• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
இதய வானில் உதய நிலவே!

நிலவு 03

இன்று ஞாயிற்றுக்கிழமை! ஆஃபிஸ் லீவ் என்றாலே ஷாலுவுக்குக் கொண்டாட்டம் தான்.

"அத்து! மால் போலாமா? ஸ்விம்மிக் பூல் போகலாமா? பீச் போகலாமா?" என்று கேட்டு அதியின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தாள்.

"நைட் முழுக்க ஹச் ஹச்னு தும்மிட்டு இப்போ பீச் போகலாமானு கேக்கறியா? உதை விழும்" என்று கையில் இருந்த அகப்பையைக் காட்டியவளுக்கு உதய்யின் முகம் நினைவுக்கு வந்தது.

"உதய்! ஹூம் இல்ல அவன் ராட்சசன்" என்று தலையை சிலுப்பிக் கொண்டாள்.

சமையல் மேடையில் ஏறிய ஷாலு "என் செல்ல குட்டில்ல! ஷாலுவை பார்க் கூட்டி போவியா?" கன்னம் பற்றிக் கொஞ்சினாள்.

"என்னைக் கொஞ்சியே காரியம் சாதிப்ப கள்ளி. ஓகே போகலாம் கேரட் அல்வா செஞ்சிருக்கேன் அதை பாக்ஸ்ல போட்டு எடுத்துட்டு வரேன்" என அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"அய் ஜாலி ஜாலி!" குட்டி பொனி டெயில் அசைந்தாட ஓடினாள் ஷாலு.

"நீ எப்போவுமே இப்படி சந்தோஷமா இருக்கணும் பாப்பா" என நினைத்தவள் உடை மாற்றிக் கொண்டு ஆட்டோ பிடித்து அண்ணன் மகளோடு கிளம்பினாள்.

பார்க்கில் ஷாலு ஊஞ்சலில் ஆடியும் அங்கிருந்த குழந்தைகளுடன் ஓடியும் விளையாட நாடியில் கை குற்றி ரசித்துக் கொண்டிருந்தாள் அதியா.

இதே போல் சிறு வயதில் கிட்ஸ் பார்க்கிற்கு அவளையும் ரமேஷையும் கூட்டிச் சென்று பெற்றோர் பெஞ்ச்சில் அமர்ந்து இவர்களது சேட்டையில் சிரித்து மகிழ்வதை நினைத்து அதியாவின் கண்கள் கலங்கின.

"மிஸ் யூ ஆல்" என்று கண்களை மூடியவள் "இதயா" என்று காதருகே கேட்ட இதயத்தை உருக்கும் குரலில் திடுக்கிட்டு இமை திறந்தாள்.

"குட் மார்னிங் மேடம்!" சுட்டு விரலையும் நடுவிரலையும் இணைத்து சல்யூட் வைத்தான் அதியின் அழகிய ராட்சசன்.

"இப்படித்தான் பேய் மாதிரி வருவியா?" கடுகடுப்பாகக் கேட்டாள் அதி.

"நீங்க தான் என் கனவுல கூட பேய் மாதிரி வரீங்க. என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்றீங்க" என்றான் காதலுடன்.

"வாட்? நான் உன்னை டிஸ்டர்ப் பண்றேன்னா? கொஞ்ச நாள்ல வந்து நீங்க எனக்கு முத்தம் கொடுத்தீங்க லவ் பண்ணுறீங்கன்னு சொல்லுவ போலிருக்கே"

"நோ நோ கண்டிப்பா சொல்ல மாட்டேன். ஏன்னா அது நிஜமா நடக்கும். சீக்கிரமே நடக்கும். நினைக்கும் போதே அப்பப்பா ஆயிரம் ஐஸ்கட்டிய தலையில கொட்டுனா மாதிரி கிளுகிளுப்பா இருக்கே இது குட்டி" மன்மதனின் இதழ்களில் புன்னகை பெரிதாக விரிந்தது.

