• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-அத்தியாயம் 32

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
அத்தியாயம் 32

''வயிறு பெரிசா இருக்கு. எப்படி வித்தியாசம் ஒண்ணு தோணலையா? இன்னும் கொஞ்ச நாள்தானே பொறுத்துக்கோ.'' நீரஜா நிலாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். நிலா உப்பிய வயிறுடன் கஷ்டப்பட்டு சோபாவில் அமர்ந்தாள்.

''பார்த்துடி...! உனக்குத்தான் இந்த சேர் வாங்கி போட்டிருக்கேனே, இதில உட்காரேன்.''

''இல்லை...சோபாதான் வசதியா இருக்கு...''

''சோபா ஹீட்டு..அதில ரொம்ப நேரம் உட்காரக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார். கேட்டுக்கோ! இப்போ உட்கார்ந்துக்கோ ஒரு பத்து நிமிஷத்தில எழுந்து இதில உட்காரு.'' என கட்டளையிட்டாள் நீரஜா.

''இவள் மட்டும் இல்லை என்றால் என் நிலை என்னாவாகியிருக்கும்? என்னை பெற்ற தாய் போல ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எனக்கு சேவகம் செய்யுறாளே எப்படி இந்த நன்றிக்கடனை தீர்க்க போறேன்?'' நிலா மனம் முழுவதும் நீரஜாவின் அன்பை எண்ணிய படி அவளையோ பார்த்தாள்.

''என்னடி யோசனை? என்ன குழந்தைன்னு ஸ்கேனிங்கில ஒண்ணுமே சொல்லவே இல்லையேன்னு யோசிக்கிறியா? இல்லைன்னா இப்பவே என்ன பேர் வைக்கலாம் என்று ஐடியா போடுறியா?''

"ம்ஹூம்..உன்னை நினைச்சேன்."

''எனக்கென்ன? நாந்தான் குத்துக்கல்லாட்டம் உன் முன்னாடி இருக்கேனே. அப்புறம் எதுக்கு வேஸ்டா என்னை நினைக்குறே?''

''இல்லை...எந்த குறையும் இல்லாம என்னை பார்த்துக்குறியே! என் அம்மா கூட இந்தளவுக்கு இப்படி பார்த்துருப்பாங்களா என்று தெரியலை..! எனக்காக எவ்வளவு செய்யுறே'' கண்கள் கலங்கின.

''என்ன பெரிசா செய்துட்டேன்..உன் அம்மான்னா இதைவிட நல்லா கவனிச்சுருப்பாங்க... செல்வந்தரின் பேரனோ, பேத்தியோ பொறக்கப்போகுதுன்னு உன்னை தங்கத்தட்டிலே வைச்சு தாங்கியிருப்பாங்க''

''தங்கத்தட்டு என்னடி தங்கத்தட்டு? உன் போல ஒரு பிரண்ட் செய்வாளா? என்ன பணம் இருந்தும் நானும் ஏழைதானே! காலத்தால் செய்யுற உதவிக்கு முன்னாடி மத்தது எல்லாம் தூசுடி..! இதுக்கு ஈடா என்னவேணா தரலாம்..உனக்கு என்ன தரப்போறேன்னு தான் யோசிக்கிறேன்.''

''அப்படியா? சமயம் வரட்டும் நான் கேட்குறேன் நீ தயங்காமல் மறுபேச்சின்றி தரணும் ஓகேவா?''

''ம்...என்ன நீ என் உயிரை கேட்கப்போறியா? அப்படி கேட்டாலும் தருவேன் நீரு... என்கிட்டே அதைத்தவிர வேறு ஏதும் இல்லை.''

''உன் உயிரை வைச்சுகிட்டு நான் என்ன பண்ண? இது வேற விஷயம்..''

''வேறையா?''

''இப்போ அது எதுக்கு? முதலாவதாக உனக்கு குழந்தை பிறக்கட்டும்..சரி எழுந்திரு.''

''ஏன்டி?''

''பத்து நிமிஷத்துக்கு மேலாச்சு...சோபாவில் ரொம்ப நேரம் உட்காரக்கூடாது..! இதில உட்கார்ந்துக்கோ.'' என தோழிpயை எழுப்பினாள்.

''வேணாண்டி...! என்னால முடியாது..! இப்படியே இருந்துடுறேன்...விடு.''

''நோ...நோ...நான் ஹெல்ப் பண்றேன் எழுந்திரு..'' என எழ வைத்தாள்.

''ஸ்...ஆ...'' நிலா முனகினாள்.

''என்னடி பண்ணுது?''

''வ....வலிக்குதுடி..'' என இடையை ப் பிடித்தாள்.

