• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-அத்தியாயம் -31

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
அத்தியாயம் 31

காரில் மௌனம் நிலவியது. கீர்த்திதான் வாயைத் திறந்தான்.

''என்ன இருந்தாலும் நீ வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம்.'' நண்பன் சொல்ல அக்ஷய் சட்டென்று பிரேக் போட்டான்.

''எப்படி? அந்த கழுதைங்க எது வேணா சொல்லுங்க...அதுவும் என்னை தேடி வந்து... கேட்டுகிட்டு சும்மா இருன்னு சொல்றியா? எப்படிடா? அவ என்ன பேச்சு பேசிகிட்டிருந்தான்னு கேட்டியா? தன்மானம் உள்ள ஒருத்தன் எப்படிடா தாங்கிக் கொள்ள முடியும்? இதுக்கு எல்லாம் காரணம் அந்த ராஸ்கல் சக்திதான்.. ஒருத்தனோட குடும்ப விஷயத்தை பேசுறதிலே என்ன அலாதிப்பிரியம்? அதில ஒரு சந்தோஷம்டா...ச்சே என்ன ஜென்மங்கள்? தெரியாமத்தான் கேட்குறேன், எதுக்கு எல்லோரும் வக்கிர புத்தி புடிச்சு அலையுறாங்க? நியாயம், அநியாயம் தெரிந்து பேசுறது கிடையாது..! அவங்க இஷ்டத்துக்கு பேசுறது. என்னமோ இவங்க நுழைந்து நேரில பார்த்துட்டு பேசுறது போல! ஸ்டுபிட்ஸ்..! ச்சே கேவலாமன உலகம்டா இது.'' கோபத்துடன் புலம்பியவனிடம்,

கீர்த்தி "உன்னையும் உன் கம்பெனியையும் கவிழ்க்க காத்திட்டிருக்கிறவங்க, ஒரு துரும்பு கிடைக்காதா? என எதிர்பாத்துகிட்டிருக்கிறவங்க, உன்னோட குடும்ப விஷயம் ஒரு நடிகையோட விஷயத்தை விட பவராகிவிட்டது. சோ, எங்கு அடிச்சா நீ விழுவே என்று தெரிந்து காயை நகர்த்தியிருக்காங்க...! இந்த வாக்குவாதம் நடக்கணும் என்கிறதுக்காவே இந்த பார்ட்டி அரேஞ்சானது போல எனக்கு தோணுது..! நாம கலந்து கொண்டிருக்கவே கூடாதுடா....'' என வருத்தத்துடன் கூறினான்.

''டேய் தொழிலில் போட்டி என்றால் நேருக்கு நேர் நின்னு மோதணும்...இப்படி முதுகை சுத்தி வந்து கேவலமான வேலையா செய்வது?''

''விழுவபவனுக்கு கை கொடுப்பதை விட விழுந்துவிட்டவன் மேல் ஒடுவது சுலபம்! இந்த உலகம் அப்படித்தான்....இனி நாளைக்கு எந்த பத்திரிகை, எந்த டிவியில உன் விஷயம் வரப்போகுதோ? நீ கட்டிக் காத்த கௌரவம்? மானம், மரியாதை எல்லாம் கெட அந்த சக்திதாசன், ரீடடா காரணமாயிட்டாங்க..''

"ம்ஹூம்.இதுக்கு எல்லாத்துக்கும் அந்த நிலாதான் காரணம்! அவளோடு ரீட்டாவை கம்பேர் பண்ணும் போது இவ பரவாயில்லை.. நேருக்கு நேரா எல்லாம் பேசிடுவா! ஆனா அவ சைலண்டா இருந்து சொல்லாம கொள்ளாமால் ஓடிப்போய்...நல்லா வளர்த்து வைச்சிருக்காங்க...! அவ மட்டும் என் கைக்கு கிடைச்சா..'' பற்களை கடித்தான்.