"ஓவரா கனவு காணாத மேன்! தலையில ஐஸ் கட்டிக்கு பதிலா லாரில லாரியா மண் விழும்" புருவத்தை ஒற்றை விரலால் நீவி விட்டுக் கொண்டாள் பெண்.

"உங்களோட புருவம் அடர்த்தியா இருக்கே. ஐ லைக் இட். ராவ் அங்கிளுக்கும் அப்படித்தான் இருக்கும்" என்று கூறும் போதே அவன் முகம் பிரகாசித்தது.

அவனது முக மலர்ச்சிக்குக் காரணமான ராவ் யார் என்று கேட்கத் துடித்தாலும் 'எனக்கு எதுக்கு அவன் விஷயம் எல்லாம்?' என்று அந்த எண்ணத்தை ஒதுக்கித் தள்ளி விட்டாள்.

"அத்து" என துள்ளியபடி வந்த ஷாலு உதய்யைக் கண்டு "வர்ஷு அங்கிள்" என்று குதூகலித்தாள்.

"ஹேய் கியூட்டி! கம் கம்" என அவன் கைகளை விரிக்க ஓடி ஓடி வந்து அவன் மடியில் அமர்ந்து கொண்டாள் ஷாலு.

"உங்க பெண்டா பேபி பார்க்க வந்தீங்களா?" எனக் கேட்டாள் கிள்ளை மொழியில்.

"எஸ்! பெண்டா பேபியையும் அவங்களோட பேபியையும் பார்க்க வந்தேன். டயர்ட் ஆனதும் அத்து கிட்ட ஓடி வரீங்களா?" அவளது தலை வருடினான் உதய்.

"இல்லை அங்கிள். அத்து எனக்காக கேரட் அல்வா செஞ்சு கொண்டு வந்தா. அதை சாப்பிட ஓடி வந்தேன்"

"அப்படியா? ஓகே சாப்பிடு" என்று விட்டு விளையாடும் குழந்தைகளை பார்வையிடத் துவங்கினான்.

அவனை ஒரு நிமிடம் அமைதியாக பார்த்திருந்தவ அதி லஞ்ச் பாக்ஸைத் திறந்து ஷாலுவுக்கு ஊட்டி விட்டாள்.

"யம்மி அத்து" என்று சப்புக் கொட்டிய ஷாலு "வர்ஷூ அங்கிளுக்கும் ஊட்டி விடு" என்று அவளது தலையில் குண்டை இறக்கினாள்.

"ஏய் வாலு சும்மா இரு" என அவளை அதட்ட, "போ நானும் சாப்பிட மாட்டேன்" என இரு கைகளாலும் வாயைப் பொத்திய அண்ணன் மகளை திகைத்து நோக்கினாள்.

அவளுக்கு உதய்யை மிகவும் பிடித்து விட்டது என்பதை உணர்ந்தாள். அவளை இவனோடு இன்னும் பழக விடுவது சரிதானா என்ற கேள்வி எழுந்தாலும் ஷாலுவை அவனது பாசத்திலிருந்து விலக்குவது சுயநலமாகப்பட்டது.

"நீ அங்கிளுக்கு ஊட்டினா ஷாலு சாப்பிடுவா" என்று பிடிவாதம் பிடித்த ஷாலுவைக் கண்டு செய்வதறியாது நிற்கலானாள் தியா.

அவளின் நிலை உணர்ந்து மேலும் சங்கடத்தைக் கொடுக்காமல் "கியூட்டி நானே எடுத்துக்கிறேன். ஓகேவா?" என்று ஷாலுவின் மூக்கை பிடித்து ஆட்டி விட்டு லஞ்ச் பாக்ஸில் இருந்து கேரட் அல்வா துண்டொன்றை எடுத்து சாப்பிட்டான்.

"செம டேஸ்டுங்க! உங்க சமையலுக்கு பெஸ்ட் குக்கிங் அவார்டே தரலாம்" விரலில் ஒட்டியதையும் சுவைத்தான் வர்ஷு.

