• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
கயல்விழி தன்னை உருட்டுக் கட்டையுடன் துரத்தியதைப் பாவனையுடன் சொல்லி வந்த கவியரசன்.

அதை முடிக்கக் கூடவில்லை விமலரூபன் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு நிலத்தில் விழுந்து புரண்டு சிரிக்கத் தொடங்கினான்…

அவன் சிரிப்பதைப் பார்த்தவன் “அத்தான் என் திண்டாட்டம் உங்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறதா? நான் அடி வாங்குவது உங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா என்ன?” என்று விமலரூபனின் காதுகளை வலிக்காமல் முறுக்கினான்.

“அடப் போடா மச்சான்… எனக்கு மட்டும் தான் திருமணத்திற்கு முதலே பொண்டாட்டி கையால் அடி உதையென்று அர்ச்சனை எல்லாம் கிடைத்ததோ என்று இருந்தேன்.

பரவாயில்லை துணைக்கு மச்சானும் சேர்ந்து கொண்டான் என்பது, எனக்குக் கொண்டாட்டம் தானே…” என்று சொல்லி மீண்டும் சிரித்தான்…

அவனது சிரிப்பைப் பார்த்திருந்தவன் “எல்லாம் என் நேரம் அத்தான்… நன்றாகச் சிரித்துக் கொள்ளுங்கள், கவிதா கவிதா என்று ஒரு சண்டைக்கோழி எங்கள் வீட்டில் சிலிர்த்துக் கொண்டு நிற்கிறது.

அதை இந்தப் பக்கம் திசை திருப்பி விட்டால் எப்படி இருக்கும் அத்தான்” என நம்பியார் பாணியில் ஒரு உள்ளங்கையை மறு உள்ளங்கையில் வைத்துத் தேய்த்துக் கொண்டே கேட்டான்.

“ஐயா சாமி ஆளை விடுங்கடா… நான் பாவம், இனிமேல் சிரிக்க மாட்டேன் சரி தானா? நீ கதைக்கு வா மச்சான், கொஞ்சம் விட்டால் குடும்பத்துக்குள் கும்மி, கோலாட்டம் எல்லாம் நடத்தி வைப்பாய் போல இருக்கிறதே…” என்று அப்பாவியாகச் சொன்ன அத்தானை தட்டிச் சிரித்து விட்டு, கவியரசன் கதையைச் சொல்லத் தொடங்கினான்...

“நானும் சுத்திச் சுத்தி ஓடுகிறேன் அவளும் விடுவதாக இல்லை… இறுதியில் நான் தான் சட்டைப் பையில் வைத்திருந்த வெண்ணிறக் கைக்குட்டையை எடுத்துச் சமாதானக் கொடியாகப் பறக்கவிட்டேன்…

அதன் பிறகு இருவரும் சமாதானம் பேசி உடன்படிக்கை செய்து கொண்டோம்…

என் காயத்தைப் பார்த்து அம்மணிக்கு இரக்கம் வந்து, என் கைக்குட்டையை மடித்தே இறுகக் கட்டுப் போட்டும் விட்டார்கள்…

நல்ல வேளையாக அருவிக்கு அருகிலேயே நிறையக் காட்டுப் பூவரசு மரங்கள் நின்று கொண்டிருந்ததால் அதிலிருந்தே புதிய இலைகளைப் பறித்து எடுத்துக் கொண்டு மறுபடியும் கிளம்பி விட்டோம்…

என்னால் வேகமாக நடக்க முடியவில்லை, இடது காலில் ஏற்பட்ட வலி என்னை நடக்கச் சிரமப் பட வைத்தது.

நான் நொண்டியவாறே நடப்பதைப் பார்த்து விட்டு 'ஏன் என்னாயிற்று இப்படித் தத்தித் தத்தி நடக்கிறீர்களே ' என்று அவள் கேட்ட கேள்விக்கு நான் வந்த சிரிப்பை மறைத்துக் கொண்டு 'இடது காலில் பூசணி ஒன்று தொப்பென்று விழுந்து விட்டது…
அது தான் ஒரே வலி, சரியாக நடக்கவும் முடியவில்லை' என்று பதில் சொன்னேன்.

நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டே அமைதியாக வந்தவள் யோசனையாக அங்கே பூசணி நான் பார்க்கவில்லையே என்றாள் கேள்வியுடன்…

நீ பார்க்கவில்லை தான் அதோடு பார்க்கவும் முடியாது ஆனால் நான் பார்த்தேன் என்றதும்,

அதெப்படி நான் பார்க்க முடியாது என்று சந்தேகமாகக் கேட்டவளிடம் இருந்து தப்பிக்க, கோவில் வந்து விட்டது பேசாமல் வா… அந்தப் பூசணியை நேரம் வரும் போது காட்டுகிறேன் என்றவாறு கோவிலின் மடத்திற்குள் சென்று விட்டேன்…”

“நாங்கள் இருவரும் மடத்திற்குள் சென்ற நேரத்திலும் கூட சமையல் முடிந்தபாட்டைக் காணவில்லை…

அது கூடப் பரவாயில்லை, நடுக்காட்டில் விட்டு ஓடி வந்த இரண்டு துரோகிகளும் வாழையிலையில் வைத்துப் பொங்கலை விழுங்கிக் கொண்டிருந்தார்கள்…

அவன்கள் காட்டில் விட்டு ஓடி வந்தது கூடத் துரோகமாகத் தெரியவில்லை…

என்னை விட்டுப் பொங்கல் சாப்பிட்டுக் கொண்டிருந்தது தான் எனக்குப் பெரிய துரோகமாகத் தெரிந்தது…”

“அவர்களுடன் சண்டை போட முடியாத அளவுக்கு, கோவிலில் உள்ள பெரிசுகள் எல்லாம் ஒன்று திரண்டு ஏதோ இரகசியம் பேசிக் கொண்டிருந்தது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தது...

அதனால் நானும் அப்போதைக்கு அமைதியாகி நல்லபிள்ளையாக ஒரு ஓரமாக அமர்ந்து விட்டேன்...

இப்படியும் அப்படியுமாகி அன்றைய இரவுப் பொழுதையும் நெருங்கியாகி விட்டது,

மறுபடியும் அதே பெரிசுகள் ஏதோ இரகசியம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் எனக்கு ஏதோ சரியாகப் படவில்லை, உள்ளுணர்வு வேறு தவறாக என்னமோ நடக்கப் போகிறதெனப் போட்டு அடித்துக் கொண்டிருந்தது...

ஒரு இரண்டு மணித்தியாலங்கள் ஓடியிருக்கும் நான் எண்ணியது சரியாகப் போயிற்று.

திருமணமாகாத ஒரு பெண்ணை அடுத்த நாள் இரவு முழுவதும் காட்டுக்குள் சுற்றி வரச் செய்து, சீதாதேவியின் சிலையைக் கொண்டு வந்து சடங்கு சம்பிரதாயங்கள் சிலவற்றை நிறைவேற்றுவது அந்தக் கோவிலில் காலகாலமாக இருந்து வருகின்ற வழக்கமாம்...

காட்டுக்கு நடுவிலே ஒரு பெரிய அசோக மரத்தின் கீழாக சீதாதேவியின் சிலையும் அதைச் சுற்றி இராட்சத தோற்றமுடைய பெண்களின் சிலையும் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

அந்த சீதாதேவியின் சிலையைத் தூக்கி வந்து கோவிலில் இருக்கின்ற இராமர் சிலைக்கருகில் வைக்க வேண்டும் அதன் பிறகு உரிய சடங்குகள் எல்லாம் நடைபெறும்...”

