• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா-அத்தியாயம் 41

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
அத்தியாயம் 41

சிதம்பரம் வீடு, கோவிலிருந்து குடும்பம் திரும்பியிருந்தது அக்ஷய் நிலா குழந்தைகள் சகிதம் வாசலில் நிற்க வைச்சு கோதை ஆரத்தி எடுத்து திருஷ்டிகழித்தாள்.

''ரெண்டுபேரும் வலது காலை எடுத்து வைச்சு வாங்க...மாப்பிளை..குழந்தைங்களை தொட்டில்லே போடுங்க.. நீங்க போய் குளிச்சுட்டு பிரஷ்ஷா வாங்க..உணவு ரெடி பண்ணிடுறேன்...'' கோதை சொல்லிவிட்டு சமையல் கட்டுக்குள் நுழைந்தாள்.

''நிலா மாப்பிளையை உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போம்மா.'' சிதம்பரம் மகளை பார்த்துச் சொல்லியபடி அக்ஷயின் பெட்டிகளை தூக்கியபடி மாடியேறினார்.

''மாமா..நீங்க வைங்க நான் தூக்கி வருகிறேன்...''அக்ஷய் தடுக்க வந்தான்.

''இல்லைப்பா..எனக்கு ஒண்ணும் சிரமமில்லை..''அவர் சொல்லிவிட்டு முன்னே போக அக்ஷய் குழந்தைகளை பிரிய மனமில்லாமல் அரைமனதாக நிலாவோடு மாடியேறினான்.

சிதம்பரம் மகளின் ரூமில் பெட்டிகளை வைத்துவிட்டு தம்பதிகளை தனியாக விட்டுவிட்டு வெளியேறினார்.

நிலா சூட்கேசுகளை திறந்து அவனது ஆடைகளை எடுத்து வெளியே வைக்க முனைந்தாள்.

''சாரி நிலா..நான் உன்னை தேடுறதிலே இருந்த அவசரத்தில் எதுவும் வாங்கி வரும் நிலையில் இல்லை..வீட்டில் இருப்பவர்களுக்கும் எதுவும் வாங்கலை..வெரி சாரி..என்னோட நிலமை அப்படி..'' என்றவாறு மனைவியின் கரங்களை பற்றியபடி மன்னிப்பு வேண்டினான்.

''என்னங்க...இதையெல்லாத்தையும் யார் எதிர்பார்த்தா? என் வாழ்க்கையில் உங்களை மறுபடியும் சந்திப்பேன் என்று நினைச்சே பார்க்கலை..நீங்க வந்ததே எனக்கு மிகப்பெரிய பரிசு..'' நிலா உணர்ச்சி மிகுந்த குரலில் கூறினாள்.

''ம்..எனக்கும் தான்...உன்னை பற்றிய விபரங்களை இங்கே உன்னை பெத்தவங்ககிட்டே சொல்லிட்டு அப்படியே ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொண்டு போகாலாமுன்னு வந்தேன்.. இனிமேல் அதுதான் என் வாழ்க்கை என்று நினைத்து..ஆனா இங்கே வந்தா...நீ ரெண்டு விலைமதிப்பில்லாத பொக்கிஷங்களை பெத்து தந்திருக்கேங்கிறதை பார்க்கும் போது எனக்கு உலகமே என் காலடியில் வந்து விழுந்துட்டது போல இருக்கு..'' அவன் நெகிழ்வுடன் சொல்லியவாறு பற்றியிருந்த அவளது கரங்களை எடுத்து தனது கண்களில் ஒற்றியவனாக அவளை இழுத்து தன் மார்பு மேலே போட்டான். அவளது முகத்தை நிமிர்த்தினான். நிலாவுக்கு அவனது தொடுகையால் மின்சாரம் பாய்ந்தது போல் இருக்க ஒருவித புதுவித உணர்வுடன் அவனது மார்பில் இன்னும் ஒண்டினாள்.

