• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-அத்தியாயம் 36

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
அத்தியாயம் 36

''அம்மா...என்னைப் பார்த்து சிரிக்கிறதை பாரேன்.'' பூஜா குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டு விளையாட,

''ஏண்டி தூங்கிட்டு இருந்த குழந்தைங்களை தட்டி எழுப்பி வித்தையா காட்டுறே?'' கோதை கிச்சனில் இருந்து கரண்டியோடு வந்தாள்.

''நான் எங்கே டிஸ்டர்ப் பண்ணேன்? அவங்க ரெண்டு பேரும் முழிச்சிட்டு தங்களுக்குள்ளே என்னமோ வாயைத் திறந்து முனங்கிக் கிட்டிருந்தாங்க....ஏண்டா குட்டிங்களா! சித்தி தூக்குன்னுதானே பேசிகிட்டிருந்தீங்க?'' குழந்தைகளின் பிஞ்சு பாதங்களில் முத்தமிட்டவாறு கூறினாள்.

''ஆமாண்டி...அவங்க இன்னமும் முகம் பார்த்து சிரிக்கவே தொடங்கலை... அதுக்குள்ள உன்னைப் பார்த்து தூக்கு சித்தினு சொன்னாங்களா?... இந்தா இந்த கரண்டியை கிச்சன்லே வைச்சுட்டு, கேசரி கிளறி வைச்சிருக்கேன். நிலாவுக்கு எடுத்துட்டு போய் கொடு..'' என்று சொல்லி விட்டு குழந்தைகளை வாங்கிக்கொண்டாள்.

''க்கும்..நீ மட்டும் டிஸ்டர்ப் பண்ணலை.'' என முனங்கிவிட்டு போனாள்.

மனைவியோடு சேர்ந்து ராமநாதனும் தரையில் அமர்ந்து பேரப் பிள்ளைகளை கொஞ்சிக் கொண்டிருந்தார்.

''பார்த்துப்பா..! வேட்டியில ஒண்ணுக்கு போயிடப்போறாங்க..'' என்றபடி வந்தாள் நிலா.

''பரவாயில்லைம்மா..இவங்க இந்த வேட்டியில ஒண்ணு ரெண்டு போறதுக்கு இந்தக் கிழவன் புண்ணியம் செய்திருக்கணும்..நீங்க என்ன வேணா செய்யுங்கடா..'' என்றார்.

''ஏங்க பேர் செலக்ஷன் பண்ணிட்டீங்களா? ரெண்டு பேருக்கும் ''அ'' ''ஆ'' வில ஆரம்பிக்குற மாதிரி பேர் வைக்கணும்னு ஜோசியர் சொல்லியிருக்கார் இல்ல.. பையனுக்கு அரவிந்த சாமின்னும், பொண்ணுக்கு ஆனந்தின்னும் வைச்சிடலாம்.'' கோதை.

''த்தூ..! என்ன மம்மி உன்னோட டேஸ்ட்..? சாமி, தீன்னுகிட்டு..மார்டனா பேர் வைப்பியா உன் ரேஞ்சுக்கு பேர் சொல்லிகிட்டு.'' பூஜா முறைப்புடன் திட்டினாள்.

''அப்ப நீயே சொல்லேன்...'' நிலா தங்கைக்கு அருகில் வந்து அமர்ந்தவளாக கேட்டாள்.

''ம்..அப்படி கேளுங்க..குட்டிப்பையனுக்கு ''அஷ்வந்''...குட்டிப்பொண்ணுக்கு ''ஆர்த்தி'' என்றாள்.

''ஆர்த்தி ஓகே..! அது என்ன அஷ்வந்? யாரு உன்னோட பாய் பிரண்ட் பேரா?'' நிலா கேட்க,

''அய்யோ! அக்கா.. நான் சும்மா சொன்னேன்..என்னமோ ரெண்டு நேமும் எனக்கு பிடிக்கும்..அவ்வளவுதான்!''

''ம்..உங்க ரெண்டு பேருக்கும் பேர் வைச்சது நாங்க..இப்போ உங்க பிள்ளைங்களுக்கு மார்டன் பேர்னு என்னமோ வாயில நுழையாத மாதிரி பேர் வைக்குறீங்க..'' கோதை.

''ஏன் அஷ்வந் உன்னோட வாய்க்குள்ளே நுழையமாட்டேங்குதா? நாக்கை மழிச்சுட்டு கூப்பிட்டு பழகிக்கோ.'' பூஜா சொல்ல,

''என்னமோ.. நீ எப்படி வேணா கூப்பிடு..நான் ராஜா, ராஜாத்தின்னு தான் கூப்பிடுவேன்.''

''அய்யோ அம்மா கி.மு வில இருக்க வேண்டியவ நீ'' பூஜா பழிப்பு காட்டினாள். அனைவரும் சிரிக்க வெளிக்கேட்டில் டாக்சி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

''என்ன நம்ம வீட்டு வாசலில் ஏதோ டாக்சி மாதிரி தெரியுது'' கோதை வாசலைப் பார்த்தவாறு சொன்னாள்.

''ஆமா..இருங்க யாருன்னு பார்த்துட்டு வர்றேன்...'' என்றவாறு குழந்தையை நிலாவிடம் கொடுத்துவிட்டு எழுந்து போனார். கேட்டைத்திறந்து கொண்டு வருபவனை கண்டதும் அவர் முகம் ருத்தர தாண்டவம் ஆட தயாரானது.