“சினிமாக்களில் வருவதைப் போல, ஒரு செம்புக்குள் திருமணமாகாத பெண்பிள்ளைகளின் பெயர்களை எழுதிப் போட்டு, அர்ச்சகரின் கையால் மூன்று கடதாசித் துண்டுகளை எடுப்பித்து, இராமர் சிலையின் பாதங்களில் போட வேண்டும்.

பாதத்தின் நடுவில் முதலில் விழும் கடதாசித் துண்டில் யாருடைய பெயர் இருக்கிறதோ அந்தப் பெண் தான் சடங்குகளைச் செய்தாக வேண்டும்...

துணைக்கு யாரும் கூடப் போகக் கூடாது.

என்ன ஆபத்து நேர்ந்தாலும் காப்பாற்றவும் கூட யாரும் போவதையும் அனுமதிக்க மாட்டார்கள்.

காட்டுக்குள் போகும் பெண்ணை அம்மனை அலங்கரிக்கும் நகைகள் கொண்டு பட்டுடுத்தி அலங்கரிப்பார்கள்...

என்ன நேர்ந்தாலும் சிலையை எப்படிப் பட்டாவது கொண்டு வந்து சேர்த்தேயாக வேண்டும்...

அப்படிச் செய்யாத பெண்களைச் சாமிக்குற்றம் செய்தவர் என்கின்ற பெயரில் கடுமையாகத் தண்டிப்பார்கள்...

இதெல்லாம் திருடர்கள் உருவாக நாமே வழி அமைத்துக் கொடுப்பது போல என்று ஐந்து வருடங்களுக்கு முதலே நான் சண்டை போட்டு இருக்கிறேன்...

அது மட்டுமா வயதுப் பெண்ணை எப்படித் தன்னந்தனியாக நடுக் காட்டுக்குள் இரவு நேரம் அனுப்புவது இது தவறு என்று கூட யாருக்கும் தோன்றவில்லையோ என்று கடுப்பாக இருந்தது...

மீறி ஏதும் பேசச் சென்றாலோ வழிபாட்டு முறைகளைக் கொச்சைப் படுத்துகிறாய் என்று சொல்லி வெட்டிப் பொலி போடவும் அடியாள்கள் வேறு ஒரு பக்கமாக அலைவதால், யாருமே மறந்தும் வாயைத் திறப்பதில்லை...”

“இதுவரை அப்படிச் சென்ற பெண்களின் உடலில் எல்லாம் காயங்கள் ஏற்பட்டும் இருக்கிறது, நகைகளும் திருடு போயிருக்கிறது, சில பெண்களும் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்...

இந்த வழக்கத்தைக் கொஞ்சமாவது மாற்றியமைக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை...

அதை மனதிற் கொண்டு தான் நான் கோவிற் பூஜைக்குப் போனதே...

அதே வழக்கம் நாளைக்கு அரங்கேறப் போகின்றது.

அதை எப்பாடு பட்டாவது தடைப் படுத்த வேண்டுமென்று நான் யோசனை செய்து கொண்டிருந்த நேரம், பெயர்கள் எழுதிய கடதாசித் துண்டுகள் மூன்றை எடுத்து இராமரின் பாதத்தில் அர்ச்சகர் போட்டது கூட என் மனதை எட்டவில்லை...

பாதத்தின் நடுவில் விழுந்த கடதாசித் துண்டை எடுத்துப் பார்த்த அர்ச்சகர் ‘கயல்விழி ‘ என்றார் அழுத்தமாக...

அந்தச் சூழலிலும் கூட அந்தப் பெயரை என்னையறியாமலேயே அருமையான பெயர் என்று நான் இரசிக்க மறக்கவில்லை...

என்னருகில் நின்றிருந்த பெரியவர் ஒருவர் பதட்டமாக நிமிர்ந்து ‘கடவுளே’ என்று சொல்லியது என்னை நடப்புக்குக் கொண்டு வந்தது...

இராமர் சிலைக்கருகில் இருந்த மேடையில் கொஞ்சம் கூடக் கலக்கமின்றி நின்றிருந்தவளைப் பார்த்த கணம் முதலில் ஒன்றும் புரியவில்லை...

