• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-அத்தியாயம் -28

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
அத்தியாயம் 28

''பார் எப்ப பார்த்தாலும் கண்டுபிடிக்கலை! தேடிகிட்டிருக்கோம் என்றே பதில் சொல்லிகிட்டு. அப்படி இப்படி என்று மூணு மாசத்துக்கு மேலாச்சு.. எனக்கு என்னமோ இவங்க ஃபைலை குளோஸ் பண்ணிட்டாங்கன்னு தான் தோணுது...'' போலீஸ் ஸ்டேஷனில் அக்ஷய் புலம்பிக் கொண்டிருந்தான்.

''அக்ஷய் இது நம்ம நாடு இல்லை. இவங்க தேடிகிட்டு இருக்கோம்னு சொன்னா நம்பித்தான் ஆகணும்...உன்னைப்போல எத்தனை பேரு? ஸ்கூல் போன பிள்ளையை காணவில்லை! வேலைக்கு போன மகளை காணவில்லை! என்று எத்தனை கம்ப்ளைண்ட்? இது எல்லாம் பல மாசம் அல்ல! பல வருஷக்கேசுங்க'' கீர்த்தி அவனை அமைதிப்படுத்த முயல,

''மிஸ்டர் அக்ஷய்! உங்களுக்கு நாங்க தேடுவது சீக்ரெட்டாக இருக்கணும், எந்த மீடியாவுக்கும் ஃபோட்டோ தரக்கூடாது! வெளிப்படையாக விசாரிக்க கூடாது! இப்படி கண்டிசன் எல்லாம் போட்டுட்டு உங்க ஃபொசிஷன்லே இருந்து பார்க்குறப்போ உங்க நிலமை புரியுது...! ஆனா எங்க நிலமையில இருந்தும் பாருங்க! நாங்க இந்த லண்டன் சிட்டியில தேடாத இடம் இல்லை. அப்படியும் கண்டு பிடிச்சு உங்களை கூப்பிட்டு காட்டினோமே.'' அங்கிருந்த போலீஸ் ஆபீசர் கூறினார்.

''ஆமா கூப்பிட்டீங்க..! எதை காட்ட? செத்துப்போனதை..! பாதி ரயிலில் சிதைந்து போனதை..! மீதி குடிச்சுட்டு ஆக்சிடெண்ட் ஆனவங்க. ஏன் சார் என் மனைவி ரயில் முன்னாடி குதிக்குற அளவுக்கு என்ன பிரச்சனை?'' என்றான் அவர் முன்னாடி எகிறியபடி.

''டேய்...கொஞ்சம் பொறுமையா இருடா..'' கீர்த்தி அவனை இழுத்துப் பிடித்தபடி கூறினான்.

''எப்படிடா? இதோ பத்து நாளைக்கு முன்னாடி செத்துபோன ஒரு பாடியை காட்டி இதுதானா? என்று என்னை கேட்க எனக்கே டவுட் வந்துடுத்து. ஒரு வேளை நிலா செத்தே போயிட்டாளா? இப்படி இல்லாத ஒருத்தியை தேடிகிட்டு இருக்கேனோ? என்று பயமாக இருக்குடா.'' புலம்பலுடன் கூறியவனை, கீர்த்தி வேதனையோடு பார்த்தான்.

''அந்த செத்துப்போன பொண்ணும் ஒரு இந்தியன் தான். புருசன் டார்ச்சர் தாங்க முடியாமல் குழந்தையோடு சூசைட் பண்ணிகிட்டா..மிஸ்டர் அக்ஷய்..எனக்கு உங்க ஃபீலிங்க்ஸ் புரியுது...ப்ளீஸ் எங்க கூட ஒத்துழைங்க. எங்களுக்கு கடைசியா வந்த தகவலின்படி ஒரு முடிவு எடுத்திருக்கோம்.'' என்றார் போலீஸ் ஆபீசர்.

''என்ன சார்?'' கீர்த்தி ஆவலுடன் கேட்க,

''சாரி மிஸ்டர் கீர்த்திவாசன்...! அது ஊர்ஜிதமாகட்டும் உங்களை நாங்க உடனேயே காண்டாக்ட் பண்றோம்...ப்ளீஸ் அமைதியா போயிட்டு வாங்க..'' போலீஸ் கமிஷ்னர் கைகுலுக்கினார். இருவரும் வெளியேறினார்கள்.

