• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
விமலரூபனையே பார்த்துக் கொண்டிருந்த கவியரசன்
“அத்தான் அதன் பிறகு எப்படி சமாதானம் செய்தீர்கள்…

ஏனென்றால் கவிதா வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் வரையில் கூட முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு எல்லோரிடமும் எரிந்து விழுந்து கொண்டேதான் இருந்தாள்…

அவளுக்குக் கோபம் வந்தால் எங்கள் எல்லோர் பாடும் கோவிந்தா…கோவிந்தா…”
என்று சொல்லிச் சிரித்தான்…

“அவளைச் சமாதானம் செய்வதும், நான் சமாதியாவதும் ஒன்றுதானடா மச்சான்…

அன்று கோபித்துக் கொண்டு போனவள் தான்… அடுத்து வந்த தினங்களில் என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை…

அவள் திரும்பிப் பார்க்கவில்லை என்றதும் நான் விட்டு விடுவேனா…

அவள் முன் போய் நின்று கொண்டேன்… அப்போது தான் அவள் திரும்பிப் பார்க்காமலேயே என்னைப் பார்க்க முடியும்… “ என்று சொல்லிக் கண்ணடித்த அத்தானைக் குனியவைத்துக் குத்தலாமா? வேண்டாமா? என்பது போல் பார்த்து வைத்தான் கவியரசன்...

“அப்படி முறைத்துப் பார்க்காதே மச்சான்… சும்மா ஒரு நகைச்சுவையாகப் பேசலாமே என்று தான்…”
என இழுத்த விமலரூபனைப் பார்த்து, தன் கையால் வாயை மூடிக் காட்டி “நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை போடாதீர்கள் அத்தான்… சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை…” என்றான் கவியரசன் பாவமாக…

அவனது தோள்களைத் தட்டியபடி
“அது தான் கோவிலில் இருந்த ஐந்து தினங்களும் உன் அக்கா என்னைப் பார்த்ததுமே முகத்தைத் திருப்பிக் கொண்டாளே…

இனிமேல் உன்னுடைய கதைக்கு வருவோம்… என் கதையின் மீதியைப் பிறகு சொல்கிறேன் மச்சான்…” என்று எடுத்துக் கொடுத்தான் விமலரூபன்...

சிறு சிரிப்புடன் தன் கதையைத் தொடர்ந்தான் கவியரசன்…

“அன்றைய பொழுதின், காலை நேரத்திற்கு எல்லோருக்கும் சாமையரிசிப் பொங்கலும், மதிய நேரத்திற்குப் பச்சரிசிச்சோறும் மரக்கறிக்கூட்டும் என்று மடைப்பள்ளி களைகட்டிக் கொண்டிருந்தது…

உணவு போட்டுக் கொடுப்பதற்கெனக் காட்டுப் பூவரசு இலைகளையே பயன் படுத்துவதால் நானும் நண்பர்களும் இலைகள் பறிக்கக் காட்டின் எல்லைப் பகுதிக்குச் சென்றிருந்தோம்…

விடிவதற்கு இன்னமும் நேரம் இருந்தது…

ஓரளவு இலைகளைப் பறித்து விட்டு, இன்னமும் கொஞ்சம் தூரமாகப் போய்ப் பறிக்கலாமே என்று கபிலன் சொன்னான்…

சரி இன்னமும் நேரம் நிறையவே இருக்கிறது, அதனால் பரவாயில்லை, என்று நானும் அதற்கு உடன்பட்டுக் கொஞ்சம் தொலைவாகச் சென்று காட்டுப் பூவரசு இலைகள் பறிக்கக் தொடங்கினோம்…

அந்த நேரத்தில் திடீரென எங்கிருந்தோ கொலுசுச் சத்தமும், வளையல் ஓசையும் கேட்கத் தொடங்கியது…

நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை…

உடனே ஆனந்து 'டேய் மச்சி… நேற்று என்னருகில் இருந்த பாட்டி சொன்னது அநியாயத்துக்கு இப்போது நினைவு வந்து தொலையுதேடா…

