• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நின் மூச்சோடு குடியேறவா.? - 02

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
858
அத்தியாயம் 02

“ஒன்னு, எதையும் தெரிஞ்சிக்காம, மனுஷங்களை எடை போட தெரியாம, எந்தவித முடிவும் முன்ன நின்னு எடுக்க தெரியாம இருக்கணும். இல்லையா, எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி ஒரு பாவனையோட இருந்தே எல்லாத்துல இருந்தும் தப்பிச்சிக்கணும். அப்படியே அவங்க முடிவை நிறைவேற்றனும்னா பழத்துல ஊசி எத்துற மாதிரி எத்த தெரிஞ்சிருக்கணும். முக்கியமா நம்ம முடிவை வெளில சொல்லி இப்படி தான் என் எண்ண போக்கு அப்படின்னு எல்லாம் சொல்லாம, நம்ம மனசுல நினைக்கிற முடிவை மத்தவங்க வாயாலயே சொல்ல வைக்கிற மாதிரி பேசவாது தெரியனும்.

அப்படி எல்லாம் இல்லாத, எல்லாம் தெரிஞ்சி வைச்சிக்கறதும், நேர்மையா, நேரடியா எல்லார்கிட்டயும் வலைஞ்சி நெளிஞ்சி போகாம வாழ்ந்தா இதான் நிலைமை. என்ன சொல்ல வரேன், என்ன ஏது எதையும் காது கொடுத்து கேட்குற நிதானமோ, முடிவெடுக்குற பக்குவமோ உங்க யாருக்கும் இல்லை.

உங்க எல்லாருக்கும் என்னை பத்தி ஏற்கனவே மனசுல பதிய வைச்சிட்டு இருக்க எண்ணங்கள் நிறைய இருக்கு. அதுக்கெல்லாம் என்னால பதில் கொடுத்து வாழ முடியாது.

இங்க இருக்க எதுவும் எனக்கு வேண்டாம். நீங்க யாரும் எனக்கு வேண்டாம். என்னை என்னால பாத்துக்க முடியும்னு தான் நினைக்கிறேன். அப்படியே முடியலை அப்படின்ற நேரம் வந்தாலும் கடவுள் என்னை உங்க யார்கிட்டயும் விட்டு வைக்காம சீக்கிரம் அவர்கிட்ட அழைச்சிக்கணும் மட்டும் தான் வேண்டிப்பேன்

போதும் இந்த போராட்டம் எல்லாம். என்னால முடியல. கூட வாழுறவங்களை சாடிஸ்பை பண்ணனும், கூடவே இருக்க குடும்பத்தை சாடிஸ்பை பண்ணனும், வாழுற சமூகத்தை சாடிஸ்பை பண்ணனும், வாழுற வாழ்க்கையை சந்தோசமா தான் வாழுறோம் அப்படின்னு நம்ம மனசையே சாடிஸ்பை பண்ணனும், இப்படி ஒன்னு ஒண்ணுத்துக்கும் நடிச்சிட்டே போற இந்த வாழ்க்கை எனக்கு மூச்சு முட்டுது.

நான் சொல்லுறதோ பேசுறதோ உங்க எல்லாருக்குமே தப்பா தான் தெரியும் என்னைக்கும். வேண்டாம் வேணும் அப்படின்னு சொன்னா கூட குத்தமா தான் தெரியும். உங்களுக்கு எல்லாம் என்ன பண்ணணுமோ பண்ணிக்கோங்க. என்னை விட்டுடுங்க.”

அப்படியே கையெடுத்து அனைவரையும் பார்த்து நமஸ்கரித்தவள், தன் உடமைகள் வைத்திருந்த பெட்டியில் மேலும் தேவையான அத்தியாவசிய பொருட்களை அப்படி அப்படியே போட்டு எடுத்துக்கொண்டு மற்றொரு கையில், பெற்ற ஐந்தே மாத குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியேறிவிட்டாள்.

