• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நின் மூச்சோடு குடியேறவா.? - 06

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
அத்தியாயம் 06

உள்ளே வந்த அர்ஜூன், நிலைமையை நொடியில் கண்டுக்கொண்டான். “யக்ஷி...” என்று ஆரம்பித்தவன், அவளின் வெற்று பார்வையில் அமைதியாகி போக,

அதற்குள்ளே இவர்களின் குரல் கேட்டு விழித்த யாழன், மெதுவாக கண்களை திறக்க, எதிரே தன் மாமியார் மற்றும் மாமனார் அமர்ந்திருப்பதை உணர்ந்து எழுந்துக்கொள்ளும் எண்ணத்தில், அடிபட்ட கையையே ஊன்றி விட, சட்டென முகத்தை சுளித்தான்.

“என்ன என்னாச்சு மாப்பிள்ளை? பார்த்து பார்த்து” மீனாட்சியம்மா பதற, சிதம்பரம் அருகில் சென்று அவனுக்கு உதவ ஆரம்பித்தார்.

அவள் அருகில் செல்ல முடியாது அவர்கள் இருவரும் அவனின் முன் நிற்க, அமைதியாக பார்த்து மட்டும் நின்றாள்.

“என்னாச்சு? இப்படியெல்லாம் ஆகணும் தனியா கிடந்து கஷ்டப்படணும் அப்படின்னு உங்களுக்கு தலை எழுத்தா என்ன? எல்லாம் நாங்க வாங்கி வந்த வரம் அப்படி” என்று அவர் மீண்டும் ஆரம்பிக்க,

மகளை ஒரு பார்வை பார்த்தாள், யக்ஷிணி. அவள் உறங்குவதை கண்டு, அருகில் சென்று தலையை அழுத்தமாக கோதியவள், யாழனையும் நேர் கண்ணோடு ஒருமுறை சந்தித்துவிட்டு வெளியே வந்தாள்.

அங்கே அர்ஜுன் அவர்களுக்கு உணவு பொருட்கள் வாங்கி வந்திருப்பதை பார்த்தவள், “நான் வீடு வரைக்கும் போயிட்டு வந்துடுறேன். நீ இங்க பார்த்துக்கோ” தகவலாக கூறியவள், மேலும் ஒரு நொடி நின்று, “குழந்தைக்கு ஹோட்டல் சாப்பாடு வேண்டாம். நான் எடுத்துட்டு வரேன், அவருக்கும் தான்!” என்றுவிட்டு வேகமாக வெளியே கிளம்ப,

ஒரு புன்முறுவல் பூத்தது அர்ஜுணிற்கு. ‘யக்ஷி யக்ஷி தான்...’ என்று நினைத்துக்கொண்டு உள்ளே போனான். அங்கே இருக்கும் நிலைமையை கண்டவன், முழித்து நின்றான். ஆனால், சட்டென சுதாரித்து,
“எழுந்துட்டிங்களா அண்ணா? இருங்க வரேன்” என்றபடி யாழன் அருகில் சென்று அவனுக்கு உதவியபடி,

“அந்த கவர்ல உங்களுக்கு காப்பி, டிபன் இருக்கு. நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க ஆன்டி, அப்போ தானே யது முழிச்சா சரியா இருக்கும்” அவர்களுக்கும் தக்கவாறு பேசிவிட்டு, யாழன் காலை கடமைகளை முடிக்க உதவி செய்து வெளியே வந்தான்.

இவர்கள் உண்டு முடிக்கவும், யாழன் வெளியே வரவும் சரியாக இருக்க, மீனாக்ஷி அவனுக்கும் வாங்கி வந்திருந்த பாலை அருந்த கொடுத்தவர், யதுவை பார்க்க சென்றார்.

