• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயே எந்தன் மகளாய்- 14- கயலின் குமுறல்

தீபா செண்பகம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
520

நீயே எந்தன் மகளாய்- 14- கயலின் குமுறல்


கை, கால்களில் கட்டு, முகத்தில் ப்ளாஸ்டர் அங்கங்கே சிராய்ப்பு எனக் கயல்விழி, கனி மொழி கை பிடித்து, தனுஷ் காரிலிருந்து இறங்கிய குமரவேலைப் பார்க்கவுமே கலைச் செல்வி பதறிப் போய் வந்தாள்.

"என்னாச்சு மாமா, போராட்டத்துக்குப் போகாத, போகாதன்னு சொன்னனே கேட்டியா? இப்படி அடிபட்டு வந்து நிக்கிறியே!!!" எனப் பெருங்குரலெடுத்து அழவும்,

"ஏய், கொஞ்சம் சவுண்டை குறைடி. எனக்கு ஒன்னுமில்லை. நீ பண்ற அலப்பறையில அம்மா, என்னமோ, ஏதோன்னு பயந்திடும்." எனக் காலைக் கூட்டித் தள்ளாடி நடந்தபடி மனைவியைக் கோவித்த குமரவேல், அண்ணன் மக்களின் மேலிருந்து, மனைவி மீது கையைப் போட்டுக் கொள்ள, மறுபுறம் காரை நிறுத்தி விட்டு வந்து தனுஷ் தாங்கினான்.

"நீ யாருப்பா, போராட்டத்துக்கு வந்த புள்ளையா? என் மாமாவை கொண்டாந்து சேர்த்தியே நல்லா இருக்கனும்." என வாழ்த்தியபடி

கணவனைக் கைதாங்கலாகக் கூட்டிச் செல்ல, " சித்தி இது தனுஷ் மாமா. எங்க தாய்மாமா இரண்டாவது மகன், கம்ப்யூட்டர் இன்ஜினியர்." எனக் கனி மொழி தான் வழவழத்தாள்.

கயல்விழி கண்ணீர் வடிந்த கண்களோடு, சித்தப்பா பின்னாடியே முகத்தைக் கூம்பியபடி வைத்துக் கொண்டு வந்தாள்.

" ஓஹோ" என்ற கலைச்செல்வி கணவனை ஹாலில் கிடந்த கட்டிலில், அவ்வப்போது வரும் அம்மாவுக்காகக் குமரவேல் போட்டு வைத்திருப்பது , அதிலேயே உட்கார்ந்து கொள்ள. அருகில் வந்த கலைச்செல்வி கணவனை அங்குலம், அங்குலமாக ஆராய்ந்தாள்

"அடியே, கட்டு தான் பெரிசா போட்டிருக்கானுங்க. ஒன்னும் இல்லை." எனச் சமாதானப்படுத்தவும், "இந்தக் குமரிங்க எல்லாம் எங்கிருந்தாளுங்க. ஏன்டி போகாதேன்னு சொன்னா கேக்குறீங்களா. உங்க சித்தபனுக்கு அடிபட்டிருக்கு பரவாயில்லை. பொட்டப்புள்ளைங்க படாத இடத்தில பட்டுச்சினா, உங்களைப் பெத்தவங்களுக்கு யார் பதில் சொல்றது?" எனக் கலைத் திட்டிக் கொண்டிருக்கும் போதே, கந்தனும் மனைவி உமாவோடு உள்ளே வந்தார்

"உன் மகளுகளை நல்லா கேளு, அப்பவாவது புத்தி வருதான்னு பார்ப்போம்?" என்ற உமா, அண்ணன் மகனைப் பார்க்கவும் உருகிப் போய்க் குசலம் விசாரித்தார்.