இந்தக் காட்டுப் பக்கமாக மோகினிப் பிசாசு உலாவுமாம்டா…’ என்று புலம்பத் தொடங்கினான்…

அவனைச் சமாதானம் செய்து ஒரு வழியாக அடுத்த பக்கம் அழைத்துச் சென்று கொஞ்ச நேரம் கூட ஆகவில்லை, அதற்குள் அந்தப் பக்கமும் கொலுசு, வளையல் சத்தம் கேட்கத் தொடங்கியது…

அவ்வளவு தான் பறித்த இலைகளையும் போட்டு விட்டுக் கபிலனும் ஆனந்தனும் தலைதெறிக்க ஒரே ஓட்டம் தான்…

நான் நில்லுங்கடா என்று கத்தியதைக் கூட அவர்கள் கேட்கவேயில்லை…

அவர்கள் ஓடிய திசையையே, கைகளில் இலைகளை ஏந்தியபடி பார்த்துக் கொண்டிருந்தேன், அடுத்து என்ன செய்வது, இலைகளை எப்படிக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்றபடி நான் யோசித்துக் கொண்டிருந்தேன்...

எனக்குப் பின்னால் மிக அருகில் 'தைரியமெல்லாம் அவ்வளவு தானா… ஆகப் படிக்கும் இடத்தில் மட்டும் தான் கெத்துக் காட்டுவதெல்லாமா? ' என்று சொல்லிச் சிரித்தவாறு மோகினிப் பிசாசு நின்று கொண்டிருந்தது அத்தான்…”என்று சொல்லிக் கொண்டே வந்த கவியரசன்...

விமலரூபனின் அகன்ற விழிகளைத் கண்டதும் “கயல்முழீஈஈஈ தான் அந்தப் பிசாசு” என்றான் சிரித்தபடியே தானும் முழிகளை உருட்டியவாறு …

“நான் அவள் சொல்லியதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே சிதறிக் கிடந்த இலைகளைச் சேகரிக்கத் தொடங்கினேன்…

எனது அமைதியில் பேசாமல் நின்றவள் ஏதோ கேட்க வருவதும், பின்னர் வேண்டாம் என்று தலையை ஆட்டுவதுமாக இருந்தது, என் விழிகளுக்குத் தப்பவில்லை…

’யாருக்குத் தைரியம் என்பதைப் பற்றிய பட்டிமன்றத்தைப் பிறகு வைத்துக் கொள்ளலாம்…

முதலில் என்னிடம் கேட்க வந்ததைத் தைரியமாகக் கேட்க வேண்டும்…’ என்று சிறிது ஏளனமாகவே அவளைப் பார்த்துக் கேட்டு வைத்தேன்…”

“அதற்குப் பிறகும் சிறிது யோசித்தவள் என்னைப் பார்த்து 'அதில்லை… காட்டுப் பூவரசு இலைகள் பறிக்க வந்தோம்… வந்த இடத்தில் நான் திசை மாறி வந்திட்டேன் போல… அது தான்…’ என்று இழுத்து இழுத்துப் பேசவும் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது…

“என்னது திசை மாறி வந்துவிட்டேன் போலவா? அப்படி என்றால் இன்னமும் சரியாகத் தெரியவில்லையா? என்று கேட்டு விட்டு நான் சிரிக்கத் தொடங்கி விட்டேன்…

என்னைப் பார்த்ததும் அம்மணிக்குக் கோபம் வந்து விட்டது போல 'இப்படித் தான் யாரும் ஏதாவதும் சொன்னால் கிண்டலாகச் சிரிப்பதா' என்று என்னை முறைக்கும் முன்னர் நான் முந்திக் கொண்டேன்...

