ்து என்கின்ற திரைக்குப் பின்னால் இருந்து பார்த்த எனக்கு மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரிந்திருக்கவில்லை.
உங்கள் இருவரதும் அழகான வாழ்வைச் சிதைத்துப் போட்ட பாவி நான்.
அதற்கான தண்டனை எனக்கு வந்தே தீர வேண்டும்'
என்றவாறு முகத்தை மூடிக் கொண்டு சிறு பிள்ளை போல அழத் தொடங்கினார் அன்பரசி.

அவரது கைகளை விலக்கி விட்டு அவர் முகத்தை அழுந்தத் துடைத்து விட்டவன்
‘முடிந்ததை எல்லாம் விடுங்கள் அரசிம்மா. தொலைத்த சந்தோஷத்திற்கும் சேர்த்துச் சந்தோஷமாக வாழ்வோம் சரியா'
என்றான் சிறு பிள்ளைக்குச் சொல்லுவது போல.

மகனது முகத்தையே பார்த்திருந்தவர் கயலை ஏறிட்டுப் பார்த்தார்.

அவரது விழிகளில் தெரிந்த வலியை நொடியில் புரிந்து கொண்டவள்… ஒரு எட்டில் அவர் அருகில் வந்தாள்.

'அத்தை… நீங்கள் எனக்குச் செய்ததை நினைத்து நான் அழுதிருக்கிறேன் தான் கவலைப் பட்டு இருக்கிறேன் தான்… இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன்.
ஆனால் எப்போது நீங்கள் செய்தது தவறு என்று உணர்ந்தீர்களோ அப்போதே நான் அதையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டேன்.
இப்போது உங்களுக்கு என் மீது வெறுப்பு ஒன்றும் இல்லை தானே'
என்று கேட்டாள்.

அவள் கூறியதைக் கேட்டவர்…
‘உனக்குத் தான் எவ்வளவு பரந்த மனது... அம்மாடி அந்த அன்பரசியின் ஆட்டம் முடிந்து விட்டது. இது புது அன்பரசி கயல்விழியின் அத்தை அன்பரசி'
என்றவாறு அவளை இறுக அணைத்துக் கொண்டார்.

அந்த நேரம் ஆனந்தன் சுவேதா கபிலன் மீனலோஜனி அங்கு வந்தார்கள்.

‘மச்சி அமெரிக்காவில் இருந்து வந்தவன் எங்களை ஒரு எட்டு வந்து பார்த்தாயா'
என்றான் ஆனந்தன் ஆத்திரமாக முகத்தை வைத்துக் கொண்டு.

‘அது தானே'
என்றான் கபிலனும் கடுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு.

'அடேய் அடேய் இருங்களேன்டா…
இப்போது தான் என் வாழ்க்கையை ஒரு வழியாக நெம்புகோல் கொண்டு நிமிர்த்தி இருக்கிறார்கள்.
கோபப் படாதீர்கள்… இங்கே இவள் என்ன முடிவில் இருக்கிறாளோ என்ற கவலை… அது இதென்று ஒரே பிரச்சினை'
என்றான் மன்னிப்புக் கேட்பது போல.

'உங்களை நான் எப்படியடா மறப்பேன்…'
என்றவனை ஆனந்தனும் கபிலனும் அணைத்துக் கொண்டனர்.

தங்கள் தோழியின் வாழ்க்கையில் மலர்ச்சி வந்ததைப் பார்த்த சுவேதாவும் மீனுவும் கூட அவளை இறுக அணைத்துக் கொண்டனர்.

……………………......................................................

தோட்டத்தில் கட்டப் பட்டிருந்த ஊஞ்சலில் கயல்விழி அமர்ந்தபடி தனது மடியில் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த கவியரசன் அவளது புத்தகத்தைப் பறித்து மூடி வைத்து விட்டு, அவளது மடியில் படுத்துக் கொண்டான்.

அவனது அந்த அதிரடியான செயலில் திடுக்கிட்டவள் நிதானத்திற்கு வரச் சிறிது நேரம் பிடித்தது.

அதன் பின்னர் அவனது காதைப் பிடித்து லேசாக முறுக்கிய படி
'உங்கள் அடாவடித் தனத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போயிற்று'
என்றாள் வேண்டுமென்றே கோபமாக.

அதற்கு அவனோ காதைப் பிடித்த அவளது கையை எடுத்துத் தனது தலையில் வைத்து விட்டுக் கண்களை மூடிக் கொண்டான்.

