• வைகையின் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நின் மூச்சோடு குடியேறவா..?-11

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
671
அத்தியாயம் 11

தன் கையில் மின்னி மின்னி வேறு வேறு நிறங்களை தத்தெடுத்துக்கொண்டு இருந்த அந்த நிலா வடிவிலான மின்விளக்கை ஆசையோடு பார்த்துக்கொண்டு இருந்தாள்.

யாழனுக்கு கைப்பேசியில் அழைக்க, எடுத்தவன் “ஹாப்பி பர்த்டே யக்ஷி” என்று ஆழ்ந்த குரலில் சொல்ல,

“தேங்க்ஸ், தேங்க்ஸ் எ லாட். ரொம்ப அழகான லவ்லியான கிப்ட்” என்றாள், உணந்து.

“நீ கேட்ட கேள்வியோட பதில், ‘வானம், சூரியன், வெண்ணிலா, நட்சத்திரம்’ இதுல உனக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமான பிடித்தம், நிலவும் நட்சத்திரமும்.

என் நிலவான உனக்கு, என் நிலவு பரிசா... நிலாவை போல அழகா இருக்கணு மட்டுமில்ல இந்த கம்பேரிசம், அந்த வெண்ணிலவை போல மனசும் இருப்பதால... எப்பவும் இதே போல நீ சந்தோசமா இருக்கணும். விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ” என்று கூறி அவன் வாழ்த்த,

அதுநாள் வரை இருந்த குழப்பங்களும் சஞ்சலங்களும் நீங்கி ஒருவித சந்தோஷம் பரவ, நிம்மதியில் தோய, அமைதியுற்றது அவள் மனம்.

பேசி முடித்த் வைத்த யாழனுக்கோ, ‘தானா இப்படி பேசியது, அவள் மனம் நெருங்க, தன் மனம் தெரிய பேசியது’ என்று எண்ணிய யாழனும் சந்தோசமாகவே இருந்தான். தன் இயல்பு அவளிடம் தோற்பது தெரிந்தாலும், தெரிந்தே தோற்க முடிவெடுக்க ஆரம்பித்தது அவன் மனம.

அதன்பின் வந்த நாட்கள் ‘இயந்திர தனமாக தங்கள் வாழ்கை சென்றுவிடாது’ என்ற எண்ணம் அழுத்தி பதிய ஆரம்பிக்க, அவர்களுள் நெருக்கமான பேச்சுகள் இல்லாவிடினும், ஒருவர் பற்றி மற்றவருக்கு மேலோட்டமான புரிதல் உருவாக ஆரம்பித்தது. அந்த அமைதியும் நிம்மதியுமே இருவருக்கும் நிலைத்திருக்க, திருமண நாளும் நெருங்கியது.

சொந்த பந்தங்கள் சூழ மகிழ்ச்சி பொங்க அவளின் கழுத்தில் அவனிட்ட மாங்கல்யத்தில் கண்களை பதித்தவள் முகத்தில் சிரிப்பு போங்க நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தவள், அதன்பின் அந்த சிரிப்பை முகத்தில் இருந்து மறைத்துக்கொள்ளவே இல்லை. சுற்றம் சூழ மூன்று நாட்கள் திருமண சடங்குங்கள் முடிந்து அவள் யாழனோடு கிளம்பும்போது அவள் மனம் நிலைக்கொள்ளாது தவிக்க, ஏதோ ஒரு வித பயம் சூழ, பெற்றவர்களை பிரிவதில் மனம் தவிக்க, கண்ணீர் கசிந்தது.

மனதை தேற்றி கிளம்பியவளை, கண்கள் கலங்க தாய், தந்தை, தமக்கை என அனைவரும் வழியனுப்ப யாழனின் யக்ஷிணியாக வாழ்க்கையை வாழ தயாரானாள்.

அவள் அழுவதை கண்டு பொறுக்காதவன் தான், இருந்தும் என்ன பேசுவது என்றெல்லாம் தெரியாது அமைதியாகவே உடன் வந்தவனை நினைத்து மனதை அழுத்தியது.

