• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயே எந்தன் மகளாய்-11-கணினி விடு தூது

தீபா செண்பகம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
520

நீயே எந்தன் மகளாய்-11-கணினி விடு தூது


கயல்விழியின் கணினி விடு தூதை, அனுப்பிய அடுத்த வினாடியே, உரியவரிடம் சேர்ப்பித்தது இன்றைய அறிவியல் உலகம்.

கரடு, முரடான தழும்புகளைப் பெற்றிருந்த முகத்துக்குச் சொந்தக்கார அந்த காவலன் தனது டூட்டியை மெரினா கடற்கரையில் முடித்து, மாற்றுக் காவலர்களை நியமித்து விட்டு, ரிசர்வ் போலீஸார் தங்கியிருக்கும் குவாட்டர்ஸ்க்கு வந்து சேர்ந்து குளித்து உடை மாற்றி, ஒரு ஷார்ட்ஸ் டீசர்டோடு தனது படுக்கையில் விழுந்தான்.

காலை முதல் மெரினாவில் டூட்டி பார்த்ததில் மிகவும் களைத்திருந்தான். அவன் உடலால் களைத்திருந்தான் எனச் சொல்வதை விட, மனதால் களைத்திருந்தான் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அவன் எதை மறைக்க அஞ்ஞாதவாசம் இருக்கிறானோ, அதையே நினைவு படுத்துவது போல் இந்தத் தமிழகம் மட்டுமின்றித் தமிழினமே திரண்டு எழுந்துள்ளது.

எது ஒன்றை வேண்டவே வேண்டாம் என ஓடி ஒளிந்து, பெற்றவரையும், உடன் பிறந்தோரையும், ஏன் பரிசம் போட்டவளையுமே பிரிந்து தனிமையில் தண்டனை அனுபவிக்கிறானோ, அதே அவனுக்குக் கட்டாயக் கடமையாக ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அத்துமீறல்கள் நடக்காமல் பாதுகாக்க, விதி விதித்தது. ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு எனக் காணும் இடமெல்லாம் காளையின் படங்களும், சொற்களுமே எதிரொலித்தது.

தனது கைப்பேசியை உயிர்ப்பித்து, மெயில் வந்ததை ஆராய, மிரட்டலாக ஓர் கடிதம் வந்திருந்தது, அவன் அன்புக்குரியவளிடமிருந்து.

ஆம், இந்த அன்புக்கு உரியவளிடமிருந்து வந்திருந்த மெயிலை தான் வாசித்தான் உதவி ஆய்வாளர் சிஏ. செல்வன். வழக்கம் போல வரும் மெயில், அதுவும் இன்று சிறுவீட்டுப் பொங்கல் வைத்திருப்பாள். கட்டாயம் தன் நினைவில் மடல் வரைந்திருப்பாள், என எதிர் நோக்கியபடி கைப்பேசியை உயிர்ப்பித்து, கடிதத்தைப் பார்க்க, அந்த முரட்டுக் காவலனின் கண்களிலிருந்தும் கண்ணீர் சொரிந்தது.

"மாமா, இந்த மெயில் மூலமா, என் மனசில் இருக்கிறதெல்லாம் உன்னை வந்து அடையுதுங்கிற நம்பிக்கையில் தான் நான் உசிரோடவே இருக்கேன். என் நம்பிக்கை சரி தான்னு ஒரு சமிக்ஞை கொடு மாமா.

மூணு வருஷம் கழிச்சு இந்த வருஷம் பூஎருவாட்டில சூடம் ரொம்பத் தூரம் எரிஞ்சுக்கிட்டே போச்சு. ஓடைக்கு அத்தை மாமாவும், அது தான் உங்க அப்பாவும் வந்திருந்தார். என் வேண்டுதல் நிறைவேறும்கிற நம்பிக்கை வந்திருச்சு. இன்னைக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தேன் மாமா. என் கண்ணே, என் மேல பட்டுடுச்சு போல, மாமா அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லிப்புட்டாரு. என் உசிரே ஒரு நிமிசம் நிண்டுடுச்சு.

