• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நின் மூச்சோடு குடியேறவா.? - 09

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
876
அத்தியாயம் 09

மூன்று நாட்கள் கடந்துவிட்டது பெரியவர்கள் ஊருக்கு கிளம்பி சென்று. வேறு வழி இல்லாது கடை பொறுப்பை அர்ஜுனிடம் பல பத்திரங்கள் கூறி சரியாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வீட்டில் இருவரையும் கவனித்தபடி இருந்தாள், யக்ஷிணி.

ஆனால், மாற்றி மாற்றி இருவரையும் கவனிப்பது, வீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டு இவர்களையும் சமாளித்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அர்ஜுன் கொண்டு வருகிறேன் என்று கூறிய கடை கணக்கையும் சரி பார்த்துக்கொண்டு என்று அவளுக்கு என்று தனியாக நேரமே கிடைக்காது, பிஸியாக சுற்றிக்கொண்டு இருந்தாள், யக்ஷிணி.

இப்போது யதுணாவும் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்க, இன்று அவளை ஒருமுறை மருத்தவரிடம் அழைத்து சென்று முழு பரிசோதனை முடித்து, பூரணமாக குணமடைந்துவிட்டாள் என்று தெரிந்த கொண்ட பின் மேலும் நிம்மதியாக உணர்ந்தனர் பெற்றவர்கள்.

யதுணாவை மருத்துவர் பரிசோதித்து முடிக்கவும், யாழனுக்கும் மறுமுறை கட்டை பிரித்து, ரணத்தை சுத்தம் செய்து வேறு கட்டு போட்டவர்கள், அவன் கழுத்து பட்டையை இனி உபயோகிக்க தேவை இல்லை என்று கூறிவிட்டனர்.

“கியூர் ஆகிட்டு வரிங்க யாழன், கொஞ்சம் கொஞ்சம் இயல்பா உங்க வேலையை பார்க்க ஆரம்பிங்க. அதிகமான வெயிட் தூக்க வேண்டாம். ரொம்ப நேரம் ஒரே பொசிஷன்லேயே (Position) இருக்க வேண்டாம். மேபீ இன் எ வீக், யூ வில் பீ ஆல்ரைட்... (Maybe in a week, you will be alright) அப்புறம் தேவை இருந்தா பிசியோ பண்ணிக்கலாம்” என்று கூறி அனுப்பி வைத்தனர்.

அன்று இரவு, குழந்தை தூங்கியதும், படுக்கைக்கு வராது தன் ஐபேடில் மூழ்கி இருந்தவளை தான் யாழனும் பார்த்துக்கொண்டு இருந்தான்.

‘நாளையில் இருந்து தானும் வேலை பார்க்க ஆரம்பிக்கலாம்’ என்று எண்ணியபடி அடிப்பட்ட கையை லேசாக அசைத்து பார்த்துக்கொண்டு இருந்தவனை பார்த்தாள் யக்ஷிணி இப்போது.

‘எப்படி கேட்டாலும் தப்பா தான் தெரியும்... அதுக்காக கேட்காம இருக்க முடியுமா? இப்போவே அக்கம் பக்கம் இருக்கவங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க எப்போ பாரின்ல இருந்து உன் ஹஸ்பன்ட் வந்தாருனு... அவங்களை கூட சமாளிக்கலாம். ஆனா, இவரை... இப்படியே இருந்தா, இவரும் இதான் சாக்குன்னு இங்கயே இருக்க ஆரம்பிச்சிடுவாங்க. பேசி தான் ஆகணும்’ இரண்டு நாட்களாக எதற்கும் தன்னை உதவிக்கு அழைப்பது போல் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு படுத்தி எடுத்துக்கொண்டு இருந்ததை அசைப்போட்டபடி எண்ணிக்கொண்டு இருந்தாள். எனவே, சட்டென்று அந்த கேள்வியும் வந்து விழுந்துவிட்டது.

“நீங்க எப்போ அங்க போ... ஐ மீன்... எப்போ அந்த வீட்டுக்கு கிளம்புறிங்க?” என்ற யக்ஷிணியின் கேள்வியில் அவளையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டு இருந்தான்.

‘கேட்ட பதில் பேசணும். எதுக்கு இப்படி விடாம பாக்குறது’ மனதிற்குள் முணுமுணுத்தவள், அவனை தீர்க்கமாக பார்க்க முயன்று தோற்று, முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.