''இதுக்குத்தான் இந்த சோபவில உட்கார வேண்டாம்னு சொன்னேன்.'' என அவளை சேரில் உட்கார வைத்தாள். அப்பவும் நிலா வலியால் அலற,

''டேட் இருக்கு இல்ல? அப்புறம் எப்படி பெயின் வரும்?''

''தெ...தெரி..நீ..நீர...எ....எ...என்ன்னால..முடி..முடியலை!'' அவள் கத்த, நீரஜா பதட்டமாக மாடியில உள்ள பால்கனிக்கு வந்து வெளியே ஏதவாது டாக்சி வருதா என பார்த்தாள். தூரத்தில் ஒன்று வர இறங்கி ஓடினாள். பக்கத்து வீட்டு ஆன்டியின் உதவியுடனும் டாக்சிக்காரன் உதவியோடும் நிலாவை வண்டியில் ஏற்றி ஹாஸ்பிட்டல் விரைந்தாள்.

அவளை அட்மிட் செய்துவிட்டு வெளியே நின்று கொண்ட நீரஜா உலகத்திலுள்ள அத்தனை கடவுளையும் வேண்டிக்கொண்டாள். எந்தவித ஆதரவுமின்றி அந்நிய நாட்டில் தனித்துவிடப்பட்டது போல முதல் தடவையாக உள்ளே இருந்த நிலாவும், வெளியே இருந்த நீரஜாவும் உணர்ந்தனர். அலறலுடன் நிலா அவளை அழைக்க உள்ளே ஓடி வந்தாள். நிலாவின் கைகளை பற்றினாள். நிலா உதடு பிரித்தாள்.

''நீ..நீரு..எ..எ...எனக்கு ஏ..ஏ..ஏதும் ஆ..ஆனா....எ..என்...கு..குழந்தையை...எ..என் பே..பேரண்ட்ஸ்கிட்டே சே..சேர்த்துடு..! அ..அனாதையாக விட்டுடாதே..! ப்ளீஸ்'' என திணறினாள். நீரஜா கண்கள் குளமாக,

''இல்லைம்மா..! உனக்கு ஒண்ணும் ஆகாது...! நல்லபடியா நீ திரும்பி வருவே! நான் இருக்கேன் உனக்கு! அத்தனை தெய்வங்களும் உனக்கு ஆசீர்வதிக்கும் போய் வா'' என்றாள் உறுதியான குரலில்.

நிலாவை தியேட்டருக்கு கொண்டு போக நீரஜா வெளியே வந்தாள். அவளது கைகள் கும்பிட்டபடி இருந்தது. உள்ளே போன நிலாவுக்கு அக்ஷயின் முகம் வந்து வந்து ஃபிளாஷ் அடித்துக்கொண்டிருந்தது. அவளது முகம் பயத்தால் வியர்த்து ஒழுகியது. உதடோ அம்மா என்பதற்கு பதிலாக அக்ஷய், அக்ஷய் என முணுமுணுத்துக்கொண்டிருந்தது. வெளியே இருந்த நீரஜாவோ,

''கடவுளே! அவளை மேலும் வஞ்சித்து விடாதே! அவள் பட்டது எல்லாம் போதும்! அவளை காப்பாத்திடு!'' என மனமாரா உருகி பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். ஒரு முப்பது நிமிடம் கழிந்திருக்கும் நர்ஸ் ஒருத்தி அவளது தோளைத்தொட விழித்தாள். என்ன என்பது போல பார்த்தாள். நர்ஸ் சிரித்தாள்.

''வாழ்த்துக்கள்..ரெட்டை குழந்தைங்க. ரெண்டும் சோ ஸ்வீட்..''

''டுவின்சா? வாவ்...'' என கூவலுடன் உள்ளே ஓடினாள். நிலா மயக்கம் தெளியாமல் இருந்தாள். பக்கத்தில் இரு தொட்டில்களிலும் அன்று பூத்த இளம் சிகப்பு ரோஜாக்கள் அமைதியாக இருந்தன. நீரஜா பூரிப்போடு மெல்ல தொட்டு பார்த்தாள்.

''அடடே..குட்டி நிலா! குட்டி அக்ஷய்!'' என்றாள் சந்தோஷத்தில்.
மயக்கம் கலைந்து விழித்தாள் நிலா. எதிரே தோழியை பார்த்தாள்.
தனக்கு ஏதும் நேரவில்லை என்று புரிந்தது. தனது இடது புறம் இருந்த தொட்டிலில் இருந்த குழந்தையை தொட்டுப்பார்த்தாள்.

''அங்கே பாரு...'' மற்றையதை நீரஜா காட்ட நிலா வலது பக்கம் பார்த்தாள்.

''இது யாரோடது?'' என கேட்ட தோழியை சிரிப்போடு பார்த்தாள்.