யார் என்ன ஏது என்று யோசிக்குமுன்பே முடிவெடுத்து அவள் நொடியில் விலகிவிட்டாள். புகுந்த வீடு மட்டுமல்ல, பிறந்த வீடு கூட தேவையில்லை என்று தோன்றிய நொடி அது தான். என்றுமே அவளுக்கு என்று நிற்கும் துணைவனை, அவள் தேடும் அவளின் கணவனை கூட எதிர்பார்க்கவில்லை. அவளால் யாரையும் எதிர்க்கொள்ள முடியும், பேச முடியும், தன்னை அவர்களுடன் நிலைப்படுத்திக்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. யாரும் இல்லாத இடத்திற்கு சென்றுவிட்டால் போதும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்க கிளம்பிவிட்டாள்.

“இனிக்கிற மாதல் ஒன்றினை
என் சின்ன நெஞ்சின் மீது
இன்ப பாரம் ஏற்றி வைத்ததார்

முயல், மயில் குயில்கள் காணும்
வெண்ணிலா,
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலாவை கூட்டி வந்ததார்”


மென்மையான இசை பின்னணியில் ஓடிக்கொண்டு இருக்க, முற்பகல் பொழுதில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து அரட்டை அடித்தபடி பேசிக்கொண்டு இருந்த மக்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த யக்ஷிணியின் கவனம் கலைந்தது.

“ஒரு கிரிமி பெர்ரி பிளாஸ்ட் (creamy berry blast) அப்புறம் ஒரு சின்ஜி பர்கர் வித் எக்ஸ்ட்ரா லெட்சூஸ் (zingy burger with extra lettuce)” என்ற வாடிக்கையாளர் குரலில்.

ஒரு ஆணும் பெண்ணும் கை கோர்த்தபடி எதிரே நின்றுக்கொண்டு இருந்தனர். இரண்டு வகையான உணவுகள். சற்றும் ஒன்றுகொன்று சம்மதமில்லாது. வெவ்வேறு சுவை கொண்ட இருவர். மனம் அதன் பாட்டிற்கு எண்ண வரிகளில் அலைந்துக்கொண்டு இருந்தாலும், கவனுமும் கைவேலையும் அதன் வேலையை பார்த்தது.

பில் போட்டு பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களிடம் “ஹாவ் எ ஹாப்பி டே (Have a Happy Day)” என்று இன்முகத்துடன் கூறியவள், அவர்களின் ஆர்டர் எண்ணையும் கூறி அமருமாறு வழியனுப்பினாள்.

அவர்கள் நகர பக்கவாட்டில் இருந்து, “ஒரு பெரேரோ கோல்ட் ஸ்டோன்(Ferero Cold Stone)” என்ற மிகவும் பழக்கப்பட்ட குரல் கேட்க, கண்களை நொடியில் இறுக முடி திறந்தாள்.

யாழன் எதிரில் சின்ன சிரிப்போடு நின்றுக்கொண்டு இருக்க, அதன்பின் முகத்தில் எதையும் காட்டாது அவன் கேட்டதிற்கு பில் போட்டு கொடுக்க, “எனக்கு எல்லாம் விஷ் பண்ண மாட்டியா?” என்று அங்கேயே பேச்சை வளர்த்தபடி நின்றான்.

“ஹாவ் எ ஹாப்பி டே (Have a Happy Day)” முயன்று உதட்டை இழுத்து பிடித்து வாழ்த்தியவள், “உட்காருங்க. ஆர்டர் நம்பர் ஸ்க்ரீன்ல வந்ததும் போய் வாங்கிக்கோங்க” என்றாள் கூடவே இயந்திரகதியில்.

“நம்மளும் முதல இருந்து ஆரம்பிக்கலாமே... தெரிஞ்சிக்கலாம், புரிஞ்சிக்கலாம், ஷேர் பண்ணிக்கலாம்... அந்த மாதிரி” என்று கூறி கண் காட்ட, அங்கே சற்று முன் உணவு ஆர்டர் கொடுத்தவர்கள், இரண்டு வேறு உணவு பொருட்களையும் பாதி பாதியாக்கி பகிர்ந்து உண்டுக்கொண்டு இருந்தனர், சிரித்து பேசி மகிழ்ந்தபடி.

அவளின் பார்வை அங்கேயே வெறிக்க, “உணவை மட்டுமில்லை வாழ்க்கையை கூட” என்றான், மேலும்.

