• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நின் மூச்சோடு குடியேறவா.?- 05

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
883
அத்தியாயம் 05

வண்டியின் சாவியை கூட எடுக்காமல், கதவை கூட சாற்றாமல், அப்படியே விட்டுவிட்டு அந்த மருத்துவமனைக்குள் ஓடினாள். காரை சரியாக ஒதுக்கி நிறுத்திவிட்டு அர்ஜுன் பின் செல்வதற்குள், வரவேற்ப்பில் கேட்டு, அவளின் உயிர்கள் இருக்கும் ஒன்றாம் மாடிக்கு ஓடிக்கொண்டு இருந்தாள்.

“யக்ஷி நில்லு... நானும் வரேன்” என்றபடி அர்ஜுன் பின்னோடு ஓட,

“மேல... மேல வார்ட்ல...” என்றபடி அவள் படிகளில் ஏற,

ஒன்றாம் மாடி ஒரே நிமிடத்தில் வந்தது. அவர்கள் ஏறிய பக்கத்தின் மறு கோடியில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த யாழன் கண்ணில் சிக்கினான். அந்த இரவு நேரத்தில் பெரியதாக ஆட்கள் இல்லாது, அந்த பக்கம், அவன் அமர்ந்திருப்பது தெளிவாய் தெரிய, அவனை நோக்கி வேகமாக ஓடினாள்.

“யக்ஷிணி...” என்றபடி அவன் எழுந்துக்கொள்ள,

“என்னாச்சு? எங்க... யது... யதுணா எங்க?” விசாரிப்பு முழுவதும் பெண்ணை பற்றி மட்டுமே! ஆனால், அவன் கண் முன் நிற்க, அவனை தலை முதல் கால் வரை ஆராய்ந்தாள்.

அது அவனுக்கு புரியவில்லை. முகம் சுறுங்கி விட, “உள்ளே... உள்ள தான் இருக்கா. ஒண்ணுமில்...” என்று அவன் கூறிக்கொண்டு இருக்கும்போதே,

“நான் போய் பார்த்துட்டு வந்துடுறேன்” என்றபடி உள்ளே போக போக,

அதே நேரம் வெளியில் வந்த மருத்துவர், “குழந்தையோட அட்டென்டர் யாரு?” என்று கேட்க,

“நாங்க தான் டாக்டர் சொல்லுங்க” என்றாள்.

“ஒன்னும் பயமில்லை. விழுந்த அதிர்ச்சில அமைதியாகிட்டு இருக்கா. அதான் அழலை போல. ஆனா, அந்த அதிர்ச்சில அதிகமா காய்ச்சல் அடிக்கிது. மருந்து கொடுத்துருக்கோம். மார்னிங் பார்த்துட்டு மருந்தை வேணா மாத்தி பாக்கலாம்? இப்போ குழந்தை தூக்கத்துல இருக்கா, கலைக்க வேண்டாம்” என்றுவிட்டு அவர் விலகிவிட,

அங்கேயே இருந்த செவிலியரிடம், “நான் ஒருமுறை என் பெண்ணை பார்க்கணும்.” என்று கேட்க,

“இப்போ ஒரு பத்து நிமிஷம் டிஸ்டர்ப் பண்ணாம எல்லாரும் போய் பாருங்க, நைட் உள்ளே ஒரு ஆள் இருக்கலாம் மேடம். குழந்தையோட அப்பா அம்மா யாராவது ஒருத்தர் இருங்க.” என்றுவிட்டு அவரும் வெளியில் போட பட்டு இருந்த மேஜையில் அமர்ந்துக்கொண்டார்.

மூவரும் உள்ளே சென்று பார்க்க, யதுணா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ஆனால், உடல் சூட்டில் முகம் வதங்கி இருப்பது நன்கு தெரிந்தது. கண்களில் நீர் நிறைய அவளின் தலையை கோதிய யக்ஷிணி, யாழன் பார்க்கவும் வழி விட்டு ஒதுங்கி நின்றாள்.

அப்போதே அவனின் தோள் பட்டையை பார்த்தவள், “என்னாச்சு?” என்றபடி அவனின் தோளை தொட,

“ஸ்ஸ்...” என்றபடி தோளை சுருக்கி ஒதுங்கியவன்,

“ஒண்ணுமில்லை...” என்று முணுமுணுத்துவிட்டு வெளியில் வந்தான்.

“நீ பேபி கூட இரு அர்ஜூ...” என்றவள், யாழனின் பின்னோடு வெளியில் வந்தாள்.

“என்ன நடந்தது? அங்க நடந்த விபத்துல என்னாச்சு? உங்க கைல அடிபட்டு இருக்கு?”