“எனக்கு என் பொண்டாட்டி குழந்தையோட இருப்பது தான் பிடிச்சிருக்கு. இருக்கவும் வேண்டும்... இருக்கவும் ஆசை படுறேன்” அழுத்தமாக அவன் கூற,

சமந்தமே இல்லாது, நேற்று மாமியார் வீட்டிற்கு யாழனும் யதுணாவும் ஸ்பீக்கரில் பேசிக்கொண்டு இருக்க, அவளின் நாத்தனார் கணவர் வெளிப்படையாக பட்டென கூறியது நினைவு வந்தது. எப்போதும் போல் இருவரும் ஒன்றாக வாழாததை எண்ணி வருந்திக்கொண்டு இருந்தவர்களுக்கு இடையே அவளின் மாமியார் மரகதம், “உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமாப்பா இப்படியே இருந்தா எப்படி?” என்று புலம்ப,

“பேசாத அவங்களை டைவர்ஸ் தர சொல்லி நீங்க உங்க வாழ்கையை பாக்கலாமே... ஒன்றாகவும் இல்லாம உங்களுக்கும் விடுதலை தராம ரெண்டு பக்கமும் எதுக்கு இழுத்துட்டு இருக்கணும்?” எப்போதும் போல் மனதில் படுவதை பட்டென பேசம் அவரின் சுபாவம் தெரிந்த ஒன்று தான் என்பதால் யாராலும் ஒன்றும் கூற முடியவில்லை.

என்ன ஒன்று! இது எல்லாம் யக்ஷிணியும் கேட்டுக்கொண்டு தான் இருப்பாள் என்பதை அனைவரும் மறந்து போயினர். யாழனுக்கு கூட யக்ஷிணி இதை கேட்டுவிட்டால் என்று தெரியாது தான் இருக்கிறான்.

“வேணும்னா நான் டிவோர்ஸ் கொடுத்துடுறேன் நீங்க உங்களுக்குனு ஒரு ல...லைப் அமைச்சி.” அவளை முடிக்க விடவில்லை.

“நேத்து மாமா பேசினதை கேட்டியா? நல்லதெல்லாம் காதுல ஏறாது மனசுல பதியாது, இதெல்லாம் மொத்தமா மண்டைல ஏத்தி பூட்டி வை” என்று கடுப்புடன் கூறியவன்,

மேலும், “என்னை விட்டு உன்னால விலக முடியாது. உன்னை விட்டு விலகுற ஐடியாவும் எனக்கு இனி இல்லை.” என்று திட்டவட்டமாக கூற, அதில் அதிர்ந்து தான் போனாள்.

‘என்ன போகமாட்டாரா?’ அதிர்ச்சியில் முழித்து அப்படியே நின்றவளை கண்டவனுக்கு பாவமாக இருந்தாலும், இனி பாவம் பார்த்தால் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து ஒன்றும் மேலே பேசாது அப்படியே மகளின் பக்கத்தில் படுத்துக்கொண்டான்.

பெற்றவர்கள் இருக்கவே ஒரே அறையில் இருந்தவள், தாயும் தந்தையும் கிளம்பியதும் அவள் படுக்கையை கூடத்தில் மாற்றிகொண்டாள். சோபாவே அவளுக்கு போதுமானதாக இருந்தது. அவனை தான் முதலில் வெளியே படுக்க சொல்ல நினைத்தவள், அவனின் அசௌகர்யங்கள் உணர்ந்து தானே வெளியில் படுத்துக்கொண்டாள்.

அதில் அவன் முறைத்து பார்த்தாலும் ஒன்றும் கூறவில்லை. ஒன்றொன்றுக்கும் எதையாவது பேசி மேலும் சங்கடங்கள் வேண்டாம் என்று அமைதியாகவே இருந்தான். ஆனால், சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவளை சீண்டவும் மறக்கவில்லை.

படுக்கையறையில் யாழன் விழித்திருக்க, வெளியில் யக்ஷிணி விழித்திருந்தாள். இருவர் மனத்திலும் ‘விவாகரத்து’ என்பது தங்களுள் வந்துவிட்டதை நினைத்து படுத்து இருந்தனர். ஏதேதோ எண்ணிக்கொண்டு இருந்தவர்களின் மனதில் தங்களின் கடந்த காலம் மெதுவாக ஆட்சி செய்ய ஆரம்பிக்க, நினைவுகள் அதனை சுற்றி சுழல ஆரம்பித்தது.