“உங்களை... நீங்க வீட்டுக்கே போயிருக்கலாமே? தேவை இல்லாத ஸ்ரமம் வந்ததும் வராத” மெதுவாக யாழன் கூற,

“அட இதிலென்ன ஸ்ரமம்? நீங்க ரெண்டு பேரும் இங்க கஷ்டப்பட நாங்க அங்க எப்படி சும்மா உட்கார்ந்துட்டு இருக்க முடியும். இந்த பொண்ணு கொஞ்சம் ஒன்னுமண்ணா அனுசரிச்சு போனா பரவாயில்லை.” அவர் பேசியபடி அப்போது தான் யக்ஷிணி இல்லாததை கவனித்தார்.

உடனே, “பாருங்க இப்போ கூட சொல்லாம கொள்ளாம எங்க போனா தெரியல” என்றார் அதற்கும்.

அர்ஜுனும் யாழனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அர்ஜுன் கண்களை அழுத்தமாக மூடி திறக்க, அதில் நிம்மதியாக உணர்ந்த யாழன், “எனக்கு கொஞ்ச நேரம் படுத்துக்குறேன்” என்றவன், படுத்து கண்களை மூடிக்கொள்ள, பெரியவர்கள் மேலே பேச முடியாது அமைதியாகிவிட்டனர்.

அவன் விழிக்கும்போது யதுணா விழித்து யக்ஷிணியின் மடியில் இருந்தாள். வெந்நீரில் முகம் உடல் துடைத்து, மருத்துவமனை உடையை கழட்டி, யதுவின் உடையை போட்டு விட்டுக்கொண்டு இருந்தாள். அவளின் பக்கத்தில் பெரிய கூடை ஒன்று இருக்க, அதில் மேலும் சில துணிகள் மற்றும் சாப்பாட்டு அடுக்கு இருப்பது தெரிந்தது. எழுந்து அமர்ந்துக்கொண்டு அவர்களை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

பொறுமையாக யதுவை கவனித்து முடித்தவள், யதுவை மீண்டும் படுக்கையில் அமர வைத்து எழுந்து கூடையை கலைத்து, அடுக்கை வெளியே எடுத்தாள். உடன் எடுத்து வந்திருந்த இரண்டு தட்டில் ஒன்றை எடுத்து அர்ஜுன் கையில் கொடுத்தவள், மற்றொன்றை அவன் இருக்கும் படுக்கையில் வைத்தாள்.

கீழே வைத்த தட்டில் இரண்டு இட்லியை வைத்து தெளிவான ரசம் மற்றும் நாட்டு சக்கரையை போட்டவள், அர்ஜுன் கையில் இருந்த தட்டில் நான்கு இட்லியும் சாம்பாரும் விட்டவள், யாழனின் புறம் கண் காட்டிவிட்டு கீழே வைத்த தட்டை கையில் எடுத்து நன்கு பிசைய ஆரம்பித்தாள்.

‘இவளா கொடுத்தா குறைந்து போயிடுவாளா’ என்று நினைத்தவன், ‘ம்ம்.. அத்தை பேசின பேச்சுக்கு திரும்பி கூட பார்க்க மாட்டான்னு நினைத்தேன், பரவாயில்லை நமக்கும் எடுத்துட்டு வந்துருக்காளே’ என்றும் நினைத்தபடி உண்ண ஆரம்பித்தான். காரம் கம்மியாக அவனுக்கு பிடித்த வகையில் செய்து எடுத்து வந்திருக்கிறாள் என்று புரிந்தது.

“இத்தனை செய்யுறவ கூடவே இருந்து பார்க்க வேண்டியது தானே, தனி தனியா இருக்கவே தானே இந்த மாதிரி சங்கடம் கஷ்டம்லாம்” மீனாக்ஷி கணவனிடம் முணுமுணுத்துக்கொண்டு இருக்க, எல்லாம் காதில் விழுந்தாலும் அமைதியாக பெண்ணை மட்டுமே கவனித்துக்கொண்டாள்.

யதுணாவும் அமைதியாக உண்டாலும் எதுவும் பேசாமல் இருக்க, அதில் கவனம் பதிந்த போதும் எதையும் காண்பித்துக்கொள்ளாமல் ஊட்டி முடித்து வாயை துடைத்து, சற்று முன் செவிலியர் கொடுத்து சென்ற மருந்தை புகட்டினாள்.