“அங்க விபத்து நடக்குற அதே நொடி, நான் அங்க பக்கவாட்டுல தான் போயிட்டு இருந்தேன். அங்க வண்டிங்க மோதிக்க, நடுவுல சிக்கிக்க போறோம்ன்ற எண்ணத்துல அங்க இருந்த சந்துல நுழைய போய், ரோட் சரி இல்லாததால டவுன்ல வண்டி அப்படியே சாஞ்சிடுச்சு.

யது குட்டியை சேப் பண்ண அவளை பிடிச்சிட்டு விழுந்தேன். அங்க போட்டு வைச்சிருந்த கடப்பா கல்லுல தோள் இடிச்சிக்கிச்சு. ஒண்ணுமில்லை. அங்க இருந்தே பைக்ல வீட்டுக்கு போயிட்டு இருப்பேன்.
பேபி பேசவே இல்லை. அப்படியே நடுங்கிட்டு அமைதியா சுருண்டுட்டா. அதான் பயமா இருக்கவே இங்க கூட்டிட்டு வந்தேன்.”

“சரி வாங்க முதல உங்களுக்கும் பிரஸ்ட் ஏட் பண்ணிட்டு அப்படியே டாக்டர பார்க்கலாம்?”

“வேண்டாம் சின்ன அடியா தான் இருக்கும். சரி ஆகிடும்” என்றாலும், வண்டியை ஓட்ட கூட முடியாது தான் ஸரமபட்டது நினைவில் ஆடியது.

“அதெல்லாம் அவங்க பார்த்துட்டு சொல்லுவாங்க. நீங்க வாங்க” என்று நகராது நின்றவளை பார்த்ததும், முன்பு சுணங்கிய மனம் இப்போது சற்று மட்டுப்பட்டது.

அதன்பின் அவளோடு சென்று செவிலியரிடம் சொல்ல, அருகே இருந்த ஒரு அறையில் இருக்க சொன்னவர், முதலுதவி பெட்டியுடன் உள்ளே வந்தார்.

“சட்டையை கழட்டுங்க சார்” என்க, கையை தூக்கவே முடியாது முகம் சுளித்தவனை கண்டு அவனுக்கு உதவி செய்தவள், அங்கே இருந்த அடியை கண்டு வாயை பொத்தி பின் நகர்ந்தாள்.

கல்லில் முனை ஆழமாக குத்தி இருக்கும் போல, சதை கிழிந்து சுற்றிலும் ரணம் கட்டி, தோள் பட்டை நன்கு வீங்கி போய் இருந்தது. அந்த கையில்லா பனியனை ஒதுக்க, முதுகிலும் சிராய்ப்புகள்.

“என்ன சார் இப்படி அடிபட்டு இருக்கு? குழந்தையோட வந்தப்போவே நீங்களும் பார்த்துட்டு இருக்க கூடாதா?” அந்த செவிலியர் அதட்டியபடி முதலுதவி செய்தவர்,

“காயம் ஆழமா தான் இருக்கு, நீங்க இப்படியே கொஞ்ச நேரம் ஒரு பக்கமா திரும்பி படுங்க, நான் போய் டாக்டர் கிட்ட சொல்லி கூட்டிட்டு வரேன்” என்று நகர்ந்தார்.

“இப்படியே எப்படி உட்கார்ந்துட்டு இருந்திங்க? நான் வந்தப்போ கேட்டேன் தானே? இந்த மாதிரி அழுத்தமா இருக்காதிங்கனு சொன்னா கேட்க முடியாதுல? இப்படி இருந்து இருந்து தானே பாதி பிரச்சனை” என்று கத்திவிட்டாள்.
பேசிய பிறகே தவறை உணர்ந்தவள், அவன் முகம் பார்க்க, கண்களை மூடி இறுகி போய் படுத்துவிட்டான் அவன். இருந்த மன உளைச்சலில் என்ன பேசுகிறோம் என்றே உணராது பேசிவிட்டது புரிந்தது.

“சாரி... நான்...” என்று ஆரம்பிக்கவும், மருத்துவர் உள்ளே வரவும் சரியாக இருக்க,

உள்ளே வந்ததும் அவர், “நீங்க கொஞ்சம் வெளியே இருங்க” என்றார்.