'ஆகா! அப்படியா… அப்போது சற்று முன்னர் தைரியம் பற்றிச் சொல்லி யார் சிரித்தது…
இத்தனைக்கும் நான் இந்த இடத்தில் இருந்து எங்குமே ஓடவில்லையே' என்று சொன்னது தான் தாமதம்
'ஆமாம் என்ன… மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று உடனேயே மன்னிப்புக் கேட்டு விட்டாள்…”

“மன்னிக்க வேண்டும் என்றால் நான் பறித்துக் கொடுக்கும் இலைகளைச் சுமந்து வரவேண்டும் சரியா?
நீ மோகினிப் பிசாசு போலச் சத்தம் போட்டு இருக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் நான் இலைகளைக் கொண்டு கோவில் போய்ச் சேர்ந்திருப்பேன்…

அதனால் நீ தான் அதற்கு வழி செய்ய வேண்டும்… என்று நான் சொல்லி முடிக்கவும்… நான் ஒன்றும்… என்று ஏதோ கோபமாகச் சொல்லத் தொடங்கினாள்...

நான் பார்த்த பார்வையில் அடங்கி 'செய்கிறேன் செய்கிறேன் நீங்கள் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்கிறேன்…எல்லாம் என் விதி இந்தக் காட்டுக்குள் வந்து தனியாக மாட்டிக் கொண்டதற்கு வேறு என்ன செய்ய…’ என்று புலம்பிக் கொண்டே இலைகளைச் சேகரிக்கத் தொடங்கினாள்…”

“நான் மரங்களுக்கு மரம் தாவித் தாவி இலைகளைப் பறிக்கவும் என்னையே அண்ணாந்து பார்த்தவள் பட்டென்று தன் ஒரு கையால் வாயை மூடிக் கொண்டாள்…

அவள் சிரிப்பைக் கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டித் தான் அப்படிச் செய்தாள் என்பது எனக்குப் புரிந்து போயிற்று…

'என்ன அம்மணி தங்களுக்குத் தங்களின் மூதாதையரின் நினைவு வந்து விட்டது போல' என்று கேட்டு நானாகவே மாட்டிக் கொண்டேன்…

'நான் ஒன்றுமே நினைக்கவே இல்லையே… அதோடு என்னுடைய மூதாதையர் இல்லை…
நம்முடைய மூதாதையர் என்று சொல்ல வேண்டும்… நீங்களும் மனிதர் தானே இல்லை வேறு ஏதாவது… என்று இழுத்தாள்...

'அம்மா தெய்வமே தெரியாமல் வாயைக் கொடுத்து விட்டேன்… இனிக் கோவில் போய்ச் சேரும் வரை வாயே திறக்கவில்லை போதுமா' என்று சொல்லி விட்டு மரத்தில் இருந்து இறங்கி வந்து அவளுக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டுப் பாதி இலைகளை நானும் பாதி இலைகளை அவளும் என்றவாறு சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கினோம்…”

“சிறிது தூரம் வரையில் இருவருமே வாய் திறக்கவில்லை… அவளுக்கு எப்பொழுதும் லொட லொடவென பேசிக் கொண்டிருந்தால் மட்டும் தான் பொழுதே போகும்…
இது எனக்கு அப்போது தெரியாதே…

நானும் ஏதோ எனக்குப் பயந்து தான் பாவம் பொண்ணு பேசாமல் வருவதாக ஒரு தப்புக் கணக்கு போட்டு விட்டேன்…

அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தவள் 'உங்களுக்கு நிஜமாகவே பாதை தெரியுமா? இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? எங்களைத் தேடி யாருமே வர மாட்டார்களா? இது சரியான பாதை தானா?' என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்…

நான் மட்டும் குறுக்கே பாய்ந்து தடுத்து இருக்காமல் விட்டிருந்தால், இன்னமும் எத்தனை கேள்விக் கணைகளைத் தொடுத்திருப்பாளோ… அது அவளுக்கே தெரிந்திருக்காது என்று தான் நினைக்கிறேன்…

'எனக்குப் பாதை தெரியுமா இல்லையா என்று நீயே சரி பார்த்துக் கொள் சரியா…
சும்மா சும்மா கேள்வி கேட்டுக் கடுப்பேற்ற வேண்டாம் சரியா' என்று நான் சொன்னதும்

'எனக்குப் பாதை தெரிந்தால் தானே சரி பார்ப்பதற்கு…
கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது என்று ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டியது தானே, அதற்கு ஏன் நீங்கள் கடுப்பாகின்றீர்கள்…’ என்று மெல்லிய குரலில் அவள் முணுமுணுத்தது எனக்கு நன்றாகவே கேட்டது… “

