• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
இதய வானில் உதய நிலவே!

நிலவு 05

மலர்ந்த முகத்துக்குப் பின்னால், விரியும் புன்னகைக்குப் பின்னால், கலகலப்பான பேச்சுக்குப் பின்னால் இத்தனை வலிகளா?

இதற்கு தனது வாழ்க்கையே பரவாயில்லை என்றிருந்தது. இருபது வருடங்களாக குடும்பம் பாசம், சந்தோஷம் என்று வாழ்ந்தாள். இப்போது அவளுக்கு ஷாலு இருக்கின்றாள். ஆனால் இவன் தாயின் ஸ்பரிசம் கூட உணர்ந்திடாதவன்! தந்தையின் தோளில் கூட சாய்ந்திராதவன்! அவர்களின் ஒற்றைப் பார்வை கூட தன் மீது படும் பாக்கியத்தை இழந்தவன்!

உறவுகளோடு கூடி செல்லப் பையனாக வாழ்கின்றவனாக குறும்பு செய்து பெற்றோரின் செல்லக் கோபத்திற்கு ஆளாகுபவனாக அல்லவா நினைத்தாள்? ஆனால் அத்தனையும் தலைகீழாக அல்லவா இருக்கின்றது?

அவள் முன் சொடக்கிட்டு "இது குட்டி! ஏன் அப்படி இருக்கீங்க? எனக்கு ஏதோ தரேன்னு சொன்னிங்களே தாங்க பார்க்கலாம்" கையை நீட்டினான் ஆவலுடன்.

"இல்ல.. அது நான் சும்மா சொன்னேன்" தடுமாறினாள்.

"அதி...!! உங்களுக்கு பொய் சொல்ல வராதுல்ல. எதுக்கு மறைக்கிறீங்க?"

"இல்ல வேணாமே உதய்" மென்குரலில் ராகமிசைத்தாள்.

"நோ வே. நீங்க தந்தே ஆகனும்" அவன் விடாப்பிடியாய் நிற்க, தனது பையில் இருந்த லஞ்ச் பாக்ஸ்சை எடுத்துக் கொடுத்தான்.

"வாவ் கேரட் அல்வாவா?" என்று மகிழ்வுடன் திறந்தவனின் விழிகள் பெரிதாக விரிந்தன. பெட்டிக்குள் இருந்த குலாப் ஜாமூனை விட அவன் மனம் தேனாய் இனிக்க தன் இதய தேவதையை இதழ் கடித்து நோக்கினான் அதியின் உதி.

காலையில் அவளிடம் வந்து "எனக்கு பிடித்த எல்லாம் கேட்க முன்னாடியே அங்கிள் வாங்கித் தராருல்ல. அவருக்கும் நாம ஏதாச்சும் கொடுக்கலாமா?" ஷாலு அப்படிக் கேட்டதும் "குலாப்ஜெக்ட் செஞ்சு தருவீங்களா இதயா?" என்ற கேள்வியுடன் மனதில் தோன்றினான் வர்ஷன்.

"சரி பாப்பா" தலையசைத்து ஷாலுவைக் குளிப்பாட்டி உடைமாற்றிவிட்டு குலாப் ஜாமுன் செய்தாள்.

அதை செய்து முடிக்கும் வரையிலும் அவள் மனம் வர்ஷுவை நினைத்து இனித்தது. "ம்ஹூம்!நீ சொன்னா மாதிரி காதல் இதுக்கு காரணம் இல்ல வர்ஷன். வெறும் அன்பு மட்டும் தான்" அவளே அதற்கு காரணமும் கண்டுபிடித்துக் கொண்டாள். லஞ்ச் பாக்ஸில் அடைத்து அவனுக்காக எடுத்து வந்தாள்.

"எனக்காக செஞ்சு கொண்டு வந்தீங்களா?" அவன் நம்ப முடியாதவனாகக் கேட்டாலும் குரலில் அத்தனை உற்சாகம்.

"இல்லை! பக்கத்து வீட்டு கிழவனுக்கு செஞ்சேன். போடா சும்மா" என தீயாக முறைத்தாள்.

"அப்போ எனக்குத் தான் கொண்டு வந்திருக்கீங்க. அப்புறம் எதுக்கு கொடுக்க மறுத்தீங்க?" யோசனையோடு நெற்றியை நீவிக் கொண்டான்.

