• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயே எந்தன் மகளாய்-15.வேலைக்கு ஆர்டர்.

தீபா செண்பகம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
520

நீயே எந்தன் மகளாய்-15.வேலைக்கு ஆர்டர்.

சித்திரை மாதம் பிறந்து, கொடியேற்றி சித்திரைத் திருவிழா நடந்து கொண்டிருந்தது. மே மாதம் முதல் வாரத்தில் தேரோட்டம், மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள் நடைபெற இருக்க, கயல் விழிக்கு மே கடைசியில் பி எட் பரிட்சையும், ஜூன் முதல் வாரத்தில் திருமணமும் நிச்சயித்து இருந்தார்கள். பத்திரிக்கை வைக்கும் வேலையும் ஆரம்பமாகியிருந்தது.

அன்று மீனாட்சி திருக்கல்யாணம், அதிகாலையிலேயே சிவகாமி குளித்து முழுகி நீராடி, மஞ்சள் பூசி வட்டப் பொட்டிட்டு, மங்களகரமாக இருந்தார். என்றுமில்லாமல் அன்று அவரது முகம் பூரணச் சந்திரனைப் போல் மிணுமிணுக்க, சின்னச்சாமியே மனைவியை, "பௌர்ணமி நாளன்னைக்குத் தான சிவகாமி?" எனக் கேட்கவும்,

"ஏன் மாமா, உங்களுக்குத் தெரியாதா? சித்திரா பௌர்ணமிக்குத் தான அழகர் ஆத்தில இறங்குவார்." என அவரின் கேலி புரியாமல் பதில் சொல்ல , "இல்லை, பகல்லையே முழுநிலா ஜொலிக்குதேண்டு பார்த்தேன்?" என அவர் மனைவியின் எழில் முகத்தைக் கொஞ்சினார்.

"இந்தா, புள்ளை இல்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாண்டானாம். இங்க, ஒன்னுக்கு மூணு புள்ளைகளும் இருக்கு, பேரனுங்களும் வந்துட்டானுங்க. சின்னவனும் கல்யாணமாகி புள்ளைப் பெத்துட்டான்னா, முழுக் கிழவனாயிடுவிங்க, ஞாபகத்துல வச்சுக்கங்க!" எனச் சிவகாமியும், ஒரு வெட்க முறுவலோடு அவருக்கு வயதானதை நினைவு படுத்தவும்,

"எம்புட்டு வயசானாலும் என் பொண்டாட்டியை நான் கொஞ்சத்தான் செய்வேன்." என அவர் சுற்றும், முற்றும் பார்த்து விட்டு மனைவி கன்னத்தைப் பிடித்துக் கொஞ்ச, சரியாக அன்பு உள்ளே நுழைந்தவன், "நான் எதுவுமே பார்க்கலை!" என்றான்.

இருவரும் பட்டென விலக, "டேய், உங்க அம்மா கன்னத்தில ஏதோ ஒட்டியிருந்தது. அது தான் துடைச்சு விட்டேன், இல்லை சிவகாமி..." என அவர் மனைவியையும் சாட்சிக்கு அழைக்க, அவருடைய மஞ்சள் முகம் நகைமுகமாக மின்னியது.

"அம்மா கன்னத்தில் ஒன்னும் இல்லைபா, உங்க கன்னத்தில் தான் வழியுது, இந்தாங்க." என அன்பு துண்டை நீட்டவும்.

"டேய், அப்பாகிட்ட என்ன பேசறதுன்னு இல்லை." எனச் சிவகாமி மகனை மிரட்டினர். “ஹாஹாஹா ,சிவகாமி , உன் வீட்டுக்காரர் இப்ப

மஞ்சள் முகமே வருக

மங்கள விளக்கே வருக

கொஞ்சும் தமிழே வருக

கோடான கோடி தருக”

எனப் பாடி, அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டவன், “ அப்படின்னு பாடலாமுண்டு இருந்தாரு, நடுவில கரடி மாதிரி நான் வந்துட்டேன், சரி தானப்பா?“ என அப்பாவையும் சேர்த்து அவன் வம்பிழுக்க, சின்னச்சாமி சிரித்தபடி, “சரிதான்பா, நீயே கரடின்னு ஒத்துக்கிட்டேண்டா சரி தான்.“ என்றார்.