பின்னர் தான் அர்ச்சகர் தன் கணீர்க் குரலில் ‘கயல்விழி என்னும் பெயர் கொண்ட இந்தத்தேவி இன்றைய சடங்கை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டி வாக்கு கொடுப்பார்கள்‘ என்று சொன்னபோது தான் மாரியாத்தாவின் நிஜப் பெயர் கயல்விழி என்பது எனக்குத் தெரிந்தது...

அர்ச்சகரின் கையில் இருந்த சிறு விக்கிரகத்தின் மீது கைவைத்துச் சாதாரணமாக வாக்குக் கொடுத்தவளை விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்...”

“அடுத்த நாட் காலையில் நான் மட்டும் பரபரப்புடன் சுற்றிக் கொண்டிருந்தேன்...

அவளோ நிதானமாகப் பொங்கலை உள்ளே தள்ளிக் கொண்டதோடு மட்டுமன்றி என் வயிற்றெரிச்சலையும் அள்ளிக் கட்டிக் கொண்டாள்...

இடையில் அவளைத் தடுத்து ‘பைத்தியமா உனக்குக் கொஞ்சமாவது பயம் இல்லையா? கொட்டிக் கொண்டிருக்கிறாயே...’ என்று கொட்டித் தீர்த்தேன்...”

“என்னைத் தலை சாய்த்துப் பார்த்தவள் ‘நான் பயம் இல்லாமல் இருப்பதா? அல்லது பொங்கலை உங்களுக்கும் விடாமற் கொட்டிக் கொண்டிருப்பதா? உங்களுக்குப் பிரச்சினை...

அது போகப் பயமாக இருந்தால் மட்டும் என்னை விட்டு விடுவார்களா?’ என்று சிறு புன்னகையுடன் கேட்டு விட்டுச் சென்று விட்டாள்...

இராத்திரி ஒரு எட்டு மணி இருக்கும் சடங்குகளுக்கு எல்லாரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள்...

நகைகள் அணிவித்து, பட்டுப் புடவை அணிவித்துக் கையில் ஒரு தீப்பந்தமும் கொடுத்து அவளை எல்லோரும் வழியனுப்பி வைக்க,
யாருமறியாமல் அவளருகில் சென்ற நான் ‘பயம் வேண்டாம் யாருக்கும் தெரியாமல் நான் துணைக்கு வருகிறேன் சரிதானா ‘ என்று தைரியம் சொன்னேன்.

என்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிச் சிரித்து விட்டுப் போய் விட்டாள்...

எனக்குத் தான் அந்த நேரம் இதயம் படபடவென வேகமாக அடித்துக் கொண்டது...

என்ன இவள் சாதாரணமாக நடந்து கொள்கிறாளே... காட்டுக்குள் எங்கே ஆபத்து ஒளிந்து இருக்கிறதோ என்று நெடு நேரமாக அசைவற்று நின்று கொண்டிருந்தேன்... 💜💜💜💜💜

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“காட்டிலே காயும் நிலவைக்
கண்டு கொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கிக்
காதலும் இங்கே வருவதில்லை”
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


“அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும் தான் அப்போது என் மனதில் ஓடிக் கொண்டிருந்த விடயம்…

என்னைத் தேடி அந்த நேரத்தில் கபிலனும், ஆனந்தனும் சமரசம் பேச வந்தார்கள்.