கந்தவேலும் தம்பியிடம் விவரம் கேட்க, ஆள் அடையாளம் சொல்லி, "அவனுங்க பண்ண வேலை தான்ணேன். நம்ம பயலுக துரத்தி அடிச்சிட்டானுங்க. இனி ஒன்னும் இல்லை." என விளக்கினான். தனுஷிடமும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

உமா, அண்ணன் மகனை விழுந்து விழுந்து கவனித்தார். நேற்று சின்னச்சாமி பரிசம் போட்ட பந்தத்திலிருந்து கயலை விடுவிப்பதாகச் சொன்னதற்கு இன்று தனுஷ் வரவும், மீண்டும் முதலில் பேசிய சம்பந்தத்தைப் பேசி முடிக்க வேண்டும் என வீட்டில் இருப்பவர்களின் மனநிலைக்கு முற்றிலும் விபரீதமாக ஒரு மனக் கணக்குப் போட்டார். குமரவேலுக்கு அதிகபட்சம் ஒரு வாரத்தில் சரியாகி விடும். அதற்குள் ஓர்ப்படியும், நாத்தனார் மகளுமான கலைச் செல்வி ஓவராகச் சீன் போடுகிறாள். ஆனாலும் இந்தக் குடும்பம் அப்போது தான் அடங்கும் என அவளுக்குச் சாதகமாகவே பேசி வைத்தார்.

விசயமறிந்து சின்னச்சாமி, அறிவு குடும்பத்தோடு வந்து சேர, கலைச் செல்வியின் கதறல் தான் அதிகமாக இருந்தது. கயல்விழி பேச்சே இல்லாமல் சிலையாய் சமைந்து நின்றாள்.

“என்னமா ஆச்சு, இப்பத்தான் அன்பு கூட்டாளி பசங்க சொன்னானுங்க, மாப்பிள்ளை அடி ஒன்னும் பலமா இல்லையே???” எனக் குமரவேல் அருகில் வந்து ஆராயவும்.

“ஒன்னும் இல்லை மாமா, நீங்க பதறாதீங்க. உட்காருங்க.” என்ற குமரவேல் , கனிமொழியிடம் குடிக்கக் கொண்டு வரச்சொல்லி சைகை செய்ய, அவள் சூடாகக் காபியை கலந்து எல்லாருக்குமாகக் கொண்டுவந்து கொடுத்தாள். அதைக் குடித்தவர், “முன்ன மாதிரி இல்லை, இப்பல்லாம் எதைக் கேட்டாலும் படபடன்னு வருது மாப்பிள்ளை...“ என முகத்தைத் துடைத்துக் கொள்ளவும், “மாமா ஒன்னும் பயப்படாதீங்க யாருக்கும் எதுவும் ஆகாது.“ எனப் பெரிய மச்சினனும் தேற்றவும் அமைதியானார்.

அப்பாவைக் காணவும், கலைச்செல்வி, " இந்த மாடும், ஜல்லிக்கட்டும் நம்மளை நிம்மதியாவே வாழ விடாது போலிருக்குபா . இந்தப் போட்டி நடந்தா என்ன நடக்கலைனா என்ன நம்ம குடும்பத்தில, மாட்டுக்குக் காவு கொடுத்தது எல்லாம் பத்தாதா. புதுசா, புரட்சி போராட்டம்னு போயிட்டு வருது, நீங்க கொஞ்சம் சொல்லுங்க உங்க மருமகனுக்கு." என அப்பாவிடம் சிபாரிசு பிடித்தாள். ஆனால் எதார்த்தமாக யோசித்த சின்னச் சாமி,

“ஏத்தா, இந்தக் கம்யூட்டர் என்ஜினீயர் எல்லாம் தெருவில் இறங்கி போராடுறாக. விவசாயம், வயல்,மாடுன்னு, நம்ம ஆதாரமே அது தான் அதுக்காக நாம போராடாம இருக்கலாமா. இன்னைக்கு நம்ம அதுக்குக் குரல் குடுத்தா தான் , நாளைக்கு உன் பயலுக நிம்மதியா சோறு சாப்பிட முடியும்.” எனச் சொல்லவும்.

