• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
இதய வானில் உதய நிலவே!

நிலவு 01

வான மாதா நிலவு மகளைத் தன் மடி மீது சாய்த்து அரவணைத்துக் கொண்டிருந்த நேரமதில் பூமியெங்கும் காரில் போர்வை மூடியிருந்தது.

படுக்கையறையின் சுவரில் சாய்ந்து அமர்ந்த வாக்கிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள் அவள். கையில் இருந்து நழுவிய நாவல் தன்னைப் பிடிப்பாரில்லாத ஏக்கத்தில் அவள் காலின் மேல் விழுந்திருந்தது.

"அத்துஊஊ" என்ற அழுகுரலில் மௌனித்திருந்த கருமணிகள் தம் இருப்பை உணர்த்த மெல்லமாய் இமை பிரித்தாள் அதியநிலா!

அமர்ந்த வாக்கிலே தூங்கியதால் சுள்ளென்று வலித்த கழுத்தை நீவி விட்டுக்கொண்டு துள்ளி எழுந்து கட்டில் அருகே சென்றாள் பாவை. அப்போது தான் கண்விழித்து அத்தையைத் தேடி அழுது கொண்டிருந்தாள் அவளது அண்ணனின் நான்கு வயது புதல்வி ஷாலினி.

"ஷாலு பாப்பா! அத்து உங்க பக்கத்துல இருக்கேன். சமத்தா தூங்குங்க" முதுகில் தட்டிக் கொடுக்க,

"என் பொம்மை எங்கே? கரடி பொம்மை வேணும் அத்து" உதடு பிதுக்கி விம்மியது பிஞ்சு.

நெற்றியில் புரண்ட முடியை விரலால் ஒதுக்கித் தள்ளியவாறு "ஓகே செல்லம். இப்போவே தரேன்" என்று எழுந்து சென்று கபோர்ட்டில் இருந்த பொம்மையை கொடுத்தாள்.

"என் பக்கத்திலேயே இரு அத்து" அதியாவின் கையைப் பிடித்துக் கொண்டு உறக்கத்தைத் தழுவினாள் ஷாலு.

அவளது கைகளில் இருந்த பொம்மையைப் பார்த்தவளின் இதயம் நொடிக்குப் பல தரம் வேகமாகத் துடிக்கலாயிற்று. "உதய்! இப்போ நீங்க எங்கே இருக்கீங்க? இந்த அதியை மறந்துட்டீங்களா? உங்களைத் தேடி வந்து காதலை சொல்ல ஆசையா இருக்கு. ஆனால் ஒருவேளை நீங்க என்னை மறந்துட்டீங்கனா என்னால தாங்கிக்க முடியாது. இப்போவும் நான் சுயநலவாதியாக யோசிக்கிறேன்" சூடான கண்ணீர் கன்னத்திலே கோடு போட்டது.

பெண்ணவள் நினைவுகளோ நான்கு மாதங்களுக்கு முன்னால் நகர்ந்தன.

ராகவன் சந்தனாவுக்கு ரமேஷ் என்ற மகனை அடுத்து ஐந்து வருடங்கள் கழித்துப் பிறந்தவளே நம் நாயகி. குருவிக்கூடு போன்ற அச்சிறு குடும்பத்தின் குட்டி இளவரசியாக எவ்வித கவலைகளும் அறியாதவளாக பெற்றோரின் பாசமழையில் நனைந்தும் அண்ணனின் நேசத்தில் கரைந்தும் தேவதையாக வளர்ந்து வந்தாள் அதியநிலா.

ரமேஷ் சுபாஷினியைத் திருமணம் முடிக்க ஷாலு பிறந்தாள் வரப்பிரசாதமாக. ஷாலு சுபாஷினியை விட அத்தையான அத்தியாவிடம் "அத்து அத்து" என்று ஒட்டிக்கொண்டாள்.

துளி கூட சோகத்தைக் காணாத அதியாவின் வாழ்க்கையைப் புயல் வீசி மொத்தமாய் சீர்குலைக்கும் நாளும் வந்தது. ஷாலு அழுததால் அவளை அதியிடம் விட்டு விட்டு பக்கத்து ஊரில் திருமணம் வீட்டிற்கு நால்வரும் என்ற பேருந்து விபத்துக்குள்ளாகிய நிலையில் சடலமாக வீடு திரும்ப உச்சகட்ட அதிர்வில் மயங்கி விழுந்தாள் மெல்லியவள்.