அவர் காயத்தை ஆராய்ந்து, “தையல் போட வேண்டி இருக்கும் சார்” என்று கூறியபடி அங்கே சுத்தம் செய்து இரண்டு தையல் போட்டு, கட்டுபோட்டு, மருந்தை செலுத்தி, செவிலியரிடம் மருந்துக்களை கூறி, எடுத்து கொடுக்குமாறு சொல்லும் வரை கூட, அசையாது அமைதியாய் இருந்தான்.
அவர்கள் கொடுத்த மருந்தை விழுங்கியவன், “கொஞ்சம் டிரொவ்சியா இருக்கு” என்றவனை பார்த்து,

“இன்னைக்கு நைட் இங்கே தான் ரெஸ்ட் எடுக்கணும் சார். உங்க மகள் இருக்கும் அறையிலேயே பெட் அரேன்ஜ் பண்ண சொல்லுறேன்” என்றுவிட்டு மருத்துவர் வெளியிலே சென்றுவிட,

அதுவரை வெளியில் காத்து நின்ற யக்ஷிணி, “என்னாச்சு?” என்றபடி உள்ளே வர, மருத்துவர் கூறி சென்ற விஷயங்களை சொன்னவன், மீண்டும் அமைதியாய் அதே கட்டிலில் படுத்துக்கொள்ள, சிறிது நேரம் பார்த்து நின்றவள், அவன் உறங்குவது போல் தெரிய, சத்தம் செய்யாது பெண் இருக்கும் அறைக்கு சென்றாள். அவள் வெளியே சென்றதும் கண் விழித்தவனின் கண்களில் வெறுமை!

சிறிது நேரத்திலேயே அவனை யதுணா இருக்கும் அறைக்கே சென்று இருக்குமாறு பணிந்த செவிலியர், யதுணாவை ஒருமுறை பரிசோதித்துவிட்டு சென்றார்.

அர்ஜுனை கண்ட யாழன், “யக்ஷிணியோட அப்பா அம்மா நாளைக்கு xxxxxxxx பஸ்ல வராங்க. கொஞ்சம் போய் பிக்ஆப் பண்ணிட்டு என் வீட்டில் விட்டுட முடியுமா?” என்று கேட்க,

தன் பெற்றோரை அழைத்து செல்ல அவன் கேட்டுக்கொண்டு இருப்பது ஒரு மாதிரி இருந்தாலும், பல்லை கடித்து அமைதியாக இருந்தாள்.

“ஓகே சார்” என்ற அர்ஜூன், “நான் வெளிய இருக்கேன். ஏதாவது தேவைனா கூப்பிடு யக்ஷி” என்றுவிட்டு அவன் வெளியில் சென்றான்.

மணி அப்போதே ஜாமத்தை கடந்து இரண்டு மணியை தாண்டிக்கொண்டு இருக்க, ஒரு பக்கம் கணவன், ஒரு பக்கம் குழந்தை என இருவரும் உடல் நிலை சரி இல்லாது படுத்து இருப்பதை பார்த்தபடி, அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டு இருந்தவள், அப்படியே உறங்கியும் போனாள்.

அதன்பின் மீண்டும் நான்கு மணி போல் எழுந்து, யதுணாவிற்கு தர வேண்டிய மருந்தை புகட்டிவிட்டு, யாழனையும் ஒருமுறை பார்த்துவிட்டு மகளில் படுக்கையிலேயே தலையை சரித்து படுத்தவள், மீண்டும் உறங்கி போக,

“யாரை தான் நிம்மதியா விட போற, இப்படி கட்டின புருஷன், பெத்த பிள்ளை ரெண்டு பேரையும் தவிக்க விட்டு என்னத்த சாதிக்க போறாளோ...” அந்த அறையெங்கும் ஒலிக்கும்படி முணுமுணுத்துக்கொண்டு இருந்த குரலில், பட்டென விழி திறந்தவள்,

அங்கே சிடுசிடுப்பான முகத்துடன் இருந்த தன் அன்னையையும், யதுவின் அருகில் அமைதியாய் அமர்ந்திருந்த தன் தந்தையையும் பார்த்தவள், நன்கு விழித்துவிட,

யாழனும் யதுணாவும் மருந்தின் வீரியத்தால் இன்னும் தூங்கிக்கொண்டு இருப்பது தெரிந்தது. மணியை பார்க்க அது காலை ஆறு என்று காட்ட, அப்போது தான் அவர்கள் வந்திருப்பது புரிந்தது. எப்போதும் போல் என்ன ஏது என்று எதையும் கேட்காது, புரிந்துக்கொள்ளாது வார்த்தைகளை விட ஆரம்பித்த தன் தாயை அமைதியாக பார்த்தவள், எதுவுமே பேசவில்லை.

அதன் பிறகு அங்கு இருக்கும் வரை, அவளிடம் மௌனம் மட்டுமே!
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,988
சில அம்மாக்கள் என்னன்னு தெரியாம புரியாமயே இஷ்டத்துக்கு பேசுவாங்க 🙄🙄🙄🙄🙄🙄
 
Top