''நிலா'' அக்ஷயின் குரல் அவளது காது மடலில் உறவாடியது. எத்தனை காலத்துக்கு பின் அவனது குரல் இப்படி மிக அருகில் கேட்டு..அந்தக் குரல் அவளுள் நுழைந்து ஊடுருவி அத்தனை செல்களையும் தட்டி எழுப்பி பரவசமடையச் செய்தது. கண்களை மூடியபடி அந்த பரவச நிலையை அனுபவித்துக்கொண்டிருந்தவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன் அப்படியே அவளை தன்னுடன் இறுக்கினான். இழந்த அத்தனையும் இருவருக்கும் கிடைத்தது போல் இருந்தது..அவனுக்கோ மனைவியே விட்டு விலக மனமில்லை.. அவளுக்கோ கணவனின் பிடிக்குள்ளேயே செத்துவிடலாம் போல் இருந்தது. எத்தனை மணி நேரம் அப்படியே இருந்தார்களோ தெரியாது. திடீரென்று குழந்தையின் அழுகுரல் கேட்க இருவரும் கலைந்தார்கள்.

''சாரி சிவபூஜையில் கரடி மாதிரி...அக்கா உன் பையனுக்கு பசி தாளலை கத்திட்டிருந்தானா.. எங்கே உன் பொண்ணை தூங்கவிடாம டிஸ்டர்ப் பண்ணிடுவானோன்னு தூக்கியாந்துட்டேன்..இந்தா பாலைக் கொடு...பசியில பாரு வாயை வாயைத் துறக்குறதை..'' பூஜா சொல்லியவாறே குழந்தையை நிலாவிடம் தந்தவள் அக்ஷய் பக்கம் திரும்பி,

''ஏன் அக்ஷய் அத்தான் இன்னும் நீங்க குளிக்க போகலையா? அக்கா எங்கேயும் ஓடிடமாட்டாள் நான் பார்த்துக்குறேன். நீங்க போய் குளிச்சுட்டு வாங்க..சூப்பர் அயிட்டம் எல்லாம் அம்மா செய்து தள்ளியிருக்காங்க..அது எல்லாத்தையும் ஒரு பிடி பிடிக்கவேணாம்.?''

''ஏய் வாலு...சூப்பர் அயிட்டத்தை நீ சும்மாவா விட்டு வைச்சே...முன்னாடியே எல்லாத்திலேயும் ஒரு கை பார்த்துட்டு வந்துதான் சர்டிபிஃகேட் தர்றியா..?

''ச்சேச்சே...விருந்தாளிங்களுக்கு கொடுத்ததுக்கு அப்புறம் தான் நான் சாப்புடுவேன்..''

''எப்படி? அவங்க உயிரோடு இருக்கிறாங்கன்னு கன்ஃபர்ம் ஆனதுக்கு அப்புறமா?'' அக்ஷய் கிண்டலாக கேட்க,

''அக்கா! பாருக்கா..அக்ஷய் அத்தானை...'' பூஜா செல்லமாக முறைத்தவாறு பெரியவளிடம் முறையிட்டாள். நிலாவோ கணவனை திரும்பி பார்க்க அவன் கண்ணடித்துவிட்டு பூஜா பக்கம் திரும்பினான்.

''உங்கக்கா என்னை பார்க்கிறது இருக்கட்டும்..நீ ஒண்ணு என்னை அத்தான்னு கூப்பிடு! இல்லைன்னா அக்ஷய்னு பேர் சொல்லி கூப்பிடு..! எனக்கு நோ அப்ஜெக்ஷன்...! ரெண்டையும் நீட்டி முழக்கி கூப்பிட்டு எதுக்கு எனர்ஜியை வேஸ்டாக்குறே?'' அவன் மறுபடியும் கிண்டடிக்க,

''அது என் உரிமை! எப்படிவேணா கூப்பிட்டுக்குறேன்..நீங்க கண்டுக்காதீங்க..'' அவள் கண்டிப்புடன் சொல்ல,