‘மச்சி மன்னித்துக் கொள்ளடா… ஏதோ ஒரு பயத்தின் வேகத்தில் அப்படி ஓடி வந்து விட்டோம்’ என்று சொல்லி மன்னிப்புக் கேட்டவர்களைப் பார்த்த எனக்கு ஒரு யோசனை தோன்றியது…

நான் உடனேயே அதனை அமுலுக்குக் கொண்டு வரும் எண்ணத்துடன் ‘வாங்கடா மச்சிகளா! உங்களை நான் மன்னிக்க வேண்டுமென்றால், உங்களால் எனக்கொரு காரியம் ஆக வேண்டிக் கிடக்கிறது…

அதனை முடித்துக் கொடுத்தீர்களென்றால் போனால் போகிறதென மன்னித்து விட்டு விடுவேன் எப்படி உங்களுக்கு வசதி‘ என்று கேட்டதும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து விட்டுச் சரியென மண்டையை உருட்டி வைத்தார்கள்…

ஒரு அரை மணி நேரத்திற்குப் பிறகு இருவரையும் கதறக் கதற இழுத்தபடி காட்டுப் பாதையில் போய்க் கொண்டிருந்தேன்…

‘டேய் மச்சி தயவு செய்து எங்களை விட்டு விடடா… அங்கே மோகினிப் பிசாசெல்லாம் கைக்கொட்டிச் சிரிக்குமாமடா… இங்கே பாரேன் பயத்தில் கைகாலெல்லாம் எப்படி உதறுகிறதென்று…‘ என ஆனந்தன் வரும் பாதை முழுவதும் புலம்பிக் கொண்டே வந்தான்…”

“அருவிக்குப் போகும் பாதையில் நாங்கள் இறங்கி நடக்கையில் சற்றே தள்ளித் தொலைவில் மரங்களுக்குப் பின்னால் சில உருவங்கள் மறைந்து நிற்பதை நான் பார்த்து விட்டேன்…

நானும் இருவரையும் எச்சரிக்கை செய்வதற்குத் திரும்பவும், அந்த நொடியில் கையில் தீப்பந்தத்துடன் அந்தப் பாதையின் வளைவில் கயல்விழி வரவும் சரியாக இருந்தது…

அவ்வளவு தான் ஆனந்தன் என் கையை உதறி விட்டு ‘ஐயோ! பிசாசு…’ என்ற கூச்சலுடன் ஓட்டம் எடுக்கத் தயாராகவும், கபிலன் பட்டென்று எட்டி அவனது சட்டையைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டு விட்டான்…

‘உன்னுடைய உக்கிப் போன கண்ணை நல்லா விரிச்சுப் பாரு அது பிசாசா? இல்லையா? என்று’ எனக் கபிலன் சொன்னதும் தான் ஆனந்தன் நன்றாகத் திரும்பிப் பார்த்து விட்டு ‘அட அந்தப் படபடப் பட்டாசுடா மச்சி… ஆமா ! இதுக்கு இங்கே என்ன வேலை…’ என்று சொல்லி ஓரளவுக்குச் சகஜமானான்…

‘இப்பொழுது எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருக்க நேரமில்லை, இந்தப் பெரிய மரங்களுக்குப் பின்னால் நன்றாக மறைந்து கொள்ளுங்கள், நான் எல்லாவற்றையும் பின்னர் சொல்கிறேன் என்றபடி இருவரையும் இழுத்துக் கொண்டு பக்கத்தில் நெருக்கமாக நின்றிருந்த மரங்களுக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டேன்…”

“நல்ல வேளையாக நாங்கள் சற்றுத் தள்ளித் தொலைவில் நின்றதாலோ அல்லது அருவி விழும் ஓசையினாலோ ஆனந்தன் ஐயோவெனக் கூச்சலிட்டது எவர் காதுகளையும் எட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும்…

மரத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டு ஒரு ஐந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை அதற்குள் யாரோ மூக்கால் நன்றாக இழுத்து இழுத்து வாசனையை உணர்வது போலச் சத்தம் வரத் தொடங்கியது…

யாரோ நாம் ஒளிந்திருப்பதைத் தான் மோப்பம் பிடிக்கிறார்களோ என்ற சந்தேகத்துடன் சுற்றும் முற்றும் இருளில் சிரமப்பட்டு ஊடுருவிப் பார்க்கத் தொடங்கவும், என் முதுகில் யாரோ சுரண்டுவது போல இருந்தது.