"நான்... நான் இதை கொடுத்தால் உன் மேல வந்த பரிதாபத்தில் தந்தேன்னு நினைச்சுப்ப"

"ஹேய்! உங்களைப் போய் அப்படி நினைப்பேனா? பரிதாபத்தில் வந்தாலும் அந்த அன்பு என் மேல வந்தா அதை நான் தாராளமாக சந்தோஷமாக ஏத்துப்பேன்" என்று மனமாறக் கூறியவனை புன் சிரிப்புடன் ஏறிட்டாள் அவனது காதல் கண்மனி.

"தவமாய்த் தவமிருந்தும் கிடைக்காத அரிய வரத்தை உன் ஒற்றை இதழ் விரியலில் பெற்றுச் சிலிர்த்தேன் சிணுங்கும் நிலவே" தலை சாய்த்து சொன்னான் ஆடவன்.

"ஆஹ்ஹா! உன் கவியினில் நானும் குளிர்ந்தேன்" தானும் கவிதை போல் கூறினாள் அதியா.

"அட! வர வர நீங்களும் என்னைப் போலவே மாறிட்டு வரீங்க. குலோப்ஜாமூனை எனக்குத் தராம மறைக்க பார்த்ததுக்கு உங்களுக்கு தண்டனை இருக்கு"

"வாட் தண்டனையா?" வாயைப் பிளந்தாள் அவள்.

"தண்டனை என்னனா நீங்க உங்க கையால எனக்கு இதை ஊட்டி விடணும்" ஏக்கத்துடன் அவளைப் பார்த்தான்.

'எனக்கு ஊட்டி விடுங்க அம்மா' என்று ஒரு குழந்தை தன்னிடம் கெஞ்சுவது போல் இருக்க "உன் தண்டனையை நான் ஏத்துக்கிறேன்" அவன் வாயருகே கையைக் கொண்டு போனாள்.

உதய் "முழு மனசோடு தானே?" கேள்வியாய் அவள் வதனத்தைப் பார்வையிட,

"இல்ல முக்கால் மனசோட. கடுப்பாக்காமல் சாப்பிடுடா போண்டா" கடுகடுத்தவளிடம் "எஸ் ஐ லைக் திஸ் ஃபேஸ்! நீங்க கடுப்பாகுறது ரொம்ப நல்லா இருக்கு. உங்களை கோபப்படுத்தி பார்க்குறதுல செம கிக்குங்க" என கள்ளச் சிரிப்பு சிரித்து வாயைத் திறந்து அவள் ஊட்டியதை வாங்கிக் கொண்டான்.

'அருமை!, சூப்பர் அதி, சான்ஸே இல்ல,' இப்படி ஏதாவது அவன் சொல்வான் என்று அவள் ஆவலுடன் எதிர்பார்க்க மௌனமாகவே இருந்தான் வர்ஷு.

"ஏன் அமைதியாகிட்ட? பிடிக்கலையா? நல்லா இல்லையா?" கேள்விகள் ஈட்டிகளாக துரித கதியில் பாய்ந்தன.

மெதுவாக தலை தூக்கியவனின் கண்கள் கலங்கி இருந்ததுவோ?
"சில சமயங்களில் உணர்ச்சிகள் நம்பளை பேச விடாமல் செஞ்சுடுது இதயா! இப்போ என் இதயம் வழக்கத்துக்கு மாறா ரொம்ப ஸ்பீடா துடிச்சுக்கிட்டு இருக்கு. உணர்வுகள் என் கட்டுக்குள்ளையே இல்லை" இரு கைகளையும் பின்னந் தலையை வைத்து அழுத்தமாக கோதினான்.

அவன் உணர்ச்சிவயப்படுவது புரிந்தது. அவளிடம் இருந்து நகர்ந்து அமர்ந்தான்.

"தண்டனையை எனக்கு தந்துட்டு நீ எதுக்கு உம்மனா மூஞ்சி மாதிரி இருக்கே? பேசு டா"

"ஏன்? என் குரல் கேட்காமல் உங்களால ஒரு நிமிடமும் இருக்க முடியாதா?" தன்னை சட்டென சரி செய்து பழைய நிலைக்கு மீண்டான் உதய வர்ஷன்.

