• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முல்லை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 4, 2022
Messages
30
மேக நிலவே 10

நெஞ்சை பிடித்தபடி பார்வதி கீழே விழுந்திருக்க அத்தனை பேரும் அவரை சூழ்ந்திருந்தனர்.

"வா அப்பத்தா ஹாஸ்பிடல் போலாம்" என அவரை தூக்கிட முயன்றான் ஜீவன்.

"இல்ல அப்பு! நான் வரமாட்டேன்.. ஜானு கல்யாணத்தை பார்க்காமல் நான் எங்கேயும் வர மாட்டேன்.."

"அய்யோ! இன்னைக்கு இல்லனாலும் இன்னொருநாள் கல்யாணம் நடக்க தான் போகுது.. நீ இருந்தா தானே பார்க்க முடியும்?" ஜீவன் கோபமாய் சொல்ல,

"இல்ல.. இல்ல.. அவ கல்யாணத்தை பாக்குறதுக்கு முன்னாடி எனக்கு எதுவும் ஆகாது" என்றார் விடாப்பிடியாய்.

"ம்மா! என்ன உளறுறீங்க? மாப்பிள்ளையே போய்ட்டான்.. எது உண்மை எது பொய்னு யாருக்கு தெரியும்? சும்மா பினாத்தாமல் வாங்க.. ஆஸ்பத்திரி போகலாம்" மீண்டும் மீண்டும் ஜனனியை நான் நம்பவில்லை என்பதை போலவே பேசினார் சண்முகம்.

"மாமா! நான் தப்பெல்லாம் பண்ணல மாமா.. அந்த பையன்.. அவன் என்கிட்ட அடி வாங்கின கோபத்துல தான் இப்படி பண்ணி இருப்பான்" சண்முகத்தின் முன் இதுவரை பேசாத ஜனனி இப்போது அழுதபடி கூற அதை அவர் கண்டுகொள்ளவில்லை.

"என் பேத்தியை பத்தி எனக்கு தெரியும் டா.. ஊர் பேசுதேன்னு எல்லாம் எனக்கு கவலை இல்ல.." என்றவருக்கு வலி அதிகமாக, அது அவரது முகத்தில் தெரிந்தது.

"பாரும்மா! என்ன பாரும்மா! வாங்க ஹாஸ்பிடல் போகலாம்" என கண்ணீர் துளிர்க்க கூறினாள் ஜனனி.

"அப்பு உன் கழுத்துல தாலி கட்டினா தான் நான் வருவேன்" பேச்சு குழறலாய் வர அவர் கூறிய விஷயம் ஜனனிக்கு அப்படி ஒரு அதிர்ச்சி.

"அம்மா! பெத்த அம்மான்னு கூட பார்க்க மாட்டேன்.. என்ன சொல்றிங்க? என் மகனுக்கு இப்படி ஒரு கல்யாணமா? மரியாதையா ஹாஸ்பிடல் வாங்க" சண்முகம் கர்ஜிக்க,

"ம்மா! என்ன பேசுற நீ? இப்ப எந்த அவசரமும் இல்ல.. இன்னொரு நல்ல பையனா நம்ம ஜானுக்கு பார்க்கலாம்" என்றார் சகுந்தலா.

"வர மாட்டேன்.. இந்த கல்யாணம் நடக்காமல் இங்கே இருந்து நான் வர மாட்டேன்" என நெஞ்சை பிடித்தபடியே பேசினார் பார்வதி.

"அப்பத்தா! இப்ப என்ன நானே கல்யாணம் பண்ணிக்குறேன்.. ஆனா இன்னைக்கு வேண்டாம்.. நீ வா" என மீண்டும் ஜீவன் தூக்கிவிட பார்க்க,

"நம்பமாட்டேன்.. உங்க யாரையும் நம்பமாட்டேன்.. உன் அப்பனையே எனக்கு தெரியும் டா.. இந்த சபையில இத்தனை பேர் முன்னாடி நின்ன என் ஜானுவோட கல்யாணம் இதே சபையில தான் நடக்கணும்" முடிவாய் கூறினார் பார்வதி.

