• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நின் மூச்சோடு குடியேறவா.? - 01

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
873
அத்தியாயம் 01

பரபரப்புக்கு பஞ்சமில்லாத சென்னை மாநகரம். எப்போதுமே ஒருவித வாகன நெரிசல் தட்டுப்படும் வேளச்சேரி பகுதி, மெட்ரோ ரயில் வேலைகளால் இன்னும் நெரிசலாக காணப்பட்டது. அதற்கு மேலும் வலு சேர்த்தது அடித்து பெய்துக்கொண்டு இருக்கும் வான் நீர். உணவுக்காக இன்றி, மழையில் இருந்து தப்பிக்கவென தன் கடையின் முன் அதிகமாக ஒதுங்கியிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள், யக்ஷிணி.

அவள் கடையின் வலது பக்கம் இருக்கும் வித விதமான ஐஸ் கிரீம் வகைகளை இந்த நிலைக்கு சாப்பிட முடியாது தான். ஆனால் மறுப்பக்கம் சுட சுட பொரிந்துகொண்டு இருக்கும் வறுவல் வகைகளை உண்ண முடியாத என்ன? மழைக்கு ஒதுங்கி இருக்கும் மனித மனங்களோடு சேர்ந்து நாசி வழி இறங்கும் கம கம மணம் வயிறுக்கும் சென்று அங்கு இருக்கும் பசி உணர்வை தூண்டி இருக்க வேண்டும். பலர் உள்ளே நுழைந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி உண்டுக்கொண்டு இருந்தனர். சிலர் வேண்டியவற்றை கூறி வாங்கிக்கொண்டு மேலே இருக்கும் டைனிங் ஏரியாவிற்கு நகர்ந்தனர்.

கீழ் தளத்தில் நேரெதிரே பில் செய்யும் இடமிருக்க, அதன் வலது பக்கத்தில் வித விதமான ஐஸ்கீரம் வகைகளை காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஸ்கூப், லேயர், ரோல், கப், மிக்ஸ்ட் என அதிலேயே பல விதமாக கொடுக்கப்படும் ஐஸ்க்ரீம் வகைகளை பற்றி மெனு கார்டுகள் ஆங்காங்கே கிடக்க, பெரிய திரையிலும் வகைகளும், விவரிப்புகளும் அதன் தொகைகளும் ஓடிக்கொண்டு இருந்தது. இடது பக்கம் ஒப்பன் கிச்சனும் பல வகையான வறுவல் வகைகளும் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. வலது பக்கம் போலவே இடது பக்கமும் பெரிய திரையில் உணவுகள் பட்டியலிடப்பட்டு இருந்தது. நடுவே ஐந்து ஆறு வட்ட மேசைகளும் அதனை சுற்றி இருக்கைகளும் இருக்க, மேல் தளம் முழுவதும் இதே போல் மேஜைகள், இருக்கைகள், சோபாக்கள் என்று போடப்பட்டு இருந்தது.

மேலே ஒரு பக்கம் அந்த நெரிசலான நகர நெரிசலை காணும்படி கண்ணாடி திரையும் அதன் மறுபக்கம் மீன் தொட்டி சுவர்களும் அதில் பல வண்ண கண்ணை கவரும் மீன்களும் நீந்த விடப்பட்டு இருந்தது. பலருக்கு கீழே அமர்வதை விட, வேண்டியவற்றை கூறி வாங்கிக்கொண்டு மேலே வந்து அமர்ந்து தங்கள் நேரத்தை செலவழிப்பதே விருப்பம். அதிக வகைகள் வாங்கும் சிலர், மேலே எடுத்துக்கொண்டு வந்து தரும்படி கேட்பவர்களும் உண்டு. அவர்களுக்கு இவர்களே மேலே எடுத்து சென்று கொடுப்பார்கள்.