அடுத்த ஒரு மாதமும் இருவருக்கும் நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு தான் பறந்தது போல. தேனிலவு, மறுவீடு, சொந்தங்களின் விருந்து அழைப்புகள், வெளியே செல்வது என்று மகிழ்ச்சியை நிறைக்கும் நாட்களாகவே அமைந்தது. இருவாரம் விடுப்பில் இருந்த யாழனும் அடுத்த வந்த வாரங்களுக்கும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் விதத்தில் ‘work from home’ கேட்டு வாங்கி இருக்க, அவனுடன் நேரம் செலவழைப்பதும், புது இடத்தில் பொருந்தி போய், அங்கே புரிந்துக்கொள்ள எடுத்த முயற்சிகளிலும் கூட விகல்பகமாக எதுவும் நடக்காது கழிந்தது யக்ஷிணிக்கு.

“இதுக்கு முன்னாடி ஏதாவது காதல் இருந்திருக்கா”

“என்னுடனான வாழ்வு பிடித்திருக்கிறதா”

“புது வாழ்க்கை மகிழ்வை தருகிறதா”

போன்ற கேள்விகளை வெளிப்படையாக கேட்டுக்கொள்வதும், சில நேரங்களில் கேலி கிண்டல் என்று கழித்தும், பல நேரங்களில் பேசாமலேயே ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள முயற்ச்சிப்பதுமாக அவர்களுள் பேச்சுக்கள் நீள ஆரம்பித்தது.

அதன் பின் வந்த நாட்களும் அமைதியாய் கழிந்தாலும் அவர்களுள் இயல்பான பேச்சு வார்த்தைகளும் அன்பும் பகிர்ந்தலும் நிகழ சந்தோசமாகவே சென்றது நாட்கள். ஒரே ஊரிலேயே இருக்கும் அஞ்சலியும் மாதத்தில் இரண்டு மூன்று முறையாவது குடும்பத்துடன் வந்து செல்வது, இவர்களும் அங்கே செல்வது, வெளியிடங்களுக்கு போய் வருவது, எப்போதாவது யாமினியின் வீட்டிற்கு தன் அப்புகுட்டியை பார்க்க செல்வது என்று ஒரு பக்கம் இனிமையாக கழிந்தது.

பொதுவாகவே குழந்தைகள் என்றால் கொள்ளை ப்ரியம் கொண்டுள்ள யக்ஷிணிக்கு அக்காவின் குழந்தையும், நாத்தனாரின் குழந்தையும் பிடித்து போனது. அவர்களும் இவளிடம் அன்புடன் பழக, அவர்களுடன் இருக்கும் நேரங்களை விரும்ப ஆரம்பித்தாள்.

பெரியாதாக ஒட்டுதல் இல்லை என்றாலும் மாமானருடனும் ஒரு சுமூகமான உறவே. நாத்தனார் குடும்பமும் நட்பாக பழக,

பெரியவர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் என்பதையும் தாண்டி யாழனின் மனதில் ஆழமாக வேர்கொள்ள ஆரம்பித்த காதல் யக்ஷிணியிடம் வெளிப்பட ஆரம்பிக்க, அவளுக்கும் அந்த சூழலும் மனிதர்கள் மேலும் தூய்மையான அன்பு வெளிப்பட ஆரம்பித்தது.

அவளின் அமைதி அனைத்து விதத்திலும் நிலைத்தது. அனைத்தையும் மீறி அவன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவள் வீட்டில் அனுசரணையாய் நடந்துக்கொள்வதால் தான் என்று புரிந்தே இருந்தது அவளுக்கு.

ஏனினில், எல்லாருக்கும் எதிர்மாறாக அனைவரும் இருக்கும் சமயத்தில் அமைதியாய் போய் விடும் மரகதம், தனியாக மாட்டும் சமையங்களில் இயல்பாக பேசுவது போல் சில சமயம் குத்தி கிழிக்க ஆரம்பித்தார்.

யாழனும் விக்ரமனும் தத்தம் அலுவலகம் செல்ல ஆரம்பிக்க, இவளும் மரகதமும் மட்டுமே வீட்டில் இருக்கும் நேரம் அதிகமாக,

முதலில் வெளியாட்களை பற்றியும், பொது விஷயங்களிலும் தன் எதிர்மறை எண்ணங்களை எந்தவித பூச்சும் இன்றி, யார் மனது எப்படி சங்கடப்பட்டாலும் புண் பட்டாலும் அது பற்றி யோசனையே தனக்கு இல்லை என்று பேசிக்கொண்டு இருந்தவரை, அனைத்து சமயங்களிலும் அவள் கண்டுக்கொள்ளாது, மனதில் தவறென்று பட்டாலும், யாழன் தன்னிடம் முதல் முதலில் கேட்டுக்கொண்ட விஷயம் என்று அனுசரித்தே சென்றாள்.