"அது நான் உயிரோட இருக்குற வரை நடக்காது" சண்முகம் சொல்ல,

"அப்பா! அப்பத்தா தான் பயத்துல பேசுறாங்கன்னா நீங்களும் கூட கூட பேசுறிங்க" என்ற ஜீவன் எதுவோ பார்வதியிடம் சொல்லவர ஒரே அடமாய் மறுத்துவிட்டார்.

"அம்மா! நீ என்ன சொன்னாலும் இந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கமாட்டேன்" சகுந்தலா சொல்ல, அவரை கேள்வியாய் பார்த்தான் ஜீவன்.

"எனக்கு என் பேரன் பேத்தி சம்மதம் போதும் போடி" என்றே அப்போதும் பார்வதி சொல்ல, பார்வதிக்கும் சகுந்தலாவிற்கும் தான் வாக்குவாதம் நீண்டது.

நீண்ட நேரம் அப்பத்தாவை இப்படியே விடுவது நல்லதில்லை, அவர் உடல் அதற்கு ஒத்துழைக்காது என சில நிமிடங்களிலேயே முடிவெடுத்துவிட்டான் ஜீவன்.

"சரி அப்த்தா! நான் கல்யாணம் பண்ணிக்குறேன்" ஜீவன் வாக்குவாதத்தின் இடையே சத்தமாய் கூற,

"டேய்" என சண்முகம் கத்திவிட,

"இது என்னோட லைஃப் பா.. நான் முடிவு பண்ணிட்டேன்" என்றான் ஜீவன்.

"முடியாது! நீ யாரு டா என் பொண்ணு கழுத்துல தாலி கட்ட?" என சகுந்தலா கேட்க, அத்தனை பேருக்கும் அதிர்ச்சி என்றாலும் ஜீவனுக்கு தான் அதிக அதிர்ச்சி.

"பாரு! அத்தை அத்தைனு சொல்லுவியே.. என்ன வார்த்தை சொல்றா பாரு.. மரியாதையா என்கூட வந்திடு" சண்முகம் சொல்ல,

"ப்பா ப்ளீஸ்! யார் தடுத்தாலும் இந்த கல்யாணம் நடக்கும்" என்றவன் அடுத்த நிமிடமே தாலியை எடுத்து வந்து ஜனனி கழுத்தில் கட்டியவன் திரும்பியும் அவளைப் பாராமல் பார்வதியை தூக்கிக் கொண்டு ஓடினான்.

ஜனனி அப்படியே பித்து பிடித்தபடி நிற்க, தாலி கட்டும்போதே சண்முகம் தெய்வானை கிளம்பிவிட, சகுந்தலா அந்த இடத்திலேயே புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

"அய்யோ! சொல்ல சொல்ல கேட்காம கட்டிட்டானே.. அண்ணனுக்கு பயந்து தானே வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்.." என்று அழுதிட,

"தன்னைப் பற்றி யாரும் நினைக்கவில்லையே" என மனதிற்குள் கதறினாள் ஜனனி.

பார்வதி பிரஷர் அதிகமாகமல் பார்த்துக் கொள்ள சொல்லி டாக்டர் சென்றுவிட பார்வதியுடன் சகுந்தலா ஹாஸ்பிடலில் தங்கி இருந்தார்.

அன்று இரவு ஜீவன் ஒரு முக்கியமான வேளையில் மாட்டிக் கொள்ள ஜனனி தனியே இருந்தவளுக்கு வாழ்க்கை பூதாகரமாய் தான் தெரிந்தது.

சண்முகம் ஒரு வார்த்தை கூட மகனிடமும் பேசவில்லை. ஜீவன் அதற்கு அசரவும் இல்லை.

அடுத்தநாள் காலை வந்து பார்த்தபோது ஜனனி அந்த ஊரிலேயே இல்லை.. அன்னையிடம் கூட சொல்லாமல் தான் சென்றிருந்தாள்.