''நீ அவ கிடைக்கும் வரை எந்த பப்ளிக் பார்ட்டியிலோ, மீட்டிங்கிலோ கலந்துக்க வேணாம். நீ அங்கே போனா உன் வாயை கிளறுவதுக்கு என்றே இனி ஒரு கூட்டம் வரும்.''

''..............''
''அதனால நீ கம்பெனி, வீடு என்று இருந்துக்கோ! அதுதான் நல்லது'' கீர்த்தி சொல்ல அக்ஷய் முகம் இறுகியது.

''எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்து என்கிறே?''

''எது எப்படி இருந்தாலும் பாதிப்பும் அவமானமும் நமக்குத்தான்.. என்ன பண்ண? சாதாரண மனிதராக இருந்தால் பரவாயில்லை..! பிரபலம் என்றால் சக்கையா பிழிஞ்சு நிமிரவே விடமால் செய்துடுவாங்க...! நிறுத்து! நிறுத்து! என் பிளாட் வந்துடுத்து.'' என இறங்கிக் கொண்டான்.

''நாளைக்கு பார்க்கலாம்...! பார்ட்டியில நடந்ததை மனசில போட்டு குழப்பிட்டு இருக்காதே...! எந்த டெலிஃபோன் கால் வந்தாலும் சாதரணமாக பதில் சொல் பை...! குட் நைட்'' என்று கூறி விட்டு அவன் போக, அக்ஷய் தன் வீட்டுக்கு செல்லும் பாதையை பிடித்தான்.

வீட்டுக்கு போகவே பிடிக்கவில்லை. பல வருஷங்கள் தனிமையில் வாழ்ந்தவனுக்கு சில மாதமாக அந்த தனிமை பிடிக்காமல் போனது. வீட்டில் வெறுமையும் அமைதியும் தான் மிச்சம். அது அவனை பயமுறுத்தியது.

''நாளைக்கு இந்த லண்டனுக்கு பார்ட்டியில் நடந்தது தெரிய வருமா? அதன் பின் என் மேல கறுப்பு புள்ளி வைத்துவிடுவார்களோ? கீர்த்தி சொன்னது போல நான் அமைதியாக இருந்திருக்க வேண்டுமோ?'' போகும் வழியெங்கும் அவன் மனம் நடந்ததையே நினைத்துக்கொண்டிருந்தது. தலை வெடித்துவிடுவேன் என்றது. முகம், காதுமடல், எல்லாம் சிவந்து போய் ஃபீவர் வரும் போலிருந்தது. காரை நிறுத்தினான். பக்கத்தில் ரயில் ஒன்று ஊளையிட்டுக்கொண்டு சென்றது. ஓடிப்போய் இந்த ரயிலுக்கு தலையை கொடுத்தால் என்ன என்று தோன்றியது.

''ச்சே..கோழையாடா நீ? பிரச்சனைகளுக்கு பயந்து ஓடக்கூடாது! எதிர்த்து நில்லு! எவன் என்ன கேட்டு எழுதிடப்போறான்? போனா போகட்டுமே மானம்! இந்த ஊரில இருந்துதான் நீ சம்பாதிக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்?'' மனது கேட்டது.

''எங்கிருந்தாலும் கௌரவம் என்ற ஒன்று இருக்குதே! பெயர் கெட்ட பிறகு அது எங்கே போனாலும் சரி பண்ண முடியாதே..!'' யோசித்தவன் காரைவிட்டு இறங்கினான். மெல்ல கால் போன போக்கில் நடந்தான். பனிகொட்டி முடிந்து மழை தூறல் தொடங்கியிருந்தது. நனைந்தவாறே நடந்து கொண்டிருந்தான். உதடுகள் எதையோ முணு முணுத்துக்கொண்டிருக்க நடந்து கொண்டிருந்தான்.