“பெரியப்பா, சூப்பரா சொன்னீங்க . இதை மக்கள் கிட்டக் கொண்டு போய்ச் சேர்கிறதுக்குத் தான் இந்தப் போராட்டம்.” என்றான் தனுஷ். கலைச்செல்விக்கு எரிச்சல் மண்டிக் கொண்டு வந்தது. அதைத் தனுஷிடம் காட்டாமல் அப்பாவிடம் காட்டினாள்.

"அப்பா, அவன் ஒருத்தன் இருந்தான். மாடு, மாடுண்டு அது பின்னாடியே திரிஞ்சு, அவன் காயம் பட்டது பத்தாதுண்டு. எமானா ஒரு மாட்டை வீட்டுக்கே கூட்டியாந்து, அதுக்கு இதைப் பண்றேன், அதைப் பண்றேன்னு செலவழிச்சு, கடைசில எங்கம்மாளை காவு கொடுத்தது தான் மிச்சம். அருமை பெருமையா என்னை வளர்த்த எங்கம்மா, துள்ள துடிக்கல்லை போச்சு. அத்தனையும் பார்த்துமா, நீ இந்தப் போராட்டத்துக்குப் போற. அவன் தான் அடங்காதவன், சொல் பேச்சுக் கேட்காமல் திரிஞ்சான். நீ குடும்பஸ்தன் தானே. உனக்கு அக்கறை வேணாம்.
வாவரசியா எங்கம்மா போச்சு, உசிரோட இந்தப் பய காணாமல் போனான், அதோட நிண்டுச்சா, இந்தா இவளையும் பரிசம் போட்டு நிக்க வச்சுட்டு போயிட்டான்." எனக் கலைச் சொல்லி, வார்த்தைக்கு வார்த்தை அன்புவைத் திட்டியும் அழவும் கயல்விழி பொங்கி விட்டாள்.

"நீ இப்படிப் பேசிப் பேசியே, என் மாமனை விரட்டி விட்டுட்ட சித்தி. ஏற்கனவே குத்த உணர்ச்சில இருந்ததை, கூர் அம்பு வச்சு சொல்லால் குத்தினா, அது எப்படித் தாங்கும். அதுக்கு மட்டும், அவுங்க அம்மாவைக் காவுக் குடுக்கனுமுன்னு ஆசையா என்ன?" என அவள் கேட்கவும் கலைச்செல்வியே அதிர்ந்து விட்டாள்.

“கயலு, சித்தியை எதுக்கு இப்படிப் பேசுற?” என உமா மகளை அடக்கவும், “நீ சும்மா இரு, பாதி உனக்குப் பயந்துகிட்டே தான் சித்தி, அது தம்பியை அந்தத் திட்டு திட்டுது. சித்தி நீயே சொல்லு, உனக்கு உன் தம்பி மேல பாசம் இல்லை. அன்பு மாமா பாதி நேரம் அத்தையைச் சுத்துச்சுன்னா, மீதி நேரம் உன்னையும், சித்தப்பாவையும் தான சுத்தி வரும். சரவணன், செந்திலைத் தானே தூக்கிட்டே திரியும். அதை வையருதுக்கு உனக்கு எப்படிச் சித்தி மனசு வருது?” என்றவள்,

“குமரப்பா, உங்களைத் தான அன்பு மாமா, முன்னுதாரணமான பார்த்துச்சு. ஜல்லிக்கட்டு மாடுன்னு எல்லாமே நீ சொல்லிகுடுத்தது தானப்பா . இத்தனை நடந்தும், இந்தா மாட்டுக்குக் குரல் கொடுக்க நீ முன்ன போயி நிக்கிற, அப்படி இருக்கையிலே, அன்பு மாமா ,காளை மாடு வளர்த்தத்துல என்ன தப்பு?“ என்றவள் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் குமரவேல் கண்ணீர் சிந்தினான்.

