• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-அத்தியாயம் -25

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
அத்தியாயம் 25

''நிலா காணாமல் போய் இன்றோடு ஒண்ணரை மாசம் ஆச்சுடா...இந்த போலீசு என்ன பண்றாங்கன்னு தெரியலை..பேசாம டிடெக்டிவ் ஏஜென்சிகிட்டே கொடுத்தா என்னெண்ணு இருக்கு'' ஆபீஸ் ரூமிலிருந்து அக்ஷய் வெடித்தான்.

''கரெக்டா கணக்கு வைச்சிருப்பான் போல'' கீர்த்திவாசன் முணுமுணுத்தபடி அவனைப் பார்த்து,

''போலீஸ் தேடிகிட்டுத்தானே இருக்காங்க... டிடெக்டிவ்கிட்டே கொடுக்கணும்னா அவங்க விளாவாரியாக கேட்பாங்க. அப்புறம் உன் ஃபேமிலி, நிலா ஃபேமிலி எல்லாம் சம்பந்தப்பட வேண்டி வரும்.'' என்றான்.

''பச்..எனக்கு என்னமோ போலீஸ் கேசை மூடிட்டாங்கன்னு தோணுது..அதான்..'' அக்ஷய் விரக்தியுடன் கூற,

''ச்சே..அப்படியெல்லாம் இருக்காதுடா. பொறுத்ததுதான் பொறுத்தோம், இன்னும் கொஞ்ச நாள் பொறுப்போம்...பேசாமல் இரு'' என்ற கீர்த்தி, ''இப்பவே என் முதுகுக்கு பின்னால் சாடைமாடையாக ஏதேதோ பேசுறாங்க. இது இவனுக்கு தெரிஞ்சா என்னவாகும்?'' என மனதிற்குள் எண்ணினான்.

''கீர்த்தி...டேய் கீர்த்தி...'' அக்ஷய் மேசைமேலே ஒரு தட்டு தட்ட கீர்த்தி பதறிக்கொண்டு எழுந்தான்.

''என்னடா?''

''எத்தனை தடவை கூப்பிடுறது? எங்கேயோ பார்த்துகிட்டிருக்கே?''

''ஒண்ணுமில்லை''

இவர்கள் பேசிக்கொண்டிருக்க டிஸ்ரிபியூசன் மேனேஜர் சக்திதாசன் வந்தான்.

''சார் நாம எடுத்த விளம்பரம் சரியாக இல்லைன்னு நாலைஞ்சு கிளையண்ட் திருப்பி அனுப்பிட்டாங்க"

''ஏன்..? என்ன சரியாக இல்லை? அவங்க கொடுத்த காசுக்கு அப்படித்தான் வரும்னு சொல்லு போ போ....'' என எரிந்து விழுந்தவனை சக்திதாசன் வினோதமாக பார்த்தபடி,

''சார்..அவங்க பணத்தை திருப்பி கேட்குறாங்க...'' அவன் சொல்ல. கீர்த்தி அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு பிறகு பார்க்கலாம் என்று அவனுக்கு சைகை காட்ட அவன் இவர்கள் இருவரையும் புதிராக திரும்பிப் பார்த்தபடியே போனான்.

''அக்ஷய் அநியாயமா நம்ம கிளையண்டை நம்ம போட்டி நிறுவனங்கள் எடுத்துக்க சான்ஸ் கொடுக்குறே...''

''என்ன பெரிய கிளையண்ட்?; போகட்டுமே எனக்கென்ன?'' என்றான் விட்டேறியாக.

''என்னடா இப்படி பேசுறே? எவ்வளவு லட்சம் நஷ்டம் தெரியுமா?''

''நஷ்டம்? ப்பூ..! எல்லாம் தான் நஷ்டம். அதுக்கு என்ன இப்போ?''

''அக்ஷய் லாபத்தையே மட்டும் பார்த்த நம்ம கம்பெனி நஷ்டமாகப்போகுதடா."கவலையுடன் கூறினான்.

''என்னடா பெரிய நஷ்டம், லாபம் என்று பேசிகிட்டு இருக்கே? லாபம் வந்தா என்ன? நஷ்டம் வந்தா எனக்கென்ன? யாருக்காக உழைக்கணும்? சேர்த்து வைச்சு என்னத்தை கண்டேன்? எனக்கு என்ன பொண்டாட்டியா? குழந்தையா இருக்கு? எதுக்கு இது எல்லாம்? இழுத்து மூடு! எதுக்கு சம்பாதிக்கணும் என்கிறே?'' என்றான் எமோஷனலாக.

