• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
கவியரசன் கூறியதைக் கேட்டதும் “தெரிந்திருந்தால் மட்டும் ஐயா என்ன செய்திருப்பீர்கள்… பட்டென்று அப்போதே காலில் விழுந்திருப்பாய் என்று நினைக்கிறேன்…” என்று சிறு நகைப்புடன் கூறினான் விமலரூபன்.

அத்தானைப் பார்த்து “கவிதாவைப் பார்த்தவுடன் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்பது இப்போது புரிகிறது அத்தான்” என்றான் சிரித்தபடியே…

“அதற்குப் பிறகு சில தினங்களில் அப்படி ஒருத்தியைப் பார்த்தேன் என்பதே எனக்கு மறந்து போய் விட்டது…"

இந்த நேரத்தில் தான் ‘எங்களுடைய பாரம்பரியமான கோவிலுக்குப் பொங்கல் போடவேண்டும் ஒரு ஐந்து நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு வா கவி…’ என்று அப்பா சொன்னார்…

நானும் என் நண்பர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டேன்…

சாதாரணமாக விடுமுறை எல்லாம் எடுக்க முடியாது…

நல்லவேளையாக நடுவில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வந்ததால் எனக்கு அது வசதியாகப் போய் விட்டது…

எங்களுக்கு முன்பாகவே அப்பா, அம்மா, தாத்தாவுடன் கவிதா போய் விட்டிருந்தாள்…

அந்தக் கோவிலுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறைதான் பொங்கல், படையல் என்று சொல்லிக் கூட்டிப் போவார்கள்…

அது ஒரு மிகவும் பழமை வாய்ந்த இராமர் கோவில், காட்டுப்புறமாக ஒதுங்கியிருந்தது, பகலில் ஒரு அழகென்றால், இராத்திரியில் கொள்ளையழகு…

கோவிலின் படிகளில் அமர்ந்திருந்து இராத்திரியில் மலர்ந்த மலர்களின் சுகந்தத்தைச் சுவாசிப்பதென்றால் என் பொண்டாட்டிக்குக் கொள்ளைப் பிரியம்… “ என்று சொல்லிக் கொண்டே வந்தவன் தன் தலையில் லேசாகத் தட்டிக் கொண்டான்...

“மன்னித்துக் கொள்ளுங்கள் அத்தான் கதையைக் குழப்பியடிக்கிறேன் போல… அந்த நேரத்தில் தான் அவளை எனக்கு யாரென்றே தெரியாதே…
விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன் சரியா…

இராத்திரி நேரத்திலே தான் பொங்கல் படையல் எல்லாமே நடக்கும்…

இராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல உடையணிந்து விடிய விடிய நாடகம் நடித்துக் கொண்டேயிருப்பார்கள்…

அத்தனை சுவாரஷ்யமாக மெய்மறந்து இரசிக்கத் தூண்டும்…

கோவிலுக்குள்ளே போவதற்குப் படிக்கட்டுக்களால் செய்த இரு பாதைகள் உண்டு…

ஒரு படிக்கட்டு காட்டுப்புறமாகக் கோவிலுக்குப் பின்புறமாக அமைந்திருக்கிறது, மற்றைய பாதை கோவிலுக்கு முன்புறமாக அமைந்திருக்கிறது…

கோவிலை நடு நாயகமாகக் கொண்டு பின்புறம் காடென்றால், முன்புறமாகச் சற்றுத் தள்ளி கடல் அமைந்திருந்தது…

தொலைவில் வரும் போதே பழைய கருங்கல்லால் அமைந்த கோவில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்….

கோவிலுக்குக் கிழக்குத் திசையில் பாறைகளுக்கு நடுவில் நடராஜர் சிலை ஒன்றும் இருக்கிறது…
அதற்கும் விளக்குப் பூஜை நடத்துவார்கள்…

அங்கேயே தங்கி இருப்பதற்காகப் பனையோலையால் செய்த சின்னக் குடிசைகள் வரிசையாக நிறைய இருக்கிறது பொதுக் கழிப்பறைகளும் தாராளமாகவே உண்டு…

குளிப்பதற்குக் கடலோரமாக ஒரு படித்துறையும் அமைத்து இருக்கிறார்கள்…”

“அடுத்தநாள் காலை நண்பர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு கோவிலைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தேன்…