கயல் அறிவுச்செல்வனிடம், “நீங்க இப்படிக் கண் காணாமல் போயிருந்தா, அன்பு மாமா, சரி போகட்டுமுன்னு விட்டிருக்குமா மாமா. உங்களுக்கும் அந்த நேரம் இழப்பு தான், இல்லைனு சொல்லலை, ஆனால் உங்க தம்பியைக் கட்டி அழுதுருந்தீகன்னா, அதுவும் மனசு ஆறியிருக்கும், உங்களுக்கும் மனசு ஆறியிருக்குமே!“ என்றவள்,

“ஒரு பேப்பர்ல கொடுக்கக் கூட உங்க யாருக்குமே தோணலை பாருங்க. எங்கப்பாவுக்கு, நான் இப்படி நிக்கிறேன்னு தான் வேதனையே தவிர, அக்கா மகனை நினைச்சு பார்க்கலை!“ என்றவள் தன்னைப் போல் புலம்பினாள்,

“என் மாமா ஆள் வளர்ந்து நிண்டாலும், அம்மா, அம்மான்னு, அத்தையவே சுத்தி சுத்தி ஓடி வருமே, அதுக்கு எப்படி இருக்குமுன்னு யோசிச்சீங்களா. எல்லாருமா, அத்தை போனதுக்கு அதையே காரணமாக்கி, ஊரை விட்டே ஓட வச்சுட்டீங்க. நீங்க எல்லாரும் சோகத்தைச் சொல்லிச் சொல்லி ஆத்திக்கிறீங்களே. அது எங்க போய் ஆத்திக்கும். எம்புட்டு மன வேதனையோ." என அவள் சொல்லிக் கதறவும், கனகம்மாள் வந்து பேத்தியைத் தாங்கிக் கொண்டவர்,

“இங்க யாருக்கும் அவனைத் தேடக்கூடாதுன்னு இல்லைடா. அவன் முகத்தைப் பார்க்கவும் யாருக்கும் தெம்பு இல்லை, அது தான்.“ என வயதில் மூத்தவர் மற்றொரு கோணத்தையும் சொல்லி பேத்தியை அணைத்துக் கொண்டார்.

அங்கிருந்த அத்தனை பேரும் அன்புவின் தரப்பிலிருந்தும் யோசிக்க ஆரம்பித்தனர். கயல்விழி பேசப் பேச சின்னசாமியின் நிலை தான் மோசமாகப் போனது, முதலில் மகன், தன்னைப் பார்க்க வரவில்லையே என நினைத்தவர், ஒரு அப்பாவாகத் தான் கடமையைச் சரியாகச் செய்தோமா? என யோசிக்க ஆரம்பித்தார்.

கயல் விழி வடிவில், சிவகாமியை மகனுக்காக வாதாடுவது போல் இருந்தது. நினைக்க, நினைக்க முழுதாக உடைத்தவர், "ஆமாத்தா, நீ சொல்றது நிசந்தான். ஆத்தாளை இழந்த துக்கத்தை விட, அவ சாவுக்கு நாம காரணமாயிடமேண்டு தவிச்சு போயிருப்பானே, கயலு கேள்வி கேட்கும் போது சிவகாமியே எதிர்ல நிண்டு கேக்கிற மாதிரி இருக்கு. தனக்குப் பிறகு, தான் மருமகள் தான், தன் மகனை பார்த்துக்குவாண்டு அவளுக்குத் தெரிஞ்சிருக்கு பாரு பெத்தவனுக்கும் கூடப் பிறந்தவங்களுக்கும் இல்லாத துடிப்பு, அதுக்குத் துடிக்குது. அன்பு நீ எங்கடா இருக்க?" எனச் சின்னச் சாமி கதறவும், ஒரு பக்கம் கலையும், மறுபக்கம் அறிவுமாக அப்பாவை அணைத்துக் கொண்டு கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினர். இன்னும் உணர்ச்சி வயப்பட்டால் அவருக்கு எதுவும் ஆகி விடுமோ எனப் பயந்த கந்தவேல், கலை, அறிவு இருவரையும் கட்டுப்படுத்தி அக்காள் கணவனையும் சமாதானப்படுத்தினார்.

"நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கனும். ஒரு ஆள், ஆணி வேரா அத்தனை பேரையும் தாங்கிட்டு, உறவுப் பாலமா இருந்தா. நான் போயிருந்தா கூடக் குடும்பத்துக்கு இவ்வளவு பாதிப்பு இல்லை." எனச் சின்னச்சாமி புலம்பவும் எல்லாருமே அவரைக் கண்டித்தனர். அந்த நாளைய நினைவு அனைவர் மனதிலும் நினைவோடியது.

சென்னையில் தனது அறையில், வந்து விழுந்த அன்புச் செல்வன், காதுகளில், "நீங்கள் இந்த வேலைக்குப் பிட்டே இல்லை ப்ரோ." என்றவனின் குரல்கள் எதிரொலிக்க, "இந்த வேலைக்காகவே கட்டு செட்டா உடம்பை வச்சுக்கிட்டவன் நான். டிஎஸ் பி ரேங்கில் இருக்க வேண்டியவன், என் அம்மாவோட சேர்ந்து, வேலை, உடம்பு எல்லாமே என்னை விட்டு போயிடுச்சே. என் கயலும் இந்த உடுப்பை பார்த்தாளே பயப்படுவா, அவளைச் சமாதானப் படுத்த எத்தனை யோசிச்சு வச்சிருந்தேன். எதுக்குமே வேலை இல்லாமல் போயிடுச்சு. டி எஸ்பி, ரேங்க் எங்க, சாதாரணப் பட்டாலியன் எங்கே." என நொந்தவன் தன்னையே சமாளித்துக் கொண்டு, இயலாமையில் உச் கொட்டியவன்,

"ஆனால் இந்த வேலையைப் பிராயச்சித்தமா தானே ஏத்துக்கிட்டேன். எங்கம்மாவை காப்பாற்ற முடியாமப் போனவன், என்னால முடிஞ்ச வரை நாலு பேரை காப்பாற்றனும்னு தானே இந்த உடுப்பை போட்டுக்கிட்டேன். வெயில் மழை பார்க்காமல் டூட்டி பார்த்தாலாவது குற்ற உணர்ச்சி மறத்து போகும்னு தானே போட்டுக்கிட்டேன். இந்த மருந்து எடுத்துகிறது தெரிஞ்சா கூடச் சர்வீஸ்ல இருக்க விடமாட்டாய்ங்கே. அத்தனையும் மறைச்சு, மறைஞ்சு திரியிறேன்." எனத் தலையைப் பிடித்துக் கொண்டவன், மொபைலை எடுத்து அம்மாவின் போட்டோவை உயிர்ப்பித்து அதோடு பேசினான்.

"அம்மா, இன்னைக்கு ஒரு மகன் அவுங்க அம்மாவை காப்பாற்றனுமுன்னு கை எடுத்து கும்பிட்டாரும்மா. என்னால முடிஞ்சதை, அவ்வளவு பெரிய கூட்டத்தைச் சமாளிச்சு ஆம்புலன்சுக்கு வழி விட வச்சேன். எம்புட்டுப் பிராயச்சித்தம் செஞ்சாலும் நீ திரும்பி வருவியாமா? அந்தக் கடவுள் உன்னை என்கிட்ட திருப்பி அனுப்புமா அம்மா?" என அரற்றியவன், அந்தக் கொடுமையான நாளை மீண்டும் நினைத்துப் பார்த்து, தன மனதின் ரணத்தைத் தானே மேலும் கீறி கொண்டான்.

அந்த நாள் எவ்வளவு சந்தோஷமா விடிஞ்சது. அப்படி முடியுமுண்டு எதிர் பார்க்கலையேமா?" எனத் தேற்றுவார் யாருமின்றி அழுது துடித்த அன்புவும் அதே நாளுக்குள் பயணித்தான்.
 
Top