''அக்ஷய் கூல்டவுன்! எது மேலேயோ உள்ள கோபத்தை கம்பெனி மேலே காட்டாதே! இப்பவே லேசா புகைய ஆரம்பிச்சாச்சு. நீயே காட்டிக் கொடுத்துடுவே போலிருக்கு அப்புறம் வெளியே தெரியும். மீடியா எல்லாம் சும்மா இருக்குமா?''

''அதுக்கு என்னை என்ன பண்ணச்சொல்றே?'' என்றான் ஒரு மாதிரி பார்த்து.

''நீ கொஞ்சம் அமைதியா இரு.''

''என் நிலமையில இருந்து பாரு..அப்ப புரியும் உன்னை கல்யாணம் பண்ணாமலேயே ஒருத்தி ஏமாத்தினா. என்னை கல்யாணம் பண்ணி ஒருத்தி ஏமாத்திட்டா...சொல்லாமல் கொள்ளாமல் ஒரு பொண்டாட்டி போனா எந்த ஆண் மகனால பொறுமையா இருக்க முடியும்? இது நாள் வரை உன்கிட்டே சொல்லாத ஒன்று இன்னைக்கு சொல்றேன் கேட்டுக்கோ...! நிலா போனது ஃபஸ்ட் நைட் நடந்த அடுத்த நாள். நன்றாக ஒண்ணையும் ரெண்டையும் கூட்டிப்பார் புரியும்..என்கிட்டே என்னமோ அவளுக்கு பிடிக்கலை...இல்லைன்னா நா...நா..நான் ஆ...ஆம்பிளை இ...இ...இல்லையோன்னு அ..தனாலதான் அவ..அவ..'' திணறினான்.

''ச்சே உளறாதே!'' என்றான் கீர்த்தி அவசரமாக.

''இல்லைடா! அவ ஏற்கனவே போறதாக திட்டம் போட்டு வைச்சிருந்தான்னா எதுக்கு என்னை தொட அனுமதிக்கணும்? இந்த கோணத்திலே இருந்து பாரு. எனக்கு தெளிவா புரியுது! குறை என்கிட்டே தானோ என்று தோணுது! அப்படி நினைக்கவே எனக்குள்ளே என்னவெல்லாமோ நிகழுது. சில நேரங்களில் சூசைட் பண்ணிகிட்டா என்னெண்ணு தோணுது..'' உடைந்த குரலில் கூறினான் அக்ஷய்.

''ச்சிச்சீ....! சும்மா உளறிக்கிட்டு இருக்காதே! நம்ம நாட்டு பொண்ணுங்க எப்பேற்பட்டவன் கணவனாக அமைஞ்சாலும் அவனை தெய்வமாக கொண்டாடுவாங்க. அப்படிபட்டவங்க அற்பத்தனமான ஒரு விசயத்துக்காக..'' எனத் தொடங்கிய கீர்த்தி, மற்றவன் இலக்கில்லாமல் வெறித்தபடி இருக்க அவனைக் கீர்த்தி தோளில் தட்டி,

''நீ முதல்லே என்கூட வெளியில வா! காலையில வந்ததிலிருந்து இதுக்குள்ளேயே முடங்கி கிடக்குறே! அப்புறம் நைட் ஆனா தேடுறேன் பேர்வழின்னு பனியில எல்லா இடமும் அலையுறது. குளிர் பிடிச்சு தொண்டை கட்டி நீ எவ்வளவு அவஸ்தைபட்டே? வா வெளியே! சும்மா உலாவிவிட்டு வரலாம்.'' என அவனைது கைகளை பிடித்து கொண்டு போனான்.

இவர்கள் பேசிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் கேட்ட சக்திதாசன் மனசு கெக்கலிட்டது. அவனுக்கு புது சேதிகிடைத்த சந்தோசத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை.

''அட இதுதான் சங்கதியா? அதான் ரெண்டு பேரும் தொழிலை கூட கவனிக்காமல் எப்ப பார்த்தாலும் தனியா பேசிக்குறாங்களா? இதை யார்கிட்டேயாவது சொல்லணுமே.. இல்லைன்னா எனக்கு தூக்கமே வராதே..கைகள் பரபரவென்று இருக்கே.. யார்கிட்டே சொல்லலாம்?'' என யோசித்தவன் ஒரு மிடுக்கு நடையுடன் வெளியேறினான்.