மயக்கம் தெளிவிக்கப்பட்டதும் ஓவென்று பொங்கி வந்த அழுகையை இரண்டு வயது ஷாலுவின் அழுத முகத்தை கண்டதும் கடினப்பட்டு அடக்கி அவளை வாரி அணைத்துக் கொண்டாள் இருபது வயதேயான அதியா.

அன்றிலிருந்து ஷாலுவுக்கு அவளே யாதுமாகிப் போனாள். தான் படித்த படிப்பிற்கு ஏற்ற சிறுவேலை செய்து அவளைத் தாயாகத் தாங்கினாள்.

தந்தையின் ஸ்கூட்டரில் ஷாப்பிங் மால் சென்று விதவிதமான உடைகளை வாங்கிக் குவித்த அதியா! அண்ணனின் சட்டைப் பாக்கெட்டில் திருட்டுத்தனமாக காசு எடுத்து ஐஸ்கிரீம் குடித்து அவனிடம் மாட்டிக் கொள்ளும் அதியா! தாயின் கைப்பக்குவத்தில் ருசியாய் உணவுகளை சாப்பிட்டு அதற்கு கமெண்ட் கொடுத்து சந்தனாவிடம் இலவசமாக குட்டுகளைப் பெற்றுக் கொள்ளும் அதியா, அண்ணியுடன் லூட்டி அடிக்கும் அதியா, ஷாலுக்கு நிகராக சேட்டை செய்யும் அதியா முற்றிலுமாக மாறிப்போனாள்.

தனது விருப்பு வெறுப்புகளை மறந்து இயந்திரம் போலானாள் அவள். சொத்து அதியாவின் பெயரில் இருப்பதால் அவள் மீது போலிப்பாசம் காட்டி நெருங்கி வந்தனர் சில உறவுகள். அதில் ஒருவர் அவளது சித்தப்பா மோகன்.

அவரைப் பற்றி அறிந்ததால் ஒட்டியும் ஒட்டாமலேயே உறவாடினாள் அதி. அப்படி இருக்கையில் ஒரு நாள் "என் பையன் பிரகாஷ் உன்னை கட்டிக்க ஆசைப்படுகிறான் அதிமா. ஷாலுவை அநாதை ஆசிரமத்தில் விட்டுட்டு..." என்று உள்ளத்தில் நஞ்சையும் வார்த்தையில் தேனையும் தடவி மேற்கொண்டு பேசாமல் அவள் முகம் பார்த்தார் மோகன்.

"ஜஸ்ட் ஷட் அப்" விழிகள் தீப்பொறி உமிழ ருத்ரதேவியாக மாறியிருந்தாள் மாது.

"என்ன சொன்னீங்க? என்ன சொல்லுங்க? என் பாப்பாவை ஆசிரமத்துல விடனுமா? அவள் ஒன்னும் அநாதை இல்ல. அவளுக்கு நான் இருக்கேன். நான் வாழுறதே அவளுக்காகத்தான். அவளை ஒருக்காலும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்" அனல் தெறித்தது அவள் வார்த்தைகளில்.

"பைத்தியக்காரி மாதிரி பேசாத அதி. ஷாலு உன் கூட இருக்கும் வரைக்கும் உன்னால உன் இஷ்டப்படி வாழ முடியாது. இவளைக் கண்டால் உன்னை எவனுமே கட்டிக்க வரமாட்டான்" என்றார் மோகன்.

"பரவால்ல! என்னை யாரும் கட்டிக்கலனாலும் எனக்கு கவலை இல்லை. காலம் பூரா இப்படியே இருந்திடறேன்.. என் ஷாலு மட்டுமே எனக்குப் போதும்" என்று உறுதியுடன் கூறியவளை இன்னும் பல வழிகளில் சோதித்துப் பார்த்தார் மோகன்.

தனது மகனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைத்து அவளது சொத்தை அபகரிக்கும் எணண்ம் அவருக்கு. அதி திருமணத்திற்கு சம்மதிக்காத கோபத்தில் அவர் ஷாலுவை அடித்து விட பொங்கியெழுந்த பெண்ணவளோ ஷாலுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்.

கையில் இருந்த மாலை மோதிரம் என்று அனைத்தையும் விற்று சென்னையில் இருந்து பெங்களூர் பயணமானாள். அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஷாலுவுடன் வசிக்க ஆரம்பித்தாள். அடுத்த தெருவில் இருக்கும் சுமதி அக்காவின் நட்பு அவளுக்கு கிடைக்க அவரிடம் ஷாலுவை விட்டு விட்டு வேலைக்குச் சென்று வருவாள்.