அந்த ஒரு வருத்தம் மட்டும் தான் ஜீவனிடம் இருந்தது. ஒரு வார்த்தை.. ஒரே ஒரு வார்த்தை கூட பேசாமல் போய் விட்டாள்.

அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவனால் அறிய முடியவில்லை. ஆனால் வாழ்க்கை தன்னை எதை நோக்கி இழுத்து செல்கிறதோ அதைப் பற்றிக்கொண்டு வாழ்ந்துவிட வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாய் இருந்தான்.

ஒரு மாதம் பொறுத்தவன் அடுத்த மாதமே சத்யராஜ் மூலம் அங்கே வீடு தேடலானான்.. எப்போது எப்படி அங்கே செல்வது? ஜனனியை எப்படி கூட்டி செல்வது எதுவும் தெரியாது.. ஆனாலும் வீடு தேடிட கூறினான்.

ஐந்து மாதங்களில் சத்யராஜ் பலமுறை ஜனனியைப் பார்திருக்கிறான். ஜீவன் சொல்லின் படி. அவளை கண்காணிக்க கூறவில்லை.. அவளைப் பார்த்து கொள்ளும் படியும் கூறவில்லை. அவள் ஹாஸ்டல் முதல் வேலை பார்க்கும் இடம் வரை அவ்வப்போது முன்பு சகுந்தலா வாயால் சொல்லியிருக்க அதை வைத்து தான் அதனருகிலேயே வீடு பார்க்க சொன்னது கூட.

இது காதலா என்றால் இல்லை.. திருமணம் எனும் பந்தம் செய்யும் மந்திரம் தான் ஜீவனைப் பொறுத்தவரை.

அந்த ஐந்து மாதங்களும் அவன் அவனாகவே இருந்தான். எப்போதும் போலவே தந்தையிடம் பேசினான். அப்பத்தாவை வம்பிலுத்தான்..

ஆனால் எல்லாம் தன் வீட்டிற்குள் தான். காம்பௌண்ட்டின் உள்ளே சகுந்தலாவை எங்கே பார்த்தாலும் பார்க்காதது போல முதலில் செல்ல ஆரம்பித்தான்.

நாளாக நாளாக சகுந்தலாவும் அவனிடம் போய் பேசுவது போல தெரியவில்லை.

பார்வதி ஜீவனிடம் பேசிய போது கூட "அவங்க பொண்ணுக்கு நான் பொருத்தம் இல்லைனு தானே அன்னைக்கு அப்படி பேசினாங்க?" என்று சகுந்தலா காதுபடவே சொல்ல, தாளவே முடியவில்லை சகுந்தலாவால்

அன்று பேசிய பேச்சு அந்த ஒரு வார்த்தை அவனை எவ்வளவு பாதித்தது என்று தெரிந்தபின் அவன் முன் நின்று மன்னிப்பு கேட்கவும் தைரியமில்லை.

அவருக்கும் தெரியும்.. தான் ஒரு வார்த்தை பேசினால் அவன் அனைத்தையும் மறந்து தன்னிடம் பேசி விடுவான் என்று.

ஆனால் அவரால் முடியவில்லை. ஒரே வார்த்தை மன்னிப்பு அதை எப்படி அவனிடம் கேட்பது என தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்.

ஜீவனுமே முதலில் வருத்தம் கொண்டவனுக்கு பின்தான் தன் சில நாட்களில் தன் அத்தையின் எண்ணம் என்னவாக இருக்கும் என புரிய ஆரம்பித்தது.

அதன்பின் அவன் எண்ணம் முழுக்க வேலையிலும் ஜனனியை எப்படி அணுகுவது என்பதிலும் தான் இருந்தது.

எதையும் வெளிக்காட்டமாட்டான். பார்வதி ஜாடையிலும், பேச்சின் ஊடேவும் அவனை யூகிக்க முயற்சிப்பார். கொஞ்சமும் பிடி கொடுக்கமாட்டான்.

ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே
ஓர் நாள் போதுமா?
அன்பே இரவைக் கேட்கலாம்
பகலைத் தாண்டியும் இரவே நீளுமா?


ராகமாய் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அதற்கு ஏற்றார் போல தாளம் போட்டுக் கொண்டிருந்தது ஜீவனின் விரல்கள் ஸ்டீரிங்கில்.

அந்த மாலை மங்கும் நேரமும் சிறிய தூறளும் இந்த பாடலும் அதனுடன் அழகாய் ஒரு பயணமுமாய் ரம்மியமாய் இருந்தது ஜீவனிற்கு.

ஓர் உல்லாச புன்னகை தானாய் அவன் இதழ்களில் வந்து ஒட்டிக் கொண்டது. பாடல் காதினில் கேட்ட பொழுதும் அந்த மாலை நேரத் தூறல் மேல் விழுந்த போதும் அதை ரசிக்கும் மனதை கொஞ்சம் அதட்டி அடக்கி வைக்க வேண்டிய நிலை தான் ஜனனிக்கு.

அவன்முன் இதை எல்லாம் ரசிக்க முடியவில்லையா? இல்லை பிடிக்கவில்லையா? இருந்தும் மறைக்கின்றாளா? இது எதுவும் ஜீவன் கண்களுக்கு தெரியவில்லை.. அவன் அவ்வளவு ரசித்து வந்தான்.

"எனக்கு டிரைவ் பண்றது ரொம்ப பிடிக்கும் ஜனனி.. அதுவும் இந்த மாதிரி கிளைமேட்க்கு எவ்வளவு தூரம்னாலும் கொஞ்சம் கூட டையார்ட்டே தெரியாது.. ம்ம்ம்ம் வாவ்"

மழையினில் மண் வாசத்தை நுகர்ந்து அவன் சொல்ல, ஒரு புன்னகையுடன் கேட்டுக் கொண்டாள்.

"லக்கேஜ் இவ்வளவு வச்சிருக்கியே ஹாஸ்டல்ல? அப்ப திரும்ப வீட்டுக்கு வரவே கூடாதுன்ற பிளான்ல தான் இருந்தியா?" பின்னால் இருந்த அவளின் பைகளை கவனித்துவிட்டு கேட்டான் ஜீவன்.

அமைதியாய் இருந்தாள் ஜனனி.

"பரவாயில்ல சொல்லு! அதான் என்னை பிரண்ட்டா ஏத்துகிட்டயே? வர கூடாதுன்னு தான நினச்ச?"

"அப்படி இல்ல.. ஆனா எப்பவும் வரணும்னு தோணல.."

"ஹ்ம்ம் சேம் அன்ஸ்ஸர் தான் ஆனா தலையை சுத்தி மூக்கை தொடுற.."

....

"எதையும் பேசி பார்க்கணும்னு நினைக்கவே இல்லையா நீ?"

"அதான் சொன்னேனே? அப்ப சிட்டுவேஷன் அப்படி.. அண்ட் நீங்க இப்படி இருப்பிங்கனு நான் நினைக்கவே இல்ல.. ஏதோ பாரும்மா உங்களை பிளாக்மெயில் பண்ணி...ப்ச்"

"ஹ்ம்ம்! இத்தனை வருஷம் ஒரே காம்பௌண்ட்குள்ள தான் இருந்திருக்கோம்.. ஆனா என்னை பத்தி உனக்கு சின்ன அபிப்ராயம் கூட இல்ல? இல்ல! ஆனா விதி எப்படி நம்மை கோர்த்து விட்ருக்கு பாரேன்!" என்று சொல்லி அவன் சிரிக்க, இவளும் இணைந்து கொண்டாள்.