யூனிட்டில் ஆறு தமிழர்களை தவிர மீதிப்பேர் வெள்ளைக்காரர்கள். ஆயிரம் வெள்ளைக்காரர்கள் மத்தியில் எந்தவித பிரச்சனை இல்லாமல் வேலை செய்யலாம். ஆனால் ஒன்று, ரெண்டு தழிழர்கள் மத்தியில் அது நடவாத காரியம்..! ஒத்து வராத குணங்களும், எப்ப பார்த்தாலும் யாரைக் கவிழ்க்கலாம்? யாரை ஏமாத்தலாம்? எப்படி சுகமாக பணம் சம்பாதிக்கலாம்? என்று திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். அக்ஷய் ஆரம்பத்தில் விரும்பவில்லை. அவனது யூனிட்டில் இருந்த சில வெள்ளைக்காரர்கள் தமது நாட்டுக்கு திரும்பி போக. அவர்களது இடத்துக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்தான். இந்தியர்கள் நிறையப்பேர் வந்திருந்தனர்.

''பாவம்டா....பொழைக்குறதுக்கு என்று நாடு விட்டு, நாடு வந்திருக்கானுங்க நம்ம நாட்டவங்கதானே கொஞ்சம் மனசு வைத்து அவங்களுக்கு இந்த முறை சான்ஸ் கொடுத்துப்பார்ப்போம்.'' என கீர்த்திவாசன் சொல்லவே சேர்த்துக்கொண்டான்.

விளைவு தங்கள் குணங்களை காட்டத் தொடங்கிவிட்டனர். வெட்டிப்பேச்சு அளப்பது, யாரைப்பத்தியாவது ஏதாவது பேச கிடைத்தால் மென்று துப்புவது, அவர்கள் போதும் சாமி என்கிற அளவுக்கு ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.

இது போதாது என்று இந்த நற்பழக்கவழக்கங்களை வெள்ளைக்காரர்களுக்கும் பழக்க அவர்கள் வினோதமாக பார்த்துவிட்டு அக்ஷயிடம் முறையிட்டு கொள்வார்கள். அக்ஷய் ஒரு தடவை கண்டிப்பான் மறுபடியும் அது தொடர்ந்தால் வேலையை விட்டு தயவு தாட்சண்யம் இன்றி நீக்கிவிடுவான். ஒரு வாரத்துக்கு சஸ்பென்ஸ் செய்து, ரெண்டு தடவை பணிஷ்மெண்ட் ஃபைன் கட்டிய ஒரு கதை இந்த சக்திதாசனுக்கு பின்னால் உண்டு. அதன் பின் வாலை சுருட்டிக்கொண்டு இருந்தான். கொழுப்பு எடுத்த உடம்பு சும்மா இருக்குமா? இப்போ தன் காதில் விழுந்தது சாதாரண விசயம் இல்லை என்று தெரிந்ததும் அவன் மூளை அக்ஷயின் வாயை அடைக்க வழி தேடியது. எப்படியாவது யார்கிட்டேயாவது சொல்லணும் என்று தவித்துக் கொண்டிருந்தான்.

''முகேசை கூப்பிட்டுச் சொல்லலாமா? ம்ஹூம்..வேணாம் அப்புறம் இந்தக்காதால் வாங்கி அப்படியே அடுத்த காதை எம்டிகிட்டே திருப்பி விட்டுவிடுவான்... நிகில்கிட்டே சொல்லலாம். எங்கே ஆளையே காணோம்... லீவா? இதோ இவன்கிட்டே சொல்ல நான் தனியா தமிழும் ஆங்கிலமும் படிச்சிருக்க வேணும்.. வெள்ளைகாரங்ககிட்டேயும் சொல்ல முடியாது. அவங்களுக்கு இது சாதாரண விஷயம்...அத்தனை பேரும் எம்டியோட விசுவாசமான ஆளுங்க...பாரிலோ, கேன்டினிலோ எவனாவது மாட்டாமலா போவான்? பார்த்துடலாம்.'' என்னவோ உலக மாநாட்டு விஷயம் சொல்லியே ஆகணும் என்கிற தோரணையில் ரெஸ்டாரெண்டிலிருந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான் சக்திதாசன்.
(Coming)
 
Top