இவ்வாறு தன்னைப் பற்றி சிறிதும் நினைக்காமல் அண்ணன் மகளுக்காகவே வாழ்ந்தாள் அவள். நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல வாழ்க்கையும் இன்ப துன்பம் இரண்டையும் கொண்டது அல்லவா? சந்தோஷமே காணாது இயந்திரம் போல இயங்கிய நிலாவின் வாழ்வில் ஆனந்தச் சாரல் வீசும் நாளும் வந்தது.

இன்னும் மூன்று தினங்களில் அதியாவின் பிறந்த நாள். "அதி கண்ணு! உன் பிறந்த நாளைக்கு ட்ரெஸ் வாங்கிட்டு வாடா" என்று பாசத்துடன் கூறினார் சுமதி.

தலையை இடம் வலமாக ஆட்டி "எனக்கு பர்த்டே ஒன்னு தான் குறைச்சல். டிரஸ் எல்லாம் எதுக்குக்கா? அப்பாம்மா இருக்கும் போது புது டிரஸ் போட்டு என்ஜாய் பண்ணேன். இப்போ அதுலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல" என மறுத்தாள்.

சாதாரணமாக சொல்வது போல இருந்தாலும் அவ்வார்த்தைகளில் இருந்த வலியும் ஏக்கமும் சுமதிக்குப் புரிய அதியாவுக்காக மனதார வேண்டிக் கொண்டார்.

"நோ வே அத்து! எனக்கு புது ட்ரெஸ் வேணும். உனக்கும் வாங்கனும். அத்து ப்ளீஸ் ப்ளீஸ்" விடாப்பிடியாக இருந்தவளின் பிடிவாதம் ஷாலுவின் கெஞ்சலில் கரைந்தது.

"சரி செல்லம்! உனக்கு வாங்கலாம்" என்று ஒப்புக் கொண்டு புதிதாக திறந்த கிட்ஸ் ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் சென்றாள்.

வாயிலில் வரவேற்பதற்காக ஸ்கூபிடூ உருவமும் பென்டா (panda) போன்ற உருவமும் கையசைத்து ஆடிக் கொண்டிருந்தன.

அதிக்கு பென்டா என்றால் கொள்ளைப் பிரியம். அதைக் கண்டவளுக்கோ என்ன தோன்றியது என்றே தெரியவில்லை. அனைத்தும் மறந்தவளாய் ஓடிச்சென்று அதனைக் கட்டிக் கொண்டாள்.

"அத்து! பென்டா சூப்பர்ல. உனக்கு பிடிக்குமா?" ஆச்சரியமாக கேட்டாள் ஷாலு.

"ஆமா தங்கம். பென்டானா எனக்கு இஷ்டம். கையெல்லாம் பொசு பொசுனு பஞ்சு மாதிரி இருக்கு" பெண்டாவின் கையைப் பிடித்து வருடினாள் சிறுமியாய்.

அவளது கை அது அழுத்தவும் "என்னடா இது அசையுது? ஒரு வேளை யாராவது மாலுக்கு உள்ளே இருந்து கீ கொடுத்து இதை ஆட வைக்கிறாங்களோ?" என்று சுற்றும் முற்றும் பார்த்தவளுக்குத் தெரியவில்லை அந்த உடையை அணிந்திருந்தது ஒரு ஆடவன் என்று.

"ஓய் பெண்டா பேபி...!!" என்ற அழைப்பில் அதன் முகத்தை உற்றுப் பார்த்தவளோ கண்கள் இமை சிமிட்டுவதை உணர்ந்து உறைந்து நின்றாள்.

ஒரு கையால் பெண்டா போன்ற தலைக்கவசத்தை அகற்றி தன் முன் பொம்மையாய் இருந்தவளைப் பார்த்தான் *உதய வர்ஷன்!*

"அத்து! பெண்டா அங்கிளா மாறிடுச்சு இல்ல சோ சூப்பர்" கைகளைக் கொட்டி கிளுக்கிச் சிரித்தாள் ஷாலு.

அவளது அத்துவோ அதிர்ச்சியாய் நிற்க "ஹலோ மிஸ் அத்து! இப்படியே என் கையைப் பிடிச்சுட்டு நிக்கிறதா ஐடியாவா? உங்களுக்கு ஓகே தான். பட் எல்லோரும் பாக்குறதுல எனக்கு வெட்கமாக வருது" வலது கண்ணைச் சிமிட்டினான் அவன்.

