• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிழலின் யாத்திரை ..7

சசிகலா எத்திராஜ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
15
0
1
Karur
அத்தியாயம் .. 7


"பெயரிட முடியாதத்

தொலைத்த உந்தன்

பேரன்பின் காலங்களை

கனவுலகில் மகிழ்வின்

ஊற்றாகத் தேடித் தேடி

அனுபவிக்கிறேன் அனாமிகா…!!!!



காரினுள் பேரமைதியாக மாறிருக்க, அவளோ அவனின் கரங்களை வருடிப் படியே இருந்தாள். அதைத் தடுக்கத் தோன்றாமல் அதனால் கிடைக்கும் மனதின் அமைதியை ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் வினோதகன்.


எத்தனையோ நாட்கள் ஏங்கி ஏங்கிக் கிடைக்காத இந்த பேரன்பின் வருடல் ஒரு தாய் தன் குழந்தையை இதமாக மென்மையாகத் தடவிக் கொடுத்து மனதின் சுணுக்கத்தை நீக்கி விடுவதைப் போல உணர்ந்தான் அவன்.


மீண்டும் தானே பேசத் தொடங்கிய வினோதகன்,'' உயர்தரமான வெளி நாட்டு கார், ஆடைகள் மேல்நாட்டு நாகரிகம், பார்ட்டி என பல கலவை கலந்த நாட்களில் எனக்கான நிமிடங்கள் இன்று உன்னுடன் கழிக்கும் இந்த மணித் துளிகள் தான் தெரியுமா மகி..


எனக்காக ஒரு அன்பை உன் கண்ணில் உணர்வதுக் கண்டு மீண்டும் மீண்டும் அது வேண்டும் என ஏங்குகிறது மனம். ஆனால்?'', .... என்று அதற்கு மேலே பேச்சை நிறுத்தியவன் திரும்பி அவள் விழிகளை உற்று நோக்கினான் வினோதகன்.


கள்ளமே இல்லாத பால் விழிகளில் கருவண்டாக சுழன்று கொண்டிருக்கும் பந்துகளைக் கண்டவன் அதனுள் முழ்கி அவளின் இமைச் சிறகுள் நுழைந்து சிறை வாசம் செய்ய ஆசை வந்துவிட்டது அந்த நொடியில் அவனுக்கு.


இது தவறா இல்லை என்று எல்லாம் யோசிக்கும் நிலையில் அவன் இல்லாத மனநிலை இருந்தான். ஆனால் அதை வாய் விட்டுக் கூறாமல் அவளின் கண்ணைப் பார்த்தபடி அமர்ந்திருக்க,


அவனின் விழி வீச்சில் பெண்ணயவளோ உள்ளம் சிலிர்க்க, என்ன பார்வை இது?.., ஆளை அசுர அடிக்கும் ராட்சத பார்வையில் பெண் மான் மயங்கித் தான் போனது. அவளுக்கும் இது நடக்காது என்று தெரிந்தாலும் அந்த வினாடிகுரிய சந்தோஷத்தை இழக்க விரும்பவில்லை அவளும்.


இருவரும் மெய்மறந்து ,தன்னிலை கெட்டு இருக்க எங்கிருந்தோ ஒரு ஆந்தையின் அலறல் குரலில் நினைவுலகத்திற்கு இருவரையும் திரும்ப சட்டென்று தன் கையை விலக்கிக் கொண்டாள் அவனின் செல்லமாக அழைத்த மகி என்கிற மகிழினி.


அவள் தன் கரங்களை விலக்கியதும், அவளைப் பார்த்து உதடுகளை பிதுக்கிக் காமித்தவன்,'' உன்னைப் போல இந்த அன்பை என் அம்மா காமித்திருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்'', என்று ஏக்கமான குரலில் சொல்லிவிட்டு, அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் போல ...


''எந்த ஜென்மத்தில் எந்தக் கர்மம் செய்தேனோ தாயின் அன்போ தந்தையின் பாசமோ கிடைக்காமல் தனி ஒருவனாக வாழ வேண்டிய கட்டாயம்..



வாழ்க்கையில் தேவைக்குத் தான் பணம் பகட்டு எல்லாம், ஆனால் உணர்வுகளை உணர்ந்து அன்பை பொழிந்து பாசத்தைக் கொண்டாடிய பேரன்பின் முன் எவ்வளவு கோடி சொத்துக்கள் குவிந்து இருந்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் தான்'', என்று சொல்லியவனைக் கண்டு அவனின் உணர்வுகளை எவ்விதமாகக் கையாளுகிறான் என்று வியந்துப் போனாள் மகிழினி.