''போலீஸ் சொன்னதை கேட்டே தானே பொறுமையா இருடா...''

''ம்...பொறுமை..! பொறுமை....! அதைத்தவிர வேறு என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என சினந்தான். கார் சீறிக்கொண்டு பறக்க,

''பார்த்துடா...''

''ஆனா ஒண்ணு நிலாவை கண்டுபிடிச்சேன்னு வை! அவளை அறையுற அறையில வாயில இருப்பதை எல்லாம் கொட்ட வைச்சுடுவேன்...'' பற்களை கடித்தபடி கோபத்தில் வார்த்தைகளை கொட்டியவனை, எதுவும் கூறி ஆறுதல் படுத்த முடியாமல் மனப்பாரத்துடன் பார்த்தான் கீர்த்தி.

கார் கம்பெனிக்கு நுழைந்தது. எம்டி இல்லாததால் கூட்டம் போட்டு கதைத்துக் கொண்டிருந்தவர்கள் அக்ஷய் தலை தெரிந்ததும் பறந்தார்கள்.
சக்திதாசன் மட்டும் சாகவாசமாக எழுந்தான்.

''என்ன டிஸ்ரிபியூசன் வேலை முடிஞ்சுடுத்தா?'' கீர்த்தி கேட்க,

''இல்லை.'' என்றான் சக்திதாசன் நிதானமாக.

''அதை முடிக்காம இங்கே என்ன பண்ணிகிட்டிருக்கே?'' அக்ஷய் ஒரு மாதிரி பார்த்தபடி கேட்டான்.

''ஒரு ஃபைவ் மினிட்ஸ் இன்டர்வல் எடுக்குறேன்.'' அசால்டாகப் பதிலளித்தவனை ,

''இது என்ன இடைவேளை டைமா?'' கோபமாகப் பார்த்தான் அக்ஷய்.

''இல்லை.. எனக்குத் தோணிச்சு.'' திமிராகச் சொன்னான் சக்திதாசன்.

''சோ?'' புருவம் சுருங்க கேட்டான் அக்ஷய்.

''அதான் காபி குடிச்சுட்டு போலாமுன்னு வந்தேன்'' என்றான் விட்டேறியாக சக்திதாசன்.

''நீ மட்டும் குடிச்சா பத்தாதா? எல்லாரையும் அழைச்சு மீட்டிங் போட்டு கொண்டு இருந்தே...ஹால்ல வரும்போதே உன் சத்தம் தான் பெரிசா இருந்திச்சு..''

''நான் ஒண்ணும் மீட்டிங் போடலை...! உங்களுக்கு காது சரியாக கேட்டிருக்காது'' என்றான் மற்றவன் அழுக்கு இல்லாத நகத்தை உரசியவாறே.

''மிஸ்டர் சக்திதாசன்! என் காது சரியா தப்பா என்று நீங்க சொல்லத் தேவையில்லை... பலதடவை வார்னிங் பண்ணியிருக்கேன். வேலை செய்றவங்களை கெடுத்துகிட்டு இருக்குறது நீங்க ஒருத்தர் தான்'' என்றான் பொறுமையை இழுத்து பிடித்து.

''நான் ஒண்ணும் மற்றவங்க வேலையை கெடுக்கலை..அவங்க என்கூட இருந்தா நானா பொறுப்பு?'' என எதிர்க் கேள்வி கேட்டவனை,

''மிஸ்டர் சக்திதாசன் நீங்க யார்கிட்டே பேசுறீங்கன்னு தெரிஞ்சுகிட்டு தான் பேசுறீங்களா?'' என்றான் கீர்த்தி கோபமாக.

''தெரியும்யா..! கையாலாகாத ஒருத்தன்கிட்டே'' என அவன் அலட்சியமாக சொல்ல அவ்வளவு தான் அக்ஷய் எட்டி அவன் சட்டையை கொத்தாக பிடித்தான்.

''ராஸ்கல்...! என்ன பேச்சு பேசுறே'' என ஓங்கி ஒரு அறைவிட்டான்.

கீர்த்தி பதறியவனாக, ''சக்தி யார் இங்கே முதலாளி? நீயா?'' என்றான்.