“நான் ஏதும் வாய் திறந்து பேசாமல் நடந்து கொண்டிருந்தேன்…

'அதெல்லாம் இருக்கட்டும் உங்கள் பெயர் என்னவென்று நீங்கள் சொல்லவே இல்லையே…’ என்றாள்…

நான் அதற்கும் அமைதியாகவே வந்தேன்…
'ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள், பெயர் என்னவென்று தானே கேட்டேன், சொத்தை எழுதித் தரச் சொல்லியா கேட்டேன்…’ என்று படபடத்தவள்… ‘இனி ஒன்றுக்கும் வாயைத் திறக்க மாட்டேன் போதுமா?' என நடக்கத் தொடங்கினாள்…

சிறிது நேரத்தில் நான்
‘உனக்கு நான் கொடுக்கும் தண்டனை இது… என்னை அடுத்த முறை பல்கலைக்கழகத்தில் பார்க்கும் போது என் பெயர் என்னவென்று நீ சொல்ல வேண்டும் சரியா? இப்போது உன் திருவாயை மூடிக் கொண்டு நடையைக் கட்டு’… என்று சொல்லிக் கொண்டே நான் திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டேயிருந்தேன்…

திடீரென 'ஐயோ அம்மா' என்ற அலறல் சத்தம் ஒன்று, நான் பதறித் கொண்டு திரும்பிப் பார்த்தால், அம்மணி கீழே விழுந்து போய், எழ முடியாமல் எழுந்து கொண்டிருக்கிறார்கள்…

இலைகளெல்லாம் அவளை மூடியவாறு அங்கேயும் இங்கேயுமாகச் சிதறிக் கிடக்கிறது…

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவளைக் கை கொடுத்துத் தூக்கி விட்டு, இலைகளைச் சேகரிப்பது போலத் திரும்பிக் கொண்டு வாயை இறுக மூடிச் சிரிக்கத் தொடங்கினேன்…

என்னைச் சுற்றி வந்து சிரிக்க வேண்டாம் சிரிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டுத் தானும் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கத் தொடங்கினாள்…

சிறிது நேரத்திற்கு அந்தக் காடெங்கிலும் எங்களிருவரினதும் சிரிப்பொலி தான் எதிரொலித்துக் கொண்டிருந்தது…

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“நீ பார்க்கும் பார்வை போல பூவெல்லாம் பூக்கக் கேட்பேன்
நீ நடக்கும் நிலத்தினிலும் நிம்மதி வளர்த்திடுவேன்
நீ அருந்தும் நீரினிலும் தாய்மையைத் தந்திடுவேன்
உன் உலகத்தின் மீது நான் மழை ஆகுவேன்
உன் விருப்பங்கள் மீது நான் நதி ஆகுவேன்”
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


‘காட்டிலே அந்த நேரத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் பிசாசுக் கூட்டம்தான் சேர்ந்து இளிக்கிறதோ என்று பயந்து போய் இருப்பார்கள்’ என்றவாறு தானும் சிரித்தான் விமலரூபன்…

“நாங்கள் இருவரும் வந்து கொண்டிருந்த திசையில் ஒழுங்கான பாதையே கிடையாது…

அங்காங்கே மண்டிக் கிடந்த புதர்களைச் சிரமப் பட்டு விலக்கிக் கொண்டு தான் வந்தாக வேண்டும்…

முதலில் நாங்கள் மூவரும் வந்ததால் அப்படி வருவது சிரமமாக இருக்கவில்லை…

இப்போது இருவர் கைகளிலும் இலைகள் நிறையவே இருந்ததால் சில இடங்களில் புதரில் இருந்த முட்கள் வேறு குத்திக் கிழிக்கத் தொடங்கியிருந்தது…

நான் குத்திய முட்களைப் பொருட்படுத்தவில்லை, இரு பக்கமும் விதம் விதமான வண்ண மலர்கள் கண்ணைக் கவரும் வகையில் மலர்ந்து இருக்க, அவற்றிலிருந்து வந்த வாசனையோ ஆளை மயக்கி இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் அளவில் இருந்தது…