"ஆம்பளைங்க அப்படித்தான். அம்மா கிட்ட உங்க சமையலை அடிச்சுக்க ஆளே இல்லைன்னு புகழ்ந்துட்டு, பொண்டாட்டி கிட்ட இவ்வளவு அருமையான சாப்பாட்டை இதுவரை சாப்பிட்டதே இல்லை உன் கைக்கு தங்க வளையலே போடலாம்னு ஐஸ் பேக்டரியை தூக்கி தலையில் வைப்பாங்களாம்" என மூக்கைச் சுளித்தாள் பெண்ணவள்.

"ஓய் ஸ்வீட்டி" என்று கண்களை விரித்துச் சிரித்தவனை "இப்போ எதுக்கு கரண்ட் ஷார்ட் பட்டவன் மாதிரி ரியாக்ட் பண்ணுறே?" என்று கையசைப்பில் வினவினாள்.

"பசங்க அம்மாவை புகழ்ந்துட்டு பொண்டாட்டியை புகழுவாங்கன்னு சொன்னீங்க. இப்போ நான் உங்களைத் தானே புகழ்ந்தேன். சோ நீங்களே உங்க வாயால உங்களை என் பொண்டாட்டியா ஒத்துக்கிட்டீங்க. அச்சோ ஸ்வீட்" இமை சிமிட்டிச் சிரித்தான்.

"ஆமா சோ ஸ்வீட்" என்று அவனைப் போலவே இளித்தவள் சட்டென முறைத்து "மூஞ்சிலையே குத்துவேன் டா" என்று கையை முறுக்கினாள்.

"நீ வக்கீலுக்கு படிச்சிருக்க வேண்டியவன். கரெக்டா போயின்டு பிடிச்சு பேச்சை உல்டாவா திருப்பி விடுறே" காண்டாகினாள் அவள்.

"என்னை இப்படிக் கொஞ்சாதீங்க இதயா. என் இதயத்துடிப்பு காது வரைக்கும் கேட்குது. என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல" இதயத்தைத் தடவி காட்டினான்.

"ஏன்டா என்னை இப்படி பேசியே டார்ச்சர் பண்ணுற?"

"நீங்க என்னை டார்ச்சர் பண்றது மட்டும் சரியா? நியாயமா பேசுங்க மேடம்" என்று பாவம் போல் கேட்டான் உதய்.

"பொய் பேசாத! நான் உன்னை எப்போ டார்ச்சர் பண்ணேன்?" சினந்தாள் காரிகை.

"உங்களை எப்போ பார்த்தேனோ அப்பொழுது இருந்து என்னை எதுவுமே பண்ண விட மாட்றீங்க. சரியா சாப்பிட முடியல. சாப்பாட்டுல கோலம் போட்டுட்டு உங்களை பத்தியே நினைக்கிறேன். கண்ணாடி பார்க்கும்.போதும் அதில் உங்க முகம் தெரியுது. தூங்கினாலும் ஓடோடி கனவுல வந்துடறீங்க. எதிலும் உங்க முகம் தான் தெரியுது. எங்கேயும் உங்க குரல் கேட்கிறது. ஆனால் இதெல்லாம் எனக்கு பிடிச்சிருக்குது தியா மா! சுகமான தொல்லை இதமான இம்சை. இந்தக் காதல் என்னை வேற உலகத்தில் மிதக்க விடுது" அவன் வார்த்தைகளில் அத்தனை மென்மை. விழிகளில் அத்தனை காதல்.

"ஓவரா மிதக்காத. வெயிட் கூடிப் போச்சுன்னா ஒரு நாள் அமிழ்ந்து போயிடுவ" என்று பற்களை நற நறத்தாள்.