"உங்களுக்கு கூட தான் என்னை பத்தி எதுவும் தெரியாது?" தன்னை அவன் கூறியதும் நீயும் அப்படி தானே என அவள் நினைவூட்டப் பார்க்க,

"யாரு எனக்கா? நான் உன்னை மாதிரி இல்ல பா"

"அப்டினா?"

"அப்டின்னா.. அப்டி தான்"

"சும்மா சமாளிக்காதீங்க" அவள் சொல்ல,

"நான் சொல்லிடுவேன்.. அப்புறம் சண்டை போடக் கூடாது" என்றான்.

"சண்டையா? ஏன்?"

"நீ எப்ப எதுக்கு கோபப்படுவன்னு தெரியலையே! அதான் முன்னாடியே சொல்லி வைக்குறேன்"

"சரி! கோபப்படல.. சொல்லுங்க பார்க்கலாம்"

"ஹ்ம்ம் அப்புறம் உன் இஷ்டம்" என்றவன் சில நொடி அமைதியாய் இருந்து

"உனக்கு மல்லிகை பூ பிடிக்கும் ரைட்டா?" என்க,

"மதுரைனாலே மல்லி தான்னு உலகத்துக்கே தெரியும்.. இதெல்லாம் செல்லாது"

"ஓஹ்! அப்படி ஒன்னு இருக்கா? சரி ஓகே! இப்ப கேளு! உனக்கு சாம்பார் சாதம் புடிக்கும்.. வைட் கலர் புடிக்கும்.. பிஷ் வளர்க்க புடிக்கும்.. கார்டனிங் புடிக்கும்.. ரோஜாவை செடியோட பார்க்க புடிக்கும்.. சிம்பிளா டிரஸ் பண்ண புடிக்கும்.. மெலடி சாங்ஸ் புடிக்கும்.. காமெடி பிலிம்ஸ் புடிக்கும்.. ட்ரைன்ல போக பிடிக்கும்.. அதுவும் ஜன்னல் சீட்ல ஹெட்செட் பாட்டு கேட்க ரொம்ப புடிக்கும்.. குட்டியா பொட்டு வைக்க புடிக்கும்.. அப்புறம்...."

"ஹெல்ல்ல்லோ... வாட் இஸ் திஸ்?" கண்களை விரித்து விரித்து அவன் சொல்வதை எல்லாம் கேட்டவள் இது எப்படி சாத்தியம் என்பதை போல பார்த்தாள்.

"எப்படி?" டீஷர்ட்டில் இல்லாத காலரை தூக்கிவிட்டபடி கேட்டான்.

சந்தேகமாய் அவள் பார்க்க, "உன் மூளை எப்படி மீன் பண்ணுதுன்னு எனக்கு புரியுது.. ஆனா சத்தியமா அந்த மாதிரி எல்லாம் நான் உன்னை வாட்ச் பண்ணினது இல்ல.."

"அப்புறம்?"

"எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச ஒருத்தங்க இருக்காங்க.. அவங்க எப்பவும் உன்னை பத்தி தான் என்கிட்ட பேசிட்டே இருப்பாங்க.. அவங்களுக்கும் என்னை ரொம்ப புடிக்கும்.. ஆனா இப்ப புடிக்குமான்னு தெரியல" சொல்லிவிட்டு அமைதியானான்.

"என்னை பத்தி உங்ககிட்ட யாரு..." என யோசித்தவளுக்கு சட்டென மின்னல் போல ஞாபகம் வந்தது தன் அன்னை.

"அம்மா.." அவள் உச்சரிக்க, இவன் எதுவும் பேசவில்லை. சில நிமிடங்கள் மீண்டும் மௌனம்.

"சரி சொல்லு! உனக்கு என்னை பத்தி என்ன தெரியும்?"

"உங்களை பத்தி.."

"ரொம்ப யோசிக்குற? ஊர் உலகத்துல அத்தை பொண்ணு மாமா பையன்லாம் எப்படி இருகாங்க தெரியுமா?"