முன் மாலை நேரம் அது. ஏதோ மாலை மங்கி விட்டது போல் ஒரு சூழலை உருவாக்கி இருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருந்தது அவளின் நகலை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து வர. செல்ல ஒரு நிமிடம் தாமதமானாலும் ஏக குஷி தான் அவள் மகள், யதுணாவிற்கு. பின்னே, தாய் வர தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் தந்தையும் செலவழிக்கலாமே? அந்த எண்ணத்தில் தோன்றும் குஷி தான். நினைக்கும்போதே பெருமூச்சு ஒன்று கிளம்பியது.

“ஒரு சீஸி பேபி காரன், பார்சல் பண்ணனும்” மெல்லிய குரலில் தெளிந்தவள், அவர்கள் கேட்ட உணவிற்கு பில் போட்டு கொடுத்து கவுண்டர் பக்கம் அனுப்பினாள்.

அடுத்த நிமிடமே, “அக்கா பேபி கார்ன், இது தான் கடைசி. அடுத்து இன்னும் ஒரு அரை மணி நேரம் ஆகும். ஜோஷ் இப்போ தான் மாரிநேட் செய்து பிரீஸ்ல வைத்திருக்கிறான்.” ஜென்னியின் குரல் கேட்டது.

இதனை கேட்டதும் சட்டேன்று ஒரு வேகமும் கோவமும் அவள் முகத்தில் வந்து அடுத்த நிமிடமே அதை கட்டுப்படுத்தியவள் போல் முகத்தை சாதாரணமாக மாற்றியவள், “சீரா, நீ இங்க வந்து பில்லிங் பாரு, நான் அங்கே பார்க்கிறேன்” என்று குரல் எழுப்ப, சீரா ஓடி வந்தாள்.

எப்போதுமே நேர்த்தியும் தெளிவும் எல்லா விஷயத்திலும் எதிர்பார்க்கும் யக்ஷிணிக்கு இந்த மாதிரி தாமதங்களில் எப்போதுமே பிடித்தம் இல்லை. உடனடியாக களத்தில் இறங்கி விடுவாள். அவளுடன் ஜெனி, ஜோஷ், சீரா, அர்ஜூன் என நான்கு பேர் வேலை செய்த போதும், இப்படியான சூழல்களில் அவளே இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தால், அந்த நான்கு பேரின் தேவை அங்கே அதிகம் என்பது போல் ஆகி விடும்.

“அர்ஜூன் எங்கே?” அவளின் கேள்வியில் அங்கே நின்றுக்கொண்டு இருந்த மற்ற இருவரும் திருதிருவென முழித்தனர்.

கேள்வி கேட்டப்படி அங்கிருக்கும் அனைத்து பாத்திரங்களையும் திறந்து பார்த்தவள், பன்னீர் மசாலா தீர போவதை கண்டுவிட்டு அங்கிருக்கும் ப்ரீசரை திறந்து பன்னீர் பொட்டலத்தை எடுத்து கடகடவென அழகாக டைமன்ட் வடிவில் வெட்ட ஆரம்பித்தாள். கேட்ட கேள்விக்கு பதில் வராததை உணர்ந்து பதிலுக்காக நிமிர்ந்து பார்த்தவள், ஜோஷ்வா ஜெனியை பார்த்து கண் காட்டுவதை உணர்ந்து வெட்டுவதை நிறுத்திவிட்டு, “என்ன விஷயம்?” என்று கேட்க,

“ம... மதியம் சாப்பிட்டு வரேன்னு வெளில போனான், இன்னும் வரல” ஜென்னி மெதுவாக சொல்ல, “ஒ...” என்று மட்டும் கேட்டுக்கொண்டவள், அடுத்தடுத்து தேவையான வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

வந்த ஒரு மணி நேரம் தீயாக வேலை செய்தவள், நேரமாவதை உணர்ந்து, “இனி வருவதை நீங்க பார்த்துக்கோங்க, நான் போய் யதுணாவை கூட்டிட்டு வந்துடறேன்” என்றுவிட்டு கட்டியிருந்த ஏப்ரான் மற்றும் சிகை தொப்பியை கழட்டி வைத்துவிட்டு கிளம்ப ஆயத்தமானாள்.