''அடியேய்! ரெண்டும் உன்னோடதுதான்..டுவின்ஸ்சிடி..! நிலாக்குட்டி அண்ட் அக்ஷய் குட்டி! வயிறு பெரிசா இருந்தது இதுக்குத்தானா? இந்தக்காலத்திலேயும் இங்கே இருக்குற டாக்டர்ஸ் ஸ்கேனிங்கில எதுவும் சொல்லமாட்டாங்க..ஏன்னா பாதிப்பேர் என்ன குழந்தைன்னு தெரிஞ்சதும் பிடிக்கலைன்னா அபார்ஷன் பண்றாங்க... ரெட்டைக்குழந்தைங்கன்னு முன்னாடி தெரிஞ்சா நீ பயந்திருப்பியோ என்னமோ?'' என்றாள்.
நிலா நம்பமுடியாமல் இரு குழந்தையையும் மாறி மாறிக் கண்ணீர் மல்கப் பார்த்தாள்.

''ஏய் குழந்தைங்க ரெண்டும் வெள்ளைக்கார குட்டிங்க போலிருக்காங்க! அப்ப கண்டிப்பா அக்ஷய் போலத்தான் இருக்கும். உன் சாயல் கொஞ்சம் கூட இல்லை.'' என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.

''ஆஹா..! பிறந்த உடனே தெரியாதுடி. வளர்ந்தால் தான் தெரியும்'' என்றாள் உற்சாகமாக குழந்தைகளைக் கொஞ்சியபடி,

''மச்..என்ன இருந்தாலும் குழந்தைங்களோடு கம்பேர் பண்ணும் போது நீ கொஞ்சம் நிறம் கம்மிதான்...!'' என்றாள் நீரஜா சீண்டும் விதமாக.

''அடிப்பாவி நீதானே நான் நல்ல நிறம் என்று ராகம் பாடுவே..! அதுக்குள்ளே கட்சி மாறிட்டியா?'' குரலில் மகிழ்ச்சி பொங்க கண்கள் மின்னத் தோழியைச் செல்லமாக முறைத்தாள்.

''சூ...குழந்தை பெத்தவ இப்படி கோபம் கொள்ள கூடாது'' என்றாள் நீரஜா சீரியசாக.

''ஆமாம் பாட்டிமா! நீங்க சொன்னா கேட்டுத்தான் ஆகணும்.'' என்றாள் மற்றவள் பதவிசாக. நீரஜா வாய்விட்டு சிரித்தாள்.

''குழந்தைகளுக்கு என்ன பேர் வைக்கலாம்?''

''ம் தெரியலை...! நல்ல பேரா செலக்ட் பண்ணி சொல்லு. நம்ம குடும்ப வழக்கப்படி கோயிலில் திருஷ்டி கழித்து வீட்டில சொந்தக்காரங்களுக்கு சொல்லி அவங்க முன்னாடி தான் பெயர் வைப்போம்..''
நிலா குழந்தைகளின் பிஞ்சு விரல்களைப் பிடித்து விளையாடியபடி கூறினாள்.

''அப்படியே செய்துட்டாப்போச்சு..!''

''என்னடி உளர்றே? இது எல்லாம் என் குடும்பத்தில தான் இது! இங்கே இல்லை! உனக்கு மேலும் சிரமம் கொடுக்க எனக்குத் துளியும் இஷ்டமில்லை.''

''சரி..சரி..இதைப்பத்தி அப்புறமா பேசலாம்...முதல்லே எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுறாங்கன்னு கேட்டுட்டு வர்றேன்.'' என எழுந்து போனாள்.

நிலா தான் பெற்ற மழலைகளை அள்ளி எடுத்தாள். மாறி மாறி முத்தமழை மொழிந்தாள். தான் தாயானது, உயிரோடு திரும்பி வந்தது, எல்லாம் அவளுக்கு கனவில் நடந்துது போல இருந்தது. தனக்கு கூட சந்தோஷமான விடியல் வரத்தொடங்கிடுத்தா? என நினைத்தாள்.
குழந்தைகளை பார்க்கும் போது அது நிஜம் தான் என்று உறுதியாகியது.

அக்ஷய் ஞாபகங்கள் அடிக்கடி வருவதாக உணர்ந்தாள். தனக்கு வாழ்வளித்தவன் எப்படி இருக்கிறான்? என்று ஒரு கணம் யோசித்து பார்த்தாள். தன்னை தேடி யாரும் வரவும் இல்லை! எந்த தொந்தரவும் இன்றி இருப்பதால் அவன் தன்னை மறந்தேவிட்டான் என எண்ணிக்கொண்டாள்.

பெற்றவர்களிடம் என்ன சொல்லியிருப்பானோ? அவர்களும் தலை முழுகியிருப்பார்களோ? அதுதான் அவர்களும் தேட முயற்சிக்கவில்லையோ? என பலவாறாக எண்ணத்தொடங்கினாள்.
(Coming)
 
Top