மருத்துவர் வர இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. மகளுக்கு கொடுத்த தட்டிலேயே தானும் இரண்டு இட்லியை போட்டு உண்டவள், அமைதியாக மகள் பக்கத்திலேயே அமர்ந்துக்கொண்டாள்.

காலை நேர பார்வையாளர் நேரம் முடியவே, உள்ளே வந்த செவிலியர், “டாக்டர் வர நேரம் ஆச்சு. பார்வையாளர் நேரமும் முடிய போகுது, யாராவது ரெண்டு பேர் மட்டும் உள்ளே இருங்க, மீதி பேர் வெளிய வாங்க” என்றுவிட்டு போக,

அசையாமல் அமர்ந்துக்கொண்டு இருந்தவளை ஒரு பார்வை பார்த்த பெற்றவர்கள், சற்று மனம் அசுவாஸ்யாம் கொள்ள எழுந்து தாங்களே வெளியே சென்றனர்.

அமர்ந்துக்கொண்டு இருந்த இருவரின் முகங்களிலும் வேண்டுதல் இருப்பது புரிய, அர்ஜுன் அவர்களுடன் தான் துணையாக நின்றுக்கொண்டு இருந்தான்.

சற்று நேரத்தில் மருத்துவர் வந்தவர், இருவரையும் அடுத்தடுத்து பரிசோதித்து விட்டு,

“மிஸ்டர்.யாழன் ரைட், நீங்க மதியம் இன்னொரு செக் ஆப் முடிந்ததும் டிஸ்சார்ஜ் ஆகிடலாம்.” என்றவர்,

யதுணாவிடம் பேச்சு கொடுக்க அவளிடம் அமைதியே. ஆனால், சற்று பயந்த கண்களோடு தாயிடம் ஒன்ற, அதில் திருப்தியுற்றவர், “குழந்தை ஓகே தான், உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், வெளியே வாங்க” என்று யக்ஷிணியிடம் கூறிவிட்டு வெளியே சென்றார்.

அவரின் பின்னோடு சென்ற யக்ஷி, “என்னாச்சு டாக்டர்?” என்று கேட்க,

“யதுணாவிற்கு உடல எதுவும் பிரச்சனை இல்லை. காய்ச்சலும் சுத்தமா விட்டுடுச்சு. ஷி இஸ் பிசிகலி ஆல்ரைட். (She is physically alright) ஆனா, குழந்தைக்கு ஏற்ப்பட்ட அதிர்ச்சில எந்த உணர்வும் பிரதிபலிக்காம இருக்கா அதே சமயம் உணராம, உணர்வுகளை வெளிப்படுத்தாம இல்லை. வாய் மொழியா எதுவும் சொல்ல மாட்டேன்ங்கறா. சோ, கொஞ்சம் விடாம பேச்சு கொடுங்க. மதியம் குழந்தையையும் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். இன்னும் ஒரு வாரம் பாருங்க, அப்பவும் இதே போல இருந்தா, சைல்ட் ஸ்பெஷாலிஸ்ட் பார்க்கலாம். அவகிட்ட இயல்பாவே இருங்க, ஸ்கூல் போறாங்கனா, ஸ்கூல் அனுப்பி விடுங்க. நத்திங் டு வரி, சரி ஆகிடுவாங்க” நீளமாக பேசிவிட்டு சென்றார்.

அவர் கூறியதை அனைத்தையும் அசைப்போட்டபடி தங்களையே கவனித்துக்கொண்டு இருந்த பெற்றவர்களை பார்த்தாலும், ஒரு நொடி நின்றாலும், மேலும் எதுவும் பேசாது, உள்ளே சென்றுவிட்டாள்.