வீதியில் பஸ் ஸ்டாண்டில் படுத்துறங்கும் மனிதர்களை பார்த்தான். அழுக்கு உடை, இழுக்கப்படாத தலைமுடி, மழிக்கப்படாத தாடி, கழுவப்படாத உடல், மூட்டையோ அழுக்கு, பக்கத்தில் சாப்பிட ஒரு சிறிய ரொட்டி துண்டு, பியர் அண்ட் விஸ்கி பாட்டில்கள் சகிதம் படுத்து இருக்கும் வீதியோர வாசிகள்.

''வீடு இல்லை! வசதி இல்லை! குடும்பம் இல்லை! ஆனாலும் நிம்மதியாக உறங்கும் இவர்கள் எங்கே?. எல்லாம் இருந்தும் உறக்கம் வரமால் தவிக்கும் நான் எங்கே? எதுக்குடா இந்த ஓட்டம்? எதுக்கு இந்த பணம்? வீடு, கார், வசதி?''

''அக்ஷய் நிறைய யோசிக்காதே. அப்புறம் நீயும் இவர்கள் போல் ஆகிவிடுவாய்.'' என்றது மனம்.

''அதுதான் நடக்கப்போகிறது போல.'' என்றது உதடு.

''எவ்வளவு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்குறார்கள் இந்தக்குளிரில்? இந்த உறக்கம் எப்படி வந்தது? போதை! அது தந்த மயக்கம் எதையும் சிந்திக்க விடாமல் தூங்க வைத்துக்கொண்டிருக்குறது. எனக்கு உறக்கம் தேவை! என் மனம் நிம்மதியாக இருக்க வேண்டும்...!'' என்றபடி எதிரே தெரிந்த பாருக்குள்ளே நுழைந்தான்.

புகை மண்டலமும், மதுவாடையுமாக இருந்தது. இடம் இல்லாதவாறு கும்பல்.

''அட நாட்டில பல பேர் நம்மைப்போல நிம்மதி தேடி அலையுறாங்களா?'' கிண்டலாக கேட்டபடி ஒதுக்கு புறமாக அமர்ந்தான். பேரர் ஓடி வந்து கேட்க,

''விஸ்கி'' என்றான். அவன் ஒரு கப் கொண்டு வந்து வைக்க ஒரே மூச்சாக குடித்தான். பேரர் வியப்போடு பார்க்க

''மறுபடியும் ஒரு கப்'' என்றான். அதுவும் வந்தது. அதையும் குடித்து முடித்தான். சரி வராது போலத் தோன்ற,

''பாட்டிலை கொண்டுவா'' என்றான். பேரரும் ஒன்றுக்கு ரெண்டாக கொண்டு வந்து வைத்தான்.

அதை அப்படியே தனது வாய்க்குள் கவிழ்த்தான். மரியாதை கருதி ஒரு வாய் மட்டும் உறிஞ்சி பார்த்து பழகியவன். இன்று முழு பாட்டில்களாக இறக்கிக் கொண்டிருந்தான். வயிறு நிரம்பியது. கண்கள் சொக்கியது. கேட்ட பணத்துக்கு மேலேயே கொடுத்துவிட்டு வெளியே வந்தான். புது உலகம் ஒன்று தெரிவது போல் இருக்க

''அய்...என்ரா அக்சே..! அழுதானே உம்பேரு..! வானத்துளே பழக்கழே..! சண்டோசமா இருக்கா?'' தன்னைத்தானே குழறியபடி கேட்டான்.

''ஓ யெஸ்..ஐயாம் வெரி ஹாப்ப்பி...எதுவுமே தோணலை..! மைண்ட் வெரி.. கிளியர்ர்ர். நெறைய தூங்கணும் போலிருக்கு..''