“அட அவன்தான் லந்தை குடுக்குறான்னா நீங்களும் அவனோட சேர்ந்துக்கிட்டு பேசுறீங்க!" எனக் கணவரை பொய்யாய் கோபித்த சிவகாமி, “அப்புறம் என் மவனைக் கரடின்னு சொல்லாதீங்க மாமா, கோவிச்சுக்குவான், வஞ்சாலும் காளைமாடு, எருமைண்டு தான் வையனும்.“ என எடுத்துக் கொடுக்க,

அன்புவும், ஹா, ஹா வெனச் சிரித்தவன் “பார்த்தீங்களா அப்பா வையறதுல கூட எங்கம்மா , எனக்குப் பிடிச்ச மாதிரி தான் வையும், அது தான் எங்க அம்மா. மை ஸ்வீட் சிவகாமி.” எனவும், கடைசி வார்த்தைக்குச் சின்னச்சாமி மகனை முறைக்க, " ஓ சாரி, உங்க வசனத்தை நான் சொல்லலை. நீங்களே சொல்லிக்கிங்க." என்றவன்,

"அம்மா, டீவில திருக்கல்யாணம் காட்டுறாய்கே. நீ மீனாட்சியைப் பார்த்துகிட்டே தாலிக் கயிறு மாத்துவியே." என நினைவு படுத்தித் தொலைக்காட்சியைப் போட்டுவிட்டான்.

“ஆமாடா, உன் கூட நிண்டு , உன் வாயை பார்த்துகிட்டு இருந்தேன்னா எல்லாம் மறந்து தான் போகுது.“ என்றபடி சிவகாமி பூஜையறைக்குச் சென்றார்.

தயாராக வைத்திருந்த தாம்பூலத் தட்டை எடுத்து வந்தவர், டிவியில் மீனாட்சிக்குத் திருப்பூட்டு நடக்கும் நேரம், “ஆத்தா, தாயே நான் தீர்க்க சுமங்கலியா இருக்கனும்” என மனதில் வேண்டிக் கொண்டு , கணவரை மஞ்சள் கயிற்றை, கழுத்தில் போட்டு விடச் சொல்லி, திருப் பூட்டு நேரத்துக்குத் தானும் புதுக் கயிற்றில் மாற்றிக் கொண்டார்.

மருமகள் சாந்திக்கும் மஞ்சள் கயிற்றை மட்டும் மாட்டி விட்டு, " உன் மகன் தூங்கும் போது மாத்திக்க." என்றவர் காலை உணவை எடுத்து வைக்க எல்லாருமாக உட்கார்ந்து சாப்பிட்டனர்.

"அம்மா, இன்னைக்கு அரசாங்க உத்தியோகத்துக்கு ஆர்டர் வந்தாலும் வரும். ரெஜிஸ்டர் தபால்ல வரும், கையெழுத்துப் போட்டு வாங்கி வை. மாப்பிள்ளை என்ன செய்யப் போறான், எம்புட்டு சம்பளமுண்டு உன் தம்பி பொண்டாட்டி, ஆள் வச்சு கேட்டுச்சுல்ல, அது அண்ணன் மகனை விட, அந்தஸ்தான உத்யோகத்துல தான் சேர போறமுண்டு, குடும்பத்தோட போயி சொல்லிட்டு வருவோம்." என இடக்கு பேசவும்.

"அன்பு, இதென்ன மாமன் பொண்டாட்டி, உன் மாமியார் அதுகூடப் போயி மல்லு கட்டிக்கிட்டு இருக்கிற, மகள் நல்ல இருக்கணுமுன்னு கேக்குது. இப்படி எல்லாம் பேசாதடா." எனச் சிவகாமி எடுத்துச் சொல்ல,

"அவன் மாப்பிள்ளை முறுக்கக் காட்டுறான் . எல்லாரும் உன் புருஷன் மாதிரி , ஊரோட மாப்பிள்ளையா வந்து மழுமட்டையா இருப்பாங்களா என்ன?" எனச் சின்னசாமி இடை சொருகவும், சிவகாமி இருவரையும் முறைத்தவர்.

"இப்ப, என் பொறந்த வீட்டுல என்ன உங்க இரண்டு பேருக்கும் மரியாதை குடுக்காம விட்டாக, அப்பாவும் மகனும் கூட்டுச் சேர்ந்து வம்பிழுக்குறீங்க!" எனக் கோபப்படவும், "ஆத்தா சிவகாமி, நான் என்னைச் சொன்னேன், உன்னை ஒன்னும் சொல்லலையே, நாளும் கிழமையுமா நீ கோவிச்சுக்காதத்தா!" எனச் சின்னச் சாமி மனைவியிடம் சரண்டராகவும்,

"அப்பா, கொஞ்சம் நேரம் கெத்துக் காட்ட முடியாதா, உசிலம்பட்டிக்காரன் மானமே போச்சு." என அன்பு குறை படவும்.

