• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிறைவு பகுதி 25

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
472
அத்தியாயம் 25

சில நிமிடங்களுக்கு முன்பு தான் மலரின் வளைகாப்பு மிகச் சிறப்பாய் நடந்து முடிந்திருந்தது.

லட்சுமியிடம் செழியன் மலரை ஊருக்கு அனுப்ப வேண்டாம் என்று கூற கம்பை எடுக்காத குறை தான் லட்சுமி.

"என்ன டா நினைச்சுட்டு இருக்க? எதாவது சொல்லிடுவேன்.. ஓடிடு.. அந்த பொண்ணை வச்சுட்டு நீ பேசுற பேச்சு இருக்கே! அவ இருக்க மாட்டளாம்.. நீ இருக்க மாட்டன்னா நீயும் வேணா கூட போ! அவளை போக விட மாட்டேன்னு சொன்ன.. உனக்கு அவ்வளவு தான்" என்று விட அப்படியே யூடர்ன் எடுத்து ஓடி வந்துவிட்டான் அன்னையிடம் இருந்து.

வளைகாப்பு நிகழ்வு வரை அவன் அமைதியாய் இருக்க மலரோடு லட்சுமி, பால கிருஷ்ணன், கவின் இவர்கள் கண் எல்லாம் செழியன் மீது தான்.

"எப்ப என்ன பாம் போடுவனோ.. லட்சுமிம்மா அவனை வாயே திறக்க விடாதீங்க" கவின் லட்சுமியிடம் கூற

"அவன் மட்டும் பேசட்டும்.. அப்புறம் இருக்கு டா அவனுக்கு" என்றார் லட்சுமி.

எல்லாம் நல்லபடியாய் சென்று கொண்டிருக்க, அனைவரும் சாப்பிடும் நேரம் சித்ராவிடம் தனியாய் பேசி இருந்தான் செழியன்.

சரி என்றும் வேண்டாம் என்றும் கூறாமல் சித்ரா குழம்பிய முகத்துடன் திரும்பிவிட, அப்பாடா சொல்ல வேண்டியதை சொல்லியாகிற்று என்று இருந்துவிட்டான் செழியன்.

"என்னங்க இப்படி சொல்லிட்டாங்க.. நான் அவளை எப்படி எல்லாம் பாத்துக்கணும் நினச்சேன் தெரியுமா?" என கணவனிடம் சித்ரா புலம்ப, அதை கேட்டுவிட்டாள் அஜிதா.

"என்ன சொல்லுங்க லட்சுமி அம்மா.. செழியன் அண்ணாகிட்ட இருந்து ஒவ்வொரு ஆம்பளைங்களும் கத்துக்கணும்" என்று கூறவும் செழியன் திருட்டு முழியாய் அங்கும் இங்கும் விழிக்க, கவின், லட்சுமி, மலர் என ஒற்றைப் பார்வையை ஒரே போல அவன் மேல் வீசினர்.

"மலர் இங்கே இருந்தா என்ன அங்கே இருந்தா என்ன? நல்லபடியா குழந்தை பிறந்தா போதும்" என்று கொஞ்சம் என்றாலும் சோகம் முகத்தில் தெரியும் படியே மகேந்திரன் கூறவும், மலர் அதிர, லட்சுமி முறைக்க, அங்கேயே மகனை திட்ட ஆரம்பித்துவிட்டார் பால கிருஷ்ணன்.

மலர் எதுவும் பேசவில்லை.. செழியனை திரும்பியும் பார்க்கவில்லை.

"நீ கொஞ்ச நேரம் ரூம்ல போய் சாய்வா இருந்துக்கோ டா" என லட்சுமி கூறவும் மலர் அவரைப் பார்க்க,

"அவன் கிடைக்குறான்.. நான் பேசிக்குறேன்.. நீ ஊருக்கு போய்ட்டு குழந்தையோட வா.." என்று புன்னகையுடன் மருமகளின் கன்னம் பிடித்து வருடி கூற, தலையசைத்து உள்ளே வந்தவள் செழியனைப் பிடித்துவிட்டாள்.

"சொல்லு மலர்! நீ போகணும்னா சொல்லு" அவன் கேட்க,

"ம்ம் போகணும்" என்றாள் அவன் நெஞ்சில் சாய்ந்து சில நிமிடங்களுக்கு பின்.