***

“ஏய்... காலைல கொஞ்சம் சீக்கிரமா எழுந்துக்க பாரு. நாளைக்கும் லேட்டா எழுந்தா அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது” என்று அதட்டலாக வந்த தாயின் குரலில் முகம் சுணங்கியது. அது அவர் கூறிய விஷயத்தால் அல்ல, அவள் விளித்த அழைப்பால்.

‘அது என்ன எப்பபாரு ஏய் ஏய்னு... இவங்களும் அப்பா மாதிரி தான். இங்க எல்லாரும் ஒரே மாதிரி தான்’ என்று எண்ணினாலும், அவளுள் லேசாய் குறுகுறுப்புடன் கூடிய படபடப்பு உண்டானது. அதற்கு காரணம் அவளை பார்க்க நாளை மாப்பிள்ளை வீட்டில் இருந்து வருகிறார்கள். வீட்டில் பார்த்த மாப்பிள்ளை தான், இருந்தும் சற்று படபடப்பாக இருந்தாலும், இயல்பான அவளின் துறுதுறுப்பும் குறும்பும் அடங்கும் அளவிற்கு பதட்டமில்லை அவளிடம்.

அவளுள் இருக்கும் பல எதிர்மறை உணர்வுகளை, அழுத்தங்களை, மன வலிகளை, சமாளிக்க, மற்றவர்கள் முன் தன் பலவீனங்களை காண்பிக்காது இருக்க, தன் இயல்பான குணங்களை அழுத்தமாக வெளிப்படுத்த ஆரம்பித்து இருந்தாள்.

எனவே, அந்த குணங்கள் இப்போதும் அதிகமாக தலை தூக்க, தூக்கம் வராது பிரண்டுக்கொண்டு இருந்தவள், பின் தனக்கும் தன் தமக்கைக்கும் இடையில் நிம்மதியாய் அழகு பெட்டகமாக உறங்கிக்கொண்டு இருந்த அப்புக்குட்டியை, தன் அக்கா மகனை முத்தமிட்டு கொஞ்ச ஆரம்பித்தாள்.

ஆழ்ந்து உறக்கத்தில் இருந்த அந்த குழந்தை லேசாக சிரிக்க, கனவு காண்கிறான் என்பது புரிந்து மீண்டும் முத்தமிட்டு படுத்துக்கொண்டாள்.

மறுநாள் காலை நேரம் கழித்து எழவில்லை என்றாலும், விடிந்து வெகு நேரம் ஆகிய பின்பே கண் விழிக்க, எழுந்துக்கொள்ளும்போதே வீடு பரபரப்பாக இருந்தது தெரிந்தது.
வெளியே வந்தவளை, “சீக்கிரம் போய் குளிடி, அவங்கல்லாம் இன்னும் ரெண்டு மணி நேரத்துல வந்துடுவாங்க” என்றுவிட்டு தன் மகனுக்கு உடை மாற்ற ஆரம்பித்தாள், அவளின் தமக்கை யாமினி.

‘இன்னும் இரண்டு...மணி... நேரம்... இருக்கே’ என்று எண்ணியம்படி, மெதுவாக கிளம்பி, கொடுத்த புடவையை கட்டி உண்டு அமரவும்,

“இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்களாம்” என்று சிதம்பரம் உள்ளே வரவும் சரியாக இருக்க,

“நீ போய் அப்புவை உள்ளே வைச்சிட்டு அங்கேயே இரு. நாங்க கூப்பிடும்போது வந்தா போதும்” என்று கூறிய மீனாக்ஷி, பரபரப்பாக அனைத்தையும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் வந்து, காபி பலகாரம் கொடுத்த பின்பு, உள்ளே வந்த யாமினி, “குனிந்தே இருக்கணும்னு எல்லாம் இல்லை. சாதாரணமா வா, சாதாரணமா இரு, ஒன்னும் இல்ல. சரியா? எல்லாரையும் பார்த்து வணக்கம் மட்டும் வைச்சிட்டு உட்காந்துக்கோ” என்று கூறி, அவளை அழைத்து செல்ல,

என்ன முயன்றும் தமக்கை கூறியது போல் சாதாரணமாக இருக்க முடியவில்லை அவளால். சற்று முழித்தே இருந்தாள். ஆனால், மிகவும் சாமர்த்தியமாக தன் உணர்வுகளை வெளிக்காட்டது இருந்தாள். வந்து அமர்ந்தபின், அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள், கீழே குனிந்துக்கொள்ள,