அவனது செயலில் லேசாகப் புன்னகைத்த படியே அவனது முடிகளைக் கோதி விட்டாள் அவன் மனைவி.

கண்கள் மூடி அவளது அன்பான அந்த ஸ்பரிசத்தை அனுபவித்தவன், கண்களைத் திறக்காமலேயே அவளுடன் பேசத் தொடங்கினான்.

'விழிம்மா'

'ம்'

'விழிம்மா'

'ம்ம்'

'விழிம்மா'

'அட நான் தான் சொல்லுங்கள்'

'இது நிஜம் தானா?’

‘எது’

'என் விழிம்மா என்னோடு இருப்பது'
என்றான் அவளது அருகாமையில் சந்தோஷத்தை உணர்ந்தபடி.

அவன் சொன்னதைக் கேட்டவளோ நறுக்கென்று அவனது கன்னத்தில் கிள்ளி விட்டாள்.

திடீரென்ற அந்தச் செயலில் பட்டென்று எழுந்தவன்… கன்னங்களைத் தேய்த்தபடி அவளை முறைத்தான்.

அவனது பார்வையில் கலகலவெனச் சிரித்தவள்
'வலிக்கிறது தானே… அப்படி என்றால் இது நிஜம் தானே'
என்றாள் குறும்பாக.

அவளது பதிலிலும் சிரிப்பிலும்
'உன்னை'
என்று அவளை அடிக்கத் துரத்தியவனிடமிருந்து தப்பி வீட்டுக்குள் ஓடிச் சென்று அன்பரசிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள் கயல்விழி.

அவளைப் பிடிக்க ஓடிவந்தவனோ
'ஏய் அன்புச் செல்லம் இப்போது இந்த வாசல் வழியாக ஒன்று உருண்டு வந்ததே... நீ பார்த்தாயா?’
என்றான் குறும்பாக.

'இல்லையே கண்ணப்பா… என்ன வந்தது' என்றார் அவரும் வேண்டுமென்றே.

தாய்க்குப் பின்னால் ஒளிந்து நின்றவளின் காதை எட்டிப் பிடித்து முன்னுக்கு இழுத்தான்.

‘என்னவொரு அறிவுக்கொழுந்து. ஒளிந்து கொள்ள வேறு இடமே இல்லையா உனக்கு. குண்டுப்பூசணி நீ அன்புக்குப் பின்னால் நின்றால் முருங்கைக்காய்க்குப் பின்னால் பூசணிக்காயை வைத்தது போல நீ நிற்பது அங்கு வரும் போதே தெரிகிறது'
என்றவாறு அவளது கன்னத்தில் கிள்ளி விட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டவளோ ஏகத்துக்கும் கடுப்பாகி
‘அத்தை பாருங்கள்'
என்று அன்பரசியிடம் புகாரிட்டாள்.

'அடேய் அவளுடன் சண்டை போடாமல் உனக்குப் பொழுதே போகாதா?
கொஞ்ச நேரம் அமைதியாக இரு சம்பந்தி இப்போது வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்'
என்றவாறு அவனிடம் இருந்து கயலை அழைத்து வந்து தன்னருகே அமர்த்திக் கொண்டார்.

அன்பரசிக்குத் தெரியாமல் கணவனைப் பார்த்துப் பழிப்புக் காட்டி விட்டுத் திரும்பிக் கொண்டாள் கயல்விழி.

அந்த நேரம் முருகேசனை அழைத்துக் கொண்டு கலையரசன் உள்ளே வந்தார் கூடவே எழிலும் கணேசனும் பாட்டியும் வந்தார்கள்.

தந்தையைப் பார்த்ததும் எழுந்து போய்க் கட்டிக் கொண்டாள் கயல்.
அவளது முடியை வருடிக் கொடுத்தவரோ
அவளை அழைத்துக் கொண்டு வந்து தன்னருகே அமர்த்திக் கொண்டார்.

‘எப்படி இருக்கிறீர்கள் சம்பந்தி'
என அன்பரசியை நலம் விசாரித்தார் முருகேசன்.

‘எனக்கென்ன குறை சம்பந்தி என் மருமகள் என்னை அவளுடைய அம்மா மாதிரிப் பார்த்துக் கொள்ளுகிறாள்'
என்றார் கயலைக் கனிவுடன் பார்த்து.
அந்த வார்த்தையில் கொஞ்சம் கூட நடிப்புத் தெரியவில்லை.

மகளின் கன்னத்தை வருடி
'அவள் எல்லோருக்குமே அம்மா தானே' என்றார் கலங்கியவாறு.