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்களும் பேசல.. நானும் பேசல அவ்வளவு தான்"

"ஓஹ்! நான் பேசி இருந்தா மேடம் நீங்க பேசி இருப்பிங்க ம்ம்ம்ம்?"

"மே பீ"

"சரி அதை விடு! எதாவது ஒரு சின்ன விஷயம் கூட தெரியாதா?" மீண்டும் மீண்டும் துருவி துருவிக் கேட்டான் ஜீவன்.

"எனக்கு என்ன தெரியும்...?" கன்னத்தில் விரல் வைத்து யோசித்தாள்.

சில நிமிடங்கள் அவளை யோசிக்கவிட்டு அமைதியாய் இருந்தான் ஜீவன்.

"ஹான் கண்டுபிடிச்சுட்டேன்"

"வாவ்! என்ன?" அவ்வளவு ஆசையாய் கேட்டான்.

"இந்த ஜாப்! இது நீங்க ரொம்ப ஆசைப்பட்டு சேர்ந்த வேலை. ஜாயினிங் லெட்டர் வந்ததும் நீங்க ரொம்ப சந்தோஷப்பட்டு பாரும்மாவை தலைக்கு மேலே தூக்கி சுத்தினிங்க.. சரியா?"

"ஹ்ம்ம் நாட் பேட்.. பரவால்லையே! இவ்வளவு தெரியுமா?" சந்தோசமாய் இருந்தாலும் கிண்டலாய் அவன் கேட்க,

"கிண்டலா? இதுவும் உங்களுக்கு புடிச்சவங்க தான் என்கிட்ட சொன்னாங்க" அவள் சொல்ல சிறிதாய் சிரித்து வைத்தான் தெரியும் என்பது போல.

"அது மட்டும் இல்ல.. எப்பவுமே அவங்களுக்கு உங்களை பிடிக்குமாம்"

"அப்டியா?"

"ஆமா! சந்தேகம் இருந்தா அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம்.."

"நோ நீட்!" பட்டேன்று அவன் சொல்ல,

"ஏன்? ஏன்?" என்றாள் உடனே.

அழகிய அசுரா அழகிய அசுரா
அத்துமீற ஆசை இல்லையா?
கனவில் வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா?


அடுத்த பாடல் ஒலிக்க உடனே ஆஃப் செய்து விட்டான்.

'எதுக்கு வம்பு? கிளைமேட்லேர்ந்து எல்லாமே நல்லா தான் இருக்கு.. இப்ப தான் முகத்தை பார்த்து பேசுறா அதையும் கெடுத்துக்க வேணாம்' தனக்குள் சொல்லிக் கொண்டவன் மழையை ரசித்து வந்தான்.

ஷாப்பிங் என அழைத்து சென்றவன் எதுவும் வாங்காமல் சுற்றி வர அவளும் எதுவும் வாங்குவது போல இல்லை.

"என்ன நீ ஏதாச்சும் வாங்குவன்னு வந்தா எதுவும் வாங்குற மாதிரி இல்ல.."

"நீங்க தானே ஷாப்பிங் சூஸ் பண்ணீங்க? எனக்கு எதுவும் வேணாம் நீங்களே வாங்குங்க.. அப்புறம் நைட்க்கு கலாம்மாவை வர வேணாம்னு சொல்லிட்டேன்.. வெளிலயே சாப்பிட்டு போய்டலாம்.."

"ஹ்ம்ம் ஓகே!" என்றவன்,

"நான் மட்டும் என்ன வாங்குறது? சரி வா பார்க்கலாம்" என்றவன் அவனுக்கு தேவையான சில பொருட்களை வாங்க, ஜனனி எதுவும் வாங்குவதாய் இல்லை.

ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட மீண்டும் ரேடியோவை ஆன் செய்தான். இருவருக்கும் மீண்டும் அமைதி.

அம்மாவைப் பற்றி பேசியே ஆக வேண்டும் நினைத்தவள் எப்படி கேட்பது என யோசித்தபடி இருந்தாள்.

தொடரும்..
 
Top