அவள் சரியாக உள்ளே வரும்போது மழையில் நனைந்த படி அர்ஜுன் வேகமாக உள்ளே வர, அவள்மேல் இடிக்க இருந்த கடைசி நொடி தவிர்த்து விலகியவன், “சாரி, சாரி யக்ஷு...” என்று மூச்சு வாங்க திணறியவன் சுற்றும் முற்றும் பார்க்க, பில் போடும் இடத்தில் நின்று சீரா இவனை பார்த்து சிரிப்பது நன்றாக தெரிந்தது.

“சாரி எதுக்கு? லேட் பண்ணதுக்கா? இல்லை லேட்டா வந்தும் இப்படி நேரத்தை வீண் பண்ணுறதுக்கா?” பளிச்சென கேட்டவள், “போய் வேலையை பாருங்க வந்து பேசிக்கிறேன்” என்றுவிட்டு அடித்த பெய்த மழை தூறலாக மாறி இருக்க, தூறலில் நனைந்தபடியே தன் ஐ20 வண்டியை நோக்கி ஓடினாள்.

“நீயும் இப்போவே என்கூட வண்டி ஓட்ட கத்துக்கலாமே?”

“வேண்டாம், இதை நீங்க முதலிலேயே செய்திருக்கலாமே, இப்போ மட்டும் எதுக்கு? நான் வரலை. நான் எப்போ சம்மாதிக்கிறேனோ அப்போ நான் சேர்ந்து கத்துக்குறேன்”

“ஹே ஓவரா பண்ணாத, நான் முன்னவே சொன்னேன் தானே? முதல நான் போய் கொஞ்ச நாள் பார்த்துட்டு உன்னையும் சேக்குறேன்னு”

“ஆனா, இந்த தாமதம், நீங்க சொன்ன காரணத்துனால இல்லையே... எனக்கு வேண்டாம் தான். முதல வேலை கிடைக்கட்டும்” அழுத்தமாக கூறி முடித்தது அவள் குரல்.

பழைய நினைவுகள் வந்து போனாலும், கைகள் தன் பாட்டிற்கு லாவகமாக அவளுக்கு தினம் பழக்கப்பட்ட அந்த சாலையில் செலுத்தி, நகரத்தில் பெயர் போன அந்த பள்ளியின் முன் நிறுத்த, மழையும் கிட்ட தட்ட நின்று போயிருந்தது. பெல் அடித்து நிமிடங்கள் சில கடந்திருக்க வேண்டும் போல, மாணவ செல்வங்கள் வீட்டிற்கு செல்லும் உற்சாகத்தில் திரண்டு வெளியே வந்துக்கொண்டு இருந்தனர். அவன் எப்போதும் காத்திருக்கும் இடத்தில் அவள் கண்கள் துழாவின. அவனின் வாகனத்தை காணவில்லை. யோசனையில் அவள் முகம் சுருங்கினாலும், தன் பெண் காத்திருக்கும் இடத்தில் அடுத்ததாக அவள் கண்கள் நகர, அங்கே சோகமே உருவாக யதுணா தன் பையை கட்டிக்கொண்டு அமர்ந்துக்கொண்டு இருந்தாள்.

“யது...” சற்று தூரத்தில் இருந்தே அழைத்தபடி அவளை நெருங்க, தாயை கண்டதும் முகத்தை சரி செய்துக்கொண்ட பெண்ணவள் (அப்படியே அம்மா மாதிரி) “அம்மா...” என்றபடி இறங்கி வர,

“போகலாமா?”

“ம்ம்... போலாம்மா”

“என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா?”

“இல்லையே”

“சரி வா” என்றபடி அவளை அழைத்தபடி தன் கார் இருக்கும் இடம் அழைத்து சென்றவள், முன் கதவை திறந்து குழந்தையை அமர வைத்துவிட்டு, ஓட்டுநர் இருக்கையை நோக்கி நகர்ந்தாள்.