"இப்ப நீ உனக்காக சொல்லல" அவன் கூற,

"என்னவும் இருக்கட்டும் நான் போகணும்" அவள் கூற,

"சரி போகலாம்.. அவ்வளவு தானே?" என அவளை வருடிவிட்டவனை நம்பாமல் நிமிர்ந்து பார்க்க,

"நிஜமா தான்!" என்றான் அவளைப் பார்த்து.

"சரி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.. போகும் போது கூப்பிடுவாங்க" என்றவன் எழுந்து கொள்ள பார்க்க,

"கோபமா?" என்றாள் அவனை விடாமல்.

"மலர் மேலயா?" அவன் கேட்க,

"ம்ஹும்..." என்றவள் உடனே "ம்ம்ம்!" என்க,

"உன் விருப்பம் தான் டா முக்கியம்!" என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு எழுந்து சென்று அன்னையிடமும் கூற, அவருமே நம்பாத பார்வை தான் பார்த்து வைத்தார்.

மலர் வீட்டினருக்கு மீண்டும் பழைய மகிழ்ச்சி திரும்பி இருக்க,

"கத்துக்கோங்க மிஸ்டர் மகேந்திரன்! பாருங்க.. பொண்டாட்டி விருப்பப்பட்டான்ற ஒரே காரணத்துக்காக நம்ம கூட உங்க தங்கச்சியை இல்ல இல்ல அவரு மனைவியை ஊருக்கு அனுப்புறாரு" என்று அஜிதா கணவனிடம் கூற,

"லூசா டி நீ? அனுப்பலைனாலும் செழியன் தான் பெஸ்ட்டுன்ற அனுப்பினாலும் பெஸ்ட்டுன்ற.. உனக்கு என்னை ஏதாவது சொல்லனும்.. அதுக்கு சாக்கு" என்று கூறி சென்றான் மகேந்திரன்.

"இந்த போட்டோ பாருங்க லட்சுமிம்மா!" என கவின் அன்னை லதா லட்சுமி அம்மாவிடம் ஒரு புகைப்படத்தை நீட்ட,

"வாவ்! அழகா இருக்காங்களே! யாரு மா இது?" என்றாள் புகழ்.

"நம்ம கவினுக்கு இந்த பொண்ணை தான் பார்த்திருக்கோம் டா.. முடிவான மாதிரி தான்.. இன்னும் அவன்கிட்ட மட்டும் தான் கேட்கல" என்று கூறிக் கொண்டு இருக்க,

"அழகா இருக்கு மா.. எல்லாம் பேசி முடிச்சு சொல்லுங்க" என்றார் லட்சுமி.

அந்த பக்கமாய் செழியனுடன் கவின் வர,

"இந்த போட்டோ பாரு செழியா!" என்றார் லட்சுமி.

"யாரு மா?" என செழியன் வாங்க,

"புகழ் பிரண்ட்டா.. குட்டியா க்யூட்டா இருக்கு" என கவின் கூற, புகழ் வாய் மூடி சிரித்தாள்.

"புகழ் காலேஜ் படிக்குறா டா.. குட்டியா இருக்குன்ற?" என லட்சுமி அவனிடம் வம்பு வளர்க்க,

"காலேஜ் படிச்சாலும் அவ எனக்கு தங்கச்சி தானே? அவளும் ரித்தியும் ஒன்னு தானே எனக்கு?" என்றான்.

"ப்ச்! அதை விடு.. நீ பாரு!" என லதா கூற, அங்கு நடப்பதை வைத்தே ஓரளவு புரிந்து கொண்டான் செழியன்.

"குட்டியானு மட்டுமா சொன்னான்? க்யூட்டுன்னும் சொன்னானே?" என செழியன் கூற,

"நோட் பண்ணுங்க லதா ம்மா!" என்றாள் புகழ்.

அப்போதும் புரியாமலே கவின் நிற்க, "இதெல்லாம் வேலைக்கே ஆகாது.. பொண்ணுக்கு மூக்கு நீளம்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணிடுங்க.. இவனெல்லாம் சிங்கிளாவே கைத்தடி தூக்க வேண்டியவன்" என்ற செழியனின் கூற்றில் சில நொடிகளில் புரிந்து கொண்டான் கவின்.

"என்ன டா மூக்கு நீளம் தானே?" என்று செழியன் வேறு நேராய் கவினிடம் கேட்க,

"அடேய் என்னை காப்பாத்த பிரேமும் இங்க இல்ல டா கல்யாணம் ஆகி மூணு மாசத்துல ஏழாவது ஹனிமூன் போய்ட்டான்.. தயவு செஞ்சு வாய வச்சுட்டு சும்மா இரு.. அந்த குட்டி ச்சீ அந்த பொண்ணுக்கு மூக்கே இல்லைனாலும் பரவாயில்ல.." என்று கூற, சுற்றி அனைவருமாய் ஆர்ப்பரித்தனர்.