மாப்பிள்ளையாக அமர்ந்திருந்த யாழன் தான், அவளை விட அதிக சங்கோஜத்துடன், அவள் வீட்டில் யாரையும் பார்க்காது, தன் வீட்டினரை மட்டும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருந்தான். அவனுடன் வந்த அவனின் தாய் மற்றும் தந்தையான, மரகதம் மற்றும் விக்ரமன் தான் அவளிடம் பேச்சு கொடுக்க வேண்டுமே என்று பேசிக்கொண்டு இருந்தனர்.

இவர்களுடன் வந்த யாழனின் பெரியப்பாவும் அவளிடம் சாதாரணமாக எங்கே படித்தாய், எந்த வருடம் இப்படியான கேள்விகளை கேட்டுக்கொண்டு இருக்க,

அந்த சூழலில் பொருந்தியவள், தன் இயல்பு தலை தூக்க, அடிக்கடி யாழனை பார்க்க ஆரம்பித்தாள். ஆசை பார்வை எல்லாம் இல்லை. ஒரு குறுகுறுப்பூட்டும் பார்வை தான். அவளிடம் பேச்சு நின்று, மற்றவர்களிடம் தாவ, அவள் மேல் இருந்த பார்வைகளும் விலக ஆரம்பிக்க,

அப்போது தெரியாத தனமாக யாழன் அவளை பார்த்துவிட்டான். இதான் சாக்கு என்று சட்டென்று தோன்றிய குறும்புடன், ஒரே நொடியில் யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்துக்கொண்டு அவனை பார்த்து கண் அடித்துவிட்டவள், வந்த சிரிப்பை உதட்டுக்குள் அதக்கிக்கொண்டு எதுவும் தெரியாதது போல் பார்வையை விலக்கிக்கொள்ள, யாழன் தான் வேர்க்காத குறையாக முழித்து, தவித்து, கீழே குனிந்துக்கொண்டான்.

‘சரியான வாலா இருப்பா போலேயே’ என்ற எண்ணம் தோன்ற, லேசான சிரிப்பு வந்தது அவன் முகத்தில்.

பின் இருவருக்கும் தனிமை கொடுக்க என்று, அவர்களை உள்ளிருக்கும் அறைக்கு அனுப்ப, அங்கே படுக்கையில் உருண்டுக்கொண்டு இருந்த அப்புக்குட்டியோ வெளியே வர மறுத்து கத்த ஆரம்பிக்க,

“இருக்கட்டும் பரவாயில்லை” என்று தமக்கையை அனுப்பியவள்,

“அப்புக்குட்டி என்னடா பண்ணுற” என்று யக்ஷிணி அவனிடம் வம்பு வளர்ந்துக்கொண்டு இருக்க, உள்ளே வந்தான் யாழன்.

அங்கே போடப்பட்டு இருந்த இருக்கையை காட்டி, “உட்காருங்க” என்று கூறியவள், தானும் ஒன்றில் அமர, சற்று நேரம் அமைதியே நிலவியது அங்கே.

பின்பு யாழனே பேச்சை ஆரம்பிக்க, எங்கு படித்தோம், வேலை என்று பகிர்ந்துக்கொண்டு இருந்தவர்களின் பேச்சு ஒரு கட்டத்தில் அடுத்து என்ன என்று திக்கி நிற்க,

“உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட விருப்பம், எதிர்பார்ப்பு இருக்கா?” என்று யாழன் தான் கேட்டான்,

அதற்கு, “அதெல்லாம் ஒண்ணுமில்லை. எனக்கு வீட்டில் என்ன சொல்லுறாங்களோ அது தான். பெரிசா ஏதும் எதிர்ப்பார்ப்புலாம் இல்லையே” என்று உதட்டை பிதுக்கியவள், “உங்களுக்கு?” என்று கேட்க,

சற்று நேரம் அமைதியாக இருந்தவன், “ம்ம்... எனக்கும் அப்படி தான். விருப்பம் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. வீட்டில்... வீட்டில் இருப்பவங்க எல்லாரும் சந்தோசமா இருக்கணும். கொஞ்சம் அவங்களை... அட்ஜஸ்ட் பண்ணிட்டு அவங்களை பார்த்துக்கிட்டாலே போதும்.” என்று மென்று முழுங்கி கூறியவனை குழப்பமாக பார்த்தாலும்,