அப்பொழுது எங்களுக்குச் சற்றுத் தள்ளி நான்கு பெண்பிள்ளைகள் சீதாராமர் சிலைக்கருகில் நின்று ஏதோ இரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள்…

அவர்கள் பேசியது ஆனந்துக்கு மட்டும் எப்படியோ கேட்டு விட்டது போல, உடனேயே 'மச்சி மச்சி நாமும் ஒரு தடவை எட்டிப் பார்ப்போமா' என்றபடி என்னைப் பிடித்து உலுக்கினான்…

கபிலனுக்கு அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை…

'என்னத்தையடா எட்டிப் பார்ப்பது' என்று என்னைப் பார்த்துத் தலையைச் சொறிந்தான்…

நான் தான் பின்னர் விளக்கம் கொடுத்தேன்…

'இதோ இருக்கிறதே இந்தச் சீதாராமர் சிலை, இதில் சீதை இராமரின் இடது கையைப் பற்றிக் கொண்டு இருப்பதைப் பார்…

அதில் ஒரு சிறிய இடைவெளி தெரிகிறது அல்லவா…

சீதாராமரை மனதில் வேண்டிக் கொண்டு அதன் வழியாக எட்டிப் பார்த்தால் அவரவருடைய வருங்காலத் துணைவர்களைப் பார்க்கலாம் என்பது இங்குள்ள ஐதீகம்' என்று சொன்னது தான் தாமதம் இருவருடைய முகத்தையும் பார்க்கவேண்டுமே…” என்று சொல்லிக் கொண்டே சிரித்தான் கவியரசன்…

தொடர்ந்து...
“அந்த நால்வரும் நகர்ந்ததும், நீ பார்த்தாயா என்று என்னைக் கேட்டார்கள்…

எனக்கு அதிலெல்லாம் அவ்வளவாக நம்பிக்கையில்லை… நான் பார்த்ததில்லை, இனிப் பார்க்கப் போவதுமில்லை என்று பதில் சொன்னேன்…

ஏன் நம்பிக்கையில்லை என்று துளைத்தெடுத்து விட்டார்கள் இருவரும்…

அதற்கு நான் கொடுத்த விளக்கம் 'ஆனந்துக்கு ஏற்கனவே சுவேதா மீது காதல் இருக்கிறது, இருவர் வீட்டிலும் பச்சைக்கொடி வேறு பறக்க விட்டாயிற்று, எப்படியும் படிப்பு முடிந்ததும் வேலை கிடைக்குமோ இல்லையோ, திருமணம் நிச்சயம் நடக்கும்…

இப்போது சுவேதா தன் வீட்டில் இருக்கும் போது, நீ அந்த இடைவெளியில் எட்டிப் பார்த்தால் வேறு யாரும் தானே தெரிவார்கள்' என்று விளக்கம் சொன்னேன்…

நான் அப்படிச் சொன்னதும் ஆனந்து 'சரி தான் எனக்கு ஏதும் விமோசனம் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்' என்றவாறே அந்த இடைவெளியில் எட்டிப் பார்க்கத் தொடங்கினான்…”

“பார்த்தவன் சிறிது நேரத்தில் 'மச்சீ… சுவேதா டா…’ என்று கத்தத் தொடங்கி விட்டான்…

நான் சிலைக்கு முன்பாக எட்டிப் பார்த்தேன், நிஜமாகவே சுவேதா தான்... எனக்கும் ஒரு நொடி மலைப்பாய்ப் போய் விட்டது…

அதன் பிறகு சுவேதாவிடம் நலம் விசாரித்து அனுப்பி விட்டு… என்னை எட்டிப் பார்க்குமாறு வற்புறுத்தினார்கள்…

நானும் வேண்டா வெறுப்பாக எட்டிப் பார்த்தேன்…
சத்தியமாகச் சொல்லுகிறேன் அத்தான் இப்போதைய கவியரசனாக இருந்தால் அப்படியே அதிர்ந்து போய்ப் பார்த்துக் கொண்டே இருந்திருப்பான்…

ஆனால் அப்போதிருந்தவனுக்கு வேடிக்கைக் குணம் மட்டும் தான்…

எட்டிப் பார்த்த எனக்கு மஞ்சள் நிறப் புடவையில், கை நிறையப் பூக்களுடன் நடந்து வந்த ஒரு பெண் தான் அப்போது கண்ணுக்குத் தெரிந்தாள்…

