• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நின் மூச்சோடு குடியேறவா.? - 08

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
858
அத்தியாயம் 08

வீட்டின் அமைதி அவளுக்கு ஆச்சர்யத்தை தான் கொடுத்தது. அவளுக்கு என்ன தெரியும் யாழன் தனக்காக பேசியதும், அதை புரிந்துக்கொண்ட பெரியவர்கள் அமைதி காப்பதும்?

யதுணா தானாகவே இறங்கி நடந்து வந்தவள், கதவை திறந்ததும் உள்ளே ஓடிவிட, சுற்றும் முற்றும் பார்த்தபடி நுழைந்தவள், முகப்பறையில் யாரையும் காணாது, பையை அதன் இடத்தில் வைத்தபடி, சமையலறையை எட்டி பார்த்தாள்.

அவளின் தாய் பாலை காய்ச்சிக்கொண்டு இருப்பது புரிந்தது. அவள் இருக்கும் ஒற்றை படுக்கையறை வீட்டில், அந்த படுக்கையறையை எட்டி பார்க்க, அங்கே கட்டிலில் யாழன் படுத்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. வந்ததும் யதுணா சென்று யாழனிடம் அமர்ந்துவிட்டு இருந்தாள்.

முகப்பறையின் ஒரு பக்கம் பெரியவர்களுக்கு படுக்கை போட்டு நடராஜன் அமர்ந்து அவர் கைப்பேசியில் ஏதோ பார்த்துக்கொண்டு இருக்க, ‘இது வேறா’ என்று தோன்றியது.

ஆண்கள் இருவருக்கும் பாலை எடுத்துக்கொண்டு வந்த மீனாக்ஷி, ‘இந்த நேரத்துக்கு வந்தா எப்போ சாப்பிட்டு எப்போ படுக்கைக்கு போறது’ என்று நினைத்தாலும் கணவனின் உபதேசத்தால் அமைதி காத்தவர்,

“யது குட்டி வாங்க, சாப்பிடலாம்” என்று அழைக்க, வெளியே வந்த குழந்தை தாயின் முகத்தை தான் பார்த்தது.

அதை கவனிக்காத மீனாக்ஷி, இரு தட்டுகளை வைத்து, ஒன்றில் இரண்டு தோசையும் கார சட்னியையும் வைத்தவர், மற்றொரு தட்டில் இன்னும் ஒரு தோசையை வைக்க,

“நானே ஊட்டுறேன்...” என்று முணுமுணுத்தபடி தட்டை இழுத்த யக்ஷிணி, “யதுணா ஒரே ஒரு குட்டி குட்டி தோசை மட்டும் சாப்பிடுவியாம்... அப்புறம் டார்லி முகம் அலம்பி ட்ரெஸ் மாத்திட்டா படுத்துக்கலாமாம்?” என்று கொஞ்சியபடி மகளுக்கு முதலில் ஊட்ட,

ஒன்றும் கூறாது தனக்கும் பாலை கலந்துக்கொண்டு வந்து ஒரு பக்கம் அமர்ந்தார், மீனாக்ஷி.

தந்தை இன்னும் கிளம்பாததை உணர்ந்து, பாட்டியும் தாத்தாவும் அங்கேயே இருப்பதை கண்டு சற்று உற்சாகமாகி போன யதுணா, “அம்மா..” என்று கேட்டு வாங்கி உண்டு, சீக்கிரம் சாப்பிட்டு விட, அதில் ஆச்சர்யமுற்றவள், தானும் உண்டு எழுந்தாள்.

அதன்பின் அவளிற்கு முகம் அலம்பி, பல் விளக்க வைத்தவள், இரவில் போடும் மெல்லிய உடையை அணிவித்து, படுக்கையில் விட, உருண்டு சென்று தந்தையின் அருகில் படுத்துக்கொண்டாள், யதுணா.