அதில் கலைந்தவள், “அவங்க ஒரு நாளைக்கு ஒரு சில மணி நேரங்கள் ஒண்ணா இருந்து, தேவையை மட்டும் ‘பகிர்ந்து’ அடுத்து பல வேலையை பாக்க போயிடுறவங்க. வாழ்க்கை முழுக்க ஒண்ணா இருந்தா இந்த ‘பகிர்தல்’ இருக்க இடத்துல ‘பகை’ தான் இருக்கும்” பட்டென பதில் கொடுத்தவள், “வழி விடுங்க, அடுத்து லைன் நகரணும்” என்றாள்.

அவனின் பின் இன்னும் இரண்டு மூன்று பேர் நின்றுக்கொண்டு இருக்க, அதற்கு மேல் பேச்சை வளர்க்காது நகர்ந்தான் அங்கிருந்து. அவன் முக்கியமாக பேச வந்த விஷயம் வேறு. ஆனால், தேவை இல்லாது நேரத்தில் தேவை இல்லாதது பேசி அவளை கடுப்பாக்கிவிட்டோம் என்பது புரிய அமைதியாக நகர்ந்துவிட்டான்.

வாங்கிய உணவோடு மேலேறிவிட்டவன், மீன் தொட்டிக்கு மிக அருகே போடபட்டிருந்த இருக்கையில், மீன்களை பார்த்தபடி அமர்ந்துவிட்டான். அவள் முன்பெல்லாம் மிக மிக ரசித்து உண்ணும் அந்த ஐஸ் கிரீமை, அவளின் ரசிப்பை எண்ணியபடியே அவனும் ருசிக்க, சிறிது நேரத்தில் அவன் எதிரில் அவளே வந்து அமர்ந்தாள்.

அவள் வந்து அமரவும், அதில் ஆச்சர்யமெல்லாம் படவில்லை அவன். அமைதியாக ஐஸ் க்ரீமை அவள் பக்கம் நகர்த்த, அதை கண் கண்டுக்கொன்டாலும், மனம் கண்டுக்கொள்ளவில்லை.

அதற்கு பதில் நேரடியாக, “சொல்லுங்க என்ன விஷயம்?” என்றாள்.

அவன் அமைதியாகவே இருக்க, ரெண்டு நிமிடம் பார்த்தவள், ஒரு வேக மூச்சோடு “விஷயமில்லாம, இந்த மாதிரி நேரத்துல இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்கமாட்டிங்கனு தெரியும். என்னனு சொன்ன, யோசிக்கலாம். அடுத்து என்னனு பார்க்கலாம். எனக்கும் வேலை இருக்கு. இப்படியே இருக்க முடியாது” என்றாள், மீண்டும்.

அவளின் பேச்சு புரிய, “அப்பா அம்மா வரேன்னு சொல்லிருக்காங்க” என்றான் அவனும் பட்டென விஷயத்தை கூறி.

“ஒ...” என்று யோசித்தவள், பின், “பின் என்னைக்கு அப்படின்னு சொல்லுங்க, வந்து பார்த்துட்டு போறேன். ரெண்டு நாள் யதுணா அங்க இருக்க மாதிரி வேணா பார்த்துக்கலாம்” அவள் அடுத்து என்னவென்று எப்போதும் போல் அடுத்தடுத்து திட்டமிட,

அவள் பேசுவது அனைத்தையும் அமைதியாய் கேட்டுக்கொண்டு இருந்தானே தவிர பதிலில்லை. அவனின் அமைதியில் அவளுக்கு குழப்பம் ஏற்ப்பட்டது. பெரியவர்கள் வருவது ஒன்றும் புதிதல்ல, இவர்கள் சென்று பார்ப்பதும் புதிதல்ல. சென்றாலும் பெரியதாக இல்லை, சிறியதாக கூட அவள் பேச்சுக்கள் வைத்துக்கொள்ள மாட்டாள். நடந்த அனைத்தும் மறந்துவிடுமா என்ன?

பிரச்சனை எந்த திசை நோக்கி எவ்வளவு தூரம் நீண்டு இருந்தாலும், அதற்கு ஆரம்ப புள்ளி, புகுந்த வீடு தானே? எப்படி மறந்து சகஜமாக இருந்துவிட முடியும்? அதுமட்டுமில்லாது, யாரோடும் ஒட்டுதல் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டு ஓரிருவரிடம் மட்டும் ஒட்டி உறவாட முடியாது என்ற எண்ணமும் அதிகமிருந்தது.