யாராவது தெரிகிறார்களா என்ற நண்பர்களுக்கு இல்லை என்று சொல்லி விட்டு நகர்ந்து கொண்டே யோசிக்கத் தொடங்கினேன்…

இந்த மூஞ்சியை எங்கோ பார்த்திருக்கிறேனே என்று… சுத்தமாக நினைவு வரவில்லை அப்போது…”

“கோவில் மண்டபத்தில் சமையல் நடந்து கொண்டிருந்தது…
எனக்குப் புகைப்படங்கள் எடுப்பதென்றால் அலாதிப்பிரியம், சுத்திச் சுத்திப் படம் எடுத்துக் கொண்டிருந்தேன்...

பின்னர் நானும் ஆனந்தனும் கபிலனும் சமைப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்…

பெரிய பெரிய கிடாரங்களில் வகை வகையான உணவுகள் வெந்து கொண்டு இருந்தன…

அப்போது சற்றுத் தள்ளி
'நீ… வெங்காயம் தக்காளி மட்டும் நறுக்கிக் கொடு, பச்சை மிளகாயில் கையை வைக்காதே கை எரியும்…’ என்று ஒரு அம்மா சொல்லிக் கொண்டிருந்தார்...

'அதெல்லாம் எனக்கு எரியாது அத்தை நீங்கள் கொடுங்கள்… நான் எப்படிச் சமத்தாக நறுக்குகிறேன் என்று மட்டும் பாருங்கள்' என்று சம்பாஷணை போய்க் கொண்டிருந்தது…

ஒரு அரைமணி நேரம் கூட ஆகவில்லை… 'அச்சோ… எரியுது அத்தைஐஐஐஐ…’ என்று யாரோ கூச்சல் போட நான் திடுக்குற்றுத் திரும்பிப் பார்த்தேன், நான் எட்டிப் பார்த்த மஞ்சள் புடவைக்காரி தான் கத்திக் கொண்டே இருந்தாள்…

அப்போது ஆனந்து தான் ‘பட பட பட்டாசு எப்படி வெடிக்குது பாரேன் மச்சி…

இவளுக்குத் தேவை தான்' என்று சொல்ல, நான் ஏன் மச்சான் அந்தப் பொண்ணு உனக்கு என்ன பாவம் செய்தது என்று கேட்டேன்…

'என்னது என்ன பாவம் செய்ததா ? அது சரி திட்டு வாங்கியது நான் தானே உனக்கு எப்படி நினைவு இருக்கும்…’ என்று அவன் புலம்பவும் தான் எனக்கு அவளை யாரென்றே நினைவு வந்தது…

அவளோ என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு, ஆனந்தைப் பார்வையிலேயே எரித்தபடி எழுந்து சென்று விட்டாள்…”

“அதன் பின்னர் நேரம் போனதே தெரியவில்லை…

இரவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது…

நிறையப் பெண்கள் சேர்ந்து தீபங்கள் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்…
என்னருகில் அப்போது யாருமேயில்லை…

மீண்டும் ஒரு முறை சிலையூடாக எட்டிப் பார்த்தால் தான் என்ன என்று எனக்குத் தோன்றத் தொடங்கியது…

சரி ஒரு முறை எட்டித் தான் பார்ப்போமே என்று எட்டிப் பார்த்தேன்…

பார்த்த அந்த நொடியில் எனக்கு ஏற்பட்ட உணர்வை என்னால் கணிக்க முடியவில்லை அப்போது…

அதிர்ச்சி என்று கூடச் சொல்லலாம்…

நடராஜர் வைத்திருந்த பாறைகளுக்கு நடுவில் நிறையப் பெண்கள் தீபம் ஏற்றிக் கொண்டிருக்க, சிவப்பு நிறப் புடவையில் கையில் ஒரு தீபத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு என் பார்வைக்குத் தெரிந்தது காலையில் பார்த்த மஞ்சள் புடவைக்காரி…

அவள் வேறு யாரும் இல்லை நான் முதலில் பல்கலைக்கழகத்தில் பார்த்த போது ஆனந்துக்கே மண்டகப்படி கொடுத்தவளே தான்...
அதாவது என்னுடைய கயல்முழீ...