வேக நடையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த என்னை அம்மணி அடிக்கொரு தரம் இங்கே நில், அங்கே நில்லென்று நிற்க வைத்து ஒவ்வொரு வண்ணத்திலும் ஒவ்வொரு பூவாகக் கொய்து சேகரித்துக் கொண்டே வந்தார்கள்…

போதாக்குறைக்கு முட்கள் கீறும் போது ஒவ்வொரு தொனியிலும் கூப்பாடு வேறு, ஒருவாறு கொஞ்ச தூரத்தைக் கடந்து விட்டு அப்பாடாவென்று நிமிர்ந்து பார்த்தால், இதுவரை பார்த்ததெல்லாம் ஒரு முள்ளா? என்பது போலக் கூரிய முட்களைக் கொண்ட பெரிய புதரொன்று எங்களை நோக்கிக் கை விரித்தபடி நின்று கொண்டிருந்தது…

எனக்கு அந்தப் புதரைப் பார்த்தவுடனேயே தலைசுற்றல் வந்து விட்டது, நானும் ஆனந்தனும் கபிலனும் அதிகாலையில் இந்தப் பாதையில் வந்த போது, எவ்வளவு சிரமப் பட்டு விலக்கிக் கொண்டு வந்தோம் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்…

இப்போது இதன் வழியே இந்த மாரியாத்தாவை(கயல்விழி) எப்படி அழைத்துச் செல்வது, இது வேறு உடனுக்குடன் வேப்பிலை இல்லாமலேயே சாமியாடத் தொடங்கி விடுமே, அதை மலையேறச் செய்வதென்றால் நான் தலைகீழாக நின்றாலும் முடியாதே என்று எனக்குள் தான் புலம்பினேன்…
பின்னே அவள் காதுகளில் விழும் வகையில் புலம்ப எனக்கென்ன பைத்தியமா…”

“ஏதோ நினைவில் அவளைப் பார்த்து 'இந்தா மாரியாத்தா…’ என்று அழைத்து விட்டுப் பட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டு திரும்பி விட்டேன்...

ஏதோ பூவைக் கவனமாகப் பறித்துக் கொண்டிருந்தவள், பறிப்பதை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்து, 'அழைத்தீர்களா இப்போது' என்றாள் கேள்வியாக, எனக்குத் தான் உடனே என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் போயிற்று சமாளிக்கிறேன் பேர்வழியென்று 'நானொன்றும் உன்னை மாரியாத்தா என்று அழைக்கவில்லை சரியா' என்று கூறி மீண்டும் முட்டாள் தனமாக மாட்டிக் கொண்டேன்…”

“என்னருகில் வந்து சிறு சிரிப்புடன் 'எனக்கொன்றும் கேட்கவில்லை… அதிலும் மாரியாத்தா என்று அழைத்தது மட்டும் கேட்கவேயில்லை போதுமா… வாருங்கள் போவோம்' என்றபடி இலைகளையும் பூக்களையும் எடுத்துக் கொண்டு முன்னே சென்று விட்டாள்…

அப்படியே நின்று கொண்டிருந்த எனக்கு, அவள் அந்தப் புதருக்குள் நுழையவும் தான் சுரணையே வந்தது...

'ஏய் ஏய் நில்லு உள்ளே போகாதே' என்று கத்திக் கொண்டு ஓடிப் போய் அவளது வலது கையைப் பிடித்து இந்தப் பக்கம் இழுத்துவிட்டு

'அறிவில்லையா உனக்கு ஒவ்வொரு முள்ளும் எந்த அளவிற்கு இருக்கிறதென்று உன் முட்டைக் கண்ணைத் திறந்து பார், ஒரு முள் தைத்தாலும் என்னவாகும் என்று சொல்ல முடியாது…
நானொருவன் ஏன் அதில் அத்தனை நேரமாக நிற்கிறேன் என்று யோசிக்க வேண்டாமா…’ என்று படபடவென அவளைத் திட்டி முடிக்கவும்,