சட்டெனத் திரும்பிய என்னை ‘டேய் மச்சி’ என்று அடிக் குரலில் மெதுவாக அழைத்தான் கபிலன்…

நானும் அதே குரலில் ‘என்னடா… நீதானா என் முதுகைச் சொறிந்தது, ஏண்டா முதுகு சொறியும் நேரமாடா இது…’ என்றதும்

‘டேய் முதுகு சொறியும் நேரம் எதுவென்று பிறகு பட்டிமன்றம் வைத்துக் கொள்ளலாம்… முதலில் அவனைப் பாரென்று…’ எனக்கு இடது பக்கமாகச் சுட்டிக் காட்டினான்…

எதைக் காட்டுகிறான் என யோசனையாகத் திரும்பிய எனக்குச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை…

இடது பக்கத்தில் பதுங்கியிருந்த ஆனந்தன், மரத்தின் கைக்கெட்டும் தூரத்தில் எக்கி எக்கி எதையோ பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்…

இறுதியாக இழுத்த வேகத்தில், அவன் இழுத்தது கையோடு வந்து விட்டது போல அப்படியே மல்லாந்து விழுந்து கிடந்தான்…

இடையிடையே தெரிந்த நிலவின் வெளிச்சத்தில் அவன் மேல் கிடந்தது ஒரு பெரிய பழுத்த பலாப்பழம் என்பது நன்றாகவே தெரிந்தது…

‘அடப் பன்னாடைப் பயலே… நீ தானாடா உறுஞ்சி உறுஞ்சி மோப்பம் பிடித்தது…

அதுவும் இந்தப் பலாப்பழத்து வாசனை உனக்கு மட்டும் எப்படித் தான் தெரிந்ததோ…’ என்று அவன் வயிற்றில் குத்திக் கொண்டு நாங்கள் இருவரும் பொங்கிப் பொங்கிச் சிரிக்கத் தொடங்கினோம்…”

“நாங்கள் சிரிப்பதைப் பார்த்தவன் ‘சும்மா என்னைக் கிண்டல் செய்ய வேண்டாம்… இன்று இரவுக்கான சாப்பாடு கூடச் சாப்பிட விடாமல், கதறக் கதற இந்தக் காட்டுக்குள் இழுத்து வந்து விட்டுப் பேச்சைப் பாரேன்…’ என்று சொல்லி விட்டு அவன் தன் வேலையில் தீவிரமானான், அது தான் பலாச் சுளைகளைப் பிரித்தெடுக்கும் வேலை…

அவனை அப்படியே விட்டு விட்டு மரங்கள் தந்த இடைவெளியில் மெதுவாகப் புகுந்து வெளியே எட்டிப் பார்த்தேன்.

கயல்விழி எங்களது மரங்களைக் கடந்து சிறிது தூரம் சென்று விட்டிருந்தாள்…

“அந்த நேரம் மரங்களுக்குப் பின்னால் காலடியோசைகள் மெல்லக் கேட்கத் தொடங்கின.

அந்தச் சத்தம் வர வரப் பெரிதாகி ஒரு கட்டத்தில் பெரிய சத்தமாகிக் காலடியோசைகளும் இலைச் சருகுகள் மிதிபடும் ஓசைகளும் என விதம் விதமான ஒலிகளாகக் கேட்கத் தொடங்கின…

நான் சட்டென முன்னர் நோட்டம் விட்ட மரங்களைப் பார்த்தேன், அந்த மரங்களுக்குப் பின்னால் மறைந்திருந்த உருவங்கள் எல்லாம் அப்படியே மறைந்திருப்பது என் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தது…

அப்படியானால் இப்பொழுது வருபவர்கள் யாராக இருக்கும் என நான் அனுமானம் செய்வதற்குள், கடகடவென முகமூடியணிந்த கொள்ளையர்கள் கயல்விழிக்கு முன்னால் குதிப்பது மரத்திற்குப் பின்னாலிருந்த எனக்கு நன்றாகவே தெரிந்தது…