என்னருகில் யாருமே இல்லை கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது அப்போது…

அந்த இராத்திரி நேரத்தில் சிவப்புப் புடவையில் தீபங்களுக்கு நடுவே, அவளைப் பார்த்ததும் நான்
அசைவற்று நின்றிருந்தேன் நெடு நேரமாக…💖💖💖💖💖

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“ சித்தாடை போட்ட
சின்ன மணித்தேரு
சில்லென்று பூத்த
செவ்வலரிப் பூவு
செப்பால் செய்து வைத்த
அம்மன் சிலை தான்…”
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


கன்னத்தின் மீது கைவைத்து “அடப்பாவி இரண்டாவது சந்திப்பிலேயே நீ காதல் கடலில் தொபுக்கடீர் என்று குதித்து விட்டாய் போலவே…

இதற்கு நடுவில் ஐயாவுக்குக் காதலில் எல்லாம் அவ்வளவாக ஆர்வம் இல்லையென்று கதை வேறு… “ என்ற விமலரூபனைத் தலை சாய்த்துப் பார்த்துக் கொண்டவன்.

“அவ்வளவு தானா அத்தான் நீங்கள் என்னைப் புரிந்து கொண்டது…

எனக்குத் தான் அப்போது நீச்சலே தெரியாதே அப்புறம் எங்கே இருந்து குதிபங…
என்று குறும்பாகக் கேட்டவன்...

உடனேயே
"ஓ நான் ரொம்ப நேரமாக அசைவற்று நின்று விட்டேன் என்று சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன் அத்தான்…

நான் ஒன்றும் அவளின் மீது நேசம் பொங்கி அவளைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை மக்கு அத்தான்…

பீதி பொங்கிப் போய்த்தான் அசைவற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்…” என்று பதில் கொடுத்தவனைப் புரியாமல் பார்த்தான் விமலரூபன்.

அவனுக்கு அசட்டுச் சிரிப்பொன்றைப் பரிசாகக் கொடுத்து விட்டு
“நான் சொல்லுவதை அப்படியே கற்பனை மட்டும் செய்து பாருங்கள் அத்தான்…

நான்கு பக்கமும் கும்மிருட்டு சூழ்ந்திருக்க, ஒரு திசைப் பக்கம் மட்டும் சின்னச் சின்னத் தீப விளக்குகள், அந்த வெளிச்சத்தில் செக்கச்செவேலென இரத்த நிறத்தில் புடவை கட்டி, கையில் ஏதோ சூலாயுதத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதைப் போல தூக்குத்தீபத்தைத் தூக்கியபடி சப்பணமிட்டுக் கொண்டு, பாறைகளுக்கு நடுவில் ஒரு பெண்...

அவளுக்குப் பின்னணியில் இராட்சத உருவம் போலப் பெரிய காடு, போதாக்குறைக்குப் பாறைகள் ஒவ்வொன்றும் குள்ள அரக்கர்கள் போலத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டு இருக்கின்றது…

இந்த இடத்தில் என்னைப் போலச் சின்னப்பிள்ளைக்குப் பீதி வருமா வராதா சொல்லுங்கள் அத்தான்…

நான் திரும்பியும் பார்க்காமல் ஒரே ஓட்டமாக ஓடி விட்டேன்… “ என்று சொல்லி நிறுத்திய மனைவியின் சகோதரனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான் விமலரூபன்…

ஒருவாறு சிரித்து முடித்தவன்
“உனக்குப் பீதி மட்டுமில்லை மச்சான்…
இன்னமும் கொஞ்ச நேரம் நின்று இருந்திருந்தாய் என்றால் பேதியே கண்டிருக்கும்…

அது சரி பேசிக் கொண்டு இருக்கும் போதே சந்தடியில் அத்தானை மக்கு என்று சொன்னாயா?” என்றான் சற்றே சந்தேகமாக…

அத்தானின் தோளில் தட்டிக் கொண்டே “என்ன அத்தான் நீங்கள்… கவிதா மட்டும் உங்களை விதம் விதமான பெயர்களில் அழைக்கலாம்… நான் மட்டும் அழைக்கக் கூடாதா? எனக்கு அந்த உரிமையில்லையா அத்தான்…” என்றான் நமட்டுச் சிரிப்புடன்