சரியாக அவள் வண்டியை எடுக்கும் நேரம், வண்டிக்கு முன் விழுவது போல் ஓடி வந்தான், யாழன். நொடி தாமதிக்காமல், மகளின் பக்கம் சென்று குனிந்தவன், “சாரிடா குட்டி...” என்றான். மகளிடம் பேச்சுக்கள் இருந்தாலும், பார்வை எல்லாம் தன்னவளின் மேல் தான்.

“நான் நீங்க இன்னைக்கு வர மாட்டிங்கனு நினைச்சேன் ப்பா” இன்னுமும் சிறிது மழலை மிச்சம் இருக்க, சிணுங்கினாள் பெண்.

“அப்பா ஆபிஸ் வேலையில் மாட்டிக்கிட்டேன்டா... இந்தா... இது உனக்காக தான் வாங்கிட்டு வந்தேன்” என்றபடி மகள் பல நாட்களாக கேட்டுக்கொண்டு இருந்த 208 நிறங்கள் கொண்ட ஸ்கெட்ச் பேக்கை அவளிடம் கொடுத்தான்.

கொடுத்தவனுக்கு மகளில் சந்தோஷ பார்வையும், தன்னவளின் கண்டன பார்வையும் ஒன்றாக பரிசாக கிடைக்க பெற்றன. அதில் தலையை அழுந்த கோதியவன், “ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கா...” என்றபடி யக்ஷிணியை பார்க்க, அவளோ முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு மகளை தான் முறைத்தாள்.

“ம்மா ப்ளீஸ் மா... இது மட்டும்” அவளின் பல ‘இது மட்டும்’களில் இப்போது இதுவும் சேர்ந்துக்கொள்ள, ஏற்கனவே தந்தையில்லாத சூழலில் வளரும் மகளிடம் மேலும் மேலும் கண்டிப்பை காட்ட முடியாது சரி என்பது போல் தலையசைத்தாள்.

அதில் குஷியான யதுணா, இருக்கையிலேயே முட்டிபோட்டு எகிறி, “தேங்க்ஸ் மா” என்றபடி தன் தாய்க்கு கன்னத்தில் முத்தம் பதிக்க,

“ஒய்.... உனக்கு வாங்கி தருறது எல்லாம் நானு, ஸ்பெஷல் தேங்க்ஸ் எல்லாம் உங்க அம்மாக்கா?” என்றப்படி குற்றப் பத்திரிகை வாசித்தான்.

வேண்டும் என்றே வம்புக்கு இழிக்கிறான் என்று புரிந்த யக்ஷிணி உதட்டை கடித்து அந்த நேரங்கள் நகர காத்து நிற்க, தந்தையின் பக்கம் திரும்பிய யதுணாவோ அவன் மூக்கோடு மூக்கு உரசி அதிலேயே லேசாக அழுத்தம் கொடுத்தவள், “உங்களுக்கு ஸ்பெஷல் ஸ்பெஷல் மூக்கு முத்தா ப்பா” என்று கொஞ்ச, இப்போது நிஜமாகவே அவனின் பார்வையில் வம்பு ஏற, தன்னவளை தான் பார்த்தான்.

அதில் சட்டென ஒரு திணறலும், அதனால் உண்டான சினம் முளைக்க, “யது போதும், உள்ளே உட்கார். எனக்கு கடையில் இன்னும் வேலை முடியல” லேசாக அதட்டலாக கூற, உடனே சின்னவளின் முகம் கும்மி போனது.

“அப்பா நாளைக்கு சீக்கிரமே வர பாக்குறேன் டா” என்றான், மகளின் மனம் புரிந்தவன் போல்.