''நில்லுடா அங்கேயே...!'' என அவர் கர்ஜிக்க அக்ஷய் அதிர்வுடன்,

''மாமா!''

''யாருடா மாமா? எங்கே வந்தே?'' என்றார் அவனை பார்த்து. அவன் புரியாமல் விழித்து நிற்க, சத்தம் கேட்டு உள்ளே இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

''என்ன மாமா கேட்குறீங்க?'' என அவரை பார்த்து கேட்டவன் பின்னால் வந்து நின்றவளை கண்டதும்,

''நி...நி...நிலா....நீ..நீ..'' என அவன் திணற.
நிலாவுக்கும் பேரதிர்ச்சி தாக்க சிலையானாள்.

''ஆமாண்டா...நிலாவேதான்...நான் பெத்த பொண்ணு நிலாதான்.''

''இ...இவ...எப்..எப்படி இங்கே?'' என்றான் புரியாமல்.

''அதை நான் கேட்கணும்...! உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சது எதுக்குடா? பெரிய தியாகின்னு பேர் வாங்கிட்டு என் பொண்ணை கூட்டிட்டு போய் கொடுமையா செய்தே..? அவளை துரத்தியடிச்சுட்டு எந்த துணிவிலே இங்கே வந்தே? எதுக்குடா வந்தே? இன்னும் உயிரோடு இருக்குறாளான்னு பார்க்கவா? இல்லை ஏதாவது கதை அளக்கவா? கேவலமானவனே! கேடு கெட்டவன்டா...நீ!'' அவர் கர்ஜிக்க அக்ஷய் அதிர்ச்சி தாக்கியதிலிருந்து விடுபடமால்-

''மா...மா...''என்றான் திணறலாக.

''ச்சீ...அப்படி கூப்பிடாதே..! கட்டின பொண்டாட்டியை அடிச்சு துரத்தின உனக்கு நான் மாமாவா? கோபுரத்தில் வாழ்ந்தவளை எங்கேயோ இருந்து மீட்டுட்டு வந்தேன்.. உன்னால்தான்! எதுக்குடா இப்படி பண்ணே? எல்லாம் தெரிஞ்சுதானே கட்டிகிட்டே! சொல்லுடா! எதுக்குடா இப்படி பண்ணே?'' என்றவாறு ஒரே தாவலில் அவனது சட்டையை கொத்தாக பிடித்து உலுக்கினார். நிலாவோ அக்ஷயை அந்தக்கோலத்தில் பார்த்த பின் அவளுக்கு நிஜம் புரியாமல் பேச்சு மூச்சின்றி அதிர்ச்சியிலேயே இருந்தாள்.

''மா.....மா..நீ..நீங்க என்ன சொ...சொ..ல்றீங்கன்னு எ..னக்கு பு..ரியலை... நா...நா..நி...நிலா....இ..ங்..''

''என்னடா திணறுறே..?'' என ஓங்கி ஒரு அறை அறைந்தார். கண்களில் பூச்சி பறந்தது. ஏற்கனவே ஆக்சிடெண்ட் ஆகி நொந்து போன உடம்பு தெம்பு இல்லாமல் ஒரு நொடி ஆடியது. கன்னத்தை பிடித்தபடி அதிர்ச்சியுடன் நிலாவின் கைகளிலிருந்த குழந்தையையும், கோதையின் கரங்களிலிருந்த குழந்தையையும் பார்த்தான்.

''இவர் எனன சொல்றார்? இங்கு என்ன நடந்தது? நிலாவுக்கு வேற கல்யாணம் ஆகிடுத்தா..? லேட்டாக வந்துவிட்டேனா?'' என யோசித்தவனை மேலும் யோசிக்க விடாமல் பிடித்து இழுத்தார் ராமநாதன்.

அவர் மறுபடியும் அடிக்கத் தொடங்க நிலாவோ தந்தையை தடுத்தாள். வாய் தான் திறந்ததே தவிர சத்தம் வரவில்லை! எல்லாம் மங்கலாகத் தெரிந்தது. தலை சுத்திக்கொண்டிருந்தது. எப்ப வேண்டுமானாலும் அவள் விழுந்துவிடுவாள் போலிருந்தது.

''டேய்...எனக்கு காரணம் தெரிஞ்சாகணும்..எதுக்கு என் மகளை கொடுமைப் படுத்தினே ? எதுக்கு அவளை வீட்டை விட்டு துரத்தினே? எல்லாத்தையும் விட என்கிட்டே பொய் சொல்லியே வாழ்ந்திருக்கே..எதுக்குடா?'' அவர் கேட்டு கேட்டு அவனை அடித்து அடித்துக் கை வலித்ததையும் பொருட்படுத்தாது மீண்டும் அடிக்க ஓங்க அக்ஷய் அவர் கையை தடுத்துப் பிடித்தவனாக,

''போதும் நிறுத்துங்க..! என்ன கண்மண் தெரியாமல் பேசுறீங்க..? யார் யாரை கொடுமைப் படுத்தியது?'' எனச் சீறினான்.

''நீதாண்டா...! என் பொண்ணை..! நீதாண்டா பாவி...!'' என்றார் அவனை பின்னுக்கு தள்ளி. கால் இயலாமல் விழப்போனவன் மரத்தை பிடித்துக்கொண்டு,

''அப்படின்னு யார் சொன்னா? உங்க பொண்ணா? எங்கே என் முகத்தை பார்த்துச் சொல்லச் சொல்லுங்க!'' என்றவன் விந்தியபடி சிலையாகி நின்ற நிலா முன்னால் போனான்.
(Coming)
 
Top