“என்னாச்சாம்? ஒண்ணுமே சொல்லாம போறா? அர்ஜுன் தம்பி என்ன விஷயம்?” சிதம்பரம் கேட்க,

“தெரியலை ப்பா, கேக்குறேன்” என்றபடி அர்ஜுன் உள்ளே செல்ல கேட்க,

“சார் இப்போ தானே வெளியே வந்திங்க, டாக்டர் பார்த்தா திட்டுவாரு சார். ப்ளீஸ் கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணுங்க” செவிலியர் சற்று அதட்டலாகவே கூறினார்.

“உள்ளே விடலை, லன்ஜ் டைம் வரை வெயிட் பண்ணனும்.” என்றான்.

கைப்பேசியில் அழைத்து கேட்கலாம் என்றாலும், எப்போதோ அவர்களுக்கு கிடைக்கும் தனிமையை கெடுக்க மனமில்லாது அந்த யோசனையை மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டான்.

உள்ளே,

யதுணா மருந்தின் தாக்கத்திலும், உடல் அசதியிலும், மீண்டும் உறங்கி போக, அவளை சரியாக படுக்க வைத்து, இரு பக்கமும் தடுப்பை ஏற்றி விட்டவள்,

சீராவிற்கு அழைத்து, தங்கள் நிலையையும், அர்ஜுனும் துணைக்கு இருப்பதை கூறியவள், இன்று செய்ய வேண்டிய வேலைகளை கூறி, கடையையும் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, தான் முடிந்தால் மாலை வருவதாக கூறி கைபேசியை அணைக்க,

அவள் பேசுவதையே கண் எடுக்காது பார்த்துக்கொண்டு இருந்தான் யாழன்.

அவன் பார்ப்பதை உணர்ந்து என்னவென்று கண்களாலேயே கேட்டு, புருவத்தை தூக்கி, சுருக்க,

“வலிக்குது” மெதுவாக முணுமுணுத்தான்.

“மருந்து? மருந்து போட்டிங்களா? நர்ஸ் கிட்ட கேக்கவா?”

அன்று அப்போது தான் வாயை திறந்தவள், அவனிடம் சற்று, கொஞ்சமே கொஞ்சம், யதுணா கொஞ்சமே கொஞ்சம் என்னும்போது, கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலை ஒன்றாக வைத்து காட்டும், அந்த கொஞ்சமே கொஞ்ச கரிசன குரலில் கேட்க, அதில் தைரியம் வர பெற்றவனாக,

“ம்ம்... இங்கே ஒரு ஊசி போட்டு தடவி கொடுத்தா சரியா போயிடும் நினைக்கிறேன்” அடிபட்ட தோளை காட்டியவன், அவளின் உதடுகளிலேயே பார்வையை நிலைக்க விட,

தங்கள் இனிமை பொழுதுகளில், அவனின் தோள் பட்டையில் லேசாக கடித்து உதடுகளாலேயே அழுத்தமாக துடைத்து, அவனுக்கு குறுகுறுப்பூட்டி சிரிக்கும் பழக்கம் தேவையின்றி அவளின் மனகண்ணில் வந்து போக,

அவளுக்கு புரிந்துவிட்டதை உணர்ந்தவன், கண்களால் சிரித்து, மேலும் அவளை ஆழ்ந்து நோக்கி, உசுப்பேற்ற, அதில் ஒரு நிமிடம் திகைத்து முழித்தவள், நொடியில் மனதை கட்டுப்படுத்தி அவனை முறைத்துவிட்டு, ‘போடா’ என்று வாயசைவில் கூறிவிட்டு தன் கைப்பேசியை கண்களால் துழாவினாள்.

அவளின் வாயசைவை உணர்ந்தவன், கண்கள் மின்ன அவளையே பார்க்க,

எங்கே அவனை பார்த்தாள், மீண்டும் வம்பிழுப்பானோ என்று தோன்ற, அவன் இருக்கும் திசை பக்கம் கூட பார்க்காது, கைப்பேசியை எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டாள்.
 

Tamil elakkiyam

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 1, 2022
Messages
9
Vathani sister yen thalir poda late panringa pls thalir podunga.,.
 
Top