''உன்னோட உரிமையை நான் பறிக்கலை தாயி...எப்படி வேணா கூப்புட்டுக்கோ...அக்ஷய் அத்தான்னு கூப்புட்டுக்கோ..! லண்டன் அக்ஷய் அத்தான்னு இன்னும் பெரிசா நீட்டிக்கூப்படுறதுன்னாலும் கூப்பிட்டுக்கோ! இல்லைன்னா லண்டன் ரிட்டர்ன் அக்ஷய் அத்தான்னு வேணுமுன்னாலும் கூப்பிட்டுக்கோ..! இல்லைன்னா..'' அவன் மேற்கொண்டு தொடரப்போக,

''அய்யோ அத்தான்..எனக்கு மயக்கம் வரும் போல இருக்கு..நான் அத்தான் என்றே கூப்பிட்டு தொலைக்கிறேன்...நீங்க பேசாதீங்க...! எனக்கு மூர்ச்சையடைக்குது...யப்பா...நான் வர்றேன்..'' அவள் கை எடுத்து கும்பிட்டவாறு போனாள்.

அக்ஷய் சிரிப்பு தாளாமல் மனைவியை பார்த்தான். அவள் இவர்கள் இருவரது பேச்சையும் ரசித்தவாறு குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள். அக்ஷய் குழந்தையின் கன்னத்தை தடவி விட்டு அவனுடைய பிஞ்சுப் பாதங்களில் முத்தமிட்டு அப்படியே நிலாவிற்கும் முத்தமொன்றை கொடுத்துவிட்டுக் குளிக்க போனான்.

***

எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தனர்.

''ம்...ரொம்ப காலத்துக்கு அப்புறம் நல்ல சாப்பாடு நிம்மதியா இன்னிக்குத்தான் சாப்பிடுறேன்..'' அக்ஷய் சொல்ல நிலா குற்ற உணர்வுடன் பார்த்தாள் மற்றவர்களும் வாஞ்சையுடன் அவனை பார்த்தபடி,

''நல்லா சாப்பிடுப்பா...இனி உங்களுக்கு எந்தக்குறையுமில்லை...ஆண்டவன் உங்களை சோதிச்சது போதும்..எல்லாம் நன்மைக்கே சாப்பிடு..'' என்றவாறு சிதம்பரம் கோழிகுருமாவை அவனது தட்டில் வைத்தார். அரட்டையும் கிண்டலுமாக உணவு வேளை முடிந்ததும் அக்ஷய் மாமனாரையும் அத்தையையும் பார்த்து,

''மாமா உங்ககிட்டே ஒரு சின்ன வேண்டுகோள்..''

''என்ன மாப்பிளை வேண்டுகோள் என்று பெரிய வார்த்தையெல்லாம் பேசிகிட்டு கட்டளைன்னு சொல்லுங்க உடனே செய்ய தயாராயிருக்கேன்..'' சிதம்பரம் உரிமையுடன் சொன்னார்.

''அது வந்து...நிலாவுக்கு நடந்தது அவ என்னைவிட்டு பிரிஞ்சு போனது..எனக்கு ஆக்சிடென்ட் ஆனது எதையும் என்னோட பேரண்ட்சுக்கு யாரும் சொல்ல வேண்டாம்..'' அவன் சொல்ல மற்றவர்கள் புரியாமல் பார்த்தனர்.