அப்படி என்ன சொன்னாருன்னு கேட்க மாட்டியா, சரி நானே சொல்றேன். நீ பரிசம் போட்ட செயினை, திருப்பிக் கேட்கிறாரு. என்னை, உனக்குப் பரிசம் போட்ட கட்டிலிருந்து விடுவிச்சு விடுறாறாம். எனக்கு வேற மாப்பிள்ளையைப் பார்த்துக் கல்யாணம் கட்டி வைக்கச் சொல்றாரு . ஏன்னா நீ உயிரோட இருப்பேன்னு நம்பிக்கை இல்லைனு சொல்றாரு. இதை டைப் பண்ண கூட என் கை நடுங்குது மாமா, அவருக்கு அவருக்குச் சொல்ல மனசு வந்துச்சு . அதைக் கேட்டவுடனே எனக்கு மயக்கமே வந்துடுச்சு. இல்லையினா, இந்தச் செயினை இன்னைக்கு வாங்கிட்டு போயிருப்பார்,

அது எப்படி உங்கப்பா, பரிசம் போட்டதை இல்லைனு சொல்லலாம். எங்க அத்தை, என்னை மருமகளாக்கிறேன்னு, வாக்கு கொடுத்து, நீ போட்டது. நாலு வருஷம் முன்ன என் பிறந்த நாளான, தை பூசத்து அன்னைக்கு, இந்தச் செயினை என் கழுத்தில போட்ட. இந்த வருஷம் தை பூசம் வரைக்கும் தான் உனக்கு டைம். அதுக்குள்ள நீ வரலைன்னா, அதே நாள்ல என் கழுத்தில், நீ கட்ட வேண்டிய மஞ்சள் கயிற்றுக்குப் பதிலா, வேற கயிறு ஏறும். இது என் அத்தை மேல சத்தியம்.

என் அத்தையைக் காப்பாத்த முடியலைனு தான கண்காணாமல் போன, இப்ப நீ கண் காணாமல் இருக்கிறதுனாலையே, என்னையும் இழக்கப் போற. இதுக்கு அடுத்து எந்த மெயிலும் போட மாட்டேன். மெயிலும் பார்க்க மாட்டேன். பார்த்து பார்த்து என் கண்ணு ஏமாந்தது எல்லாம் போதும். என்னால நீ வராத, பதில் சொல்லாத ஏமாற்றத்தை தாங்கவே முடியலை.

இது எனக்கு இருபத்தஞ்சாவது பிறந்த நாள். அதுவே கடைசியா இருக்கனுமான்னு நீயே முடிவு பண்ணிக்க. நீ நேரில் வருவேங்கிற நம்பிக்கையில் உன்னையே எதிர்பார்த்துக் காத்திருக்கும், கயல்விழி அன்புச் செல்வன்." என எழுதியிருக்க, அதைப் பார்த்துக் கதறி விட்டான், அவளின் அன்பு என்ற காவலன் சிஏ செல்வன்.

அவசரமாகக் காலண்டரை புரட்டி தை பூசம் என்று வருகிறது எனப் பார்த்தான். இன்னும் பத்து நாட்கள் இருந்தது. ஈ மெயிலை மீண்டும், மீண்டும் வாசித்தவன் கண்களில் அதை மறைத்துக் கண்ணீர் பெருக்கெடுத்தது. " கயலு, விழி, கயல்விழி என் கவி, கண்ணழகி, என்னடி பொசுக்குண்டு இப்படி எழுதிபுட்ட. என்னால தான் இந்த உலகத்தில நிம்மதியா வாழ முடியலை, நீயாவது சந்தோசமா வாழாலாம்ல. அன்னைக்கே நீ உன் மாமன் மகனைக் கட்டியிருந்தாலும் நீயும் சந்தோசமா இருந்திருப்ப. இந்த அசம்பாவிதமெல்லாம் நடந்திருக்காது.” என வாய் விட்டுப் புலம்பியவனை, அவனது மனசாட்சி 'கயல்விழியை இன்னொருத்தனுக்கு விட்டு கொடுத்துட்டு, நீ சும்மா இருதிருப்பியா' எனக் கேட்டது.

அந்தப் போட்டாபோட்டி தானே, இன்று தானிருக்கும் நிலைக்குக் காரணம் என மனம் வருந்தியவன், பரிசம் போட்ட நான்கு வருடத்துக்கு முன்பான தை மாதத்துக்குப் பயணித்தான்.

கயல்விழிக்குப் பரிசம் போட்டு விட்டு, மிகவும் கர்வமாகவே கோதண்டத்தை ஓர் பார்வை பார்த்தான் அன்பு.

" டேய், ஜல்லிக்கட்டு மாட்டை வேணா நீ வளர்க்கலாம். ஆனால் அதை அடக்கிற வீரன் நானு. கயலுக்குப் பெரியமனுசியானப்ப, குச்சுக் கட்டுற உரிமையை வேணா, தாய் மாமன்கிற உரிமைக்கு உங்களுக்கு வந்திருக்கும். ஆனால் அவள் மனசில் மாளிகை கட்டியே உட்கார்ந்து இருக்கிறது நான் தான்..." என அன்பு பெருமை பீற்றிக் கொள்ளவும் அறிவும் எகத்தாளமாகச் சிரிக்க, கோதண்டத்துக்கு பற்றிக் கொண்டு வந்தது.