"அடேய், பெரிசா உசிலம்பட்டியைக் கண்டவன், நீ டவுசர் போட்ட காலத்திலிருந்து, இந்த இராசக்காப்பட்டியில தான் இருக்க, எங்க அம்மா வீட்டில தான் வளர்ந்த, அதை ஞாபகம் வச்சுக்க." என மகனைக் கடிந்து கொண்ட சிவகாமி,

"என் மருமகள் வர்ற நேரம், அவ ராசி தான் நீ ஆபீசராயிட்ட, உனக்கு எல்லாமே இங்க தான் புரிஞ்சுக்க, பெரிய உசிலம்பட்டிக்காரனாம்." எனச் சிவகாமி மருமகள் ராசி சிலாகித்து, பிறந்த வீட்டுக்குக் கொடி பிடிக்க, சின்னச்சாமி, "ஒன்னும் சொல்றதுக்கில்லை." என அமைதி காத்தார். "ஏப்பா… ஒரு ஆளு இருக்கையிலையே இந்தப் பேச்சு , இனி சின்ன மருமக்கள் செட்டு சேர்ந்துட்டா, நம்ம வாயைத் திறக்க முடியுமுன்னு நினைக்கிறீங்க?" என அன்பு மெதுவாக அப்பாவின் காதை கடிக்கவும், "நான் பழகிட்டேண்டா, நீயும் பழகிக்க!" என வழி சொல்லித் தந்தார் தந்தை. அப்பாவும் மகனும் ரகசியம் பேசுவதைப் பார்த்து, "அங்க என்ன ரகசியம்?" என்றார் சிவகாமி.

"அது ஒன்னும் இல்லை, கஷ்டப்பட்டுப் படிச்சு வேலை வாங்கினது நானு. பேரு அவளுக்காக்கும், அதைத் தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்" என, அப்பாவுக்கும் சேர்த்து அம்மாவைச் சமாளித்தவன் "அதுக்கு, என் வெற்றிக்குக் காரணம் என் அம்மான்னு சொன்னாலும், நான் ஒத்துக்குவேன்." என ஐஸையும் சேர்த்து வைத்தான்.

“இதுவும் எத்தனை நாளைக்குன்னு பாப்போம்டா . இன்னைக்கு அம்மா, அம்மாங்கிறவன் தான், நாளைக்குப் பொண்டாட்டி பின்னாடியே திரியிவ.” எனச் சிவகாமி ஆரூடம் சொல்லவும்,

“என்னமா, பொசுக்குண்டு இப்படிச் சொல்லிப்புட்ட, யாரு வந்தாலும் போனாலும் என் ஹார்டுல நீ இருக்க இடத்தில், வேற யாருக்கும் இடம் கிடையாது.“ என அன்பு நெஞ்சைத் தொட்டுக் காட்டவும்,

“அப்ப, கயலுக்குக் கூட இடம் கிடையாது. அப்படித்தான!” என்றவரிடம், "ஆமாம், தாயில்லாமல் நான் இல்லை, தானே எவரும் பிறந்ததில்லை..." எனப் பாட்டாகப் படிக்க,

“அடியே கயலு கேட்டுகிட்டியா, என் மகன் மனசுல எனக்கு மட்டும் தான் இடம்.” என வாசலைப் பார்த்து சிவகாமி வசனம் பேசவும், கயல்விழிதான் வந்துவிட்டாலோ எனச் சுற்றி, முற்றித் திரும்பிப் பார்த்தவன்,

“ஏய் அம்மா... நீ என்ன ஓரண்டை இழுத்து விடுற, உன் இடத்துக்கு அவ வரமுடியாதுண்டு தான் சொன்னேன். அவளுக்குத் தனி இடம் இருக்கு.” என எதற்கும் இருக்கட்டும் எனப் பேச்சில் பேசி மொழுகியவன் , “எங்கம்மா அவ?” என வினவினான்.

சிவகாமி, சின்னச்சாமி இருவருமாக நகைத்தவர்கள், “இம்புட்டுப் பயம் இருக்குல்ல, அப்புறம் என்னத்துக்கு வீராப்பு பேசுறவன்? ” எனச் சின்னச்சாமியும், “சின்ன மகன் வீரேன்னு நினைச்சேன், இப்படிக் கவுத்திபுட்டானே!“ எனக் கன்னத்தில் கைவைத்து சிவகாமியும் கேலி பேசவும்,

“வர, வர இரண்டு பேருக்கும் சேட்டை ஜாஸ்தியாடிச்சு, நான் கிளம்புறேன்.” என அன்பு பொய்யாகக் கோபிக்க, சிவகாமி சிரித்தபடியே "ஆபீஸர் ஆயிட்டேன்னா, இந்த மாடு கண்ணு எல்லாம் பார்க்க நேரமிருக்காது, செவிடனுக்குத் துணையா, இன்னொரு ஆளைப் போடு." என்றார் .