கடைக்கு சென்றதும், மகளை தன் கண் முன்னேயே அமர வைத்துக்கொண்டவள், அவளுக்கு தேவையான ஹாட் சாக்லேட் அவள் குடிக்கும் பதத்திற்கு கலந்துக்கொடுத்தவள், கூடவே ஒரு துண்டு பனானா வால்நட் கேக்கையும் கொடுக்க, தாய் கொடுத்ததை உண்டவள், சிறிது நேரம் அந்த கடையிலேயே அமர்ந்து வீட்டு பாடம் எழுத ஆரம்பித்தாள், எல்.கே.ஜி படிக்கும் யதுணா. மகளின் மேல் ஒரு கண்ணை வைத்தபடி அர்ஜுனை வறுத்து எடுத்துக்கொண்டு இருந்தாள், யக்ஷிணி.

“இதுல உன் பங்கும் அதிகம் இருக்கு. நீ இப்படி வெளில ஓடிட்டு இருந்தா வேலை எப்படி நடக்கும்? இன்னைக்கு நான் இருக்கவே சமாளிச்சேன். நானும் யதுக்காக வெளில போற நேரத்துல இவங்க மட்டும் எப்படி சமாளிப்பாங்க?”

“...”

“உங்ககிட்ட தான் பேசுறேன் அர்ஜுன். நீங்க இந்த கடையில் இன்வெஸ்ட் பண்ணியிருக்கலாம். ஆனா, அதுக்காக இப்படி உங்க சொந்த விஷயங்களுக்கு சலுகை எடுத்துக்கிட்டா அப்போ நானும் இதே மாதிரி எனக்கு என்னனு போனா கடை என்ன ஆகும் யோசிங்க?”

“...”

“இது ஒன்னும் முதல் தடவையோ மூணாவது முறையோ கிடையாது”

“இனி இப்படி நடக்காது யக்ஷு”

“நம்பாதே யக்ஷு... இப்படி தான் சொல்லுறாரு ஆனா திரும்ப திரும்ப நாங்க தான் வேலை அதிகம் ஆகி திணறுறோம். சார் ஜாலியா வெளிய போயிட்டு வேடிக்கை பார்த்துட்டு வராரு” சீரா போட்டுக்கொடுக்க,

“எட்டப்பி” முணுமுணுத்தான், அர்ஜுன்.

“இனியொரு முறை இப்படி ஆகாம பார்த்துகோங்க” என்றுவிட்டு அன்றைய நாளின் வரவு செலவுகளை பார்க்க ஆரம்பித்தாள்.

அதற்குள் தன் வீட்டு பாடத்தை முடித்த யதுணா, அர்ஜுனுடன் கூட்டு சேர்ந்துக்கொண்டு ப்ரௌனி செய்கிறேன் என்று கிட்சனுக்குள் நுழைந்துக்கொண்டு இருவருமாக ரகளை செய்துக்கொண்டு இருக்க, அந்த ஒப்பன் கிச்சனில் நடக்கும் கலாட்டாக்களை வரும் வாடிக்கையாளர்கள் பார்த்தாலும், யதுணாவின் துறுதுறுப்பில் கவரப்பட்டு தான் போயினர்.

மணி எட்டரையை நெருங்கும்போது தாயும் மகளும் கிளம்ப, அதன்பின் அர்ஜுன், சீரா மற்றும் ஜோஷ்வா வேலைகளை பிரித்து பார்க்க ஆரம்பித்தனர்.

ஜெனி வீட்டின் வறுமை நிலை காரணமாக பகுதி நேர வேலையாக தான் இங்கே இருக்கிறாள். காலை நேர கல்லூரியை முடித்தால், நேராக இரண்டு மணிப்போல் இங்கே வந்துவிடுவாள். அதன்பின் இரவு எட்டு மணிக்கு கிளம்பிவிடுவாள்.