தன் மேலே சினம் எழும்பினாலும் அந்நொடியில் அதைத் தவிர்த்த விதமும், இப்போது உணர்ச்சி பிடியிலிருந்தாலும் அதைத் தக்க வகையில் வார்த்தைகளைக் கோர்த்துப் பேசும் அவனைக் கண்டு எந்த வினாடியும் தன்னையே ஒரு உணர்வு பிடிக்குள் சிக்கி விடக் கூடாது என்பதற்கான பயற்சியை சிறுவயதிலே வளர்த்து விட்ட அவனின் அம்மாவை நினைத்து வியப்பதா இல்லை வெறுப்பதா தெரியவில்லை அவளுக்கு.


மகிழினியை பொறுத்தவரை அவள் வாழ்வில் எந்த உணர்வுகளையும் அந்த நொடியிலே கொட்டித் தீர்த்து விட வேண்டும். அதை அடக்கி ஆளணும் என்கிற எந்தவிதக் கட்டுபாடும் இல்லை.


ஆனால் வினோதகனுக்கு எந்த உணர்வுகளையும் கட்டுப்படுத்தி வாழ பழக்கம் படுத்த வேண்டும் என்பதே சிறு வயது கட்டளையா இல்லை, அது தான் நாளைக்கு தன் தொழில்களை மேம்படுத்த வேண்டும் என்பதற்கான பயற்சியா என்று கேள்வி அவளுள் ஓடியது.


ஆனால் இப்படி வினோதகன் இருப்பது அவனின் மனத்தை எந்தளவுக்குப் பாதித்து இருக்கிறது நினைக்கும்போது அவளுள் மிதமிஞ்சிய கோபம் அவனின் பெற்றோர் மீது எழுந்தது.


தனக்குக் கிடைத்த அன்பை உதாசீனம் படுத்திவிட்டு தன்னுடைய போக்கில் சுற்றி அலைந்து சீர்யலைந்தத் தன் வாழ்க்கையின் மேலே வெறுப்பு தான் மிஞ்சியது மகிழினிக்கு.


காலம் தான் எப்படி மாற்றி அமைத்திருக்கிறது இவ்வேளையை... வெவ்வேறு மனநிலையில் இருக்கும் இருவரை சந்திக்க வைத்துச் சிந்திக்க வைக்கிறதா இவ்வாழ்வு என்று சிந்தனையோட்டம் மனதில் எழ மகிழினி இந்த இறுக்கமான சூழ்நிலையிலிருந்து சற்று விடுபட எண்ணினாள். அதற்கு ஒரே வழி அவனின் பேச்சின் திசையை மாற்ற வேண்டும் என்று நினைத்தவள், அவனிடம் வம்பளப்பதுப் போல பேச ஆரம்பித்தாள்.


''என்ன சாரே பெரிய அன்பு, பாசம் எல்லாம் கிளாஸ் எடுக்கீறிங்க, அது எல்லாம் அளவுக்கு அதிகமானால் விசமாக மாறிவிடும் சாரே'', என்று சொல்லியவள், '' எனக்கு எல்லாம் அதீதமாகக் கிடைத்தால் தான் இப்ப நான் விஷமுள்ள சர்ப்பமாக என்னை மாற்றியது மட்டுமல்லாமல் என் வாழ்க்கையை திசை மாற்றியது.


அளவுக்கு மீறினால் அமிர்தமும் விசமாகும் தெரியும் தானே'', என்று கேட்டவளை முறைத்தான் வினோதகன்.


''உனக்குக் கிடைத்ததை வச்சு உன்னால் வாழத் தெரியல,அதை எனக்கு சொல்லித் தரீயா'', என்றவன், ''பெற்றோரின் அரவணைப்பு என்பது சிறு வயதில் கிடைக்கும் உன்னதமான பந்தம், அது கிடைக்காமல் இருப்பவர்களுக்குத் தான் தெரியும் அதன் அருமை பெருமை எல்லாம், உனக்கு எங்கே தெரியப் போகிறது, நீ தான் அதை எல்லாம் வேஸ்ட் சொல்லிவிட்டு சாக்கடையில் விழுந்து உருளுகிற பன்றிக் கூட்டத்தில் ஒருத்தி தானே'', என்று வாயில் வந்ததைச் சொல்ல,


அதைக் கேட்டவளின் முகமோ வாடி வதங்கி சட்டென்று உவர்ப்பு நீர் கண்களில் உற்பத்தியாகிக் கொட்டியது.


அவன் சொன்னது உண்மை தானே, சாக்கடை வாழ்க்கை வாழ்பவளுக்கு இந்த அன்பு புரியாமல் போய்விட்டது தான். அவனுக்கு அது கிடைக்காதால் அவனுக்கு அது பெரிதாகத் தெரிகிறது, தனக்குக் கிடைத்தால் அது எனக்குப் பிடிக்காத ஒன்றாகிவிட்டது என்று எண்ணியபடி மௌனமானாள்.