‘எல்லாருக்குமே அவங்க அவங்க பெத்தவங்களை மனசு நோகாதபடி வாழணும்னு தானே ஆசை இருக்கும்’ என்று நினைத்து அதனை தவறாக எண்ணாதவள், “கண்டிப்பா” என்று மெல்லிய புன்னகையோடு உறுதி கொடுத்தவள்,

“உங்களுக்குனு... ஏதும் எதிர்ப்பார்ப்பு? இப்படி இருக்கணும் அப்படின்னு” என்று மீண்டும் கேட்டவளை,

“இல்ல... அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை” என்று கூறியவன், அடுத்து என்ன பேசுவது என்று தெரியாது அமைதியாய் இருக்க,

“சித்தி... சித்தி...” என்று தன் கையில் இருந்த கைப்பேசியை அவன் சித்தியிடம் நீட்ட, அப்புகுட்டியின் தேவை புரிந்தவள் போல், அதனை வாங்கி, அவனுக்கு பிடித்த குழந்தைகள் பாடலை மெல்லிய சத்தத்தில் போட்டு கொடுத்துவிட்டு மீண்டும் வந்து அமர,

“வேற என்ன பிடிக்கும்?”

“என்ன பிடிக்கும்னா?”

“உங்களுக்கு வேற எது?” என்று நிறுத்தியவன், “சாதாரணமா என்னல்லாம் பிடிக்கும்?” என்று கேட்க,

“ம்ம்... நான் ஒரு கேள்வி கேட்குறேன்... அதுக்கு பதில் கண்டு பிடிங்க, எனக்கு பிடிச்சது தெரியும்.” என்று குறும்போடு கூறியவள்,

“சரியா பதில் சொல்லணும்?” என்று வேறு ஒரு மாதிரி குரலில் கேட்க,

யோசனையோடு பார்த்தவன், ‘சரி’ என்று கூறாது, “என்ன?” என்று கேட்டு வைத்தான்.

“ம்ம்... பார்க்கலாம்...” என்றவள்,

“முத்து முத்தா காயுது கோட்டையோட காட்டுல, படி போட்டு அளக்கவும் ஆளில்லை, அளந்து விக்கவும் பேச்சில்லை. அந்த ஆளாத அரச கோட்டைக்கு காவல் காக்க மாவீரன், அவன் மறைந்தால் வருவா, சோகமான நோய் பெண், பாதி நாள் கரையுவா, பாதி நாள் வரையுவா. எந்த கோட்டை கருவூல கோட்டை? அந்த கோட்டை யாருக்குமில்ல?” என்று கேட்டு வைக்க,

இப்போது வெளிப்படையாகவே திருதிருவென முழித்தான் யாழன். அவனுக்கு தமிழ் தான் பேசும் தாய்மொழி தான். படிக்கும் ஒரு பாடம் தான். அதற்குமேல் அவள் பேசிய பாதி உன்னிப்பாக கவனித்தாலும் பதில் எல்லாம் தெரியவில்லை. அவன் முழித்த முழியில் வந்த சிரிப்பை அடக்கியவள்,

“என்ன லாஜிகா யோசிச்சாலே பதில் தெரிஞ்சிடுமே” என்று சீண்ட,

“தெரிஞ்சிடும் தெரிஞ்சிடும்” என்று முணுமுணுத்தவன், அவள் கூறியதை மனதில் பதிய வைத்துக்கொண்டான்.

அனைத்தையும் மீறி அவள் கண்கள் பேசும் பாஷை அவனை ஈர்த்தது என்று தான் சொல்ல வேண்டும். அவளை தன் மனதிற்கு பிடிக்க ஆரம்பித்துவிட்டது என்பதை உணர்ந்தவன், அதை வெளிப்படுத்தாது...

“வேற... ஏதும் கேக்கணுமா? இல்லைனா வெளியில் போலாம், ரொம்ப நேரம் ஆகிட்ட மாதிரி இருக்கே...” என்று தயக்கத்துடன் கேட்ட யாழன், மனதுக்குள் ஏகத்திற்கும் படபடத்து போய் இருந்தது.

கேட்ட கேள்விக்கு பதில் கேட்டு மேலும் மேலும் அவனை சீண்டாது, அவனை புரிந்துக்கொள்வது போல் அமைதியானவள், “ம்ம்... போலாம் தான்” என்று எழுந்துக்கொள்ள, அவனும் எழுந்தான்.