"டேய், காளையை அடக்குகிறது பெரிய விசயமில்லடா. அதை வளர்த்து பாரு அப்பத் தெரியும். வருஷம் பூரா, அதுக்கு எம்புட்டுச் செலவு செஞ்சு, ஊட்டம் கொடுத்து, நீச்சல் பழக்கி, மண்ணை முட்ட விட்டு ரோசமா, அரும்பாடுபட்டு வளர்க்கனும். இன்னைக்கு மாடுகள் இனப் பெருக்கமே, எங்களால தான் நடக்குது. பெரிசா காளையை ஒரு நிமிசம் வாடியில, நூறு பயலுவ மேல விழுந்து,அதை மிரள விட்டு அடக்கிட்டா பெரிய வீரமாடா. வளர்கிறது தான்டா வீரம். இது தெரியாமல் மாடு பிடிக்கிறவனை வீரன்னு சொல்றானுங்க. இம்புட்டு பேசிறியே, நீயே ஆதாயம் வேணும்முன்னு பசு மாட்டைத் தான வளர்க்கிற. காளை மாட்டை வளர்த்து காமிடா. நான் வந்து உன் மாட்டை அடக்குறேன். அப்பத் தெரியும் அதோட வலி" என ஆவேசமாகப் பேசவும் ,

"பங்காளி, எதுக்கு இம்புட்டு பொங்குறவன். நீ காளை மாடு வளர்க்கிறது, பெரிய விசயம் தான் ஒத்துக்குறோம். அதுக்காக எங்க வீரத்தை குறைச்சு சொல்லாத. உன் மாடு அடிபணியுதுண்டா உன் ட்ரைனிங் பத்தாதுண்டு அர்த்தம். அதையும் விட, மனுசனா மாடோ, பிறப்புலையே வீரம், ஒரு கெத்து இருக்கனுமுண்டா. இதே, மருது, கொம்பன், ராவணேண்டு மாடுங்க வருது, எவனாவது வாடியில எதுத்து நிண்டு பார்த்துருக்கியா. அது அதுக்குப் பிறவி கெத்து, நீ உன் மாடை அடக்குநோமுண்டு சும்மா வாய் பேச்சு பேசாத." என அன்பு அவனுக்குப் பதில் தந்தான்.



"அப்படின்னா சவால். நான் ஒரு காளையைத் தரேன். நீ அதை வளர்த்துக் காட்டு. அப்ப நான் ஒத்துக்குறேன்." எனச் சவால் விட்டான் கோதண்டம்.

"ஹே, ஹேய்" எனச் சிரித்த அன்பு, "என்கிட்ட சவால் எல்லாம் விடாத, அப்புறம் அதிலையும் இறங்கிடுவேன். நமக்குள்ள இருக்கப் போட்டி, காளைகளுக்குள்ளேயும் வந்திடும்." என அன்பு பதில் சவால் விட்டான்.

"சும்மா, வாய்ச் சொல் வீரனா இருக்காத, உண்மையான மாடுபிடி வீரனா , காளை மாட்டை வளர்த்துக் காமிடா." எனக் கோதண்டம் வாய் வழியாக வலிய வந்து சேர்ந்தான் எமன்.

அன்பு, கோதண்டத்திடம் சவால் போட்டபடி , அவனிடம் இல்லாமல் ஒரு புலிக்குளம் காளையை வாங்கி வந்தான். அதுவும் அடுத்த வருட ஜல்லிக்கட்டில் அது பங்குபெற வேண்டும் என மூன்று வயது மாடு அசுரனை வாங்கி வர, மிகவும் ரோசமான அந்தக் காளை அதோடு அழைத்து வந்த பண்ணைக்காரன் ஆறுமுகம் என்ற நரம்பு தளர்ந்த செவிடனைத் தவிர வேறு யாரையும் நெருங்க விட வில்லை. அதனை வீட்டில் வளர்க்காமல் தங்கள் வயல் வெளியிலேயே செலவழித்து ஒரு செட்டை போட்டான்.

அன்பு குடும்பத்து தோட்டம், ஐந்து ஏக்கர் பரப்பளவில், மாந்தோட்டம், கொய்யா, நாவல் மரம், நெல்வயல் அது போக காய்கறிகளையும் பயிர் செய்தனர். அதற்கு பாய்ச்சுவதற்கு என ஒரு பம்ப் செட்டும் இருந்தது. சற்றே மெட்டு பாங்கான இடத்தில் இருக்கும் இவர்கள் தோட்டமே, அமைதியாக பொழுதை போக்கவும், செழுமையானதாகவும் இருந்தது. பாலமேடு மாம்பழம் என்பது இந்த பகுதியில் பிரசித்தி பெற்றது.