"அய்ய! ஆசை தோசை" என்று இதழ் வளைத்தாலும் அவன் கூறியது முற்றிலும் சரியே. எப்பொழுதும் வாய் மூடாமல் பேசுபவனின் நொடி நேர அமைதி கூட அவளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

"அது சரி. பொண்ணுங்க என்னைக்கு உண்மையை ஒத்துக்கிட்டு இருக்காங்க?" அவளை வம்பிழுக்கலானான் காளை.

"ஆமாம்மா நாங்க பேசுறது எல்லாமே பொய். ஆம்பளைங்க மட்டும் அரிச்சந்திரனுக்கு கூடப் பிறந்த உண்மை விளம்பிகள்" நொடித்துக் கொண்டாள் மாது.

"எல்லா ஆம்பளைங்களும் நமக்கு எதுக்கு? என்னை பத்தி சொல்லுங்க. நான் உன்னை விளம்பி தானே?" நாடியில் கையூன்றி அவளை ஆராய்ந்தான்.

"கொஞ்சூண்டு! அரிச்சந்திரனுக்கு கூடப் பிறந்த தம்பியா சொல்ல முடியாது. அவனோடு பெரியப்பா பையன்னா ஓகே"

"ஏன் ஏன். அந்த லெவலுக்கு சொல்றீங்க. நான் பொய் சொல்லி இருக்கேனா?"

"இல்ல தான் ஆனா பிராடு வேலை பார்த்திருக்க. எம்டி பையனுக்கு பர்த்டே அதனால லீவுனு பார்த்தால் எனக்கு மட்டும்தான் லீவு அப்படித்தானே? அந்த சொட்டத்தலை என் கிட்ட சொன்னான்" சற்றே கோபமும் துளிர்த்ததே அவள் குரலில்.

"ஓஓ சொல்லிட்டாரா?" இளித்து வைத்தான்.

"சொல்லிட்டாரு சொல்லிட்டாரு. உதய் தம்பி ரொம்ப நல்லவரு! வாள் வீச்சுல இல்லல்ல வாய் வீச்சுல வல்லவரு. அவர் இருந்தா உன் பக்கத்துல எதிரிங்களை நெருங்க பீஸ் பீஸா துவம்சம் பண்ணிட்டு வெற்றிக்கொடியை பறக்க வெச்சிடுவார்னு சொன்னான்.

என் வாழ்க்கையை சோழ சேர பாண்டியன் உக்கிரமா செய்யுற யுத்தமா நினைச்சிட்டான் போல. குதிரைப் படை, எதிரி, வாள் , அம்புன்னு பேசினான் டொமேட்டோ! அவன் வாய்லையே ஒன்னு விடத் தோணுச்சு" படபடவென வெடித்தாள் அவள்.

ஒரு நாள் மாலை நேரத்தில் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தான் உதய். அங்குமிங்கும் சந்தோஷம் பொங்க பெற்றோர் கைப்பிடித்து நடக்கும் குழந்தைகள். பட்டம் விட்டு மகிழும் சுட்டிச் சிறுவர்கள். ஒரு குடைக்குள் கரங்களை ஒன்றாகக் கோர்த்து காதல் மொழி பேசும் காதலர்கள். தம் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் விளையாடுவதை ஓரமாக அமர்ந்து பார்த்து ரசிக்கும் தாத்தா பாட்டிகள். காரிகைகளின் பின்னால் விசிலடித்துச் சுற்றும் இளங்காளைகள் என்று ஆர்ப்பாட்டமாக இருந்தது அக்கடற்கரை.

ஆனால் உதயவர்ஷனின் விழிகளோ ஆர்ப்பரித்திடும் கடலையே பார்த்திருந்தது. ஆசையோடு, காதலோடு, பொங்கும் பாசத்தோடு கரையை முத்தமிட்டு ஒளிந்து கண்ணாமூச்சி ஆடும் அலைகளைத் தான் ரசித்தான் அவன்.