பூனைக்குட்டியாய் தன்னை உரசிய மகளை கொஞ்சியபடி யாழனும் அவளோடு ஒன்றிவிட, அதனை இரண்டு நிமிடம் நின்று பார்த்த யக்ஷி, வெளியே செல்ல,

“பால் எடுத்துக்கோ” என்ற மீனாக்ஷியின் குரலில், ‘வேண்டாம்’ என்று கூறினால் அதற்கும் திட்டுவார் என்று எண்ணியபடி பிடிக்காத பாலை கண்ணை மூடி தண்ணீரை போல் விழுங்கியவள், சமையலறை சென்றாள்.

அங்கே பாத்திரம் மொத்தம் அலம்பி வைத்து மேடையும் சுத்தம் செய்திருப்பதை கண்டவள், ‘ஏன் இப்படி கஷ்டபடுறாங்க... நான் வந்து செய்துருக்க போறேன்’ என்று எண்ணியபடி, மீதி இருந்த பால் பாத்திரங்களை அலம்பிவிட்டு, வெளியே வந்து அந்த இரட்டை இருக்கை சோபாவில் ஒரு பக்கமாக அமர்ந்தாள்.

இது அவளின் பழக்கம். தாய் வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, அனைவரும் சென்று படுக்கையில் படுக்கும் வரை, அவர்களுக்கு துணையாக அமர்ந்திருப்பவள், ஒருமுறை அவர்களின் தேவையை கண்களாலேயே சரி பார்த்துவிட்டு தான் தானும் படுக்க செல்வாள்.

இப்போதும் தாய் இன்னும் படுக்க செல்லாமல் இருக்க, அவருக்காக அமர்ந்திருந்தவள், தன் ஐபேடில் எப்போதும் போல் உலகிலுள்ள மிக சுவாரஸ்யமான, சுவையான உணவு வகைகளை பார்த்துக்கொண்டு இருக்க,

“நீ போய் படு, நான் கொஞ்ச நேரம் காலுக்கு எண்ணை தடவி உட்கார்ந்துட்டு இருந்துட்டு படுக்க போறேன்” அவரே முன் வந்து கூற,

“பரவாயில்லை... எனக்கும் ஒன்னும் தூக்கம் வரல”

“பைத்தியம் இவ்வளவு நாள் கழிச்சு மாப்பிள்ளையோட ஒண்ணா இருக்க போறா, நேரம் ஆகுதேன்னு இல்ல வெளில உட்கார்ந்துட்டு இருக்கா” முணுமுணுவென அவர் இயல்பு படி முணுமுணுத்தவர், பட்டென படுக்கையில் சென்று கணவரின் அருகில் அமர்ந்துக்கொள்ள,

அவரின் முணுமுணுப்புகள் காதில் விழுந்தாலும், முன்பு போல் எல்லாம் பதில் பேசாது, அமைதி காத்தவள், தானும் எழுந்து உள்ளே சென்றாள்.

அவள் சென்று பார்த்தது, யாழனின் அடிபடாத கை பக்கம் தலையை புதைத்து தூங்கிக்கொண்டு இருந்த யதுணாவையும், அவளின் தலை கோதிக்கொண்டு இருந்த யாழனையும் தான்.

“எதுக்கு மேலேயே படுக்க வைச்சிட்டு இருக்கீங்க? கை வலி சரியாக வேண்டாமா?” சற்று அதட்டலாக தான் கேட்க முயன்றாள். ஆனால் அவள் குரல் ஒத்துழைக்காது மெலியதாக வெளியே வர,

அவளின் குரல் ஒலித்த விதத்தில் நிமர்ந்து அவன் முகம் பார்த்தான். ஏதோ ஒரு படபடப்பு, ஒரு சங்கடம், ஒரு தவிப்பு அவள் முகத்தில் தெரிய, அவளையே ஆழ்ந்து பார்த்தான். பேசிக்கொண்டே குழந்தையை தூக்கி பக்கத்தில் படுக்க வைத்தவள், அங்கிருந்த அலமாரியை திறந்து தன் உடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

வெளியே வரும்போது, அவளின் இரவு உடையான பேன்ட் சட்டை போன்ற ஒரு உடையில் வந்தவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அது ஒரு இளம்சிவப்பு நிற உடை. அதில் சிறிது சிறிதாக உடல் முழுவதும் டாம் அண்ட் ஜெரி படங்கள் போட்டிருக்க, அவனுக்கு சிரிப்பு வரும் போல் இருந்தது.