“அது சரி ஏன் கேட்க மாட்டாய், அக்காவுக்கும் தம்பிக்கும் நடுவில் சிக்கிய ஆடு ஆயிற்றே நான்… உரித்து உப்புக் கண்டம் போடாமல் விடவா போகிறீர்கள்…” என்று புலம்பிய விமலரூபன்… “சரி சரி பேச்சை மாற்றாமல் விடயத்திற்கு வா மச்சான்” என்று சொல்லிச் சிரித்தான்…

கவியரசனும் சிரித்துக் கொண்டே சொல்லத் தொடங்கினான்…

“பகல் பொழுது சரியான வெப்பமாக இருந்தது, அதே இராத்திரி நேரத்தில் கோவில் பிரதேசம் முழுவதும் குளிர் பிரதேசம் போலவே காட்சியளித்தது…

பனிமூட்டமும்,குளிர்ந்த தென்றலும், கடல் அலைகளின் இரைச்சலும், வனப் பகுதியின் கும்மிருட்டும், காட்டு மலர்களின் வாசனையும், வானத்து நட்சத்திரங்களின் மினுமினுப்பும் இணைந்து மனதில் ஒருவித வித்தியாசமான உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது…

கடலோரம் இருந்த கலங்கரை விளக்கின் ஒளியில், கடற்கரை மணலில் இராமாயணத்தில் வரும் நிகழ்வுகளைப் பாத்திரமேற்று நடித்துக் கொண்டிருந்தார்கள்…

நாங்கள் மூவரும் கூட அமர்ந்திருந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கிய நேரத்தில், சுயம்வரத்தில் மாலையிட்டுக் கொள்ளும் காட்சி போய்க் கொண்டிருந்தது…

சீதை வேடத்தில் ஒரு பெண்ணும், இராமர் வேடத்தில் ஒரு பெண்ணும் நடித்துக் கொண்டிருந்தார்கள்…

அந்தக் காட்சியில் எல்லோரும் மூழ்கிப் போயிருந்த வேளையில் கீழே ஒரு பெண் தன் குரலில் காட்சிகளை வர்ணித்துக் கொண்டிருந்தாள்…

அது கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது…

அதே நேரத்தில் ஒரு பெண்ணின் மடியில் இருந்த சின்னக் குழந்தையொன்று எழுந்து ஓடி வந்து சீதை வேடத்திலிருந்த பெண்ணின் சேலையைப் பிடித்து இழுத்துக் கொண்டே 'அம்மா… அம்மா… தேன் மிட்டாய்…’ என்று சொல்லி விம்மத் தொடங்கியது…”

“அதைப் பார்த்ததும் கூட்டத்தில் இருந்த மற்றவர்கள் சிரிக்கத் தொடங்கி விட்டார்கள்…

சீதைக்குத் தான் திருமணம் ஆகவில்லையே இந்தக் குழந்தை எங்கிருந்து வந்தது, ஜனகமகாராஜா ஏற்கனவே குழந்தையொன்றின் தாயான சீதைக்குப் பொய் சொல்லித் திருமணம் நிச்சயித்து விட்டாரோ…

என்றவாறெல்லாம் கிண்டல் செய்து கொண்டிருக்க, கூட்டத்தில் சலசலப்பு ஏற்படத் தொடங்கியது…

காட்சிகளை வர்ணனை செய்து கொண்டிருந்த பெண் திடீரென எழுந்து நடுவில் வந்து 'சுயம்வரத்தில் தன் மனதால் வரித்துக் கொண்ட மணாளன் இராமருக்கு மாலையிட, அன்னமென வந்து நின்ற சீதையைப் பார்த்ததும் சபையில் இருந்த சிறு குழந்தைகளுக்கெல்லாம் அவளின் அழகிய தோற்றம் தங்களது அன்னையைப் போலத் தோன்ற வைத்தது…’ என்று சொல்லிக் கொண்டே அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்…

சிறிது நேரத்தில் பழையவாறே நிகழ்வுகள் போகத் தொடங்கியது…

குழந்தையைத் தன் சாமர்த்தியத்தால் தூக்கிக் கொண்டு வந்தது, காட்சிகளை வர்ணனை செய்தது யாரென்று உங்களுக்குப் புரிந்திருக்குமே அத்தான்…”
என்று கூறிக்கொண்டே அத்தானின் கன்னங்களை மெதுவாக வருடிக் கொடுத்தான்...