காணும் இடமெங்கும் அவனது இதயா நிற்பது போல் இருக்க கண்களை மூடி காதல் காற்றை உள்ளிழுத்தவனின் மனதில் சிறு வயதில் ஆசையோடு கற்று பாரதியாரின் 'கண்ணம்மா என் காதலி' என்னும் தலைப்பிலுள்ள ஒரு பாடல் நினைவுக்கு வந்தது.

மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் அமர்ந்து வானத்தையும் கடலையும் நோக்கியிருந்த பாரதியின் கண்களைப் பின்னாலிருந்து ஒரு கை மறைக்க அதனைத் தொட்டு அது தனது காதலை கண்ணம்மா என்பது உணர்ந்தேன் அவள் கையை விலக்கி திடீரென கட்டிப்பிடித்துக் கொள்கிறார்.

அப்போது கண்ணம்மா நெறித்த திரைக்கடல், நீல விசும்பு, திரித்த நுரை, சின்னக் குமிழிகள் ஆகியவற்றில் எதைக் கண்டாய் என்று பாரதியிடம் கேட்க அவர் பதில் சொல்வதாக இப்பாடல் அமைகின்றது.

நெறித்த திரைக் கடலில் நின் முகங் கண்டேன்.
நீல விசும்பினிடை நின் முகங் கண்டேன்.
திரித்த நுரையினிடை நின் முகங் கண்டேன்.
சின்னக் குமிழிகளில் நின் முகங் கண்டேன்.
பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்றதுன் முகமன்றிப் பிரிதொன்றில்லை.
சிரித்த ஒலியினுள் கை விலக்கியே திறுமித் தழுவியதில் நின் முகக் கண்டேன்

அதாவது பார்க்கும் எல்லா இடங்களிலும் கண்ணம்மாவின் முகத்தையே பார்த்ததாக கவிஞர் கூறுகின்றார். இப்படித்தானே தனக்கும் காணும் அனைத்திலும் தனது தியா'மாவின் முகம் தெரிகிறது என்று எண்ணிய காளையில் மனம் காதலில் உருகியது.

"வர்ஷு" என்ற ஷாலுவின் இனிய குரல் அவன் செவி தீண்ட கருமணிகள் அங்குமிங்கும் அலைபாய அழகு தேவதையாக வந்து கொண்டிருந்தாள் அதிய நிலா.

அவளது கையை விட்டுவிட்டு வர்ஷுவைக் கண்ட ஆனந்தத்தில் ஓடி வந்து கொண்டிருந்தாள் ஷாலு. அவளது ஓட்டத்தைக் கண்டு அவனுக்குள் அச்சம் சூழ துள்ளி எழுந்து அவளை நோக்கி வேக எட்டுக்களுடன் நடக்கலானான்.

கால் தடுக்கி விழப் போன மலர் மொட்டைக் கண்டு "பாப்பா" என்று நிலா பதற, அவளை விழாமல் தாங்கி தன் வலிய கரங்களில் ஏந்திக் கொண்டான் உதய்.

"ஹே க்யூட்டி! கண்ணைத் திற" பயத்தில் கண்களை இறுகமூடிய ஷாலுவின் கன்னத்தைத் தட்ட,

அவர்களது அருகில் வந்து "அடியே ஷாலு! இப்படி ஓடக்கூடாது என்று சொல்லி இருக்கேன்ல. விட்டா விழுந்திருப்ப. பயந்தாங்கொள்ளி மாதிரி இப்போ மட்டும் இருக்கிறதைப் பாரு" என்று திட்டினாள்.

"ஷாலு பாப்பாவை திட்டாத அத்து" வர்ஷனின் புஜத்தில் ஷாலு தலையை புதைத்துக் கொண்டாள்.

"ஆமா தியா! அவ ரொம்ப பயந்து போய் இருக்கா. திட்டாதீங்க பாவம் ஷாலு" அவளின் தலையை வருடி விட்டான்.

"அவளுக்கு ஒரு நாளைக்கு இருக்கு. வரவர ஓவராத்தான் பண்ணுகிறாள்" அவனது காதைச் செல்லமாகத் திருகினாள்.

"ஆஆ" என்று பெரும் குரல் எடுத்துக் கத்தினாள் சின்னவள்.

"இருந்தாலும் இந்த ரியாக்ஷன் உனக்கு ஓவர் ஸ்வீட் பேப்ஸ்" சிரிப்புடன் அவள் முடியைக் கலைத்து விட்டான்.

