• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-அத்தியாயம் 38

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
அத்தியாயம் 38

ராமநாதன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட, பூஜா முகம் இறுகி நின்றுவிட, கோதை தன் கையில் இருந்த குழந்தையோடு தரையில் அமர்ந்து குலுங்கி கொண்டிருந்தாள்.

நிலாவோ உணர்ச்சியற்று உறைந்து போய் நின்றாள். மயங்கியபடி அவள் தள்ளாடியபடி குழந்தையோடு விழப்போக பூஜா அலறினாள்.
ராமநாதன் திடுக்கிட்டு எழுந்து ஓடிவந்தவராய் தாங்கிக்கொண்டார். குழந்தை வீறிட்டு அலறியது. பூஜா குழந்தையை தூக்கிக்கொண்டாள்.

ராமநாதன் மகளது கன்னத்தில் தட்டினார். பதில் இல்லை. பயந்து போன கோதை தோட்டத்துக்கு பாய்ச்சும் பம்பு செட்டிலிருந்த நீரை எடுத்து முகத்தில் அடித்தாள். நிலா முனகலோடு கண்திறந்து மலங்க, மலங்க விழித்தாள். தந்தையின் முகம் தெரிய கண்கள் கண்ணீரால் நிறைந்தது.

''அ...அ...அ...ப்படி பா...பா...ர்க்காதீங்கப்பா?'' தந்தையின் பார்வையை தாங்கமாட்டாதவளாய் கூற,

''ஏன்மா அப்படி செய்தே?'' நாத்தழுதழுக்கக் கேட்டார்.

''அ..அப்பா நான் வேணும்னு அவரை பிரியலைப்பா..'' கண்ணீர் மல்கக் கூறியவளை,

''என்னடி சொல்றே?'' கோதை பதட்டத்துடன் வினவினாள்.

''ஆமாம்மா...என் கடந்த கால வாழ்க்கையைப் பத்தி அவருக்கு எதுவும் தெரியாதும்மா.'' வேதனையுடன் கூறினாள் நிலா.

''என்னக்கா சொல்ற?'' பூஜா அதிர்ந்து போய் கேட்டாள்.

''அ...அ.அது எப்படி உனக்குத்தெரியும்?'' ராமநாதன் கேட்டதும் நிலா கண்களை மூடியபடி சொல்லத்தொடங்கினாள்.

''அவரோட பேச்சிலிருந்து கண்டுகொண்டேன்...ஏமாற்றத்தையோ, துரோகத்தையோ தாங்கமாட்டாமல் தனது நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தால் அவனிடம் பேசும் போது தெரிந்து கொண்டேன்..! அதன் பின் என்னைப் பத்தி சொன்னா அவரோட பதில் என்னவாக இருக்கும்? என்னை வெறுத்துடுவார்..அப்புறம் ரெண்டு பேரோட வாழ்க்கையும் நரகமாகிவிடும்! சொல்லாமல் இருந்து அவரை ஏமாற்றிக் கொண்டு வாழவும் எனக்கு மனசு இடம் தரலை...!'' கலங்கிய குரலில் சொன்னவளை, ராமநாதன் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தபடி பேச விட்டார்.

''அவரோடு பழகியது கொஞ்சநாள் தான் என்றாலும் அவரோட நல்ல குணங்களை புரிந்துகொண்டேன்..சொன்னா அவர் சகிச்சுகிட்டு என்கூட வாழ்வரா? அப்படி வாழ்ந்தாலும் பிடிப்பு இல்லாத ஒரு பொய்யான வாழ்க்கை எதுக்கு? உள் மனசில உறுத்திட்டே இருக்காதா? மத்தவங்களுக்காக எதுக்கு வாழணும்? அது நரகமாகத்தான் இருக்குமே தவிர சந்தோஷமாக இருக்காது! அதில் எனக்கு இஷ்டமும் இல்லை..! எதுக்காக என்னால அவரோட வாழ்க்கை கெடணும்? என்கூட தான் இருக்கணும்னு என்ன கட்டாயம்? என் கூட வாழணும் என்று என்ன தலையெழுத்து? அவரை விட்டு விலகினா நாளடைவில் என் மேலே எழும் கோபத்தால் என்னை மறந்துட்டு வேறு கல்யாணம் செய்து கொள்வார்னு நி...நினைச்சேன்..ஆனா இப்படி எல்லாம் நடக்கும்னு நினைக்கலைப்பா... உங்ககிட்டே வராததுக்கு காரணமும் அவர் வாழ்க்கை நல்லாயிருக்கணும் என்கிறதுக்காகத்தான்!'' வேதனையை விழுங்கியபடி தொடர்ந்தாள் நிலா.