"கரக்ட்! ஒரு நாள் அமிழத்தான் போறேன். உங்களோட அளவு கடந்த காதலில் மூழ்கப் போறேன். உங்க பாசத்துல மூச்சு திணறிப் போவேன். உங்க மடியில சாஞ்சு உங்க கையால சாப்பிட்டு ஆனந்த கண்ணீரிலும் அன்பான முத்தத்திலும் உங்களையும் ஒரு நாள் மூழ்கடிப்பேன்"

அதியா மறுபுறம் திரும்பி இருந்ததால் அவன் கண்களில் வழிந்த ஏக்கத்தைக் காணவில்லை. எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அன்பு என்ற ஒற்றை ஆயுதம் யாரையும் குழந்தை போல் மாற்றி விடுகிறது. அவனது பேச்சுகளுக்கு எதிர்ப்பேச்சு பேசும் அதியநிலா இதற்கு எதுவும் பேசாமல் அமைதியாகிப் போனால்.

"அதி" தம்முள் நிமிட நேரமாக நிலவிய மௌனத்தைக் கலைத்தான் வர்ஷன்.

"ம்ம்" சிந்தை கலைந்து அவன் முகம் நோக்கினாள்.

"எனக்கு குலாப் ஜாமூன்னா ரொம்ப பிடிக்கும். கண்டிருக்கேனே தவிர அதை சாப்பிட்டதில்ல. வாங்க பணம் இருந்தாலும் ஆசை இருந்தாலும் எனக்கு புடிச்ச என் மேல அன்பு வச்சவங்க கையால் அதை செஞ்சு சாப்பிடனும்னு ஒரு ஆசைல சாப்பிடல. இன்னைக்கு உங்ககிட்ட கேட்கிறேன். எனக்காக செஞ்சு தருவீங்களா?" ஆசையாகக் கேட்டு விட்டு எழுந்து சென்றான் அவன்.

எதுவுமே பேசாமல் போகும் அவனை மௌனமாக ஏறிட்டாள் அதியா.

காணும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புதிதாக தெரிகிறாள் இவன். அதியாவிடம் ப்ரபோஸ் செய்த ஆண்கள் ஏராளம். சிலர் ஷால்வைக் கண்டதும் விலகிச் செல்ல,

"லவ்வுல இன்ட்ரஸ்ட் இல்ல" என்று அவள் மறுத்த அடுத்த நாளே வேறு மீனைப் பிடிக்க தூண்டில் போட்டவர்கள் வேறு சிலர். ஆனால் இவன் அப்படியல்ல! அன்பை யாசிக்கிறான். கலகலப்பாக பேசுகிறான். ஷாலுவிடம் பாசத்தைப் பொழிகிறான்.

உள்ளத்தால் குழந்தை போன்றவன் இந்த உதய வர்ஷன் என்பதை உணர்ந்தாள் உதய்யின் இதய நிலவு. அவளை அறியாமலே அவன் மீது அன்பு சுரந்தது பாவைக்கு.

ஷாலு அவளிடம் வந்து "வர்ஷு போய்ட்டாரா?" என கேட்டாள்.

"ஆமா டா" என தலையசைக்க "நோ! என் கிட்ட சொல்லாம போக மாட்டாரே" என்று உதடு பிதுக்கிய ஷாலுவின் வதனம் "ஷாலு பாப்பா" என்ற வர்ஷனின் குரலில் அழகாக மலர்ந்தது.

"அங்கிள்" என்று திரும்பியவளிடம் பஞ்சுமிட்டாயை நீட்டினான் அவன். இன்முகத்தோடு வாங்கிக் கொண்டவளை அதி பார்த்தபடி இருந்தாள்.

"உங்க பெண்டா பேபிக்கு பஞ்சுமிட்டாய் கொடுக்க மாட்டீங்களா?" என்று ஷாலு கேட்க, தன் கையில் இருந்த மற்றதை அவளிடம் கொடுத்தான்.

அவளோ வாங்காமல் அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

"கோபத்தில் சிவக்கும் உன் பஞ்சுமிட்டாய்க் கன்னங்களை கிள்ளிக் கொஞ்ச என் கைகள் பரபரக்கின்றன. அனுமதி தருவாயோ நிலவே" என்று கவிதை பாடினான் காளை.