காசுகள் சிதறியதைப் போல சிரித்த ஷாலு மண்ணில் அமர்ந்து விளையாடத் துவங்கினாள். வெள்ளை சுடிதாரில் கூந்தலை விரித்து கிளிப்பிற்குள் அடக்கி எளிமையான அழகியாய்த் திகழ்ந்த தன்னவளைப் புன்னகையுடன் பார்த்தான் மன்னவன்.

"என்ன பார்வை?" ஒற்றைப் புருவம் உயர்த்தினாள் அதி.

"வானத்து வெண்ணிலவு பூமிக்குத் தரிசனம் கொடுத்தது தன் உதய சூரியனைக் காணத்தானோ...??" அவளைக் கேள்வியாக ஏறிட்டான் கண்ணாளன்.

"ஓஹோ நான் உன்னைக் காண வந்தேன்னு மறைமுகமா சொல்லுறியா?"

"அதே அதே! டியூப்லைட் இதயா இப்போ எல்லாம் பிரைட்டா எரியுறாங்க. முன்னேற்றத்திற்கு பாராட்டு" என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தான்.

"ஏதோ இன்னைக்கு மட்டும் நீ வந்த பின்னால நான் பீச்சுக்கு வந்துட்டேன். அதனால ஓவரா ஆலடிக்காத எப்பவும் நாங்க ஃபர்ஸ்ட் வருவோம்" என முறைத்தாள்.

"நீங்க அப்படி நினைச்சா அது தப்புங்க. உங்களை மீட் பண்ணுன அத்தனை இடத்துக்குமே உங்களுக்கு முன்னால வந்தது நான். நீங்க தான் என்னைக் காணல. அப்போ உங்களுக்கு என் மேல எதுவும் இல்ல. இப்போ ஒரு ஸ்பார்க் வந்திருக்குல்ல. அதனால உங்க கண்ணுக்கு இந்த உதய் தெரியுறான்" என்று டீ-சர்ட் காலரை இழுத்து விட்டுக் கொண்டான் அவன்.

"ஸ்பாக்கும் இல்லை ஒரு மாங்காயும் இல்லை! சும்மா கற்பனைக் குதிரைய தறகெட்டு ஓட விடாத"

"கடிவாளம் உங்க கையில இருக்கும் போது குதிரை எப்படி என் கட்டுக்குள்ளே வரும்? தறிக்கட்ட கற்பனைக் குதிரையையும், இந்த இதயக் குதிரையையும் உங்களால மட்டுமே அடக்க முடியும்" நெஞ்சில் கை வைத்து காதல் பாவிசைத்தான் உதயா.

"உடனே உன் காதல் வீணையை வாசிக்க ஆரம்பிச்சுராத. நீ பொங்காம உன்னை விட பொங்கிக் கொண்டு இருக்கிற கடலைப் பாரு"

"அதைத் தானே எவ்ரி சண்டே ஈவினிங் இங்கே வந்து பார்த்துட்டே இருப்பேன். அந்த அலைகள் உறவுகளை நாடிப் போற என்னை மாதிரி இருக்கும். அலை எப்போதுடா என்னை வந்து தொடும்னு ஏங்கிட்டு இருக்குற துரதிஷ்டசாலியான கரையை ஒத்திருக்கும் எனக்கு பாசம் காட்ட யாரும் இல்லையானு ஏங்குற என் மனசு. அப்படியே கொஞ்ச நேரம் கவலையாக ஃபீல் பண்ணுவேன்.

அப்புறமா நாம எதுக்கு கவலைப்படணும்? இதை விட கொடூரமா சிலவங்க லைஃப் இருக்கும். கடவுள் எனக்குத் தந்த இந்த வாழ்க்கையை நான் சந்தோஷமா வாழனும்னு டக்குனு ஹேப்பி மோடுக்கு போயிருவேன். சந்தோஷமா எந்தவித கவலையும் இல்லாமல் விளையாடுற பசங்களை ரசிச்சிட்டு தண்ணில கொஞ்சமா காலை நனைச்சிட்டு போயிடுவேன்" கதை போல சொல்லும் அவனை தலை திருப்பிப் பார்த்தாள் அதியா.