கைகளில் வாளும், கத்தியும், கோடாரியும் என அந்த நேரத்து நிலவு வெளிச்சத்தில் பளபளவென ஆயுதங்களெல்லாம் பளபளத்துக் கொண்டு தெரிந்தது…

மீண்டும் முதுகை யாரோ சொறிவது தெரிந்தது யாரெனப் பார்த்தால், ஆனந்தன் ‘மச்சீ… அங்கே பாருடா… கொள்ளையர் கூட்டம் போல இருக்குடா…

இந்தப் படபடப் பட்டாசு எதுக்குடா இவ்வளவூ… நகைகள் எல்லாம் பூட்டிக் கொண்டு இங்கே வந்து தொலைத்தது…
புத்தி இல்லாத பட்டாசு’ என்று கயல்விழியைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தான்…”

“நான் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்து விட்டு ‘டேய் வாங்கடா போய் ஏதாவது உதவி செய்வோம்…’ என்று சொன்னது தான் தாமதம் ‘அட எருமை மாடே… அறிவு இருக்காடா உனக்கு… ‘ என்று எனக்கு வார்த்தைகளால் அர்ச்சனை செய்யத் தொடங்கினான் ஆனந்து…”

கபிலன் தான் ‘டேய் எதுக்குடா அவனைத் திட்டுகிறாய்… அவன் உதவப் போகலாம் வாருங்கள் என்று தானே சொன்னான்’ என எனக்காய்ப் பரிந்து பேசினான்…

அதைக் கேட்ட ஆனந்தன் ‘வாயை மூடுடா… நல்லா வருது வாயிலே… அவனைக் கெட்ட வார்த்தையால் திட்டாமல் விட்டேனே என்று சந்தோஷப் படுங்கள்…

உதவிக்குப் போகலாமா என்று கேட்கிறானா? இல்லாவிட்டால் உயிரைக் கொடுக்கப் போகலாமா என்று கேட்கிறானா? என் கண்களைக் குறை சொன்னீர்களே நீங்கள் இருவரும் உங்கள் பழுதாய்ப் போன கண்களை நன்றாகத் துடைத்து விட்டுப் பாருங்கள், எத்தனை ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள்,
ஆட்களின் தோற்றத்தைப் பார்த்தாலே அடிவயிறு கலங்குகிறது…

எங்களிடம் ஒரு மடக்குக் கத்தி கூட இல்லை, இந்த இலட்சணத்தில் எப்படியடா அவர்களுக்கு மத்தியில் தைரியமாகப் போவது…

என்னைக் கேட்டால் புத்தியுள்ள எவனும் அதிரடியாக அங்கே இப்போது போக மாட்டான்…

அது போக உதவிக்கு போகிறோம் வாருங்கள் என்றா இங்கே எங்களை அழைத்து வந்தான்…

கதறக் கதறக் கடத்திக் கொண்டல்லவா வந்தான் இராட்சதன்… ‘ என்றானே பார்க்கலாம்…

நான் அவனைப் பார்த்து ‘டேய் இப்படிக் கூடத் திட்டுவாயாடா நீ…’ என்றேன் பாவமாக… ‘
இப்படி இல்லை இதற்கு மேலே கூடத் திட்டுவேன்…
முதலில் இப்போது என்ன செய்யலாம் என்பதை மட்டும் யோசியுங்கள்…
நேரம் போய்க் கொண்டிருக்கிறது…’ என்றபடி என்னை விலக்கி விட்டுத் தான் எட்டிப் பார்த்தான்…”

“பார்த்தவன் ‘டேய் மச்சிகளா… இங்கே பாருங்களடா இப்போது கொள்ளைக்காரிகளும் கூட்டுச் சேர்ந்து விட்டாள்களடா…’ என்று கத்தினான்…