''இல்லை சார்....! நான் இல்லே...! கம்பெனிக்கு முதலாளியா மட்டும் இருந்தா போதுமா? பொண்டாட்டிக்கு முதல்லே புருசனா இருக்கணும்.. பொண்டாட்டியை ஒழுங்கா வைச்சு குடும்பம் நடத்த துப்பில்லாதவன் எல்லாம் முதலாளி?'' என அவன் சட்டைக்காலரை நீவியபடி கேட்க அக்ஷய் அவன் மேல் பாய்ந்தே விட்டான்.

''யூ பிளடி "............ " என்ன தெரிந்து பேசுறே? மத்தவங்க விஷயம்னா உனக்கு அல்வா சாப்புடுறமாதிரியா? வாய்க்குள்ளே எப்படி வேணா நுழையுமா?'' என மேலும் ரெண்டு அடிகொடுத்தான். ஒட்டுமொத்த யூனிட்டே கூடிவிட்டது.

''ஏய்;...! என்னை அடிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு? நீ சம்பளம் கொடுக்குறே என்கிறதால நான் என்ன உன் அடிமையா? என் இஷ்டம் என்ன வேணா பேசுவேன். நீ காதில் ஏன் போட்டுக்குறே? என்ன குத்துதோ? உண்மையை சொன்னா உறைக்கும் தானே..''என்றான் தலையை பரதநாட்டிய பெண் போல இடமும் வலமும் ஆட்டியபடி.

''கீர்த்தி....! முதல்லே இவன் சீட்டை கிழிச்சு அனுப்பு...இன்னும் இங்கே இவன் இருந்தான்னா என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது...''அக்ஷய் சீறினான்.

''என் சீட்டை கிழிச்சா சும்மா இருப்பேனா? தொழிலாளர் சங்கத்துக்கு கம்ப்ளைண்ட் பண்ணி உன் கம்பெனியை இழுத்து மூட வைச்சுடுவேன் தெரியுமா?''

''ஆமா நீ போய் சொல்வே! நான் என்ன நாக்கை வழிச்சுட்டு இருப்பேன்னு கனவு கண்டியா? நீ பண்ற ஒவ்வொரு கூத்தையும் ரிப்போர்ட் தயாரிச்சு ஆதாரத்தோடு ஏற்கனவே அனுப்பியாச்சு! போ..போ என்னோட கம்பெனி தரத்துக்கு உன்னைப்போல தரம் கெட்டவனை வேலைக்கு சேர்த்ததுக்கு இவனுக்கு கொடுக்கணும்...டேய் கீர்த்தி அனுப்புடா இவனை..'' என அக்ஷய் சொல்ல சக்திதாசனுக்கு ஏன் தெரியமால் வாய் கொடுத்தோம் என்று இருந்தது. இனி பிரயோசனம் இல்லை என்றதும்,

''மிஸ்டர் அக்ஷய்! அடுத்த நாட்டுக்காரன் முன்னாடி என்னை கை நீட்டி அடிச்சுட்டே இல்லே..! ஒரே நாட்டவன் என்ற அக்கறை கூட என் மேல இல்லாம..'' எனக் குற்றம் சொல்லத் தொடங்கியவனைப் பார்த்து,

அக்ஷய் கோபமாக, ''முதல்லே நீ அதை நினைச்சிருக்கணும்..! உன் போல ஒருத்தன் கூட வேலை செய்யுறதும் ஒரு கொடிய விஷப்பாம்புகிட்டே தலையை கொடுக்குறதும் ஒண்ணுதான்! இங்கே அந்நிய நாட்டவங்க ஆயிரம் பேர் என்கூட வேலை செய்வாங்கடா! ஒருத்தனும் உன்னைப்போல இல்லை. போ போ..'' என்றான்.

''போறேன்டா! போறேன்..உன்னை இதே இனத்தை கொண்டு நாறடிக்கலை என் பேரு சக்தி இல்லை'' என்று ஆத்திரத்துடன் கத்தி விட்டு போனான் சக்திதாசன்.

''சாரி...! என் பர்சனல் விசயம் இப்படி ஃபப்ளிக்கா வந்ததால் இந்த சலசலப்பு... உங்களை பாதிச்சிருந்தா வெரி சாரி...'' என யூனிட்டை பார்த்து சொல்லிவிட்டு போனான் அக்ஷய். அவர்களும் அவனது குணம் தெரிந்து பேசாமல் வேலையை தொடர போனார்கள்.