“என்ன அத்தான் யாரோ வெட்கப்படுகிறார்கள் போல இருக்கிறதே…

கன்னமெல்லாம் அப்படிச் சிவசிவனு சிவந்து இருக்கிறது… “ என்று சொன்னவனின் கைகளைத் தட்டி விட்டான் விமலரூபன்...

“மச்சான் நாம் இப்போது கவியரசனின் காதல் காவியத்தைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்… மற்ற விடயங்கள் எதுவும் வேண்டாம்… “ என்று சொன்னான் சிறு முறைப்புடன்…

அவனது முறைப்பைத் தூக்கிக் குப்பையில் போட்டவன் “அத்தான்… என்னுடைய காதல் காவியத்துக்கு நடுவே இன்னுமொரு காதல் ஓவியம் வரையப் பட்டதை நான் அப்போது அறியவில்லையே என்று எந்தளவிற்குக் கவலைப் பட்டேன் தெரியுமா ?

அத்தான் மரியாதையாகச் சொல்கிறேன் என் கதையைத் தொடர்ந்து சொல்ல வேண்டும் என்றால்… அந்த ஒரு கட்டத்தில் நடந்தது என்னவென்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்…” என்று கட்டாயமாகச் சொல்லிய கவியரசனுக்கு மறுபடியும் ஒரு முறைப்பைப் பரிசாகக் கொடுத்தான் விமலரூபன்.

'சொல்லமாட்டேன் என்றால் மட்டும் விட்டு வைக்கவா போகின்றாய்…

என்னுடைய சின்ன வயதுத் தோழி உன்னுடைய அக்கா…

அடிக்கடி வீட்டுக்கு வா ரூபன் என்று அழைத்துக் கொண்டே இருப்பாள்…

இடையில் ஒரு ஆறு ஆண்டுகள் தொடர்பேயில்லை அதற்கு நடுவே என்னவெல்லாமோ நடந்து நான் தனி மரமாகி விட்டேன்…

கவியை எனக்கு எப்போதும் மற்றவர்களை விட ஒரு படி அதிகமாவே பிடிக்கும்…

அது ஏனென்று எனக்கு யோசிக்கத் தோன்றவில்லை… அவள் வேறு ஊருக்குப் போய் விட்டாள் என்பதைத் தவிர அப்போது எனக்கும் ஒன்றும் தெரியவில்லை…

இந்த நேரத்தில் தான் இராமர் கோவில் பொங்கல் வந்தது… அம்மாவுக்கு முன்பே வாக்குக் கொடுத்ததால் அதற்காக வர வேண்டி இருந்தது…

அம்மாவே இல்லை எனும் போது வேண்டா வெறுப்பாகத் தான் வந்தேன்...

நான் வந்து சேரவே இரவாகி விட்டது… தூரத்தில் நாடகம் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு நானும் வந்து அமர்ந்து கொண்டேன்…

அந்த நேரத்தில் காட்சிகளை வர்ணனை செய்து கொண்டிருந்த பெண் குரல் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது…

உங்கள் குரல் அருமையாக இருக்கிறது என்று ஒருவார்த்தை பாராட்டிச் சொல்லலாம் என்று நான் நினைத்துக் கொண்டு இருந்த வேளையில் தான்…
கூட்டத்தில் சலசலப்பு ஏற்படத் தொடங்கியது…

அவள் எழுந்து சென்று பேசி, குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து இருந்த பின்னரும் கூட நான் யோசித்துக் கொண்டே தான் இருந்தேன்…

ஆறு ஆண்டுகள் இடைவெளியில் அவளை என்னால் உடனே அடையாளம் காண முடியவில்லை…

நிகழ்வுகள் எல்லாம் முடிந்ததும் தான் ஒரு வழியாக யாரென்று புரிந்து கொண்டு 'கவிதாஆஆஆ…’ என்று கத்தி விட்டேன்…

நல்ல வேளை அவள் அருகில் நின்றதால் எந்தப் பிரச்சினையும் வரவில்லை…

திரும்பிப் பார்த்தவள் என்னைப் போல யோசித்துக் கொண்டு நிற்கவில்லை… உடனேயே 'ஏய் ஓமைக்குச்சீஈஈஈஈ…' என்று அருகில் ஓடி வந்தவள்…