''என் அம்மாவை பொறுத்தவரை நிலா மருமகளாக வரணுமுன்னு நினைச்சாங்க..அதன்படியே நடந்தது..இனி முடிஞ்சு போன கதையை சொல்லி நிலா மேல் இருக்குற பாசத்தையும் நல்லெண்ணத்தையும் எதுக்கு கெடுக்கணும்...? அம்மா கொஞ்சம் பழமை வாதி...இப்போ இல்லைன்னாலும் எப்போதாவது வாய் தடுமாறி ஏதாவது நிலாவை சொல்லிட்டா.. அது அவளாலும் தாங்கமுடியாது அவ கலங்குறதை பார்த்தா நானும் தாங்க மாட்டேன்...மனிதர்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை... தேவையில்லாத சங்கடங்களை தவிர்ப்போமே...அதனால இப்போது தான் ரெண்டு பேரும் குழந்தை பிறந்ததை காட்ட இந்தியா வந்திருக்கோம்...நேரம் இல்லாமையால் தொடர்பு கொள்ள முடியலைன்னு சொல்லி அவங்களை நான் எப்படியும் சாமாதானப் படுத்திடுவேன்... மறுபடியும் என் கம்பனியை திறப்பேன்..பத்து வருஷமாக நான் வாங்கி வந்த அவார்டை இந்த தடவை நிலாவோடும் குழந்தைகளோடும் போய் வாங்குவேன்..அதனால நிலாவால் மாப்பிளை நீங்க எல்லாத்தையும் இழந்துட்டீங்களேன்னு ஃபீல் பண்ணாதீங்க... எனக்கு இழந்தை மீட்பது எல்லாம் பெரிய விஷயம் இல்லை...'' அவன் சொல்லிமுடிக்க சிதம்பரம் பேச்சின்றி அவனது கைகளை எடுத்து தனது கண்களில் ஒற்றியவராய்,'

''மாப்பிளை..உண்மையிலேயே நீ கிரேட்டுப்பா..உன் நல்ல மனசுக்கு நீ மறுபடியும் எழுந்து நிற்பே...நல்லா வருவே எங்க ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு'' அவர் உணர்ச்சியான குரலில் சொல்ல மற்றவர்களும் நெகிழ்ந்து போய் இருந்தனர்.

***

''ஹலோ...கீர்த்தி..நாந்தாண்டா அக்ஷய்டா... இந்தியாவிலேருந்து பேசுறேன்..'' லணடனுக்கு தொடர்பு கொண்டான்.

''அக்ஷய்! என்னடா? இந்தியா வந்துட்டியா? நிலா இருக்காளா? அவளை பார்த்தியா? அவ பேரண்ட்சை பார்த்தியா? எல்லாம் சொல்லிட்டியா?'' அவன் கேள்விகளை அடுக்கியபடி போக,

''இரு...இரு உனக்கு பதிலா நான் மூச்சு விட்டுக்குறேன்...இப்படி எல்லாக்கேள்வியையும் ஒரேடியா கேட்டா எப்படிடா?'' நண்பனை கிண்டாலாக கேட்க,

''அய்யோ ''அக்ஷய்! எனக்கு பிபி ஏறிட்டிருக்கு...டென்சன் படுத்தாம சட் சட்டென்று பதில் சொல்லேன்..'' கீர்த்தி படபடத்தான்.

''அப்படியா? டென்சன் படுத்தவேணாமா? ம்..ஒரே வரியில் ஒரு பதில் நீ அடுத்த பிளைட்டில் நீ இந்தியா திரும்புறே...'' என்றவனை இடைமறித்தான் கீர்த்தி.

''ஏண்டா உனக்கு ஏதாவது'' என தொடங்கியவனை,

''உனக்கு மேலதிக தகவல்கள் வேணுமுன்னா இங்கே வா..நிறைய்ய சர்ப்ரைஸ் தர்றேன்..அவ்வளவு தான் சொல்வேன் வைச்சுடுறேன்..பை பை..'' என்றவாறு ரீசீவரை வைத்தான்.

''பாவம்ங்க..என்ன விபரம் என்று சொல்லியிருக்கலாம்...துடிச்சு பதைச்சு ஓடிவரப்போறார்...'' நிலா கவலையாகச் சொல்ல,

''ம்..பயலை இங்கே வரவழைக்க எனக்கு கிடைச்சிருக்குற சான்ஸ்..எல்லாம் காரியமாகத்தான் வரச்சொல்றேன்..அடுத்த பிளைட்டில இடம் இல்லைன்னாலும் வெளியில ரெக்கையைப் புடிச்சுகிட்டு நாளைக்கு வந்து இங்கே வந்து குதிக்கிறானா இல்லையான்னு பாரு..'' அக்ஷய் சொல்லியபடி இருக்க
அதே நேரம் லண்டனில் கீர்த்திவாசன் பேக்கிங் செய்தபடி பிளைட் பிடிக்க பறந்துகொண்டிருந்தான்.
(Coming)
 
Top