அவன் நினைத்தது போலவே கோபமாக திரும்பிய காதலியிடம் "ஷாலு ஆசைப்படுறா ப்ளீஸ் வாங்கிக்கோங்க. இல்லனா அவ வருத்தப்படுவா. நம்ம விருப்பு வெறுப்புக்காக சின்ன குழந்தைங்க ஆசையை கெடுக்கலாமா? சாப்பிட இஷ்டம் இல்லனாலும் சும்மா எடுங்க" என்று கெஞ்சலுடன் கூறினான் அவன்.

"ஓகே" என அதை வாங்கும் போது ஷாலுவின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தில் பெரியவளின் மனமும் குளிர்ந்தது.

பஞ்சுமிட்டாய் என்றால் அதிக்கு அவ்வளவு பிரியம். காலேஜ் செல்லும் காலத்தில் தியேட்டர் செல்லும் போது இரண்டு கைகளிலும் பஞ்சு மிட்டாய்களை வாங்கிக் கொண்டு அதைச் சுவைத்துக் கொண்டு தான் படம் பார்ப்பாள். பெங்களூர் வந்த பிறகு அதை சுவைத்ததே இல்லை.

ஷாலுவுக்கு மட்டுமே வாங்கிக் கொடுப்பாள். அதன் மீதிருந்த பிரியம் காணாமல் போயிருந்தது. ஆனால் இப்போது அதைச் சாப்பிட ஆவல் பிறந்தது.

உதய்யை கீழ்க் கண்ணால் பார்க்க "நான் பார்க்க மாட்டேன் பா. நீங்க சாப்பிடுங்க" என்று திரும்பி ஊஞ்சலாடும் பிஞ்சுகளைப் பார்க்கலானான்.

அதியா வயிற்றில் குழந்தையுடன் உதய் கைப் பிடித்து நடக்க அவளை ஒரு கையால் தோளோடு சேர்த்து அணைத்து மறு கையால் ஷாலுவின் கையை உதய் பிடித்து நடப் போன்ற காட்சி மனக்கண்ணில் தோன்ற அழகாக விரிந்து மந்தகாசப் புன்னகையைச் சிந்தின அவனது இதழ்கள்.

மகிழ்வுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதியாவின் பஞ்சு மிட்டாய் பாக்கெட்டில் கை விட்டு சற்றை எடுத்து வாயில் போட்டு "சூப்பர்" என்று சப்புக் கொட்டினான் உதய்.

"இதுல இருந்தும் எடுங்க" என்று ஷாலு அவளுடையதை நீட்ட அதிலிருந்தும் சிறு துண்டை சாப்பிட்டு "தேங்க்யூ.. ஸ்ஸ் யம்மி" என்று கண்களை மூடி விரலால் சூப்பர் என்று காட்டிவிட்டு "நான் போயிட்டு வரேன்" எனக் கையசைத்து விடை பெற்றுச் சென்றான் உதயவர்ஷன்.

அடுத்த நாள் வழக்கம் போல் ஆபீஸ் முடிந்து ஷாலுவை கூட்டி வர சுமதியின் வீட்டிற்கு சென்ற அதி "அக்கா! என்னை பற்றி யார் கேட்டாலும் சொல்லிடுவீங்களா?" என்று சற்று கோபமாகக் கேட்டாள்.

"ஏன் கண்ணு இப்படி கேட்கிற? உன்ன பத்தி இதுவரைக்கும் நான் வேறு யார் கிட்டேயும் சொன்னது இல்ல. நீ என் கூட பழகுறதால உன்ன பத்தி தெரிஞ்சுக்க நிறைய பசங்க வந்திருக்காங்க. யார்கிட்டயும் உன்னை பத்தி மூச்சு விட்டதில்லை. ஆனால் அந்த தம்பிய பார்க்கும்போது சொல்ல தோனுச்சு. அவர் பேச்சுலேயே ரொம்ப நல்லவரா தெரிஞ்சுது" புன்னகையுடன் கூறினார் சுமதி.