யாக்ஷிணியும் குழந்தை பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் எட்டரை முதல் ஒன்பது மணிக்குள் கிளம்பிவிடுவாள். அதன்பின் மீதி மூவரும் இருக்க, பத்தரை மணி போல் கடையை மூடிவிட்டு, அர்ஜுன் மற்றும் ஜோஷ்வா சீராவை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு தாங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்றுவிடுவார்கள்.

அர்ஜுன் தனி வீடு எடுத்து தங்கி இருக்க, படித்துவிட்டு வேலை கிடைக்காது சுற்றிக்கொண்டு இருந்த தன் அறை தோழனான ஜோஷ்வாவை தங்களுடன் இணைத்துக்கொண்டான். முதலில் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லையே என்று சுணங்கினாலும் போக போக ஜோஷ்வாவிற்கும் இந்த சூழல் பழகி போனது. சொல்ல போனால், அவன் எதிர்பார்த்த சம்பளத்தை விட சற்று அதிகமாகவே இங்கே கிடைக்க பெற்றது என்பது தான் உண்மை.

எனவே, அவரவர் வாழ்வாதாரத்திற்கும் ஆசைக்கும் தொழில் பசிக்கும் மருந்தாகி போயிருந்தது அவர்களின் “Flavour your Tum” உணவகம்.

இரவு யதுவை தூங்க வைத்துவிட்டு தன் ஐபேட் ஓடு அமர்ந்தவள், புதிதாக தனக்கு தோன்றும் உணவு வகைகளை அதன் செயல்முறைகளை எழுதிக்கொண்டு இருந்தாள். அதன்பின் பல வகையான உணவு வகைகள் அதன் செயல்முறைகள் போன்றவற்றை படித்தும் பார்த்தும் தெரிந்துக்கொண்டு இருந்தவளின் கவனத்தை கலைத்தது அவளின் கைப்பேசி அழைப்பு.

கையிலேயே ஐபேட் இருந்தபோதும் தன்போல் கண்கள் சுவர் கடிகாரத்தை நோக்கி நிமிர, மணி இரவு பத்து என்று காட்ட, அழைப்பது யார் என்று உணர்ந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது அவளிடம்.

எடுக்க யோசித்தாலும் எடுக்காமல் இல்லை அவள்.

கைப்பேசியை கையில் எடுத்தவளின் கண்கள் ஓயாமல் ஓட, எடுத்து தான் ஆக வேண்டும் என்று புரிந்து பச்சை வட்டத்தை இழுத்துவிட்டு காதில் வைத்தாள். அதுமட்டுமே அவளுக்கு தெரியும்.

“ஏன்டி எப்போ தான் என்னை புரிஞ்சிக்க போற... தனியா வாழுறது அதும் கல்யாணம் ஆகிட்டு சந்தோசமா இருந்துட்டு அதுக்கு அப்புறம் பிரிஞ்சு வாழுறது ஒரு மனுஷனுக்கு எவ்வளவு கொடுமை தெரியுமா? எனக்கு... எனக்கு உன்னை கட்டி புடிச்சிட்டு தூங்கணும். உன்னோட வாழணும்னு இருக்கு. உனக்கு அப்படி இல்லையா? எப்போவோ நடந்ததை எல்லாம் இன்னுமும் பிடிச்சி வைச்சிட்டு கொடுமை பண்ணுற... என்னால முடியல பாப்பா ப்ளீஸ்... இப்போவே எனக்கு முப்பதி இரண்டு வயசு ஆகிடுச்சு ஏற்கனவே நாலு வருஷம் ஒண்ணுமே இல்லாம போயிடுச்சு. என்னை ஏத்துகோயேன்...

எனக்கு உன்கூட குட்டி கூட எல்லாம் வாழணும்டி... அதான் எல்லாத்தையும் விட்டுட்டு உனக்காக இப்போ வந்துருக்கேனே... என்னை ஏன் இப்படி சித்திரவதை பண்ணுற...