"முதல்ல ஆறு மாசம், ட்ரைனிங் சென்னையில தான் போடுவாய்ங்க, நல்ல ஆளா சொல்லுவோம் மா..." என்றவன்,

"தபால் வந்தா, போன் போடுங்க. வாரேன்." என்றுவிட்டு தோட்டத்துக்குக் கிளம்பினான்.

மகனுக்கு வேலைக் கிடைக்கப் போவதை எண்ணி மகிழ்ந்த சிவகாமி, இன்று மீனாட்சி திருக்கல்யாணமும் சேர்ந்து வர மகனுக்குப் பிடித்த பாசிப்பருப்பு பாயசத்தையும் செய்தார். சமையல் முடித்துப் போஸ்ட்மேன் வருகைக்காகக் காத்திருந்தனர்.

"ஏன் மாமா, வேலைக் கிடைச்சிட்டா அன்பு நம்ம கூட இருக்க மாட்டானா?" எனச் சிவகாமி சந்தேகம் கேட்கவும்.

"முதல் போஸ்டிங் மட்டும் தான் எங்கப் போடுவாகண்டு பார்க்கனும். அப்புறம் மாத்தல் வாங்கிட்டு இங்கிட்டே வந்திடலாம். மதுரையைச் சுத்தி, சுத்தி வேலை பார்க்க வேண்டியது தான். உன் மகன் அதெல்லாம் விவரம் தான். நம்மளை விட்டுட்டு வேணு முன்னாலும் இருப்பான். மாட்டை விட்டுட்டு இருக்க மாட்டான். அதுக்குத் தான் அரசாங்க உத்யோகமுண்டா, நேரத்துக்குப் போயிட்டு வந்துக்கலாம்." எனச் சின்னச்சாமி விளக்கவும்.

"இது நல்ல உத்தியோகமா, சம்பளம் நல்லா வருமா?" எனச் சிவகாமி விசாரித்தார்.

"அதெல்லாம் பச்சை மையில கையெழுத்துப் போடுவான்டு, ஆரம்பமே நல்லா வரும்ன்னு ஒரு நாள் சொன்னான், ஆனா என்ன வேலையுண்டு தபால் வந்தா தான் தெரியும்." எனச் சொல்லவும், "நல்லா சம்பாதிச்சான்னா சரி தான். உமாவுக்கு, கயலை அண்ணன் மகனுக்குக் குடுக்கலையின்னு வருத்தம், இருக்கே அது போயிடுமில்லை." என மகன் சம்பாத்தியத்தைப் பற்றி விவரம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இவர்கள் வாசலையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, மூத்த மகன் அறிவு விசாரிக்கவும், தபால்காரரை எதிர்பார்ப்பதைச் சொல்ல, "இன்னைக்கு லோக்கல் ஹாலிடே, தபால் வருமா?" எனச் சந்தேகம் கேட்டான்.

"போஸ்ட், சென்டர் கவர்மெண்ட் தான் வருமுண்டு சொன்னான்." என்றார் சின்னச் சாமி. அதே போல் ரிஜிஸ்டர் போஸ்டில் வேலைக்கான ஆர்டர் வரவும், பிரித்துப் பார்த்த அறிவு, ஆனந்த அதிர்ச்சியாக, "அப்பா... டி எஸ் பி போஸ்டிங்க் பா, அம்மா உன் மகன் போலீஸ் ஆபீசராயிட்டான். இதுக்கெல்லாம் அவனவன் எவ்வளவு பெருமை பீத்திக்குவாய்ங்க , இவன் கயலுக்குப் பரிசம் போட்ட அன்னைக்குக் கூட, ரொம்பச் சாதாரணமா தான் சொன்னான். என்னப்பா இவன் இப்படி இருக்கான். நான் தான் பாரின்ல இருந்தேன், விவரம் தெரியாது. உங்களுக்கும் ஒன்னும் தெரியாதப்பா." எனத் தம்பியைச் சிலாகித்து மகிழ்ச்சியோடு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள,

பெற்றவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி தான், “எங்குட்டுப் போறான், வர்றான்னு எங்களுக்கு என்னப்பா தெரியும். ஏதேதோ பரீட்சை எழுதினேன் பா, ஒரு நாள் பொழுது காசும் கேட்டதில்லை. எந்த ஊர்ல வேலை?“ என வினவினார்.