அவள் என் கைகளையே குனிந்து பார்த்துக் கொண்டிருந்தாள்…

அவள் கையை நான் பிடித்து இழுத்ததைத் தவறாக நினைக்கிறாளோ என்று அவளை நிமிர்ந்து பார்க்கவும் அவள் அப்படியே சரிந்து பொத்தென்று என் கால்களுக்கு மேலேயே விழுந்து விட்டாள்…

ஒரு கணம் பதறிப் போய் விட்டேன்…அவள் விழுந்த வேகத்தில் என் இடது கால் பெரும் வலி கண்டது, கொஞ்ச நேரத்திற்கு இடப் பக்கக் கீழ்ப் பாதத்தில் உணர்ச்சி எதுவுமே இல்லை, கால்களை உதறித் கொண்டு அவளைப் பார்த்தேன்…

நான் திட்டியது தாங்காமல் தான் விழுந்து விட்டாளோ என்று பார்த்தால், அம்மணி புதருக்குள் நுழைந்த போது, நான் அவளை ஓடி வந்து இழுத்த வேகத்தில் என் கைகளில் இரண்டு மூன்று முட்கள் தைத்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது, வீராங்கனை அதைப் பார்த்துத் தான் பொத்தென்று விழுந்து விட்டார்கள்...”

“எனக்குச் சிறிது நேரத்திற்கு ஒன்றுமே புரியவில்லை, அப்படியே தலையில் கைவைத்துக் கொண்டு கீழே அமர்ந்து விட்டேன்…

அப்போது தான் என் சட்டைப் பையில் வைத்திருந்த மடக்குக்கத்தி நினைவுக்கு வந்தது, உடனே அதை எடுத்து அந்தப் பக்கம் போவதற்காக மறைத்து நின்ற முட்களை மட்டும் வெட்டிப் பாதையைச் சீராக்கத் தொடங்கினேன்…

மனதிற்குள் கபிலனையும், ஆனந்தையும் அர்ச்சனை செய்யவும் தவறவில்லை 'பாவிப் பசங்கள் யாரையாவது அழைத்துக் கொண்டு திரும்பி வந்தான்களா அவன்களை விட்டு என்கையே எனக்குதவி என்று நானே ஏதாவது செய்தால் தான் உண்டு' என்று விட்டு ஒருவாறு பாதையைச் சரி செய்து விட்டுத் திரும்பிப் பார்த்தேன்…

'டேய் கவியரசா… நீ இதுவரை செய்ததெல்லாம் ஒரு வேலையே இல்லை… இனிமேல் தான் இருக்கிறது உனக்குச் சங்கு' என்று என் மனசாட்சி என்னைக் கேலியாகப் பார்த்து வைத்தது…

அருகில் எங்குமே தண்ணீர் இருப்பதற்கான அறிகுறியே இல்லை, இப்போது இந்தம்மாளை எப்படி எழுப்புவது என்பது தான் எனக்கு மலைப்பாக இருந்தது, அருகில் சென்று தட்டித் தட்டிப் பார்க்கிறேன் ஒரு அசைவும் இல்லை…

நேரம் ஆக ஆக எனக்குச் சற்றுக் கலக்கமாக இருந்தது, ஒரு வயதுப் பெண்ணுடன் இந்தக் காட்டுக்குள் தனியாக இருப்பதை யாரும் ஊர் வம்பிகள் பார்த்தால், தலை வால் எல்லாம் வைத்துக் கதை பரப்பத்தான் பார்ப்பார்கள்…

அவர்கள் பற்றி எனக்குக் கவலையில்லை அதைப் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம் என்றாலும் மயங்கிக் கிடக்கும் இந்தப் பெண்ணைத் தனியாக விட்டு விட்டு உதவிக்கும் ஆட்களை அழைக்கச் செல்ல முடியாது…