பரவாயில்லையே ஓமைக்குச்சி இப்போது குத்துச்சண்டை வீரர் போல பார்வைக்குத் தெரிகின்றாரே… ' என்று சொல்லிக் கொண்டே என் தோள்களில் தன் கைமுஷ்டியால் குத்திப் பார்த்துவிட்டு அம்மாவென்று அலறி விட்டாள்…

அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே 'போல எல்லாம் இல்லைமா வீரரே தான் ' என்று நான் சொன்னதும் அவள் அதிர்ச்சியில் கண்களை விரித்து என்னைப் பார்த்ததும் அந்த நொடியிலேயே நான் அந்தக் கண்களுக்குள் கைதியாகி விட்டேன்…

நீ இந்த இடத்தில் கேட்கலாம்… அத்தான் நீங்கள் கூட அழகைப் பார்த்துத் தானே காதலில் விழுந்தீர்களென்று…

சத்தியமாக இல்லை மச்சான் நான் தேடிக் கொண்டிருந்த பொக்கிஷம் பல காலங்களின் பின்னர் என் கண்களுக்கு அப்போது தான் தெரிந்தது…

இதன் அர்த்தம் பலர் பொக்கிஷம் எது என்றே தெரியாமல் ஒரு பொக்கிஷத்தைத் தேடிக் கொண்டு இருப்பார்கள்…

எனக்கு இது தான் என் பொக்கிஷம் என்று தெரிந்த பிறகு அதை எங்கேயென்று தேடிக் கொண்டு இருந்தேன்…

அதைப் பார்த்ததும் தான் அதுவரை எனக்கே தெரியாமல் என்னுள் இருந்த காதல் பிரகாசிக்கத் தொடங்கியது…”

“கவி… ரொம்பக் கோபக்காரி, அதேயளவு பிடிவாதக்காரியும் கூட… அவள் திட்டும் போது எதிர்ப் பேச்சுப் பேசாமல் வாங்கிக் கொண்டிருக்க வேண்டும்…

நான் பொறுமையாக இருந்து அவளின் பாசத்தைக் சம்பாதித்துக் கொள்ள மற்றவர்கள் எதிர்த்துப் பகையைச் சம்பாதித்துக் கொள்வார்கள்…

அப்போதே அவளை ஒரு நாள் பார்த்து அவள் போடும் சண்டையை ரசிக்காமல் எனக்குத் தூக்கமே வராது…”

“என்னைப் பார்த்ததும் நான் குத்துச்சண்டை வீரன் என்றதும் அதிர்ந்து போய் நின்றவள் உடனேயே 'அது சரி இனிமேல் உன்னை ஓமைக்குச்சி என்றும் அழைக்க முடியாதே… வேறு எப்படி அழைப்பது' என்று யோசிக்கத் தொடங்கினாள்…

நான் இடையில் புகுந்து, தேவையில்லாமல் மாட்டிக் கொண்டேன்…

அதை நீ பிறகு முடிவு செய்து கொள்… இப்போது நீ எங்கே இருக்கிறாய்…
என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் தலைமறைவாக ஓடி விட்டாயே…
என்றதும் தான் தாமதம்
'ஐயாவுக்கு என் மீது அக்கறை இருந்திருந்தால் தேடி வந்து இருக்க வேண்டியது தானே…

இப்போது கூடக் கோவிலுக்குத் தான் வந்திருந்தாயே தவிர என்னைப் பார்க்கவா வந்தாய்…
என் கூடப் பேசாதே என்று கோபமாக முறைத்து விட்டுப் போய் விட்டாள்…

சரி இனிமேல் அவளைச் சாதாரணமாக ஆக்குவதற்கு நான் தலை கீழாக நின்றாலும் ரொம்பக் கஷ்டம் என்று எனக்கு புரிந்தது…

அவள் போகும் திசையையே பார்த்துக் கொண்டே நின்றேன்… அவளை எப்படி சமாதானம் செய்வதென்று யோசித்தவாறே… 💗💗💗

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா?
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா?
உள்ளுயிரே உருகுதம்மா….
கோபமா என் மேல் கோபமா..."
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Attachments

  • d39175ad2dd88f0980837e28e821ff6d.jpg
    d39175ad2dd88f0980837e28e821ff6d.jpg
    70.1 KB · Views: 22
  • FB_IMG_1624532389548.jpg
    FB_IMG_1624532389548.jpg
    28.5 KB · Views: 21
Top