தந்தையின் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவள் அவரது விழிநீரைத் துடைத்து விட்டாள்.


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
அன்பெனும் மழையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்”
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

……………………………..............................................


ஆறு வருடங்களுக்குப் பிறகு


‘புவிக்குட்டி ஓடாதே நில்லுடா… சொன்னால் கேளுடா…'
என்றவாறு சாப்பிட அடம்பிடித்தவாறு ஓடிக் கொண்டிருந்த மூன்று வயது மகன் புவியரசனுக்குப் பின்னால் மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தாள் கயல்விழி.

அங்கு வந்த அன்பரசி அவளது கையிலிருந்த சாப்பாட்டுக் கிண்ணத்தை வாங்கிவிட்டு
'நீ போம்மா… இந்தக் குட்டி வாலுவை நான் பார்த்துக் கொள்கிறேன்'
என்றவாறு கயலை அனுப்பி வைத்தார்.

பாட்டியைக் கண்டதும் ஓடி வந்து அவரைக் கட்டிக் கொண்ட புவி அவர் உணவை ஊட்டுவதற்காக வாயை ஆவென்று பிளந்தான்.

சிரித்தபடியே பேரனைத் தூக்கி மேசையில் இருத்தியவர் அவனுக்கு உணவு ஊட்டத் தொடங்கினார்.

வேலைக்குத் தயாராகி வந்த விமலரூபன் 'அத்தை நான் வேலைக்குப் போய் வருகிறேன்'
என்றவாறு செல்ல
‘மாப்பிள்ளை சாப்பாட்டுப் பெட்டியை மறக்காமல் கொண்டு செல்லுங்கள்' என்று விட்டுக் கவிதாவை அழைத்தார் அன்பரசி.

'என்னம்மா'
என்று வந்தவளிடம் புவியைத் தூக்கிக் கொடுத்தவர்
'இந்தா உன் மருமகனைச் சிறிது நேரம் வைத்துக் கொள் நான் இதோ குளித்து விட்டு வருகிறேன்'
என்று உள்ளே போய் விட்டார்.

'வாடா என் மருமகனே'
என்றவாறு புவியைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள் புவியின் அத்தை கவிதா.

வரவேற்பு அறைக்குள் வந்த கலையரசனோ 'வித்தி, கிருஷ்ணா, வாணி சீக்கிரமாக வாருங்கள் தாத்தா உங்களைப் பள்ளியில் விட்டுவிட்டு கொஞ்சம் வெளியே போக வேண்டும்'
என்றார் சத்தமாக.

கவிதாவின் மகள் வித்தியா தானே தயாராகி வந்து விடுவாள்.

கவிதாவின் மகன் கிருஷ்ணனைக் கயல்தான் தயார்ப்படுத்த வேண்டும். அத்தை அத்தையென்று அவளது முந்தனையையே பிடித்துக் கொண்டு சுற்றுவான்.

கவியரசனதும் கயல்விழியினதும் மகள் மதிவாணி. எப்போதுமே கவிதாவின் செல்லம்.
அவளுக்குக் கவிதா அத்தை என்றால் உயிர் அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டே தொங்குவாள்.

கயல் மூவரையும் அழைத்து வந்து மாமனருகில் விட்டவள்.
'அப்பா சீக்கிரமாக வாருங்கள் கோவிலுக்கு போக வேண்டும்'
என்றாள்.

கலையரசனைக் கயல் அப்பா என்று தான் அழைப்பாள்.

முருகேசனும் கலையரசனும் இருக்கும் போது கயல் அப்பா என்றழைத்தால் இருவரும் என்னம்மா என்பார்கள் ஒன்றாக.
அப்போது எல்லோரும் சிரித்து விடுவார்கள்.

அன்பரசியின் மனமாற்றத்திற்குக் காரணம் கலையரசன் தான்.
அவர் தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிப் பேசி அன்பரசியை இவ்வளவு தூரம் கொண்டு வந்தார்.

அன்பரசியும் ஒன்றும் ரொம்பக் கெட்டவர் இல்லை அல்லவா! அதனால் எளிதில் எல்லோர் மீதும் பாசம் வைத்து விட்டார்.

இப்போது தேன்மொழி கூடக் கயலிடம் அன்பு பாராட்டத் தொடங்கி விட்டாள்.

அதற்குக் காரணம் அன்பரசி தான்… அவர் தான் தேன்மொழியின் மனதைக் கரைத்து அவளது மனதையும் மாற்றி இருந்தார்.