வேறு வழியேயில்லை நான் தான் காலும் கையும் வலிக்கச் சுமந்து செல்ல வேண்டும்…

எல்லாம் என் தலையெழுத்து… என்று புலம்பிக் கொண்டே அம்மணியைத் தூக்க முயன்றேன்… 'யப்பா என்ன கனமடா சாமி… பழு தூக்கும் போட்டியில் கூட நான் ஜெயித்து விடுவேன் போலவே' ஆனால் அவளைத் தூக்க முடியாமல் கொஞ்சம் மூச்சு வாங்கியது எனக்கு…”

“நான் முட்கள் வெட்டிய பாதை கொஞ்சம் அதிகமாகவே நீளமாக இருக்கும், அதைக் கடந்து சென்று வடக்குத் திசையில் திரும்பிக் கொஞ்சத் தூரம் சென்றால் வலது கைப்பக்கமாக ஒரு அருவி இருக்கும்…

எப்பாடுபட்டாவது அங்கு சென்றால் சரி தான் எனக் கணக்குப் போட்டவாறு, மாரியாத்தாவைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு அடியாகக் கஷ்டப் பட்டு வைத்து நடந்து பாதித் தூரம் வரை வரவில்லை அதற்குள் கைகளிரண்டும் கழன்று விடும் போல வலிக்கத் தொடங்கி விட்டிருந்தது…

அப்போது நான் பார்வைக்குச் சரியான ஒல்லியாகத் தான் இருப்பேன்…

ஒருவாறு அருவியை அடைந்ததும் கீழே அவளை இறக்கும் அளவுக்கு உடம்பில் தெம்பில்லாமல் கீழே ஒரு வட்டவடிவமாகத் தேங்கி நின்ற நீருக்குள் பொத்தென்று அவளைப் போட்டு விட்டேன்…

நல்ல வேளை பாறையில் எங்கும் போட்டிருந்தால் என்ன ஆகி இருக்கும், பூசணிக்காய் சிதறி இருக்கும்…” என்று சொல்லிச் சிரித்தான்...

“டேய் அடங்குடா மச்சான்… உன் மனைவியைப் பார்த்தது முதல், அவள் பெயர் என்னவென்று தெரிய முதலே எத்தனை பட்டப் பெயர்களைச் சூட்டி விட்டாய் நீ… இருந்தாலும் நீ தைரியசாலி தான் போ” என்று பாராட்டுப் பத்திரம் வழங்கினான் விமலரூபன்…

“அடப் போங்களத்தான் நீங்கள்... அதெல்லாம் அந்தந்த நேரத்தில் சும்மா மனதில் வந்துவிடும் அவ்வளவு தான்…

உங்களால் கவிதாவை இப்படியெல்லாம் அழைக்க முடியவில்லையே என்று பொறாமைப் படாதீர்கள்...

தண்ணீருக்குள் அவளைப் போட்டதை மறந்து போய்க் கைகளில் இருந்த பாரம் விலகி விட்ட சந்தோஷத்தில் கைகளை நெட்டி முறித்துக் கொண்டேன்…

திடீரென்று தான் நினைவு வந்து தண்ணீருக்குள் குனிந்து பார்க்கவும் மாரியாத்தா தண்ணீருக்குள் இருந்து கோபமாக எழுந்தது மட்டுமல்லாமல் "டேய் எருமை மாடே" என்றபடி பக்கத்தில் தோதாக இருந்த ஒரு உருட்டுக் கட்டையை எடுத்துக் கொண்டு என்னைத் துரத்தத் தொடங்கியது…

ஐயோம்மா என்றபடி நான் தப்பித்து ஓடத் தொடங்கினேன்… 💗💗💗💗

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“தனியே இருந்த வானத்திலே
நிலவாய் வந்து விட்டாய்
இனிமேல் மறைத்து இலாபமில்லை
எனக்குள் வந்து விட்டாய்
என் இதயத்தின் சுவர்களில் எல்லாம் உன் பெயரை
தினம் எழுதுவேன்“
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Attachments

  • FB_IMG_1624532421316.jpg
    FB_IMG_1624532421316.jpg
    63.4 KB · Views: 29
  • FB_IMG_1624532091780.jpg
    FB_IMG_1624532091780.jpg
    15.9 KB · Views: 24
Top