“அது இப்ப சொல்லமாட்டாங்க, அடுத்த மாசத்தில் வந்து சென்னையில சேரச் சொல்லி இருக்காங்க, ட்ரைனிங் முடிஞ்சு தான் போஸ்டிங் வரும்.“ என அறிவு விவரம் சொல்லவும், “கல்யாணம் முடிஞ்சு சேர்ந்தா போதுமில்லை?“ எனச் சிவகாமி விவரம் கேட்டுக் கொண்டார்.

"போன் போடுறேன் பா, அன்பு வரட்டும்." என்றான் அறிவு.

"அறிவு போன் போடாத, வேண்டாம், நாங்க தோட்டத்துக்குப் போயும் ரொம்ப நாளாச்சு. சாப்பாடு கட்டிக்கிட்டு அங்க போறோம். அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்போம்." எனச் சிவகாமிச் சொல்லவும்.

"உங்க மகனுக்கு வேலைக் கிடைச்சதை , அவனோட சேர்ந்து கொண்டாடனும், போயிட்டு வாங்க. என்ஜாய்!" என அனுப்பி வைத்தான் அறிவு.

சின்னச்சாமி, சிவகாமியை அழைத்துக் கொண்டு தோட்டத்துக்கு வந்தார். ஒரு கட்டைப் பையில் நான்கு பேர் சாப்பிடும் அளவு சாப்பாடு இருந்தது. வடை, பாயசம் செய்திருந்ததை, தம்பிக்கும் மகளுக்கும் பிடிக்கும் எனச் சேர்த்துச் செய்து தனிப் பையில் வைத்திருந்த சிவகாமி, கணவனிடம் கொடுத்து, தன்னைத் தோட்டத்தில் இறக்கி விட்டு, இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மகள் வீட்டில் கொடுத்து வரச் சொன்னார்.

சின்னச்சாமியும் அதே போல் தோட்டத்தின் கேட் அருகே மனைவியை இறக்கிவிட, "சாப்பாடு சூடா இருக்கு மாமா, ஆறும் முன்ன வந்திருங்க. உங்க மகள் சாப்பிடச் சொன்னான்னு அங்கேயே உட்கார்ந்துடாதீங்க. இன்னொரு கவர்ல மஞ்சள் கயிறு, மீனாட்சி குங்குமம் எல்லாம் வச்சிருக்கேன். அதையும் குடுத்துடுங்க." என அனுப்பி விட, "இந்தா சுருக்கில ஓடியாந்திடுறேன்." எனச் சின்னச்சாமிக்கு என்ன தோன்றியது, ஆசையாகச் சிவகாமியின் கன்னத்தை வழித்து "என் கண்ணே பட்டும் போலிருக்கு!" எனக் கொஞ்சிவிட்டுச் சென்றார்.

கணவனின் பாராட்டு மொழிகளிலும், கொஞ்சலையும் ரசித்த சிவகாமி, இந்த வயதிலும் மஞ்சள் முகத்தில் சிவந்த கன்னங்கள் பளபளக்க வெட்கப்பட்டுக் கொண்டே உள்ளே சென்றார்.

"அன்பு..." என அழைத்துக் கொண்டே அவர் சாப்பாட்டுப் பையைக் கொண்டு போய் ஷெட்டில் வைத்தவர். "மாடு கண்ணு எல்லாம் இருக்கு, செவிடன் எங்கப் போனான். அன்புவையும் காணோம்." எனத் தேட ஆரம்பித்தார்.

சின்னச்சாமி மகள் வீட்டுக்குப் போகும் வழியிலேயே எதிர்த்தார் போல் வந்த மகனைப் பார்த்தவர், வண்டியை நிறுத்தி, "அன்பு தபால் வந்திருச்சுடா. டிஎஸ்பி போஸ்டிங்ன்னு அறிவுச் சொன்னான்.ரொம்ம சந்தோசம் பா." என மகனை வாழ்த்தியவர்.

"நீ தோட்டத்துக்குப் போ. அம்மா அங்க தான் இருக்கா. அக்காட்ட இதைக் குடுத்துட்டு, விஷயத்தையும் சொல்லிட்டு நானும் வாரேன். சேர்ந்து சாப்பிடுவோம்." என்றார்.

"தாங்க்ஸ் பா, தபால் அம்மாட்ட தான இருக்கு, சரி நான் போயி பார்த்துக்குறேன்." எனச் சின்னச்சாமி மகள் வீட்டுக்குப் போக, அன்பு தோட்டத்துக்கு வந்தான்.
 
Top