அந்த தோப்பில் தான் அசுரன் காளையின் பயிற்சியும் நடக்கும். இந்த தோட்டத்தின் ஆரம்ப பகுதியில் சீட் இறக்கி, 3 ஷெட் போட்டிருந்தார்கள். ஒரு ஷெட்டின் ஓரத்தில் தான் மாட்டுக் கொட்டமும் பண்ணைக்காரன் தங்குவதற்கு ஒரு சிறிய அறையும் இருந்தது. மற்றொரு ஷெட்டில் கயிற்றுக் கட்டில் போட்டு, இவர்கள் ஓய்வெடுக்கவும், அசுரன் காளைக்கு மட்டும் தனி செட்டும் இருந்தது.

அதற்கு ஊட்டம் கொடுக்கவெனப் பருத்திக் கொட்டை, புண்ணாக்கு , கானப் பயறு, பேரிட்சை என விதவிதமாக நாள் ஒன்றுக்கு இருநூறு ரூபாய்க்குச் செலவு செய்தான். கொஞ்சம், கொஞ்சமாகப் பழகியதில், அன்புவுக்கு மட்டும் பழக்கப்பட்டு இருந்தது. செவிடனும், அன்புவுமாகவே அந்தக் காளையை வளர்த்தனர். ஆனால் அன்பு அதனைச் சீண்டிக் கொண்டே ,ரோசத்தோடு வளர்த்தான் . விடுமுறை நாட்களில் அவனது கூட்டாளிகள், ஜெகன், சிவா, கதிர், ராசு, மாடசாமி என ஒரு கூட்டமே வந்து விட, அசுரனா, அவர்களா என ஒத்திகை நடக்கும்.
ஆனால் அசுரன் மிகவும் சீற்றத்தோடு இருப்பதால் மூக்கனாங் கயிற்றில் கட்டியே வைத்திருந்தனர். பயிற்சியின் போதும் கூட, நீண்ட கயிற்றில் கட்டி வைப்பார்கள்.

“மாப்பிள்ளை , இந்த அசுரன் பழகுற பழக்கத்தை பார்த்தா, ஜல்லிக்கட்டுல சேர்த்துக்கவே மாட்டாங்கே போலிருக்கே, ரொம்ப ஆக்ரோஷமா இருக்குன்னு ரிஜெக்ட் பண்ணி புடுவாய்ங்கே. முந்தி காலத்துல, ஒரு கோயில் காளைக்கு , மக்கள் உசுருக்கு ஆபத்துன்னு சூட்டிங் ஆர்டரே குடுத்துருக்காய்களாம் , அதுனால இதை கொஞ்சம் மட்டுபடுத்தி வளர்க்கனும்டா.“ என ஜெகன் யோசனை சொன்னான்.

“ஆமாண்டா அன்பு, அப்புறம் போட்டில கலந்துக்க நம்பர் கிடைக்காது.“ என கதிரும்,
“சும்மாவே கோதண்டம் எதுடா சாக்குன்னு பார்க்குறான் , கமிட்டி மெம்பரை எல்லாம் கையில போட்டு வச்சிருக்கான். அசுரனுக்கு கலந்துக்க விடாமல் ஆப்பு வச்சுருவான் பார்த்துக்க!“ என சிவா என்பவன் எச்சரித்தான்.

“சரிடா, நாமளும் அதை, நாலு இடத்துக்கு கூட்டிட்டு போகணுமே, நமக்கே அடங்கலையிண்டா என்ன செய்யிறது, ஆனால் எப்படிண்டு தான் தெரியலை!” என அன்பு யோசிக்கவும்,
நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டவர்கள், “செவிடன் கிட்ட சொல்லு பார்த்துகுவாப்ள, நீ மட்டும் கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்ட.“ என சொல்லிவிட்டு அவர்கள் கேலி கிண்டலோடு வண்டியில் ஏற அன்பு ஓர் புன்னகையோடு, “பிச்சுப்புடுவேன் ஓடுங்கடா.“ என சிறு கற்களை தூக்கி அவர்கள் மேல் எறிய, அவர்கள் பறந்தனர்.
அன்புவுக்கு , பரிசும் போட்டவளை பார்க்க வேண்டும் என ஆசை வந்தது, போனை எடுத்தவன் ,”எங்கடி இருக்க?” என அழைப்பு விடுத்தான்.


“உன் இஷ்டத்துக்கு அப்படி எல்லாம் வரமுடியாது.“ என்று விட்டு அவள் போனை வைக்க, “குரவைக்குட்டிக்கு, நம்மளை பார்த்து பயம் விட்டுப் போச்சு. இரு வச்சுகிறேன்.” என மீசையை தடவினான்.
 
Top