தான் பேசியது அதிகபடி என்று உணர்ந்தவன், இவளிடம் நாம் அதிகம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசி விடுகிறோம் என்று தன்னையே திட்டிக் கொண்டவன், ''சாரி மகி, ஏதோ சிறு கோபம் அணையாத அனலாக நெஞ்சில் எரிந்துக் கொண்டிருக்கிறது, அது உன் வார்த்தைகளால் நெருப்பு துகள்களாக தெறிக்கிறது'' ,என்று சொன்னவன், தானே அவள் விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு அவளின் மிருதுவான கன்னகதுப்புகளை வருடிவிட, அதில் உள்ளம் குளிர்ந்தவளோ அவனின் கரத்தை அழுத்தமாகப் பிடித்து நிறுத்தியவள், ''நீங்கள் மெய் தானே உரைத்தீர்கள், இதில் என்ன இருக்கு,


எப்பவும் உண்மை சுடும் சாரே, அது தான் சுட்டதும் கண்ணீர் வந்துவிட்டது. எப்போதும் கடினமான வார்த்தைகள் செவியில் உணர்ந்து உள்ளத்தைத் தொடு முன் கண்களுக்கு அது வேதனை தந்து விடுவதால் தான் கண்ணீர் வந்து விடுகிறது போல'', என்று சொல்லியவள் அவனின் கைகளை விலக்கிவிட்டு காரின் சன்னல் வழியாக வெட்டவெளியை வெறித்துப் பார்த்தாள் மகிழினி.


அவளின் பேச்சில் இருக்கும் விரக்தியை கண்டு ''சாரிமா'', என்று மறுபடியும் கேட்க,


விடாமல் கண்களில் வழிந்த நீரை துடைத்துவிட்டு, ''என்ன சாரே துணிக்கடை வைத்திருப்பதால் நிறைய சாரி கொடுக்கீறிங்களா'', என்று கரகரத்தக் குரலில் கேட்டாள் மகிழினி.


எவ்வளவு இறுக்கமான சூழ்நிலையிலும் அதை இயல்பாக மாற்றிவிடும் அவளின் பேச்சு தொனியைக் கண்டு வியந்தவன், சிறு சிரிப்புடன், ''ஆமாம் மா, நிறைய சாரி மிஞ்சிருச்சு, அதைத் தான் உன்னிடம் விற்றாலாவது பணம் ஆக்கலாம் ஆசை தான், ஏன் என்றால் அது விற்காமல் போனால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா, எங்க கடையே திவாலாகிவிடும்.. அப்பறம் அந்த நஷ்டத்தைத் தாங்குவோமா... அவ்வளவு தான் நாங்கள் எங்கள் கடையில் விற்காமல் மிஞ்சி கிடைக்கிற துண்டை தலையில் போட்டுப் போகணும்'', என்று சொல்லியவன், சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினான் வினோதகன்.


அவனின் சிரிப்பைக் கண்டவள், இவ்வளவு நேரம் மறைந்திருந்த அவனின் சிரிப்பு அவனின் இறுக்கத்ததைக் குறைத்து விட்டதைக் கண்டு தானும் கூடச் சேர்ந்து நாதமாகச் சிரித்தாள் மகிழினி.


இருவரின் சிரிப்பில் அந்த அமைதியை அழகாக்கிக் கொண்டு அழகான நட்பை ஒருவருக்கொருவர் உணர்ந்தவர்.


அந்தச் சிரிப்பிற்குப் பிறகு இருவருக்குள் இருந்த ஏதோநொரு தடை அகன்றது போன்ற தோன்றியது .


அதன்பின் இருவரின் பேச்சிலும் அடுத்தவரை காலை வாரி விடுவதிலும் நக்கலும் நய்யாண்டியுமாக இருக்க அந்த நிமிடங்கள் அவர்களின் வாழ்க்கையில் பொன்னான நிமிடங்களாக மாறி அவரவர் இதயத்திற்குள் பொக்கிஷமான நினைவுகளாக உள்ளே வைத்துப் பூட்டிக் கொண்டனர்.


பல தடைகள் அகன்றதும் வினோதகன், அவளிடம் சொன்னான்.'' எத்தனையோ நாட்களோ மாதங்களோ வருசங்களோ தெரியல, ஆனால் எந்தவித கட்டுபாடுமின்றி சிரிப்பது என்பது என் வாழ்க்கையில் இது தான் முதல் முறை'', என்றவன்,


அதைக் கேட்டவள், அவனைத் தயக்கத்துடன் பார்க்க,


''ஆமாம் மா, இத்தனை தொழில்களுக்கு ஒற்றை வாரிசாக இருப்பதால் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதால் சிறிய வயதிலிருந்து எனக்குப் பயற்றுவிக்கப் பட்டது தெரியுமா…சிரிப்புக் கூட மில்லிமீட்டர் அளவு தான்… அதற்குமேலே சிரித்தால் வேலை செய்பவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விடுவார்கள் என்ற பாடம்..