"ஓ சாரி" பட்டென கையை விலக்கிக் கொண்டு ஷாலுவின் கையைப் பிடித்து முன்னால் நடந்தவள் திடீரென அவனிடம் திரும்பி,

"என்னை எப்படி கூப்பிட்டீங்க? டோன்ட் கால் மீ அத்து" என்று காரமாக மொழிந்தாள்.

"அப்படினா உங்க ரியல் நேம் சொல்லுங்க மேடம்" புன்சிரிப்பு ஒய்யாரமாக வீற்றிருந்தது அவனது முரட்டு அதரங்களில்.

"அத்து பெயர் அதியநிலா" கீச்சுக் குரலிட்டாள் ஷாலு.

"ஷாலு! யாருன்னு தெரியாதவங்க கிட்ட நேம் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல" சிறு கண்டிப்புடன் கூறினாள் மங்கை.

"என்னைத் திட்டாத அத்து" உதடு பிடுக்கியவளைக் கண்டு "அச்சோ சாரி ப்ப்பு. இனிமேல் திட்ட மாட்டேன்" என அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் அதியா.

"உங்க நேம் மாதிரி நீங்களும் ஸ்வீட் இதயா" என்று உதய்யின் விழிகளில் அவள் ஷாலுவுக்குக் கொடுத்த முத்தத்தைக் கண்டு ஏக்கம் படர்ந்தது.

அந்த முத்தம் தனக்குக் காதலாகக் கிடைக்கவில்லையே என்பதால் அல்ல! தாய்ப்பாசத்துடன் கூடிய அம்முத்தத்தை அவன் வாழ்நாளில் அனுபவித்தே இல்லை என்பதால்!

தாய்ப் பாசத்தை மட்டுமல்ல தாய் தந்தையின் முகத்தைக் கூட அவன் நேரில் காணவில்லை... பிறக்க முதலே தந்தையை இழந்து பிறந்த நொடி தாயை இழந்து அடுத்த நாளே யாரும் என்று அனாதையாய் அனாதை ஆசிரமத்தில் விடப்பட்டவன் அவன்...

அவன் இதயா என்று அழைத்ததில் கடுப்பாகி "இதயா இல்ல அதியா" என கோபமாக தலையை சிலுப்பினாள்.

"பட் அதியாவை விட இதயா சூட்டபிளா இருக்கு" இதயத்தைத் தடவியவனின் இதயத்தில் பார்த்த நொடியே குடி கொண்டிருந்தாள் அதி(ச)யப் பெண்ணவள்.

'சரியான வழிஞ்சல் கேஸா இருப்பான் போலவே. பல்லைக் காட்டி இளிக்கிறான். பல நாள் பழகின மாதிரி லொட லொடனு பேசுறான். இதயானு வேற கூப்படறான். இங்கிருந்து போயிடறது தான் சரி' உள்ளுக்குள் நினைத்தாள் காரிகை.

"என்னை அலைஞ்சான், பொம்பளையே காணாதவன் அப்படின்னு நினைப்ப. இந்த இடத்தில் என் கண்ணுல படாம போயிடனும்னு தோணும்" என்று நிறுத்தி உதய், "என்னால உங்கள மாதிரி மனசுக்குள்ள பேசிட்டு வெளியால அமைதியா இருக்க முடியாது.. நினைச்சத பட்டுனு பேசிடறத என்னோட கேரக்டர்" என பிடரியை கோதிக் கொண்டான்.

"அங்கிள் த்ரீ டேய்ஸ்ல என் அத்துவோட பர்த்டே வருது.. அதுக்கு டிரஸ் வாங்க தான் வந்தோம். ஆனா அதுக்கு உங்கள பிடிச்சு போச்சு போல. அதான் வந்த விஷயத்தையே மறந்து உங்க கூட பேசிட்டு இருக்கா" கன்னத்தின் குழி விழச் சிரித்தபடி கூறினாள் ஷாலு.

"ஏய் வாயாடி! இவனை எனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னேனா?" சின்னவளிடம் சீறினாள் அதி...

"அந்தப் பாப்பாவுக்கே புரியுது. உங்களுக்கு தான் புரிய மாட்டேங்குது நிலா"

"ஆமா! நீ அங்கிள் ஹக் பண்ணுதுலயே தெரியுதே" அவனது பேச்சுக்கு ஒத்து ஊதிய ஷாலுவை மூக்கு விடைக்க முறைத்தாள்.