கோதி விட்டிருந்தாலும் அடங்காமல் நெற்றியைத் தீண்டி சில்மிஷம் செய்யும் முடியைப் பார்த்து "இவனைப் போலவே அடங்காது போல இவன் முடியும். சரியான மாயக்காரன்" என்று மனதில் சொல்லிக் கொண்டாள் பாவை.

தனது அலைபேசியை அதியின் கையில் வைத்து "உங்களுக்கு பார்க்க தோணுச்சுனா பாருங்க" என்று விட்டு ஷாலுவை நோக்கி சென்றான்.

"இதை நான் எதுக்கு பார்க்கணும்?" என்று நினைத்து பார்க்காது விட்டாள்.

"அய் அங்கிள்! என் கூட விளையாட வந்தீங்களா?" என்று ஷாலு கையைத் தட்ட, "ஆமாடா நமாம வீடு கட்டலாம்" என்று அவளோடு சேர்ந்து மணல் வீடு கட்டி விளையாட ஆரம்பித்தான்.

கையில் இருந்து அவனது ஃபோனை பார்த்து அதியாவுக்கு இதைப் பார்த்தால் தான் என்ன? சும்மா ஏதாவது வீடியோஸ் இருந்தா பார்க்கலாம் என்று அன்லாக் செய்து உள் நுழைய ஷாலுவின் ஃபோட்டோ அவளைப் பார்த்து சிரித்தது.

"ஷாலு போட்டோ எப்படி? ஒருவேளை என்னையும் எடுத்திருப்பானோ?" மனம் படபடவென அடித்துக் கொள்ள அவனது அலைபேசியை அலசி ஆராய்ந்தாள். அவளது போட்டோ ஒன்று கூட இல்லை.

அவளை சந்தித்த ஒவ்வொரு நாளும் ஷாலுவை மட்டும் ஃபோட்டோ எடுத்திருந்தான். அவள் சிரிக்கும் போது, விளையாடும் போது, முறைக்கும் போது, கோபப்படும்போது என விதவிதமாக இருந்தது

அத்தோடு அந்த போனில் அவனது போட்டோ ஒன்று கூட இல்லை என்பதுவே அதிசயம்! ஷாலுவின் புகைப்படம் தவிர இன்னும் பல குழந்தைகள் மற்றும் கடல், வானம், நிலா என்பனவற்றை அவன் ரசனையுடன் போட்டோ எடுத்திருந்தான்.

"ப்பாஹ்! கலாரசிகன் டா நீ. இந்த பீச் போட்டோ கலக்கலா இருக்கு" என்று தனக்குள் கூறினாள் நிலா.

அவனது ஒவ்வொரு நடவடிக்கையும் புதிதாக இருந்தது. வேறு ஆடவர்கள் என்றால் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்து இன்ஸ்டா ஃபேஸ்புக் என்று அப்லோட் செய்து லைக்ஸ் வாங்கி குவிப்பதில் அலாதி இன்பம் காண்பர்.

ஆனால் இவன்? இதமான இயற்கையை, உலகின் இன்பமான குழந்தைகளை படம் பிடித்தும் அவர்களை ரசித்தும் மகிழ்பவன்.
அவனது செய்கைகள் ஒவ்வொன்றும் பெண்ணவளை வியக்கவ்ம் ரசிக்கவும் வைத்தன.

ஷாலுவைத் தனது பாதங்களில் நிற்க வைத்து அவள் கையைப் பிடித்து நடை பயின்று கொண்டிருந்தான் உதய வர்ஷன். ஷாலு கன்னங்களில் ஆழமாகக் குழி விழும் அளவிற்கு சிரித்துக் கொண்டே இருந்தாள். இவனுடன் இருக்கும் போது அவளது மகிழ்விற்குப் பஞ்சமே இல்லை.

அண்ணன் மகளோடு அவளுக்கு இணையாக ஆட்டம் போடும் அந்த குழந்தை மனம் உடைய ஆடவனைப் பார்த்தாள்! பார்த்துக் கொண்டே இருந்தாள் அதியா! ரசிக்க வைத்தான் உதயா! இமைக்க மறந்தாள் இதயா!

நிலவு தோன்றும்....!!

✒️ ஷம்லா பஸ்லி❤️
 
Top