ஆனால், எல்லாம் அவள் வரை தான். யதுணாவிற்கு அவள் இந்த மாதிரி உறவுகளிடையே எந்தவித வரைமுறையும் இருக்காது. எல்லாம் பெண்ணின் விருப்பம் தான். அவளுக்கு பிடித்தால், பேசட்டும், பழகட்டும் என்பதே. அதற்காக பிடிக்கவில்லை என்றால் மரியாதையற்று நடப்பதற்கு எல்லாம் விடமாட்டாள். அவள் பெண்ணும் மிகவும் சமத்து.

“என்னாச்சு?” அவள் கேட்க,

வருவது தன் பெற்றோர்கள் அல்ல, அவள் பெற்றோர்கள் என்று எப்படி கூற என்று தெரியாமல் திணறியவன், மெதுவாக, “அப்பா அம்மா தான், என்னோட அப்பா அம்மா இல்ல... மாமாவும் மாமியும் வரேன்னு சொல்லிருக்காங்க” என்க, இப்போது அமைதியாவது அவள் முறையாயிற்று.

“ஏதோ ரெண்டு நாள் வேலையா வராங்களாம். இங்க நம்ம வீட்டில் தான் தங்குற மாதிரி வர சொல்லிருக்கேன்”

“...”

“உங்களை ரொம்ப எதிர் பார்ப்பாங்க”

“...”

“அவங்க பாவம். வயசான காலத்துல அவங்களை தண்டிச்சு என்ன பண்ண போற?”

“...”

“நடந்ததெல்லாம் விடு. அவங்களை கொஞ்சம் பாரு. இப்போ எவ்வளவு வீம்பும், கோவமும் இருந்தாலும் அப்புறம் வேளைனு வரும்போது முதலேயே எல்லாம் சரி பண்ணிக்காம போயிட்டோமே அப்படின்னு நீ தான் ரொம்ப கஷ்டபடுவ” அவளை தெரிந்தவனாக கூறினான்.

“...” அவனின் அவ்வளவு பேச்சுக்கும் அமைதியாக இருந்தவள், சற்று நேரம் கண்களை மூடி இருக்கையில் அப்படியே பின்பக்கம் சாய்ந்துவிட, அதன்பின் அவனும் அமைதி காத்தான்.

சற்று நேரத்தில் மீண்டும் தானே தெளிந்தவள், “அவங்க வரும்போது வந்து யதுணாவை கூட்டிட்டு போங்க” என்றாள்.

அவள் பிடியில் இருந்து சட்டேன்று இறங்கிவிட மாட்டாள். நேரம் எடுக்கும். நிறைய நேரம் எடுக்கும். பேசி பேசி தான் அவளை கரைக்க வேண்டும் என்று புரிந்தவன். கரைந்து போன ஐஸ் கிரீமை ஒரே மூச்சில் குடித்துவிட்டு கிளம்பினான்.

அவரவருக்கு ஒவ்வொரு நியாய அநியாயங்கள் இருந்தாலும், விதி என்ற ஒன்று இருக்கிறது. அது வைத்த சட்டம் தான் நடக்கும் என்று பல சமயங்களில் மறந்து போகிறது மனித மனம்.

அந்த வார இறுதியில் சொன்னது போல் யக்ஷிணியின் பெற்றோர்கள் வந்துவிட, யதுணாவை அழைத்து போக வந்த யாழன், எவ்வளவு பேசியும் யக்ஷிணி சமாதானம் ஆகவில்லை. வேறுவழியின்றி யதுணாவை மட்டும் அழைத்துக்கொண்டு கிளம்பினான் யாழன். இருவரும் செல்லும் வழியிலேயே ஒரு விபத்தில் மாட்டிக்கொண்டுவிட, அனைத்தும் மறந்து, ஊன் உயிர் அனைத்தும் துடிக்க பதறி தவித்தாள், யக்ஷிணி.
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
464
பெற்றவர்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை
புகுந்த வீட்டையும் சேர்த்துக் கொள்ளவில்லை
பிரிந்து இருந்து வாடும்
பாவைக்கு நடந்தது என்னவோ....
பாவம் அதற்குள் அடுத்த
பிரிவோ??யாருக்கு என்ன ஆச்சு பதறுகிறது மனம்....
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
Yakshinikku yar mela kopam
 
Top