"நான் ஹக் பண்ணது பென்டாவை. இவனை கிடையாது" என்றாள்.

"அந்த பென்டாவே நான் தானே" மெல்லிய சிரிப்பை உதிர்த்தான்.

"ஹலோ சும்மா சும்மா சிரிக்காத. எனக்கு பென்டானா ரொம்ப பிடிக்கும். அதனால் ஏதோ வேகத்துல வந்து கட்டிப்பிடிச்சேன். ஐய்ம்..." என்று சொல்ல வர,

"ஹேய் ஸ்டாப் ஸ்டாப்" என அலறினான் அவன். புருவம் சுருக்கிப் பார்த்தாள் அதியா.

"சாரி மட்டும் சொல்ல வேண்டாம். உங்கள மாதிரி அழகான பொண்ணு என்னைக் கட்டிப் பிடிச்சதுக்கு நான் தேங்க்ஸ் சொல்லனும்" குறும்புப் புன்னகை அவனிதழில் நெளிந்தது.

"முன்ன பின்ன பொண்ணுங்களை காணாத மாதிரி வழியுறே" முறைப்புடன் பார்த்தாள் அவள்.

"முன்ன பின்ன மட்டுமல்ல லெஃப்ட் சைடு ரைட் சைடுனு எல்லா இடத்திலும் பொண்ணுங்களை பார்த்திருக்கேன். ஆனால் உங்கள மாதிரி ஒரு தேவதையை பார்த்ததே இல்லைங்க இதயா" என்றவனுக்கு அவளது பாசத்தில் நனைந்து உருகத்தான் ஆவல் பெருகியது.

அவனது இதயா'வில் கடுகடுத்து "அதியா" என்று பல்லைக் கடித்தாள் காரிகை.

"நோ நோ என் பெயர் உதயா! உதய வர்ஷன்" தலை சரித்துச் சிரித்தான் வர்ஷன்.

"நான் கேட்டேனா? உன் பெயரை கேட்டேனா?" மூக்கு நுனி சிவக்கலானது அதியாவுக்கு.

"நீங்க கேட்க மாட்டீங்கன்னு தெரியும். என்னை கூப்பிடலனாலும் திட்டறதுக்காகவாவதுயூஸாகும். பத்திரமா வச்சுக்கோங்க"

"எதை...??" முழித்தாள் அவள்.

"என் பெயரை சொன்னேன். உங்களுக்கு தாராள மனசுன்னா என்னையும் உங்க மனசுல அழியாமல் வெச்சுக்கோங்க"

கையைத் திருப்பி வாட்ச்சைப் பார்த்து "ஓ மை காட்! மணி அஞ்சாச்சு. என்னைப் போக விடுறீங்களா?" என்று கேட்க,

"நான் உங்க கைய விடாம பிடிச்சுட்டா இருக்கேன்? ஆனால் இனிமேல் போக விட மாட்டேன்" கையை நீட்டி வழிமறித்தான்.

"ஏன்?" கேள்வியாக நோக்கினாள் அவள்.

"விடறீங்களான்னு கேட்டீங்கள்ள அதுக்குத்தான். எனக்கு மரியாதை எல்லாம் வேண்டாங்க" இதழ் கடித்தான் காளை.

"அப்படின்னா நல்லதாப் போச்சு. என்னைப் போக விடுடா டால்டா" இருந்த கடுப்பில் மொத்தமாய் மரியாதையைக் கைவிட்டு இருந்தாள் அதியா.

"வாவ்! இந்த வெர்ஷன் நல்லா இருக்கே" என குறுந்தாடியை நீவி விட்டான் ஸ்டைலாக.

"ப்பூ! பத்து நிமிஷம் கூட இருந்ததற்குப் பேசியே கொன்னுட்டானே. அவனைக் கட்டிக்கப் போறவ பாவம். காது ஜவ்வு ஒரு நாள்லயே கிழியுறது கன்பார்ம்" இதழ் குவித்து காற்றை ஊதித் தள்ளிவிட்டு ஷாலுவோடு ட்ரெஸ் செக்ஷனுக்குச் சென்றவள் அறியவில்லை,

வர்ஷனின் இதய வானில் தீபமேற்றப் போகும் உதய நிலவு இந்த அதிய நிலா!

நிலவு தோன்றும் 🌛

ஹாய் மக்கா! இது ஒரு ஃபீலிங் குட் ஸ்டோரி. கதை பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

✒️ ஷம்லா பஸ்லி❤️
 
Top