கோதை தன் தோளில் தூங்கிய குழந்தையைத் தட்டிக் கொடுத்தபடி மனவேதனையுடன் மகள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

''இதைக் கூட கேட்காமல் எனக்கு காதல் இருந்ததாகவும் யாரையோ கல்யாணம் செய்துட்டு குழந்தை பெத்துகிட்டதாகவும் என்னை தப்பா நினைச்சுட்டு போயிட்டார்! என்னால தாங்க முடியலைப்பா..! இது அவரோட குழந்தைங்கன்னு நான் சொன்னா எப்படி நம்புவார்? நம்புற மாதிரி என்பக்கம் நியாயம் எதுவும் இல்லையே...! என்னை டைவோர்ஸ் பண்ணிட்டு அவர் யாரை வேணா கல்யாணம் செய்து கொள்ளட்டும்! ஆ...ஆ...னா..என்னை தப்பா புரிஞ்சுட்டு போயிட்டார்ப்பா...எனக்கு செத்துடலாம் போல இருக்கே...என்னால அவர் தண்டனை அனுபவிச்சுட்டாரே...கனவிலே கூட அவருக்கு இப்படியெல்லாம் ஆகுமுன்னு நினைச்சு பார்க்கலைப்பா...யாரையோ கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமாகத்தான் இருப்பார்னு தப்பு தப்பா.. நினைச்சுட்டேனே....! இல்லே...என்னால தாங்க முடியலையே..'' என அவள் குமுறினாள்.

பூஜாவோ கையில் பிடித்திருந்த குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி நிலா சொல்வதையே அழுகையோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.

''நான் மட்டும் தான் அவரைவிட்டு பிரிஞ்சேன்..ஆனா மனசு என்றைக்கும் விலகினது இல்லை..! நான் எதிர்பார்த்தே இராத நல்ல குணங்களோடு எனக்கு வாய்ச்ச கணவனோடு என்னால வாழமுடியலையேன்னு நான் அழாத நாள் இல்லை... எனக்கு மட்டும் அந்த விபத்து நேராம இருந்திருந்தா... இன்னைக்கு என் அக்ஷயோடுதானே உங்க முன்னாடி வந்திறங்கியிருப்பேன்... வாழ்ந்தது ரெண்டு வாரம்தான். ஆனா அவரைப்பத்தி நல்லா புரிஞ்சுகிட்டேன்...என்னையறியாமலேயே அக்ஷயோடு என் மனம் இணைந்து போனது! வாழ்ந்தா அக்ஷய் போலத்தான் வாழணும்னு எல்லோரும் அவரை உதாரணம் சொல்ற அளவுக்கு வாழ்ந்துகிட்டிருந்தாரே...ஆனா...ஆனா...
அவரோட பேச்சைக்கேட்டதுக்கு அப்புறம் தான்...நான் அவருக்கு தகுதியானவள் இல்லேன்னு முடிவுக்கு வந்தேன்...அதனாலதான் அவர்கிட்டே சொல்லிக்காம பிரிஞ்சேன்.'' நிலா தன் வேதனைகளைச் சொல்லி அழ, ராமநாதன் பிரம்மை பிடித்தது போல அமர்ந்திருந்தார்.

''குழந்தைங்க உருவானதும் அவர் மேல் உள்ள காதல் இன்னும் அதிகமானது...! எனக்குள் புதைந்து போய்க்கிடந்த காதலை அக்ஷய் காலடியில் போட்டு அப்படியே செத்துடலாமான்னு இருந்துச்சு! ஒரு வேளை திரும்பி போனா என்ன என்று கூடத்தோன்றியது. ஆனா எந்த முகத்தோடு போவது? நான் யோசிக்காமல் எடுத்த முடிவு, நான் செய்த எல்லா தப்பும் அநியாயமாக அவரை பழி வாங்கிவிட்டது..! எனக்கும் கல்யாணம், கணவனுக்கும் ராசி இல்லைப்பா..! ஆனா இனியும் என்னால அவரை பிரிஞ்சு வாழமுடியமான்னு தெரியலை! அவரை இந்தக்கோலத்தில பார்த்த பின்னும் எ...ன்னால... என்னைக் கட்டுபடுத்தவும் முடியலை...! அவர் இல்லாம என்னால வாழமுடியுமான்னும்.....'' அவள் வார்த்தை தொண்டைக்குள் சிக்க குலுங்கிக் குலுங்கி அழ ராமநாதன் மகளை ஆதரவாக அணைத்துக்கொண்டார்.

''நீ மட்டும் இல்லேம்மா நாம எல்லோரும் சேர்ந்துதான் தப்பு பண்ணிட்டோம்... அக்ஷய்க்கு இழைத்த கொடுமைக்கு அவன் கால்லே விழணும்...'' என எழுந்தார்.
(Coming)
 
Top