அனைவரும் கிளம்பி ரெடியாகிவிட, "போய் அவ பேக்கை எடுத்துட்டு வா டா" என்றார் லட்சுமி மகனிடம்.

வந்தவன் கையில் இரு பெட்டிகள் இருக்க, "போலாம்!" என்றவனை மலருமே புரியாமல் பார்க்க,

"இது என்ன?" என்றாள் மலரே!.

"அம்மா தான் மலர் போனா நீயும் போய்ட்டு வான்னு சொன்னாங்க!" என செழியன் தயங்காமலே கூற,

"அட கடவுளே!" என தலையில் கைவைத்தார் லட்சுமி.

"ஏன் டா ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே கிளம்பிடுவியா? போய் கொண்டு விட்டுட்டு வா டா" என்றவரிடம்,

"நோ மா! நான் மலரை பார்த்துக்குறேன்" என்றான்.

"ண்ணா! நீங்க எல்லாம் அல்டி ண்ணா!" என்று கூறி ஹரி சிரிக்க, கொஞ்சமும் அசரவில்லை செழியன்.

அஜிதா திரும்பி தன் கணவனைப் பார்க்க, "இதுக்கும் எதாவது சொல்லணும் அதான? பேசாம வா டி" என்றுவிட்டு முன்னே செல்ல மலரை கிண்டல் செய்து அழைத்து வந்தாள் அஜிதா.

"கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா டா?" கவின் கேட்க,

"இதுக்கு ஏன் மேன் வெட்கப்படணும்? வாங்க வாங்க நல்ல நேரத்துல கிளம்பனும்" என்று செழியன் கூற வாடாத புன்னகையுடனே கிளம்பி இருந்தாள் மலர்.

****** ****** ******

மலரின் சத்தம் நேரமாக நேரமாக அதிகரித்துக் கொண்டே இருக்க, வெளியில் நின்றிருந்தவன் அந்த சத்தத்திற்கு எல்லாம் ஒவ்வொரு அடியாய் தவித்து அங்கேயும் இங்கேயுமாய் அந்த மருத்துவமனையில் பதறி அலைந்து கொண்டிருந்தான்.

"டேய்! ஒன்னும் இல்ல.. ரிலாக்ஸ் டா.. செழியா! டென்சன் ஆகாத டா" என்ற எந்த குரலும் அவன் காதுகளை தாண்டி மூளையை எட்டவில்லை.

அவள் குரல் மட்டுமே அதை ஆக்கிரமித்து இருக்க, அவன் மனம் முழுதும் மலரைப் பார்த்துவிட தவித்துக் கொண்டிருந்தது.

வலி இன்னும் அதிகமாய் வர வேண்டும் என்று கூறியே இரண்டு மணி நேரங்களை கடந்திருந்தது.

இரண்டு மணி நேர முடிவில் அவள் சத்தம் கத்துக்களுக்கு கேட்காத வண்ணம் உள்ளே அழைத்து செல்லப்பட்டிருக்க அந்த குரலை தேடியது அவன் மனம்.

அடுத்த அரை மணி நேர முடிவில் செவிலியர் கொண்டு வந்த பெண் குழந்தையை செழியன் கைகளில் தர, அந்த உணர்வுகளை வார்த்தைகளால் அவனால் கூறிவிட முடியாது.

"மலர்?" என்று அடுத்த நொடி அவன் கேட்க,

"மயக்கத்துல இருக்காங்க.. பத்து நிமிஷத்துக்கு அப்புறம் உங்களை கூப்பிடுவாங்க" என்று கூறியதும் தான் நிம்மதியாய் குழந்தையை நோக்கி முழு சிந்தனை அவனிடம்.

அடுத்தடுத்த கைகள் குழந்தையை நோக்கி நீண்டு செல்ல, செழியன் தன் மனைவியை நோக்கி சென்றான்.

"மலர்!" என்ற ஒற்றை அழைப்பில் மட்டுமே அவன் உலகம் இருக்க, அதை கேட்பதற்காகவே அங்கே அவளிதயமும் துடித்துக் கொண்டிருந்தது.

சுபம்..

ரித்தி....
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
359
Nice end ma
oru epilogue pottu vidunka
 
Top