''இது தாண்டா வேணும் உனக்கு? வா தூங்கலாம்! விடிய விடிய தூங்கிகிட்டே இருக்கலாம்!'' தட்டுத்தடுமாறிபடி வந்து காருக்குள்ளே நுழைந்தான். லேசாக 0.5 மிலீ அளவு ஆல்கஹால் தாண்டினாலே ஃபைன் அடிப்பார்கள். பாயிண்ட் பறி போகும்.

இரவு நேரம் தாறுமாறாக வரும் கார்களை மறித்து ஃபோலீஸ் செக்கிங்க் செய்து கொண்டிருக்கும். இது நன்றாக தெரிந்த அக்ஷய் வழக்கமாக போகும் பாதையில் போகாமல் ஹைவேயில் ஸ்பீடாக போனால் சீக்கிரமாக போலிஸ் கண்ணில் மண் தூவிவிட்டு போய்விடலாம். அதுவும் கேமரா பூட்டியிருக்காத ஹைவேயில் போகலாம் என எண்ணியவனாக காரை செலுத்தினான்.

ஹைவேயில் அதிக வாகன ஓட்டங்கள் இல்லை. அது வசதியாக போக அக்ஷய் இஷ்டத்துக்கு வண்டியை ஓட்டினான். முழு போதையில் இருந்தவன் கார் அங்கும் இங்கும் அசைந்தபடிதான் போய்க் கொண்டிருந்தது.
கண்கள் செருக ஆரம்பிக்க, கைகள் சோர ஆரம்பிக்க, வண்டி கண்ட்ரோல் இழக்கத்தொடங்கியது. நள்ளிரவு தாண்டியதால் வண்டிகளும் குறைவு. அதனால் பின்னால் வருபவர்களின் ஹாரன் சத்தமும் இல்லை. ''பனி கொட்ட ஆரம்பிக்குது கவனம்!" என டேஞ்சர் சிக்னல் மெசேஜ் ஹைவேயில் போட்டுக்கொண்டிருந்தார்கள். அதையும் அவன் கவனிக்கவில்லை.

நிம்மதி வேண்டும், தூங்க வேண்டும், என அவன் செய்த செயலால் நிரந்தரமாக தூங்கும் இடத்துக்கு போகப்போகிறேன், என்று தெரியாமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
கார் சக்கரங்கள் தேய்ந்து விடுவேன் என்றது. வெட்டவெளி ஹைவேயில் மின்னல் ஒன்று திடீரென்று வெட்ட, கண்களை பாதிக்கும் வெளிச்சம். அக்ஷய் இடது கரத்தல் கண்களை மறைத்துக்கொண்டான்.

ஒரு நொடிதான் மின்னல் கண்ணைப் பறித்தது. அடுத்த நொடி பனியில் சமநிலை தவற கண்ட்ரோல் இழந்து போனான். கைகள் ஸ்டியரிங்கை பற்ற தெம்பில்லாமல் துவண்டது. அதை விட்டுவிட்டு தலையை இருகைகளாலும் பிடித்துக்கொண்டான். கண் எதிரே மரண தேவன் தெரிந்தான். வண்டி தன்பாட்டுக்கு போய் பாலத்தில் மோதி எம்பி கீழே உள்ள அடுத்த ஹைவேயில் விழுந்து நொறுங்கியது. கதவு திறந்து அக்ஷயின் உடல் வெளியே ரத்தமும், பிய்ந்து போன உடலுமாக பக்கத்தில் இருந்த பள்ளத்தில் உருண்டு போய் மரத்தில் மோதி ஓய்வுக்கு வந்தது. பனித்தூவல்கள் அது மேலே கொட்டி மூடத்தொடங்கின.
(Coming)

ஹாய் வாசக நட்புகளே இது வரை தான் எழுத்தாளர் அனுப்பி வைத்தது..மிகுதியை அவரிடம் கேட்டு பெற்று வருகிறோம் மிக விரைவில்..பொறுத்தருள்க..இல்லை எனில் அவரை பிடித்து கொள்க !!!!
 
Top