ஒவ்வொருவருக்கும் குழந்தை பருவம் எவ்வளவு அழகாக அமைகிறது, ஆனால் எனக்கு அப்படி இல்லை.


படிப்பிலும் விளையாட்டிலும் முதலவதாக வரணும், அப்படி வரவில்லை என்றால் ஆயிரம் முறை மனதில் பதிய வைக்க எத்தனை எத்தனை அறிவுரைகள், அதிகாரங்கள் செய்வார்கள் தெரியுமா.


அதுவும் என் அம்மாவிற்கு, எங்கும் தோற்க்கக் கூடாது, தோற்றால் எப்படி வாழ்க்கையில் இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆள்வாய், என்று புரியாத வயதிலும் புரிய வைக்க பேசுவதே எனக்கு அவரிடமிருந்து பல காத தூரம் ஒதுங்கி ஓடத் தோனும்.


அப்படி எல்லாம் தோனும் போது கிண்டலாக நினைத்துக் கொள்வேன், இப்படி அம்மாவை விட்டு ஓடுவதை ஒலிம்பிக் ஓடிருந்தால் ஒரு தங்கப் பதக்கமே வாங்கி இருக்கலாம்'', என்று சொல்லிச் சிரிக்க,


அதைக் கேட்டவளோ'' ஆமாம் ஆமாம் இந்தியாவிற்குத் தங்கப் பதக்கம் கிடைச்சிருக்கும், நாடே அப்ப உங்களை தூக்கி வைத்துக் கொண்டாடிருக்கும், கூடவே உங்கள் அம்மாவும் பெருமையில் பூரித்துருப்பார்கள் '',என்று சொல்வதைக் கேட்டவன்,


''ம்ஹீம் அது மட்டும் என்னிக்குமே நடக்காது, எங்க அம்மாவைப் பொறுத்தவரை அவர்கள் சொல்வதைச் செய்யும் ரோபோவை உருவாக்க நினைச்சாங்க, ஒரு மிஷினிடம் எப்படி புரோகிராம் செட் பண்ணுவாங்களோ அப்படி தான் என் மூளையில் செட் பண்ணனும் நினைச்சாங்க'', என்று சொல்பவனின் மனதின் வலியை உணர்ந்தவளோ அவனின் கரங்களுக்குள் தன் கரத்தை இணைத்து அழுத்தினாள் மகிழினி.


அதைக் கூட உணரதவன், ''அவர்களுக்கு ஒரு ரோபோ தான் தேவை, உணர்வுகளும் உணர்ச்சிகளையும் தொலைத்துக் கொண்ட மனித உருவில் இருக்கும் ஒரு ரோபோ தான் தேவை.


ரேஸ் குதிரை ஜெயிக்க வைக்க பலவிதமான பயிற்சிகள் உண்டு அதைப் போல தான் ஜெயிப்பது மட்டுமே வாழ்க்கையில் ஓட்டம், அதுவும் அவர்கள் விரும்பும் படி இருக்கணும்.


அது தான் மகாலட்சுமியின் தாரக மந்திரம்'', என்று வெறுமையான குரலில் பேசினான் வினோதகன்.


அவனின் வெறுமை மனதிலும் குரலிலும் கண்டவளுக்கு அவனிடம் எந்த விதமான ஆறுதலை அளிப்பது என்பது தெரியவில்லை.


அவள் பலரின் வாழ்க்கையில் ஆறுதலுக்கோ இல்லை ஆசை தணிக்கும் உடம்பவாகவோ இருந்திருக்கிறாள். ஆனால் இன்று ஒருவனின் மன ஆறுதலுக்காக உருகி நிற்பது இதுவே அவள் வாழ்வின் முதல் முறை. அதனால் தன் கைகளாலே ஆறுதலிக்க அவனோ அதை உணராமலே இருப்பது தான், ஆனால் இருவரின் மனநிலை வெவ்வேறு நிலையில் இருப்பதாலோ என்னவோ மேகத்தின் பின்னால் மறைந்த நிலவு போல இருக்கிறது.


இப்பயணம் அவர்களின் வாழ்க்கை நிலையை மாற்றி அமைக்க விதியின் கையில சுழற்றும் கயிறாக மாற்ற முயன்றது விதி.

தொடரும் ..
20221015_180243.jpg