"உங்களையும் மயக்கிட்டானா அவன்? சரியான மாயக்காரன். பேசியே மயக்குவான் இல்லல்ல சிரிச்சே மயக்குவான்" கடுப்புடன் பிஸ்கட்டை கொறித்தாள் மாது.

"உன்னையுமா மயக்கிட்டான் அந்த மாயக்காரன்? நீ பேசுவதைப் பார்த்தால் அப்படித்தான் தெரியுது" கிண்டலுடன் கேட்டார்.

"அவன் கிட்ட ஒருக்காலும் மயங்க மாட்டா இந்த அதியநிலா. யாருன்னு தெரியாத ஒருத்தன் கிட்ட விழுந்து அவன் யாருன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தலைவிரி கோலமா அழ நான் தயாராக இல்லை. எனக்கு தெரிஞ்சது உதய வர்ஷன்! ஜஸ்ட் அவன் பெயர் மட்டும் தான்" உறுதியாக மொழிந்தாள் அவள்.

"அந்த தம்பி யாருன்னு தெரிஞ்ச உனக்கு அவர் மேல பாசம் வரும் அதிமா. ஆனால் நான் எதுவுமே சொல்ல மாட்டேன் நீயா என்கிட்ட கேட்கும் வரை"

"அப்படினா நான் ஒரு போதும் அவனை பத்தியும் அவன் ஃபேமிலிய பத்தியும் தெரிஞ்சுக்க போவதில்லை. ஏன்னா நான் உங்க கிட்ட அவன் பத்தி கேட்கவே மாட்டேன். அதுக்கான அவசியமும் இல்லை.

ஆனால் ஷாலு அவனோட ஒட்டிக்கிட்டா. அவளுக்கு யாரையாவது பிடிச்சா ஈஸியா விடமாட்டா. இன்னைக்கு அவனுக்கு ஊட்டலனு அவள் சாப்பிடல. எனக்குன்னு இருக்குற ஒரே உறவு என் ஷாலு ஒருத்தி தான். அவள் என்னை விட்டு போயிடுவாளோனு பயமாயிருக்கு" அவளது மதிமுகத்தில் கலக்கம் அளவுமீறி சாயமிட்டது.

"அதி எதுக்கு இப்படி கலங்குற? உதய் முகத்தை பார்த்தா அப்படியா தோனுது? பாசத்துக்காக உயிரை கொடுக்குற மாதிரி இருக்காரு. உன்னை விட்டு ஷாலுவ பிரிச்சி உயிர் போற வலிய தர மாட்டார்" அவளது தலையை ஆதூரமாக வருடிக் கொடுத்தார் சுமதி.

"எனக்கு புரியுது உதய் அப்படிப்பட்டவர் இல்லைனு தெரியும். மூணு நாள் படிச்சி கொடுத்த அனிதா டீச்சர் ஊருக்கு போய்ட்டானு ஒரு நாள் பூரா அழுதா. நர்சரி போக மாட்டேன்னு அடம் பிடிச்சா. ஒரு வேளை உதய்யும் திடீர்னு வராம போயிட்டா இவ எப்படி தாங்குவா?" என்று கூறும் போதே அவளது குரல் கரகரத்தது.

உதய வர்ஷன் சென்றால் தாங்க முடியாதது ஷாலுவால் மட்டுமல்ல அவனது இதயத் திருடி அதியாவினாலும் தான் என்று அவள் குரலில் இருந்த உணர்வே சுமதிக்குச் சொல்லியது.

"அதி சொன்ன மாதிரி நிஜமாகவே நீங்க மாயக்காரன் உதய் தம்பி" என்று உள்ளுக்குள் மகிழ்ந்தார் அதி மீது உளப்பூர்வமாக பாசம் கொண்ட அந்த ஜீவன்.

நிலவு தோன்றும்....!!

✒️ ஷாம்லா ஃபாஸ்லி❤️
 
Top