''எப்படிடா அந்த ராஸ்கலுக்கு தெரிஞ்சது?'' நெற்றியை தடவியவாறே கேட்டான்.

''நாம பேசிகிட்டிருந்ததை எப்படியோ ஒட்டு கேட்டுட்டான்..சும்மாவே அவன் வாய் இருக்காது...இது வேற. இப்போ வெளியே போனா சும்மாவா இருப்பான்கிறே?'' கவலையுடன் கீர்த்தி பார்க்க,

''அவன் எப்படி இருந்தா எனக்கென்ன கீர்த்தி?''

''அது இல்லைடா! என்னமாதிரி வதந்தியை பரப்பி விடுறானோ?''

''பரப்பட்டுமே...என்னவேணா பண்ணட்டும். எனக்கு கவலை இல்லை''

''அக்ஷய், ஏன்டா எப்பவும் இப்படியே பேசுற''

''முக்கால்வாசி நனைஞ்சாச்சு..இனி முழுக்க நனைஞ்சா என்ன? விட்டா என்ன?''விரக்தியாகச் சொன்னவனைக் கவலையுடன் ஏறிட்டான் கீர்த்தி .

''ஒவ்வொரு மாசக்டைசியும் ஊருக்கு ஃபோன்போடுவேன். இப்போதெல்லாம் மறந்துட்டேன்... என்னை பெத்தவங்களோடு காண்டாக்ட் பண்ணியே மாசக்கணக்கில இருக்கும்.. அவங்ககிட்டே பேசினா என் கோபம் அவங்க மேலே தான் பாயும்! இதுக்குத்தான் எனக்கு கல்யாணம் பண்ணிவைச்சீங்களான்னு கத்திடுவேன்..அதனால் ஃபோன் போடுவது இல்லை..ஆனா என் மாமனார்கிட்டே எத்தனை நாளைக்குத்தான் பொய்யா அடுக்கி கொண்டே போவது?''

''என்ன பண்றது? நிலா கிடைக்கும் வரை சொல்லித்தான் ஆகணும். நானும் எனக்கு தெரிந்தவங்க மூலம் ஐரோப்பா முழுவதும் நிலாவோட ஃபோட்டோவை மெயில் மூலம் அனுப்பி ரகசியமாக தேடச்சொல்லியிருக்கேன்...ஏதாவது தெரிந்தால் உடனே காண்டாக்ட் பண்ணுவாஙக''நம்பிக்கையோடு கூறிய நண்பனிடம்,

''எனக்கென்னமோ நிலா இந்தியா திரும்பி போயிருக்கணும்! ஆனா அவ பெத்தவங்களை தேடிப்போகாமல் வேறு எங்காவது போயிருக்கணும்னு தோணுது... எதுக்கும் நாம இங்கே இருக்குற இந்தியன் ஏர்லைன்ஸ் டிராவல் ஏஜென்சிகிட்டே விசாரிச்சு பார்ப்போமா கீர்த்தி?''

''நல்ல ஐடியாதான்...நிலாவோட ஃபோட்டோவை பார்த்தா அவங்களுக்கு ஞாபகம் வருமா? டிராவல் ஏஜன்சிகிட்டே போறவங்க எல்லோரையும் அவங்க நினைவில் வைச்சிருப்பது அபூர்வம்...''சந்தேகமாகப் பார்த்தான் கீர்த்தி

''...........''

''பேரை வைச்சு கேட்டுப்பார்ப்போம்..பாஸ்போட் நம்பர் ஏதாவது தெரியுமா? இல்லைன்னா ஜொராக்ஸ் காப்பி ஏதாவது உன்னிடம் இருக்கா?'' என கீர்த்தி கேள்வி மேல் கேள்வி கேட்க,

"ம்ஹூம்..ஒரு இழவும் தெரியாததுதான் விஷயமே.'' விரக்தியாகச் சொன்னான் அக்ஷய்.

''பேரை வைச்சு கண்டுபிடிக்குறது...நிலா பேரில எத்தனை பேரோ? பார்க்கலாம். கிளம்பு'' கீர்த்தி கார் சாவியை எடுக்க, அக்ஷய் அவனது கோட்டையும் தனது கோட்டையும் எடுத்துக்கொண்டான்.
(Coming)
 
Top