அவன் சொன்னதைக் கேட்டு நான் எட்டிப் பார்த்தேன்…

ஒரு பக்கம் கறுப்பு முகமூடி போட்டு, வேஷ்டியைத் தார் பாய்ச்சிக் கட்டிக் கொண்ட நல்ல திடகாத்திரமான கொள்ளையர்கள் வாளுடன் நின்றிருக்க, மறு பக்கம் சிவப்புத் துணியால் முகத்தை மறைத்துக் கட்டிக் கொண்டு சேலையை வரிந்து சண்டை போடுவதற்குத் தோதாகக் கட்டியபடி பெண்கள் நின்றிருந்தார்கள்…

அந்தப் பெண்களின் கூட்டத்தை, முகமூடி அணிந்தவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் தயங்கிய நிலையில் நன்கு தெரிந்தது…

ஆனால் அவர்களின் தயக்கமும் சிறிது நொடிதான்…

அப்போது தான் தெரிந்தது மரங்களின் மறைவில் நின்றது மங்கையர் என்பது...

ஆனால் கொள்ளையர்கள் கொடியவர்களென்பதால் உடனேயே ஒரு பெண் மீது வாளை வீச, அது அவளின் வலது கையைப் பதம் பார்த்தது…

அவள் சட்டென விலகியதால் சிறு கீறல் மட்டுமே ஏற்பட்டது போல…

அந்தக் கீறலைப் பிடித்துப் பார்த்த கயல்விழி, தன் சேலைத் தலைப்பில் இருந்து ஒரு போத்திலை எடுத்துத் திறந்து வாயில் ஊற்றி விட்டு, கையில் வைத்திருந்த தீப்பந்தத்தை முன்னே நீட்டி அதன் மீது வாயால் கொப்பளித்தாள்…

அவளின் வாய்க்குள் இருந்து தீப்பொறி பறந்தது, அதோடு வாளை வீசியவனின் முகமூடி தீப் பிடித்து எரிய, அவன் வாளைப் போட்டு விட்டு ஓட்டமெடுத்தான்…

அந்த வாளைக் கைப்பற்றியவள் அடுத்தவனின் வாளைப் பட்டென்று தட்டி விட்டாள்…
எனக்குப் பக்கென்று இருந்தது…

ஆனந்தன் மீண்டும் என் முதுகைச் சொறிந்தான் நான் பதிலுக்கு என்னவெனச் சைகையில் கேட்டேன் ‘இல்லை மச்சீ… இந்தப் பிள்ளை போன பிறப்பிலே டிராகன் குடும்பமா இருந்திருக்குமோ என்று எனக்கொரு சந்தேகம்டா…
ஆத்தி என்னமா நெருப்பு விடுது வாய்க்குள்ளிருந்து ‘ என்றான் விரிந்த கண்களுடன்…

இத்தனைக்கும் நாங்கள் மூவரும் மரத்தின் மறைவிலிருந்து வெளியே வரவேயில்லை அத்தான்…

மூவரும் அப்படியே அதிர்ந்து விழித்துக் கொண்டிருந்தோம் அவளின் செய்கையைப் பார்த்தவாறு… “ எனக் கவியரசன் சொன்னதும் தானும் ஒரு விழி விரிப்பை வெளிப் படுத்தினான் விமலரூபன்… 💪💪💪💪💪

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“ யாரிவளோ யாரிவளோ தினம் தோறும் தேடினேன்
யாரிவளோ யாரிவளோ உயிர்ப் பூவைச் சூடினேன்
அவள் கூந்தல் வேரைச் சேர மலர்க் காடே ஓடி வா…”
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Attachments

  • aa79ba51640b4e9edd107476a013d9df.jpg
    aa79ba51640b4e9edd107476a013d9df.jpg
    64.9 KB · Views: 20
  • FB_IMG_1624531918498.jpg
    FB_IMG_1624531918498.jpg
    22.2 KB · Views: 19
Top