“ஆமா, ஒன்னு கேக்கணுமே...” என்று கூற ஆரம்பித்து, “பார்க்கணுமே” என்று முடித்தவள், கண்கள் மின்ன குறும்பு பார்வை பார்த்தாள்.

“என்ன?” என்றபடி அவன் பார்க்க,

சட்டென அவன் அருகில் வந்து போதுமான இடைவெளி விட்டு ஒன்றாக நின்றவள், தன்னை விட அவன் உயரமாக தான் இருக்கிறானா என்று கண்களால் அளந்துவிட்டு, நொடியில் நகர்ந்தும் கொண்டாள்.

‘என்ன செய்கிறாள்’ என்று அவன் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே, அவள் வேலையை முடித்துக்கொண்டு, “போலாம்” என்று வெளியில் செல்ல திரும்பிவிட,

வெளியே வரும்போதே அவளின் செய்கைக்கான காரணம் புரிந்து, வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தலையை ஆட்டியபடி வெளியே வந்தான்.

மனதில் ஏதோ ஒரு வித பய அழுத்தம் மற்றும் படபடப்புடன் தான் அங்கே அவன் பெண் பார்க்க வந்ததே. ஆனால், அனைத்தும் அவளின் இயல்பில் மறந்து போய் மனம் லேசாகி போக, அமைதியாய் வந்து தன் இடத்தில் அமர்ந்துக்கொண்டான்.

அதன்பின் யக்ஷிணி மீண்டும் அறைக்குள்ளேயே இருக்க சொல்லப்பட, அவளும் பெரியவர்கள் பேச்சு என்று தன் அப்புக்குட்டியோடு செட்டில் ஆகிவிட்டாள். மேலும் எதுவும் அவளின் யோசனைகளில் இல்லை.

எது எப்படி இருந்தாலும், அனைத்தும் விசாரித்த பின்பு, இவரோடு தான் திருமணம் என்று நூற்றுக்கு இருநூறு சதவீதம் உறுதியான பின்பு தான் இந்த ஏற்பாடு எல்லாம் நடந்திருக்கும் என்று அழுத்தமாக தன் பெற்றவர்களை நம்பியவள், எதுவும் யோசிக்கவில்லை. அந்த எண்ணத்தோடு தான், தெரியாதவர்களிடம் ஒதுங்குவது போல் இல்லாமல், யாழனுடனும் இயல்பாக பேசியதும்.

இவரோடு தான் தன் வாழ்க்கை என்றான பின், என்னை என் இயல்பை முதலில் இருந்தே தெரிந்துக்கொள்வது தான் நல்லது என்று நினைத்தவளின் வெளிப்பாடே இன்று நடந்த நிகழ்வுகள்.
தன் இயல்பை, குணத்தை, நடந்துக்கொள்ளும் விதத்தை வெளிப்படையாக காண்பித்தவள், யாழனின் இயல்பை கிரக்கிக்க தவறி போனாள். அவனின் அமைதியான சுபாவத்தையும் தேவைக்கு மட்டுமே பேசும் பேச்சையும், குடும்பத்தை முழுவதும் சார்ந்திருக்கும் பாங்கையும், புதிய சூழலில் பொருந்த தடுமாறுவதையும் கண்டாலும் கருத்தில் பெரியதாக பதித்துக்கொள்ளாது போனாள்.

அவனிடம் பேசுவதற்காக எண்ணங்களை பயணிக்க செய்த அளவிற்கு கூட, அவன் வீட்டின் மனுஷர்களை, அந்த சூழல்களை பற்றி நினைக்க கூட யோசிக்கவில்லை.

அவளை பொறுத்தவரை, ஒருவருக்காக ஒருவர் தங்களை மாற்றிக்கொள்ள முடியாது. முயலவும் முடியாது. முயற்ச்சிக்க சொல்லவும் முடியாது. தன்னை எப்படி மற்றவர்கள் தன் இயல்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாளோ அப்படியே தான் மற்றவர்களிடமும் நடந்துக்கொள்வாள். எனவே, பெரியதாக வாழ்க்கையின் அழுத்தங்களை தேவைகளை யோசிக்காது போனாள்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
அடியாத்தி யக்ஷி இயல்பாகவே குறும்பா இருப்பா போல 😀😀😀😀
 
Top