பல சமயங்களில் சாதாரணமாக பேசுகிறேன், கேட்கிறேன், என்று அவளை பற்றியே எடக்கு மடக்கான பேச்சுக்கள் வந்த நேரங்களில் கூட அவளின் பதில் அமைதியாகவே வெளிப்படும்.

இவளாக ஏதாவது வேலை செய்தாலும், ஆர்வமாக ஏதேனும் தொலைக்காட்சியில் பார்த்தாலும் கேட்கும் பாடல்கள், பார்க்கும் காட்சிகளில் கூட விடாது, தங்கள் அறையினுள் ஒதுக்கி வைப்பது, மாற்றம் செய்வது என்று எது செய்ய ஆரம்பித்தாலும் அதிலும் குற்றம் குறை என்று ஏதாவது கூறிக்கொண்டு இருப்பவரை அமைதியாகவே கடந்தாள்.
எதையும் யாரிடமும் கூறாது வெளிக்காட்டாது இருந்த போதும், யாழன் அவள் முகத்தை வைத்தே அவளின் அகத்தை புரிந்துக்கொள்ள, அவனாலான முயற்சியாக அம்மா – மனைவி என்று இருவரின் மனம் நோகாத படி எடுத்து கூற ஆரம்பித்தான்.

அவன் கூறுவதின் நோக்கமும் எதிர்ப்பார்ப்பும் புரிந்து ஏற்றுக்கொள்ளும் யக்ஷிணியை போல் மரகதம் இருந்துவிடவில்லை. நாட்கள் செல்ல, முதலில் யாருமில்லாத போது வெளிப்படும் அவரின் எதிர்மறை பேச்சுக்கள், யார் இருந்தாலும் இல்லை என்றாலும் ‘தனக்கு தோன்றியது இது தான்’ என்று வெளிப்பட ஆரம்பிக்க,

யோசிக்காது பேசும் அவரின் வார்த்தைகளை கண்டுக்கொள்ளாது கடக்க ஆரம்பித்தாள். உள்ளே சில நேரம் முரண்டினாலும், யாழன் கேட்டது இதை மட்டும் தானே என்ற எண்ணமே அவளை அமைதிக்கொள்ள செய்யும்.

சில சமயம் அவளுக்காக, புதிதாக வந்த மருமகள் என்ன நினைத்துக்கொள்வாளோ என்று விக்ரமனும், தாயின் பேச்சில் இருக்கும் முரண்களும் நியாமற்ற தோனியை எண்ணி யாழனும் மரகதத்தை அமைதியாக்க முயன்று இருக்கின்றனர். பல சமயம் அவர் பேச்சை ரசிக்க முடியாத நேரத்திலும் அடக்க முயன்று இருக்கின்றனர். அப்படியான நேரங்களில்,

ஒன்று, ‘நான் சாதாரணமா தானே சொன்னேன்’ என்று அவரின் அலட்சிய பாவமோ,

அல்லது, ‘நான் என்ன பேசினாலும் உங்களுக்கு பிடிக்காது, தப்பா தான் தெரியம், நான் தனி தானே’ என்ற கத்தலோ தான் பதிலாக கிடைக்க ஆரம்பிக்க,

‘ஒருவேளை என்முன் அவரை குறை கூறுவது போல் பேசுவது தான் மரகதத்தை இன்னும் இன்னும் உசுப்பி விடுவது போல் ஆகிறதோ, அந்த ஈகோவே அவரை மேலும் மேலும் யோசிக்காது என்னவென்றாலும் பேச தூண்டுகிறதோ’ என்று எண்ண ஆரம்பித்த யக்ஷிணி, இவளே யாழனிடம், “எதுக்கு எல்லாத்துக்கும் ஏதாவது சொல்லிட்டு, விட்டுடுங்க” என்று கூறும்படி ஆகிற்று.

‘அவரின் குணம் அப்படி’ என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் யக்ஷிணியுள் ஒரு பக்கம் தோன்ற ஆரம்பிக்க, ‘நம் வீட்டிலும் இப்படி தானே’ என்ற எண்ணமும் அவளை, அவளின் பேச்சை கட்டி போட்டது.
ஆனால், யக்ஷிணியின் பொறுமை முடியும் காலமும் சீக்கிரத்திலேயே வந்து சேர போவதை யாருமே அறியவில்லை.
 
Top