‘இன்னும் அப்படியே இருக்கா’ என்று எண்ணினான். ஒரு பெருமூச்சும் கூடவே கிளம்பியது. ‘மனசும் அப்படியே இருக்கு... அதே ரணத்தோட போல... அதான் இன்னும் மாறாம இருக்கா.’ என்று நினைத்தவன், அவளையே பார்த்துக்கொண்டு இருக்க,

“மாத்திரை எல்லாம் போட்டிங்களா?” என்றாள்.

“...” தலையை மட்டும் மேலும் கீழுமாக ஆட்ட,

“சரி குட் நைட்...” என்றுவிட்டு அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள். மறைத்து படுத்தது அவள் முகத்தை மட்டும் அல்ல அகக்கத்தையும் தான்.

வெகு வருடங்களுக்கு பிறகான தனிமை. ‘அவன் ஏதாவது கேட்டால் என்ன சொல்ல’ என்ற எண்ணங்கள் மேலோங்கி இருந்தது உண்மை.

அவனுக்கும் அது புரிந்திருக்கவே, ஒன்றும் பேசாது அமைதி காத்தான். அப்படியே தூங்கியும் போனான். உடல் அசதியும் மருந்தின் வீரியமும் அவனை நித்திரை கொள்ள அழைத்தது என்றால், அவளோடு ஒன்றாக இருப்பது நிம்மதியை கொடுத்து நித்திரையில் மூழ்க வழியமைத்து கொடுத்தது.

இரண்டு நாட்கள் இப்படியே செல்ல, இடையில் பெரியவர்கள் இருவரும் அவர்கள் வந்த வேலையை கவனிக்க வெளியே சென்று வந்தனர்.

மூன்றாம் நாள் காலை அனைவரும் ஒன்றாக உணவுண்டுக்கொண்டு இருந்தனர். இப்போது யதுணாவும் சற்று இயல்பாகி இருக்கவே, அந்த சின்ன சிட்டின் குரல் மெலிதாக ஒலித்துக்கொண்டு இருந்தது.

“இன்னைக்கு பொழுது சாயிரதுக்கு முன்னாடி நான் கிளம்பலாம்னு இருக்கேன் மாப்பிள்ளை” என்றார் நடராஜன்.

“ஏன் மாமா? இன்னும் ரெண்டு நாள் தங்கிட்டு போலாமே”

“இல்லை, அங்கே எல்லாம் போட்டது போட்டபடி இருக்கும். இங்கே துணைக்கு மீனாட்சியை விட்டுட்டு போறேன். அவ தங்கி வரட்டும். நான் இன்னைக்கு கிளம்பினா சரியா இருக்கும்”

“ஒ...” என்ற யாழன், மனைவியின் முகத்தை பார்த்தான். அவளோ அமைதியாக குழந்தைக்கு உணவூட்டிக்கொண்டு இருந்தாள்.

அதற்குள் மீனாக்ஷி, “இல்லங்க நானும் இன்னைக்கே வரேன்... அதான் யக்ஷிணி இருக்காளே. அவ மாப்பிள்ளையை கவனிக்கட்டும். பிள்ளை தான் இப்போ சரியாகிட்டாளே” என்றார் பட்டென்று.

அதில் திகைப்புற்றவள் தாயின் முகத்தை பார்க்க, அதை கண்டுக்கொள்ளாதவராக, மற்றவர்களுக்கு தட்டை பார்த்து பரிமாறிக்கொண்டு இருந்தார்.

கணவனின் முகம் பார்க்க அவன் வரும் சிரிப்பை அடக்கியபடி உணவில் கவனமாவதை கண்டு கடுபுற்றவள், ‘சிரிக்கவா சிரிக்கிறிங்க இருங்க உங்களுக்கு இருக்கு’ என்று கறுவிக்கொண்டாள்.

பிரிந்தவர்கள் சேர போவதற்கான நேரமா? அல்லது இன்னும் சிண்டு பிடி சண்டை போடும் நேரமா? பார்க்கலாம்.
 
Top