உன்ன ஒரு ஒரு முறை பாக்கும்போதும் நீ என்ன எதிர்த்தாலும் சரின்னு அப்படியே... உன்னை யாருமில்லாத இடத்துக்கு தூக்கிட்டு போய்...” என்று அவன் இழுத்து நிறுத்தி விட சில நொடி இடைவெளி அவளின் காதுகள் சூடாக கீழ் உதடுகளை தன் போல் கடித்தவளின் கண்கள் மூடிக்கொள்ள,

அதற்குள் சமாளித்துக்கொண்டான் போலும் “உன் காலுல விழுந்தாச்சு உன்னை உஷார் பண்ணிடனும்னு தோணுது” என்று முடிக்க, நொடியில் அவன் பேச்சு மூளைக்கு சென்று சேர, இப்போது கைகளால் தலையில் லேசாய் அடித்துக்கொண்டாள். இந்த வம்பு பேச்சு எல்லாம் அவளிடம் மட்டும் தான் அவனுக்கு. மற்றவர்களிடம் எப்போதுமே ஒரு ஒதுக்கம் தான். இருந்தாலும், ‘ரொம்ப ஓவரா போறாரு’ என்ற நினைப்பை தடுக்க முடியவில்லை.

அவன் பேசுவதை யாரேனும் கேட்டால் கூட கண்டிப்பாக மது வஸ்துவை அருந்திவிட்டு உளறுவது போல் தான் நினைப்பார்கள். ஆனால், அவளுக்கு தெரியும். அவன் சுயநினைவோடு தான் அத்தனையும் பேசிக்கொண்டு இருக்கிறான் என்று.

எப்போதும் போல் பாதியிலேயே அவன் பேச்சை நிறுத்திவிடு. கைப்பேசியை அணைத்துவிடு என்று நிமிடத்திற்கு நிமிடம் அவள் மூளை அறிவுறுத்தினாலும், அவன் பேசி பேசி தன்னை மீறி உறக்கத்திற்கு செல்லும் வரை தன்னை பொறுத்தாள். ஆனால், அவனின் பேச்சுக்கள் எல்லை மீறும் நேரமெல்லாம் அவளின் கண்கள் தாமாக முடிக்கொண்டது. கீழுதடு பற்களுக்கு இடையே நெறிப்பட்டது. அவனை நித்திரை ஆக்கிரமிக்கும் வரை அவளுக்கு விடுதலை கிடைக்கவில்லை.

1672399357944.png
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
278
ஆரம்பம் மிகவும் அருமை ரைட்டரே...
யாவில் பெயர் ஆரம்பம் அழகு..
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
யாழன் - அழகான பெயர்
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
நின் மூச்சோடு குடியேறவா.......
நித்தம் உன் நினைவு
சித்தம் கலங்கி நிற்கிறேன்
பித்து பிடித்து அலைகிறேன
சுத்தமாய் முடியவில்லை.....
மன்னித்து ஏற்றுக் கொள்ளடி...
மனம் இறங்கி.....
💐💐💐💐👏👏👏👏👏👏💕💕💕
பிரிதலில் தொடங்கி
சேர்தலில் முடிவடையும் காதல்.....
வாழ்த்துகள் சகி 💐💐💐💐💐......
அருமையான ஆரம்பம்.....
மகளின் ஏக்கம்
மனைவியின் முறைப்புடன்......
 

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
873
நின் மூச்சோடு குடியேறவா.......
நித்தம் உன் நினைவு
சித்தம் கலங்கி நிற்கிறேன்
பித்து பிடித்து அலைகிறேன
சுத்தமாய் முடியவில்லை.....
மன்னித்து ஏற்றுக் கொள்ளடி...
மனம் இறங்கி.....
💐💐💐💐👏👏👏👏👏👏💕💕💕
பிரிதலில் தொடங்கி
சேர்தலில் முடிவடையும் காதல்.....
வாழ்த்துகள் சகி 💐💐💐💐💐......
அருமையான ஆரம்பம்.....
மகளின் ஏக்கம்
மனைவியின் முறைப்புடன்......
செம்ம
 
Top