அத்தோடு நிறுத்தாமல் கயல்விழியும் கவியரசனும் இரண்டு குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கும் துணையாக நின்றார்.

முதலில் ஒரு ஐந்து மாதப் பெண் குழந்தையைத் தத்தெடுத்து அவளுக்கு மதிவாணி என்று பெயர் வைத்தார்கள். பின்னர் ஏழு மாத ஆண் குழந்தையைத் தத்தெடுத்து அவனுக்குப் புவியரசன் என்றும் பெயர் வைத்தார்கள்.


பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் சேர்த்து வைத்து இப்போது கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பண்டிகை விஷேசம் என்றால் அன்பரசியின் வீடு திருவிழா போலக் களை கட்டி விடும்.

தேன்மொழி, அவளது கணவன், மகன் என்று மூவரும் முருகேசன், எழில், கணேசன், பாட்டி என நால்வரும்...

ஆனந்தன், அவன் மனைவி சுவேதா, அவர்களது மகள், கபிலன், அவனது மனைவி மீனு, அவர்களது மகன் என ஆறு பேரும்

கவி, கயல், வாணி, புவி, என நால்வரும் ரூபன், கவிதா, நித்தியா, கிருஷ்ணன் என நால்வரும் அன்பரசி, கலையரசன் என இருவரும் என்று மொத்தமாக இருபத்து மூன்று பேரும் சேர்ந்தால் பிறகென்ன பேசுவது.
ஒரே கொண்டாட்டம் தான்...

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு”
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


……………………….................................................

மெத்தையில் கயல் அமர்ந்திருக்க அவளது மடியில் தலை வைத்துப் படுத்திருந்தான் கவியரசன்.

அவனது முடியை வழமை போலக் கோதிக் கொண்டிருந்தாள் கயல்.

‘விழிம்மா… எனக்கு ஒரு சந்தேகம்டி'

'என்னது… இது நிஜமா இல்லையா? என்ற சந்தேகமா?'

'ஏன் என்னை நறுக்கென்று கிள்ளி வைப்பதற்காகவா?'

'அப்படியென்றால் என்ன சந்தேகம் அது'

‘நீ நிஜமாகவே என்னை விரும்புகிறாயா?'

'இதென்ன லூசுத் தனமான கேள்வி'

'சொல்லு'

'என்ன நீங்கள்'

'என்னிடம் எப்போதாவது நீ என்னை விரும்புகிறேன் என்று சொல்லி இருப்பாயா? ராட்சசி'

‘நான் சொன்னால் தானா உங்களுக்குத் தெரியும்?'

'அப்படியில்லை…'

‘எப்படியில்லை…'

'அம்மா தாயே ஆளை விடு தெரியாமல் கேட்டு விட்டேன்'
என்று எழுந்தவனைத் தன் பக்கமாகத் திருப்பியவள்.
அவனது நெற்றியில் முத்தமிட்டு
'நான் தேடாமலேயே எனக்குக் கிடைத்த பொக்கிஷம் நீங்கள்… உங்களோடு வாழும் இந்த ஒவ்வொரு நொடியையும் நான் காதல் சந்தோசம் என்ற இரண்டாலும் தான் வாழ்கிறேன்.'
என்றாள்.

அவளது பதிலில் ஒரு கணவனாகப் பெருமிதம் அடைந்தவன் அவளை மார்போடு அணைத்துக் கொண்டான்.
'உன்னோடு வாழும் ஒவ்வொரு நொடியும் நான் இரசித்து வாழுகிறேன் விழிம்மா… நான் தேடிய பொக்கிஷம் நீ'
என்றான் காதலுடன்.

இந்த இரண்டு அன்பான உள்ளங்களும் பல தடைகளைத் தாண்டி இணைந்து ஒரு கூட்டுக் குடும்பத்துக்குள் வாழ்வதைப் பார்த்த நாமும் சந்தோஷமாக விடை பெறுவோம்.

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“கொஞ்சிக் கொஞ்சிப் பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசி வரும் அலை போல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்... பூத்தூவுகிறோம்...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


சுபம்[/ISPOILER]
 

Attachments

  • adbcc7537d9fc7c617df38bafd267829.jpg
    adbcc7537d9fc7c617df38bafd267829.jpg
    56.7 KB · Views: 27
  • FB_IMG_1624531675778.jpg
    FB_IMG_1624531675778.jpg
    21.1 KB · Views: 29
Top